அந்நியனாய் வாழ்வோம் அர்த்தம் புரியும்…

in 2019 ஜுன்

அந்நியனாய் வாழ்வோம் அர்த்தம் புரியும்…

ஜி. நிஜாமுத்தீன்,  பரங்கிப்பேட்டை

ஒருவர் வெளியூருக்கோ அல்லது வெளி நாட்டிற்கோ செல்கிறார் என்றால் அங்கு அவரது வாழ்க்கை சூழல் எப்படி அமையும்?

 1. இது ஒரு தற்காலிக தங்குமிடம், இங்கு சில வேலைகளுக்காக நாம் வந்துள்ளோம். சொந்த ஊருக்கு திரும்பும் நாள் சீக்கிரம் வரவேண்டும் என்ற எண்ணம் தான் அவரிடம் மிகைத்து நிற்கும்.
 2. சிந்தனையும், நினைவுகளும் சொந்தங்களையும், சொந்த ஊரையும் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருக்கும்.
 3. தாம் தங்கியுள்ள இடத்தில் கிடைக்கும் பொருட்கள் மீது அவ்வளவாக ஈடுபாடு இருக்காது.
 4. அங்கு கிடைக்கும் நட்புக்கள், தோழமைகள், உறவுகள் எவற்றோடும் பிண்ணி பிணைந்துக் கொள்ள மனம் வராது. ஏனெனில் இவை தற்காலிக மானவை என்ற எண்ணம் குறுக்கிட்டு தடுக்கும்.
 5. சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முடி யாத எந்தப் பொருளின் மீதும் அவர் கவனம் செலுத்த மாட்டார். அது அவரை எவ்வளவு கவர்ந்திருந்தாலும் சரியே!
 6. எடுத்துச் செல்ல முடியும் என்றுள்ள நல்ல பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைத்துக் கொள்வார்.
 7. அந்த இடத்தில் என்னதான் இதமான சூழ்நிலை இருந்தாலும் மனம் தேடுவதோ வேறாக இருக்கும். இதை ஒரு கவிதை இப்படிச் சொல்கிறது.

அகன்ற மாடி
ஆளுயறக் கட்டில்
குளிரூட்டப்பட்ட அறை
மென்மையான ராகம்
ஊர் சுற்ற வாகனம்
விடுமுறையில் விருந்தோம்பல்
எல்லாம் இருந்தும்
மனமே “ரிலாக்ஸ்’ என்று
மன்றாடினாலும்
ஆத்மாவின் தேடல்களில்
நீ.

இங்கு நீ என்பது தாயாகவோ, தந்தையாகவோ, மனைவியாகவோ, குழந்தையாகவோ, அல்லது வேறு யாராகவோ கூட இருக்கலாம்.

 1. தங்கியுள்ள இடத்தில் சில இழப்புகள் ஏற்பட்டாலும் இதற்கு பிரதிபலன் தான் ஊருக்கு திரும்பிய பின் தன் சொந்த ஊரில் கிடைக்கும் என்றால் அந்த இழப்புகளை ஏற்றுக் கொள்வார்.
 2. எந்த நோக்கத்திற்காக இந்த பயணத்தை மேற்கொண்டாரோ அந்த காரியத்தை முடிப்பதில் மிக கவனமாக இருப்பார்.
 3. நீண்ட ஓய்வுகள், காலத்தை வீணடிக்கும் போக்கு, ஊதாரித்தனமான செலவுகள் எதுவும் அவரிடம் இருக்காது.
 4. அன்னிய பூமியில் நாம் இருக்கிறோம் என்ற எண்ணமுள்ள காலமெல்லாம் மிக எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவார். சொந்த ஊரை பிரிந்து பிரயாணத்தில், வெளியூரில், வெளிநாட்டில் வாழும் (வாடும்) எவரும் நம் கருத்துக்களை மறுக்க மாட்டார்.

இப்போது இந்த நபிமொழியைப் படியுங்கள் :

நபி(ஸல்) என் தோள்மீது கையை வைத்து “அப்துல்லாஹ்வே! இந்த உலகில் நீ ஒரு பிரயாணியைப் போல் அல்லது ஒரு அன்னியனைப் போல் வாழு’ என்றார்கள். (புகாரி)

உலகில் ஏற்படக்கூடிய எல்லா சிக்கல்களுக்கும் காரணம் மனிதன் இவ்வுலகை அளவு கடந்து நேசிப்பதேயாகும். ஆறடி உடம்பைக் கொண்ட மனிதனின் ஆசைகளை மட்டும் அடிகளாலோ முழங்களாலோ அளவிட்டு விடமுடியாது.

ஒன்றுமே இல்லாமலிருக்கும் போது சில நூறுகளுக்கு ஆசைப்படுவதும், நூறுகளை கண்டவுடன் சில ஆயிரங்கள் இருந்தால் நல்லது என்பதும், அது கிடைத்தவுடன் இதை வைத்து என்ன செய்வது, எப்படியாவது லட்சத்தை புரட்ட வேண்டும் என்பதும். அது கை கூடினால் கோடியை நோக்கி கணக்குப் போடுவதுமாக மனித ஆசை பிரபஞ்சம் போல் விரிவடைந்துக் கொண்டே செல்கிறது.

ஆசைகளை அறுத்து விட்டு பிணம் போன்று வாழ வேண்டும் என்ற வாழ்க்கை யையோ ஆசைகளிலோ மூழ்கி திளைக்கும் குறிக்கோளற்ற வாழ்க்கையையோ இஸ்லாம் மனிதர்களுக்கு போதிக்கவில்லை. இவை இரண்டுமே வாழ்விற்கு பெரும் கேடு விளைவித்து விடக் கூடியதாகும்.

பசி, தாகம், ரசிப்பு, உணர்வு ஆகிய தேட்டங்களைப் போன்றே ஆசை என்பதும் ஒரு இயற்கையான தேட்டமாகும். பசியையும், தாகத்தையும், உணர்வையும் எப்படி புறக் கணித்து விட்டு வாழ முடியாதோ அதை போன்றுதான் ஆசையும், அதை புறக்கணித்து விட்டு வாழ முடியாது. மனிதகுல வரலாற்றிலிருந்து முற்றாக ஆசையை புறக்கணித்து வாழ்ந்த எந்த ஒரு மனிதனையும் காட்டவே முடியாது.

ஆசையை புறக்கணிக்க முடியாது என்பதால் அதிலேயே மூழ்கி கிடந்து விடலாமா என்றால் எல்லா கேடுகளுக்கும் இந்த ஆசையே ஆணிவேராக திகழ்கிறது. ஆசையின் மூலக்கூறுகளையே மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்த மூன்று ஆசைகள் அல்லது இதில் ஒன்றோ, இரண்டோ மனிதனை தாக்கும் போது அவன் எந்த குற்றத்தையும் செய்வதற்கு துணிந்து விடுகிறான். அவன் செய்யும் குற்றத்தின் விளைவுகளை நாம் உலகம் முழுவதும் கண்டு வருகிறோம்.

இந்த இரண்டுமே கேடு விளைவிப்பதால் தான் இஸ்லாம் மனிதனுக்கு உபதேசிக்கிறது “மனிதா நீ ஒரு அன்னியனைப் போல் இந்த உலகில் வாழ் என்று.

எவரது பரிச்சயமுமில்லாத, எவரது அறிமுகமுமில்லாத ஒரு பூமிக்கு ஒருவன் சென்றால் எப்படி எந்த தவறும் செய்ய அஞ்சுவானோ, எப்படி அவனால் பிறருக்கு எந்த கெடுதியும் ஏற்படாதோ அதே போன்ற ஒரு வாழ்க்கையை மனிதன் இங்கு வாழ துவங்கினால் அந்த வாழ்க்கையில் அர்த்தத்தில் பிறருக்கு வழிகாட்டல் உண்டு.

முஸ்லிமை பொருத்தவரை அவன் இந்த உலகிற்கு அன்னியனாக வந்தவன் என்பதை ஆழமாக மனதில் நிறுத்த வேண்டும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த பிரயாணம் முடிவுக்கு வரக்கூடியது. போய் சேர வேண்டிய இடமும் வாழ வேண்டிய வாழ்க்கையும் எதிரே காத்து நிற்கிறது.

சொந்த பூமிக்கு போய் சேருமுன் இந்த பிரயாண பூமியில் நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது என்ன?

நம் வாழ்வும் மரணமும் இறைவனுக்குரியதாக அமைய வேண்டும் என்ற சிந்தனை முதலாவதாக மனதில் வேர் பிடிக்க வேண்டும்.

தான் பிறந்த நோக்கத்தையும், தனக்கு வழிகாட்டியாக அனுப்பப்பட்ட இறைத் தூதர்களின் நோக்கத்தையும், அவர்கள் கொண்டு வந்த இறை நெறிநூல்களின் நோக்கத்தையும் கற்றுணர வேண்டும்

காலத்தின் அருமை உணர்ந்து மணித் துளிகளை பாழ்படுத்தி விடாமல் செயலாற்றும் பயிற்சியையும் பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இறைவனுக்குரிய செயல்களையும், சமூகத்திற்குரிய செயல்களையும், “பிறகு செய்து கொள்ளலாம்’ என்று ஒத்திப் போடும் மனநிலை கட்டாயமாக ஒழிக்கப்பட வேண்டும்.
மரணத்திற்குப் பின் ஆத்மா அழைத்து செல்லும் காரியங்கள் குறித்து கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

எவற்றை கொண்டு செல்ல முடியாதோ அல்லது எவற்றை கொண்டு செல்வதால் அங்கு சுமைக் கூடுமோ அவற்றிலிருந்து தவிர்த்து நிற்கும் அவசியத்தை கடைபிடிக்க வேண்டும்.

இங்கு விதைப்பதை தான் அங்கு அறுவடை செய்வோம் என்பது அசைக்க முடியாத உண்மை என்பதால் எதை விதைக்கிறோம் என்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

உணர்வதால் உலக வாழ்க்கையில் அன்னியனாவோம், அன்னியனாவதன் மூலம் வாழ்வின் அர்த்தம் புரியும்.

“இந்த உலகில் ஒரு அன்னியனைப் போல் வாழ்” இஸ்லாமிய உபதேசங்களில் ஒரு முத்தான உபதேசமாகும்.

Previous post:

Next post: