அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா?

in 2019 மே

அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா?

தொடர்-3

ஜி.நிஜாமுத்தீன், பரங்கிப்பேட்டை

ஆலு இம்ரான் 3:31வது வசனத்தில் எல்லா நிலைகளிலும் முஹம்மத் என்ற இறைத்தூதர் அவர்களை பின்பற்றுவதின் அவசியம் பற்றி கூறப்பட்டுள்ளது. அதில் இறைவனை நேசிக்கக் கூடிய ஆன்மீகவாதி எவராக இருந்தாலும் அவர் முஹம்மத் என்ற அந்த ஆன்மீகத் தலைவரை பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்ற கட்டளை மிக வலுவாக முன் வைக்கப்பட்டுள்ளது என்பதை கடந்த இரண்டு தொடர்களில் விளக்கினோம். அடுத்து அந்த தலைவரை ஏற்றுக் கொண்டு வாழும் முஸ்லிம்கள் தங்கள் நம்பிக்கையை மீண்டும் பரிசீலித்துக் கொள்ளும் விதத்தில் ஒரு தூண்டல் அந்த வசனத்தில் இருக்கின்றது.

அதை விரிவாக தெரிந்து கொள்வோம் :

(மனிதர்களே!) நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று நபியே நீர் கூறும்.

இங்கு இறைவன் “என் வழியைப் பின்பற்றுங்கள்’ என்று சொல்ல சொல்லாமல் “என்னைப் பின்பற்றுங்கள்’ என்று சொல்ல சொல்கிறான். என்னைப் பின்பற்றுங்கள் என்பதற்கும் என் வழியைப் பின்பற்றுங்கள் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

“என் வழியைப் பின்பற்றுங்கள்” என்றால் அது வெறும் வார்த்தைகளிலிருந்து பெறும் வழிகாட்டலாகவே அமையும். ஏனெனில் வார்த்தைகள் தான் வழிகாட்டும்.

“என்னைப் பின்பற்றுங்கள்” என்பது மொத்தமாக ஒருவருடைய வாழ்க்கையே வழிகாட்டலாக அமைந்து விடுவதை குறிப்பதாகும்.

வாழ்ந்து மறைந்த இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற உலகத் தலைவர்கள் அனைவரையும், அவர் எந்தத் துறையை சார்ந்தவராக இருந்தாலும் சரி நாம் எடுத்துக் கொள்வோமேயானால் அவர்கள் மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காக எடுத்து வைக்கும் கருத்துக்கள் அனைத்தும் அவர்களின் வழிகாட்டலாக இருக்குமே தவிர அவர்களின் வாழ்க்கையாக இருக்காது.

நல்ல கருத்துக்களை மேடையில் முழங்கி பேனா முனையால், கீ-போர்டுகளால் கொட்டித்தீர்க்கும் ஒரு எழுத்தாளனோ, பேச்சாளனோ தனது கருத்துக்கு மாற்றமாக நடக்கும் தருணங்களில் அதை பிறர் சுட்டிக்காட்டும்போது சர்வ சாதாரணமாக “என்னைப் பார்க்காதே, என் கருத்தைப் பார்” என்று வசனம் பேசிவிட்டு கழன்று கொள்ளும் நிலையைப் பார்க்கிறோம்.

எல்லா துறைகளுக்கும் வழிகாட்டி “என்னையும் பார் என் கருத்துக்களையும் பார் ஒன்றுக்கொன்று முரண்படவே செய்யாது” என்று துணிந்து அறிவித்து வாழக்கூடிய தகுதிப் பெற்றவர்கள் நிச்சயம் இறைத்தூதர்களாக மட்டுமே இருக்க முடியும். அதிலும் குறிப்பாக மாமனிதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் அதில் முன்னணியில் இருப்பார்கள். அதனால்தான் இறைக் கட்டளைப்படி மிக துணிச்சலுடன் “என்னைப் பின்பற்றுங்கள்” என்ற வாதத்தை அவர்களால் மக்கள் மன்றத்தில் வைக்க முடிந்தது. அவர்களின் வாழ்க்கை 100 சதவிகிதம் அங்கீகாரம் பெற்றதால் தான் இறைவனே “என்னைப் பின்பற்றுங்கள்” என்ற வழிகாட்டலை மக்கள் முன் வைக்க சொல்கிறான்.

என்னைப் பின்பற்றுங்கள் என்றால் எதில் பின்பற்றுவது என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கு வரலாம். இதை அவர்கள் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் கூட அவர்களின் வாழ்க்கையில் இந்த சந்தேகம் பிரதிபலிக்கின்றது.

கலை, இலக்கியம், பொருளாதாரம், பெண்ணியம், அரசியல், குடும்பம், ஆட்சியதிகாரம், ஊடகங்கள் என்று உலகில் வியாபித்து கிடக்கும் துறைகளில் முஸ்லிம்கள் ஏதோ ஒரு விதத்தில் பங்காற்றவே செய்கிறார்கள். இவற்றில் பங்காற்றும் பலதரப்பட்ட முஸ்லிம்களின் எண்ணவோட்டங்களும் பலதரப்பட்டவைகளாகவே அமைந்து விடுகின்றன.

முஸ்லிம் என்ற பெயரால் உலகமகா இறை இயக்கத்தில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள இவர்கள் “தாம் எந்த துறையைத் தேர்ந்தெடுத்தாலும் பிரச்சனையில்லை அந்த துறைக்கு தாம் இணைந்துள்ள இறை இயக்கமும் அந்த இயக்கத்தின் கடைசித் தலைவரும் சிறந்த வழிகாட்டிகளாக இருப்பார்கள்” என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டே தம் பணியைத் துவங்க வேண்டும். இதை அந்த வசனம் தன்னுள் பொதித்து வைத்துள்ளது.

துரதிஷ்டவசமாக பெரும்பான்மையான முஸ்லிம்களின் மனநிலை எப்படி இருக்கிறதென்றால் “தாம் ஏற்றுக் கொண்டுள்ள முஹம்மத்(ஸல்) அவர்கள் தொழுகைக்கும், நோன்பிற்கும், ஹஜ்ஜுக்கும் உரியவர்கள்” என்ற நிலையிலேயே இருக்கின்றது.

“பள்ளிவாசல் கட்டுதல், தொப்பிப் போட்டுக் கொள்ளுதல், தராவீஹ் பற்றி விவாதித்தல், தர்காவையும், மெளலீதையும் அவர்களோடு சம்பந்தப்படுத்திப் பேசுதல் இவற்றிற்காகத்தான் முஹம்மத்(ஸல்) அவர்கள்” என்ற நிலையைப் பரவலாக பார்க்க முடிகின்றது.

இஸ்லாமிய இயக்கத்திலும் அதன் இலட்சியங்களிலும் இது மிக மிக மிக மிக சிறிய பகுதியாகும். “என்னைப் பின்பற்றுங்கள்” என்ற கட்டளையை இப்படி மிக மிக சிறிய அளவில் வைத்து முடக்கிவிடும் முயற்சியை இப்படியும் அப்படியுமாக சில முஸ்லிம்கள் செய்து வருகிறார்கள். அந்த வசனத்தின் ஆழம் புரியாததே இதற்கு காரணமாகும்.

என்னைப் பின்பற்றுங்கள் என்பதில்,
என் ஆன்மீகத்தைப் பின்பற்றுங்கள்,
என் அரசியலைப் பின்பற்றுங்கள்,
என் குடும்ப இயலைப் பின்பற்றுங்கள்,
என் பொருளியலைப் பின்பற்றுங்கள்,

என் இலக்கியத்தையும், வீரத்தையும், விவேகத்தையும், நட்பையும், நலினத்தையும், மறுமை உறுதியையும், உலக பற்றின்மையையும், நடை உடை பாவனைகளையும் பின்பற்றுங்கள் என்பது உட்பட அவர்களின் மொத்த வாழ்க்கை முறையையும் பின்பற்ற வேண்டும் என்ற அர்த்தம் பொதிந்துள்ளது.

இதை விளங்காததால் தான் கல்வியறிவு பெற்றுள்ள முஸ்லிம்கள் முதல் பாமர முஸ்லிம்கள் வரை ஒவ்வொரு துறைக்கு ஒரு தலைவர் என்று பல தலைவர்களை தங்கள் வழிகாட்டிகளாக்கிக் கொண்டு அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆன்மீகத் தலைவர்கள :

பிறரால் எந்த வகையிலும் அந்த இடத்தை நிரப்ப முடியாத அளவிற்கு துளியும் குறை வைக்காமல் பணியாற்றி விட்டு சென்ற அந்த ஆன்மீகத் தலைவரை ஏற்றுக் கொண்ட சமுதாயம் அந்த மாபெரும் தலைவரின் மறைவுக்குப் பிறகு அநேக ஆன்மீகத் தலைவர்களை உருவாக்கிக் கொண்டது.

முஸ்லிம்களின் ஆன்மீக வழியை தீர் மானிப்பதில் இடம் பெற்றுள்ள ஆன்மீகத் தலைவர்களைப் பார்ப்போம்.

அபூ ஹனிஃபா (ஹனபி இமாம்), முஹம்மத் பின் இத்ரீஸ்(ஷாபி இமாம்), மாலிக் பின் அனஸ்(மாலிக் இமாம்) அஹ்மத் பின் ஹம்பல்(ஹம்பலி இமாம்) அவ்ஸாயி, தவ்ரி, இப்னுத் தைமிய்யா, கஸ்ஸாலி, இப்னு அரபி, முஹையத்தீன், முஹம்மத் பின் அப்துல் வஹாப் இப்படியாக அகில உலக பிரபல்யமான தலைவர்கள் பலர் இருக்கிறார்கள்.

இவர்களில் எவரையாவது ஏற்றுப் பின் பற்றினால் தான் இஸ்லாத்தை விளங்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை முஸ்லிம்களில் பெரும்பாலோர் இடத்தில் ஏதோ ஒரு விதத்தில் ஆழமாகப் பதிந்துப் போய் விட்டது. விளைவு?! மத்ஹப் பிரிவினைகள் உருவாயின! இறைவனும், மனிதனும் இரண்டற கலந்து விட முடியும் என்ற மகா பயங்கர அத்வைதக் கொள்கைப் பிரிவு உருவாகியது! தரீக்கா பிரிவும், தர்கா பிரிவும் உருவாயின! வஹ்ஹாபிய்யத் பிரிவு உருவாகியது!

இந்த ஆன்மீகத் தலைவர்களின் பெயரால் பிரிவினை-பிரிவினை என்று முஸ்லிம் உம்மத் பல கூறுகளாக சிதைந்துப் போய் விட்டது.

“என்னைப் பின்பற்றுங்கள்” என்ற அந்த இறைத் தூதரின் வாக்கை முஸ்லிம் உம்மத் ஆழமாக விளங்கி இருந்தால் அந்த தலைவரின் மறைவுக்குப் பிறகு வேறு எந்த ஆன்மீகத் தலைவரும் உருவாகி இருக்கவே மாட்டார்கள்.

இதில் வருத்தமான விஷயம் என்ன வென்றால் “என்னைப் பின்பற்றுங்கள்” என்று பகிரங்கமாகவும், அழுத்தமாகவும் அறிவித்து விட்டு சென்ற அந்த தலைவரை விட்டுவிட்டு “எங்களைப் பின்பற்றாதீர்கள், எங்களைப் பின்பற்றாதீர்கள் எங்களை பின் பற்றினால் நாங்கள் உங்களுக்கு பொறுப்பு தாரியாக மாட்டோம் மனிதர்கள் என்ற முறையில் எங்களிடம் தவறுகள் ஏற்படும் அதனால் எங்களைப் பின்பற்றாதீர்கள்” என்று மீண்டும் மீண்டும் சொல்லிவிட்டு சென்ற பிந்தியவர்களை இந்த சமுதாயம் பின்பற்றத் துவங்கியதுதான்.

விளைவு! சமுதாயத்தில் ஷாஃபி பள்ளிகளும், ஹனஃபி பள்ளிகளும் சமுதாய பிரிவின் அடையாளச் சின்னங்களாக உயர்ந்தன. உன் பள்ளி வேறு, என் பள்ளி வேறு, நீ வேறு, நான் வேறு, உன் கொள்கை வேறு, என் கொள்கை வேறு என்ற கூப்பாடுகள் தலைத்தூக்கின. கடந்தக் காலங்களில் இதற்காக பல தலைகள் உருண்டன.

இறைவனை மறக்க செய்து இசையிலும், போதையிலும், காமத்திலும் முஸ்லிம்களை திளைக்க செய்ய “தர்காக்கள்” புற்றீசல்கள் போல உலக நாடுகளில் ஆங்காங்கே முளைத்தன. இன்றைக்கும் கூட ஏராளமான மட முஸ்லிம்கள் “தர்காவே சரணம்” என்று காவடி ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கும் சில ஆன்மீகத் தலைவர்கள் வழி காட்டிகளாக இருந்தார்கள். இன்றைக்கும் இருக்கிறார்கள்.

மனதால் இறைவனை நினை, நினைவுகள் முற்றும்போது அவனோடு இரண்டற கலந்து விடலாம். உடலால் அவனை வணங்கத் தேவையில்லை. இரண்டற கலந்த பிறகு நீ அவனை வணங்கினால் உன்னையே நீ வணங்கிக் கொள்கிறாய் என்பதைத் தவிர வேறு அர்த்தம் இல்லை என்ற மோசமான கொள்கையை மக்களிடம் விதைத்து “பணம் பண்ணும்” ஆன்மீகத் தலைவர்கள் உதித்தார்கள். ஒரு சமுதாயம் பள்ளிவாசல் களையும், தொழுகைகளையும் மறந்து திண்ணைத் தூங்கிகளாக உருவாயின.

இவர்களில் ஒருவர் இன்னொருவரின் கொள்கை வழி குறித்து சிந்திக்க முடியாத அளவிற்கு சிந்தித்தாலும் மாற்றுக் கொள்கையுடையவர்கள் மீது வெறுப்புணர்வே மிஞ்சும் அளவிற்கு இவர்களிடம் மடத்தனங்கள் காலூன்ற நிலைப்பெற்றன.

இதற்கெல்லாம் என்ன காரணம்?

“என்னைப் பின்பற்றுங்கள்” என்ற அந்தக் கொள்கை சரியாக விளங்காமலேயேயாகும்.

“என்னைப் பின்பற்றுங்கள்” என்பதை இந்த சமுதாயம் விளங்கி இடைத்தலைவர்கள் இல்லாமல் அந்த ஒரே தலைவரையே இந்த சமுதாயம் பின்பற்ற துவங்கி விட்டால் அது உலக அளவில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தும்.

இதை நாம் வெறும் வார்த்தையாகச் சொல்லவில்லை. வேறு எந்தத் தலைவரும் இல்லாமல் அந்த ஒரே தலைவரைப் பின்பற்றிய நபித்தோழர்கள் உலகில் எத்தகைய புரட்சியை செய்துக் காட்டினார்கள் என்பதை சிந்தியுங்கள் நம் வார்த்தையின் அர்த்தம் புரியும்.

Previous post:

Next post: