அந்நஜாத் –   டிசம்பர் 2019

in 2019 டிசம்பர்

அந்நஜாத் –   டிசம்பர் 2019

ர.அவ்வல் – ர.ஆகிர் : 1441
 

 1. தலையங்கம்!
 2. புரோகிதத்திற்குக் கூலி நரகமே!
 3. உச்சநீதிமன்றத் தீர்ப்பு!  பாடம் கற்பார்களா முஸ்லிம்கள்?
 4. ஆதிகால   வேதங்களும்,  இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்…
 5. அமல்களின் சிறப்புகள்…
 6. பிராய்லர் இறைச்சி… பிரைடு சிக்கன்…  ஹராமா?  ஹலாலா? 22
 7. அல்லாஹ் அளவே இல்லாத  கருணையாளன்!
 8. அறிந்து கொள்வோம்…    
 9. ஐயமும்!  தெளிவும்!!   

***************************************************************************

தலையங்கம்!

எம் தாய் நாட்டின் நீதி!

மனிதா! நீ ஒரு கட்டிடம் கட்டினாய். நீ கட்டிய கட்டிடத்தின் வயது ஒன்று இரண்டு ஆண்டுகள் அல்ல. சில நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. கட்டிடத்தைக் கட்டிய நீ அது உன்னுடையது என்று நம்பிக்கொண்டிருந்தாய்! ஒட்டுமொத்த உலகமும் அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தது. இது தான் நம்பிக்கை.

திடீரென ஒருநாள் சகோதர மனிதர்கள் சிலர் வந்தார்கள். கட்டிடத்தை மகிழ்ச்சியுடன் இடித்தார்கள்! அந்த இடம் அவர்களது இடம் என்றார்கள். அதில் ஒரு கட்டிடத்தை அவர்களுக்காக கட்டப்போவதாக சொன்னார்கள்.

உங்கள் வழக்கு நீதி அரசருக்கெல்லாம் உச்சமான நீதி அரசரிடம் வந்தது!

இடித்தது தவறுதான் என்றார்! அத்துடன் நிற்கவில்லை. இடித்தவர்களே அவர்கள் விருப்பப்படி அதே இடத்தில் கட்டிடத்தை கட்டிக் கொள்ளலாம் என்றும், உனக்கு வேறு ஒரு இடத்தில் இடம் தருகிறேன்; அதில் நீ உனக்காக வேறு கட்டிடம் கட்டிக்கொள் என்றும் தீர்ப்பு வழங்கினார்.

மனிதா! நீ சார்ந்த மதம் வேறு. இடித்தவர்கள் சார்ந்த மதம் வேறு :

உச்சத்தில் இருக்கும் நீதி அரசர் இடித்தவர்களின் மதத்தை சார்ந்திருந்தாலும், அவர் நீதி அரசர் ஆயிற்றே. எனவே, இது நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்று நீதி அரசரே கூறுகிறார். ஆனால், இதை வரலாறு காணாத தீர்ப்பு என்று வேறு சிலர் மாற்றமாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே வரலாறு காணாத தீர்ப்பை அவரால் வழங்க முடிந்தது :

இப்போது விஷயத்திற்கு வருவோம். உனக்கு, மற்றும் நீ சார்ந்த உன் சமூகத்தினருக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது? இப்போதாவது நீ சிந்தித்தாயா? உன்னால் அறியமுடியவில்லை என்றால், நான் உனக்கு துப்பு (CLUE) தருகிறேன்.

நீ வணங்கும் இறைவன், மற்றும் அவனது தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் காட்டிய வழியில் அதனை நீ பெற்றுக்கொள்.

இறைத் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இப்படி ஒரு காலம் வரும் முஸ்லிம்களாகிய உங்களைத் தாக்குவதற்காக ஏனைய சமூகத்தவர்கள் அனைவரும் ஒன்று திரளும் ஒரு காலம் மிக விரைவில் வரும். உலக மக்களெல்லாம் ஒன்றிணைந்து முஸ்லிம்களை தாக்குவார்கள். ஓர் உணவுத் தட்டில் இருக்கும் உணவைப் பங்குபோட்டு உண்பதற்காக ஏனையோரையும் அழைப்பது போல். அப்போது அங்கிருந்த ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! அக்காலத்தில் அந்த அளவுக்கு நாம் சிறுபான்மையாக இருப்போமா?” என்று கேட்டார்.

அதற்கு நபியவர்கள், “இல்லை, நீங்கள் அதிக எண்ணிக்கையில்தான் இருப்பீர்கள். ஆனால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் சருகுகளைப் போல் உறுதியற்றவர் களாகவே இருப்பீர்கள்.” ஒருவருக்கொருவர் முரண்பட்டவராக இருப்பீர்கள் உங்களிடம் ஒற்றுமை இருக்காது. உங்களைப் பற்றிய அச்சத்தை எதிரிகளின் உள்ளங்களிலிருந்து அல்லாஹ் அகற்றி விடுவான். உங்கள் உள்ளங்களில் “வஹ்ன்” குடிகொண்டு விடும் என்று கூறினார்கள். “வஹ்ன்” என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “இவ்வுலக வாழ்வின் மீது அதீத பற்றும், மரணத்தை வெறுக்கும் தன்மையுமே அது” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : ஸவ்பான்(ரழி), அபூதாவூத்: 4297, பாடம் 39, ஹதீஃத் எண். 7,ஆங்கிலம்: பாடம் 38, ஹதீஃத் எண். 4284

மனிதா! உங்களிடம் ஒற்றுமை இல்லை. உலக வாழ்வின் மீது அதீத பற்று இருக்கத் தான் செய்கிறது. அல்லாஹ்வின் நாட்டப்படி இப்போது மவுத் ஏற்பட்டாலும், இப்போது என்பது இப்போதைக்கு வேண்டாம் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும் நிலையை இன்று கண்கூடாக காண்கிறோம்.

அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் காட்டியது இஸ்லாம் என்ற பெயரைத்தான். ஆனால் நீங்கள் இன்று விதவிதமான பெயர்களில் பல மத்ஹபுகளாக, பல இயக்கங்களாக பிரிந்து போய் கிடக்கிறீர்கள். ஆனாலும் அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும் பின்பற்றுவதாக அத்தனை மத்ஹபுகளும், பிரிவுகளும் சொல்லிக் கொண்டு இருக்கின்றனர்.

இன்னும் சில மேதாவிகள், அல்லாஹ் அருளிய குர்ஆன் மட்டும் போதும், தூதர் அருளிய ஹதீஃதுகள் வேண்டாம் என்று கூறி, அல்லாஹ்வையும், அவன் தூதரையும் பின்பற்றுமாறும், முரண்பாடு ஏற்பட்டால் அல்லாஹ்விடமும் அவன் தூதரிடமும் திரும்புமாறும் அல்லாஹ் இட்ட கட்டளையையே (அல்குர்ஆன்: 4:59) புறக்கணித்து விட்டனர்.

இப்பிரிவினைவாதிகள் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் அல்குர்ஆன் 6:159 இறை வசனத்தை எடுத்து பார்க்கட்டும்.

“நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தைப் பிரித்து, பல பிரிவினர்களாகி விட்டனரோ, அவர்களின் எந்தக் காரியத்திலும் (நபியே!) உமக்கு சம்பந்தமில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்த முடிவைப் பற்றி, அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.
மேலும், (அல்குர்ஆன்: 30:32) இறை வசனத்தையும் பார்க்கட்டும்.

எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி, பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ, ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.

எனவே, இஸ்லாமிய சகோதரர்களே, எதிரிகளின் உள்ளத்தில் உங்களைப் பற்றி அச்சம் ஏற்பட, நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் என்று கூறிக் கொள்கிறோம்.

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகள் நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான். அல்குர்ஆன்:2:208

எங்கள் சமூகத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளியுங்கள்; அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; அவன் உங்கள் பாவங்களிலிருந்து உங்களுக்கு மன்னிப்பு அளிப்பான்; நோவினை தரும் வேதனையிலிருந்து உங்களைப் பாதுகாப்பான். அல்குர்ஆன்: 46:31

***************************************************************************

 புரோகிதத்திற்குக் கூலி நரகமே!

அபூ அப்தில்லாஹ்

மறு பதிப்பு :

2019 நவம்பர் மாத தொடர்ச்சி….

மேலும் மவ்லவிகளில் ஒரு சிலரைக் கொண்டு முஸ்லிம் சமுதாயத்திற்கு உண்மையான சேவையாற்றப்பட்டிருக்கிறது. அவர்கள் நேர்வழியைப் போதித்திருக்கிறார்கள் என்றால், அவர்கள் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்வதை விட்டு, ஹலாலான தொழில் மற்றும் வியாபாரம் மூலம் பொருள் ஈட்டுபவர்களாகவே இருந்திருப்பார்கள். விரல் விட்டு எண்ணப்படும் ஓரிருவர் அதற்கு விதிவிலக்காக மார்க்கத்தைப் பிழைப்பாக ஆக்கிக் கொண்டவர்களாக இருந்தாலும், அது அவர்கள் நேர்வழியில் இருந்ததற்கு ஆதாரமாக ஆகாது. “வல்ல அல்லாஹ் பாவிகளைக் கொண்டும் தீனுடைய வேலை வாங்கிக் கொள்வான்” (புகாரீ 4:297) என்ற நபி(ஸல்) அவர்களின் போதனையின் அடிப்படையிலானதாகவே இருக்கும்.

இன்றைக்கு தெளஹீது மவ்லவிகள் மேற்படி பித்அத்களை, அனாச்சாரங்களைவன் மையாகக் கண்டிப்பதற்குக் காரணம் அவர்களின் ஈமானின் தெளிவு என்று சொல்ல முடியாது. அந்த ஈமானில் தெளிவு ஏற்பட்டிருந்தால் அவர்கள் இன்று பிரசார பணிக்கு, இமாமத் செய்வதற்கு, குர்ஆன் ஓதிக் கொடுப்பதற்கு, மார்க்கம் கற்றுக் கொடுக்க சம்பளம் பெறுவதை விட்டும் விடுபட்டிருக்க வேண்டுமே? சொந்தமாகத் தொழில், வியாபாரம் செய்ய முன் வந்திருக்க வேண்டுமே? அப்படியானால் உண்மை நிலை என்ன? ஆயிரத்திற்கும் கீழ் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு ஐயாயிரத்துக்கும் அதிகமாக சம்பளம் வாங்க வாய்ப்பு ஏற்பட்டுவிட்டது.

அதற்காக இந்த கத்தம், ஃபாத்திஹா, மவ்லூது, தர்கா சடங்கு மற்றும் அனாச்சாரங்களைக் கூலிக்காக எதிர்க்க முன் வந்திருக்கிறார்களே அல்லாமல் மார்க்கத்தைப் பிழைப்பாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்ற குர்ஆன், ஹதீஸ் விளக்கத்தினால் அல்ல. மார்க்கத்தை மலிவாக விற்பதை விட்டு அதிக லாபத்துடன் விற்கத் தெரிந்து கொண்டார்கள். மார்க்கத்திற்குக் கிரயமாக சொற்ப தொகையைத்தான் பெறக்கூடாது; பல்லாயிரக்கணக்கில் வாங்கலாம் என்று இவர்களாக முடிவு செய்து கொண்டார்கள் போலும்.

தயாராகி விடுவார்கள்:

இன்று நாட்டிலுள்ள முகல்லிது மவ்லவிகள் அனைவருக்கும் மாதாமாதம் ரூபாய் ஐந்தாயிரம் (ரூ.5000/) (1995-ல்) சம்பளமாகத் தந்துவிடுகிறோம். நீங்கள் செய்து வரும் பித்அத், அனாச்சாரங்களை விட்டுவிடுங்கள். மேலும் அவற்றைக் கண்டித்து மக்களிடையே பிரசாரம் செய்ய வேண்டும் என்று யாரும் ஏற்பாடு செய்ய முன்வந்தால், நிச்சயமாக இந்த முகல்லிது மவ்லவிகள் அனைவரும் இரட்டிப்பு சந்தோஷத்துடன் அதை ஏற்று நடக்க முன் வருவார்கள். இதில் சந்தேகமேயில்லை. இந்த நிலையில் ரூபாய் ஐந்தாயிரத்திலிருந்து (ரூ.5000) ரூபாய் ஐம்பதாயிரம் வரை, (ரூ.50,000) வரை அவர்கள் செய்யும் பிரசார பணி, ஊர், நாடு என்பதற்கேற்றார்போல் சம்பளம் வாங்கும் இந்த தவ்ஹீது மவ்லவிகள் மேற்படி அனாச்சாரங்களை எதிர்த்துக் குரல் கொடுப்பது என்ன ஆச்சரியம்? ஈமானுடைய பலத்தினால் செய்யப்படும் பிரசாரம் அல்ல அது. காசுக்காகச் செய்யப்படும் பிரசாரம்.

அதனால்தான் அதில் உயிரோட்டம் இல்லை. அவர்களிடையேயும் ஈமானின் தெளிவு இல்லை. ஈமானுடைய தெளிவு அவர்களுக்கு இருக்குமேயானால் 1986ல் மார்க்கத்தை வைத்துப் பிழைப்பு நடத்தும் ஈனச் செயலை முறியடிக்க பல தொழில் நுட்பக் கல்வியுடன், உலகக் கல்வி, மும்மொழிக் கல்வி, இலவச மார்க்கக் கல்வி கற்பிக்கும் எமது பத்து ஆண்டு திட்டம் முறைப்படி ஆரம்பிக்க இருக்கும் தருவாயில், அதை நடக்கவிடாது தடுக்கும் நோக்கத்துடன், இந்த தவ்ஹீது புரோகிதர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வெளியேறி அவதூறு பரப்பத் துணிந்து இருப்பார்களா? தெளஹீதின் பெயரால் மீண்டும் அதே புரோகிதக் கல்வி (சம்பளத்திற்குப் பணியாற்றும் நிலை) செழிக்க மதரஸா ஆரம்பித்திருப்பார்களா? JAQH என்று தனிப் பள்ளிகள் கட்டத் துணிந்திருப்பார்களா? 1994, மே, இஸ்லாமிய மாநாட்டிற்குப் பின்னர் மீண்டும் அந்தக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த இருக்கிறோம் என்பதை அறிந்து கொண்டு, அத்திட்டம் மக்களிடையே பிரபலமாகிவிடக் கூடாது என்பதற்காக சையது அஹமது என்பவரால் மீண்டும் அவதூறு நோட்டீஸ் வெளிவர ஏற்பாடு செய்திருப்பார்களா?

புரோகிதத்தை விடாத தவ்ஹீத் பூசாரிகள் :

இவை அனைத்தையும் ஆய்ந்து பார்க்கும் போது புரோகிதமற்ற தொழிற் கல்வியுடன் கூடிய மார்க்கக் கல்வி மக்களிடையே நடைமுறைப்படுத்தப்படுவதை-தழைத் தோங்குவதை முகல்லிது மவ்லவிகளை விட இந்த தவ்ஹீது மவ்லவிகளே அதிகமாக வெறுக்கிறார்கள் என்பது புரிகிறது. காரணம் முகல்லிது மவ்லவிகளுக்குப் புரோகி தத்தைக் கொண்டு மாதம் ஆயிரம் ரூபாய் கூட கிடைக்காத நிலையில் இந்த தவ்ஹீது மவ்லவிகளுக்கு 5 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை கிடைப்பதேயாகும். இவர்கள் எப்படி புரோகிதம் ஒழிய ஒத்துழைக்கப் போகிறார்கள்? அவர்களிடமிருந்து இதை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் பின்னால் செல்லும் குர்ஆன், ஹதீஃதுக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சகோதரர்களே சுதாரிக்க வேண்டும். இந்தப் புரோகிதர்களை ஓரம் கட்ட வேண்டும். அப்போது தான் முஸ்லிம் சமுதாயம் உருப்படும். மீண்டும் அதன் உன்னத நிலையை அடைய முடியும்.

நொண்டிச் சாக்குகள் :

புரோகிதத் தொழிலை நிலைநாட்ட, அதிலிருந்து வருவாய் பெற இந்தப் புரோகிதர்கள் பல நொண்டிக் காரணங்களைச் சொல்லுகிறார்கள். அவற்றின் நிலைகளையும் பார்ப்போம். அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்கள் கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னால் அவர்களுக்கு மாதா மாதம் பைத்துல் மாலிலிருந்து (அரசு கருவூலம்) சம்பளம் கொடுக்கப்பட்டது. இதனை ஆதாரமாகக் காட்டிப் புரோகிதர்கள் வாங்கும் சம்பளத்தை நியாயப்படுத்துகின்றனர். இது தவறாகும், உண்மையில் மார்க்கப் பிரசாரத்திற்காக அவர்களுக்குச் சம்பளமாகக் கொடுக்கப்பட்டிருந்தால் அன்று மார்க்கப் பிரசாரம் செய்து கொண்டிருந்த நபி தோழர்கள் அனைவருக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோல் மக்களுக்குத் தொழ வைப்பதற் காக-இமாமத் செய்வதற்காகக் கொடுக்கப்பட்டிருந்தால் அன்று மற்ற பள்ளிகளிலும் இமாமத் செய்த இமாம்கள் அனைவருக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

அப்படிக் கொடுக்கப்படவில்லை என்பதை அவர்களும் ஒத்துக் கொள்வார்கள். பின் யார் யாருக்குச் சம்ப ளம் கொடுக்கப்பட்டது? கலீஃபா அவர்களுக்கும், மாகாண கவர்னர்களுக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டது. அதாவது மக்களின் இவ்வுலகத் தேவைகளை நிறைவு செய்வதற்காக-ஆட்சி செய்ததற்காக அவர்களுக்குச் சம்பளம் கொடுக்கப்பட்டது. அவர்கள் மார்க்கப் பிரச்சாரமும் செய்தாலும், மக்களுக்குத் தொழவைத்தாலும் சம்பளம் கொடுக்கப்பட்டதோ ஆட்சி அலுவல்களைப் பார்த்ததற்காகத்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி, காரணம் மற்றப் பிரச்சாரர்களுக்கும், இமாம்களுக்கும், முஅத் தின்களுக்கும் சம்பளம் கொடுக்கப்படவில்லை. இதிலும் இந்த ஹஜ்ரத்துகள்(?) மக்களை குர்ஆன், ஹதீஃதுக்கு முரணாக ஏமாற்றுகிறார்கள்.

முழுநேர மார்க்கப் பணி கூடுமா?

முழு நேரப் பணியாளர்களாக அவர்கள் பணி புரிவதால் அதற்காகச் சம்பளம் பெறுவதாக சப்பைக்கட்டு கட்டுவோரும் புரோகிதர்களில் உண்டு. மார்க்கப் பிரசாரம், இமாமத், பாங்கு சொல்லல், குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுத்தல், மார்க்கம் கற்றுக் கொடுத்தல் இவை எதுவுமே முழு நேரப் பணிக்குரியவை அல்ல. நபி(ஸல்) அவர்களது காலத்தில் இவை அனைத்தும் இருந்தும், முஸ்லிம்கள் மீது பொறுப்பிருந்தும் அவர்களில் யாரும் முழு நேரப் பணியாளர்களாகப் பணி புரியவில்லை. அப்படி பணி புரியும் கட்டாயம் இருந்தாலும் அதற்காகச் சம்பளம் பெறவில்லை. ஆடு வளர்த்தல் போன்ற வேறு அனுமதிக்கப்பட்ட வழிகளிலேயே தங்கள் உலகத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டார்கள். எனவே இப்பணிகளை முழு நேரம் செய்வதாகக் காரணம் கூறி அதற்குச் சம்பளம் பெறுவதும் குர்ஆன், ஹதீஃதுக்கு முரணாகும்; ஹறாம் ஆகும்.
நேரம் ஒதுக்கக் கூலியா?

இமாமத், பாங்கு சொல்வது; இதற்காக நேரம் ஒதுக்கிக் காத்துக் கிடந்து பணி புரிவதால் அதற்காகச் சம்பளம் வாங்குவதாகச் சப்பைக் கட்டு கட்டுகின்றனர். இதுவும் தவறாகும். இப்படி எல்லாம் இந்தப் புரோகிதக் கூட்டம் மார்க்கத்தைப் பிழைப்பாக்க முற்படுவார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்த நபி(ஸல்) அவர்கள் அதற்குத் தெளிவான தடை விதித்துள்ளார்கள். அதுவும் பாங்கு சொல்வதற்குக் கூலி கொடுப்ப தில்லை என்று உறுதி மொழி வாங்கியுள்ளனர்.

“முஅத்தினை நியமனம் செய்தால் எந்தவிதமான பிரதிபலனும் (கூலியோ, சம்ப ளமோ) பெற்றுக் கொள்ளாத ஒருவரை நிய மிக்க வேண்டும் என்று நபி(ஸல்) என்னிடம் இறுதியான உறுதி மொழியாக வாங்கினார்கள்” என்று உஸ்மான் இப்னு அபில் ஆஸ்(ரழி) அவர்கள் கூறினர். (அபூதாவூத், திர்மிதி)

இங்கு கவனிக்க வேண்டிய வி­யமொன்றுள்ளது. தொழவைக்க, பாங்கு சொல்ல நேரம் ஒதுக்கி வருவதுடன் அதற்காகக் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது என்பதே இந்த புரோகிதர்களின் நொண்டிச்சாக்கு. இங்கு குறிப்பாக, நபி(ஸல்) பாங்கு சொல்ப வரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதற்குப் போதிய காரணம் இருக்கிறது. பாங்கு சொல்பவர் நேரம் ஒதுக்கி முன்கூட்டியே வரவேண்டியுள்ளது. தொழ வரும் அனைவரும் பாங்கு சொல்ல வேண்டிய நிலையும் இல்லை; கடமையும் இல்லை; இப்படிப்பட்ட நிலையில் அதற்காக நேரம் ஒதுக்கி முன்கூட்டியே வந்து பாங்கு சொல்பவரே அதற்காகக் கூலி வாங்குவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளனர்.

இந்த நிலையில் இமாமத் செய்பவருக்கு, மற்றவர்களைப் போல் அவருக்கும் தொழுகை கடமை; ஜமாஅத்துடன் தொழுவதும் வலி யுறுத்தப்பட்டுள்ள நபிவழி. தொழ வரும் மற்றவர்களுக்குள்ள பொறுப்புகளே அவருக்கும் உள்ளது. தொழுகையாளிகளுள் ஒருவராக வந்து அவர் தொழுவதற்குப் பதிலாகத் தொழவைக்கிறார்; அவ் வளவுதான், மேலதிகமாக அல்லாஹு அக்பர் என்பதைச் சப்தமாகச் சொல்கிறார். பஜ்ர், மஃரிபு, இஷா ஆகிய மூன்று நேரங்களிலும் சப்தமாக “”கிராஅத்” ஓதுகிறார். முன்னவர் மீது பாங்கு சொல்வது கடமை இல்லாத நிலையில் முன்கூட்டியே வந்து பின்னவரை விடச் சப்தமாக ஐந்து நேரங்களிலும் பாங்கு சொல்பவருக்குக் கூலி கொடுப்பதையே நபி(ஸல்) அவர்கள் தடுத் துள்ளனர். இந்த நிலையில் பின்னவர் மீது கடமையான தொழுகையை தொழும்போது இமாமத் செய்வதற்குக் கூலி கொடுப் பதை நியாயப்படுத்த முடியுமா? ஒருக் காலும் முடியாது.

இமாமத் பொறுப்புக்குக் கூலியா?

“இமாமத் செய்வதால் அந்தக் குறிப்பிட்ட பள்ளிக்கு எங்கிருந்தாலும் வரவேண் டியுள்ளது. இல்லை என்றால் எங்கு வேண்டு மானாலும் எந்தப் பள்ளியிலும் தொழுது கொள்ளலாம். இந்த முயற்சிக்குத்தான் கூலி வாங்குகிறோம்” என்று வாதிப்போரும் உண்டு. இதுவும் ஏற்கத் தக்கதாக இல்லை. அல்லாஹ்விற்காக தொழுவதையும் காசாக்க வேண்டும் என்ற இந்தப் புரோகிதர்களின் மிக இழிவான புத்தி காரணமாக, கெட்ட நோக்கத்துடன் இவர்கள் உண் டாக்கி வைத்திருக்கும்-தொழுகை முடிந்த வுடனேயே-அதுவும் நபி வழிக்கு முரணாகவே-தொழுது கொண்டிருப்பவர்களுக்கு இடைஞ்சலாக குர்ஆனே ஓதக் கூடாது என்ற நபி(ஸல்) அவர்களின் தடையிருக்க-முதல் ரகாஅத்தைத் தவறவிட்டுப் பின்னால் வந்து தொழும் தொழுகையாளிகளுக்கு இடைஞ்சலாக உரத்த ஆமீன்களுடன் ஓதப்படும் ரெடிமேட் துஆவை -பித்அத்தை இந்தப் புரோகிதர்கள் விட்டு விடட்டும்.

இவர்களுக்காக மக்கள் காத்திருக்க மாட்டார்கள். தொழ வரும் யாரும் மிக எளிதாக இமாமத் செய்ய முன் வருவார்கள். தொழ வைக்க என்று கூலிக்கு மாரடிக்கும் ஒரு இமாம் தேவையிராது. “உங்களில் ஒருவர் இமாமத் செய்யட்டும்” என்ற நபி(ஸல்) அவர்களின் கட்டளை நிலைநாட்டப்படும். கூலி வாங்குவதற்கே புரோகிதத்தின் ஆணி வேராகவே இந்த ரெடிமேட் துஆவை உண்டாக்கி வைத்துள்ளனர். ஆக இப்படி இமாமத் பணிக்கு குர்ஆன், ஹதீஃதுக்கு முரணாகக் கூலி வாங்குவதற்கு இந்தப் புரோகிதர்கள் கூறும் அத்தனைக் காரணங்களும் போலியானவை; ஏற்கத்தக்கவையல்ல. இவைகளில் எதுவுமே மார்க்கத்தில் தெளிவாக ஹராமாக்கப்பட்டுள்ள கூலி வாங்கு வதை ஹலாலாக ஆக்க முடியாது. ஆக மார்க்கத்தைப் பிழைப்பாக ஆக்கிக் கொண்டவர்கள், விபச்சார விடுதி நடத்துபவர்களை விட, சாராய வியாபாரிகளை விட, வட்டி வாங்குபவர்களை விட, மிக மிகக் கேடுகெட்ட நிலையில் இருக்கிறார்கள். மறுமையில் இவர்களுக்கு நிரந்தர நரகமே என்பதே குர்ஆன், ஹதீஃத் வெளிச்சத்தில் கிடைக் கும் உண்மையாகும்.

சில ஹஜ்ரத்துகள்(?) சாராயக்கடை, வட்டிக் கடை, லாட்டரி சீட்டுக்கடை, சினிமா தியேட்டர் இப்படிப்பட்ட இடங்களுக்கெல்லாம் சென்று பாத்திஹா, மவ்லூது ஓதுவதை சிலர் ஆச்சரியமாகப் பார்ப்பதுண்டு. இங்கெல்லாம் போய் இந்த ஹஜ்ரத்(?) பாத்திஹா, மவ்லூது ஓதலாமா? என்று அங்க லாய்ப்பதுண்டு. உண்மையில் மேலே குறிப்பிட்டுள்ள ஈனச் செயல்களை விட கேடுகெட்ட ஈனச் செயலிலேயே இந்த ஹஜ்ரத்மார்கள்(?) மூழ்கி இருக்கிறார்கள் என்ற உண்மையை அறியாத மக்களே இப்படி அங்கலாய்ப்பார்கள். காரணம் அவர்களுக்கு குர்ஆன், ஹதீஃதில் போதிய ஞானம் இல்லை. மார்க்கப் பணிக்குக் கூலி வாங்குவதைத் தடுத்து வந்துள்ள குர்ஆன் வசனங்களையும், ஹதீஃத்களையும் அவர்கள் அறியமாட்டார்கள். குர்ஆன், ஹதீஃதை முறைப்படி விளங்கியவர்கள் மட்டுமே இந்தப் புரோகிதர்களின் மிகக் கேவல நிலை யைப் புரிய முடியும்.

எச்சரிக்கை:

இவ்வாறு நாம் எழுதியுள்ளதால் வட்டி, சாராயம், லாட்டரி சீட்டு, சினிமா இவற்றை நாம் ஆதரித்து சரி கண்டுள்ளதாக இந்த மவ்லவிகள் மக்களிடம் சரடு விடுவார்கள். காரணம் அந்த அளவு கல்மனம் படைத்தவர்கள் அவர்கள், மார்க்கத்தைக் கொண்டு வயிறு வளர்ப்பது மேற்படி ஹறாம்களை விட கொடிய ஹராம் என்றே இங்கு சுட்டிக் காட்டியுள்ளோம்.

வழிகேட்டின் ஒட்டுமொத்த உருவம்:

மேலே குறிப்பிட்டுள்ள ஹராம்களைச் செய்கிறவர்கள் சமுதாயத்தின் ஒரு பகுதியை அல்லது ஒரு சில பகுதியைச் சீரழிக்கும் நிலையில் இருக்கிறார்கள் என்றால், மார்க்கத்தைக் கொண்டு வயிறு வளர்ப்பவர்கள்-புரோகிதர்கள் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் சகல துறைகளிலும் சீரழிக்கும் நிலையிலிருக்கிறார்கள் என்பதை அவர்களால் மறுக்க முடியுமா? இன்று முஸ்லிம் சமுதாயம் சீரழிவின் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறதென்றால் அதற்கு மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக் கொண்ட இந்தப் புரோகிதர்கள்தான் காரணம் என்பதை யாரால் மறுக்க முடியும்?

எது அன்பளிப்பு?

புரோகிதத்திற்குக் கூலி என்பதில் இந்தப் புரோகிதர்களின் வாதங்கள் அனைத்தும் முடக்குவாதங்கள் ஆகிப்போன பின், சிறிது கீழிறங்கி மக்கள் அவர்களாக விரும்பி எங்க ளுக்கு அன்பளிப்பாகத் தருகிறார்கள் என்று நியாயப்படுத்துகின்றனர். இது அன்பளிப் பின் இலக்கணம் விளங்காது பிதற்றுவதாகும். நபி(ஸல்) அவர்களது காலத்தில் ஜகாத் வசூலித்து வந்த ஒருவர் அவற்றில் சிலவற் றைப் பிரித்து எடுத்து இவை எனக்கு அன்ப ளிப்பாகக் கொடுக்கப்பட்டவை என்று கூறி னார். நபி (ஸல்) அவர்கள் அவற்றைப் பிடுங்கி ஜகாத் பொருள்களுடன் போட்டு விட்டு “நீர் உமது வீட்டில் போய் இருந்து கொள்ளும்; யார் அன்பளிப்புத் தருகிறார் கள் பார்ப்போம்” (புகாரீ 9:305) என்று எச் சரித்தார்கள்.

அதேபோல இவர்கள் பிரசாரம், இமாமத், பாங்கு சொல்லல், குர்ஆன் ஓதிக் கொடுத்தல், மார்க்கம் கற்றுக் கொடுத் தல் போன்ற பணிகளைச் செய்யாமல் வீட்டில் இருந்து கொள்ளட்டும். மக்கள் அன்பளிப்புக் கொடுக்கிறார்களா என்று பார்ப்போம். அன்பளிப்பு என்பது எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி ஒருவருக்கொருவர் அன்பை அதிகரித்துக் கொள்ள ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்வதாகும். மக்களிடமிருந்து அன்பளிப்புகளை வாங்கும் இந்தப் புரோகிதர்கள் மக்களுக்கு அன்பளிப்புக் கொடுக்கின்றனரா? இல்லையே?

இந்தப் புரோகிதர்கள் மக்களிடமிருந்து அன்பளிப்பு என்று வாங்குவதும் ஒரு வகையில் லஞ்சமேயாகும். மக்கள் விரும்பிக் கொடுப்பதால் அவை லஞ்சத்திற்கு அப்பாற்பட்டதாக ஆகிவிடாது. சில காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் நோக்கத்துடன் மக்கள் அதிகாரிகளுக்கு விரும்பித்தான் அன்பளிப்பு என்ற பெயரால் லஞ்சம் கொடுக்கின்றனர். இது நியாயமாகி விடுமா? இதைப்போல் அப்பாவி மக்கள் இந்தப் புரோகிதர்களுக்கு அன்பளிப்புக் கொடுத்து விட்டால், இந்தப் புரோகிதர்கள் அவர்களை நல்லமல்கள் செய்யாமலேயே சொர்க்கத்தில் கொண்டு சேர்த்து விடுவார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில்தான் அன்பளிப்புகளை அள்ளி அள்ளிக் கொடுக் கின்றனர். அப்படிப்பட்ட குருட்டு நம்பிக்கையை பல இட்டுக் கட்டப்பட்ட கட்டுக் கதைகளைக் கூறி மக்களது உள்ளத்தில் உறையச் செய்துள்ளனர் இந்தப் புரோகிதர் கள். எனவே புரோகிதர்கள் என்ற அடிப்படையில் மக்களிடமிருந்து இந்தப் புரோகி தர்கள் அன்பளிப்பு என்று பெறுவதும் லஞ்சமே! ஹராமேயாகும்.

ஜகாத் பெறும் முறை என்ன?

கூலி, அன்பளிப்பு என்ற வாதங்கள் அனைத்தும் அடிபட்டுப்போன பின் கடைசியாக நாங்கள் ஏழைகள்; ஜகாத் நிதியிலிருந்து எங்களுக்குரிய பங்கையே மக்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறோம்; இது எப்படி ஹராமாகும்? என்று கேள்விக் கணை தொடுக்கின்றனர். ஏழைகள் என்ற நிலையில் ஜகாத் பெறுவதற்கு இவர்கள் உரிமையுடையவர் கள் என்பதை நாமும் மறுக்கவில்லை. ஏழைகள் என்ற நிலையில் மற்ற ஏழைகளுக்கொப்ப ஜகாத் நிதி பெறுவதில் தவறில்லை. ஆனால் இங்கும் அவர்கள் மார்க்கப் பணி புரிகிறார்கள், இமாமத் செய்கிறார்கள், பாங்கு சொல்கி றார்கள், குர்ஆன் ஓதிக் கொடுக்கிறார்கள், மார்க்கம் கற்றுக் கொடுக்கிறார்கள் என்ப தைக் காரணம் காட்டி ஜகாத் நிதியிலிருந்து கொடுப்பது எப்படி முறையாகும்? அதுவும் மாதா மாதம் குறிப்பிட்ட ஒரு தொகையை பெற்றுக் கொள்வது எப்படி ஜகாத் ஆகும்? இந்தத் தொகை கொடுப்பது கொண்டு அவர்கள் ஒழுங்காக வந்து இமாமத் செய்கிறார்களா? பாங்கு சொல்கிறார்களா? ஓதிக் கொடுக்கிறார்களா? என்று எப்படிக் கண் காணிக்க முடியும்? இது முறையா?

அந்நியர்கள் மார்க்கத்தில் மூக்கை நுழைக்க வழிகாட்டி யார்?

அவர்களது உரிமையான ஜகாத் பணத் தைப் பெறுவதற்கு இந்த நிபந்தனைகள் ஏன்? உண்மையில் ஜகாத் பணம் கொடுக்கப்படவில்லை. அவர்களது பணிக்கு கூலி யாகக் கொடுக்கப்படுகிறது என்பது புரிகிறதா? இல்லையா? அன்பளிப்பாக, ஜகாத்தாக இருந்தால் எங்களுக்கு மாதாமாதம் இவ்வளவு கொடுத்தே தீரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரை போய் வழக்குத் தொடுத்துத் தீர்ப்புப் பெற்றிருக்க முடியுமா? மார்க்கத்தைப் பாதுகாக்கப் பொறுப் புள்ளதாகச் சொல்லிக் கொள்ளும் இந்த முல்லாக்களே உச்சநீதிமன்றம் சென்று குர்ஆன், ஹதீஃதுக்கு முரணான சம்பள வி­யமாக ஹராமான வழியில் தீர்ப்புப் பெற்றிருக்கையில், ஒரு ஷாபானு, ஒரு அப்துல் காதிர் நீதிமன்றம் சென்று குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக தீர்ப்பு பெற நாடுவதையும், அதைக் காரணம் காட்டி உச்சநீதிமன்றம் “யூனிபோர்ம் சிவில் கோட்” என்று மற்றவர்களை முறுக்கிவிடுவதையும் எப்படிக் குறை சொல்ல முடியும்? முஸ்லிம் சமுதாயம் இதை எல்லாம் பெருங் குற்றமாகவும், அதே சமயம் இந்த முல்லாக்கள் சம்பள விஷயமாக உச்சநீதிமன்றம் சென்றதைச் சாதாரண வி­யமாகவும் கருதுவ தற்கு காரணம், முல்லாக்கள் பெறும் கூலி இவை அனைத்தையும் விட கொடிய ஹராம் என்பதை அவர்கள் அறியாததேயாகும்.

மேலும் இன்று உச்சநீதிமன்றம் சென்று சந்தி சிரிக்கும் நிலையிலிருப்பவை குர்ஆன், ஹதீஃத் சட்டமல்ல. குர்ஆன், ஹதீஃத் பெயரால் இந்த முல்லாக்கள் தங்கள் சுய நலத்திற்காக உண்டாக்கி வைத்திருக்கும் “முஹம்மடன்லா’ என்ற மத்ஹபுகளின் சட்டங்களே. அவற்றிலே தான் ஒர நேரத்தில் 3 தலாக் சொன்னாலும் அது செல்லும்; கணவன், மனைவி உறவு முறிந்து விடும் என்ற அறிவுக்கே பொருந்தாத கணவன், மனைவி உறவை கணவனின் வீட்டோ அதிகாரமாக்கி வைத்திருக்கும் அலங்கோலத்தை எல்லாம் பார்க்க முடியும். அதிக சம்பளம்-கூலி வேண்டி உச்சநீதிமன்றம் சென்றவர்கள் அன்பளிப்பு, ஜகாத் பணம் என்றெல்லாம் கூறி மழுப்புவது வெறும் கண்துடைப்பே! மக்களை ஏமாற்றவே!

தெளஹீது மவ்லவிகளுக்குப் பல ஆயிரக்கணக்கில் ஜகாத் நிதியிலிருந்து கொடுக்கப்பட்டாலும், அதற்காக அவர்கள் விதித்திருக்கும் நிபந்தனைகள் உண்மையில் அவர்களது பிரசார பணிக்குரிய கூலியாக ஆகிவிடுகிறது. இவர்கள் வாங்கும் இந்த பணத்திற்காக மாதா மாதம் இவர்கள் செய்யும் பணி குறித்து தெளிவாக எழுதி கையயழுத்திட்டு இவர்கள் பொறுப்பு சாட்டப்பட்டிருக்கும் முதீருக்கு (அதிபர்) அனுப்ப வேண்டும். இதற்காகப் பாடம் நடத்தாமலேயே பாடம் நடத்தியதாகவும், செய்யாத பிரசாரத்தை செய்ததாகவும் எழுதி கையயழுத்திட்டு அனுப்புவோரும் உண்டு. இப்படி வாங்குவது கூலி இல்லாமல் எப்படி ஜகாத் நிதியாகும்? அல்லாஹ்வுடைய பாதையில் பாடுபடுகிறவர்களுக்கு ஜகாத் நிதியிலிருந்து கொடுப்பதை நாம் மறுக்கவில்லை. குர்ஆன், ஹதீஃத் தாராளமாகவே அனுமதிக்கிறது. ஆனால் அல்லாஹ்வுடைய பாதையில் கூலி எதையும் எதிர்பாராமல் இஃலாசுடன் அல்லாஹ்வின் பொருத்தம் மட்டும் நாடி பாடுபட வேண்டும். ஜகாத் நிதியிலிருந்து கொடுப்பவர்களும் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி எவ்வித நிபந்தனைகளுமின்றிக் கொடுக்க வேண்டும்.

அப்போதுதான் ஜகாத் நிதியிலிருந்து அவர்களுக்குரிய பங்கைக் கொடுத்ததாக ஆகும். நடப்பதோ அப்படியல்ல. அவர்க ளின் மதரஸாவில் ஓதி பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் எதை நேரான வழியாக-கொள்கையாகக் கொண்டிருக்கிறார்களோ அதையே மார்க்கமாகப் பிரசாரம் செய்யவேண்டும். அவற்றில் சில குர்ஆன், ஹதீஃதுக்கு முரணாக இருந்தாலும் கண்டுகொள்ளக்கூடாது. ஜகாத் பணத்தைக் கொடுப்பவர்களின் தவறுகள் சுட்டிக்காட்டப்படக்கூடாது; இப்படிப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையிலேயே கொடுக்கப்படுகிறது. இப்படி வாங்குவது கூலி அல்லாமல் வேறு என்னவாம்?

அந்நஜாத்திற்கு சந்தா கூலி இல்லையா?

கூலி, அன்பளிப்பு, ஜகாத் பணம் என்ற வாதங்களெல்லாம் அடிபட்டுப் போனபின் கடைசியாக நீங்கள் அந்நஜாத்திற்கு சந்தா வாங்குகிறீர்களே? இது மட்டும் மார்க்கப் பிரசாரத்திற்குக் கூலி வாங்குவது ஆகாதா? என்று கேட்டு தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்வார்கள் இந்தப் புரோகிதர்களும், அவர்களது அபிமானிகளும் இது விதண்டாவாதமேயாகும். “உங்களது தேவைகள் குறித்து அல்லாஹ்விடமே உதவி தேடுங்கள்; இறந்துபோன அவுலியாக்களின் கபுருகளில் போய் உதவி தேடாதீர்கள்” என்று குர்ஆன், ஹதீஃதின் தெளிவான போதனையைச் சொல்லும்போது அதை எதிர்த்துச் சொல்லும் வாதங்கள் எல்லாம் அடிபட்டுப் போனபின், “நீங்கள் மட்டும் டாக்டர்களிடம் போய் உதவி தேடுகிறார்களே? வக்கீலிடம் போய் உதவி தேடுகிறீர்களே?” என்று தர்கா சடங்குகளை நியாயப்படுத்துவோர் கேட்கும் கேள்வி போன்றதே இதுவும். அல்லாது இமாம்களான அபூ ஹனீஃபா, ஷாஃபி, ஹன்பல், மாலிக் (ரஹ்-ம்) போன்றவர்களை “தக்லீது’ செய்யாதீர்கள் என்று குர்ஆன், ஹதீஃத் போதனை களை எடுத்துச் செல்லும்போது, முகல்லிதுகள். “நீங்கள் மட்டும் இமாம்களான புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ(ரஹ்-ம்) போன்றோரை “தக்லீது’ செய்கிறீர்களே?” என்று கேட்கும் கேள்வி போன்றதே இதுவும். சுய சிந்தனையற்ற மக்கள் இப்படிப்பட்ட கேள்விகளில் மயங்கி வழிகேட்டில் செல்லலாம். ஆனால் நிதானித்துச் சிந்திப்பவர்கள் உண்மை எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

கடமையானதற்குக் கூலி கூடாது!

அல்லாஹ் முஸ்லிம்கள் மீது எதை விதித்திருக்கிறானோ, கடமையாக்கி இருக்கிறானோ, மறுமையில் கூலி தருவதாக வாக்க ளித்திருக்கிறானோ அந்தச் செயல்களைச் செய்துவிட்டு அவற்றிற்கு இங்கு கூலி வாங்குவது பற்றியே நமது மறுப்பெல்லாம். காரணம் அதையே குர்ஆனும், ஹதீஃதும் மறுக்கின்றன. தனது தாய் மொழியையோ, அல்லது வேறு மொழிகளையோ கற்றுக்கொள்வது கடமையல்ல. மொழியைக் கற் றுக் கொள்வது கடமையாக இருந்தால், நபி(ஸல்) அவர்கள் எழுதப் படிக்கக் கற்றி ருப்பார்கள். நபித் தோழர்கள் அனைவரும் எழுதப் படிக்கக் கற்றிருப்பார்கள். மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்வது கடமையில்லாத நிலையில், மார்க்கத்தைக் கற்றுக் கொள்வது அவர்கள் மீது கடமையாக இருந்தது. அந்த மார்க்கத்தை மற்றவர்களுக்குப் போதிப்பதும் கடமையாக இருந்தது. அரபு மொழியோ, அல்லது வேறு மொழிகளோ கற்றவனுக்கு மறுமையில் அதிக நன்மையுண்டு. கல்லாதவனுக்கு நன்மை இல்லை என்று குர்ஆனிலோ, ஹதீஃதிலோ இல்லை.

அதே சமயம் மார்க்கத்தைக் கற்றவன் மறுமையில் உயர்ந்த பதவிகளை அடைவான்; கல்லாதவன் தோல்வியடைந்து நரகில் புகுவான். மொழியைக் கொண்டு மறுமை யில் உயர்ந்த பதவிகள் இருக்குமானால் அந்த மொழிகளில் எதனையுமே எழுதப் படிக்கத் தெரியாத நபி (ஸல்) அவர்களுக்கு மிக உயர்ந்த பதவிகள் எப்படிக் கிடைக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். எனவே ஒரு மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்வது மறுமையில் கூலி கிடைக்கும் என்பதற்காக அல்ல.

கடமையில்லாததற்குக் கூலி தடையில்லை:

எனவே அப்படிப்பட்ட ஒரு மொழியைக் கற்று அதனை இவ்வுலகில் கூலி பெற பயன்படுத்தினால் அது தடுக்கப்பட்டதல்ல. அதுவும் பிரசாரம் தான் என்ற வாதம் எடு படாது. ஒரு சிலர் புரோகிதத்திற்குக் கூலி வாங்குவதை நியாயப்படுத்த இப்படியும் வாதம் செய்யலாம். எழுதப்படிக்கத் தெரி யாதவரை அவனுக்கு எழுத்து வழி பிரசாரம் கடமையில்லாமல் இருக்கலாம். எழுதப் படிக்கத் தெரிந்துவிட்டால் அதுவும் கடமையாகி விடுகிறது; எது போன்றது என் றால் ஒருவனுக்குப் பணமும், உடல் ஆரோக்கியமும் இல்லாதவரை ஹஜ் கடமையல்ல; அதே சமயம் பணமும், உடல் ஆரோக்கியமும் அடையப் பெற்றால் அவன் மீது ஹஜ் கடமையாவது போல் என்று மக்களை திசை திருப்பலாம்.

இதுவும் தவறு. பணமும், உடல் ஆரோக்கியமும் மனித முயற்சியால் மட்டும் அடைந்து விடுபவையல்ல. ஒருவன் அளவு கடந்த ஆர்வத்துடன் அயராது இரவு பகல் பாடுபட்டாலும் அவன் செல்வந்தனாக முடியும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. இது அல்லாஹ்வின் நாட்டத்திலுள்ளது. அதே சமயம் ஒருவன் ஆர்வத்துடன் தினசரி சில மணித்துளிகளைச் செலவிட்டாலும் போதும், அவன் விரும்பும் மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ள முடியும். இங்கு மனிதனின் முயற்சியின்மையே அன்றி வேறு காரணமில்லை. மொழியைக் கற்றுக் கொள்வது கடமை என்றிருக்குமானால் அன்று நபி(ஸல்) அவர்கள் அனைவரையும் அரபு மொழியைக் கற்றுக் கொள்ளச் செய்திருக்க முடியும். நபி(ஸல்) அவர்களின் கட்டளையின் பேரில் ஒரு நபித்தோழர் அந்நிய மொழி ஒன்றினை ஒரு சில நாட்களில் கற்று சாதனை படைத்தது இங்கு நினைவு கூறத்தக்கது.

எனவே அல்குர்ஆனை கையால் எழு தியோ, அல்லது பிரிண்ட் செய்தோ புத்தக வடிவில் விற்பது, அரபு மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்து கூலி பெறுவது, அரபு மொழியிலுள்ள நூல்களை வேறு மொழிகளில் மொழி பெயர்ப்பது, அச்சடித்து விற்பது, குர்ஆன், ஹதீஃத் போதனைகளை அச்சடித்து விற்பது, அந்நஜாத், அல்ஜன்னத், அல்முபீன், அல்ஹக், ரஹ்மத் போன்ற பத்திரிகைகளை, அச்சிட்டு விற்பது, அவற்றின் ஆசிரியப் பணிக்காகக் கூலி வாங்குவது, ஆடியோ, வீடியோ கேஸட்டுகளில் பதிவு செய்து விற்பது இவை அனைத்தும் ஆகுமானதே. இவை குர்ஆன், ஹதீஃ துக்கு முரணான செயல்கள் அல்ல.

நபி(ஸல்) மன்னர்களுக்கு கடிதம் எழுது வித்ததை ஆதாரமாகக் காட்டி, அதற்கு அவர்கள் கூலி வாங்கவில்லையே? அதனால் பத்திரிகைகளுக்குச் சந்தா வாங்குவது கூடாது என்று வாதிப்போரும் உண்டு. எழு தப்படும் கடிதத்திற்கும், அச்சிட்டு வெளியிடப்படும் நூல்களுக்குமுள்ள வேறுபாடு தெரியாத பித்துக்குளிகளே இப்படிக் கேட்க முடியும்.

ஆகுமான வியாபாரத்தைக் காட்டி ஹராமான வட்டியை நியாயப்படுத்த ஷைத்தான் தூண்டுவது போல், இங்கும் ஆகுமான இவற்றைக் காட்டி ஹறாமான மார்க்கத்தை பிழைப்பாக்குவதை நியாயப்படுத்த ஷைத்தான் தூண்டுகிறான் என்பதே உண்மையாகும்.

மார்க்கப் பிரசாரம் செய்வது கடமை. அதே சமயம் தன் சக்திக்கு உட்பட்டு மட்டுமே தன் கைகளிலிருந்து செலவழிக்க முடியும். எனவே அந்த எல்லைக்குள் அவன் அடையும் மக்களிடையே மட்டுமே பிரசார பணி செய்யக் கடமைப்பட்டிருக்கிறான். தன்னால் சுமக்க முடியாத சுமையை சுமந்து கொண்டு பணம் செலவழித்துக் கொண்டு தொலைதூரங்களுக்குச் சென்று பிரசாரம் செய்வது கடமையல்ல. ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு அல்லாஹ்வின் அருளை (பொருளை) அடைவதற்காக தொலை தூரம் சென்றால் அங்கும் பிரசாரம் செய்வது கடமை. ஆனால் பிரசார பணிக்கென்று தன்னால் முடியாத நிலையில் பணம் செலவழித்துச் செல்வது கடமையல்ல. எந்த ஓர் ஆன்மாவையும் அதன் சக்தி மீறி அல்லாஹ் சோதிக்க மாட்டான். (அல்குர்ஆன் 2:286)

ஆயினும் ஒருவரின் பேச்சுவன்மை, திறமை காரணமாக பல ஊர்களுக்குப் பிரசார பணிக்கென்றே அழைக்கிறார்கள். தன் குடும்ப நிர்வாகத்திற்குப் பாதிப்பில்லாமல் செல்லலாம். அப்படிச் செல்லும்போது போக்குவரத்துச் செலவுகளைப் பெற்றுக் கொள்வதும் கூலி பெறுவது ஆகாது. அங்கும் பிரசார பணிக்கென்று தனக்குக் கூலி வாங்குவது கூடாது. தன்மீது கடமையானதைச் செய்யக் கூலி வாங்குவது தடுக்கப்பட்டுள்ளதேயல்லாமல், கடமையில்லாத ஒன்றைச் செய்வதற்குக் கூலி வாங்கக் கூடாது என்று நேரடித் தடையில்லாத விஷயங்களில் கூலி வாங்குவது அனுமதிக்கப்பட்டதே.

இதனை ஓர் உதாரணம் மூலம் விளங்கு வோம். ஓர் அரசு அலுவலகத்தில் பணி புரியும் ஒரு அதிகாரி தன் பொறுப்பிலுள்ள ஒரு காரியத்தை ஒருவருக்கு முடித்துக் கொடுக் கிறார். இது அவரது கடமை. இதற்காக அந்த நபரிடம் பணம் பெறுவது கூடாது. இது லஞ்சமாகும். அதே சமயம் அந்த நப ருக்கு வேறொரு அரசு அலுவலகத்தில் ஒரு காரியம் ஆக வேண்டியதிருக்கிறது. அது பற்றிய விபரம் தனக்குத் தெரியாது என்றும், மேற்படி அதிகாரியே வந்து அதை முடித்துக் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறுகிறார்.

அந்த அதிகாரியும் தான் ஆற்ற வேண்டிய பணிகளுக்கு எவ்வித பங்கமும் இல்லாமல், தனக்குள்ள ஓய்வில் அவரோடு அந்த குறிப்பிட்ட அலுவலகத்திற்குச் சென்று அக்காரியத்தை முடித்துக் கொடுக்கிறார். இதற்காக அந்த நபர் இந்த அதிகாரிக்குப் பணம் கொடுக்கிறார். இது லஞ்சம் ஆகுமா? ஒருபோது ஆகாது. இந்தப் பணத்தை தாராளமாக அவர் அடையலாம். அதே சமயம் அந்த குறிப்பிட்ட அலுவலகத் திலுள்ள சம்பந்தப்பட்ட அதிகாரி தனது கடமையைச் செய்துவிட்டு அதற்காக இந்த நபரிடம் பணம் வாங்கினால் அதுவே லஞ்சத்தில் சேரும். இந்த வித்தியா சத்தைப் புரிந்து கொண்டால் மார்க்க விஷயத்தில் தன் மீது கடமையான பிரசார பணி மற்றும் கடமைகளுக்குக் கூலி வாங்குவதற்கும், தன் மீது கடமையில்லாத பணிகளுக்குக் கூலி வாங்குவதற்குமுள்ள வித்தியாசம் புரிந்து விடும்.

எனவே மார்க்கப் பிரசாரத்திற்கு, இமா மத் செய்ய, பாங்கு சொல்ல, குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுக்க, மார்க்கம் கற்றுக் கொடுக்க கூலி வாங்குவதை நியாயப்படுத்த இறுதியாக எடுத்து வைத்த இந்த வாதமும் அடிப்பட்டுப் போகிறது. எனவே புரோகி தத்தை வைத்து வயிறு வளர்ப்பது, உலக வாழ்க்கையை வசதியாக ஆக்கிக் கொள்வது மிகக் கடுமையான ஹறாமாகும். எனவே அப்படிப்பட்டவர்கள் மக்களுக்கு நேர்வழி காட்ட முடியாது. மக்கள் இந்தப் புரோகிதர்கள் பின்னால் செல்லுவது மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்குவதாகும். நரகத்தில் வீழ்வதை யாரும் தடுக்க முடியாது. எல்லாம் வல்ல அல்லாஹ் சமுதா யத்தை இந்தப் புரோகிதர்களின் பிடியிலி ருந்து விடுவித்து ஈடேற்றத்தைத் தந்தருள்வானாக.

குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்களைக் கொண்டு மார்க்கத்தைப் பிழைப்பாக ஆக்குவது கொடிய ஹராம் என்பதை இவ்வளவு தெளிவாக விளக்கியும், அப்படியானால் அவர்கள் எப்படிச் சாப்பிடுவார்கள்? அவர்களின் மனைவி மக்கள் மண்ணையாதின் பார்கள்? என்று கேட்பவர்களே அதிகமாக இருக்கிறார்கள். அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று இந்த ஹஜ்ரத் மார்களைப் பற்றிய பக்தி அந்த அளவு ஊட்டப்பட்டு அவர்களின் உள்ளங்களில் உறைந்து போயிருக்கிறது. அடுத்து இரண்டாவது மார்க்கத்தைப் பிழைப் பாக்குவதின் கெடுதி பற்றி இந்த மவ்லவிகள் அடிக்கடி ஆரம்பத்திலிருந்தே சொல்லி மக்களை உணரச் செய்யாததாகும்.

மக்களின் அறியாமை காரணமாக குற்றம் இலேசாகிவிடாது. வட்டித் தொழில் நடத்துபவன், சாராய வியாபாரி தனது தொழிலை விட்டு வேறு ஹலாலான தொழில் தேட வேண்டும் என்று சொல்லும்போது அதைச் சரிகாணும் மக்கள், மார்க்கத்தைப் பிழைப்பாக்குவதை விட்டு இந்த ஹஜ்ரத்துமார்கள் வேறு தொழில் பார்க்க வேண்டும் என்பதை மட்டும் உணர்வதாக இல்லை. மக்கள் உணர்கிறார்களோ இல்லையோ, மார்க்கத்தைப் பிழைப்பாக்குவது ஹறாம்களில் கொடிய ஹராமாகும். இதை விட அல்குர்ஆனில் கண்டிக்கப்பட்டுள்ள வேறு விஷயம் எதுவும் இல்லை. அதனால்தான் இந்த மவ்லவிகளும், அவர்களது அபிமானிகளும் வெறுத்தலும் சரி, கரித்துக் கொட்டினாலும் சரி, சத்தியத்தை மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்துவிடுவது என்று முடிவு செய்து இக்கட்டுரையை வெளியிட்டுள்ளோம்.

எமது இந்தக் கருத்துக்கள் குர்ஆன், ஹதீஃதுக்கு முரணாக இருந்தால் ஆதாரங்களுடன் அவர்கள் எடுத்துத் தருவார்களாக. உண்மை இருப்பின் ஏற்றுக் கொள்கிறோம். இல்லை என்றால் மவ்லவி வர்க்கம் மார்க்கத்தைப் பிழைப்பாக்குவதை விட்டு, வேறு ஹலாலான தொழில்களைத் தேடிக் கொள்வதே ஏற்றமாகும். அதுவே அவர்களை மறுமையில் நரகத்தை விட்டும் காப்பாற்றும், அவர்களை மட்டுமல்ல; அவர்களை நம்பி மோசம் போய் நரகத்தில் விழக் காத்திருக்கும் எண்ணற்ற முஸ்லிம்களுக்கும் நரக விடுதலை கிடைக்கக் காரணமாகும். இந்தப் புரோகிதர்கள் அற்ப இவ்வுலக சுகத்தை நோக்கமாகக் கொண்டு மறுமையை மறந்து செயல்பட்டாலும், அவர்களை நம்பி அவர்கள் பின்னால் செல்லும் பொது மக்களாவது, தங்களின் நிலையை விளங்கி திருந்த முன்வர வேண்டும். அல்லாஹ் அருள்புரிவானாக.

***************************************************************************

உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

பாடம் கற்பார்களா முஸ்லிம்கள்?

அஹமது இப்ராஹீம், புளியங்குட

பாபர் மஸ்ஜித் இராமர்கோவில் விவகாரத்தில் ஆரம்ப நிலையை கவனித்தால் ஓர் உண்மை விளங்கும்.

இஸ்லாமிய மார்க்கத்தில் ஐந்து நேரத் தொழுகையானது மிக மிகக் கட்டாயக் கடமை என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல. இந்துக்களுக்கும் நன்றாகத் தெரியும்.

இந்நிலையில் பாபரி மஸ்ஜிதில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் ஜும்ஆ தொழுகைக்காக கூடுவது, மற்ற நாட்களில் தொழுவதில்லை என்ற நிலை தொடர்ந்து வந்துள்ளது. இந்தக் காட்சியை இன்று வரை நாம் நமது நாட்டில் பரவலாகப் பார்க்கின்றோம். இதே நிலையில்தான் அயோத்தியில் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் பள்ளிவாசல் காலியாக இருப்பதைக் கண்ட காவிப் பயங்கரவாதிகள் திடீரென இராமர் சிலையை பள்ளிவாசலுக்குள் கொண்டு வைத்து வழிபாடு செய்ய ஆரம்பித்ததன் விளைவும் அப்போதிருந்த ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் காவிகளுக்கு சாதகமாக இருந்தததும் இதையே காவிகள் அரசியலாக்கி இன்று ஒரு பலமிக்க காவி அரசு ஏற்படுவதற்கு காரணமாக இருந்துள்ளது.

மேலும் முஸ்லிம் மதவாதத் தலைவர்களும் அல்குர்ஆனையும் நபி(ஸல்) அவர்களின் வழிமுறையை பின்பற்றாமல், அதற்கு எதிராக போராட்டம், ஆர்ப்பாட்டம் என காவிகள் விரித்த வலையில் விழுந்து பெரும்பான்மையான இந்து சமுதாய மக்களை காவிகளுக்கு ஆதரவாகத் திருப்பியும் தங்கள் தங்கள் இயக்கங்களை வளப்படுத்திக் கொண்டனர். முடிவு 1992 டிசம்பர் 6ல் மஸ்ஜித் இடிக்கப்பட்டது, நம்முடைய பெண்களின் கற்பு சூரையாடப்பட்டது, பல உயிர்கள் கொல்லப்பட்டன, சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

இந்த நிலை வரக்கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலான ஹுதைபியா உடன்படிக்கையை பின்பற்றி பாபரி மஸ்ஜிதை இந்துக்களிடமே விட்டுக் கொடுத்துவிடுங்கள். இதன் மூலம் காவிகளின் வளர்ச்சியை தடுத்து விடலாம். கலவரம் வராமலும் தடுக்கலாம் என்ற யோசனையை அந்நஜாத் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் அவர்கள் பாபர் மஸ்ஜித் இடிபடுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் எடுத்து வைத்தார்கள். முஸ்லிம் மதவாதத் தலைவர்களும் அவர்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் முஸ்லிம் பெயர் தாங்கிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு இடிக்கப்பட்ட பள்ளியில் இராமர் கோவில் கட்ட உத்தரவிட்டுள்ளது.

இந்த அநீதியான தீர்ப்பைக் கேட்ட பெரும்பான்மை இந்துக்கள் முஸ்லிம் சமுதாயத்தின் மீது அனுதாபம் காட்டுகின்றனர். இதை அன்றே நாமாக நபிவழியை பின்பற்றி விட்டுக் கொடுத்திருந்தால் ஹுதைபியா உடன்படிக்கை முடிந்த இரண்டு ஆண்டுகள் கழித்து கத்தியின்றி இரத்தமின்றி மக்கா மாநகர் இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்ட மாதிரியே இந்தியாவில் இஸ்லாம் வேகமாக வளர்ந்திருக்கும்.

இறுதியாக உச்சநீதிமன்றத் தீர்ப்பானது இராமர் கோவிலை வைத்து அரசியல் செய்த காவிகளுக்கு இனி இராமர் கோவிலை வைத்து அரசியல் செய்ய முடியாதபடி ஆப்பு வைத்து விட்டது. அதேபோல் அப்பாவி முஸ்லிம்களை தூண்டி விட்டு தங்கள் இயக்கங்களை வளர்த்து தாங்களும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இயக்கங்களுக்கும் இந்தத் தீர்ப்பு ஒரு ஆப்பு.

இந்தத் தீர்ப்புக்குப்பின் நாடு முழுவதும் நிலவும் முஸ்லிம்களின் அமைதியானது அநேக இந்துக்களை இஸ்லாமிய மார்க்கத் தின் பால் கவர்ந்திழுத்திருக்கின்றது. இனி காவிகள் இதுபோன்று மற்றப் பள்ளிவாசல்கள் மீது கைவைத்தால் இந்துக்களே காவிகளை விரட்டி அடித்து இந்தியாவை பாதுகாப்பார்கள். அந்த அளவுக்கு முஸ்லிம்களின் அமைதித் தன்மை மற்ற இந்து மக்களை சிந்திக்க வைத்துள்ளது. இந்த நேரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முஹைதீன் அவர்களின் அறிக்கை முஸ்லிம்களை மேலும் அமைதி காக்க வைத்தது. அதேபோல் ஆர்ப்பாட்டம், போராட்டம் என அப்பாவி முஸ்லிம்களை தூண்டும் இயக்கவாதிகளை முஸ்லிம்களும் முற்றாக விரட்டி அடிக்கவேண்டும்.

இப்படி காவிகளும் இயக்கவாதிகளும் இல்லாத இந்தியா ஓர் தன்னிறைவு பெற்ற இந்தியாவாக, சீனாவையும், அமெரிக்காவையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு உண்மையான ஒளிரும் இந்தியாவாக உருவெடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. எல்லாம் வல்ல அல்லாஹ் இந்து முஸ்லிம் மதவாதத்தை ஒழித்து தூய இஸ்லாமிய மார்க்கத்தை அதாவது அல்குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் உண்மையான ஆதாரப்பூர்வமான வழிமுறையை இந்திய மக்கள் அனைவருக்கும் கிடைக்க அருள் புரிவானாக.

***************************************************************************

 ஆதிகால வேதங்களும்! இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்!!

M.T.M. முஜீபுதீன், இலங்கை

2019 நவம்பர் மாத தொடர்ச்சி…..

உலக வரலாற்றை ஏளனமாக பேசினார்கள், பின்னோக்கி பார்த்தோமென்றால் முன்னைய ஆட்சியாளர்கள் மக்களை வழி நடத்திய முறைகளை அறிந்து கொள்ளலாம். அன்று இப்ராஹீம்(அலை) அவர்கள் இறை போதனை செய்த காலத்தில் நம்ரூத் என அழைக்கப்பட்ட ஒரு மன்னன் ஆட்சி செய்தான். அவன் பல தெய்வ கொள்கையுடையவனாக இருந்தான். அப்போது இப்ராஹீம்(அலை) அவர்கள் ஒரே இறைவனையே வணங்கி வழிபட வேண்டும் எனப் போதனை செய்தனர். அவர்களுக்கு பல துன்பங்களை அன்றைய ஆட்சியாளன் செய்தான். இப்ராஹீம்(அலை) அவர்களை நெருப்புக் குண்டத்தில் போட்டுக் கொடுமைப்படுத்த முயற்சித்தான். அல்லாஹ் அவர்களைப் பாதுகாத்ததாக அல்குர்ஆன் விளக்குகின்றது. கவனியுங்கள்.  அல்குர்ஆன்: 2:258, 29:24

அதேபோல் மூசா(அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்த எகிப்து நாட்டின் மன்னன் பிர்அவ்ன் என்ற அரசன் பல கொடுமைகளை மக்களுக்குச் செய்தான். அவன் இஸ்ரவேலர் சமுதாயத்தை அடிமையாக மாற்றி கொடுமைப்படுத்தினான். அவர்களின் ஆண் குழந்தைகளைக் கொலை செய்து வந்தான். இதனை வரலாறு உண்மைப் படுத்துகின்றது. அதேபோல் யூத ஆட்சியாளர்கள் ஈசா(அலை) அவர்களைக் கொடுமைப்படுத்தினர். அவர்களைக் கொலை செய்யவும் முற்பட்டனர். அல்லாஹ் ஈசா(அலை) அவர்களை பாதுகாத்தான். ஈசா(அலை) அவர்கள் அக்கால சமுதாயங்களுக்கு இழைத்த குற்றம் யாது? ஒன்றுமில்லை, அப்படியாயின் அவர்கள் ஏன் துன்புறுத்தப்பட்டனர்? காரணம் “அல்லாஹ்வைத் தவிர வணங்கி வழிபடுவதற்கான ஏக இறைவன் வேறு யாரும் இல்லை. ஈசா அல்லாஹ்வின் அடியானும் இறைத்தூதரும் ஆவார்கள் எனப் போதனை செய்தமை ஆகும்.

அன்று வாழ்ந்த ஒவ்வொரு அரசர்களினதும் வரலாற்றை கவனித்துப் பாருங்கள். அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையே வாழ்ந்தனர். அரச குடும்பத்தினரின் வாழ்க்கைத் தரத்திற்கும், மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கும் மிகப் பெரிய வேறுபாடு காணப்பட்டது. அவர்களில் பலர் தமது சுக வாழ்வுக்காக மக்களை அடிமைப்படுத்தி இராஜபோக வாழ்க்கை நடத்தி பெரிய மாளிகைகளையும் சுகபோகங்களையும் அமைத்துக் கொண்டனர். இவர்களுக்கு சாதகமாக இறைநெறி நூல்களை மாற்றுவதற்காக போலி துறவறம் பூண்ட மதகுருமார்களை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினர். அக்குருமார்களுக்காக மிக ஆடம்பரமான மாடமாளிகை களை இறைவனின் பெயரால் அமைத்துக் கொடுத்தனர். உண்மை இறைநேச போதகர்கள், அரசர்களினதும், குருமார்களினதும், பிரபுகளினதும் பாவமான தீமைகளை மக்களுக்கு தப்பான செயல்கள் என எடுத்துக் காட்டியபோது, இந்த அரசர்களும், போலிக் குருமார்களும் அவர்களை முகவரியில்லாதவர்களாக அழித்து விட்டனர்.

உண்மை இறைநெறி நூல்கள் இதனால் மதிப்பிழந்தன. போலி நூல்கள் மதபோதனை நூல்களாக மாற்றப்பட்டன. அப்போலிப் போதனை நூல்களுக்கும், குருமார்களுக்கும், அரசர்களுக்கும் சாதகமாக, பொய்மையை கற்பனையாக வடித்து அரச புலவர்கள் கவிதை அமைத்தனர். அதற்கு அவர்களின் மொழி வல்லமையைப் பயன்படுத்தினர். அரசர்களிடமிருந்து பொற்காசுகள் அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது. சொகுசான வாழ்க்கையும் அவர்களுக்குக் கிடைத்தது. அத்துடன் போலி குருமார்களை அரசன் வணங்கினான். அக்கால புத்திஜீவிகள் என மதிக்கப்பட்ட புலவர்களும் வணங்கினர். இதை கவனித்த பிரபுக்களும், பிரதானிகளும் வணங்கினர். அவர்களின் நாட்டில் பெரும் பான்மையாக வாழ்ந்த ஏழைக் குடி மக்கள், குருமார்களையும் அரசர்களையும் தலை தாழ்த்தி வணங்கவும், அவர்களின் போதனைகளை ஏற்று நடக்கவும் வழி அமைக்கப்பட்டது.

அரசன் தனது அரச மாளிகையில் தான் பெற்ற செல்வங்களின் சிறு பகுதியை தன்னைப் புகழ்ந்து பாடிய புலவர்களுக்கு வழங்கினான் அத்துடன் தனது அரசவையில் அரசனின் புகழ் கூற உண்மையுடன் பொய்மையை இணைத்து கற்பனைக் கதை சொல்லும் நிபுணர்களை அரசன் வைத்திருந்தான். நகைச்சுவையாக பேசும் நிபுணர்களையும் வைத்திருந்தான். மக்கள் மத்தியில் அரசனின் புகழ்பாடும் கவிஞர்களையும் வைத்திருந்தனர். அத்துடன் அதிகமான அரசர்களுக்கு திரைமறைவில் பல அந்தப்புரங்கள் இருந்தன. அங்கு நாட்டிய அரங்குகள், அரைகுறை ஆடைகளுடன் நடனமாடும் பெண்கள், தீய இசை நிகழ்ச்சிகள், சூது, மது, விபச்சாரம் போன்றன மலிந்து காணப்பட்டன.

அன்று உயர்ந்த மனிதர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் சுயநலமிகளால் பிழைக்கத் தெரியாதவர்களாக இனங்காட்டப்பட்டனர். அன்று தீமைகளிலிருந்து மக்களை பாதுகாக்க உயர்தரமான கவிதைகள் பாடியவர்களும் வாழ்ந்திருந்தனர். ஆனால் அவர்கள் எழுதிய புத்தகங்கள் அக்காலத்தில் மதிக்கப்படவில்லை.

அன்று அரசர்களினால் உருவாக்கப்பட்ட போலி குருமார்களுக்கு அரசன் எல்லா வகையான வசதிகளையும் ஏற்படுத்தியிருந்தான். நாளடைவில் மக்களும் அவர்களை வழிப்படவும், அவர்களை வணங்கவும் ஆரம்பித்தனர். அதனால் அரசன் மக்களுக்கும் சமுதாயத்திற்கும் செய்கின்ற தீமைகள் குருமார்களினால் திருத்தப்படவில்லை. அரசன், பிரபுக்கள், சமுதாய தலைவர்களினால் இழைக்கப்படுகின்ற பாவமான செயல்கள் குருமார்களினால் கண்டுகொள்ளப்படவில்லை. அவ்வாறு ஒரு சில நல்லவர் களால் கண்டு கொள்ளப்பட்டாலும் அந்த நல்லவர்கள் தண்டிக்கப்பட்டனர். முகவரி இல்லாதவர்களாக மாற்றப்பட்டனர். அதனால் குருமார்கள் குடிமக்களுக்கு மட்டுமே தீமைகளைச் சுட்டிக்காட்டி நற்போதனை செய்தனர். இதனால் ஏக இறை நம்பிக்கைகள் மறைக்கப்பட்டன. வணக்கத்தலங்களை அரசர்கள் அமைத்துக் கொடுத்தனர்.

அதில் குருமார்களினதும், அரசர்களினதும், போலிக் கடவுள்களினதும் சிலைகள் அமைக்கப்பட்டன. ஆபாசமான சிற்பங்களும் கலைத்திறன் என்ற பெயரில் பக்தியாக் கப்பட்டன, போலிச் சடங்குகளும், மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நரபலி, பில்லி சூனியம், சோதிடம் பார்த்தல், பறவை மிருகங்களை வைத்து சோதிடம் பார்த்தல், நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தல், உடைகளை அணியாதவர்களாக ஆண்களும், பெண்களும் சிலைகளுக்கும், குருமார்களுக்கும் முன் வணக்க வழிபாடு களில் ஈடுபடுதல், மனிதன் இறந்தபின் பேயாக அலைவதாக நம்பிக்கைகள், மறு அவதாரம் பற்றிய போலி நம்பிக்கைகள், சிலை நம்பிக்கை, சிலுவை நம்பிக்கை, சூரிய, சந்திர, நட்சத்திர நம்பிக்கைகள், மற்றும் போலியான நேர்ச்சைகள் மூலம் மக்களின் செல்வங்களை குருமார்கள் சுரண்டி ஏமாற்றி சாப்பிடல், பக்தியின் பேரால் உணவுப் பொருட்களை வீண் விரயமாக்குதல், ஏமாற்றுதல் மூலமான நோய் தீர்க்கும் முறைகள், மதத்தின் பெயரால் சாதி, நிற வேறுபாடுகள், சீதனக் கொடுமைகள், பெண் அடிமை முறைகள், இவ்வாறான சடங்குகளும், சம்பிரதாயங்களும் பக்தியின் பெயரால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றும் நீங்காத புண்ணாக நிலைத்துக் காணப்படுகின்றன.

இவ்வாறு மனம்போன போக்கில் வாழ்வதற்கா இறை தூதர்கள் வழிகாட்டினர். இறை தூதர்களான நூஹ்(அலை), இப்ராஹீம் (அலை), மூசா(அலை) ஈசா(அலை) போன்றவர்கள் அல்லாஹ் ஒருவன், அவனை மட்டுமே வணங்கவேண்டும் என வழிகாட்டிச் சென்றார்கள். அவர்கள் சாதாரண மக்களுடன் மக்களாக வாழ்ந்தார்கள். தற்போது இருக்கும் சில மதகுருமார்களைப் போல் அரசர்களின் கைக்கூலிகளாக வாழவில்லை. தீமைகளைக் கண்டும் காணாதவர்களாக வாழவில்லை. அவர்கள் இறைநெறி நூல்களின்படியே வாழ்ந்தனர். அக்கால அரசர்களினாலும் தலைவர்களினாலும் பல துன்பங்களுக்கு உட்படினும் சத்திய உண்மைகளையே போதித்தனர். அவர்கள் மறுமை வாழ்க்கை, நரகம், சுவர்க்கம் உண்டு என மக்களுக்குப் போதனை செய்தனர். இவர்களில் பலர் இறுதி நபியின் வருகை பற்றி முன்னறிவிப்புச் செய்து சென்றார்கள். அவர்கள் ஒருபோதும் ஆடம்பரமான வாழ்க்கை வாழவில்லை. இவை பற்றி உண்மைச் செய்திகளை அல்குர்ஆன் மிகவும் தெளிவாக விவரிக்கின்றது. அல்லாஹ்வின் இறுதி நெறிநூலை பார்த்து இம்மையிலும், மறுமையிலும் வெற்றி அடைய முயலக் கூடாதா? சிந்தியுங்கள்!

இறுதி இறைத்தூதரான முஹம்மது(ஸல்) அவர்கள் தனது நபித்துவத்திற்கு முன்பே சிறந்த நற்குணமுடையவராக இருந்தனர். அவர் எப்போதும் உண்மை பேசுபவராக இருந்தார்கள். இதனால் குறைஷிகள் அவரை “அல்அமீன்” நம்பிக்கைக்குரியவர் என அழைத்தனர். அவர் அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் உதவி செய்பவர்களாக இருந்தனர். அவர்கள் நபித்துவத்தின் ஆரம்பத்தில் பெரும் துன்பங்களுக்கு உட்பட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றனர். ஆகவே அவர்கள் மதீனாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவினார்கள். அரேபியாத் தீபகற்பத்தின் பெரும் பகுதி நபி(ஸல்) அவர்களின் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. அன்று ஓர் சிற்றரசர் வாழ்ந்தாலும் அவர் ஆட்சிக்கு வந்தவுடன் பெரும் மாளிகை களை அமைத்து, தங்க சிம்மாசனத்தில் மிக ஆடம்பரமாக தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். உதாரணமாக இலங்கையின் கண்டியை தலைநகரமாக அமைத்து ஆட்சி செய்த விக்கிரம ராஜசிங்கனின் ஆட்சியை பிரித்தானிய அரசு கைப்பற்றிய போது மிகப் பெரிய அரச மாளிகைகள், தங்க ஆபரணங்கள், பெரும் செல்வங்கள் பல வகைகளையும் கைப்பற்றினர்.

அவரின் தங்கத்தினாலான சிம்மாசனத்தை இன்றும் கொழும்பிலுள்ள நூதன சாலையில் பார்க்கலாம். ஆனால் அரேபியாவை ஆட்சி செய்த முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வீடு குடிசையாக இருந்தது. அவர்களின் ஆட்சி நிர்வாகம் மதீனத்திலுள்ள நபியின் பள்ளிவாசலாக இருந்தது. அதன் கூரை பேரீச்சம் ஓலையால் நெய்யப் பட்டிருந்தது. அவரது உடை மிக எளிமையானதாக இருந்தது. அவரது படுக்கை பேரீச்சை ஓலையால் நெய்யப்பட்டதாக இருந்தது. நபியின் வீட்டில் மூன்று நாட்கள் தொடர்ந்து உணவு சமைக்க வசதியற்ற நிலை காணப்பட்டது. ஆனால் நீதியான ஆட்சியாளராக அவர் இருந்தார். ஜகாத் பொருட்கள் நபி(ஸல்) அவர்களின் குடும்பத்திற்குத் தடுக்கப்பட்டதாக இருந்தது.

அவர் அல்லாஹ்வின் கட்டளைகள் அல்லாத பொதுத் தீர்மானங்கள் மேற்கொள்ளும்போது நபித்தோழர்களுடன் ஆலோசனைகளைப் பெறுவதும் உண்டு. அவர் ஏழைகளுக்கு உதவி ஒத்தாசை செய்பவர்களாக வாழ்ந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் ஆட்சி பற்றியும் அவர்களின் நற்குணங்கள் பற்றியும் காணப்படுகின்ற ஹதீஃத்கள் சிலவற்றைக் தொடர்ந்து காண்போம்.                                                                 (இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

***************************************************************************

அமல்களின் சிறப்புகள்….

தொடர் : 52

எம். அப்துல் ஹமீத்

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :

புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்)

தலைப்பு : திக்ரின் சிறப்புகள்

குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.

தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.

பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து,12 ­வ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது பதிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.

இன்ஷா அல்லாஹ், இந்த இதழில் அமல்களின் சிறப்புகள் (அசி) புத்தகத்தில் பக்கம் 392ன் நான்காவது பத்தியில் ஆரம்பித்து 393ன் முதல் பத்தியில் ஹதீஃத் என்ற பெயரில் மூன்று பாராக்களில் எழுதியுள்ளதை ஆய்வுக்காக எடுத்துக் கொள்வோம்.

அப்புத்தகத்தில் பிரசுரித்துள்ளதை கீழே தந்துள்ளோம். கவனமாக படித்துப் பாருங்கள்.

(முதல் பாரா) ஒரு மனிதர் அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடம் ரசூல்(ஸல்) அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த ஏதாவது ஆச்சரியமான ஒரு விஷயத்தை அறிவியுங்கள் என்று கேட்டார். அப்பொழுது ஆயிஷா(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் எதுதான் ஆச்சரியமாக இல்லாமல் இருந்தது? என்று கூறிய பின் ஒரு நிகழ்ச்சியைக் கூறினார்கள்.

(இரண்டாவது பாரா) ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் இரவில் என்னிடத்திற்கு வந்து, என்னுடைய படுக்கையில் சற்று நேரம் படுத்திருந்த பின், “என்னுடைய ரப்பை, நான் வணங்குவதற்கு என்னை விடு! என்று கூறிவிட்டு எழுந்து சென்று உளூச் செய்து, தொழுவதற்காகத் தக்பீர் கட்டி அழ ஆரம்பித்துவிட்டார்கள். கண்ணீர் அன்னாருடைய நெஞ்சின் மீது வழிந்தோடிக் கொண்டிருந்தது. பிறகு ருகூவிலும், சுஜூதிலும் இவ்வாறே அழுது கொண்டிருந்தார்கள். இரவு முழுவதையும் இவ்வாறே கழித்தார்கள். சுப்ஹு தொழுகைக்கு பிலால்(ரழி) அவர்களும் வந்துவிட்டார்கள்.

(மூன்றாவது பாரா) அப்பொழுது நான் மாநபி(ஸல்) அவர்களிடம் “யா ரசூலல்லாஹ் தாங்கள் தான் பாவங்கள் அனைத்தும் மன் னிக்கப்பட்டவர்களாக இருக்கிறீர்களே, அப்படியிருக்க ஏன் இவ்வளவு அழவேண்டும்? என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், “நான் அல்லாஹுத ஆலாவுக்கு நன்றி யுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?” என்று கூறியபின் “நான் எவ்வாறு அழாமல் இருக்க முடியும்? இன்றுதான் இன்ன ஃபீகல்கிஸ் ஸமாவாத்தி” என்ற ஆயத்து இறங்கியது என்று கூறிய பின், “இந்த ஆயத்துக்களை ஓதி, அவற்றின் கருத்துக்களை சிந்தனை செய்யாத மனிதனுக்கு நாசம் தான்” என்று அருளினார்கள்.

எமது ஆய்வு :

மேலே கூறப்பட்டுள்ள செய்தி ஹதீஃதில் நூல்களில் இருக்கின்றனவா என்று மார்க்க ஈடுபாடு உள்ளவர்களிடம் கேட்டால், சிறிதளவு மார்க்க தொடர்பு உடையவர்கள் கூட, இந்த ஹதீஃதை பல பேர்களின் வாயிலாக நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம் என்றே கூறுவார்கள். அந்த அளவுக்கு பரவலாக போதிக்கப்பட்ட ஹதீஃத் இது. மார்க்கத்தில் நல்ல ஈடுபாடு உள்ளவர்கள் மட்டுமே அசி புத்தகம் எழுதியுள்ளதில் நரித் தந்திரம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளதை அறிவர். அந்த தந்திரம் என்ன என்பதைப் பார்க்கும் முன்பாக, இந்த ஹதீஃதைப் பற்றி ஹதீஃத் நூல்கள் என்ன தெரிவித்திருக்கின்றன என்பதை அப்படியே அறிவது இப் போது அவசியமாகி விட்டது. எனவே முதலில் அந்த ஹதீஃதுகளை கவனிப்போம்.

முகீரா(ரழி) அறிவித்தார். சில சமயம் நபி(ஸல்) அவர்கள் கால்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது, “நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?” என்று கேட்பார்கள்.  புகாரி: 1130, அத்தியாயம் : 19, தஹஜ்ஜுத்

முஃகீரா இப்னு ஷிஅபா(ரழி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று (அல்லாஹ்வைத்) தொழுதார்கள். அப்போது அவர்களிடம் தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே! (பிறகு ஏன் நீங்கள் இந்த அளவு சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டும்?) என்று கேட்கப்பட்டது. (அதற்கு அவர்கள்) நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா? என்று கேட்டார்கள். புகாரி: 4836, அத்திதாயம்: 65 திருக்குர்ஆன் விளக்கவுரை.

முஃகீரா இப்னு ஷிஅபா(ரழி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவுக்கு அல்லது புடைக்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டபோது நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா? என்று கேட்டார்கள். புகாரி:6471, அத்தியாயம்: 81,நெகிழ்வூட்டும் அறிவுரைகள்.

முஃகீரா பின் ஷிஅபா(ரழி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் தம் பாதங்கள் புடைக்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். அவர்களிடம், “இந்த அளவுக்கு நீங்கள் சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டுமா? தங்களின் முந்தைய மற்றும் பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டமா?” என்று கேட்டார்கள். முஸ்லிம் : 5431, அத்தியாயம் : 50 நயவஞ்சகத் தன்மைகளும் அதற்குரிய தண்டனைகளும்.

முஃகீரா பின் ஷிஅபா(ரழி) அவர்கள் கூறியதாவது :

நபி(ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழு தார்கள். மக்கள், “தங்களின் முந்தைய மற்றும் பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே (பிறகு ஏன் தாங்கள் இந்த அளவுக்குச் சிரமம் எடுத்துக் கொள்ளவேண்டும்)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா? என்று கேட்டார்கள். (இந்த ஹதீஃத் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது) முஸ்லிம்: 5432, அத். : 50 நயவஞ்சகத் தன்மைகளும் அதற்குரிய தண்டனைகளும்.

ஆயிஷா(ரழி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்குவார்கள். எனவே நான், “ஏன் இப்படிச் செய்கிறீர்கள், இறைத்தூதர் அவர்களே! தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே?’ என்று கேட்டேன். அவர்கள், “நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்ப வேண்டாமா?” என்று கேட்டார்கள். (தம் வாழ்நாளின் கடைசிக் காலத்தில்) நபி(ஸல்) அவர்களின் உடல் சதை போட்டபோது அமர்ந்து தொழுதார்கள். “ருகூஉ” செய்ய நினைக்கும்போது, எழுந்து (சிறிது நேரம்) ஓதுவார்கள். பிறகு, ருகூஉ செய்வார்கள். புகாரி: 4837, அத். 65 திருக்குர் ஆன் விளக்கவுரை.

ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தொழும்போது தம் கால்களில் வெடிப்பு ஏற்படும் அளவுக்குத் தொழுவார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இப்படிச் செய்கி றீர்களே! தங்களின் முந்தைய மற்றும் பிந்தைய தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்டவே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆயிஷா! நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?” என்று கேட்டார்கள். இந்த ஹதீஃத் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. முஸ்லிம்: 5433, அத்: 50 நயவஞ்சகத் தன்மைகளும் அதற்குரிய தண்டனைகளும்.

ஜியாப் பின் இலாகா என்பவர் அறிவிப் பதாவது : அல் முஃகீரா பின் ஷிஅபா(ரழி) அவர்கள் சொல்ல நான் கேட்டதாவது: “அவர்களுடைய பாதங்கள் வீங்கும் அளவுக்கு, நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் நின்று தொழுதார்கள். “உங்களுடைய கடந்த கால பாவங்களையும், எதிர்கால பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விட்டான். (இப்படி சிரமத்துடன் தொழுகிறீர்களே” என்று வினவப்பட்டதற்கு, “நான் ஒரு நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா? என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். சுனன் நசாயி ஹதீஃத் எண். 1644, பாடம்: 20, ஹதீஃத் : 47, ஆங்கிலம்: வால்யூம் 2, பாடம்: 20, ஹதீஃத்: 1645

முஃகீரா பின் ஷிஅபா(ரழி) அவர்கள் அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுடைய பாதங்கள் வீங்கும் அளவுக்கு தொழுதார்கள். “உங்களது முந்தைய பிந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கும்போது, நீங்கள் இது போன்ற சிரமத்தை உங்களுக்கு ஏற்படுத்திக் கொள்கிறீர்களே?” என்று வினவப்பட்டது. “நான் நன்றியுடன் வணங்குபவனாக இருக்க வேண்டாமா?” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜாமியத் திர்மிதி எண்: 412, புத்தகம் 2, ஹதீஃத் எண்: 265, ஆங்கிலம் : வால்யூம்:1, புத்தகம்2, ஹதீஃத் எண். 412

அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அவர்களுடைய பாதம் வீங்கும் அளவுக்கு தொழுதார்கள். “அல்லாஹ்வின் தூதரே! உங்களுடைய முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டனவே? என்று கூறப்பட்டது. நான் ஒரு நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா என்று நவின்றார்கள். “சுனன் இப்னு மாஜா, ஆங்கிலம்: வால்யூம், 1, பாடம்: 5, ஹதீஃத் எண். 1420, அரபி: பாடம் 5, ஹதீஃத் எண்: 1485

முஃகீரா பின் ஷிஅபா(ரழி) அவர்கள் அறிவித்தார்கள் :

நபி(ஸல்) அவர்களின் புனித பாதங்கள் வீங்கும் அளவுக்கு நஃபில் தொழுகைகளை நீளமாகத் தொழுதார்கள். “உங்களது முந்தைய பிந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கும்போது, நீங்கள் இதுபோன்ற சிரமத்தை உங்களுக்கு ஏற்படுத்திக் கொள்கிறீர்களே?” என்று நபித் தோழர்கள் வினவினர். அதற்கு, “நான் ஒரு நன்றியுள்ள பணியாளாக இருக்க வேண்டாமா?” என்று கேட்டார்கள். ஆங்கிலம்: பாடம் 39, ஹதீஃத் 248, அரபி: பாடம்:40, ஹதீஃத் : 261.

அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி(ஸல்) அவர்களின் புனித பாதங்கள் வீங்கும் அளவுக்கு நஃபில் தொழுகைகளை நீளமாகத் தொழுதார்கள். “உங்களது முந்தைய பிந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட் டிருக்கும்போது, நீங்கள் இவ்வளவு நீளமா கத் தொழுகிறீர்களே?” என்று கேட்கப்பட்டது. அதற்கு, “பாராட்டப்படக்கூடிய ஒரு பணியாளாக நான் இருக்க வேண்டமா?” என்று பதிலளித்தார்கள். ஆங்கிலம் பாடம்: 39, எண்: 250, அரபி: பாடம் 40, எண். 263, ஸமாயில் முஹமதிய்யா.

நபி(ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்காதவர்கள் என்பது சம்பந்தமாக உள்ள ஹதீஃதுகளில் சிலதை மேலே எடுத்துக் காட்டியுள்ளோம். அத்தனை ஹதீஃதுகளுமே ஆதாரப்பூர்வமான (ஸஹீஹான) ஹதீஃதுகள் ஆகும். இந்த ஹதீஃதுகளை அறிவித்தவர்கள் அன்னை ஆயிஷா(ரழி), அபூ ஹுரைரா(ரழி) மற்றும் முஃகீரா இப்னு ஷிஅபா(ரழி) ஆகியோர் ஆவார்கள். இத்தனை ஹதீஃத்களும் இடம் பெற்ற நூல்கள் புகாரி, முஸ்லிம், நஸாயி, திர்மிதி, இப்னு மாஜா, ஸமாயில் முஹம்மதிய்யா ஆகியவையாகும்.

மேலே உள்ள எல்லா ஹதீஃத்களும் திரும்பத் திரும்ப ஒரே செய்தியை அறிவித்துக்கொண்டு இருப்பதால், ஒரே ஒரு ஹதீஃதை எழுதிவிட்டு அதனடியில் அனைத்த ஹதீஃத் நூல்களையும் குறிப்பிட்டிருக்கலாமே என்று இதனை படிக்கும் எமது வாசகர்கள் நினைக்கலாம். அவ்வாறு நாம் தெரிவித்து இருப்பதற்கு ஒரு காரணம் உண்டு.

அது என்னவென்றால், ஆதாரப்பூர்வமான இத்தனை ஹதீஃதுகளிலும் இல்லாத வி­யங்களை அதாவது அசி ஆசிரியரின் கற்பனைகளையும் சேர்த்து, அவரது சொந்த சரக்கை ஆதாரப்பூர்வமான ஹதீஃதுகளில் இடைச் செருகல் செய்து,அனைத்தையும், ஹதீஃதாக காட்டி இருக்கிறார் அசி ஆசிரியர் ஜக்கரிய்யா சாஹிப் அவர்கள். அவர் இடைச் செருகல் செய்தவைகள் மேலே உள்ள ஹதீஃத்களில் இடம் பெறவில்லை என்பதை ஒவ்வொரு ஹதீஃதுடன் வாசகர்கள் ஒப்பிட்டு பார்த்து உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கோடுதான் ஒவ்வொரு ஹதீஃதையும் தனித்தனியாகத் தெரிவித்துள்ளோம்.

இடைச் செருகல் செய்யப்பட அசி ஆசிரியரின் சொந்த சரக்குகளை அடுத்த இதழில் விரிவாக ஆய்வு செய்வோம்.  இன்ஷா அல்லாஹ் தொடரும்….

***************************************************************************

பிராய்லர் இறைச்சி… பிரைடு சிக்கன்… ஹராமா? ஹலாலா?

எஸ், ஹலரத் அலி, திருச்சி

எந்த மார்க்கத்தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய நிலையான இயற்கை மார்க்கமாகும் என்று அல்லாஹ் கூறுகிறான்.  அல்குர்ஆன்:30:30

உலகில் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் அல்லாஹ்வின் இயற்கை மார்க்கமான இஸ்லாத்திலே பிறக்கின்றனர். ஆனால் பெற்றோர்களே அக்குழந்தையை யூதராகவும், கிறிஸ்துவராகவும், மஜுசியாகவும் மாற்றுகின்றனர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி: 1359

இதேபோன்ற நிலையில்தான் அல்லாஹ் ஆடு, மாடு, ஒட்டகம், கோழி போன்ற உயிரினங்களை நாம் உண்பதற்கு ஆகுமானதாக (ஹலால்) இயற்கை உணவாக அல்லாஹ் பூமியில் படைத்துள்ளான். அல்குர்ஆன்:5:1

நல்லவற்றை உண்ணத் தூண்டுகிறான். அல்லாஹ் அனுமதித்த (ஹலாலாக்கிய) அனைத்தும் தூய்மையான நிலையிலேயே பூமியில் கிடைக்கிறது. அல்குர்ஆன்: 2:168

இயற்கையான இஸ்லாமிய மார்க்கத்தில் பிறக்கும் குழந்தைகளை வளர்க்கும் மாற்று மத பெற்றோர்கள் அவர்கள் மதத்தின்படி வளர்ப்பது போல் இன்றைய பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் இயற்கையாக அல்லாஹ் உயிர் கொடுத்து உருவாக்கிய கோழிக்குஞ்சுகளை கொழுக்க வைக்க, செயற்கையான, நச்சு இரசாயன மருந்துகளைக் கொடுத்து, இறைச்சியை விஷமாக்கி விட்டனர். உண்ண தடுக்கப்பட்ட (ஹராமான) நஞ்சுக் கோழிகள் பிராய்லர் சிக்கன் என்றும் பிரைடு சிக்கன் என்ற பெய ரிலும் நாடெங்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அன்றைய அறியாமை கால அரபு மக்கள் தாங்கள் இணை வைத்து வணங்கிய தெய்வங்களைத் திருப்திப்படுத்த ஆடு, மாடுகளின் காதுகளை அறுத்து அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்தனர். இப்படி செய்வதை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக காட்டினான். அல்குர்ஆன்:4:119

அறியாமைக் கால மக்கள், ஆடு, மாடு, ஒட்டகத்தின் காதுகளை அறுத்து வெளிப்புற கோலத்தையே மாற்றினார்கள். ஆனால் இன்றைய பன்னாட்டு கார்ப்பரேட் அறிவாளிகள், ஆடு, மாடு, கோழி, தாவரம், காய் கனி, பழங்கள் அனைத்திலும் அதன் உட்புற மரபணு அமைப்பையே மாற்றியமைத்து (Genetically Modifiied Organisms) வருகிறார்கள். பயிர்த்தாவரங்கள், காய்கறிப் பயிர்கள், பழங்கள், மற்றும் ஆடு, மாடு, கோழி என்று அனைத்து இயற்கை உணவு சங்கிலியை வெட்டிவிட்டார்கள்.

பிராய்லர் கோழி இறைச்சியில் ஆர்சானிக், காட்மியம், ஈயம் போன்ற கொடிய நஞ்சுகளும், தீங்கிழைக்கும் 97% பாக்டீரியா கிருமிகள் மற்றும் குரோத் ஹார்மோன்கள் பிராய்லரில் உள்ளது. அல்லாஹ் உண்ண அனுமதித்த (ஹலால்) கோழிகளை இன்று மனித ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் Antibiotic Toxinஐகளை செலுத்தி, உண்ணத் தடுக்கப்பட்ட (ஹராமான) கோழியாக மாற்றிவிட்டார்கள். இந்த விஷம் தாங்கிய கோழிகளே, சிக்கன் 65, தந்தூரி சிக்கன், சில்லி சிக்கன், சிக்கன் டிக்கா, ஜிஞ்சர் சிக்கன், கடாய் சிக்கன் என்ற பெயர்களில் உணவகங்களில் விஷச் சிக்கன்கள் விற்கப்படுகிறது.

Doxycline, Enrofioxacin, Neomycin and Growth harmones போன்ற மருந்துகளைத் தாங்கிய கோழிகள் நாற்பது நாட்களில் கொழுக்க வைக்கப்பட்டு பிராய்லர் கோழி களாக வெளியேறுகின்றன. இதை உண்ணும் மனிதர்களுக்கு உருவாகும் வியாதிகள் ஏராளம் குறிப்பாக,

 1. புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எண்ணையில் பொரித்த பிரைடு சிக்கன் சாப்பிடும் ஆண்களுக்கு புரோஸ் டேட் கேன்சர் வரலா
 2. பாக்டீரியா நுண்கிருமி நோய்த் தாக்குதல் ஏற்படும்.
 3. ஒரு (Fried Chicken Leg Piece) பொரித்த பிராய்லர் கோழிக்கால் சாப்பிடுவதானது 60 சிகரெட் குடித்த நஞ்சு உடலில் ஏற்றியதற்கு சமமானது.
 4. உடலுக்கு கேடு விளைவிக்கும் கெட்ட கொழுப்புகளால் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற வியாதிகள் உண்டாகும்.
 5. அதிக இரசாயன மருந்துகள் (Growth Hormones) உடலில் படிவதால் பெண்களுக்கு கர்ப்பப்பை ஹார்மோன் கோளாறுகள் ஏற்படும். குறிப்பாக சிறுமிகள்  ஒன்பது பத்து வயதிலேயே பருவமடைந்து விடுவர்.
 6. பிராய்லர் கோழிக்கு அதிகளவுக்கு நோய் தடுப்பு மருந்துகள் கொடுத்து வளர்க்கப்படுவதால் அம்மருந்துகள் நம் உடலில் தங்கி, நமது இயற்கையான நோய் எதிர்ப்புத் திறனை முடக்கி விடும். பிராய்லர் இறைச்சியை உண்பதென்பது வாரம் மூன்று முறை நாம் ஆண்டிபயாடிக் ஊசி போடுவதற்கு சமமானது.
 7. பிராய்லர் இறைச்சியை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களின் உயிர் அணு உற்பத்தி குறைந்து ஆண்மைக் குறைவு எனும் மலட்டுத்தன்மை (Impotence) ஏற்படக் காரணமாகிறது.

“வருங்காலங்களில் ஆண்களின் பிறப்பு விகிதம் குறைந்து விடும். அதேசமயம் பத்து வயது சிறுமியர் பருவம் அடைந்து எண்ணிக்கையில் கூடுவர். இது வருங்காலத்தில் சமூக சீரழிவை ஏற்படுத்தும் நபி(ஸல்) அவர்கள் முன்னறிவித்த செய்தியும் இதுவே…”

இறுதி காலத்தில் ஆண்கள் எண்ணிக்கையில் குறைந்து விடுவர். எந்தளவு என்றால் ஐம்பது பெண்களை ஒரு ஆண் நிர்வகிக்கும் நிலை வரும். புகாரி : 5231

பிராய்லர் இறைச்சி மலிவாகவும் சுவையாகவும் கிடைப்பதால் நாவுக்கு அடிமையான மனிதர்கள் உண்ணத் தடுக்கப்பட்ட (ஹராமாண) கோழிக்கு அடிமையாகிவிட்டார்கள். இதன் விளைவுகள் பின்னர் வியாதியாக வெளிப்படும்போது, மருத்துவச் செலவுகள் அவர்களை அமிழ்த்துவிடும்.

“அல்லாஹ் கூறுகிறான்… உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்”  அல்குர்ஆன்:2:195

நாம் அருளிய நல்லவற்றிலிருந்து புசியுங்கள் என்றோம். (அதல்லாத மற்ற உணவைக் கேட்டதனால்) நமக்கு அவர்கள் அநியாயம் செய்து விடுவதில்லை. எனினும் தமக்குத் தாமே அவர்கள் அநியாயம் செய்து கொண்டார்கள். அல்குர்ஆன்: 2:57

நம் வீட்டில் உண்ணும் பிராய்லர் இறைச்சியிலும் அல்லது பன்னாட்டு பிரைடு சிக்கன் உணவகங்களில் வாங்கி உண்ணும் இறைச்சியிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சு இரசாயனங்கள் ஏராளமாக கலந்துள்ளது என்று எல்லோருக்கும் தெரிந்துதான் உள்ளது. இப்படித் தெரிந்தும் அந்த மெல்லக் கொல்லும் விஷத்தை தேடிப் போய் உண்ணுவதென்பது தற்கொலைக்கு சமமானது. தற்கொலை செய்பவனுக்கு நிரந்தர நரகம் என்பதே இஸ்லாமிய தீர்ப்பு. முஸ்லிம்: 175

மனிதர்கள் உண்ணும் உணவில் விஷத்தைக் கலப்பதென்பது இன்று மட்டும் நடக்கவில்லை. 1400 ஆண்டுகளுக்கு முன்பு நபி(ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்து ஆட்டிறைச்சியில் நஞ்சை வைத்து (நபிமொழி புகாரி: 2617) கொல்லத் துணிந்த சமூகமே. இன்றும் பன்னாட்டு நிறுவனங்களையும், அரசுகளையும் தம் கைப்பிடிக்குள் வைத்து பிராய்லர் விஷத்தை பாரெங்கும் பரப்பி வருகிறது.

மதுவும் பிராய்லர் இறைச்சியும் ஹராமானதே:

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். “மிஹ்ராஜ் பயணத்தின்போது என்னிடம் இரு பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. ஒன்றில் பாலும், மற்றொன்றில் மதுவும் இருந்தது.

“நீங்கள் விரும்பியதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று என்னிடம் சொல்லப்பட்டது. நான் பாலை எடுத்துப் பருகினேன் அப்போது நீங்கள் இயற்கை வழியில் செலுத்தப்பட்டு விட்டீர்கள் அல்லது இயற்கை மரபை பெற்றுக் கொண்டீர்கள்” என்று கூறப்பட்டது. முஸ்லிம்: 272

பாலானது இயற்கை வழியில் வருவதால் அல்லாஹ் அதை ஆகுமாக்கியுள்ளான். ஆனால் மது உற்பத்தி இயற்கையாக உற்பத்தியாவதில்லை. தானியங்கள், பழங்கள், கரும்பு போன்ற இயற்கையான பொருள்களை பிழிந்து சாறு எடுத்து அதில் செயற்கையாக சிலவற்றைச் சேர்த்து ஊறவைத்து நொதிக்க வைத்த பின் கிடைப்பதே போதை தரும் மது. இயற்கையில் ஹலாலாக கிடைக்கும் பழங்களின் சாற்றை செயற்கை பொருள் சேர்த்து போதையாக்குவதே மதுவாகும். இதே நிலைதான் ஹலாலான கோழிக்கு ஏராளமான இரசாயன மருந்துகளைச் சேர்த்து விஷமாக்கி விற்பனை செய்வதால் உடலுக்கு தீமை செய்யும் பிராய்லர் இறைச்சியும் (ஹராம்) தடுக்கப்பட்டதே!

அல்லாஹ் ஒரு பொருளை உண்ண (ஹராமாக்கி) தடை செய்து விட்டதன் காரணத்தை நாம் ஆய்வு செய்து பார்ப்போமேயானால், அப்பொருளானது நம் உடலுக்கு ஊறு விளைவிக்கக்கூடியதாகவே இருக்கும். எப்பொருள் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்குமோ அப்பொருள் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது. மது வெறும் போதைக்காக மட்டும் தடுக்கப்படவில்லை. அதுவே ஒரு நோயாக இருப்பதால், மது எனும் நோயை அல்லாஹ் தடை (ஹராமாக்கியுள்ளான்) செய்துள்ளான். (முஸ்லிம்: 4015)

தடை செய்யப்பட்ட போதைக்கு மனம் அடிமைப்பட்டது போல தடுக்கப்பட்ட (ஹராமான) பிராய்லர் விஷ இறைச்சிக்கு நமது நாவு அடிமைப்பட்டுவிட்டது. அல்லாஹ்வால் அமானிதமாக கொடுக்கப்பட்ட நம் உடல் நலனைப் பேணுவது, நம் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும். ஆகவே ஷைத்தானிய மனிதர்களால் வளர்த்தெடுக்கப்படும் தடுக்கப்பட்ட (ஹராமான) பிராய்லர் நச்சு இறைச்சிகளை புறக்கணிப்போம்.

மூஸா(அலை) அவர்களின் சமுதாயத்திற்கு அல்லாஹ் “மன்னு – சல்வா” என்னும் தூய்மையான உணவை வானத்தில் இருந்து இறக்கி உண்ணக் கொடுத்தான். ஆனால் அவர்களோ அந்த உயர்ந்த உணவை மறுத்து, தாழ்ந்த கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பருப்பு, வெங்காயத்தை விரும்பிக் கேட்டனர். அல்குர்ஆன்: 2:61

இப்படிக் கேட்டதையே அல்லாஹ் கண்டிக்கிறான். நமக்கு அவர்கள் அநியாயம் செய்து விடுவதில்லை. எனினும் தமக்குத் தாமே அவர்கள் அநியாயம் செய்து கொண்டார்கள். அல்குர்ஆன்: 2:57

அல்லாஹ் கொடுத்த மன்னு-சல்வாவை மறுத்து, வெங்காயம், பருப்பு கேட்டதையே அல்லாஹ் கண்டிக்கும்போது இன்று நம் முஸ்லிம்கள் இரசாயன மருந்து கொடுத்து வளர்க்கப்பட்டதே பிராய்லர் என்று தெரிந்தே அவ்விஷக் கறியை உண்டு உடல் நலனைக் கெடுத்தவர்கள், நாளை அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

நபி(ஸல்) அவர்கள் அதிகமான குழந்தைகளை பெற்றெடுக்க நம் சமுதாயத்திற்கு ஆர்வமூட்டினார்கள். நாளை மறுமை நாளில் மற்ற நபிமார்களின் சமுதாயத்தை (உம்மத்தை) விட எனது சமுதாயம் அதிகம் இருக்க ஆசைப்படுகிறேன் என்றார்கள்.   அபூதாவூது : 2050

ஆனால் இன்றைய முஸ்லிம் சமுதாயக் குடும்பங்களில், பொருளாதார, சமூக மற்றும் அரசு அழுத்தங்களின் காரணமாக குழந்தை பிறப்பு சதவீதம் வெகுவாக குறைந்துவிட்டது. ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பார்க்க முடியவில்லை. இரண்டுக்கு மேல் வேண்டவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

குழந்தை பிறப்பு குறைந்துவிட்ட இச்சூழலில், பிராய்லர் கோழியை உண்பதால் ஆண்களிடம் உயிர் அணு உற்பத்தி குறைந்து மலட்டுத்தனமும், குழந்தை பிறப்பிற்கு காரணமான பெண்களின் கர்ப்பப்பையானது இன்று (Ovarian Cysts) எனும் நீர்க்கட்டி வியாதிகளின் பிறப்பிடமாகவும் மாறி விட்டது. நம் சமுதாயப் பெண்களில் அநேகர் குழந்தை இன்மையின் காரணமாக கருத்தரிப்பு மையங்களில் (Infertility Centre) காத்திருக்கும் சூழல் தொடர்கிறது. இந்நிலை தொடருமானால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சந்ததியே இல்லாமல் போய் விடும் சாத்தியக்கூறு உள்ளது. ஆகவே, நாம் அனைவரும் இன்றிலிருந்து இன்ஷா அல்லாஹ் உண்ணத் தடுக்கப்பட்ட (ஹராம்) விஷ பிராய்லர் இறைச்சி உண்பதை நிறுத்த உறுதி கொள்வோம்.

அன்பிற்கினிய முஸ்லிம் சகோதரர்களே! தாய்மார்களே! நம் குழந்தைகளுக்கு பிராய்லர் இறைச்சி எனும் நஞ்சை கொடுத்து அவர்களின் எதிர்கால ஆரோக்கிய வாழ்வை பாழாக்கிவிட வேண்டாம் என்று உங்களை மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இக்கட்டுரை முஸ்லிம்களை மையப்படுத்தி எழுதப்பட்டாலும், அனைத்து மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் விஷக் கறி பிராய்லரை மாற்று மத சகோதரர்கள் எவருமே உண்ணாமல் தவிர்க்க வேண்டும் என்பதே எங்களின் அன்பான வேண்டுகோள்.

பிராய்லர் சிக்கன் இறைச்சியை தவிர்ப்போம்!  நம் இளம் தலைமுறையை காப்போம்!!

***************************************************************************

அல்லாஹ் அளவே இல்லாத கருணையாளன்!

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர்,  இலங்கை.

2019 நவம்பர் தொடர்ச்சி…

அப்போது அம்மனிதர் திகைத்தவராக “இல்லை” எனது இரட்சகனே! ஏதுமில்லை என்று கூறுவான். அப்போது அல்லாஹ் அவ்வாறில்லை இன்று உனக்கு நம்மிடம் ஒரு நன்மை இருக்கிறது இன்றைய தினம் உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படமாட்டாது என்று கூறியவுடன் ஒரு சிறிய ஏடு வெளிப்படும் அதில் “அஷ்ஹது அல்லாயிலாக இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ர ஸூலுஹு” என்ற ஓரிறைக்கொள்கையின் ஏகத்துவக் கலிமா இருக்கும் அல்லாஹ் இவரை வினைகள் எடை போடப்படும் இடத் திற்கு இவரைக் கொண்டு செல்லுங்கள் என்று கூறுவான்.

அப்போது நீ உன்னுடைய நன்மை தீமைகளின் எடையைப் பார் என்று அல்லாஹ் கூறுவான். பின்னர் அந்தப் பாவ ஏடுகள் ஒரு தட்டிலும் அந்தச் சீற்றேடு ஒரு தட்டிலும் வைக்கப்படும் அந்தப் பாவ ஏடுகள் எடை குறைத்து பறந்தோடிவிடும். அந்தச் சிற்றேடு கனத்து விடும் அளவிலா அருளான் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயருடன் வேறு எதுவும் கனத்து விடாது என்று கூறினார்கள். (அப்துல்லாஹ் பின் அம்ரு இப்னு ஆஸ்(ரழி) திர்மிதி, 2563, இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத்)

திரை போட்டு மறைத்து விடும் கருணையாளன் :

விசாரணை செய்வதால் மட்டும் தண்டனை உறுதியாகிவிடாது விசாரணைக்குப் பின்னர் அல்லாஹ் தான் நாடியவர்களை மன்னிக்கலாம் தான் நாடியவர்களைத் தண்டிக்கலாம். எனவே விசாரணை செய்தாலே கட்டாயம் தண்டனை கிடைத்துவிடும் என்று கருத வேண்டியதில்லை என இப்னு ஜரீர்(ரஹ்) தெரிவித்துள்ளார்கள். இவர்கள் தமது கருத்துக்கு பின்வரும் ஸஃப்வான் பின் முஹ்ரிஸ்(ரஹ்) அவர்களின் அறிவிப்பை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். (2:284)

இப்னு உமர்(ரழி) அவர்கள் புனித கஃபாவைச் சுற்றி வலம் வந்துகொண்டி ருந்தபோது ஒரு மனிதர் குறுக்கிட்டு அபூ அப்திர்ரஹ்மானே! மறுமை நாளில் அல்லாஹ்வுக்கு அவனுடைய அடியார் களுக்குமிடையே நடைபெறும் இரகசிய உரையாடல் பற்றிய நபி(ஸல்) அவர்களிட மிருந்து ஏதேனும் செவியுற்றுள்ளீர்களா? என்று கேட்டார். அதற்கு இப்னு உமர்(ரழி) அவர்கள் மறுமையில் “இறை நம்பிக்கை யாளர் அவருடைய இறைவனுக்கருகில் கொண்டு வரப்படுவார். அப்போது இறைவன் அவர் மீது தனது திரையைப் போட்டு அவரை மற்றவர்கள் யாரும் பார்க்க முடியா தவாறு மறைத்துவிடுவான்.

பிறகு அவனை நோக்கி நீ செய்த இன்ன இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா என்று அவர் செய்த எல்லாப் பாவங்களைக் குறித்தும் ஒவ்வொன்றாகக் கேட்பான் அதற்கு அவன் “ஆம்” எனது இறைவா! என்று கூறுவான் இப்படி இப்படியாக ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி அவன்தான் செய்த எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான். அச்சந்தர்ப்பத்தில் அந்த மூஃமின் நாம் இத்தோடு ஒழிந்தோம் என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும் போது இரக்கமுள்ள இறைவன் இவற்றை எல்லாம் உலகிலும் பிறருக்குத் தெரியாமல் நான் மறைத்து வைத்திருந்தேன் இன்றும் உனக்கு அவற்றை மன்னித்து மறைத்து விடுகின்றேன் என்று கூறுவான். பிறகு அவரது நற்செயல்களின் பதிவேடு அவருடைய வலது கையில் வழங்கப்படும். (ஸஃப்பான் பின் முஹ்ரிஸ் அல்மாஸினீ (ரஹ்), புகாரி: 2441, 4685,6070,7514, முஸ்லிம்:5345, இப்னுமாஜா, முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் : 1:920.

ஆனால், எனது சமுதாயத்தாரில் பாவம் செய்த அனைவரும் இறைவனால் மன்னிக்கப்படுவார்கள். ஆனால் தாம் செய்த பாவங்ளைத் தாமே பகிரங்கப்படுத்துகின்றவனைத் தவிர, காரணம் ஒரு மனிதன் இரவில் ஒரு பாவச் செயலைப் புரிந்துவிட்டுப் பிறகு அடுத்த நாள் காலையானதும் “அல்லாஹ்வோ அவனது பாவத்தைப் பிறர் எவருக்கும் தெரியாமல் மறைத்து விட்டிருக்கக் குறிப்பிட்ட இன்னாரே நேற்றிரவு நான் இன்ன இன்ன பாவங்களைச் செய்தேன் என்று அவனே மக்களிடம் கூறுவதுதான் பகிரங்கப்படுத்துவதில் அடங்கும் அவன் செய்த பாவத்தை இரவில் பிறருக்குத் தெரியாமல் இறைவன் மறைத்து விட்டான். ஆனால் அந்த இரக்கமுள்ள இறைவன் மறைத்துவிட்டதைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகின்றான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி: 6069)

முஸ்லிம்களில் பாவங்கள் புரிந்தோரையும் அல்லாஹ் இணைவைப்பாளர்களுடன் சேர்த்து நரகத்தில் போட்டுவிடுவான். அப்போது அவர்களிடம் இணை வைப்பாளர்கள்.

“நீங்கள் உலகில் கலிமா சொல்லி முஸ்லிமாக இருந்து வழிபட்டு வந்தது. உங்களுக்குப் பயனளிக்கவில்லையா?”

“உங்களது இறை நம்பிக்கை உங்களுக்குப் பயனளிக்கவில்லையா?”

“அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நீங்கள் கூறியது உங்களுக்கு எந்தப்பயனையும் அளிக்க வில்லையா?”

“நீங்கள் உலகில் முஸ்லிம்களாகத் தானே வாழ்ந்துவந்தீர்கள்?”

“உங்களுக்கு இஸ்லாம் எந்தப் பயனையும் அளிக்கவில்லையா?”

“இப்போது நீங்களும் எங்களுடனேயே நரகத்தில் இருக்கின்றீர்களே?”

என்றெல்லாம் கேட்பார்கள். அவர்களின் உரையாடல்களைக் கேட்ட அல்லாஹ் கோபமடைந்து அந்த முஸ்லிம்களை நரகத்திலிருந்து வெளியேற்றிவிடுமாறு உத்தர விடுவான்.

அப்போதுதான் அதனைக் காணும் ஏக இறை மறுப்பாளர்கள் தாமும் முஸ்லிம்களாக இருந்திருக்கலாமே என்று சில நேரங்களில் விரும்புவார்கள் 15:2, என்று ஏக இறைவன் குறிப்பிடுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறியதாக (இப்னு அப்பாஸ்(ரழி) அனஸ் பின் மாலிக்(ரழி), அபூமூசா அல் அஷ் அரீ(ரழி) முஜாஹித்(ரஹ்) ஆகியோர். இந்த 15:2 வசனத்திற்கு விளக்கமளித்துள்ளனர். தஃப்சீர் தபரீ, தப்ரானீ, மஜ்ம உஸ் ஸவாயித், தஃப்சீர் இப்னு கஸீர் : 4:1010-1013.

அபூசயீத் அல்குத்ரீ(ரழி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் சிலர் “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள். “ஆம் (காண்பீர்கள்): மேகமே இல்லாத தெளிவான நண்பகல் நேரத்தில் சூரியனைப் பார்க்க நீங்கள் ஒருவரையயாருவர் முண்டி யடித்துக் கொண்டு சிரமப்படுவீர்களா? மேகமே இல்லாத தெளிவான பெளர்ணமி இரவில் முழு நிலவைக் காண்பதற்கு நீங்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு சிரமப்படுவீர்களா? என்று கேட்டார்கள். மக்கள் “இல்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப் போன்றே மறுமை நாளில் சுபிட்சமும், உயர்வும் மிக்க அல்லாஹ்வைக் காணவும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள். மறுமை நாள் ஏற்படும்போது அழைப்பாளர் ஒருவர் “ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலகத்தில்) தாம் வழிபட்டு வந்தவர்களைப் பின் தொடர்ந்து செல்லட்டும்” என்று அழைப்பு விடுப்பார். அப்போது, அல்லாஹ்வை விடுத்து பொய்த் தெய்வங்களையும், சிலைகளையும் வழிபட்டுக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் கூட எஞ்சாமல் அனைவரும் நரக நெருப்பில் விழுவர். முடிவில் அல்லாஹ்வை வழிபட்டுக்(கொண்டு நன்மைகளும் புரிந்து) கொண்டிருந்த நல்லவர்களும் (அல்லாஹ்வை வழிபட்டுப் பாவங்களும் புரிந்து வந்த) பாவிகளும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்களும் தாம் எஞ்சி யிருப்பர்.

அப்போது (வேதக்காரர்களான) யூதர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்களிடம், “நீங்கள்எதை வழிபட்டு வந்தீரகள்?” என்று கேட்கப்படும் அவர்கள், “அல்லாஹ்வின் மைந்தர் உஸைர் அவர்களை நாங்கள் வழிபட்டுக் கொண்டிருந்தோம்” என்று பதில ளிப்பார்கள். அப்போது அவர்களிடம், “நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் தனக்கு எந்தத் துணைவியையும், குழந்தையையும் ஆக்கிக் கொள்ளவில்லை” என்று கூறப்படும். அதற்கு அவர்கள், “எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக உள்ளது. எங்களுக்கு (நீர்) புகட்டுவாயாக!” என்பார்கள். உடனே நீங்கள் தண்ணீர் உள்ள(அந்த) இடத்திற்குச் செல்லக் கூடாதா என (ஒரு திசையை)ச் சுட்டிக் காட்டப்படும். பிறகு (அத்திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அது கானலைப் போன்று காணப்படும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அப்படியே அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.

பிறகு, கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டு, “நீங்கள் எதை வழிபட்டுக் கொண்டிருந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் மஸீஹை(ஈசாவை) வழிபட்டுக் கொண்டிருந்தோம்” என்று கூறுவர். அப்போது அவர்களிடம், “நீங்கள் பொய்யுரைக் கிறீர்கள். அல்லாஹ் தனக்கு எந்தத் துணைவியையும், குழந்தையையும் ஆக்கிக் கொள்ளவில்லை” என்று சொல்லப்படும். மேலும், அவர்களைப் பார்த்து, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக உள்ளது. எங்களுக்கு(நீர்) புகட்டுவாயாக!” என்று (யூதர்கள் கூறியதைப் போன்றே) கூறுவார்கள். உடனே நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் செல்லக் கூடாதா என (ஒரு திசையை)ச் சுட்டிக் காட்டப்படும். பிறகு (அந்தத் திசையி லுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அது கானலைப் போன்று காட்சி தரும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அப்படியே அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.

இறுதியில் அல்லாஹ்வை வழிபட்டு(க் கொண்டு நன்மைகளும் புரிந்து) வந்த நல்லோர் மற்றும் (அல்லாஹ்வையும் வழிபட்டுக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோர் மட்டும் எஞ்சியிருப்பர். அவர்களிடம் அகிலத்தாரின் இரட்சகன் வருவான். (அவனுடைய தன்மைகளை முன்பே அறிந்திருந்ததன் மூலம் தம் உள்ளத்தில்) அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றத்தில் (அவன் வருவான்). அப்போது “நீங்கள் எதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலகில்) தாம் வழிபட்டுக் கொண்டிருந்தவற்றைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள்? என்று அவன் கேட்பான். அவர்கள், “எங்கள் இறைவா! உலகத்தில் நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும், (உன்னை விடுத்து) அவர்களுடன் உறவாடிக் கொண்டிராமல் (உனக்காக) அவர்களைப் பிரிந்திருந்தோம். (அப்படியிருக்க, இப்போதோ அவர்களைப் பின் தொடர்வோம்?)” என்று பதிலளிப்பார்கள்.

அப்போது இறைவன், “நானே உங்கள் இறைவன்” என்று கூறுவான். (அவர்களால் உறுதி செய்ய முடியாத தோற்றத்தில் அப்போது அவன் இருப்பதால்) அதற்கு அவர்கள், “உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம். நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டோம்” என்று இரண்டு தடவையோ அல்லது மூன்று தடவையோ கூறுவார்கள். (அந்தச் சோதனையான கட்டத்தில்) அவர்களில் சிலர் (சத்தியத்திலிருந்த) பிறழ்ந்து விடும் அளவுக்குப் போய் விடுவார்கள். அப்போது இறைவன், “அவனை இனங்கண்டு கொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம் உண்டா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள் “ஆம் (இறைவனின் கணைக்கால் தான் அடையாளம்)” என்று கூறுவார்கள். உடனே (இறைவனின்) கணைக்காலை விட்டும் (திரை) விலக்கப்படும். அப்போது (உலகத்தில்) மனப்பூர்வமாக அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்து கொண்டிருந்தவர் யார் யாரோ அவர்கள் அனைவரும் சிரம் பணிய இறைவன் அனுமதிப்பான்.

தற்காப்புக்காகவோ, பாராட்டுக்கா கவோ சிரம் பணிந்து கொண்டிருந்தவரு டைய முதுகை (நெடும் பலகையைப் போன்று) ஒரே நீட்டெலும்பாக அல்லாஹ் ஆக்கிவிடுவான். அவர் சிரம் பணிய முற் படும்போதெல்லாம் மல்லாந்து விழுந்து விடுவார். (அவரால் சிரம் பணிய முடியாது) பின்னர் அவர்கள் தம் தலையை உயர்த்து வார்கள். அப்போது முதலில் அவர்கள் பார்த்த அதே தோற்றத்தில் இறைவன் காட்சியளித்து “நானே உங்கள் இறைவன்” என்று கூறுவான். அதற்கு அவர்கள் “நீயே எங்கள் இறைவன்” என்று கூறுவார்கள். பிறகு நரகத்தின் மீது முடியை விட மெல்லிதான வாளை விடக் கூரியதான பாலம் அமைக்கப்டும். (பாவம் புரிந்த இறை நம்பிக்கையாளர்களுக்காகப்) பரிந்துரை செய்ய அனுமதி கிடைக்கும். அப்போது மக்கள், “அல்லாஹ்வே! காப்பாற்று! காப்பாற்று! என்று பிரார்த்திப்பார்கள்.

(அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் மேற்கண்டவாறு கூறிக்கொண்டிருந்த போது அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! பாலம் என்றால் என்ன? (அது எதைக் குறிக்கிறது?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “(கால்கள்) வழுக்கி விடக்கூடிய ஓர் இடமாகும். அ(ந்தப் பாலத்)தில் நஜ்துப் பகுதியில் முளைக்கும் “சஅதான்” எனப்படும் (முட்)செடியின் முற்களைப் போன்ற கொக்கிகள் இருக்கும்” என்று பதிலளித்தார்கள். இறை நம்பிக்கையாளர்கள் கண் சிமிட்டும் நேரத்தில், மின்னல், காற்று, பறவை, உயர் ரகக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் ஆகியவற்றைப் போன்று (விரைவாக அந்தப் பாலத்தைக்) கடந்துவிடுவார்கள். (அப்போது அவர்கள் மூன்று வகையினராக இருப்பார்கள்) அவர்களில் பாதுகாப்பாகத் தப்பித்துக் கொள்வோரும் உண்டு. கீறிக் காயப்படுத்தப்பட்டுத் தப்புவோரும் உண்டு. பின்புறத்திலிருந்து தள்ளப்பட்டு நரக நெருப்பில் விழுவோரும் உண்டு. இறுதியில் இறை நம்பிக்கையாளர்கள் (அந்தப் பாலத்தைக் கடந்து) நரக நெருப்பிலிருந்து தப்பிவிடுவார்கள்.

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! மறுமை நாளில் நரகத்தில் கிடக்கும் தம் சகோதரர்களின் நன்மையை வலியுறுத்தி இறைவனிடம் மிகவும் மன்றாடி வேண்டுபவர்கள் இறை நம்பிக்கையாளர்களை விட வேறெவருமில்லை. அவர்கள் (பின்வருமாறு) கூறுவார் கள். எங்கள் இறைவா! இவர்கள் எங்களுடன் தான் நோன்பு நோற்றார்கள். தொழுதார்கள். ஹஜ் செய்தார்கள் (எனவே இவர்களை நீ நரகத்திலிருந்து விடுதலை செய்வாயாக! என்று) அப்போது அவர்களிடம், “நீங்கள் (சென்று) உங்களுக்குத் தெரிந்தவர் களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்” என்று கூறப்படும்.

மேலும், (நரகத்திலுள்ள அவர்களை இவர்கள் அடையாளம் காண்பதற்கு வசதியாக) அவர்களது உடலைத் தீண்டக்கூடாதென நரகத்திற்குத் தடை விதிக்கப்படும். உடனே அவர்கள் (நரகத்திற்குச் சென்று) ஏராளமான மக்களை வெளியே கொண்டு வருவார்கள். அப்போது (நரகத்தில் இருந்த) அவர்களில் சிலருடைய கணைக்கால்களில் பாதிவரையும், (இன்னும் சிலருடைய) முழங்கால்கள் வரையும் நரக நெருப்பு தீண்டியிருக்கும். பிறகு, “எங்கள் இறைவா! நீ யாரை வெளியேற்றுமாறு கூறினாயோ அவர்களில் ஒருவர் கூட நரகத்தில் எஞ்சவில்லை (எல்லாரையும் நாங்கள் வெளியேற்றி விட்டோம்)” என்று கூறுவார்கள்.

அப்போது இறைவன் “நீங்கள் திரும்பிச் சென்று எவரது உள்ளத்தில் ஒரு பொற்காசு அளவு நன்மை இருக்கிறதோ அவரை வெளியேற்றுங்கள்” என்று கூறுவான். அவ்வாறே அவர்களும் (இன்னும்) ஏராளமான மக்களை வெளியேற்றிவிட்டு (வந்து), “எங்கள் இறைவா! நீ உத்தரவிட்ட யாரையும் அதில் நாங்கள் விட்டு வைக்கவில்லை (எல்லாரையும் வெளியேற்றி விட்டோம்)” என்று கூறுவார்கள். பிறகு இறைவன், “நீங்கள் திரும்பிச் சென்று எவரது உள்ளத்து அவரைப் பொற்காசு அளவு நன்மை இருக்கிறதோ அவரையும் (நரகத்திலிருந்து) வெளியேற்றி விடுங்கள்” என்பான். அவர்களும் ஏராளமான மக்களை வெளியே கொண்டு வருவார்கள். பின்னர் “எங்கள் இறைவா! நீ கட்டளையிட்ட ஒருவரையும் நாங்கள் விட்டு வைக்கவில்லை” என்று கூறுவார்கள். பின்பும் இறைவன் “நீங்கள் திரும்பிச் சென்று எவரது உள்ளத்தில் அணுவளவு நன்மை இருக்கிறதோ அவரை வெளியேற்றுங்கள்” என்பான். அவ்வாறே அவர்கள் (சென்று) அதிகமான மக்களை வெளியேற் றிவிட்டு (வந்து), “எங்கள் இறைவா! நரகத் தில் எந்த நன்மையையும் நாங்கள் விட்டு வைக்கவில்லை” என்று கூறுவார்கள். அறிவிப்பாளர் : அபூசயீத் அல்குத்ரீ(ரழி) அவர்கள் கூறுகிறார்கள்.

நான் கூறும் இந்த ஹதீஃதை நீங்கள் நம்பாவிட்டல், “திண்ணமாக அல்லாஹ (எவருக்கும்) அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான். அணுவளவு நன்மை இருந்தாலும் அதை அவன் பன்மடங்காக்கி (வழங்குவதுடன்) தன்னிடமிருந்து மாபெரும் சன்மானத்தையும் வழங்குவான்” எனும் (4:40வது) இறைவசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள் என்று பிறகு வலிவும் மாண்புமிக்க அல்லாஹ், “வானவர்கள் பரிந்துரைத்து விட்டார்கள். இறைத் தூதர்களும் பரிந்துரைத்து விட்டார்கள். இறை நம்பிக்கையாளர்களும் பரிந்துரைத்து விட்டார்கள். இப்போது கருணையாளர்களுக்கெல்லாம் பெரும் கருணையாளன் மட்டுமே எஞ்சியிருக்கிறான்” என்று அல்லாஹ் கூறிவிட்டு, நரகத்திலிருந்து அவனது ஒரு கைப்பிடி அளவிலான மக்களை அள்ளியயடுத்து, அறவே எந்த நன்மையும் செய்திராத ஒரு கூட்டத்தை நரகத்திலிருந்துவெளியேற்றுவான். அவர்கள் கரிக்கட்டை போன்று மாறியிருப்பார்கள்.

எனவே, அவர்களைச் சொர்க்கத்தின் நுழைவாயில்களில் உள்ள ஒரு நதியில் போடுவான். அதற்கு “ஜீவநதி” (நஹ்ருல் ஹயாத்) என்று பெயர். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) வெளியேறுவார்கள். நீங்கள் விதைப் பயிரைப் பார்த்ததில்லையா? பாறையோரங்களில் அல்லது மரங்களுக்கு அருகில் அவை வளர்கின்றன. அவற்றில் வெயில் படுமிடத்தில் இருப்பவை மஞ்சளாகவும், பச்சையாகவும் இருக்கும். (வெயில் படாமல்) நிழலில் இருப்வை (வெளிறிப் போய்) வெள்ளை நிறத்தில் இருக்கும் அல்லவா? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கிராமப் புறங்களில் (கால்நடைகளை) மேய்த்துக் கொண்டிருந்தீர்கள் போலும்” என்றார்கள்.

(தொடர்ந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆக, அவர்கள் (அந்த நதியிலிருந்து) முத்துக்களைப் போன்று (ஒளிர்ந்தவர்களாக) வெளியேறுவார்கள். அவர்களது கழுத்தில் (நரக விடுதலை பெற்றோர்” எனும்) முத்திரை இருக்கும்.(அதை வைத்து) அவர்களைச் சொர்க்க வாசிகள் அடையாளம் கண்டு கொள்வார்கள். “இவர்கள் கருணையாளனாகிய அல்லாஹ்வால் (நரகத்திலிருந்து) விடுதலை செய்யப்பட்டவர்கள்: (உலகில்) எந்த நற்செயலும் புரிந்திராமலும் எந்த நன்மையும் செய்து வைத்திராமலும் இருந்த இவர்களை அல்லாஹ்வே (தனது தனிப்பெரும் கருணையால்) சொர்க்கத்திற்கு அனுப்பினான்” என்று பேசிக்கொள்வார்கள்.

பிறகு (அவர்களிடம்) இறைவன், “சொர்க்கத்திற்குள் செல்லுங்கள்: அங்கு எதையயல்லாம் நீங்கள் காண்கிறீர்களோ அது உங்களுக்கு உரியது” என்று கூறுவான். அதற்கு அவர்கள், “எங்கள் இறைவா! அகிலத்தாரில் யாருக்கும் வழங்காத (பாக்கியத்)தை எங்களுக்கு நீ வழங்கிவிட்டாய்” என்று (நன்றியுடன்) கூறுவார்கள். அதற்கு இறைவன், “உங்களுக்கு இதைவிடச் சிறந்த அந்த ஒன்று எது?” என்று கேட்பார்கள். அதற்கு, “எனது திருப்தி(தான் அது). இனி ஒருபோதும் உங்கள் மீது நான் கோபம் கொள்ளமாட்டேன்” என்பான் இறைவன். (புகாரி: 7439, முஸ்லிம்: 302)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நெருப்பில் வீசப்பட்ட ஓர் அடியான் நரகத்தில் “யா ஹன்னான்” – பரிவு மிக்கவனே “யா மன்னான்”-பெருங் கொடையாளனே! என்று ஆயிரம் ஆண்டுகள் அல்லாஹ்வை அழைத்துகொண்டிருப்பான். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் “நீர் சென்று என்னுடைய இந்த அடியானை என்னிடம் அழைத்து வரும்” என்று கட்டளையிடுவான். ஜிப்ரீல் (அலை) அவர்கள் அங்கு செல்வார்கள் அங்கு நரகவாசிகள் அடையாளம் காண முடியாத வகையில் குப்புறக் கவிழ்ந்தவர்களாக அழுது கொண்டிருப்பதைக் காண்பார்கள். உடனே வல்லமையும், மாண்பும் மிக்க இறைவனிடம் திரும்பி வந்து நடந்ததைத் தெரிவிப்பார்கள்.

அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அல்லாஹ் “அந்த அடியான் இன்ன இடத்தில் இருக்கின்றான். அவனை என்னிடம் அழைத்து வரும்” எனக் கட்டளையிட ஜிப்ரீல்(அலை) அவர்கள் அவனை அல்லாஹ்வின் சமூகம் கொண்டுவந்து நிறுத்துவார்கள். அவனிடம் அல்லாஹ் “அடியானே! உனது தங்குமிடமும், ஓய்விடமும் எவ்வாறு உள்ளது? என வினவுவான். அந்த அடியான் “என் இறைவா! அது மிகவும் மோசமான தங்குமிடமும், ஓய்விடமாகவும் உள்ளது” என்று கூறுவான். அல்லாஹ் “என் அடியானைத் திருப்பக் கொண்டு செல்லுங்கள்” எனக் கட்டளையிடுவான் .

***************************************************************************

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ, குண்டூர்,

 1. எந்த உணவு சிறந்த உணவு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  தமது கையால் உழைத்து உண்பது தான் சிறந்த உணவு. மிக்தாம்(ரழி), புகாரி:2072
 2. மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் யார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  “இரட்டை முகத்தான்”  புகாரி:7179
 3. யாருக்கு பயமில்லை என்று அல்லாஹ் கூறுகிறான்?
  எவர்கள் எனது இரட்சகன் அல்லாஹ்வே என்று கூறி அதில் உறுதியாக நிலைத்து இருப்பவர் கள். 46:13
 4. “துப்பஃ” என்றால் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
  குற்றம் புரிந்ததனால் அல்லாஹ்வால் அழிக்கப்பட்ட சமூகத்தினர்.  அல்குர்ஆன்: 44:37
 5. ஒருவர் செல்வமும் வாழ்நாளும் அதிகரிக்க என்ன செய்யவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  தமது உறவினர்களுடன் சேர்த்து வாழட்டும். அனஸ்பின் மாலிக்(ரழி), புகாரி: 2067
 6. திருமணத்தினால் பயன் என்ன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?|
  “பார்வையை கட்டுப்படுத்தும், கற்பைக் காக்கும்” அப்துல்லா(ரழி) புகாரி:1905
 7. நூஹ்(அலை) அவர்கள் காலத்தில் மக்கள் வணங்கிய கடவுள்கள் என்று எவற்றை அல்லாஹ் கூறுகிறான்?
  வத், ஸூவாஉ, யகூறூஸ், யஊக், நஸ்ர். 71:23
 8. ஜீப்ரில்(அலை) அவர்களின் சிறப்புகள் பற்றி அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?
  வலிமை மிக்கவர் அல்லாஹ்விடத்தில் மதிப்புக்குரியவர், வானவர்களின் தலைவர், நம்பிக்கைக்குரியவர்.  அல்குர்ஆன் :81:20,21
 9. யார் வெற்றி பெற்றுவிட்டவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  முஸ்லிமாகி அல்லாஹ் வழங்கியதை போதுமெனக் கருதினவர். முஸ்லிம்:1903
 10. யாருடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழச் செய்வதாக அல்லாஹ் கூறுகிறான்?
  நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்பவர்களை. அல்குர்ஆன் : 16:37
 11. எவர்களுடைய முகங்கள் கருமையாக இருக்கும் என அல்லாஹ் கூறுகிறான்?
  நம்பிக்கை கொண்ட பின் நிராகரித்தவர்கள். அல்குர்ஆன் : 3:106
 12. நாய் வாய் வைத்த பாத்திரத்தை எவ்வாறு கழுவ வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  7 முறை நீரினாலும், 8ஆவது முறை மண்ணாலும்.     நஸயீ: 68(அரபு & ஆங்கிலம்)
 13. யார் எனக்கு விரோதியாவான் என அல்லாஹ் கூறுகிறான்?
  ஜிப்ரீலிக்கும், மீக்காயிலுக்கும் விரோதியானவர்கள். அல்குர்ஆன் : 2:98
 14. நரகத்தில் நுழைவோருக்கு உதாரணம் காட்டிய இரு பெண்கள் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
  நூஹ் நபியின் மனைவி, லூத் நபியின் மனைவி. அல்குர்ஆன் : 66:10
 15. நம்பிக்கையாளர்களுக்கு உதாரணமாக இரு பெண்கள் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
  ஃபிர்அவ்னின் மனைவி, மர்யம்(அலை).  அல்குர்ஆன் : 66:11,12
 16. யாரை நரகை விட்டும் அல்லாஹ் விலக்குகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  அல்லாஹ்வின் பாதையில் பாதங்களில் புழுதி படிகின்றவர்களை. புகாரி:907
 17. எந்த ஐந்து செயல்கள் இயற்கை வழிமுறைகள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  மீசை கத்தரித்தல், அக்குல் முடிகளைக் களைதல், நகங்களை வெட்டுதல், அடி முடிகளை களைதல், கத்னா செய்தல்.  நஸயீ : 10
 18. நபி(ஸல்) அவர்களின் ரகசியம் பற்றி பேசியவர்கள் யார் என ஹதீஃதில் கூறப்பட்டுள் ளது?
  ஹப்ஸா(ரழி), ஆயிஷா(ரழி) புகாரி: 4914
 19. யாருக்கு நேர்வழி காட்டவும் மாட்டான், துன்புறுத்தலும் உண்டு என அல்லாஹ் கூறுகிறான்?
  அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதோர்களை. அல்குர்ஆன்: 16:104

***************************************************************************

Previous post:

Next post: