அந்நஜாத் –  ஆகஸ்ட் 2019

in 2019 ஆகஸ்ட்

அந்நஜாத் –  ஆகஸ்ட் 2019

துல்கஃதா – துல்ஹஜ் 1440

  1. தலையங்கம்!
  2. அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா? (தொடர்-4) ?
  3. வாழ்க்கைப் பரீட்சையில் தேறுபவர்கள் யார்?
  4. அல்லாஹ் ஆதியில் படைத்து பூமிக்கு இறக்கிய நீரின் அதிசயமும்! அதன் அவசியமும்!!
  5. அமல்களின் சிறப்புகள்..
  6. ஆதிகாலவேதங்களும், இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்…
  7. தியாகப் பெருநாள்!

******************************************************

தலையங்கம்!

 தப்ரிஸ் அன்சாரி

தப்ரீஸ் அன்சாரி இந்தப் பெயரைக் கேட்டவுடன் செய்தித்தாள், தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் போன்றவைகளில் தொடர்புடைய மக்கள், இந்த தப்ரிஸ் அன்சாரி என்ற ஒரு முஸ்லிம் இளைஞரை தங்களின் நினைவுத் திரைக்கு கொண்டு வந்து பரிதாபப்படுவார்கள். இந்த “தப்ரிஸ் அன்சாரி’ யார்? அவருக்கு என்ன நேர்ந்தது?

ஜார்கண்ட் மாநிலத்தில் ஒருவரது மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டுப் போய்விட்டதாம். இந்த திருட்டை விசாரிக்க கும்பல் ஒன்று புறப்பட்டு சென்றதாம். எதிரில் வந்த ஒரு நபரைப் பிடித்து துன்புறுத்தத் தொடங்கியது அந்த கும்பல். அந்த நபரின் பெயரை இடையே விசாரித்திருக்கின்றனர். தமது பெயர் “தப்ரிஸ் அன்சாரி’ என்று அவர் சொன்னதும், அவர் முஸ்லிம் என்று தெரிந்து கொண்டது தான் தாமதம். அந்த கும்பல் அவரை ஒரு மரத்தில் கட்டி வைத்து அடிக்க ஆரம்பித்து விட்டனர். இடையிடையே ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமான் என்று சொல்லுமாறு வற்புறுத்தி ஒட்டுமொத்த கும்பலும் அந்த இளைஞரை அடித்துக் கொன்று விட்டனர். இந்த துன்புறுத்தல்களை அந்த கொலை கும்பல் காணொளியாகப் பதிவு செய்து, சமூக ஊடகங்களில் பரவவிட்டிருக்கிறது.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை, சட்டத்தை கையில் எடுத்துக் கொண்ட கொலைவெறி கும்பலிடமிருந்து தப்ரிஸ் அன்சாரியை மீட்டுக் கொண்டு வந்தனர். அதே நேரம் கொலைவெறி கும்பலை அவர்கள் கண்டு கொண்டதாகவும் தெரியவில்லை. கைது செய்யவும் இல்லை, விஷயம் தேசிய அளவில் பரபரப்பான பிறகே, காவல்துறை பெயரளவிலான நடவடிக்கையை எடுக்கத் தொடங்கியதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன

இப்படிப்பட்ட கொலைகளினால் நம் இந்திய நாட்டின் பெயர் சர்வதேச அளவில் மோசமாகிக் கொண்டிருப்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட குரேஷ´யா ஃபிஃபா, உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆடுகிறது. ஆனால் 135 கோடி மக்கள் தொகை கொண்ட நாம், இந்து, முஸ்லிம் விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று ஹர்பஜன்சிங் அவர்கள் சமூக வலைதளங்களில் தமது உள்ளக் குமுறலை பதிவிட்டிருப்பதை அரசு கண்டு கொள்ளுமா?

மீண்டும் பதவியேற்ற பிரதமர் மோடி இத்தருணத்தில் சர்வதேசப் பயணங்களில் இருந்து வருகின்றார். இருப்பினும், தன்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்படவேண்டும் என்று பிரதமர் அறிவித்து இருப்பது ஆறுதல் தருகிறது. பிரதமரின் வாக்குறுதி செயல்படுத்தப்படுமேயானால் அது பாராட்டிற்குரிய விஷயம் ஆகும்.

அற்ப காரணங்களுக்காக மதவெறி கும்பல் மானிட உயிரைப் பறிக்கும் செயல்கள், மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவது கவலை அளிக்கிறது.

இதுவரை வடக்கில் நடந்து வந்த சம்பவங்களை கூர்ந்து கவனித்து வந்திருப்போமேயானால், ஒரு உண்மையைத் தெரிந்திருப்போம். பின்புலம் இல்லாத மிக சாதாரண முஸ்லிம்கள் சமூகம் கண்டுகொள்ளாத சாமானியர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கேட்பதற்கு நாதியற்றவர்கள், தற்காப்புக்காகக் கூட எதிரியை திருப்பி அடிக்க திராணியற்ற சில அப்பாவி முஸ்லிம்களைக் குறி வைத்துத்தான் பெரும்பாலான தாக்குதல்கள், கொலைகள் வடக்கே நடத்தப்பட்டு வருகின்றன.

கொடூரமான தாக்குதல்களையும், கொலைகளையும் செய்து விட்டு அவற்றை காணொலியகப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் தைரியமாக பதிவிட்டு வருகின்றனர். தங்களைப் பற்றி ஒரு அச்சத்தை மக்கள் மனதில், குறிப்பாக, முஸ்லிம்கள் மனதில் பதிய வைப்பது மட்டுமே இவர்களின் நோக்கம் ஆகும். அதுமட்டுமின்றி, அதன் மூலமாக தங்களின் கொடூர செயலை எவரும் எதிர்க்க முடியாத தற்காப்புக் கேடயமாகவும் அவர்களுக்கு இது பயன்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகளை இதுவரை இந்த கும்பல் செயல்படுத்தியது இல்லை. காரணம், மேலே நாம் வகைபடுத்தியவர்களில் பாதிக்கப்படுபவர்கள் எவராக இருந்தாலும், அவர்களுக்கு சாதி, மதம், இன, நிற பேதமின்றி, பொதுமக்கள் இயல்பாகவே உதவிக்கரம் நீட்டும் பண்பாடு தமிழகத்தில் மலிந்து கிடக்கிறது. அது மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர் எதிரியை தற்காப்புக்காகக் கூட எதிர்க்க திராணியற்றவராக இருந்தாலும், அவர் எந்த மதத்தினராய் இருந்தாலும், அம்மதத்தினர் அவரைப் பாதுகாக்க முன் வருவது இயல்பான விஷயமாகவும் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது.

ஒற்றுமையாக வாழ விரும்புபவர்கள் தமிழ்நாட்டில் அதிகம் இருப்பதும், கலவரத்தை எவரும் விரும்புவதில்லை என்பதும், வலிய சண்டைக்குப் போவதில்லை, வந்த சண்டையை விடுவதும் இல்லை என்பதும் இங்குள்ளவர்களின் மரபு வாழ்க்கையாக அமைந்து விட்டதும், எவராலும் மறுக்க முடியாத உண்மை! எனவே, மதத்தின் பெயராலோ அல்லது அநியாயமாகவோ கலகம் விளைவிக்க, பொதுவாக தமிழகத்தில் எவரும் அதிகமாக முன் வருவதில்லை.

இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டுக்குள் நுழைந்து விடாமல் அரசும் காவல்துறையினரும் இணைந்து கவனமாக செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
******************************************************

 அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா?

  கFஜி.நிஜாமுத்தீன், பரங்கிப்பேட்டை

(நபியே!) நீர் கூறும். நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று அல்குர்ஆனின் அழுத்தமான வசனங்களில் இதுவும் ஒன்று. இவ்வசனம் பற்றிய முந்தைய தொடர்களில் முஹம்மத் என்ற இறைத்தூதரை ஏற்று அவரைப் பின்பற்றுவதின் வழியாகத்தான் அல்லாஹ்வின் நேசத்தை நாம் பெற முடியும். இதை அல்லாஹ்வே இந்த வசனத்தில் முன்மொழிகிறான் என்பதையும், ஆன்மீகவாதிகள் அனைவரும் இறைவனை நேசிக்கிறார்கள். ஆனால் அந்த ஆன்மீகவாதிகளை இறைவன் நேசிக்கின்றானா? என்ற தவிர்க்க முடியாத கேள்வியை முன் வைத்து அதற்கு இந்த வசனம் விடை சொல்கின்றது என்பதை காண்போம்.

முஸ்லிம் சமுதாயம் மட்டுமின்றி அனைவருமே இந்த வசனத்தை ஆழமாக சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

கோடான கோடி மனித சமுதாயத்தை படைத்த இறைவன், அவர்களில் ஒரு சிலரை தேர்வு செய்து அந்தந்த சமுதாயத்திற்கு வழிகாட்டியாக ஆக்கினான். அப்படி தெரிவு செய்யப்பட்டவர்களை பின்பற்றுவதன் வழியாகவே சரியான ஆன்மீகத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதையும் இறைவன் அம்மக்களுக்கு செய்தியாக அறிவித்தான்.

அருள்மறை குர்ஆனை பொருத்தவரை உலக மக்கள் அனைவருக்கும் அது வழிகாட்டும் புத்தகமாக வழங்கப்பட்டதால் அதன் சொற்றொடர்கள் ஒவ்வொன்றும் ஆழ்ந்த பொருள்களையும், வழிகாட்டுதலையும் உள்ளடக்கியதாகும்.

நாம் பேசி வரும் 3ம் அத்தியாயம் 31ம் வசனத்தை பொருத்தவரை இதில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் ஒரு சட்டத்தை முன்வைக்கக் கூடிய சொற்கள் அல்ல. அது வாழ்க்கையை முன்வைக்கும் சொற்களாகும். அதில் ஒன்றுதான் “என்னைப் பின்பற்றுங்கள்” என்பதாகும். குர்ஆனில் இரண்டு இடங்களில் இந்த சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவை இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. 3ம் அத்தியாயத்தின் 31ம் வசனம் முழு அளவு முஹம்மத் என்ற இறைத் தூதரைப் பின்பற்ற வேண்டும் அதுதான் ஆன்மீகம் என்ற பேருண்மையை முன் வைக்கின்றது. மற்றொரு வசனத்தில் இதே வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அது ஒரு கட்டளையை பின்பற்றும் பொருளில் தான் வந்துள்ளது. அவற்றை பார்த்து விட்டு தொடர்வோம்.

முஹம்மதே!) இதற்கு முன் ஹாருன் என்ற இறைத்தூதர் அவர் சமுதாய மக்களிடம் “என் சமுதாயமே! இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்! அளவற்ற அருளாளன் தான் உங்கள் இறைவன். எனவே என்னைப் பின்பற்றுங்கள்! எனது கட்டளைக்குக் கட்டுப்படுங்கள்! என்று கூறினார்.

20வது அத்தியாயத்தின் 90வது வசனம் இது. முஹம்மத் அவர்களின் வருகைக்கு முன் மூஸாவின் சமுதாயத்திற்கு மூஸாவும் ஹாருனும் இறைத்தூதர்களாக அனுப்பப்பட்டனர். காளைமாட்டை இறைவனாக்கிக் கொண்ட ஒரு அறியாமை சமுதாயத்திடம் ஹாருன் சொன்ன உபதேசமே மேற்கண்ட வசனம்.

என் கட்டளைக்கு கட்டுப்பட்டு என்னைப் பின்பற்றுங்கள் என்பது அந்த உபதேசம் நீங்கள் காளைமாடு என்ற மிருகத்தால் சோதிக்கப்படுகிறீர்கள். அதை நீங்கள் வணங்காதீர்கள். என் கட்டளைக்கு கட்டுப்படுங்கள். அதை வணங்காமல் ஒதுங்கி என்னைப் பின்பற்றுங்கள் என்பது அவர் உபதேசத்தின் பொருள்.

முழு அளவு பின்பற்றும் ஏவல் இங்கு வரவில்லை. மாடு என்ற மிருகத்தை நான் வணங்காமல் ஒதுங்கி ஓரிறைவனை வணங்குகிறேன். அதில் என்னைப் பின்பற்றுங்கள் என்ற வழிகாட்டலை ஹாருன் அம்மக்களிடம் வைக்கிறார்.

ஆனால் 3ம் அத்தியாயத்தின் 31ம் வசனம் முழு ஆன்மீக வாழ்வியலை அதன் வெற்றியை முன் வைக்கின்றது. இந்த வசனம் முஹம்மத் அவர் விருப்பத்திற்கு சொன்ன வார்த்தை அல்ல. அல்லாஹ் அவ்வாறு சொல்ல சொல்கிறான். அப்படியானால் முஹம்மத் அவர்களை பின்பற்றுவதன் அவசியமும் அதன் பாக்கியமும் எத்துணை உயர்வான உயரத்தைக் கொண்டது என்பதை முஸ்லிம்கள் உட்பட அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும். இது அலட்சியப்படுத்தப்பட வேண்டிய உபதேசம் அல்ல. இதுதான் தீர்வு.

நம்மீதான அல்லாஹ்வின் நேசமும், நம் பாவங்களுக்கான மன்னிப்பும் முஹம்மத் என்ற அந்த இறுதி தூதரைப் பின்பற்றுவதன் மூலமே மக்களுக்கு கிடைக்கும்.

முஹம்மத் என்ற ஒரு மனித இறைத் தூதரிடம் அப்படி என்ன அடங்கியுள்ளது. இவ்வளவு சிறப்புப் பெற என்ற கேள்வி அறிவாளிகளிடம் எழாமல் இருக்காது.

இது நியாயமான கேள்வி :

மனிதர்களுக்கு மனிதர்கள்தான் வழிகாட்ட முடியும் அந்த வழிகாட்டல் வார்த்தைகளாகவும் இருக்கும். வாழ்க்கையாகவும் இருக்கும்.

வார்த்தைகளால் வரும் வழிகாட்டல் பல நேரம் பொய்யை அடித்தளமாக கொண்டதாக அமைந்து விடும். முந்தைய தொடர்களில் இதை நாம் சொல்லியுள்ளோம். உபதேசம் செய்யும் யாரும் என்னைப் பார்க்காதே என் வார்த்தைகளைப் பார் என்றே மக்களுக்கு உபதேசிக்கின்றனர்.

சற்று துணிச்சலாக யாராவது வார்த்தை களோடு சேர்த்து அதை சொல்பவரின் வாழ்க்கையையும் பார்த்தால் காரி உமிழக் கூடிய அளவிற்கு தான் அவர்களின் வாழ்க்கை அமைந்திருக்கும்.

ஆனால் முஹம்மத் அவர்களின் வாழ்க்கைத்தான் அவரின் வார்த்தைகளாக வெளிப்பட்டதே தவிர வாழ்க்கை வேறு, வார்த்தை வேறு என்று அவர்கள் ஒருபோதும் வாழ்ந்ததில்லை. இப்படிப்பட்ட ஒருவரால் தான் “என்னைப் பின்பற்றுங்கள்” என்று துணிச்சலாக சொல்ல முடியும்.

v அவர் ஒரு குடும்பத் தலைவராக இருந்தார்.
v அவர் ஒரு முஹல்லா தலைவராக இருந்தார்.
v அவர் ஒரு பஞ்சாயத்து தலைவராக இருந்தார்.
v அவர் ஒரு ஊர்த்தலைவராக இருந்தார்.
v அவர் ஒரு நாட்டுத் தலைவராக இருந்தார்.
v அவர் ஒரு இஸ்லாம் என்ற இயக்கத் தலைவராகவும் இருந்தார்.
v அவர் தான் இன்று வரை உலகத் தலைவராகவும் இருக்கிறார்.

அவர் மரணித்து 1450 ஆண்டுகளாகப் போகின்றன. உலகை விட்டு மறைந்தது அவர் உடல் மட்டும் தான். ஆனால் கோடான கோடி மக்களின் உள்ளங்களின் அவர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். இனி எக்காலத்திற்கும் வாழ்ந்துக் கொண்டிருப்பார்.

காரணம் அவர் அல்லாஹ்வின் விருப்பத்தை ஏற்று அவன் திருப்திக்காக மட்டுமே வாழ்ந்துக் காட்டினார். தனக்கென்று தனி ஆசைகளை-எதிர்பார்ப்புகளை அவர் வளர்த்துக் கொண்டதே இல்லை.

எங்கும் – எப்போதும் – எதிலும் இறைத் திருப்தி என்ற ஒன்றையே அளவுகோலாக்கிக்கொண்டு வாழ்ந்தார். தனக்கு பாதகமாக இருந்தபோதும், தன் குடும்பத்திற்கு பாதகமாக இருந்தபோதும் அவர் அவற்றை பொருட்படுத்தவில்லை. பக்குவத்தின் உச்சத்தில் அவர் நின்று வாழ்ந்தார். அந்த பக்குவம் இறைத் திருப்தியை நாடியே ஓடியது.

இப்படிப்பட்டத் தலைவரைப் பின்பற்றுவதில் என்ன தயக்கம் மக்களே!

அந்த தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டும். அவர் வாழ்க்கை நிகழ்வுகளை இனி பார்ப்போம். அல்லாஹ் நாட்டத்தில் தொடரும்…..

******************************************************

வாழ்க்கைப் பரீட்சையில்…தேறுபவர்கள் யார்?

அபூ அப்தில்லாஹ்

மறுபதிப்பு : அக்டோபர் 2011

உங்களில் அழகிய செயல்கள் செய்பவர்கள் யார் என்பதை பரீட்சித்து அறிவதற்காக மரணத்தையும் வாழ்வையும் (அல்லாஹ்) படைத்தான் (ஆட்சி: 67:2)
(மேலும் பார்க்க:5:48, 6:165, 11:7, 16:92, 5:94, 27:40, 8:57)

இந்த இறைவாக்குகள் அனைத்தையும் நேரடியாகச் சுய சிந்தனையுடன் படித்து அறிகிறவர்கள், மனிதப் பிறப்பிலிருந்து இறப்பு வரை அல்லாஹ் கொடுத்துள்ள இவ்வுலக வாழ்க்கை, பரீட்சை வாழ்க்கை என்பதைத் திட்டமாக அறிந்து கொள்ள முடியும்.

பரீட்சை என்றால் தனித்தனியாக ஒவ்வொரு ஆணினதும் பெண்ணினதும் ஆற்றலையும் திறமையையும் அறிந்து கொள்வதற்காக வைக்கப்படும் சோதனை என்பதை அறிய முடியாத அறிவிலி ஒருவனும் இருக்க முடியாது. பரீட்சையில் வெற்றி பெற ஒவ்வொருவரும் சுயமாகப் படித்து அறிந்து மனதில் இருத்திக் கொண்டு அதையே வெளிப்படுத்த வேண்டும், எழுத வேண்டும் என்பதையும் அறியாத அறிவிலி யாரும் இருக்க முடியாது. பரீட்சையில் பக்கத்திலிருப்பவன் எழுதுவதை அப்படியே பார்த்து எழுதுவது பரீட்சையை எழுதியதாகாது; அவன் தண்டிக்கப்படுவான் என்பதையும் அறியாத அறிவிலி யாரும் இருக்க முடியாது.

பரீட்சைக்கு முன்னர் திறமையான மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு பரீட்சையில் சுயமாகவே எழுத வேண்டும் என்பதை அறியாத அறிவிலி யாரும் இருக்க முடியாது.

இப்படி உலகியல் பரீட்சைகளில் ஒவ்வொரு தனி நபரும் சுயமாக விளங்கி பரீட்சை எழுத வேண்டும் எனத் தெளிவாக, சரியாக விளங்கி வைத்திருக்கும் பெருங்கொண்ட மக்கள் வாழ்க்கைப் பரீட்சையில், மவ்லவிகளான மதகுருமார்களைக் கண்மூடி நம்பி அவர்கள் சொல்லும் சுய, மேல் விளக்கங்களை அப்படியே செயல்படுத்துகிறார்களே! காப்பி அடிக்கிறார்களே! இவர்கள் வாழ்க்கைப் பரீட்சையில் வெற்றியடைவார்களா? தோல்வியைத் தழுவுவார்களா? இவர்கள் வாழ்க்கைப் பரீட்சையில் தேற முடியுமா? நிதானமாக நடுநிலையுடன் சிந்தித்து உண்மையைக் கண்டறிய முன் வாருங்கள்.

உலகியல் பரீட்சைகளில் காப்பி அடிக்கக் கூடாது என அரசுகள் சட்டம் இயற்றி வைத்திருப்பது போல், அரசுகளுக்கெல்லாம் பேரரசுக்கு அதிபதியான அல்லாஹ் தனது இறுதி வழிகாட்டல் நெறிநூல் அல்குர்ஆனில் வாழ்க்கைப் பரீட்சையில் எந்த மவ்லவியையும், ஆலிமையும், மதகுருவையும் நம்பிச் செயல்படக் கூடாது என்று தெளிவாகத் திட்டமாக 7:3, 33:36,66,67,68, 18:102-106, 59:7 போன்ற இறைவாக்குகளில் கூறியிருக்க, இந்த இறைவாக்குகள் அனைத்தையும் நிராகரித்துப் புறக்கணித்து விட்டு, இம்மதகுருமார்களைப் பாதுகாவலர்களாக, வழிகாட்டிகளாக நம்பிப் பின்பற்றுவது வாழ்க்கைப் பரீட்சையில் வெற்றியைத் தருமா? நிதானமாக நடுநிலையுடன் சுயமாகச் சிந்தியுங்கள்.

கூலி, சம்பளம், அன்பளிப்பு என மக்களிடம் வாழ்வாதாரத்தை நோக்கமாகக் கொண்டு மார்க்கப் பணி புரிகிறவர்கள் நேர்வழியில் இல்லை; மக்களிடம் சம்பளம் வாங்காமல் மார்க்கப் பணி செய்கிறவர்கள் மட்டுமே நேர்வழியில் இருக்கிறார்கள் என யாசீன் 36:21 இறைவாக்கு நேரடியாகக் கூறிக் கொண்டிருக்க, அதற்கு மாறாக கூலிக்கு மாரடிக்கும் இந்த மதகுருமார்கள் நேர்வழியையே போதிக்கிறார்கள் என்று நம்புபவர்களைவிட அறிவீனர்கள் இருக்க முடியுமா?

சம்பளத்திற்காக மார்க்கப்பணி புரியும் இம்மதகுருமார்கள், கோணல் வழிகளையே நேர்வழியாகக் காட்டுவார்கள். மக்களை வழிகேட்டில் இட்டுச் சென்று நரகை நிரப்புவார்கள்; வரம்பு மீறி நடக்கும் தாஃகூத்கள், மனித ஷைத்தான்கள் என 2:41, 75, 78, 79, 109, 146, 174, 3:78, 187, 188, 4:44,46, 5:41, 63, 6:20, 21, 25, 26, 9:9, 10,34, 11:18, 19, 31:6, 2:256, 257, 4:51, 60,76, 5:60, 16:36, 39:17, 2:14, 6:71, 112, 7:30, 19:68, 83 போன்ற எண்ணற்ற இறைவாக்குகள் கூறிக் கொண்டிருக்கின்றன. நேரடியாகப் படித்துப் படிப்பினை பெறுங்கள்!

மவ்லவிகள், ஆலிம்கள், அரபி கற்ற மேதைகள் என 4:49, 53:32 இறைவாக்குகளை நிராகரித்து முதுகுக்குப் பின்னால் போட்டுவிட்டு அகந்தை ஆணவம் பேசும் இந்த மதகுருமார்கள் இந்த அளவு இழிவுபட, வானத்தின் கீழுள்ள படைப்புகளிலேயே மிகமிக கேடுகெட்டப் படைப்பாக அல்குர்ஆன் கூறக் காரணம், அவர்கள் 6:90, 10:72, 11:29,51, 25:57, 26:109,127,145,164,180, 34:47, 38:86, 42:23 ஆகிய இறைவாக்குகள் நேரடியாகத் தெளிவாக மார்க்கப் பணிக்குக் கூலியை-சம்பளத்தை மக்களிடம் ஒருபோதும் கேட்கக் கூடாது; சுயமாக உழைத்துச் சாப்பிட்டுக் கொண்டு, மார்க்கப் பணியை நாளை மறுமையில் அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்து அல்லாஹ்வுக்காகச் செய்ய வேண்டும் என்றுத் திட்டமாகக் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இம்மதகுருமார்கள் மார்க்கப் பணிக்கு மக்களிடம் கையேந்தும் இழி தொழிலைச் செய்வதன் காரணமாகவே அவர்கள் வானத்தின் கீழ் வாழும் படைப்புகளிலேயே மிக மிக கேடுகெட்ட ஜென்மமாக இறைவனால் அடையாளம் காட்டப்படுகிறார்கள்.

இப்போது இந்த மவ்லவிகளை-ஆலிம்களை 7:3, 18:102-106, 33:36,66,67,68 இறைவாக்குகளை நிராகரித்துப் புறக்கணித்துவிட்டு, தங்களின் பாதுகாவலர்களாக-வழிகாட்டிகளாக, ஆபத்பாந்த வன்களாக நம்பி அவர்களின் கூற்றுக்களை அப்படியே வேதவாக்குகளாக எடுத்து நடக்கும் முஸ்லிம்கள் 47:24ல் அல்லாஹ் சொல்வது போல் தங்கள் உள்ளத்திற்குப் பூட்டுப் போடாமல் தங்கள் புத்திக்கு வேலை கொடுத்துச் சிந்தித்துப் பார்க்க அன்புடன் வேண்டுகிறோம்.

பொதுமக்களாகிய நீங்கள் உங்களின் சொந்த உழைப்பால் பொருள் ஈட்டி நீங்கள், உங்கள் குடும்பம், உற்றார், உறவினர் போன்றோருக்குத் தாராளமாக செலவிடு வதுடன் மானங்கெட்டுப் போய் உங்களிடம் கையேந்தி நிற்கும் 68:13 குறிப்பிடும் ஒரு மதகுருவின் இழி குணம் கொண்ட இந்த மவ்லவி, ஆலிம், அரபி கற்ற மேதை என பெருமை, ஆணவம் பேசும் மதகுருமார்களுக்கும் தாராளமாகக் கொடுத்து அவர்கள் குடும்பம் நடத்த உதவுகிறீர்கள்.

இப்போது சிந்தியுங்கள்! கேவலம் தன் னையும் தன் குடும்பத்தையும் ஹலாலான ஒரு தொழில் மூலம் பொருள் ஈட்டி காப்பாற்ற வக்கற்ற, கையாலாகாத இந்த மவ்லவிகள் உங்களை நேரான வழியில் இட்டுச் சென்று சுவர்க்கத்தில் நுழைய வைப்பார்கள் என நம்புகிறீர்களே, இதை விட ஒரு மூடத்தனமான நம்பிக்கை வேறு இருக்க முடியுமா?
“கூரையேறி கோழி பிடிக்க வக்கற்றவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா?” என்று சுய சிந்தனையுடன் கூறும் ஹிந்துக்களை விடவா, இம்மவ்லவிகள் பின்னால் செல்லும் முஸ்லிம்கள் சுய சிந்தனை அற்றவர்கள் எவ்வளவு பெரிய கைசேதம்? எவ்வளவு பெரிய நட்டம்? மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட இந்த மவ்லவிகள் பின்னால் செல்லும் பெருங்கொண்ட முஸ்லிம்கள் 7:3, 18:102-106, 33:36, 66,67, 68 நேரடி இறைக் கட்டளைகளை நிராகரித்துப் புறக்கணித்து முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்துவிட்டுச் செயல்படுவதால், 18:102-106 இறைவாக்குகள் கூறுவது போல் தங்களின் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், சதக்கா மற்றும் அனைத்துவித நன்மை யான செயல்களும் நிறுக்கப்படாமலேயே நரகத்தில் தூக்கி எறியப்பட்டு, அவர்களின் முகங்கள் நெருப்பில் சுட்டெரிக்கப்படும் வேதனை தாங்க இயலாமல் கதறுவதோடு இம்மவ்லவிகளை கடுமையாக சபிப்பதையும், அவர்களுக்கு இரு மடங்கு வேதனை கொடுக்கும்படி இறைவனிடம் இறைஞ்சு வதையும் 33:66, 67,68 இறைவாக்குகள் நெத்தியடியாகக் கூறுவது இவர்களுக்கு விளங்கவில்லையா?

இங்கும் இந்த மூட முல்லாக்கள் 33:66,67,68 இறைவாக்குகள் முஸ்லிம்களைக் குறிப்பிடவில்லை; முஸ்லிம் அல்லாத காஃபிர்கள் பற்றிக் கூறுவதாகும் என்று இவர்களின் ஆபாக்களான புரோகித முன்னோர்களே எழுதி வைத்திருப்பதை அப்படியே வாந்தி எடுத்து மக்களை ஏமாற்றி வஞ்சிப்பார்கள்; என்னே மடமை?

காஃபிர்களில் யாராவது அல்லாஹ்வுக்கு வழிபட்டிருக்க வேண்டுமே? அவனது தூதருக்கு வழிப்பட்டிருக்க வேண்டுமே எனக் கூறமுடியுமா? அல்குர்ஆன் முழுக்கத் தேடிப் பாருங்கள். காஃபிர்கள் அவர்கள் பின்பற்றிய முன்னோர்களை மூதாதையர்களை சாதத்தனா, குபராஅனா அதாவது சாதாத்துகளையும், அகாபிரீன்களையும் என்று குறிப்பிட்டுக் கூறுவதாகக் காணப்படுகிறதா? இல்லையே!

காஃபிர்கள் அவர்கள் பின்பற்றியவர்களை முன்னோர்கள், மூதாதையர்கள் (ஆபாஅனா) என்று கூறியதாகவே காணப்படுகிறது. (2:170, 31:21) அல்லாஹ்வைப் பற்றியோ, அவனது தூதரைப் பற்றியோ காஃபிர்கள் சொன்ன ஒரேயயாரு ஆதாரத்தையும் குர்ஆனில் காட்ட முடியாது. மேலும் காஃபிர்கள் அவர்கள் பின்பற்றியவர்களை ஆபாஅனா-முன்னோர்கள் மூதாதையர்கள் என்று குறிப்பிடுகின்றனரே அல்லாமல், ஸாதாத்துகள், அகாபிரீர்கள் என்று கூறிய ஆதாரமும் குர்ஆனில் இல்லவே இல்லை.

33:66,67,68 இறைவாக்குகள் திட்டமாகத் தெளிவாக, நேரடியாக முஸ்லிம்கள் என்று கூறிக்கொண்டு குர்ஆன் கூறும் நேரடிக் கருத்துக்களைப் புறக்கணித்து, நிராகரித்து விட்டு மவ்லவிகள், ஆலிம்கள், நாதாக்கள், அவுலியாக்கள், இமாம்கள், ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் என்று கூறிக்கொண்டு ஸாதாத்துகளையும், அகாபிரீன்களையும் பின்பற்றி நரகைச் சென்றடைவதையே குறிப்பிடுகின்றன.

மவ்லவிகள், ஆலிம்கள், மார்க்கம் கற்ற மேதைகள் என 4:49, 53:32 குர்ஆன் வசனங்களை நிராகரித்து அபூஜஹீல் வாதம் வைக்கும் இந்த மதகுருமார்களிலுள்ள ஒவ்வொரு பிரிவினரும் தாங்கள் தான் நேர்வழியில் இருப்பதாகவும், தங்களைப் பின்பற்றுகிறவர்கள் மட்டுமே நேர்வழியில் இருப்பதாகவும் சுவர்க்கம் செல்வோர் என்றும் மற்றப் பிரிவினர் அனைவரும் வழிகேட்டில் இருப்பதாகவும், நரகை அடைவர் என்றும் பிதற்றுவர். மதகுருமார்களில் எவருமே அல்லாஹ் அல்குர்ஆனில் முஹ்க்கமாத் வசனங்களில் நேரடியாகக் கூறி இருப்பதற்கு எவ்வித சுய, மேல் விளக்கம் கொடுக்காமல் எடுத்து நடப்பதே நேர்வழியாகும் என்று ஒருபோதும் கூறமாட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள் 33:21,36 குர்ஆன் வசனங்களின்படி நடந்து காட்டிய சுன்னத்தான நடைமுறைகள் பதிந்து பாதுகாக்கப்பட்டுள்ள ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கு எவ்வித சுய மேல்விளக்கம் கொடுக்காமல் உள்ளது உள்ளபடி எடுத்து நடப்பதே நேர்வழியாகும் என்று ஒருபோதும் கூறமாட்டார்கள். அப்படிக் கூறினால் அவர்கள் மார்க்கத்தை ஒருபோதும் பிழைப்பாகக் கொள்ள முடியாது. அவர்களின் புரோகித வருமானத்தில் மண் விழுந்து விடும்.

ஆனால் அல்லாஹ்வோ மார்க்கப் பணியைப் பிழைப்பாக ஒருபோதும் பிழைப்பாகக் கொள்ளக் கூடாது என மேலே சுட்டிக் காட்டியுள்ள எண்ணற்ற இறைவாக்குகளில் நெத்தியடியாகக் கூறி இருக்கிறான். இந்த குர்ஆன் வசனங்களைப் பொருட்படுத்தாமல் மார்க்கப் பணியைச் சம்பளத்திற்குச் செய்கிறவர்கள் தாஃகூத்கள் என்ற மனித ஷைத்தான்கள் என அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான்.

ஆகவே மதகுருமார்களான இம்மவ்லவிகளின் சுய, மேல் விளக்கத்தை வேதவாக்காக கொண்டு கண்மூடி அவர்களைப் பின்பற்றுவதன் மூலம் 9:31 வசனம் கூறுவது போல் அவர்களை வணங்குவதை விட்டு விலகி, அம்மதகுருமார்களிலிருந்து முற்றிலும் விலகி அல்லாஹ்வையே முற்றிலும் நம்பி, அவனையே முன்னோக்கி இருப்பவர்களே, அவனது நல்வாழ்த்தைப் பெறுகிறவர்கள்; அப்படிப்பட்டவர்களுக்கு எனது நல்வாழ்த்தைக் கூறுவீராக என்று அல்லாஹ் 39:17 வசனத்தில் நபிக்குக் கட்டளையிடுகிறான்.

மேலும் அவர்கள் எப்படிப்பட்ட நடைமுறைகளை உடையவர்கள் என்றால், அவர்கள் குறிப்பிட்ட ஒரு மவ்லவியை நம்பி அவரது பேச்சை மட்டும் கேட்பவர்களாகவும், அவரது எழுத்தை மட்டும் பார்ப்பவர்களாகவும் இருக்கமாட்டார்கள். மற்றவர்களின் பேச்சைக் கேட்காதீர்கள், எழுத்தைப் பார்க்காதீர்கள், அவர்களின் கூட்டங்களுக்குச் செல்லாதீர்கள் என்று தடுக்கும் தாஃகூத்களின் துர்போதனைகளை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களின் ஷைத்தானிய வழிகேட்டு போதனையை ஒருபோதும் கேட்கமாட்டார்கள். நிராகரித்து விடுவார்கள்.

39:18 குர்ஆனின் கட்டளைப்படி யார் பேசினாலும் காது கொடுத்துக் கேட்பார்கள். எவரது எழுத்தையும் கவனமாகப் படித்துச் சிந்திப்பார்கள். அவற்றில் குர்ஆன், ஹதீசுக்கு உட்பட்டதை அதாவது அழகானதை எடுத்து நடப்பார்கள். மனித சுய, மேல் விளக்கங்களை அதாவது கெட்டவற்றைத் தூக்கி எறிந்து விடுவார்கள். இத்தரத்தி னரையே அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறான். இவர்கள்தான் நல்லறிவுடையோர் என்றும் அல்லாஹ் வாழ்த்துகிறான்.

அல்லாஹ்வின் இந்த 39:17,18 வசனங்களை நிராகரித்துப் புறக்கணித்து விட்டுக் குறிப்பிட்ட ஒரு மவ்லவியை, ஆலிமை அவர் மெத்தப் படித்தவர் குர்ஆன், ஹதீஃதை கரைத்துக் குடித்தவர் மவ்லவி-ஆலிம் எனக் குருட்டுத்தனமாக நம்பி அவர் கூறுபவற்றை வேதவாக்காக கொண்டு செயல்படுகிறவர்கள் நாளை மறுமையில் தங்கள் இருப்பிடத்தை நரகத்தில் பதிவு செய்துகொள்கிறார்கள். நாளை நரகில் கிடந்து வெந்து கருகிக் கொண்டு அவர்கள் பின்பற்றிய மவ்லவியை-ஆலிமை கடுமையாகச் சபிக்கப் போகிறார்கள். அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைக் கொடுக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டப் போகிறார்கள். நாம் இதைக் கூறவில்லை. அல்குர்ஆன் 33:66,67,68 இறைவாக்குகள் கூறிக் கொண்டிருப்பதை நேரடியாகப் படித்துச் சிந்திப்பவர்கள் நிச்சயமாக அறிய முடியும்.

மனிதர்களில் யாரிடமும் எந்த விளக்கமும் கேட்காமல் ஒவ்வொருவரும் நேரடியாக குர்ஆன், ஹதீஃதைப் பார்த்து அதன்படி மட்டுமே நடக்கவேண்டும் என்கிறார் அபூ அப்தில்லாஹ். இது எப்படி சாத்தியம்? சாத்தியமில்லாத ஒன்றைச் சொல்லி மக்களை வழிகெடுக்கிறார் என்று இந்த மவ்லவிகள் கூறி மக்களைத் திசை திருப்புகிறார்கள். அப்படியா நாம் கூறுகிறோம். இல்லையே! 16:43, 21:7, 39:17,18 இறைக் கட்டளைகளை நிராகரித்துப் புறக்கணித்து விட்டு அவ்வாறு நாம் கூறினால் நாமும் வழி தவறிச் செல்லும் பிரிவுகளில் ஆகி விடுவோம். நிச்சயமாக நமக்கு அத்துணிவு கிடையாது.

மவ்லவிகளான இம்மதகுருமார்கள்தான் 16:43, 21:7 வசனங்களில் வரும் “அஹ்லக்ஃ திக்ரி” என்ற அரபி பத்திற்கு அறிவுடையவர்கள்-ஆலிம்களாகிய எங்களிடம் கேட்டு, நாங்கள் கூறும் சுய, மேல் விளக்கப்படி நடக்க வேண்டும் என்று கூறி மக்களை எண்ணற்ற பிரிவுகளாக்கி வழிகெடுக்கிறார்கள்.

ஆலிம்-அறிஞர்கள் சொல்வதை ஏற்க வேண்டும் என்றால் “அஹ்லல் இல்மி” என்றிருக்க வேண்டும். மவ்லவிகளைக் கண்மூடிப் பின்பற்ற வேண்டும் என்றால் “கல்லி தூஅஹ்லல் இல்மி” என்று இருக்க வேண்டும். 16:43, 21:7 இரண்டு இடங்களிலும் அப்படி இல்லை “ஃபஸ்அலூ அஹ்லஃத் திக்ரீ” என்றே இருக்கிறது. அதாவது குர்ஆனில் குறிப்பிட்ட பொருள் எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரியாவிட்டால், அப்பொருள் குர்ஆனில் எந்த அத்தியாயத்தில், எந்த வசனத்தில் இருக்கிறது என்பதை தெரிந்து வைத்திருப்பவர்களிடம் கேட்டு அறிந்து, அதைப் பார்த்து விளங்கி அதன்படி நடக்க வேண்டும் என்றே இவ்விரு வசனங்களும் கூறுகின்றன.

அனைத்துப் பிரிவு மவ்லவிகளும் “ஃபஸ் அலூ அஹ்லஃத்திக்ரீ” என்பதற்குத் தவறான பொருள் கொடுத்து, குர்ஆன் வசனங்களுக்கு முரணான சுய, மேல் விளக்கங்க ளைக் கொடுத்து அவற்றையே தங்கள் பக்தர்கள் கண்மூடிப் பின்பற்ற வேண்டும் என்றே போதிக்கிறார்கள். மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்காதீர்கள்; காதைப் பொத்திக் கொள்ளுங்கள்; மற்றவர்களின் எழுத்துக்களைப் பார்க்காதீர்கள்; கண்ணை மூடிக் கொள்ளுங்கள்; குறிப்பாக அந்நஜாத்தைப் பார்க்கவே பார்க்காதீர்கள் என்றே தங்கள் பக்தர்களை ஏமாற்றி வஞ்சிக்கிறார்கள்.

ஆனால் இம்மவ்லவிகளின் இப்போதனைக்கு மாறாக 39:17,18 குர்ஆன் வசனங்கள், இப்படித் தவறான போதனைகள் செய்வோர் தாஃகூத்கள் எனும் மனித ஷைத்தான்கள்; நேர்வழி நடந்து வாழ்க்கைப் பரீட்சையில் வெற்றியடைந்து சுவர்க்கம் நுழைய விரும்புவோர் தாஃகூத்களான இம்மவ்லவிகளை 9:31 சொல்வது போல் ரப்பாக ஆக்கி அவர்களை வணங்குவதை விட்டும் விடுபட்டு, அவர்களை முற்றிலுமாகப் புறக்கணித்து, யார் உபதேசம் செய்தாலும் அதைக் காது கொடுத்துக் கேட்டு, யாருடைய எழுத்தாக இருந்தாலும் அதைக் கவனமாக, சுய சிந்தனையுடன் படித்து அவற்றில் குர்ஆன், ஹதீஸுக்கு முரணில்லாமல் இருப்பதை அதாவது அழகானவற்றை மட்டுமே எடுத்து நடக்க வேண்டும். மவ்லவியோ, மவ்லவி அல்லாத அவாமோ (மவ்லவிகளின் கருத்துப்படி) யார் சொன்னாலும் அவற்றில் அழகானதை மட்டுமே எடுத்து நடப்பவர்கள் மட்டுமே நேர்வழி நடப்பவர்கள், இறைவனின் நல்வாழ்த்தைப் பெறுகிறவர்கள். அறிவுடையவர்கள் இவர்கள் மட்டுமே. மவ்லவிகளை பாதுகாவலர்களாக-வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்கள் பின்னால் செல்பவர்கள் முகல்லிதுகள், ஜாஹில்கள், அல்லாஹ்வின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகி நரகம் புகுகிறவர்கள். இக்கருத்து 39:17,18, 2:39, 159,161, 162 வசனங்களில் இருக்கின்றனவா என நேரடியாகப் படித்துப் பார்த்துச் செயல்பட அன்புடன் வேண்டுகிறோம். குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை நேரடியாகப் பார்க்காமல், அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள அறிஞர்களின் கருத்துக்களை வேதவாக்காகக் கொண்டு அதன்படி நடப்பவர்கள் 7:3, 33:21,36, 18:102-106, 59:7 போன்ற குர்ஆன் வசனங்களை நிராகரிக்கிறார்கள். 2:39, 33:66,67,68 குர்ஆன் வசனங்கள் கூறுவது போல் நிரந்தர நரகை அடைந்து அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள்.

தெற்கே கன்னியாகுமரி தொடர் வண்டியில் அமர்ந்து கொண்டு, இறைவா என்னை பாதுகாப்பாக வடக்கே சென்னை கொண்டு சேர்த்து விடு எனத் தொடர்ந்து தொழுது, திக்ர் செய்து அப்பிரயாணம் முழுக்க அழுதழுது துஆ செய்தாலும் அவரது வணக்க வழிபாடு மகிமையாலும், துஆவின் மகிமையாலும் அவ்வண்டி ஒருபோதும் சென்னை செல்லாது; கன்னியாகுமரி தான் செல்லும்.

அதேபோல் மவ்வலவிகளான இந்த மதகுருமார்களை நம்பி, குர்ஆன், ஹதீஸ் நேரடி ஆதாரம் பார்க்காமல், அவர்களின் சுய, மேல் விளக்கங்களை வேதவாக்காகக் கொண்டு அவற்றின்படி செயல்படுகிறவர்கள், 7:3, 33:36, 66,67,68, 18:102-106 இறைவாக்குகள்படி நரகிற்கு இட்டுச் செல்லும் வண்டியில் அமர்ந்து கொண்டு ஐங்காலமும் தவறாது தொழுது, வருடா வருடம் ரமழான் நோன்பு நோற்று, ஹஜ் செய்து, ஜகாத், சதகா கொடுத்து, அதிகமதிகம் திக்ர் செய்து அழுதழுது இறைவா என்னை சுவர்க்கத்தில் கொண்டு சேர் என விடாது துஆ செய்தாலும், மவ்லவிகளின் அந்த வண்டி ஒருபோதும் சுவர்க்கம் செல்லாது; நரகையே சென்றடையும். அங்கிருந்து ஒரு போதும் சுவர்க்கம் செல்ல முடியாது என்பதை மேலே கண்டுள்ள அனைத்து குர்ஆன் வசனங்களையும் மீண்டும், மீண்டும் சுய சிந்தனையுடன் படித்து விளங்கி உறுதி செய்து கொள்ள வேண்டுகிறோம். முயற்சிப்பவர்களே வெற்றி பெறுவார்கள். (29:69)

******************************************************

அல்லாஹ் ஆதியில் படைத்து பூமிக்கு இறக்கிய நீரின் அதிசயமும் அதன் அவசியமும்!

எஸ். ஹலரத் அலி, திருச்சி-7.

அல்லாஹ் படைத்த இம்மாபெரும் பிரபஞ்சத்தில் வானம், பூமி, கோள்கள் நட்சத்திரங்கள் போன்ற பெரும் படைப்புகள் உள்ளன. அவனது எல்லா படைப்புகளுக்கும் ஆதாரமாக அவன் முதலில் படைத்தது. தண்ணீர் இன்று நாம் சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் நீரானது, அல்லாஹ்வின் தலையாய படைப்பு என்று எண்ணும் போதே அந்த நீரின் மகத்துவமும், கண்ணியமும் அதன் மதிப்பும் நமக்கு விளங்குகிறது. அல்லாஹ்வின் அருட்கொடையான நீரின் மதிப்பு தெரியாத காரணத்தால், இன்று சுற்றுச்சூழல் சீர்கேடானது, நீரை மாசுபடுத்துவதிலிருந்தே ஆரம்பமாகிறது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். “ஆதியில் அல்லாஹ் மட்டுமே இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. பிறகு படைக்கப்பட்ட அவனுடைய அர்ஷ் (சிம்மாசனம்) தண்ணீரின் மீது இருந்தது. பிறகு (லவ்ஹுல்மஹ்பூள்எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விசயங்களையும் எழுதினான். பின்னர், வானங்கள், பூமியைப் படைத்தான். அறிவிப்பவர் : இம்ரான் இப்னு ஹுசைன் (ரழி), புகாரி : 3191.

இந்த ஹதீஃதிற்கு இமாம் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள், “அல்லாஹ் அர்ஷை படைக்குமுன்பே நீரைப் படைத்து விட்டான் என்பதை இந்த ஹதீஃத் தெளிவுபடுத்துகிறது” என்கிறார்கள். பத்ஹுல் பாரி:6:289.

விண்வெளியில் முதலில் படைக்கப்பட்ட நீரை, பின்பு படைக்கப்பட்ட பூமிக்கு இறக்கிவைத்து, பல்லுயிர்கள் செழித்து வாழ அல்லாஹ் அருள் செய்தான் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது. நாம் வானத்திலிருந்து (Space-heaven) நாம் திட்டமான அளவில் நீரை இறக்கி அப்பால் அதனைப் பூமியில் (கடலாக) தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடைவோம். அல்குர்ஆன்:23:18

இன்று மேகத்திலிருந்து பொழியும் மழையைப் பற்றி மேலுள்ள வசனம் பேசவில்லை. ஆதியில் விண்வெளியில் இருந்து பூமியில் கொட்டிய பெருங்கடல்களை உருவாக்கிய சம்பவமே இவ்வசனத்தில் சொல்லப்படுகிறது. மழை என்ற சொல்லுக்கு அரபியில் “மதார்” அல்லது “வத்க்” என்பார்கள். ஆனால் மேலுள்ள வசனத்தில் மழை என்று சொல்லாமல் (“மா”ய்) நீர் என்றே சொல்வது குறிப்பிடத்தக்கது. இன்று நாம் பெறும் மழையயல்லாம் அன்று கொட்டிய நீரெல்லாம் கடலாய் மாறி அந்த கடல் வெப்பமடைந்து நீராவியாகி மேலேறி கரும்மேகங்களாக உருமாறி குளிர்ந்து இன்று மழையாய் பொழிவதையே!

விண்ணிலிருந்து வந்த பெரு வெள்ள நீரானது. கடலாக மாறி, இந்தக் கடல் நீர் ஆவியாகி மேகமாகி தூய மழை நீராக மண்ணில் வீழ்ந்து ஆறுகளாக ஓடுகின்றன. இந்த நீரிலிருந்தே அனைத்து உயிர்களும் பல்கிப் பெருகின. இதைத்தான் அல்லாஹ் சொல்கிறான்.

எல்லா உயிர்ப்பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான். அவற்றுள் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு, அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு, அவற்றில் நான்கு கால்களைக் கொண்டு நடப்பவையும் உண்டு, தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான், நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். அல்குர்ஆன்: 24:45

இன்றைய நவீன அறிவியலும், அல்குர்ஆன் சொல்லுவதை உண்மைப்படுத்துகிறது.

பொதுவாக அறிவியலாளர்கள், பூமிக்கு நீர் வந்த முறைக்கு இரண்டு கருத்துகளை முன் வைக்கிறார்கள். ஒன்று பூமி உருவானபோதே அதனுள் நீர் இருந்தது. இரண்டா வது கருத்து, விண்வெளியில் உள்ள வால்நட்சத்திரங்களும், குறுங்கோள்களும் பூமியை பல லட்சம் ஆண்டுகள் தொடர்ச்சியாக மோதின. அவற்றிலிருந்த நீரே கடலாக உருவானது.

இந்த இரண்டாவது கருத்தே சரியா னது என்று சர்வதேச ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. (23, மே, 2019, Astronomy and Astro physics Letters) சர்வதேச அறிவியல் ஆய்வு இதழான “அஸ்ட்ரானமி அஸ்ரோ பிசிக்ஸ் லெட்டர்”ல் இது குறித்து விரிவான ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. பொதுவாக சாதாரண நீரானது இரண்டு ஹைட்ரஜன் அணுவும், ஒரு ஆக்சிஜன் அணுவும் கலந்த சேர்மமாக உள்ளது. ஆகவே இதன் இரசாயனப் பெயர் H2O  அதே சமயம் (HDO) என்று சொல்லப்படும் தண்ணீரில் ஹைட்ரஜன் அணுவில் கூடுதலாக நியூட்ரான் இருப்பதால் அதை கனநீர்  (HEAVY WATER) என்று சொல்கிறார்கள். சூரிய குடும்பத்தை சுற்றி ஏராளமான குறுங்கோள்கள் சுழன்று வருகின்றன.

இந்தக் கோள்களில் கடலளவுக்கு பெறும் நீர் இருப்பு உள்ளது. இந்தக் கோள்கள் பூமியில் மோதியே, பூமிக்கு நீரைக் கொண்டு வந்து சேர்த்தன, என்று சொல்லப் பட்டாலும் இன்று நமது பூமியில் உள்ள கடல் நீரில் இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் விகிதாச்சாரத்தில் பெறும் வேறுபாடு உள்ளது. குறுங்கோள்களே பூமிக்கு நீரைக் கொண்டு வந்து சேர்த்தன என்றால் இன்றைய கடலில் அதிக கனநீர் அளவு இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை, கனநீர் அளவு மிகக் குறைவாகவே உள்ளது. பிறகு எப்படி விண்ணிலிருந்து மண்ணுக்கு நீர் வந்தது? சூரிய மண்டலத்திற்கு அப்பாலிருந்து, பூமியை நோக்கி வரும் வால்நட்சத்திரங்களை ஆய்வு செய்த போது அவற்றிலுள்ள நீரானது நம் பூமியிலுள்ள கடல் நீரில் உள்ளது போன்றே ஹைட்ரஜன், ஆக்சிஜன் அளவுகள் இருந்தன.

1980ம் ஆண்டிற்குப்பின் பூமியை நெருங்கி வந்த பன்னிரண்டு வால்நட்சத்திரங்களை ஆய்வு செய்தனர். குறிப்பாக ரோயஸட்டா மற்றும் விர்டனன் (ROSETTA & WIRTANAN COMETS) வால்நட்சத்திரங்களில் பூமியில் உள்ளது போன்றே அதே விகிதாச்சாரத்தில், பெருங்கடலளவு நீர் இருப்பதை உறுதி செய்தனர். விண்ணிலிருந்து வரும் திடீர் விருந்தாளிகளான வால்நட்சத்திரங்களே மண்ணுக்கு நீரை கொண்டு வந்து சேர்த்திருக்க முடியும் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.

அல்குர்ஆன் கூறுவது போல், தண்ணீர் பெரு வெள்ளக்கடலானது விண்வெளிக் கப்பலிலிருந்து இறக்கப்பட்ட ஒன்று என்பதை இன்றைய அறிவியல் உலகம் ஏற்றுக் கொள்கிறது. அல்ஹம்துலில்லாஹ்! வரும் 2021 ஆண்டு நவம்பர் மாதவாக்கில் பூமியை நெருங்கி வரும் ஒரு வால்நட்சத்திரத்தை ஆய்வு செய்வதன் மூலம் இந்த உண்மையை மீண்டும் உறுதிப்படுத்தலாம் என்று ஆய்வறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஆதியில் படைக்கப்பட்டு, மண்ணுக்கு இறக்கப்பட்ட நீரானது பெரும் கடலாக உலகை 70% சூழ்ந்துள்ளது. இந்த கடல் நீரானது சூரிய வெப்பத்தால் ஆவியாகி உயரே சென்று கனத்த மேகங்களாக மாறி குளிர்ந்து மழையாக பொழிகிறது. இதையே அல்லாஹ் கூறுகின்றான். கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம். அல்குர்ஆன் : 78:14

நீங்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ் மேகத்தை மெல்ல மெல்ல நகர்த்துகின்றான். பின்னர், அதன் சிதறல்கள் ஒன்றிணைக்கின்றான். பிறகு அதனை அடர்த்தியான மேகமாக்குகின்றான். பிறகு, அதற்கிடையிலிருந்து மழைத்துளிகள் வெளிப்பட்டு கொண்டிருப்பதை நீர் பார்க்கிறீர். அல்குர்ஆன்: 24:43

உலக உயிரினங்களின் உயிர்த்துளியாகிய மழைத்துளி இல்லையேல் உலகம் இல்லை. இந்த உலகத்தை உயிர்ப்புடன் இயங்கச் செய்யும் ஆற்றல் நீருக்குத்தான் உள்ளது. காரணம் அனைத்து உயிர்களையும் அல்லாஹ் நீரிலிருந்தே படைத்துள்ளான்.

மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்தே படைத்துள்ளான். அல்குர்ஆன் : 24:45

அல்லாஹ்வின் அற்புத படைப்பான தண்ணீருக்கு ஏராளமான விசேஷ பண்புகள் இருக்கின்றது. இது போன்ற சிறப்புப் பண்புகள் வேறு எந்தத் திரவத்திற்கும் கொடுக்கப்பட வில்லை. எல்லா அடிப்படை இயற்கைப் பண்புகளையும் உடைக்கும் தன்மை நீருக்கு உண்டு. உதாரணமாக, எந்த ஒரு திரவத்திலும், அத்திரவத்தின் திடப்பொருள் மிதக்கிறது. மெழுகுவர்த்தி பாகில் திட மெழுகு திரியை வைத்தால் அது மிதக்காது. மூழ்கிவிடும், உருக்கப்பட்ட வெண்ணெயில் வெண்ணைக் கட்டி மிதப்பதில்லை. எரிமலைக் குழம்பு பாகு நிலையில் இருக்கும் போது கற்கள் மிதப்பதில்லை. அதேசமயம் ஒரு பானத்தில் ஐஸ் கட்டியைப் போட்டால் அது மிதக்கும். உறைய வைக்கும் போது நீர் விரிவடைவதால் ஐஸ் துண்டுகள் மிதக்கின்றன.

பல மில்லியன் ஆண்டுகளாக உறைதல் மற்றும் உருகுதல் என்னும் தொடர் வினை நடந்து கொண்டிருப்பதன் காரணமாகவே பெரும் பாறைகள் வெடித்து நீரை சொரிகின்றன. அந்தப் பாறைகள் இரண்டாகப் பிளந்து நொறுங்கி மணலாக மாறிய நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. இதைத்தான் அல்லாஹ் கூறுகின்றான்.

திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு. இன்னும், பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு. 2:74

நமது துருவப் பிரதேசங்களான ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் பனி மலைகள் உடைந்து பிரம்மாண்ட கப்பல் போன்று கடலில் மிதந்து செல்வதைப் பார்த்து வருகிறோம். அதுபோல் பனி உறைந்த ஏரிகளிலும், ஆறுகளிலும் அவற்றின் மேற்பரப்பு வெப்ப நிலையை விட அதிக வெப்ப நிலையை பராமரிப்பதன் மூலம் உறைந்த நீர்மட்டத்திற்கு கீழ் வாழும் மீன்கள் உறைந்து இறந்து விடாமல் நீர் பாதுகாக்கிறது கடும் குளிர் காலத்தில் கூட 4 டிகிரி வெப்பநிலையை பராமரித்து முற்றும் நீர் உறைந்து விடாமல் நீர் தன்னை பாதுகாத்துக் கொள்கிறது.

இதனால் குளிர்ப்பிரதேசங்களில் கடல் ஆறு ஏரி போன்ற நீர்நிலைகளின் மேற்பரப்பு உறைந்து பனித்திடலாக மாறினாலும் அதற்கு கீழ் உள்ள நீரானது உறையாமல் நீராக ஓடிக்கொண்டிருக்கும் நீருக்குள்ள இந்த விசேஷப் பண்பின் காரணமாகவே, காலங்காலமாக நடக்கும் பருவநிலை மாற்றங்களினாலும் பனி யுகங்களினாலும் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் அழிந்து விடாமல் காப்பாற்றப்பட்டு வருகின்றன.

உண்மையில் தண்ணீர் என்னும் திரவ, திடப் பொருள், ஆக்சிஜன், ஹைட்ரஜன் என்ற இரு வாயுக்களின் சேர்க்கையே! இந்த இரண்டு வாயுக்களும் பிரிக்கப்பட்டால், அவை காற்றில் கலந்து மறைந்துவிடும். இப்படியான உலகில் எந்த ஒரு உயிரினமும் வாழமுடியாது. இப்படி இரு வாயுக்களையும் பிரிக்க முடியாமல் சேர்த்து வைத்திருக்கும் அந்த பிணைப்பு எது?

நீரின் மூலக்கூறில் உள்ள ஒரு ஹைட்ரஜன் அணுக்கள் மற்ற மூலக்கூறிலுள்ள ஆக்சிஜன் அணுக்களுடன் ஒட்டிக் கொள்ளும் இயல்புடையவை. ஒவ்வொரு, நீர் மூலக் கூறும், இது போன்ற நான்கு ஹைட்ரஜன் பிணைப்புகள் வரை உருவாக்கக் கூடியவை. இப்படி ஒட்டுமொத்தத் திரவமும் ஒன்றோடு ஒன்று ஒட்டிப் பிணைந்துள்ளது. இந்தப் பிணைப்பை துண்டிக்க அதிக ஆற்றல் வேண்டும். கொதிக்க வைப்பதன் மூலம் நீரை ஆவியாக்கலாம்.

ஹைட்ரஜனின் உறுதியான இந்த பிணைப்புகளின் காரணமாகவே, நமது உடலிலுள்ள மெல்லிய நரம்புகளில் இரத்தத்தை மேலிழுத்து செல்ல முடிகிறது. தாவரங்களின் வேரில் உள்ள நீர்ச்சத்தை தண்டுப் பகுதியிலிருந்து கிளைகள் இலை வரை, புவி ஈர்ப்புக்கு எதிராக கொண்டு சென்று சூரிய ஒளியில் இலைகள் பச்சையம் தயாரிக்க உதவுகிறது. மற்ற எல்லா திரவங்களுடன் ஒப்பிடுகையில் நீரின் பரப்பு இழு விசை (SURFACE TENSTION) என்பது மிக அதிகமானது.

கரைக்கும் தன்மை நீருக்கு மட்டுமே உண்டு. நாம் சமையலில் பயன்படுத்தும் சோடியம் குளோரைடு என்னும் உப்பை தனியாகப் பிரித்து அதாவது நீரிலுள்ள ஹைட்ரஜனானது உப்பில் உள்ள சோடியம் அணுக்களையும் குளோரின் அணுக்களையும் தனித்தனியாகப் பிரித்து நீரினுள் மிதக்கச் செய்கிறது. நாம் உண்ணும் உணவுப் பொருள்களில் உள்ள ஊட்டச் சத்துக்களின் அணுக்களை, நீரானது பிரித்து உடலின் செல்களுக்கு அனுப்பி வைத்து, ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

நீர் எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. நீர் என்பது எங்கும் காணப்படுவது, நாம் தினமும் குடிக்கிறோம், குளிக்கிறோம், கழுவுகிறோம், கொதிக்க வைக்கிறோம், உறைய வைக்கிறோம். ஆகவே அது நம் கண்களுக்கு ஒரு சாதாரண பொருளாக தெரிகிறது. அதன் அற்புதம் புரியவில்லை. அதன் மதிப்பும் தெரியவில்லை.

உலகின் பல்வேறு தட்பவெப்ப நிலைகளிலும் நீரானது திரவமாக, திடப் பொருளாக, நீராவியாக பின்னிப் பிணைந்துள்ளது நீரின் குணங்களை ஆராய ஆராய அது ஒரு வினோதமான முற்றிலும் புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இன்றும் உள்ளது. அல்லாஹ் நம்மை எந்த நீரிலிருந்து படைத்தானோ அந்த நீரின் அருமை பெருமை சொல்லில் வடிக்க முடியாத ஒன்று!

நீரின் விநோதங்களில் ஒன்று தான், குளிர்ந்த நீரைவிட வெந்நீர் விரைவில் உறைந்து விடும். பொதுவாக நீர் கொதித்து ஆவியாவதற்கு 100டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படும். ஆனால் உலகின் உயர்ந்த (29.092அடி) மலைச் சிகரமான கடுங்குளிருள்ள (-36C-60C) எவரெஸ்ட் சிகரத்தில் 71 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் நீர் ஆவியாகிவிடும். அது உயரத் தைப் பொறுத்தும், அழுத்தத்தைப் பொறுத்தும் அதன் கொதி நிலை மாறுபடும். ஒவ்வொரு 500 அடி உயரம் செல்லச் செல்ல அதன் கொதிநிலை அரை டிகிரி குறைந்து கொண்டே வரும். இது போல் பூமியுள் ஆழம் செல்லச் செல்ல வெப்பநிலை உயர்ந்து கொண்டே வரும். 100 அடி ஆழத்தில் நீர் கொதிநிலை அடைய 140 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவை.

நம் பூமியின் நிலப்பரப்பு வெறும் 30% சதவிதிகம் மட்டுமே. மீதி 70% கடல் நீராக இருக்கிறது. இந்த கடலும், 97.5% சதவிகி தம் குடிக்கத் தகுதியில்லா உப்பாக உள்ளது. இதில் நிலத்தடி நீர் 2.5% பனிப்பாறைகளாக துருவப் பிரதேசத்தில் உறைந்து உள்ளது. உண்மையில் மனிதனின் பயன்பாட்டிலுள்ள நீரின் அளவு ஆறு, ஏரி, குளம், குட்டை, கிணறு எல்லாமே வெறும் 0.26% மட்டுமே! இந்த கால் சதவிகித நீரை நம்பியே இவ்வுலக உயிரினங்கள் அனைத்தும் வாழ்ந்து வருகின்றன.

நீரின் முக்கியத்துவம் கருதியே அதை விற்பனை செய்வதை இஸ்லாம் தடை செய்கிறது. நீரென்பது அல்லாஹ்வின் அருட்கொடை ஆனால் இன்று நீர் வர்த்தக பண்டமாக கார்ப்பரேட் அரசுகளால் விற்பனைக்கு வந்து விட்டது.

தேவைக்கு மிஞ்சிய தண்ணீரை விற்பது கூடாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர்(ரழி), நூல்: முஸ்லிம் : 2925

தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பிறர் பயன்படுத்துவதை தடுக்க வேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி), புகாரி: 2353, 6962.

இன்று இந்திய அளவில் பாட்டில் தண்ணீர் வியாபாரத்தில் தமிழகமே முன்னிலையில் உள்ளது. சாராய அதிபர்கள், கல்வி வள்ளல்கள், இவர்களுக்கு அடுத்தபடியாக நீரைக் கொள்ளையடித்து விற்பவர்களே பெரும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். மத்திய அரசின் 2012 தேசிய நீர்க் கொள்கை யின்படி உயிர் காக்கும் நீர் இனி இலவசமில்லை.

1882ஆம் ஆண்டு சொத்துரிமை கட்டுப் பாட்டுச் சட்டத்தை திருத்தி “நிலத்தடி நீரின் மீது நிலத்தின் சொந்தக்காரனுக்கு எவ்வித உரிமையும் இல்லை” என்று புதிய சட்டம் சொல்கிறது.சேவைத் தொழில்களான கல்வி, மருத்துவம் இவற்றோடு தண்ணீரும் இன்று விற்பனை பொருளாக மாற்றப்பட்டு விட்டது. உலகை ஆளும் பகாசுர கார்ப்பரேட் கம்பெனி அரசுகளின் கைகளில், தண்ணீர் சிக்கி சீரழிகிறது. இனி அரசு சாராயம் இலவசமாக கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், தாகம் தீர்க்கும் நல்ல தண்ணீர் காசு இல்லாமல் கிடைப்பதரிது.

நீங்கள் குடிக்கும் தண்ணீர் பூமிக்குள் வெகு ஆழத்திற்கு சென்று விட்டால், பிறகு தண்ணீரின் ஊற்றை உங்களுக்கு கொண்டு வருபவன் யாரென்று கவனித்தீர்களா? அல்குர்ஆன் : 67:30

புவியில் உள்ள திரவங்களிலேயே நீரின் மூலக்கூறு வாய்ப்பாடு மட்டும்தான். நமது அன்றாட வாழ்க்கையின் மொழியில் நுழைந்திருக்கிறது. H2O என்பதில் என் னென்ன இருக்கிறது என்பது பற்றித் தெரியவில்லை என்றாலும், H2O என்பது என்ன என்று எல்லோருக்கும் தெரியும். நீர் என்பது மிகவும் சாதாரணமான விஷயம் போல் தெரிந்தாலும் உண்மையில் அப்படியல்ல.

அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய இந்தப் பொருள் நம்முடன் மிகவும் நெருங்கியிருப்பதாலேயே கொஞ்சம் சலிப்பூட்டுவது போல் தோன்றலாம். ஆனால், அது எந்த அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்துவது என்பதும், தலையைப் பிய்த்துக் கொள்ள வைப்பது என்பதும் நீரின் இயல்புக்குள் ஆழமாய் எட்டிப்பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும்.

விதிகளை உடைக்கும் :

எல்லா விதிகளையும் உடைக்கும் இயல்புடையது நீர், திரவங்கள் என்றால் என்ன என்பதை விவரிப்பதற்கான பெரிய வரையறையை 19ம் நூற்றாண்டிலிருந்து வேதியியலாளர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நீரின் விநோதமான பண்புகளை விளக்குவதில், இந்த வரையறைகள் எல்லாம் பெரும்பாலும் பொய்த்தே போகின்றன.

ஒரு பானத்தில் ஐஸ் கட்டியைப் போடும் போது என்ன நிகழ்கிறது என்பதில் தான். நீரின் விநோதமான இயல்பு அடங்கியிருக்கிறது. இதை ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்: உங்கள் முன்னே ஒரு திடப்பொருள் இருக்கிறது. அது தன்னுடைய திரவ நிலையின் மீதே மிதக்கிறது! ஆனால், திடமெழுகு திரவமெழுகில் மிதக்காது, உருக்கிய வெண்ணெயில் வெண்ணெய்க் கட்டி மிதக்காது, எரிமலையிலிருந்து பீறிட்டு வரும் எரி மலைக் குழம்பில் கற்கள் மிதக்காது.

விநோத இயல்பு :

உறைய வைக்கப்படும்போது நீர் விரிவடைவதால், ஐஸ் கட்டிகள் மிதக்கின்றன. குளிர்பதனப் பெட்டியின் உறைநிலைப் பெட்டியில் ஓர் இரவு முழுவதும் சோடாவை விட்டுவைத்தால், அதனால் ஏற்படும் விரிவு எவ்வளவு சக்திமிக்கது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். கண்ணாடியையே சுக்குநூறாகச் சிதறடித்துவிடும்.

நீரின் இந்த இயல்பு கொஞ்சம் விசித்திரமாகவோ முக்கியமற்றதாகவோ தோன்றலாம். ஆனால், நீரின் எண்ணற்ற விநோதங்களுள் ஒன்றான இந்த விசித்திர இயல்பு தான். நமது கோளையும் அதிலுள்ள உயிர் வாழ்க்கையையும் வடிவமைத்தது.

யுகம்யுகமாக நிகழ்ந்த உறைதல், உருகுதல் என்ற தொடர் நிகழ்வுகள் காரணமாகப் பெரும் பாறைகள் வழியாக நீர் துளைத்துக்கொண்டு வெளியேறியிருக்கிறது. அந்தப் பாறைகளை இரண்டாகப் பிளந்திருக்கிறது. அவற்றைச் சுக்குநூறாகச் சிதறடித்து மண்ணாக மாற்றியிருக்கிறது.

உறை பனியும் நீரும் :

நமது பானங்களில் மட்டும் பனிக்கட்டிகள் மிதக்கவில்லை. நமது பெருங்கடல்களில் பனிக்கட்டிக் கடல்களும் (Sea Ice) பளபளக்கும் பனிப்பாலங்களும் மிதந்து கொண்டிருக்கின்றன.

உறைந்த ஏரிகளிலும் ஆறுகளிலும் உறைபனி சும்மா அலங்காரப் பொருள் போல இருப்பதில்லை. கீழே இருக்கும் நீரின் வெப்பநிலையைப் பாதுகாத்து, மேற்பரப்பின் வெப்பநிலையைவிட சில டிகிரி அதிகமாக வைத்திருக்கிறது. கடும் குளிர் காலத்திலும் கூட 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைதான். நீர் அதன் அதிகபட்ச அடர்த்தியைக் கொண்டிருக்கும். ஆகவே, அந்த வெப்பநிலையில் ஏரி, ஆறு போன்றவற்றின் கீழ் பரப்புக்கு நீர் போய்விடும்.

நீர்நிலைகள் மேலிருந்து கீழாக உறைவதால், நீர்நிலையில் வாழும் மீன்களும், தாவரங்களும் மற்றும் பல உயிரினங்களும் கடும் குளிர் காலங்களில் தப்பிப் பிழைப்ப தற்கு, வேறு இடங்களைத் தேடிச் செல்ல வேண்டியிருக்கும்.

இந்தக் காலக்கட்டத்தில் எப்படியோ எண்ணிக்கையிலும் அளவிலும் அவை பெருகிவிடுகின்றன. புவியின் காலப்போக்கில் அடுத்தடுத்து நிகழ்ந்த பனியுகங்கள் வேறு பல காலகட்டங்கள் போன்றவற்றை மீறியும் உயிரினங்கள் தப்பிப் பிழைப்பதற்கு மேற்கண்ட விநோதம் தான் காரணம்.

திரவமாக இருப்பது :

மற்ற திரவங்களைப் போல் நீரின் பண்பு இருந்திருந்தால் ஈரப்பதமே இல்லாத, உறைந்து போன நிலத்திலிருந்தும் உறைந்துபோன கடல்களிலிருந்தும் தொய்மையான உயிரினங்களெல்லாம் துடைத்தெறியப்பட்டிருக்கும்.

இது வெறும் தொடக்கம்தான். ஒரு கண்ணாடிக் குவளை நீரை எடுத்துக்கொண்டு அதனூடாகப் பாருங்கள். நிறமில்லா, மணமில்லா இந்த திரவத்தைப் பற்றிய விசித்திரமான விஷயம் என்னவென்றால், இது திரவமாக இருப்பதுதான்.

விதிமுறைகளை எல்லாம் நீர் பின்பற்றியிருக்குமானால் கண்ணாடிக் குவளையில் நாம் எதையும் பார்த்திருக்க முடியாது. நம் கோள்களில் எந்தக் கடலும் இருந்திருக்காது.

திரவமான வாயு :

புவியில் உள்ள ஒட்டுமொத்த நீரும் நீராவியாகத்தான் இருக்கமுடியும். உயிரினங்கள் வாழ முடிந்திருக்காத புவி என்று, அதைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதன் உலர்ந்த மேற்பரப்பில் கொதித்துக் கொண்டும் அடர்த்தியாகவும் இருந்திருக்கக்கூடிய வளிமண்டலத்தின் ஒரு பகுதியாக நீராவியின் வடிவில் நீர் இருந்திருக்கும்.

நீர் மூலக்கூறு என்பது ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய கனமற்ற இரண்டு தனிமங்களின் அணுக்கலால் ஆனது. அதாவது, ஒரு ஆக்சிஜன் அணு, இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள்.

புவி மேற்பரப்பின் சூழல்களைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, நீர் என்பது ஒரு வாயுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஹைட்ரஜன் சல்ஃபைடும் (H2S) ஒரு வாயுதான். ஆனால், நீரின் மூலக்கூறு எடையை விட இரு மடங்கு எடை கொண்டது அது. நீர் மூலக்கூறினுடைய அளவில் மூலக்கூறுகளைக் கொண்ட அம்மோனியா, ஹைட்ரஜன் குளோரைடு போன்றவையும் வாயுக்களே.

பிரிக்க முடியாது :

எல்லா விதிமுறைகளையும் நீர் ஏன் வளைத்துவிடுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீரின் மேற் பரப்பில் கிழித்துக்கொண்டு செல்லும் நீர்ப் பூச்சியைப் பற்றி யோசித்துப் பாருங்கள். நீரில் மூழ்காமல் அந்தப் பூச்சியால் எப்படிச் செல்ல முடிகிறது? மற்ற எல்லா திரவங்களுடன் ஒப்பிடும்போது நீரின் பரப்பு இழு விசை என்பது மிகவும் அதிகம்.

எனவேதான், அந்தப் பூச்சி நீரின் ஆழத்தில் மூழ்கிப் போகவில்லை. நீர் மூலக்கூறுகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளும் இயல்புடையவை என்பதால் தான், நீருக்குப் பரப்பு இழுவிசை என்ற இயல்பு ஏற்பட்டிருக்கிறது.

நீரின் ஒரு மூலக்கூறில் உள்ள ஹைட்ரஜன் அணுக்கள் மற்ற மூலக்கூறுகளில் உள்ள ஆக்சிஜன் அணுக்களுடன் ஒட்டிக்கொள்ளும் இயல்புடையவை. ஒவ்வொரு நீர் மூலக்கூறும் இதுபோன்ற நான்கு ஹைட்ரஜன் பிணைப்புகள் வரை உருவாக்கக் கூடியவை. இப்படியாக ஒட்டுமொத்தமாகச் சேர்வது, திரவங்களில் நீருக்கே உரித்தான ஒருங்கிணைவுத் தன்மையைத் தருகிறது.

புவியின் மேற்பரப்பில் நீர் ஏன் திரவ நிலையில் இருக்கிறது என்பதற்கான காரணத்தை நாம் இப்படிச் சொல்லலாம். ஹைட்ரஜன் பிணைப்புகள் நீரின் மூலக் கூறுகளையயல்லாம் ஒன்றாக வைத்திருக்கின்றன. அவற்றைப் பிரிக்க வேண்டுமென்றால் சற்றே அதிகமான ஆற்றல் தேவைப்படும். எடுத்துக்காட்டாக கொதிக்க வைப்பதன் மூலம் நீரை ஆவியாக்குவதைச் சொல்லலாம்.

உயர் வளர்ப்பது :

நீரில் உள்ள ஹைட்ரஜன் பிணைப்புகளின் முக்கியத்துவத்தைப் பற்றி இதற்கு மேலும் வலியுறுத்திச் சொல்வதென்பது கடினம். நமது உடலின் மிகக் குறுகலான ரத்தக் குழாய்களின் வழியாகவும் நீர் மூலக் கூறுகள் ஒன்றையயான்று இழுத்துக் கொண்டு செல்கின்றன என்றால், அதற்குக் காரணம் அந்தப் பிணைப்புகள்தான். பெரும்பாலும் புவியீர்ப்பு விசைக்கு எதிராகவே அவை செயல்படுகின்றன.

உடலுக்குள்ளே அவ்வளவு எளிதில் சென்றடைய முடியாத இடங்களுக்கெல்லாம் ஆக்சிஜனையும் ஊட்டச் சத்துகளையும் நீர் கொண்டு சேர்ப்பது இப்படித்தான். தரையின் ஆழத்திலிருந்து நீரை உறிஞ்சி இலைகளுக்கும், கிளைகளுக்கும் அனுப்பி, சூரிய ஒளியில் அவற்றைச் செழிக்க வைப்பது தாவரங்களால் சாத்தியப்படுவதும் இந்த ஹைட்ரஜன் பிணைப்புகளால்தான்.

எல்லாம் சாத்தியம் :

நீரின் இந்த ஒட்டும் தன்மைதான், நமது அன்றாட வாழ்வில் நாம் சாதாரணமாகக் கருதும் பல்வேறு நிகழ்வுகளைச் சாத்தியப்படுத்துகிறது. அதாவது, நம் வீடுகளில் உள்ள ரேடியேட்டர்களுக்கு நீரைச் செலுத்துவது, டப்பாவில் இருக்கும் ஆரஞ்சு சாற்றைப் பிதுங்கிக் குடிப்பது, நமது தோட்டங்களில் உள்ள பூச்செடிகளுக்குக் குழாய் வழியாக நீரை இறைப்பது போன்ற எல்லாவற் றுக்கும் அந்தத் தன்மைதான் காரணம்.

நீரைக் குறுக்க முடியாது என்பதால் தான் இவையயல்லாம் சாத்தியமாகிறது. ஏனெனில், மூலக்கூறுகளெல்லாம் ஒன்றை யயான்று ஈர்த்துக் கொள்வதுடன் ஒன்றுக் கொன்று மிகவும் நெருக்கமாகவும் இருக்கின்றன. மற்ற திரவங்களில் இருப்பதை விடவும் இந்த நெருக்கம் அதிகம், ஒன்றைக் குறுக்குவது எந்த அளவுக்குக் கடினமோ, அதேபோல் அதன் ஒருபக்கத்தில் மட்டும் அழுத்துவதன் மூலம் அதைப் பாயவைப்பதும் மிகவும் எளிது.

அனைத்தையும் கரைக்கும் :

நீரை மட்டுமே நீர் ஈர்ப்பதில்லை. அது கடக்க நேரிடும் எல்லாவற்றுடனும் ஒட்டிக் கொள்கிறது. அனைத்தையும் கரைக்கக் கூடிய கரைப்பான் என்ற தகுதியைக் கிட்டத்தட்டப் பெறுவது, நீர் மட்டும் தான், மற்ற சேர்மங்களைத் தனித்தனியாகப் பிய்த்துப் போடக்கூடிய தன்மை கொண்டது அது.

சோடியம் குளோரைடு படிகங்களால் ஆன சமையல் உப்பு நீரில் எளிதாகக் கரைகிறது. நீரில் உள்ள ஹைட்ரஜன் பிணைப்புகள் உப்பில் உள்ள சோடியம் அணுக்களை யும் குளோரின் அணுக்களையும் படிகத்திலிருந்து தனித்தனியாகப் பிரித்து நீரினுள் மிதக்கச் செய்கின்றன.

படிகங்களில் தூய்மையான நீரை உருவாக்குவதும் கூடக் கடினமே. நாம் அறிந்திருக்கும் அனைத்து வேதிச் சேர்மங்களும், நம்மால் உணரக்கூடிய வகையில் சிறிதளவுக்காவது நீரில் கரையும். அதனால்தான், நாம் அறிந்த வேதிப்பொருட்களிலேயே மிக அதிக அளவில் வினைபுரியக் கூடியதும் அரிக்கக் கூடியதுமாக நீரே இருக்கிறது.

உடலுக்கு அடிப்படை :

ஏராளமான பொருட்களுடன் உண்டாகக்கூடிய இயல்புதான் உயிர் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. இந்த இயல்பால் தான் எண்ணற்ற ஊட்டச் சத்துகளையும் வேறு பொருட்களையும் நீர் கரைத்து நம் உடலுக்குள் பரவ விடுகிறது. உயிர் வாழ்க்கைக்கு அடிப்படையான டி.என்.ஏ. புரதங்கள், செல்களில் உள்ள சவ்வுகளை உருவாக்கும் மூலக்கூறுகள் போன்றவையும் இன்ன பிற நிகழ்வுகளும் நீரில்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது.

அதே நேரத்தில் நீரை விலக்கும் எண்ணெய் போன்றவையும் இருக்கின்றன. நம் உடலில் உள்ள நூறு கோடிக்கணக்கான புரதங்கள் சரியான அளவில் மடங்கி உருவங் களைப் பெற்றுத் தங்கள் பணிகளைச் சரியாகப் புரிகின்றன என்றால், அதற்குக் காரணம் நீர்தான். நீருடன் உறவாடுவது, அந்தப் புரதங்களைச் சரியான அளவில் முப்பரிமாணங்களை பெறச் செய்கிறது.

எங்கும் எதிலும் :

நீங்கள் எந்தத் திரவத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தாலும் அதில் நீர் இருக்கிறது. ரத்தம், பியர், ஆப்பிள் பழரசம் என்று எதையயடுத்தாலும் எல்லாமே நீர்தான். அதில் சிறிதளவு மற்ற விஷயங்களும் கலந்து பரவியிருக்கின்றன, அவ்வளவுதான். பெட்ரோலியம், சமையல் எண்ணெய் போன்ற தூய்மையான திரவங்கள் குறைவாகத்தான் இருக்கின்றன. ஆனால் நீருடன் நாம் கொள்ளும் உறவுக்குப் பக்கத்தில் அவையயல்லாம் வரவே முடியாது.

நீர் என்பது எங்கும் காணப்படுவது, நம்முடன் நெருக்கமானது என்பதாலேயே அதை ஒரு முக்கியமான விஷயமாகவே நாம் கருதவில்லை. தினமும் நாம் அதைக் குடிக்கிறோம், தொடுகிறோம், அதைக் கொண்டு கழுவுகிறோம், துவைக்கிறோம் பொருட்களை ஈரப்பதத்துக்கு உள்ளாக்குகிறோம். உலரவைக்கிறோம், நீரைக் கொதிக்க வைக்கிறோம், உறைய வைக்கிறோம், அதில் நீந்துகிறோம்.

முற்றுப்பெறாத புதிர் :

வெவ்வேறு தட்பவெப்ப நிலையையும், அழுத்தத்தையும் கொண்டிருக்கும் நீரின் வெவ்வேறு பரப்புகளைத் தேடி பயணம் செய்ய வைக்கும் இயற்கைச் சூழலைக் கொண்ட உலகத்தில் நாம் வாழ்கிறோம். வேறுபட்ட அந்தத் தட்பவெப்பநிலைகளில் நீர் வெகு லாவகமாகத் திடப்பொருளாகவும், திரவமாகவும், வாயுவாகவும் மாறுகிறது. (சில சமயங்களில் ஒரே நேரத்தில் மூன்று நிலைகளையும் அடைகிறது)

நீரை ஆராய, ஆராய அது மென்மேலும் புதிரானதாகத்தான் தோன்றுகிறது. நாம் அதிலிருந்து உருவானவர்கள் என்பதால், அதை நாம் ஆராய்ந்துகொண்டிருக்கி றோம். நாம் எதனால் உருவாகியிருக்கிறோமோ, அது இப்படிப்பட்ட ஒரு புதிராக இருக்கிறது என்பதே, ஒருவேளை நமக்கு வியப்பு ஏற்படக் காரணமாக இருக்கலாம்.

மாணவன் கண்டுபிடித்த விளைவு :

நீரைப் பற்றிய பல விஷயங்கள் உங்களுக்கு விநோதமாகத் தோன்றினால், கீழே வரும் விஷயத்தைப் பற்றி என்ன நினைப்பீரகள்?” குளிர்ந்த நீரைவிட வெந்நீர் விரைவாக உறைந்துவிடும். இந்த விசித்திர இயல்புக்கு பெம்பா விளைவு என்று பெயர் (Mpemba Efffect)

தான்சானியாவைச் சேர்ந்த மேல்நிலைப்பள்ளி மாணவன் எராஸ்டோ பி பெம்பா 1963ல் வகுப்பறைப் பரிசோதனை யின்போது கண்டுபிடித்ததால்தான். அந்த விளைவுக்கு இந்தப் பெயர், சூடான ஐஸ்கிரீம் ஜில்லென்ற ஐஸ்கிரீமை விட வேகமாக உறைந்துபோனதை அவன் கண்டுபிடித்தான். அவனது ஆசிரியர் அதை நம்பாமல் அவனைக் கேலி செய்திருக்கிறார்.

ஆனால், நீரின் விசித்திரமான இந்த இயல்பைக் கண்டுகொண்டவர்கள் பெம்பாவுக்கு முன்னரே இருந்திருக்கிறார்கள். அரிஸ்டாட்டில், ஃபிரான்சிஸ் பேகன், ரெனோ தெகார்தே போன்றோரும் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.

(அலோக் ஜா, ஐ.டி.வி. நியூஸின் அறிவியல் செய்தித் தொடர்பாளர், நீரைப் பற்றி “தி வாட்டர் புக்” என்றொரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்)

நன்றி: “தி கார்டியன்” – தமிழில் : ஆசை

******************************************************

அமல்களின் சிறப்புகள்….

தொடர் : 48

  1. அப்துல் ஹமீத்

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :

புத்தகம்: அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்.

தலைப்பு : திக்ரின் சிறப்புகள்

குறுந்தலைப்பு: திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும்: பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.

பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து,12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது பதிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.

அமல்களின் சிறப்புகள்(அசி) புத்தகம், பக்கம் 388வது பக்கத்தில், ஹதீஃத் எண் 16ல் வெளியிட்டிருந்த ஸஹீஹான ஹதீஃதை சென்ற இதழில் ஆய்வு செய்தோம். இந்த ஹதீஃதிற்கு 390வது பக்கத்தில் முதல் பாராவில் அப்புத்தகம் தந்துள்ள விளக்கங்களை இன்ஷா அல்லாஹ் இந்த இதழில் ஆய்வு செய்வோம். அப்புத்தகம் தந்துள்ள விளக்கத்தை தடித்த எழுத்துக்களில் கீழே தந்துள்ளோம்.

மேற்கூறப்பட்ட ஹதீஃதில் தனித்திருந்து அல்லாஹ்வை திக்ரு செய்பவர் என்ற வாசகத்திற்கு சூபியாக்கள் இரண்டு கருத்துக்களை எழுதியுள்ளனர். முதலாவது, மனிதர்களை விட்டு நீங்கியிருப்பது என்பதாகும். இது பொதுவான கருத்தாகும். இரண்டாவது, மனம் அல்லாஹ்வைத் தவிர, மற்றவற்றை விட்டும் நீங்கியிருப்பது என்பதாகும். இதுதான் உண்மையில் (கல்வத் என்னும்) தனித்திருத்தலாகும். எனவே இருவிதமான தனிமைகளும் ஏற்பட்டுவிட்டால் அதுவே பரிபூரணமான தர்ஜாவாகும்.

எமது ஆய்வு :

அசி புத்தகம் எழுதி இருப்பதைப் படித்துப் பார்த்தீர்களா? இந்த மனுஷன், முஸ்லிம்களை எங்கு அழைத்துச் செல்கிறார் என்று ஒன்றிற்கு இருமுறை படித்துப் பாருங்கள். எப்படிப்பட்ட விவரத்தை இந்த வீணாய்ப் போன புத்தகம் கக்கி இருக்கிறது என புரிந்து கொண்டீர்களா? மனிதர்களை விட்டு நீங்கியிருக்க வேண்டுமாம். மேலும், மனம் அல்லாஹ்வைத் தவிர, மற்றவற்றை விட்டும் நீங்கியிருக்க வேண்டுமாம்.

இந்த இரண்டு கருத்துக்களையும் இறைவனிடமிருந்தும் இறைத்தூதரிடமிருந்தும் இவர்கள் பெற்றுக்கொள்ளவில்லையாம். சூபியாக்கள் எழுதி இருக்கின்றனர்களாம். இஸ்லாம் காட்டித்தராத இந்த கேடுகெட்ட சூபியாக்கள் யார் என்று ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். சூபியாக்கள்தான் இவர்களின் இறைவன் போலும்.

சரி! வழிகெடுக்கும் இவர்களின் விளக்கத்தை இப்போது ஆய்வு செய்வோம். மனிதர்களை விட்டு நீங்கி இருக்க வேண்டுமாம். யார் மனிதர்களை விட்டு நீங்கி இருப்பார் என்பதை இப்போது பார்ப்போம். திருமணம் ஆகாதவராக இருந்தால், தாய் தந்தை சகோதர சகோதரிகள் மற்றும் உற்றார் உறவினர், நண்பர்கள் ஆகியவர்களை விட்டு நீங்கி இருக்க வேண்டும். அப்படி என்றால் அடுத்த உறவான மனைவி என்பது ஏற்படக்கூடாது என்ற நிலையும், மனைவி இல்லை என்றால், மக்களும் இல்லை, மக்கள் இல்லை என்றால் எதிர்கால சந்ததிகளும் இல்லாமல் போய்விடும் அல்லவா? அப்படி என்றால் என்ன அர்த்தம்? பிற்காலத்தில் முஸ்லிம்கள் என்பவர்கள் இல்லாமல் போய் விடுவதற்கான திட்டம் தானே இவர்கள் கூறும் சூஃபியாக்களின் கருத்துக்கள். ஆக, முஸ்லிம்களின் அடிமடியில் கையை வைத்து விட்டார் ஜக்கரிய்யா.

இந்த புத்தகத்தின் அறிவுரையை பின்பற்ற ஆரம்பித்தால், திருமணம் புரிந்தவனின் நிலை என்னவாகும் என்பதையும் சிறிது சிந்தித்துப் பாருங்கள். தாய் தந்தை சகோதர சகோதரிகள் மற்றும் உற்றார் உறவினர், நண்பர்கள் ஆகியவர்களை விட்டு நீங்கி இருக்க வேண்டுமாம். அடுத்து என்ன நடக்கும்? மனைவியை அம்போ என்று நடுத்தெருவில் விட்டு விட வேண்டியதுதான். அவருக்கு பிள்ளைகள் பிறந்திருந்தால், அந்த பிள்ளைகளையும் விட்டு விடுவார் அல்லவா? அப்போது பிள்ளைகளின் நிலை என்னவாகும்? அந்த பிள்ளைகள் இளம் பிராயத்தினராய் இருந்தால், அந்த சிறு பிள்ளைகள் தமக்கும் தமது தாய்க்கும் உணவு உடை இருப்பிடம் ஆகிய வாழ்வாதாரங்களைப் பெற்றுக்கொள்ள எங்காவது கூலி வேலை செய்து தான் பிழைக்க வேண்டும். கூலி வேலை கிடைக்காவிட்டால், பிச்சை எடுத்துத்தான் பிழைக்க வேண்டும் இல்லையா?

இது மிகைப்படுத்தப்பட்ட விஷயம் அல்ல. ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் தொழுகைக்குப் பிறகு பிச்சை எடுக்க வருகின்ற வாடிய முகத்துடன் கிழவிகளாக தோற்றம் அளிக்கும் இளம் பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் பள்ளிவாசல்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். கிழவிகளாகத் தோற்றமளிக்கும் அவர்களின் வயது, பிச்சை எடுக்கக் காரணம் ஆகியவைகளை விசாரித்துப் பாருங்கள். பத்து பெண்கள் இருந்தால் அந்த பத்து பெண்களுமே குடும்பத்தை கவனிக்காத கணவர்களால் தமக்கு இந்த நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கிறார்கள்.

அசி புத்தகத்தை எழுதிய ஜக்கரியா அவர்கள் இப்படிப்பட்டவர்களை விசாரித்துப் பார்த்து இருந்தாரா? நிச்சயமாக அவர் விசாரித்து அறிந்து இருக்க மாட்டார்? சரி! அதை அவர் செய்யவில்லை. குறைந்தபட்சம் முஸ்லிம்களுக்கு உபதேசம் செய்த இந்த ஜக்கரியா இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார? இல்லையே! அவர் இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து காட்டாதது மட்டும் அல்ல. அவர் உபதேசம் செய்ததற்கு மாற்றமாக, வேளா வேளைக்கு குடும்பத்தாருடன் சாப்பிட்டு, தேவைப்படும் போதெல்லாம் நிம்மதியாக தூங்கி எழுந்து, எந்த வேலையும் செய்யாமல், சொத்து சுகங்களை குவித்து வைத்து விட்டு(!) வசதியான வாழ்க்கை நடத்தி வி.ஐ.பி. லிஸ்ட்டில் இடம் பெற்றிருந்த அவர் வாழ்ந்திருந்த வாழ்க்கை சாட்சி சொல்லும் அல்லவா தாம் உபதேசித்ததற்கு மாற்றமாக தாம் செயல்பட்டதை? இப்படி உயர்தர வாழ்க்கையை இவர் நடத்திவிட்டு முஸ்லிம்களை மனிதர்களை விட்டும் மற்ற வற்றை விட்டும் நீங்கி இருக்க வேண்டும் என்று உபதேசம் செய்து விட்டார்.

சரி போதித்த இவரிடம் தான் பேணுதல் இல்லை, இவரது அறிவுரைகளை அப்படியே பின்பற்றி நடக்கும் கார்கூன்கள் பின்பற்றினார்களா? இல்லையே! உதாரணத்திற்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம் பார்க்க தேவைப்படும். அதுபோல, ஒரு நபரை எடுத்துக் கொள்வோம். அமல்களின் சிறப்புகள் தொடரை நாம் எழுத ஆரம்பித்த போது எம்மை நாய் என்று திட்டி தீர்த்து சுகம் கண்டாரே ஒரு கல்லூரி பேராசிரியர் சமீபத்தில் குடுமிபிடி சண்டையை திண்டுகல்லில் நடத்தி மகிழ்ந்தாரே அந்த நபர் இன்று வரை மனைவி மக்கள், சந்ததிகள், நண்பர்கள் என்று மனிதர்களுடன் வாழ்ந்து வருகிறார். சொந்த வீடு வாசல் என மற்றவைகளையும் விட்டுவிடாமல், அவைகளையும் நேசித்து பாதுகாத்து வருகிறாரே அவர் ஏன் ஜக்கரியாவின் உபதேசத்தை பின்பற்றாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்?

இப்போது விசயத்திற்கு வருவோம். மனிதர்களை விட்டு நீங்கியிருப்பதும், மனம் அல்லாஹ்வைத் தவிர, மற்றவற்றை விட்டும் நீங்கியிருப்பதும் இந்த பண்டார பரதேசிகளான சூபியாக்களின் வழியாம். இதை முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டுமாம். அப்படி பின்பற்றி வாழ்வதுதான் உண்மையில் (கல்வத் என்னும்) தனித்திருத்தலாகு மாம். எனவே இருவிதமான தனிமைகளும் ஏற்பட்டுவிட்டால் அதுவே பரிபூரணமான தரஜாவாகும் என்று உபதேசிக்கிறது அசி புத்தகம்.

குர்ஆன், ஹதீஃத்களுக்கு மாற்றமாக மனிதர்களையும், மற்றவர்களையும் விட்டு தனித்திருத்தலை சிபாரிசு செய்யும் ஜக்கரியா அவர்களுக்கு “ஷைகுல் ஹதீஃத்’ என்று ஒரு பட்டத்தை வேறு இவர்கள் கொடுத்திருக்கிறார்கள். பாவம் கீழேயுள்ள ஸஹீஹான ஹதீஃத் கூட அவருக்குத் தெரியவில்லை என்று நினைக்கும்போது பட்டம் கொடுத்த பாவிகளை நினைத்து வருந்த வேண்டி இருக்கிறது.

நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினா தொடுத்தனர். அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக் கொண்டு) முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே! நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், (இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன் என்றார். இன்னொருவர், நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன் என்று கூறினார். மூன்றாம் நபர் நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன் ஒருபோதும் மணந்துகொள்ளமாட்டேன் என்று கூறினார். அப்போது இறைத் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, இப்படி இப்படியயல்லாம் பேசிக் கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன். விட்டுவிடவும் செய்கிறேன். தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன், மேலும், நான் பெணகளை மணமுடித்தும் உள்ளேன், எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று கூறினார்கள். ஹதீஃத் எண்: 5053, அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக்(ரழி) அவர்கள், ஸஹீஹ் புகாரி: அத்தியாயம்: 67, திருமணம்.

மேலும் திருமணத்தை புறக்கணிப்பவனைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் எடுத்துக் கூறிய அறிவுரை கீழே உள்ள ஹதீஃதில் தென்படுவதைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள், திருமணம் என் வழிமுறைகளில் ஒன்று. என் வழிமுறையைப் பின்பற்றாதவர் என்னை சார்ந்தவர் அல்ல. மணமுடித்துக் கொள்ளுங்கள். மக்களில் நீங்கள் எண்ணிக்கையில் மிகைத்திருப்பதை நான் விரும்புகிறேன். வசதியுள்ளவர் திருமணம் செய்து கொள்ளட்டும். வசதியற்றவர் நோன்பு நோற்கட்டும், அது உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும். அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா(ரழி) இப்னு மாஜா (ஆங்கிலம்) வால்யூம் : 3, அத்தியாயம்: 9, ஹதீஃத் எண்: 1846 (ஹஸன்)

இதே கருத்தில் அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மசூத்(ரழி), திர்மிதி ஹதீஃத் எண்: 1081, ஆங்கிலம் அத்தியாயம்:6, அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் (ரழி), புகாரி: அத்தியாயம் : 67, திருமணம் ஹதீஃத் எண்: 5066

தனித்திருத்தலை தவிர்த்து விட்ட இஸ்லாத்திற்குள் புகுந்து கொண்டு, இஸ்லாத்திற்கு எதிரான சேட்டைகளை செய்து விட்டு, அவரே பின்பற்றாத அவரின் அறிவுரையை உண்மையில் அதுதான் (கல்வத் என்னும்) தனித்திருத்தலாகும். எனவே இருவிதமான தனிமைகளும் ஏற்பட்டு விட்டால் அதுவே பரிபூரணமான தரஜாவாகும் என்று தமக்குத் தாமே பீற்றி கொண்டு அந்த பக்தர்களுக்கு அவரே சான்றிதழ் கொடுத்து மகிழ்ந்து கொண்ட மனிதர் இவர்.

நன்றாக கவனியுங்கள் தப்லீக் ஜமாஅத்தினரே! இப்போதும் உங்களால் அசி புத்தகத்தின் இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைகளை நீங்கள் நிராகரிக்கவில்லை என்றால், உங்களுக்கு நேர்வழி கிடைத்திட அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு வழியில்லை எமக்கு.

மனித மனம் தம்மை சுற்றி உள்ள அனைத்தையும் மனத்திலிருந்து தூக்கி எறிந்து விட்டு, அல்லாஹ்வை மட்டும் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பது என்ற அவரின் அறிவுரை செயல்பட சாத்தியமா என்பதைப் பற்றி மார்க்கம் என்ன சொல்கிறது?

– இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்…

*************************************************

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

M.T.M.முஜீபுதீன், இலங்கை

2019 ஜூலை மாத தொடர்ச்சி…..

பின்வரும் ஹதீஃதில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறியதை கவனியுங்கள்.

“சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! சரிக்கு சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! தங்கத்திற்கு வெள்ளியையும் வெள்ளிக் குத் தங்கத்தையும் விரும்பியவாறு விற்றுக் கொள்ளுங்கள்.” (புகாரி : 2175)

ஆகவே, வட்டி பொருளாதாரத்தில் தீய பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதால் அதனைத் தவிர்ப்பது அவசியமாகும். இஸ்லாமிய பொருளாதாரத்தில் வட்டி தடுக்கப்பட்டுள்ளதால், பொருளாதாரத்தில் எழும் பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன.

பொருள், காரணிச் சந்தைகளைச் சீரமைக்கும் மார்க்கம் இஸ்லாம் :

இன்று முதலாளித்துவப் பொருளாதாரங்களில் மூலவளங்கள் உச்சப் பயன்பாட்டை அடையும் விதமாக பயன்படுத்தப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்படுகின்றது. அதாவது உழைப்பு சுரண்டப்படுவதாகவும், நில வாடகையில் பல அநீதிகள் நடைபெறுவதாகவும், மூலதனம் நுகர்வோருக்கும், சமுதாயத்திற்கும் பாதகங்களை அதிகளவில் ஏற்படுத்தும் பொருள் உற்பத்தியில் முதலீடு செய்யப்படுவதாகவும், உரிமையாளர் இலாபம் பெறுதல் என்று நோக்கில் களவு,மோசடி, கலப்படம், விபச்சாரம், சூது, போதைப் பொருட்கள், பதுக்கல், சந்தைக்கு சிறு உற்பத்தியாளர் நிரம்பல் செய்வதைத் தடுக்கும் பல தடைகள் இவ்வாறு பல தவறுகளை சந்தையில் ஏற்படுத்துவதாகவும் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான குறைபாடுகளிலிருந்து நுகர்வோரையும், முதலீட்டாளர்களையும், உற்பத்தியாளர்களையும் பாதுகாப்பதற்கு இஸ்லாம் மார்க்கம் பல வழிமுறைகளை முன் வைக்கின்றது. இதனால் பொருள், காரணிச் சந்தைகள் சீராக இயங்க வழிகாட்டப்படுகின்றது. அன்று அரேபியாவில் இஸ்லாமிய பொருளாதார வழிமுறை, இருண்ட அரேபியாவை இஸ்லாமிய நாகரிகம் உதயமாக வழிகாட்டியது. எப்போது இஸ்லாமிய அரசுகள் இஸ்லாமிய வாழ்க்கைத் திட்டத்தை கைவிட்டதோ, அப்போதிலிருந்து அரேபியாவில் அரசுகள் தோல்விகளையும், பொருளாதார பின்னடைவுகளையும் தொடர்ந்து சந்தித்து வருகின்றன. அல்லாஹ் கூறுவதை கவனியுங்கள்.

நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகின்ற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றவர்களின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்ககள் நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிகக் கருணையுடையவனாக இருக்கிறான்.

எவரேனும் அல்லாஹ்வின் வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால் விரைவாகவே அவரை நாம் நரக நெருப்பில் நுழையச் செய்வோம் அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும். நீங்கள் தடுக்கப்பட்டுள்ளவற்றில் பெரும் பாவங்களைத் தவிர்த்துக் கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்புமிக்க இடங்களில் புகுத்துவோம். (அல்குர்ஆன்: 4:29-31)

மேலும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறுவதை கவனியுங்கள் :

“ஹலால் தெளிவானது ஹராமும் தெளிவானது அவ்விரண்டிற்கிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன. யார் பாவம் எனச் சந்தேகப்படுபவற்றை விட்டு விடுகின்றாரோ அவர் பாவம் என்று, தெளிவாகத் தெரிவதை நிச்சயம் விட்டுவிடுவார். யார் பாவம் எனச் சந்தேகிக்கப்படுபவற்றைச் செய்யத் துணிகிறாரோ அவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்துவிடக் கூடும். பாவங்கள் அல்லாஹ் போட்ட வேலிகளாகும். யார் வேலியைச் சுற்றி மேய்கிறாரோ அவர் அதற்குள் சென்றுவிடக்கூடும்”. (புகாரி: 2051)

உழைத்து உண்பதன் சிறப்பு :

மனிதன் தனது உழைப்பின் மூலமாக கிடைக்கும் உணவிலிருந்து உண்பது சிறப்புடையதாகும். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“ஒருவர் தமது கையால் உழைத்து உண்பதைவிடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தமது கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்” (புகாரி : 2072)

நபி(ஸல்) அவர்கள் உழைப்பின் சிறப்பை விளக்கும்போது பின்வருமாறு விவரித்தார்கள்:

“பிறரிடம் யாசகம் கேட்பதை விட ஒருவர் தமது முதுகில் விறகுக் கட்டையைச் சுமந்து விற்கச் செல்வது சிறந்ததாகும். அவர் யாசிக்கும்போது யாரும் கொடுக்கவும் செய்யலாம் மறுக்கவும் செய்யலாம்” (புகாரி:2074)

நபி(ஸல்) அவர் கூலிக்கு வேலை செய்பவராகவும், பொருட்களை வாங்கி விற்பவராகவும், கதிஜா(ரழி) அவர்களின் பொருட்களை விற்றுக் கொடுப்பவராகவும் இருந்தி ருக்கிறார்கள்.

“அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள், “நீங்களுமா?” என்று கேட்டார்கள். “ஆம்! மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந் தேன்” என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (புகாரி: 2262)\

உழைப்புக்குரிய கூலியை கொடுக்காது மறுப்பது பாவமாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

“மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்பவன் சுதந்திரமான வனை அடிமையாக விற்று அந்தக் கிரயத்தை சாப்பிட்டவன் கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்” என்று அல்லாஹ் கூறினான். (புகாரி: 2270)

ஒருவரிடம் வேலை வாங்கிக்கொண்டு பின் கூலி கொடுக்க மறுப்பது பெரும் பாவமாகும். தொழிலாளரின் வியர்வை காய்வதற்கு முன் அவர்களின் கூலியைக் கொடுக் கும்படி இஸ்லாம் வழிகாட்டுகின்றது.

பொருளின் விலைகளை சந்தையில் அதிகரிக்கும் செயற்பாடுகளை தவிர்த்தல் :

இன்றைய முதலாளித்துவப் பொருளா தாரங்களில் சந்தையில் தன்னிச்சையாக பண்டங்களின் விலைகள் தீர்மானிக்கப்படுகின்றது எனக் கூறப்படினும், நடைமுறையில் அதற்கு மாற்றமான செயற்பாடுகள் கூடியளவில் காணப்படுகின்றன. சந்தையில் தனியுடமை போன்ற சந்தைகளில் உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் பண்ட விலை தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றனர். சந்தையில் பதுக்கல், வழங்குனரை சந்தைக்கு நுழைய விடாது தடுத்தல், சந்தைக்கு விற்பனையாளர் வருவதற்கு முன் உள்ளூர் வாசிகள் கொள்முதல் செய்து கூடிய விலையில் விற்றல், வெளியூர் வாசிக்காக உள்ளூர்வாசி கூடிய விலைக்கு விற்றுக் கொடுத்தல், விலையை அதிகரிப்பதற்காக போட்டியாக விலை பேசுதல், பொய்ச் சத்தியம் செய்து விலையைக் கூட்டி விற்றல் இவ்வாறான முறைகளில் சந்தையில் விலைகளை அதிக ரிக்கச் செய்கின்றனர். இச்செயற்பாடுகளினால் நுகர்வோரும், சிறு உற்பத்தியாளர்களும் பெரிய அளவில் பாதிப்புக்கு உட்படுகின்றனர்.

இதேபோல் பொருட்களைக் கலப்படம் செய்து ஏமாற்றி விற்றல், நிறையைக் குறைத்து விற்றல், பொருளின் குறைகளை மறைத்து விற்றல், தவறான ஒப்பந்தங்களின் அடிப்படையில் நிர்ப்பந்தித்து பொருட்களை வாங்குதல் விற்றல், ஊழிய சுரண்டல்கள், அறுவடைக்கு முன்பே பக்குவமடையாத உணவுப் பொருட்களை குறைந்த விலையில் பக்குவமடைந்த பொருட்களுடன் பரிமாற்றி, பக்குவமடைந்த பின் அறுவடை செய்து கொள்ள ஒப்பந்தங்கள் செய்து கொள்ளல், நிதி நிறுவனங்களிடம் ஒரு பொருளைக் கொள்முதல் செய்ய கடன் பெற வந்தவனிடம், அப்பொருளை விற் பனை செய்யும் நோக்கமின்றி இருந்த நிதி நிறுவனம், சந்தையில் பொருளை வாங்கக் கூடிய விலையில் கடனுக்கு, கடன் பெற வந்தவருக்கே விற்றல். அவ்வாறான ஏமாற்று வியாபாரங்களை இஸ்லாம் தடை செய்கிறது.

இவ்வாறான மோசடி வியாபாரங்களுக்கான தடை விளக்கங்கள் அல்குர்ஆனிலும், அல்லாஹ்வின் தூதரின் ஹதீஃத்களிலும் ஏராளம் உண்டு அவற்றை கவனித்து இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறக் கூடிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயற்சிக்கக் கூடாதா? சிந்தித்து செயற்படுங்கள் அல்லாஹ்வின் அருளால் வெற்றி பெறக்கூடிய வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

கடமையாக்கப்பட்ட ரமழான் நோன்பு :

நபி(ஸல்) அவர்களுடைய சமுதாயத்திற்கு முன் வாழ்ந்த சமுதாயங்களுக்கு நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது. அதுபோல் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் இந்த உம்மத்திற்கும் நோன்பு கடமையாக்கப்பட்டது. நோன்பு என்பதற்கு அரபியில் “அஸ்ஸியாம்” அல்லது “அஸ்ஸவ்ம்” என்று அழைப்பர். இதன் பொருள் “நிறுத்திக் கொள்ளல்” ஆகும். உண்ணா நோன்பு இருப்பது ரமழான் மாதம் முழுவதும் பருவ வயதை அடைந்த சகல முஸ்லிம்கள் மீதும் கட்டாய கடமையாகும். நோன்பு ஃபஜ்ரு (அதிகாலை) முன்பிருந்து சூரியன் மறையும் வரை உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் ஆகிய சுகங்களை நிறுத்திக் கொள்வதன் மூலம் நோன்பு இருத்தல் வேண்டும். ஆனால் நோயாளி, பயணி ஆகியோர் ரமழான் மாதம் நோன்பு நோற்காமல் இருக்க அனுமதி உண்டு. ஆனால் அவர்கள் விட்ட நோன்பை பின்னர் வரும் மாதங் களில் நிறைவேற்றுதல் வேண்டும். அத்துடன் மாதவிடாய் கண்ட பெண்கள், பிரசவ இரத்தப்போக்கு உள்ள பெண்கள் நோன்பு நோற்கலாகாது. ஆனால் விட்ட நோன்பை தூய்மை அடைந்த பின்னர் நிறைவேற்றுவது அவர்கள் மீது கடமையாகும். அல்லாஹ் கடமையான நோன்பு பற்றி கூறு வதை கவனியுங்கள்.

ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் முலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவே அல்லது பயணத்திலோ இருந்தால், (அவர் குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக, ஃபித்யாவாக ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும். எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது. ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்) நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும். (என்பதை உணர்வீர்கள்)

ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை, தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கி அருளப்பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும் எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும் அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகின்றானே தவிர, உங்களுக்கு சிரமத்தை அவன் நாடவில்லை குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்) (அல்குர்ஆன்: 2:183-185)

******************************************************

Previous post:

Next post: