விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

in 1990 ஏப்ரல்,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

தங்களின் அறிவுப்பூர்வமான, மார்க்க ரீதியான சிந்தனையைத் தூண்டக்கூடிய எழுத்து வன்மையால் வாசகர்கள் மிகவும் கவரப்பட்டுள்ளார்கள். ஆனால் மார்ச் மாத “அந்நஜாத்தில்” சின்னஞ்சிறிய விஷயங்கள் தான் ஆனால்…..” என்ற தலைப்பில் எழுதப்பட்ட விஷயங்கள் முஸ்லிம்களிடையேயும், அந்நஜாத் வாசகர்களிடையேயும் ஒரு அதிருப்தியையும், பீதியையும் ஏற்ப்படுத்தியுள்ளது.

 “பாபரி மஸ்ஜித் விவகாரம் அறிவு ஜீவிகளிடையே மிகப்பெரிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது. முஸ்லிம்களின் கெளரவப் பிரச்சனை, இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையினரான முஸ்லிம்களின் வாழ்வா, சாவா என்பதை முடிவு செய்யும் பிரச்சனை என்றெல்லாம் பேசி விஷயத்தை முற்ற வைத்துள்ளார்கள்” என்கிறீர்கள் வேறொரு இடத்தில் ஒரு மஸ்ஜிதை கட்டி வாங்கிக் கொண்டு பாபரி மஸ்ஜிதை வகுப்பு வெறியர்களிடம் கையளித்து விட வேண்டும் என்பது தங்களின் வேணவா. இதற்கு ரசூல்(ஸல்) அவர்கள் குறைஷ் குஃப்பார்களிடம் செய்துக் கொண்ட ஹுதைபிய்யா உடன்படிக்கையை உதாரணம் காட்டுகிறீர்கள் குறைஷ் குஃப்பார்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனையும் ஒரே மாதிரியானதல்ல.

அதாவது கஃபத்துல்லாஹ் யாருக்குச் சொந்தம் என்பது அல்ல பிரச்சனை. ஆனால் இன்று பாபரி மஸ்ஜித் யாருக்குச் சொந்தம் என்பதில் தான் பிரச்சனை எழுந்துள்ளது. கஃபத்துல்லாஹ் ஒருக் குறிப்பிட்ட பிரிவினருக்குத் தான் சொந்தம் என்பதற்கு ஆதாரங்களில்லை. எல்லா நாட்டு மக்களும் இன மக்களும் கஃபத்துல்லாஹ்விற்கு உரிமையுடையவர்களாகவே இருந்திருக்கிறார்கள். கஃபத்துல்லாஹ்விற்கு தங்கு தடைகளின்றி வந்துப் போயி கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பாபரி மஸ்ஜித் முஸ்லிம்களுக்குத் தான் சொந்தம் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.

தற்போதைய அயோத்தியாவில் தான் ராமபிரான் பிறந்தாரா? ராமர் வாழ்ந்ததாகக் கூறப்படும் தராத யுகத்தில் அயோத்தியாவில் மனித சஞ்சாரம் இருந்ததா? ராமபிரான் பிறந்த இடம் குறித்து அறிஞர்களிடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. 10க்கு மேற்ப்பட்ட இடங்களை ராமர் பிறந்த இடங்களாக அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்று உறுதியாக யாராலும் கூற முடியவில்லை. பல நூற்றாண்டுகளாக இல்லாத பிரச்சனை திடிரென்று கிளப்பி விடப்பட்டுள்ளது.

தற்போது பாபரி மஸ்ஜித் உள்ள இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்பதற்கு அறவே ஆதாரமில்லை. எல்லாம் சோடனைதான். சிலர் தங்கள் கோரிக்கையை எப்படியாவது நிலை நாட்டிவிட வேண்டுமென்பதற்காகவே ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது முஸ்லிம்கள் ஏன் பாபரி மஸ்ஜிதை விட்டுவிட வேண்டும்? அதற்கு பகரமாக வேறு இடத்தில் ஒரு மஸ்ஜிதை கட்டி வாங்கிக் கொள்ள வேண்டும்?

உங்களுக்கு உரிமையுள்ள, சொந்தமான சொத்தில் தகராறு ஏற்ப்பட்டால் அந்த சொத்தில் உங்கள் உரிமையை நிலைநாட்ட ஒரு போரே செய்யலாம். அப்படிச் செய்யும் போரில் மரணமடைந்தால் கூட, மரணமடைந்தவருக்கு ஷஹீதுடைய பதவிக் கிடைக்கும் என்ற ஹதீஸ் தங்களுக்குத் தெரியாமல் இருக்காது. அப்படி இருக்கும்போது அதற்காக போராடி  உரிமையை நிலைநாட்டுவதுதான் சிறந்தது.

தாங்கள் சொல்வதுப் போல் பாபரி மஸ்ஜிதைவிட்டு விடுவதாக வைத்துக் கொள்வோம். அந்த ஒரு பாபரி மஸ்ஜிதுடன் பிரச்சனை முடிந்து விடாது. பாபரி மஸ்ஜிதைக் கைப்பற்றியப் பின் இந்தியாவிலுள்ள 40க்கு மேற்ப்பட்ட மஸ்ஜிதுகள் கைப்பற்றப்படும் என்று வகுப்பு வெறியர்கள் சூளுரைத்துள்ளார்கள். இந்தியாவிலுள்ள  முஸ்லிம்களை அரசு செலவிலேயே வெளிநாடுகளுக்கு அப்புறப்படுத்திவிட வேண்டும் என்று யோசனை வழங்கிக் கொண்டிருக்கும் குறுமதியாளர்களுக்கு தங்களின் சரணாகதி யோசனை ஒரு வரப்பிரசாதமாக  அமைந்துவிடும் என்று வாசகர்களாகிய நாங்கள் அஞ்சுகிறோம்.   எம்.ஏ. ஹாஜி முஹம்மது, நிரவி.

தாங்கள் எழுதியுள்ளது நாம் பெரிதும் எதிர்ப்பார்த்ததே. காரணம், மனித இயல்பு இவ்வாறு தான் சிந்திக்க தூண்டும். நபித் தோழர்களில் அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்களுக்குப் பின் உன்னத நிலையில் இருந்த உமர்(ரழி) அவர்களே இஸ்லாம் மார்க்கத்திற்கு இழிவு ஏற்படுகிறதே என்று ஆத்திரப்பட்ட சம்பவத்தை நாம் சென்ற இதழில் எடுத்து எழுதியிருந்தோம். ஆனால் மனித இயல்புக்கு மாற்றமாக அல்லாஹ்வின் கட்டளைக்கு வழிபட்டு நடப்பதே ஒரு முஸ்லிமின் கடமையாக இருக்கிறது.

அந்த அடிப்படையில் “பாபரி மஸ்ஜித்” விவகாரத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்குரிய விளக்கங்களை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் எடுத்து எழுதியிருந்தோம். அதனை பெரும்பாலான முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனபதையும் நாம் அறிவோம். ஏனென்றால் தங்கள் கெளரவத்தை விட்டுக் கொடுக்க எந்த மனிதனும் முன்வரமாட்டான். ஆனாலும் சக்தியத்தை மறைக்காமல் மக்கள் முன் வைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்திலேயே அக்கட்டுரை எழுதப்பட்டது. இப்போது தாங்கள் கிளப்பியுள்ள ஆட்சேபனைகளைப் பார்ப்போம்.

“அன்றைய குரைஷ் குஃப்பார்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலிருந்த பிரச்சனையும், இன்று இந்து சகோதரர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலுள்ள பிரச்சனையும் ஒரேமாதிரியானதல்ல” என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உண்மை அதுவல்ல, அன்று இறைவனுக்கு வழிபட்ட முஸ்லிம்களுக்கும், இறைவனுக்கு இணை வைத்த நிராகரிப்போருக்கும் ஏற்ப்பட்ட பிரச்சனைப் போன்றுத் தான் இன்றும் இறைவனை வழிபடும் முஸ்லிம்களுக்கும், இறைவனுக்கு இணை வைக்கும் நிராகரிப்போருக்கும் இடையிலுள்ள பிரச்சனையாகும். பாபரி மஸ்ஜித் விவகாரம், அடுத்து கஃபத்துல்லாஹ் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்குத் தான் சொந்தம் என்பதற்கு ஆதாரங்களில்லை. எல்லா நாட்டு மக்களும் கஃபத்துல்லாஹ்வுக்கு தங்கு தடையின்றி வந்துப் போய் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் பாபரி மஸ்ஜித் முஸ்லிம்களுக்குத் தான் சொந்தம் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன என்றுக் குறிப்பிட்டுள்ளீர்கள். இதுவும் உண்மைக்குப் புறம்பானதே ஆகும். “மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்” (72:18) மனிதர்கள் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. மஸ்ஜிதுகள் அல்லாஹ்வை மட்டும் வழிபடுவதற்காகவே உள்ளனர். அவற்றில் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயல்கள் இடம் பெறுவது குற்றமேயாகும். அதனை உண்மையான முஸ்லிம் சகித்துக் கொள்ளவேமாட்டான். ஆனால் ஒரு மஸ்ஜிதுனுல் முஸ்லிம் அல்லாத ஒருவர் வருவதற்கு தடையேதும் இல்லை. இதனையே நீங்கள் கஃபத்துல்லாஹ் குறித்துக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் உண்மை என்னவென்றால், கஃபத்துல்லாஹ்வின் எல்லைக்குள் முஸ்லிமல்லாத யாரும் பிரவேசிக்க முடியாது. அல்லாஹ் இதனை தடை செய்துள்ளான்.(9:28)

இந்த அடிப்படையில் பார்த்தாலும் கஃபத்துல்லாஹ் விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் விட்டுக் கொடுத்ததைவிட பாபரி மஸ்ஜிது விவாகாரத்தில் நிர்ப்பந்தமான நிலையில் விட்டுக் கொடுப்பதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது என்பதே தெளிவாகும். நாம் அவ்வாறு குறிப்பிடுவதால் பாபரி மஸ்ஜித் இடத்தில் கோவிலிருந்தது என்றோ, அதனை இடித்து மஸ்ஜித் கட்டப்பட்டுள்ளது என்றோ ஒப்புக் கொள்வதாக பொருள் ஆகாது. ஆரம்பத்திலிருந்து முஸ்லிம்களுக்குச் சொந்தமான பாபரி மஸ்ஜிதை வேறொரு இடத்தில் மஸ்ஜித் கட்டிக் வாங்கிக் கொண்டு விட்டுக் கொடுப்பது கொண்டு தீராத இப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரலாம்.

அதனால் நாம் சரணாகதி அடைந்து விட்டோம் என்பது பொருள் அல்ல காரணம், நபி(ஸல்) அவர்களின் அழகிய நடைமுறையின் அடிப்படையிலேயே இதனைச் செய்கிறோம். “பாபரி மஸ்ஜிதை வகுப்பு வெறியர்களிடம் கையளித்து விட வேண்டும் என்பது தங்களின் வேணவா” என்று நாம் குறிப்பிட்டுள்ளதாக எழுதியுள்ளீர்கள். அவ்வாறு நாம் எழுதவில்லை. “பாபரி மஸ்ஜிதைக் கொண்டு அல்லாஹ் வைத்திருக்கும் சோதனையில் முஸ்லிம்கள் வெற்றிபெற வேண்டும் என்பதே நமது வேணவாவாகும்” என்றே குறிப்பிட்டிருந்தோம். அதனை நீங்கள் தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக் கொண்டிருப்பது குறித்து வருந்துகிறோம்.

அடுத்து, உங்களுக்கு உரிமையுள்ள சொந்தமான சொத்தில் தகராறு ஏற்பட்டால் அந்த சொத்தில் உங்கள் உரிமையை நிலைநாட்ட ஒரு போரே செய்யலாம். அப்படி செய்யும் போரில் மரணமடைந்தால் கூட மரணமடைந்தவருக்கு ஷஹீதுடைய பதவிக் கிடைக்கும். என்ற ஹதீஸ் தங்களுக்குத் தெரியாமலிருக்காது. அப்படி இருக்கும்போது அதற்காக போராடி உரிமையை நிலைநாட்டுவது தான் சிறந்தது என்றுக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

அந்த ஹதீஸையும், அந்த ஹதீஸை கூறிய நபி(ஸல்) அவர்களுடைய அழகிய நடைமுறையையும் வைத்தே நாம் “பாபரி மஸ்ஜித்” விஷயமாக நமது கருத்தை எழுதியிருந்தோம் நபி(ஸல்) அவர்களும் அவரது அருமைத் தோழர்களான முஹாஜிர்களும் மக்காவில் தங்கள் வீடு வாசல்களை விட்டும், சொத்து சுகங்களை விட்டும் விரட்டியடிக்கப்பட்டதை அல்குர் ஆனில் அல்லாஹ் பல இடங்களில் குறிப்பிடுகிறான்.

நபி(ஸல்) அவர்களும், அவர்களது அருமைத் தோழர்களும் ஷஹீதுடைய அந்தஸ்தை அறியாமல் சொத்து சுகங்களை விட்டுவிட்டு மதினாவுக்கு வந்துவிட்டார்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவ்வாறு விட்டுவிட்டு வராமல் அந்த சொத்து சுகங்களுக்காக போராடி ஷஹீதாகியிருந்தால் சத்திய இஸ்லாம் நிலைநாட்டப் பட்டிருக்குமா? இன்று நாமெல்லாம் முஸ்லிமாக வாழ முடியுமா? என்பதனை நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். எனவே இப்படிப்பட்ட நிர்ப்பந்த நிலைகளில் விட்டுக் கொடுத்து உயிர் வாழ்ந்து தீனுல் இஸ்லாத்தை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபடுவதே சாலச் சிறந்தது என்பதை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகின்றது.

உங்களதுக் கருத்தை இன்னொரு கோணத்திலும் சிந்தித்துப் பாருங்கள். பாபரி மஸ்ஜித் இருக்கும் இடம், கட்டடம் இவை அனைத்தும் இன்று எத்தனை இலட்ச ரூபாய் பெறுமோ அதை விட பல இலட்சக்கணக்கான மடங்கு பெறுமதியான பொருளையும் இழந்ததோடு எண்ணற்ற உயிர்களையும் பழிக் கொடுத்திருக்கின்றோமே, ஆயிரக்கணக்கான பெண்களின் கற்பை பறிக்கொடுக்க செய்திருக்கின்றோமே, இதுதானா நமது உரிமைகளை நிலைநாட்டும் முறை நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். உண்மை என்ன தெரியுமா? உரிமையைப் பாதுகாக்க நாம் போராடவில்லை.

கெளரவத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். கெளரவத்திற்காகப் போராடுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதனை ஹுதைபிய்யா உடன்படிக்கை சமயத்தில் உமர்(ரழி) அவர்கள்; நாம் ஏன் நம்முடைய (சத்திய மார்க்கத்திற்கு இழிவை ஏற்க வேண்டும்.) என்று நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டும், நபி(ஸல்) அதனை ஏற்காது உடன்படிக்கை என்று அறிவித்துள்ளதும் நமக்குத் தெளிவுப்படுத்துகின்றன. எனவே நிர்ப்பந்தமான நிலையில் விட்டுக் கொடுப்பதை சரணாகதி அடைந்து விட்டதாக தப்புக் கணக்குப் போடுவது தவறாகும்.

அடுத்து பாபரி மஸ்ஜிதை விட்டு விடுவதாக வைத்துக் கொள்வோம். அந்த பாபரி மஸ்ஜித் பிரச்சனை முடிந்து விடாது. பாபரி மஸ்ஜிதை கைப்பற்றியப்பின் இந்தியாவிலுள்ள 40க்கும் மேற்ப்பட்ட மஸ்ஜிதுகள் கைப்பற்றப்படும் என்று வகுப்பு வெறியர்கள் சூளுரைாத்துள்ளார்கள். என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இது விஷயமாகவும் நமது அந்தக் கட்டுரையில் அப்பொழுதே தெளிவுப்படுத்தியுள்ளோம். அதனை மீண்டும் நிதானமாகப் பார்வையிட்டால் தெளிவுப் பெறுவீர்கள் என்று நம்புகிறோம்.

நமது அந்தக் கட்டுரையின் அசல் நோக்கம் கடந்த பல ஆண்டுகளாக தீராத ஒரு பிரச்சனையாக “பாபரி மஸ்ஜித்” விவகாரம் இருந்து வருவதன் காரணமாக இந்திய நாட்டில் வாழும் முஸ்லிம்கள் எழுத்தில் வடிக்கவியலாத அளவு துன்பங்களையும், துயரங்களையும் தொடர்ந்து அனுபவித்து வருகிறார்கள். இதனைக் காரணமாக வைத்து வகுப்பு வெறியர்கள் நல்ல சிந்தனையுள்ள ஹிந்து சகோதரர்களின் உள்ளங்களிலம் நஞ்சைப் பாய்ச்சி முஸ்லீம் ஹிந்து விரோதப் போக்கை வளர்த்து வருகிறார்கள். வகுப்பு வெறியர்கள் இந்த நாட்டின் ஆட்சியைப் பிடிக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது. அதற்கு முஸ்லிம்களாகிய நாம் துணைப் போகக் கூடாது.

அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு செளதின்யமான உறவை ஏற்ப்படுத்த வேண்டும் என்பதே. நீங்கள் குறிப்பிடுவது போல் பாபரி மஸ்ஜித் விவகாரம் தீர்க்கப்பட்ட பிறகும் அந்த நிலை நீடிக்குமானால் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டு குர்ஆன், ஹதீஸை நிலைநாட்டுவதுக் கொண்டே பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். முஸ்லிம்களுக்கு இந்திய நாட்டில் ஒரு நல்ல எதிர்காலம் ஏற்படும் என்பதை ஒவ்வொரு ஆண், பெண் முஸ்லிமும் உணர வேண்டும். அதற்காக நாம் அயராது பாடுபட வேண்டும்.


“அரபி இலக்கண, இலக்கிய ஞானம் அவசியம் தேவை என்று மல்லவிகள் கூறி வருவது இந்த முதஷாபிஹாத் வசனங்களைப் பொருத்தமட்டிலும் முற்றிலும் உண்மையே” என்று செப் ’88 அந்நஜாத் பக்கம் 15 (8வது வரியி)ல் எழுதிய நீங்கள் இப்போது அதற்கு மாற்றமாய் எழுதி வருவது ஏன்? விளக்கவும்.  இப்னு மஸ்ஊது, கடைய நல்லூர்.

நாம் முதஷாபிஹாத் வசனங்கள் சம்பந்தமாக  ஆரம்பத்தில் எதனைக் கூறினோமோ அதனையே இப்போதும் கூறி வருகிறோம். முதஷாபிஹாத் வசனங்களை விளங்க முடியாது என்று என்றுமே கூறியதில்லை. பல பொருளில் விளங்க முடிவது காரணமாகவே அந்த வசனங்கள் முதஷாபிஹாத் வசனங்கள் என்று அழைகப்படுகின்றன. விளங்குவதற்கும், இறுதி முடிவு செய்வதற்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் தவ்ஹீத் மவ்லவிகள் தடுமாறுவதைப் போல் உங்களிலும் அந்த தடுமாற்ற நிலைக் காணப்படுகிறது. “குர்ஆனை விளங்குவது யார்?” என்ற தொடரில் அந்நஜாத்தில் இடம் பெற்றுவரும் கட்டுரையைத் தொடர்ந்து கவனமாக மீண்டும் படித்துப் பாருங்கள்.

உண்மை நிலையை உங்களால் புரிந்துக் கொள்ள முடியும். 3:7 வசனத்தில் இடம் பெறும் தஃவீல் என்ற அரபிப்பதத்திற்கு விளக்கம் என்று தவறாக பொருள் கொள்வதாலேயே இந்தத் தடுமாற்றம், 3:7 வசனத்தில் தஃவீல் -இறுதி முடிவு என்ற முடிவிலேயேப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே 3:7 வசனத்தில் முதஷாபிஹாத் வசனங்களை விளங்குவதுப் பற்றி எந்த சர்ச்சையும் இல்லை. முதஷாபிஹாத் வசனங்கள் பற்றி இறுதி முடிவுக்கு வருவதுப் பற்றியே 3:7 வசனம் குறிப்பிடுகிறது. முதஷாபிஹாத் வசனங்களின் இறுதி முடிவை-உண்மைப் பொருளை அல்லாஹ் அல்லாத வேறு யாரும் அறிய முடியாது என்பதனையே அந்த வசனம் குறிப்பிடுகிறது. விளக்கத்திற்கும், இறுதி முடிவிற்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் மீண்டும் மீண்டும் குழம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

    பிப்ரவரி 1990, பக்கம் 25ல் தவ்ஹீத் ஆலிம்களின் நிலையே இதுவென்றால் என்ற தலைப்பின் கீழ் தங்களுக்கு வேண்டாதவர்களை எதிரிகளாய் பாவிப்பதும், கீழ்தரமாய் வசைப்பாடுவதும், கேவலமாய் விமர்சிப்பதும், சீற்றத்துடன் பழிவாங்குவதும், பாமர மக்களை பாமர மக்களை தங்களுக்கு வேண்டாதவர்களுக்கு எதிராய் முடுக்கி விடுதல்! அவதூறுகளைப் பரப்புதல் இவற்றிலிருந்து (தங்களைத்) தவ்ஹீத் ஆலிம்களே (என்று மார்தட்டிக் கொள்வாரே) விடுபடவில்லை என்று எழுதியிருந்தீர்கள். தவ்ஹீத் என்று சொல்லிக் கொண்டு யாராவது ஒருவரோ அல்லது ஒருக் கூட்டமோ இவ்வாறு இப்படிச் செய்தால் அதற்கு தவ்ஹீத் என்ன செய்யும்.

அதற்கு தவ்ஹீத் தான் காரணம் என்றால், யாராவது ஒரு நபர் விபச்சாரத்தில் ஈடுபட்டால், அதற்கு இஸ்லாம் மார்க்கமே பொறுப்பு என்றோ எழுதுவீர் போலிருக்குதே! அல்லாஹ் குர்ஆனில் இறையச்சம் உள்ளவர்களே ஆலிம்கள், அறிஞர்கள் (35:28) என்று சொல்லும் போது, தாங்கள் குறிப்பிட்டது போல் செய்பவர்கள் எல்லாம் எப்படி ஆலிம்களாக முடியும்? அப்படி நடந்துக் கொள்பவர்கள் ஆலிம்கள் ஆக முடியாது என்று தங்களுக்குத் தெரிந்து இருந்தும், மீண்டும் தாங்களே அவர்களுக்கு ஆலிம் என்று பெயர் சூட்டி, அதற்க்கென்று ஒரு சிலப் பக்கங்களை ஒதுக்கி விமர்சிப்பது என்றால் தவறு தானே, இதை ஒத்துப் கொள்கிறீர்களா?

முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டு இஸ்லாத்திற்கு விரோதமான போக்கை சில முஸ்லிம்கள் கடைப்பிடிப்பதுப் போல் தங்களை தவ்ஹீத் மவ்லவிகள் என்று மார்த்தட்டிக் கொண்டு அதற்கு மாற்றமான போக்கைக் கடைப்பிடிப்பதையே அக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மற்றபடி தவ்ஹீதைப் பற்றி எவ்வித அக்கட்டுரையில் சொல்லப்பட வில்லை. தவ்ஹீது மவ்லவிகளின் தவறுகளுக்கு தவ்ஹீத் எந்த வகையிலும் காரணமாகாது.

நீங்கள் குறிப்பிட்டிருப்பதுப் போல் “அல்லாஹ்வை உண்மையில் அஞ்சி நடப்பவர்களே ஆலிம்கள்” என்ற 35:28 வசனத்திற்க்கொப்ப இறையச்சமற்றவர்கள் ஆலிம்களாக திகழ முடியாது ஆயினும் நடைமுறையில் மதரஸாக்களில் சில ஆண்டுகளைக் கழித்தவர்களே ஆலிம்களாக மக்களால் கருதப்படுவதால் மக்கள் விளங்கும் வகையில் அக்கட்டுரையாளர் எழுதியுள்ளார்.

ஆயினும் தவ்ஹீது ஆலிம்களின் நிலையே இதுவென்றால் என்பதற்குப் பதிலாக தவ்ஹீது மவ்லவிகளின் நிலையே இதுவென்றால் என்று எழுதப்பட்டிருக்குமேயானால் மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கும் என்பதை ஒப்புக் கொள்கிறோம். ஆயினும் தவ்ஹீது மெளலவிகளின் தவறான போக்குகளை மக்களுக்கு அடையாளம் காட்டி அவர்கள் உண்மையை உணரச் செய்ய சில பக்கங்களை ஒதுக்கி விமர்சிப்பது ஒருபோதும் தவறாகாது. மாறாக, அது குர்ஆன், ஹதீஸ் வழியேயாகும்.

Previous post:

Next post: