இஸ்ரா-இரவுப் பயணம் மிஃராஜ்-விண்ணுலகப் பயணம்
முஹம்மது சலீம், ஈரோடு
நபி(ஸல்) அவர்களுக்கு நபித்துவம் வழங்கப்பட்ட பிறகு மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராமில் நபி(ஸல்) அவர்கள் இருந்தபோது நிகழ்ந்த அற்புதமான நிகழ்வைத்தான் நாம் இஸ்ரா மிஃராஜ் (இரவுப் பயணம், விண்ணுலகப் பயணம்) என்று அழைத்து வருகிறோம். சிறப்புமிக்க இந்த பயணம் குறித்து குர்ஆன் மற்றும் ஹதீஃதிலிருந்து சில முக்கியமான விஷயங்களை வரிசைப்படுத்திப் பார்ப்போம்.
- மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப் புறத்தை பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுபவன், பார்ப்பவன். குர்ஆன்: 17:1
- கோவேறு கழுதையைவிடச் சிறியதும் கழுதையைவிடப் பெரியதுமான வெள்ளை நிறத்தில் அமைந்த நீளமான புராக் என்னும் வாகனத்தின் மூலம் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, மஸ்ஜிதுல் அக்ஸா வரை சென்றார்கள். அந்த வாகனம் தனது பார்வை எட்டுகிற தூரத்திற்கு தனது கால் குளம்பை எடுத்து வைத்தது. நூல்:முஸ்லிம் : 25
- பைத்துல் மக்திஸிற்கு (அல்அக்ஸா) வந்ததும் நபிமார்கள் தனது வாகனத்தை கட்டி வைக்கும் வளையத்தில் தனது வாகனத்தை நபி(ஸல்) அவர்கள் கட்டி வைத்தார்கள். நூல் : முஸ்லிம் : 259
- பைத்துல் மக்திஸிற்கு அருகில் உள்ள செம்மணற் குன்றிற்கருகில் மூஸா (அலை) அவர்கள் தொழுது கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். நூல் : நஸயீ 1614
- நபி(ஸல்) அவர்களிடம் பால் கிண்ணம், தேன் கிண்ணம், மது கிண்ணம் ஆகி யவை கொண்டு வரப்பட்டது. அதில் பால் கிண்ணத்தை நபி(ஸல்) அவர்கள் தேர்வு செய்து பிறகு அதிலுள்ள பாலை பருகினார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் இயற்கை மரபில் உங்களை செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். நீங்கள் மது கிண்ணத்தை எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழி தவறி போயிருக்கும் என்று கூறினார்கள். நூல்: புகாரி : 5576, 5610
- நபி(ஸல்) அவர்கள் ஏழு வானங்களை கடந்து சென்றார்கள். அங்கு ஆதம் (அலை) யூஸுஃப்(அலை), இத்ரீஸ் (அலை) ஈஸா(அலை), யஹ்யா(அலை), ஹாரூன்(அலை), மூஸா(அலை), இப்ராஹீம்(அலை) போன்ற நபிமார்களை சந்தித்து உரையாடினார்கள். நூல்:புகாரி : 3207
- பைத்துல் மஃமூரில் இப்ராஹீம்(அலை) அவர்கள் தமது முதுகை சாய்த்து அமர்ந்து கொண்டிருந்தார்கள். பிறகு வான் எல்லையிலுள்ள சித்ரத்துல் முன்தஹா எனும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்ட்டார்கள் அங்கிருந்த இலந்தை மரத்தின் இலைகள் யானைகளின் காதுகளைப் போன்றிருந்தது அதன் பழங்களை கூஜாக்களை போன்று (பெரிதாக) இருந்தது. நூல்:முஸ்லிம்:259
- நரகத்தின் காவலர் மாலிக்(அலை) அவர்களையும், மகா பொய்யனும் குழப்பவாதியுமான தஜ்ஜாலையும் பார்த்தார்கள். நூல் : முஸ்லிம் : 267
- சுவனத்தைப் பார்த்தார்கள் அதில் முத்துக்களால் உள்ள கயிறுகளையும் பார்த்தார்கள். சுவனத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது. நூல்: புகாரி:349
- சுவனத்தை எட்டிப் பார்த்தார்கள். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே பார்த்தார்கள். மேலும் நரகத்தையும் எட்டிப் பார்த்தார்கள் அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களையேப் பார்த்தார்கள். நூல் : புகாரி : 324
- மிஃராஜில் நபி(ஸல்) அவர்களுக்கு மூன்று வழங்கப்பட்டது.
1. ஐந்து நேரத் தொழுகைகள்,
2. அல்பகரா அத்தியாயத்தின் கடைசி வசனங்கள்
3. அல்லாஹ்வுக்கு இணைவைக்காத நிலையில் இறந்தவருக்கு பெரும் பாவங்கள் மன்னிக்கப்படும். நூல்:நஸாயீ:447 - ஜிப்ரீல்(அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க (அவரது உண்மையான தோற்றத்தில்) பார்த்தார்கள். நூல்:புகாரி : 4856
- மறுமையில் தனக்கு வழங்கப்படயிருக்கும் கவ்ஸர் எனும் தடாகத்தை பார்த்தார்கள். நூல் : புகாரி : 6581
- இஸ்ரா – மிஃராஜ் தொடர்பான செய்திகளை நபி(ஸல்) அவர்கள் கூறியபோது குறைஷிகள் நம்ப மறுத்ததோடு கிண்டல் செய்தனர். நூல் : புகாரி : 3886
விண்ணுலகப் பயணம் தொடர்பாக நாம் மேலே எடுத்துக் காட்டியுள்ள விஷயங்களோடு வேறு சில விஷயங்களையும் நாம் நபிமொழி நூற்களில் காணமுடிகிறது. இந்த அற்புத நிகழ்வை விவரிக்கும் நபிமொழிகளை கவனமாக படித்தால் முஸ்லிம்கள் தங்களது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டிய பல விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும்.
எந்த ஆண்டில் நடந்தது?
இஸ்ரா, மிஃராஜ் சம்பவம் நபித்துவத்தின் இத்தனையாவது ஆண்டில், இன்ன மாதத்தில் நடந்தது என்று அல்லாஹ்வும் கூறவில்லை. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் கூறவில்லை. இப்படியிருக்கையில் ரஜப் பிறை 27ல்தான் மிஃராஜ் பயணம் நடைபெற்றது என்று கூறிக் கொண்டு அன்று விஷேச தொழுகை தொழுவது, ராத்தீபு மற்றும் திக்ரு மஜ்லிஸ் நடத்துவது, நோன்பு நோற்பது போன்ற பித்அத்தான செயல்களை முஸ்லிம்களில் ஒரு சாரார் செய்து வருகிறார்கள். ரஜப் பிறை 27ல்தான் மிஃராஜ் பயணம் நடைபெற்றது என்ற கருத்தை ஒட்டுமொத்த அறிஞர்களும் ஆதரிக்கவில்லை மாறாக இது குறித்து அறிஞர்கள் பல்வேறு கருத்துகளை கூறியுள்ளார்கள்.
- அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்படுவதற்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பே மிஃராஜ் சம்பவம் நடந்தது என்று வரலாற்றாசிரியர் இப்னு இஸ்ஹாக் என்பவர் கூறுகிறார்.
- நபித்துவம் கிடைத்த ஆண்டு நடைபெற்றது என இமாம் தப்ரீ கூறுகிறார்.
- நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டு நடை பெற்றதாக இமாம் நவவீ அவர்களும் தஃப்ஸீர் அறிஞர் குர்சூபீ அவர்களும் கூறுகிறார்கள்.
- நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்றது என இமாம் ஸுஹ்ரி அவர்கள் கூறுகிறார்கள்.
- உர்வா ஸுஹ்ரீ போன்றோர் ரபிய்யுல் அவ்வல் மாதம் மிஃராஜ் நடைபெற்றது என கூறுகிறார்கள்.
- இமாம் ஸுத்தி அவர்கள் இரவு பயணம் துல்கஅதா மாதத்தில் நடைபெற்றது என கூறுகிறார்கள்.
- ஹாஃபிழ் அப்துல்கனி பின் சர்வர் அல் மக்திஸு அவர்கள் ரஜப் 29ல் மிஃராஜ் நடைபெற்றது என கூறுகிறார்.
- இன்னும் சிலர் ரஜப் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை இரவில் நடைபெற்றது என கூறுகிறார்கள்.
அறிஞர்களின் மேற்கண்ட முரண்பட்ட கருத்துகளுக்கு வலுவான ஆதாரமோ, எவராலும் மறுக்க முடியாத அடிப்படை சான்றுகளோ எதுவுமே கிடையாது. இதுபோன்ற வீண் சர்ச்சைகள் செய்வதை விட்டு விட்டு நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்ட பிறகு மக்காவில் இருந்தபோது இஸ்ரா, மிஃராஜ் பயணம் நடைபெற்றது என்று நம்புவதே முறையான தாகும்.
நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வை பார்த்தார்களா?
மிஃராஜ் பயணம் குறித்து சொற்பொழிவுகள் நிகழ்த்தும் பெரும்பாலான ஆலிம்கள் மிஃராஜில் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வை நேரடியாகப் பார்த்தவர்கள் இது வேறு எந்த நபிக்கும் கிடைக்காத பாக்கியம் என்று பெருமையாக கூறி வருகிறார்கள். விண்ணுலக பயணத்திற்கு சென்றுவந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எந்த ஒரு இடத்திலும் நான் அல்லாஹ்வை பார்த்தேன் என்று கூறவில்லை மாறாக அல்லாஹ்வை பார்க்கவில்லை என்றே கூறியுள்ளார்கள்.
அப்துல்லாஹ் பின் ஷகீக்(ரஹ்) அவர்கள் கூறியதாவது :
நபி(ஸல்) அவர்களை நான் சந்தித்திருந் தால் அவர்களிடம் ஒரு வினா தொடுத்திருப்பேன் என்று அபூதர்(ரழி) அவர்களிடம் நான் சொன்னேன் அதற்கு அவர்கள் எது குறித்து வினா எழுப்பியிருப்பீர்கள் என்று (என்னிடம்) கேட்டார்கள். அப்போது நான் “முஹம்மது(ஸல்) அவர்கள் தமது இறைவனைப் பார்த்தார்களா என்று நான் அவர்களிடம் கேட்டிருப்பேன்” என்று சொன்னேன் அதற்கு அபூதர்(ரழி) அவர்கள் “நான் நபி(ஸல்) அவர்களிடம் இக்கேள்வியைக் கேட்டேன். அப்போது அவன் ஒளியாக இருக்கின்றான் எப்படி என்னால் அவனைப் பார்க்கமுடியும்? என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாகச் சொன்னார்கள். நூற்கள்: திர்மிதி : 3194, முஸ்லிம்: 291
நான் அல்லாஹ்வை பார்க்கவில்லை என்று மிகத் தெளிவாக நபி(ஸல்) அவர்கள் கூறிய பிறகும் இது குறித்து வீண் சர்ச்சைகளை கிளப்பி சமுதாயத்தை இரண்டு குழுக்களாக பிரிப்பது அறிஞர்கள் செய்யும் செயலா? அறிவீனர்கள் செய்யும் செயலா?
மஸ்ரூக் பின் அஜ்தஉ(ரஹ்) அவர்கள் கூறியதாவது :
நான்(அன்னை) ஆயிஷா(ரழி) அவர்களிடம் (அவரது வீட்டின் சுவரில்) சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்) அபூஆயிஷாவே! மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது மிகப் பெரிய பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார் என்று கூறினார்கள். (நான் அவை எவை? என்று கேட்டேன் எதற்கு அவர்கள்) யார் முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை(நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப் பெரிய பொய்யை இட்டுக்கட்டிவிட்டார் என்று சொன்னார்கள்.
மேலும் “பார்வைகள் அவனை அடைய முடியாது அவனோ பார்வைகள் அனைத்தையும் அறிந்து கொள்கிறான். மேலும் அவன் மிக நுட்பமானவன் மிக்க அறிந்தவன்” (6:103)
“அல்லாஹ் (நேருக்கு நேர்) பேசுவதற்குரிய தகுதி மனிதரில் ஒருவருக்குமில்லை எனினும் வஹீயின் மூலமாகவோ அல்லது திரைக்கு அப்பால் இருந்தோ அல்லது வானவர்களை அனுப்பி வைத்து வஹீயின் மூலமாகவோ தனக்கு விருப்பமான கட்டளையை(மனிதனுக்கு) அறிவிக்கிறான். நிச்சயமாக அவன் மிக மேலானவன், மிக ஞானமுடையவன். (42:51) என்ற இரு வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள்.
உடனே சாய்ந்து அமர்ந்து (ஓய்வு எடுத்துக்) கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து “இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கூறுங்கள்! அவசரப்படாதீர்கள். வல்லமையும் மாண்பு மிக்க அல்லாஹ் “நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவர் இறங்கக் கண்டார்கள்!! என்றும், (53:13)
நிச்சயமாக அவர் தெளிவான வானத்தின் கோடியில் மெய்யாகவே கண்டார். (81:23) என்றும் கூறவில்லையா? என்று கேட்டேன் அதற்கு ஆயிஷா(ரழி) அவர்கள் பின்வருமாறு விளக்கம் அளித்தார்கள். இந்தச் சமுதாயத்தாரில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அது (வானவர்) ஜிப்ரீலை(நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை அவர் படைக்கப் பெற்றுள்ள (நிஜத்) தோற்றத்தில் இந்த இரு தடவை தவிர வேறெப்போதும் பார்த்த தில்லை. அவர் வானிலிருந்து பூமிக்கு இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமானத் தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக்கொண்டிருந்தது என்று கூறினார்கள். நூல்: திர்மிதி:2984
மஸ்ரூக்(ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா(ரழி) அவர்களிடம் சென்ற நான் முஹம்மத்(ஸல்) அவர்கள் தமது இறை வனைப் பார்த்தார்களா? என்று கேட்டேன் அதற்கு அவர்கள் நீர் கேட்ட இக்கேள்வியால் எனது முடி சிலிர்த்து நிற்கிறது என்று கூறினார்கள். அப்போது நான் பொறுங்கள் (அவசரம் வேண்டாம்) என்று சொல்லிய பிறகு “உறுதியாக அவர் தம் இறைவனின் சான்றுகளில் மிகப் பெரியதைக் கண்டார்” (53:18) என்ற வசனத்தை ஓதினேன். அதற்கு ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள். உமது அறிவு எங்கே சென்றது? (தவறாகப் புரிந்திருக்கிறீர்) அது (இறைவனின் மிகப் பெரிய சான்று என்பது) ஜிப்ரீல்(அலை) அவர்களையே குறிக்கும் என்றார்கள். நூற்கள் : திர்மிதி : 3190, புகாரி : 4855
ஸிர்ரு பின் ஹுபைஹ்(ரஹ்) அவர்கள் கூறியதாவது :
உறுதியாக அவர் தம் இறைவனின் சான்றுகளில் மிகப் பெரியதைக் கண்டார் எனும் (53:18ஆவது) வசனம் குறித்து அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்களுஃகு அறுநூறு இறக்கைகள் இருக்க அவரது(நிஜ) உருவத்தில் அவரைப் பார்த்தார்கள். நூல்: முஸ்லிம்:282, திர்மிதி:3195
இதைப் போன்றே அபூஹுரைரா(ரழி) போன்ற பல ஸஹாபாக்கள் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வை பார்க்கவில்லை என்ற கருத்தையே வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். எனவே மிஃராஜ் பயணத்தில் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வை நேரடியாகப் பார்த்தார்கள் என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதை முஸ்லிம் உணர வேண்டும். மிஃராஜ் சம்பவத்தின் மூலமாக நாம் படிப்பினை பெறவேண்டிய விஷயங்களை உள்ளதை உள்ளபடி அறிந்து அதன்படி நடக்க அல்லாஹ் அருள் புரிவானாக.