மத மாற்றம்!

in 1990 ஏப்ரல்

மத மாற்றம்!

அபூ அப்துல்லாஹ் 

21ம் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் உலகெங்கும் “இஸ்லாம்” பற்றிய சிந்தனை உணர்வு மக்களிடையே ஏற்பட்டு வருகிறது. அதுவும் 19-ம் நூற்றாண்டில் தோன்றிய கம்யூனிஸம் பற்றி மக்கள் நம்பிக்கை இழந்தப்பின் அவர்களிடையே இஸ்லாமிய சிந்தனை ஏற்ப்பட்டு வருகிறது. உலகின் பல பகுதிகளில் மக்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு வருகிறார்கள். இதனை செய்திப் பத்திரிக்கைகள் தங்கள் சொந்தக் கண்ணோட்டத்துடன் தங்கள் இதழ்களில் இடம் பெற செய்து வருகின்றனர். பெரும்பாலான இதழ்கள் மதமாற்றம் என்ற தலைப்பில் செய்திகளை வெளியிடுகின்றனர்.

அவற்றை நடத்துபவர்களின் விளக்கத்தின் அடிப்படையில் அவ்வாறு வெளியிடுகிறார்கள். ஆணால் முஸ்லிம்களால் அதுவும் தங்களைச் சிறந்த சிந்தனையாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களால் நடத்தப்படும் இஸ்லாமிய இதழ்களிலும் மத மாற்றம் மன மாற்றம் என்ற தலைப்புக்களில் செய்திகள் இடம் பெறுவது மிகவும் வேதனைக்குரியது. இந்த சிந்தனையாளர்களும் இஸ்லாத்தின் உண்மை நிலையை உணர்ந்துள்ளதாகத் தெரியவில்லை.

“எம்மதமும் சம்மதம்” என்ற தத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்கள் இவ்வாறுக் கூறலாம். மனதிற்கு பிடித்த ஒரு மதத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லலாம். சென்னையில் இருந்துக் கொண்டிருந்த ஒருவர் மனம் மாறி திருச்சியில் இருப்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அல்லது பிறிதொரு இடத்தையும் தேர்ந்தெடுக்கலாம். ேமலை நாட்டு நடை உடையைப் பின்பற்றியவர் மனம்மாறி தமிழக நடை உடையையோ அல்லது வேறொரு நாட்டின் நடை உடையையோ பின்பற்றலாம்.

இங்கு மனமாற்றம் என்பது பொருத்தமானதே. ஆணால் குடிப்பழக்கத்தை உடைய ஒருவன் மனம் மாறி அத்தீயப் பழக்கத்தை விட்டுவிட்டான் என்று கூறுவது முறையல்ல. இங்கு மனமாற்றம் என்பதை விட மனந்திருந்தி அத்தீய பழக்கத்தை விட்டுவிட்டான் என்பதே பொருத்தமானதாகும். காரணம் ஆகுமான ஒன்றை விட்டு பிறிதொரு ஆகுமானதை அவன் தேர்ந்தெடுக்கவில்லை. ஆகாததை விட்டு விடுகிறான். இங்கு மனமாற்றம் என்பதைவிட மனந்திருந்துதல் என்பதே பொருத்தமானதாகும்.

திருச்சியிலிருந்து சென்னை செல்வதாக எண்ணி சென்னை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த ஒருவர் திடிரென்று சென்னை செல்வதை விடுத்து மதுரை செல்ல முடிவு செய்து மதுரை செல்வதை மனமாற்றம் என்று சொல்லலாம். ஆணால் சென்னை செல்வதாக எண்ணிக் கொண்டு மதுரை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தவர் இடையில் தான் தவறான வழியில் செல்லுவதை உணர்ந்து மதுரை நோக்கி செல்வதை விட்டு சென்னை நோக்கி சென்றால் இதனை மனமாற்றம் என்று சொல்வது முறையல்ல தனது தவறை உணர்ந்து திருந்தி சரியான வழியில் சென்றுக் கொண்டிருக்கிறார் என்றே சொல்ல முடியும்.

மனிதனுக்கு இறை கொடுத்த ஒரே வாழ்க்கை நெறி மனிதர்களின் மனோ விருப்பங்களுக்கு ஏற்றவாறு மனிதர்களால் திரிக்கப்படும் போது அது மதமாக உருவாகின்றது. மனிதஅபிப்ராயம் என்று வரும்போது பல அபிப்ராயங்கள் தோன்றி பல மதங்கள் தோன்றியுள்ளன. மதங்கள் மனித வாழ்வின் சுபீட்சத்திற்கும் வளமான, சுமுகமான வாழ்விற்கும் வழி வகுக்கின்றன என்று மதவாதிகள் கூறிக்கொண்டாலும் உண்மை அதுவல்ல. மனித யுக்தியால் தோன்றியுள்ள மதங்கள் அனைத்தும் மனித ஒற்றுமையைக் குலைப்பவனாகவும். மனமாச்சரியங்களையும், குரோத உணர்வுகளையும் வளர்ப்பவனாகவும் இருக்கின்றன. என்பதே அனுபவத்தில் கண்ட உண்மையாகும்.

ஆதி நபி ஆதம்(அலை) முதல் இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் வரை உலகில் தோன்றிய அல்லாஹ்வின் தூதர்கள் அனைவரும் ஒரே வாழ்க்கையை போதித்தனர். அதுவே இஸ்லாம்  மார்க்கம். அந்த நபிமார்களுக்குப் பின்னால் அவர்களைப் பின்பற்றுகிறவர்கள் அந்த நபிமார்களின் போதனைகளில் தங்கள் மனித அபீப்ராயங்களையும் புகுத்தி மக்களுக்கு அவற்றை மார்க்கமாக போதித்தனர். இதன் காரணமாக ஒவ்வொரு நபியின் சமுதாயத்தவரிலும் பல பிரிவினரும், அதன் மூலம் பல மதத்தினரும் தோன்றினர். இதிலிருந்து இறைவனால் மனிதனுக்கு ஒரே வாழ்க்கை நெறியாக கொடுக்கப்பட்டது.

“இஸ்லாம்” மார்க்கம் என்பதும் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டவையே பல மதங்கள் என்பதும் தெளிவாத் தெரிகின்றது. இந்த நிலையில் தூய இஸ்லாம் மார்க்கத்தையும் மதம் என்று அழைப்பதும், மனித அபீப்ராயங்களான மதங்களை விட்டு இறை கொடுத்த வாழ்க்கை நெறியான இஸ்லாத்தை ஏற்பவர்களைப் பற்றி அறிவிக்கும் போது “மனமாற்றம்-மத மாற்றம்” என்று சொல்லுவதும் தவறாகும். மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறும்போது மனமாற்றம்-மதமாற்றம் என்று சொல்வதில் பொருள் இருக்கின்றது.

ஆனால் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்ட மனமாச்சரியங்களை உண்டாக்கும் மதங்களை விட்டு இறைவனால் கொடுக்கப்பட்ட வாழ்க்கை நெறியான இஸ்லாத்தை தழுவும்போது அதனை  மனமாற்றம்-மதமாற்றம் என்று குறிப்பிடுவது தவறாகும். இங்கு தவறை உணர்ந்து மனந்திருந்தி சத்தியத்தின் பால்-நேர்வழியின் பால்- இஸ்லாத்தின் பால் வாருகிறார்கள் என்று குறிப்பிடுவதே முறையாகும்.

இஸ்லாமிய பத்திரிக்கைகளும் சிந்தனையாளர்களும் நபி(ஸல்) அவர்களின் வருகைக்குப் பின்பே இஸ்லாம் தோன்றியது போன்று சித்தரித்ததும், இஸ்லாத்தை மதங்களில் ஒன்றென்றும் மக்களின் உள்ளங்களில் தோற்றுவித்து வருகின்றனர். அதுக் கொண்டு பெருமையும் படுகின்றனர். ஆழ்ந்து சிந்தித்தால் இவை ஏற்ப்படுத்தும் பெரும் கெடுதிகளை இவர்களால் உணர்ந்துக் கொள்ள முடியும். அவ்வாறு கூறுவதால் நபி(ஸல்) அவர்களுக்கு முன்பிருந்த நபிமார்களின் இஸ்லாமிய மார்க்கத்தை மனித அபிப்ராயங்களால் திரித்து மதங்களாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் மதவாதிகள் தாங்கள் மிகவும் பழமை வாய்ந்த மதங்களில் இருப்பதாகவும், நேற்றுத் தோன்றிய ஒரு புதிய மதமென்றும் கூறி தங்கள் மதங்களை நியாயப்படுத்துகின்றனர்.

இயற்கையிலெயே பழம்பெருமை பேசும் இயல்பு மனிதனுக்குண்டு. அதனால் தான் ஒவ்வொரு இறை தூதரும் சத்திய இஸ்லாத்தைப் போதிக்க முற்ப்பட்டபோதெல்லாம், தாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கும் மனித அபிப்ராயங்களால் உண்டான மதங்களைக் கொண்டு பெருமை பேசி சத்தியத்தை நிராகரித்தனர். இப்றாஹிம்(அலை) அவர்களின் நேரடி சந்ததிகளான குறைஷ்களே இதற்கு நல்ல உதாரணமாகும். சத்திய இஸ்லாத்தைப் போதித்தபோதே நிலை இதுவென்றால், அந்த சத்திய இஸ்லாத்தை மதமாக்கினால் அதன் நிலை என்னவாகும் என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும்.

எனவே இஸ்லாமிய சிந்தனையாளர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் நாம் விடுக்கும் அன்பு வேண்டுகோள் இஸ்லாத்தை மறந்தும் மதம் என்று சொல்லாதீர்கள். இஸ்லாம் இறைக் கொடுத்த அழகிய வாழ்க்கை நெறி என்று விளக்கிச் சொல்லுங்கள். முஹம்மது(ஸல்) அவர்களின் போதனைக்குப்பின் தோன்றியது “இஸ்லாம்” என்று சொல்லவே சொல்லாதீர்கள். முதல் இறை தூதர் ஆதம்(அலை) அவர்கள் முதல் அனைத்து தூதர்களும் மக்களுக்குப் போதித்து வந்ததே இஸ்லாம் மார்க்கம். அதனை மனிதர்களே பல மதங்களாக ஆக்கிக் கொண்டனர் என்று தெளிவாக சொல்லுங்கள். மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட மதங்கள் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல என்பதையும் மக்களுக்குத் தெளிவுப்படுத்துங்கள்.

“எம்மதமும் சம்மதம்” என்று மனிதர்கள் கோடும் கோஷம் மதவாதிகளிடையே சரியாக இருக்கலாம். ஆனால் இறைவன் இக்கோஷத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். (பார்க்க: குர்ஆனின் நற்போதனைகள் பக்கம் 9) இறைவன் கொடுத்த “இஸ்லாம்” மார்க்கத்தை மனிதன் தன் மனோ இச்சைப்படி ஏற்ப்படுத்திக் கொண்ட மதங்களோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். இதனால் இறை சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதைத் தெளிவாக மனித சமுதாயத்திற்கு எச்சரிக்க முன் வாருங்கள்.

மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்ட மதங்களைவிட்டு விடுபட்டு இறைக்கொடுத்த சத்தியவழி-மார்க்க நெறி- இஸ்லாத்தைத் தழுவும் நல்லவர்களைப் பார்த்து மதம் மாறினார்கள் என்று சொல்லவே சொல்லாதீர்கள். மனமாற்றம்- மதமாற்றம் என்று எழுதாதீர்கள் தங்கள் மூதாதையர்களின் மனோ இச்சைக் காரணமாகத் தோற்றுவிக்கப்பட்ட கோணல் வழிகளை விட்டு-மதங்களை விட்டு மனம் வருந்தி-திருந்தி-பிராயசித்தம் செய்துவிட்டு அவர்களுக்குச் சொந்தமான இயற்கை மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர் என்றுத் தெளிவாகக் குறிப்பிடுங்கள். இஸ்லாம் மதங்களை விட்டும் மாறுபட்ட நேர்வழி என்பதை நிலைநாட்டுங்கள்.

********

    ரமழானில் பகற்கால நோன்பு, இரவு காலத் தொழுகை ஆகியவற்றின் பலன்

ஒருவர் (இறைவன் மீது) நன்னம்பிக்கை, நல்லாதரவுடன் ரமழானில் நோன்பு நோற்றால் அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும். ஒருவர் நன்னம்பிக்கை, நல்லாதரவுடன் ரமழானில் நின்றுத் தொழுதால், அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும். ஒருவர் நன்னம்பிக்கை, நல்லாதரவுடன் “லைலத்துல் கத்ரில்” நின்று தொழுதால் அவரது முந்தையப் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.  அபூஹுரைரா(ரழி), புகாரீ, முஸ்லிம்)

Previous post:

Next post: