உருவப்படம் வரையலாமா? ( பகுதி-2 )

in 2019 ஜுன்

உருவப்படம் வரையலாமா? ( பகுதி-2 )

M.A. ஹனீபா,  பொட்டல்புதூர்

2019  மே மாத தொடர்ச்சி…

உருவப்படங்களும், நாயும் உள்ள வீட்டில் அருளைக் கொண்டுவரும் வானவர்கள் நுழைய மாட்டார்கள்.

ஆகியவற்றை எடுத்துச் சொல்லி உருவப்படம் வரையக்கூடாது, புகைப்படக் கருவியைக் கொண்டு உயிரினங்களின் உருவங்களைப் புகைப்படம் எடுக்கக் கூடாது, ஒளிப்பதிவு செய்யும் கருவியைக் கொண்டு உயிரினங்களின் உருவங்களை ஒளிப்பதிவு செய்யக்கூடாது, வீடுகளில் உருவப்படங்களை வைத்திருக்கக் கூடாது எனத் தீர்ப்பு வழங்குகின்றனர் சில அறிஞர்கள்.

முதல் வகையான மேற்கண்ட இவ்வறிவிப்புகளின் எச்சரிக்கை மட்டும் இருந்திருந்தால் மறு பேச்சுக்கே இடமில்லாமல், உயிரினங்களின் உருவப்படங்கள் வரைவதற் கும், உருவப்படங்களை பயன்படுத்துவதற்கும் இஸ்லாத்தில் தடையுள்ளது என்று சொல்லி முடித்து ஒதுங்கி விடலாம். ஆனா லும், விதிவிலக்காக வேறு சில அறிவிப்பு களும் உள்ளன அவற்றையும் இங்கு ஒப்புநோக்க வேண்டும்.

இரண்டாம் வகை ஹதீஃத்கள் :

  1. எங்களிடம் திரைச் சீலையயான்று இருந்தது. அதில் பறவையின் உருவம் இருந்தது. ஒருவர் வீட்டுக்குள் நுழையும்போது அந்தத் திரையே அவரை வரவேற்கும். என்னிடம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், இதை அப்புறப்படுத்து. நான் வீட்டுக்குள் நுழையும்போதெல்லாம் இவ்வுலக(த்தின் ஆடம்பர)ம்தான் என் நினைவுக்கு வருகிறது என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஆயிஷா(ரழி) நூல்கள்: முஸ்லிம் : 4279, திர்மிதீ : 2468, நஸயீ: 5353, அஹ்மத்)
  2. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தபோது, எனது வீட்டுவாசலில் நான் குஞ்சம் உள்ள திரைச் சீலையயான்றைத் தொங்கவிட்டி ருந்தேன். அதில் இறக்கைகள் கொண்ட குதிரைகளின் உருவங்கள் இருந்தன. உடனே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் கள் அதை (அகற்றுமாறு) உத்தரவிட அவ் வாறே அதை நான் அகற்றிவிட்டேன். (அறிவிப்பாளர் : ஆயிஷா(ரழி) நூல்: முஸ்லிம் : 4281)
  3. ஆயிஷா(ரழி) அவர்களிடம் உருவச் சித்திரங்கள் பொறித்த திரைச் சீலை ஒன்று இருந்தது. அதனால் வீட்டின் ஒரு பகுதி (யிலிருந்த அலமாரி)யை அவர்கள் மறைத்தி ருந்தார்கள். (அதை நோக்கித் தொழுத) நபி(ஸல்) அவர்கள், இதை அகற்றி விடு. ஏனெனில், இதிலுள்ள உருவப்படங்கள் என் தொழுகையில் என்னிடம் குறுக்கிட்டுக் கொண்டேயிருக்கின்றன என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் : அனஸ்(ரழி) நூல்கள் : புகாரி : 5959, முஸ்லிம்: 4284, அஹ்மத் :12122, முஸ்லிம் நூல் அறவிப்பில், ஆகவே அதை நான் அப்புறப்படுத்தி அதைத் தலை யணை (இருக்கை)களாக ஆக்கிவிட்டேன்” என்று இடம் பெற்றுள்ளது)
  4. நான் என்னுடைய அலமாரி(நிலைப் பேழை) ஒன்றின் மீது (மிருகங்களின்) உருவங்கள் (வரையப்பட்டு) இருந்த ஒரு திரைச் சீலையைத் தொங்க விட்டிருந்தேன். அதை நபி(ஸல்) அவர்கள் கிழித்துவிட்டார்கள் எனவே, அதிலிருந்து நான் இரண்டு மெத்தை இருக்கைகளைச் செய்து கொண்டேன். அவை வீட்டில் இருந்தன அவற்றின் மீது நபி(ஸல்) அவர்கள் அமர்வார்கள். (அறிவிப்பாளர் : ஆயிஷா(ரழி) நூல்: புகாரி:2479)

நபி(ஸல்) அவர்களின் வீட்டில் உருவ பொம்மைகள் இருந்தன :

  1. நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர்(ஸல) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண் டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத் தூதர்(ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள். (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரழி) நூல்கள் : புகாரி 6130, முஸ்லிம்:4827, அபூதாவூத் : 4931, இப்னுமாஜா:1982, அஹ்மத், முஸ்லிம் நூல்: 4827, அறிவிப்பில், “நான் நபி(ஸல்) அவர்கள் இல்லத்தில் பொம்மை கள் வைத்து விளையாடுவேன்” என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது)

விளையாட்டுப் பொம்மைகளில் உயிரினங்களின் உருவங்களும் இருந்தன :

  1. நபி(ஸல்) அவர்கள் தபூக் அல்லது கைபர் இரண்டில் ஏதோ ஒரு போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தார்கள். அப்போது காற்று வீசி ஆயிஷா(ரழி) அவர்களின் விளையாட் டுப் பொம்மைகளுக்குப் போடப்பட்டிருந்த திரை விலகியது. அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் “யா ஆயிஷா என்ன இது?” என்றார்கள். “என் பொம்மைகள்” என்று கூறினேன். அவற்றுக்கிடையே இரண்டு இறக்கைகளைக் கொண்ட குதிரை பொம்மை ஒன்றைக் கண்டு அதோ நடுவில் உள்ள அந்தப் பொம்மை என்ன? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “இறக்கைகள்” என்று கூறினேன். குதிரைக்கும் இரண்டு இறக்கைகளா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, “ஏன் சுலைமான் நபி யிடம் இறக்கைகள் உள்ள குதிரை இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ?” என்று கேட்டேன். இதைக் கேட்டதும், அவர்களின் கடவாய்ப்பற்களை நான் காணும் அளவுக்கு சிரித்தார்கள். (அறிவிப்பாளர் : ஆயிஷா(ரழி), நூல்: அபூதாவூத் : 4932)

(6வது அறிவிப்பில், “கைபர் அல்லது தபூக்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கைபர் போர் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு நடைபெற்றது. தபூக் போர் ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டு நடைபெற்றது)

உருவப் படங்கள் தொடர்பாக மேற்கண்ட இரண்டாம் வகை ஹதீஃத்களின் கருத்துக்களையயாட்டி, சற்று முன்/பின் வாசகங்கள் வித்தியாசத்தில் இன்னும் அநேக அறிவிப்புகள் உள்ளன.

இரண்டாம் வகை ஹதீஃத்களிலிருந்து எவ்வித மதிப்பும் அந்தஸ்தும் வழங்காமல் சில காரண காரியங்களுக்காக வீடுகளில் உருவப்படங்களை வைத்திருக்கலாம். உருவப்படங்களைப் பயன்படுத்தலாம் என்று விளங்க முடிகிறது.

உருவப்படம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள் என்கிற அறிவிப் பிற்கு எதிராக இன்று உருவப்படங்கள் இல்லாத வீடு இல்லை எனும் அளவுக்கு, புகைப் படங்கள், குடும்ப அட்டை, காப்பீடு அட்டை வாக்காளர் அட்டை, செய்தித்தாள்கள், புத்தகங்கள், கல்விப் புத்தகங்கள், ரூபாய் நோட்டுக்கள், சில்லரைக் காசுகள் என இப்படி எவ்வளவோ உருவப்படங்கள் பதிக்கப்பட்டவை வீடுகளில் உள்ளன. இவை தவிர்க்க முடியாதவை. தவிர்ப்பது நடைமுறை சாத்தியமற்றது.

எடுத்துக்காட்டாக, பாலர் கல்வியை எடுத்துக் கொள்வோம். துவக்கத்தில் குழந் தைகளுக்கு உயிர் எழுத்துக்கள் கற்றுக் தரப்படுகின்றன. அ-அம்மா அல்லது அணில், ஆ-ஆடு, இ-இலை, ஈ-ஈயின் உருவம், உ-உரல், ஊ-ஊஞ்சல், எ-எலி, ஏ-ஏணி, ஐ-ஐவர், ஒ-ஒட்டகம், ஓ-ஓடம், ஒள -ஒளவை யார் என குழந்தைகள் மனத்தில் உயிர் எழுத்துக்களைப பதிய வைக்க பாடப் புத்தகத்தில் உயிரினங்களின் உருவப்படங்களும் வரைந்து காட்டி கல்வி போதிக்கப்படும்.

குழந்தைகள் வீட்டில் இருக்கும்போதும் பாடப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பார்கள் பாடப் புத்தகங்கள் வீட்டில் தான் இருக்கும். பாடப் புத்தகத்தில் உயிரினங்களின் உருவப்படங்கள் இருப்பதால் வானவர்கள் வீட்டில் நுழையமாட்டார் கள் என்று சொல்ல மாட்டோம்.

உருவப்படம் கூடாது என்று சொல்பவரின் சட்டைப் பையில் உருவப்படம் வரையப்பட்ட பணம் இருக்கும். உருவப்படம் உள்ள அடையாள அட்டையும் இருக்கும்.

இன்று தொலைதூரம் என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. பொருளாதார வசதி இருந்தால் நினைத்த நேரத்தில் விரும்பிய நாட்டிற்குச் சென்று வரலாம். இதற்குப் பாஸ்போர்ட் கட்டாயம் வேண்டும்.

பாஸ்போர்ட்டின் உரிமையாளரை அடையாளப்படுத்த புகைப்படம் தேவை. அயல்நாட்டினர் உம்ரா, ஹஜ்ஜை நிறை வேற்ற வேண்டுமாயின் பாஸ்போர்ட் இல்லாமல் இறை ஆலயமான கஅபா இருக்கும் சவூதி அரேபியா நாட்டிற்குள் சட்டப்படி நுழைய இயலாது.

தொலைந்து போனவர்களைத் தேடும் முயற்சியில் “காணவில்லை” என்று அறிவிப்புச் செய்வதற்கும் காணாமல் போனவரின் புகைப்படம் தேவை. காவல் துறையினர் திருடர்கள் பற்றிய எச்சரிக்கை செய்வதற்கும், அயல் நாட்டிற்குத் தப்பியோடிய குற்றவாளியை இன்டர்நெட் மூலம் அடையா ளப்படுத்துவதற்கும் உளவுத்துறைக்குப் புகைப்படங்கல் பெரும் உதவியாக இருந்து வருகின்றன.

காவல்துறை, நீதித்துறை, அரசுத்துறை என பல துறைகளிலும் புகைப்படங்களும், ஒளிப்பதிவுகளும் ஆவணங்களாகப் பத்திரப்படுத்தப்படுகின்றன. இன்னும் சொல்வ தென்றால், புகைப்படம், ஒளிப்படம் இவை முக்கிய சாட்சிகளாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

மோசடியைத் தவிர்க்க, வீடு நிலம் என அசையாச் சொத்துக்கள் வாங்கும்போது விற்பவர், வாங்குபவரின் புகைப்படங்கள் முத்திரைப் பத்திரத் தாள்களில் ஒட்டிப் பதிவு செய்யப்படுகின்றன. உருவப்படங்களால் இவ்வளவு பயன் இருந்தாலும், இஸ்லாம் முற்றாகத் தடை விதித்திருந்தால் முஸ் லிம்கள் மறு பேச்சின்றிக் கட்டுப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.

திரைச் சீலையில் உயிரினங்களின் உருவப் படங்கள் தேவையா?

மறைவுக்காக வீட்டின் நுழைவாயிலில் திரைச் சீலையைத் தொங்க விடுகின்றனர். வெளியில் நடமாடும் ஆட்களின் பார்வை வீட்டிற்குள் எட்டாமலிருக்க திரைச் சீலை ஒரு மறைவு அவ்வளவுதான் அதற்கு துணி மட்டும் போதும்.

திரைத் துணியில் உருவப்படங்களை வரைந்து அலங்கரிப்பது வீட்டின் நுழைவாயிலை மதிப்பு மிக்கதாகக் கருதுவதாகும். இது தேவையற்ற அலங்காரம் என்பதுடன் திரைத் துணியில் வரையப்படும் உயிரினங்களின் உருவங்கள் மதிக்கப்படுகின்றன.

உருவப்படங்களின் மீதான இந்த மதிப்பைத்தான் இஸ்லாம் இல்லாமல் ஆக்குகின்றது. அதேத் திரைத் துணியைக் கிழித்து தரையில் விரித்து அதன் மீது அமர்ந்து கொள்ளலாம். மிதியடியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது திரைத் துணியைச் சுருட்டி வீட்டில் ஒரு மூலையில் வைத்து விட்டாலும் வானவர்கள் நுழையத் தடையில்லை.

  1. ஜிப்ரீல்(அலை -ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரது (இல்ல வாயிலில் நின்று உள்ளே வர) அனுமதி கோரினார். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) “உள்ளே வரலாம்’ என அனுமதி வழங்கினார்கள். (ஆனால்) “உங்கள் வீட்டுத் திரைச் சீலையில் (உருவப்) படங்கள் உள்ள நிலையில் நான் எப்படி உள்ளே வருவேன்? அதன் தலைகளை வெட்டி விடுங்கள். அல்லது உருவங்களைச் சிதைத்துவிடுங்கள், வானவர் கூட்டமாகிய நாங்கள் உருவங்கள் வரையப்பட்ட இல்லங்களில் நுழைய மாட்டோம்” என ஜிப்ரீல் பதிலுரைத்தார். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி), நூல்கள்: நஸயீ:5395, திர்மிதீ: 2806, அபூதாவூத் : 4158, அஹ்மத் : 8018) நஸயீ நூல் தவிர திர்மிதீ அபூதாவூத், அஹ்மத் ஆகிய நூல்களில் கூடுதலாக வரும் கீழ்க்காணும் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

“என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்தார்கள், ”நான் நேற்றிரவு உங்களிடம் வந்திருந்தேன். உங்கள் வீட்டு வாசலில் உருவப்படங் கள் இருந்ததன் காரணமாக வீட்டுக்குள் நுழையவில்லை” என்று ஜிப்ரீல்(அலை) கூறினார்கள். வீட்டுத் திரைச் சீலையில் உருவப்படங்கள் இருந்தன. வீட்டில் ஒரு நாயும் இருந்தது. உருவப்படத்தின் தலையை நீக்கி அதை மரத்தின் வடிவம் போல் ஆக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அந்தத் திரைச் சீலையைத் துண்டாக்கி மிதி படும் வகையில் இரண்டு தலையணைகள் தயாரிக்குமாறும், நாயை வெளியேற்று மாறும் கட்டளையிட்டார்கள். ஹஸன் ஹுஸைனுக்கு சொந்தமான நாய்க்குட்டி, நபி(ஸல்) அவர்களின் கட்டிலுக்கடியில் இருந்தது. பின், அது வெளியேற்றப்பட்டது.”

மிதிபடும் வகையில் மதிப்பற்ற உருவப்படங்கள் வீட்டில் இருக்கலாம். அதனால் வானவர்கள் நுழைய தடை இல்லை என்பதை மேற்கண்ட அறிவிப்பிலிருந்து விளங்குகிறோம்.

உலகப் பயன் பெறுவதற்காகப் பயன் படுத்தப்படும் உருவப்படங்கள் வீட்டில் வைத்திருக்க மார்க்க ரீதியாக எவ்விதத் தடையும் இல்லை.

அப்படியானால் முதல் வகை ஹதீஃத் களின் நிலை என்ன? என்கிற வினா எழுகின்றது. இதற்கு வணங்கப்படும் உருவச் சிலைகளை வடிவமைக்கக் கூடாது. வணங்கப் படும் உருவப் படங்களை வரையக் கூடாது. வணங்கி வழிபாடு நடத்தும் சிலைகளும், உருவப்படங்களும் உள்ள வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள் எனப் பொருள் கொள்வதே பொருத்தமாகும்.

“நாய்கள், உருவப்படங்கள் இருக்கும் வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள் என்ற ஹதீஃதில், “வணங்கப்படும் உருவப் படங்கள்” என்று நாமாக விளக்கம் இணைத்துக் கொள்ள நமக்கு அதிகாரம் உண்டா?” என்ற கேள்வி எழலாம்.

இல்லை, மார்க்கத்தில் ஒன்றைக் கூட்டவோ, குறைக்கவோ ஹலால், ஹராம் என்று விதிக்கவோ எவருக்கும் அதிகாரமில்லை, அதிகாரம் யாவும் அல்லாஹ்வுக்குரியது.

ஹதீஃத்களிலிருந்து புரிந்து கொண்டதையே விளக்கமாக வைத்துள்ளோம். நாய்களைப் பற்றித் தடை விதிக்கும் ஹதீஃத்களைப் போலவே, விதிவிலக்காக வேட்டை நாய்களை வளர்த்துக் கொள்ளலாம் என்று அல்லாஹ்வின் தூதர் அனுமதியளித்திருக்கின்றார்கள். (புகாரி : 2322) இந்த அனுமதி, கட்டாயத் தேவையைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டதாகும்.

உருவச் சிலைகள் உருவப்படங்கள் மட்டும் வணங்கப்படுவதில்லை. சில மதச் சின்னங்களும் வணங்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. சிலுவை, திரிசூலம், வேல் ஆகியவற்றைக் கடவுள்களின் சின்னங்கள் எனப் பிற மதத்தவர் வணங்கி வழிபட்டு வருகின்றனர்.

சிலுவைச் சின்னம் இல்லாத கிறிஸ்தவ தேவாலயங்களைக் காண இயலாது. சிலுவை ஒரு தெய்வச் சின்னம் எனக் கருதி கிறிஸ்தவ மக்கள் வணங்குவதால், தோற்றத்தில் சிலுவைக் குறி போன்றவற்றையும் நபி (ஸல்) அவர்கள் சிதைத்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் வீட்டில் சிலுவை போன்ற உருவங்கள் உள்ள எந்தப் பொருளையும் சிதைக்காமல் விட்டு வைத்த தில்லை. (அறிவிப்பாளர்: ஆயிஷா(ரழி), நூல்கள் : புகாரி: 5952, அபூதாவூத்:4151, அஹ்மத் : 23740)

மதச் சின்னங்கள் வணங்கப்படுவதால் சிலுவை சின்னத்தைப் போல் தோற்றமளித்தவைகளை நபி(ஸல்) அவர்கள் சிதைத்துள்ளார்கள். வணங்கப்படும் உருவப்படங்க ளும் சிதைத்து அழிக்கப்பட வேண்டும் என்பது இதிலிருந்து விளங்க முடிகிறது.

மரணமடைந்த முன்னோர்களின் உருவப்படங்கள் மரச் சட்டமடித்து கண்ணாடியிட்டு சுவற்றில் மாட்டி, அதற்கு நெற்றியில் குங்குமம் சந்தனம் போட்டு வைத்து மாலை யிட்டு அவை பூஜிக்கப்படுகின்றன. பிற மதத்தினர் வீட்டின் பூஜை அறையில் முன்னோர்களின் உருவப்படங்கள் தெய்வமாக வணங்கப்படுகின்றன.

அம்மி, குழவி, ஆட்டுக்கல், உரல், கல் தூண் என இவற்றை வடிவமைக்கும் சிற்பியிடம் வியாபார சிந்தனை மட்டுமே இருக்கும் வேறு உணர்வு அதிலிருக்காது. ஆனால் ஆண் தெய்வங்கள், பெண் தெய்வங்கள் என உருவச் சிலைகளை வடிவமைக்கும் சிற்பி, அதை உருவாக்கும் போதே அதற்கு தெய்வீக ஆற்றல் உள்ளதாகக் கருதி ஆச்சாரத்துடன் விரதமிருந்து சிலையை வடிக்கிறார். தெய்வப்படம் உருவங்களை ஓவியம் தீட்டும் ஓவியரும் அதற்கு தெய்வீக ஆற்றல் இருப்பதாகக் கருதி பக்தியுடன் உருவங்களைத் தீட்டுகிறார்.

செல்வங்களை அள்ளித் தரும் பெண் தெய்வம் கையிலிருந்து பொற்காசுகள் கொட்டுவது போலவும், கல்விக்கான பெண் தெய்வம் கையில் வீணை வைத்திருப்பது போன்றும் ஓவியரின் கற்பனைக்கேற்ப, இணை கற்பிக்கும் இணை தெய்வங்களின் உருவங்களை வரைந்தவரிடம் அவர் வரைந்த உருவப்படத்திற்கு உயிர் கொடுக்கும்படி மறுமையில் வேதனை செய்யப்படு வார் என்று விளங்கினால் முரண்பாடு இல்லை.

உருவ பொம்மைகள் வீட்டில் வைத்திருக்கலாமா?

உயிரினங்களின் உருவச் சிலைகளுக்கும் உருவ பொம்மைகளுக்கும் வித்தியாசமில்லை. வணங்கி வழிபாடு நடத்தினால் அது சிலை, வைத்து விளையாடினால் அது பொம்மை இங்கு எண்ணம், நோக்கம் வேறுபடுகின்றது.

மரியாதை தரும் வகையில் இருந்தால் அது வணக்கத்தின் துவக்கமாக அமைந்து விடும். விளையாட்டுப் பொருளாகவோ மிதிபடும் மதிப்பற்ற வகையில் சிதறிக் கிடந்தாலும் அவை வீட்டில் இருக்கத் தடையேதும் இல்லை. நபி(ஸல்) அவர்கள் காலத்தில், அன்னையர் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களைச் செய்து கொடுத் தனர்.

“நபி(ஸல்) அவர்கள், ஆஷீரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்க ளுக்கு ஆளனுப்பி, “யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்து விட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்” என்று அறிவிக் கச் செய்தார்கள்.

நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம். அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும் போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். (அறிவிப்பாளர் : ருபய்யிவு பின்த் முஅவ்வித்(ரழி) நூல்கள் : புகாரி:1960, முஸ்லிம்:2091)

சிறுவர் சிறுமியருக்கு நோன்பு கடமையில்லை என்றாலும் நோன்புக்கான பயிற்சி அளிக்க நபித்தோழியர் சிறுவர், சிறுமியரை நோன்பு நோற்க ஆர்வமூட்டுவார்கள்.

குழந்தைகள் பசியில் அழுதால், விளையாட்டுப் பொருட்களைச் செய்து கொடுத்து அவர்களின் கவனத்தைத் திருப்புவார்கள் என மேற்கண்ட ஹதீஃதிலிருந்து விளங்குகிறோம். விளையாட்டுப் பொருட்களில் பொம்மைகளும் இருந்தன என்பதற்குச் சான்றாக, முதல் பகுதியில் இரண்டாம் வகை ஹதீஃத்களில் 5,6,7 ஆகிய அறிவிப்பு களை மீண்டும் பார்வையிடுவோம்.  (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: