சிறப்பின் சிகரம்

in 1990 ஜூன்

சிறப்பின் சிகரம்

முஹிப்புல் இஸ்லாம்

அல்லாஹ்(ஜல்) மலக்குகளிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் தூதர்களைத் (தாமாக) தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.  நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன்; பார்ப்பவன்”   (22:75)

ஒருக் குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் நாட்டில் எத்தனையோ மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரிலும் அல்லாஹ்(ஜல்) ஒருவரை மட்டும் தன் (இறைத்)தூதராய் தெரிவு செய்கிறான். (இறைத்)தூதுத்துவம் என்பது இறைவனால் அருளப்படுவது அன்றி, மனித முயற்சியால் பெறப்படுவதன்று. (இறைத்)”தூதுத்துவம்” அருளப்படுவதன் மூலம் இறைவனால் இறைத் தூதர்கள் சிறப்பிக்கப்படுகிறார்கள்.

மனித சமுதாயத்தில் முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்களுக்கு அல்லாஹ்(ஜல்) நபித்துவம் அருளி சிறப்பித்துள்ளான். இறைத்தூதர் நூஹ்(அலை) அவர்களைத் தன் தூதராய் தெரிவு செய்தான். இப்றாஹிம்(அலை) அவர்கள் காலத்தில் அதைப் போன்று எத்தனையோ மனிதர்கள் வாழ்ந்திருக்க, அல்லாஹ்(ஜல்) இப்றாஹிம்(அலை) அவர்களைத் தன் தூதராய் தெரிவு செய்து சிறப்பித்தான். இப்புவியில் இறைவனால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து நபிமார்களும், இறைத்தூதர்களும் இவ்வாறே சிறப்பிக்கப்பட்டார்கள்.

காலம் இடம், மொழி இவைகளை அனுசரித்து தேர்வு செய்யப்பட்ட நபிமார்கள் அல்லது இறைத்தூதர்க்ள இறைவனால் சிறப்பிக்கப்படுவது “இறை நியதி”.

இறை நியதிக்கு முரண்படுவதே மனித இயல்பு! இறைவனால் சிறப்பிக்கப்பட்ட இறைத்தூதர்களை மனிதர்கள் இழிவுப்படுத்தினார்கள். இது மனித இயல்பு!

இறைவனது நேர்வழி காட்டுதல்களை கொள்கையாலும், சொற்செயலாலும் நடைமுறைப்படுத்திக் காட்டிய இறைத்தூதர்கள் இறைநெறியின் நேர்வழியில் மக்களை அழைத்தபோதும் இஸ்லாமிய அழைப்புப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டபோதும் அவர்கள் நிராகரிக்கப்பட்டதோடு, அவர்களது வாழ்க்கை நெறியும் பெரும்பான்மையோரால் நிராகரிக்கப்பட்டது.

இறைத்தூதர்கள் மனித சமுதாயத்தின் விமர்சனப் பொறியால் கரிக்கப்பட்டார்கள்; தூற்றப்பட்டார்கள்; தூஷிக்கப்பட்டார்கள். இம்சிக்கப்பட்டார்கள். வர்ணனைக் கெட்டாத துன்பத்திற்கும் துயரத்திற்கும் உள்ளாக்கப்பட்டார்கள். உச்சக் கட்டம்! சில இறைத்தூதர்கள் கொல்லப்பட்டார்கள்.

“………அல்லாஹ்வின் வாக்குகளை அவர்கள் நிராகரித்து விட்டதாலும், அநியாயமாக நபிமார்களை கொலை செய்ததாலும்..”  (4:155)

“…..வறுமையும் இழிவும் அவர்கள் மீது சுமத்தப்பட்டன. மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குகளை நிராகரித்தும் அநியாயமாக நபிமார்களை கொலை செய்தும் வந்தது தான்……”   (2:61)

எவ்வளவுக் கொடுரமாக இறைத்தூதர்கள் இழிவுப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா? சில இறைத்தூதர்கள் கொல்லப்பட்டதுக் குறித்து மேலும் அறிய விழைவோர்  2:91, 3:21, 3:112, 3:131 முதலிய இறைவாக்குகள் மூலம் அறிந்துக் கொள்ள முடியும்.

இறைத்தூதர்களை ஏற்றுக் கொண்டவர்கள் சொற்பம். மற்றவர்கள் பெரும்பான்மையோர்! இறைத் தூதர்களை இம்சித்தார்கள் என்பதை இறைவன் இறைமறை நெடுகிலும் எடுத்துக்காட்டுகிறான் என்றால் நிலைமை எத்துனை மோசமாயிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

இறைத் தூதர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களை நேருக்கு நேர் சந்தித்து முகத்துக்கு முகம் பார்த்து அவர்கள் நடைமுறைகளை நடை, உடைப் பாவணைகளை உற்று நோக்கிய பெரும்பான்மையான மக்கள் அவர்களை நிராகரிக்க காரணம் என்ன?

“…மனிதர்களிடம் நேர்வழி(க்காட்டி) வந்தபோது “ஒரு மனிதரையா அல்லாஹ்(ஜல்-தன்) தூதராய் அனுப்பினான்” என்று கூறுவதைத் தவிர அவர்கள் ஈமான் கொள்ளுவதை வெறெதுவும் தடுக்கவில்லை.”  (17:94)

இறைதூதுத்வம், இறைஅத்தாட்சிகள் இறைவேதங்கள். இறைவழி இவைகள் ஒரு மனிதனுக்கு அருளப்படுவதை மற்ற பெரும்பான்மையோர் அங்கீகரிக்கவில்லை. விளைவு: இறை மார்க்கத்துடன் இறைத் தூதர்களும் நிராகரிக்கப்பட்டார்கள்.

இறைத்தூதர்களும் மனிதர்களாயிருப்பதால், தங்களுக்கு கிடைக்காத சிறப்பு அவர்களுக்குக் கிடைத்ததால் ஏற்ப்பட்ட பொறாமை, அவர்கள் மீது ஏற்ப்பட்ட கண்மூடித்தனமான வெறுப்பு இறைநிராகரிப்பிற்கு இட்டுசெல்ல, மனித சமுதாயத்தில் பெரும்பான்மையோர், இறைத்தூதர்களுக்கு இறைவன் அருளிய சிறப்புகளை ஏறெடுத்துப் பார்ப்பதிலிருந்து தடுத்துவிடுகிறது. இது மனித சமுதாயம், உயித் வாழுங்காலை இறைத் தூதர்களுக்கிழைத்த மாபெரும் கொடுமை! அதே__

இறைத் தூதர்கள் மரணித்தப்பின் , மனித சமுதாயம் முந்தைய நிலையிலிருந்து முற்றிலும் மாறிவிடுகிறது. உயிரோடு வாழுங்காலை-இறைத் தூதர்கள்மேல் மனித சமுதாயம் காட்டிய கண்மூடித்தனமான வெறுப்பு, பொறாமை, அவர்கள் மரணித்தப்பின் கண்மூடித்தனமான பக்தியாக பெறுக்கெடுத்து விடுகிறது. முரண்பாடுகளின் மொத்த உருதான் மனித சமுதாயமோ..? மனித சமுதாயத்தின் முரண்பாட்டை என்னவென்பது……?

உயிர் வாழுங்காலை மனிதர்கள் என்பதால் இறைத் தூதர்களை எற்க மறுத்த மனிதர்கள் அவர்கள் இறந்தப்பின் தெய்வீக அம்சங்களுக்கு இறைப் பண்புகளுக்கு அவர்களை உரிமையாளர்களாக்கி விடுகிறார்கள். அவர்களை தெய்வங்களாக வணங்கி வழிபட்டு பூஜிக்கத் தொடங்கி விடுகிறார்கள். அவர்களின் உருவ சிலைகள் வழிபாட்டு ஸ்தலங்களில் இடம்பெற்றுவிடும். அல்லது அவர்களின் கல்லறைகள் வணக்கஸ்தலங்களாய் மாறிவிடும். வாழும் காலங்களில் இறைத்தூதர்கள் மனிதர்கள் என்ற காரணத்தால் வெறுப்பிற்க்குள்ளானார்கள். மரணித்தப்பின் தெய்வங்களாய் அதே மனிதர்களால் உயர்த்தப்படுகிறார்கள். இறைத்தூதர்களையும், இறைத்தூதர்களுக்க இறைவனால் அருளப்பட்டவைகளையும் ஏற்றொழுகியவர்கள் மட்டுமே இதிலிருந்து விதிவிலக்குப் பெறுகிறார்கள்.

அல்லாஹ்(ஜல்) ஒருவனை மட்டுமே ஒரே இறைவனாக ஏற்றுக் கொண்டு இறைப்பண்புகள் அனைத்தையும் அவனுக்கு மட்டுமே சொந்தமாக்கியவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையால் ஓரிறைக் கொள்கைக்கு செயல் வடிவம் கொடுத்து, மனித சமுதாயத்தை அதன்பால் அழைத்தவர்கள் தான் இறைத்தூதர்கள். வாழுங்காலத்தில் வெறுக்கப்பட்டவர்கள் மரணித்தப்பின் வாழுந்தெய்வங்களாக உயர்த்தப்பட்டு விடுகிறார்கள். மனித சமுதாயம் இறைத்தூதர்கள் உயிர் வாழுங்காலை இழைத்த கொடுமையைக் காட்டிலும் இது மாபெறும் கொடுமை அல்லவா….?

ஓரிறைக் கொள்கையை உயிர் மூச்சாய்க் கொண்டு அதன்பால் மக்களை அழைத்த இறைத்தூதர் இப்றாஹிம்(அலை) அவர்களை ஏற்க அன்று ஒருவரும் இல்லை. மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்தமான எதிர்ப்பிற்க்கிரையானார்கள். மனிதர்கள் அனைவரும் இறைத்தூதர் இப்ராஹிம்(அலை) அவர்களை தண்டிக்கவே முன்வந்தார்கள். இவ்வுலகிலேயே அவர்களுக்கு நரக(நெருப்பு) தண்டனை!ஸ

இறைத்தூதர் இப்றாஹிம்(அலை) அவர்கள் உயிர் வாழ்ந்தகாலை அவர்கள் கொண்டு வந்த கொள்கையை நிராகரித்ததோடு நின்றிடாமல் அநீத கொள்கைக்கு செயல்வடிவம் கொடுத்த இப்றாஹிம்(அலை) அவர்களுக்கு மனித சமுதாயம் தந்த தன்டனை என்ன தெரியுமா? நெருப்புக் குண்டம்! மரணித்தப்பின் அதே இப்றாஹிம்(அலை) அவர்களின் விக்ரஹமாய் வடிக்கப்பட்டு கஃபத்துல்லாஹ்வில் வைத்தே வணங்கப்பட்டது.

மக்களிடையே இருக்கும்போது இறைத்தூதர் ஈஸா(அலை) அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தான் என்ன?.. அல்லாஹ் அளவில் உயர்த்தப்பட்டப் பின் அவர்கள் தெய்வமாக்கப்பட்ட விந்தைத் தான் என்ன? இதை இன்றளவும் மனித சமுதாயம் கணகூடாய் கண்டு வருகிறது.

இறுதி இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு முன்னருள்ள இறைத்தூதர் ஈஸா(அலை) அவர்களுக்கு அவரைப் பின்பற்றுவோர் என்றுக் கூறிக்கொள்வோர் இழைத்துக் கொண்டிருக்கும்  கொடுமையை நன்குணர்ந்தே இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் தங்கள் சமூகத்தாரை எச்சரிக்கின்றார்கள்.

கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈஸா(அலை) அவர்களைப் புகழ்வதில் வரம்பு மீறி விட்டதைப் போல் என்னையும் நீங்கள் வரம்பு மீறி புகற்ந்து விடாதீர்கள். நான் ஒரு அடியான்தான்! எனவே என்னைப் பின்பற்றி “அவர் அல்லஹ்வின் அடியாரும், அவனுடைய தூதருமாவார்” என்றேக் கூறுங்கள் என்று தான் நபி(ஸல்)அவர்களும் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள். (உமர்(ரழி) புகாரீ, முஸ்லிம்)

Previous post:

Next post: