நபி வழியில் நம் தொழுகை

in 1990 செப்டம்பர்

நபி வழியில் நம் தொழுகை

தொடர் 44

அபூ அப்திர் ரஹ்மான்

என்னை எவ்வாறுத் தொழக் கண்டீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள்.    (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி) புகாரீ, முஸ்லிம்)

இமாமுக்கும் அவரைப் பின்பற்றி தொழுவோருக்கும் தாம் தொழுதுக் கொண்டிருக்கும் போது சம்பவிக்கும் கோளாறுகளை சரி செய்து கொள்வதன் விபரம்.

இமாமுக்கோ இமாம் அல்லாதவருக்கோ தமது ஆடையில் (நஜீஸ்)-அசுத்தம் இருப்பதாக நாம் தொழுதுக் கொண்டிருக்கும் போது, சந்தேகம் ஏற்ப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

தொழுபவர் இமாமாகவோ, அல்லது அவரைப் பின்பற்றித் தொழுபவர்களாகவோ, அல்லது தனித்து தொழுபவராகவோ இருந்து, தாம் தொழுதுக் கொண்டிருக்கும் போது, தமது ஆடையில் நஜீஸ்-அசுத்தம் இருப்பதாக சந்தேகம் வருமானால், அவருடைய இச்சந்தேகத்திற்காக அவர் தமது தொழுகையை விட்டு விடக் கூடாது. அவர் அந்நிலையிலேயே தொழுகையை தொழுது முடித்துவிட வேண்டும்.

அவர் தொழுது முடித்துப் பார்க்கும் போது, தமது சந்தேகத்திற்க்கிணங்க ஆடையில் அசுத்தம் இருப்பதைப் பார்த்து விட்டாலும் அவர் தொழுகை கூடிவிடும். காரணம் அவர் தாம் தொழுதுக் கொண்டிருக்கும் போது, ஆடையில் அசுத்தம் இருப்பது ஊர்ஜிதமில்லை. தொழுகை முடிந்தப் பிறகு தான் அவருக்கு ஊர்ஜிதம் ஏற்படுகிறது. ஆகவே அவர் தாம் தொழும்போது, தமது ஆடை சுத்தமான நிலையில் உள்ளது என்பதாக கருதியே தொழுதுள்ளார். அதனால் அவர் தொழுகை கூடிவிடும். ஆடை சுத்தம் இல்லை என்பது தொழுத பிறகுத் தானே தெரிய வந்துள்ளது.

நபி(ஸல்) அவர்கள் ஒரு சமயம் தமது செருப்பில் அசுத்தம் இருக்கும் நிலையில் தொழுதுக் கொண்டிருக்கும் போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் அதில் அசுத்தம் இருப்பதாக அவர்களுக்கு உணர்த்தியவுடன் அதை சுழற்றிவிட்டு தொழுதார்கள் என்பதாக ஸஹீஹான ஹதீஸ் அபூதஸயீதில் குத்ரீ(ரழி) வாயிலாக அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் தமக்கு அதில் அசுத்தம் இருப்பதாகத் தெரியாமல் எத்தனை ரகாஅத்துக்கள் தொழுதார்களோ, அவற்றை அவர்கள் மீட்டித் தொழவில்லை. ஆகவே நபி(ஸல்) அவர்களுக்கு அசுத்தம் இருப்பதாகத் தெரியாமல் தொழுத தொழுகை கூடி விட்டது என்பதால், மேற்கண்டவாறு தொழுத தொழுகை கூடி விட்டது என்பதை அறிகிறோம்.

இமாமுக்கு கிராஅத்தில் கோளாறு ஏற்ப்பட்டால் அதை அவருக்கு எடுத்துக் கொடுப்பது ஆகும்.

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் கிராஅத் ஓதிக் கொண்டிருந்தபோது நானும் இருந்தேன் அப்போது அவர்கள் சிலவற்றை ஓதாது விட்டு விட்டார்கள். அங்குள்ள ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் இந்த ஆயத்துக்களை ஓதாது விட்டு விட்டீர்களே? என்றார்கள். (மஸ்தூரு பின்யஜீதில் மாலிக்கி(ரழி) அபூதாவூத், அஸ்ரம்)

ஒருமுறை நபி(ஸல்) அவர்களுக்கு சுப்ஹு தொழும்போது “கிராஅத்” ஓதலில் தடுமாற்றம் ஏற்ப்பட்டு எவரும் அதை எடுத்துக் கொடுக்கவில்லை. அவர்கள் தொழுகையை நிறைவு செய்தவுடன்  மக்களை நோக்கி, உபையுபின் கஃபு(ரழி) அவர்கள் தொழுகையில் உங்களுடன் ஆஜராக வில்லையா? என்றார்கள். அதற்கு “இல்லை” என்றனர். நபி(ஸல்) உபய்யு பின் கஃபுவைத் தேடுவதானது, தமக்கு கிராஅத்தில் கோளாறு ஏற்ப்பட்ட போது அதைத் தமக்கு அவர் எடுத்துக் கொடுப்பதற்காகத் தான் தேடியுள்ளார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.   (இப்னு அப்பாஸ்(ரழி), அஸ்ரம்)

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தாம் தொழும்போது, கிராஅத் ஓதுகையில் அவர்களுக்கு தடமாற்றம் ஏற்ப்பட்டது. தாம் தொழுது முடித்தவுடன் உபையுபின் கஃபு(ரழி) அவர்களை நோக்கி, “எங்களுடன் தொழுதீரா? என்றுக் கேட்டார்கள். அதற்கு அவர் “ஆம்” என்றார்கள். ஏன் (எனக்கு கிராஅத்தில் தடுமாற்றம் ஏற்ப்பட்ட போது) எடுத்துக் கொடுக்கவில்லை என்றார்கள். (இப்னுஉமர்(ரழி) அபூதாவூத்)

ஆகவே மேற்காணும் ஹதீஸ்களை ஆதாரமாக்கிக் கொண்டு, இமாமுக்கு தொழுகையில் கிராஅத்தோதும் போடு தடுமாற்ற நிலை ஏற்ப்பட்டால் எத்தடையுமின்றி தாராளமாக எடுத்துக் கொடுக்கலாம் என்பதை அறிகிறோம்.

“இமாமுக்கு அவர் கிராஅத் ஓதும் போது, (தடுமாற்றம் ஏற்ப்பட்டால்) யாரும் அவருக்கு எடுத்துக் கொடுப்பது முறை அல்ல” என்பதாக அபூ தாவூதில் அலி(ரழி) அவர்களின் வாயிலாக “ஹாரிஸ்” என்பவர் அறிவிக்கும் ஓர் அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. ஆனால் இவ்வறிவிப்பு பலகீனமானது. முறையானது அல்லவென்றும் இமாம் அபூதாவூத்(ரஹ்) அவர்களே விமர்சித்துள்ளார்கள். ஏனெனில் “ஹாரிஸ்” என்பவர் அலி(ரழி) அவர்களிடமிருந்து மொத்தம் 4 ஹதீஸ்கள் மட்டுமே கேட்டிருப்பதாக சான்றுகள் உள்ளன. ஆனால் மேற்காணும் அறிவிப்பு அந்த 4 ஹதீஸ்களில் உள்ளது அல்ல என்று கூறுகிறார்கள்.

ஒருவர் சூரத்துல் பாத்திஹா ஓதி முடிப்பதற்குள்  இமாம் ருகூஃவுக்குச் சென்று விட்டால் அவரும் அதே நிலையில் ருகூஃவுக்குச் சென்று விட வேண்டும்.

“இமாம் நியமிக்கப்படுவதெல்லாம் அவரை(மக்கள்) பின்பற்றுவதற்காகத் தான். ஆகவே நீங்கள் இமாமுக்கு மாறுபட்டு விடாதீர்கள். அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் ருகூஃவுக்கு சென்று விட்டால் நீங்களும் உடனே ருகூஃவுக்கு சென்று விடுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அபூஹுரைரா(ரழி), புகாரீ, முஸ்லிம்)

மேற்காணும் ஹதீஸில் “அவர் ருகூவுக்கு சென்று விட்டால் நீங்களும் உடனே ருகூஃவுக்குச் சென்று விடுங்கள்” என்று வாசகம் இமாம் ருகூஃவுக்குச் சென்ற பிறகு காலதாமதம் செய்யாமல் உடனே மற்றவரும் ருகூஃவுக்குச் சென்று விடுங்கள்” என்று வாசகம் இமாம் ருகூஃவுக்குச் சென்ற பிறகு காலதாமதம் செய்யாமல் உடனே மற்றவரும் ருகூஃவுக்குச் சென்று விட வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

ஜும்ஆவின் விபரம்:

மூமின்களே! ஜும்ஆவுடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டு விட்டு அல்லாஹ்வை தியானிக்க (பள்ளிகளுக்கு) விரைந்து செல்லுங்கள்-நீங்கள் அறியக் கூடியவர்களாயிருப்பின் இதுவே உங்களுக்கு மிக்க மேலான தன்மையுடையதாகும்.

பின்னர்(ஜும்ஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால் பூமியில் பரவி சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்துக் கொள்ளுங்கள் (62:9, 10)

ஜும்ஆ தினத்தின் சிறப்பு:

“சூரியன் உதிக்கும் தினத்தில் “ஜும்ஆ” வுடைய தினமே மிகச் சிறப்பாகும். இத்தினத்தில் தான் ஆதம்(அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். மேலும் அவர்கள் இத்தினத்தில்தான் சுவர்க்கத்தில் புகுவிக்கப்பட்டார்கள். இத்தினத்திலேயே அதிலிருந்து வெளியேற்றவும்பட்டார்கள்.  யுக முடிவுநாளும் வெள்ளிக் கிழமைத்தான் நிகழும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  (அபூஹுரைரா(ரழி) முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ)

ஜும்ஆவுக்கு வருவோர் மட்டுமே குளிப்பது அவசியம்!

“உங்களில் ஒருவர் ஜும்ஆவுக்கு வருவாரானால் அவர் அவசியம் குளித்துக் கொள்வாராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு உமர்(ரழி), புகாரீ)

வீட்டிலுள்ள பெண்கள், சிறார்கள் முதியவர்கள் மீது வெள்ளிக்கிழமைக்காக குளிப்பது அவசியமில்லை.   (இப்னு உமர்(ரழி) பைஹகீ)

ஜும்ஆ தினத்தன்று குளிப்பதானது, வயதுவந்த ஒவ்வொருவர் மீதும் அவசியமாகும்” என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்” (அபூஸயீதில் குத்ரீ(ரழி), புகாரீ)

“வெள்ளிக்கிழமை குளிப்பதானது ஜும்ஆ தொழுகை கடமையானவர்கள் மீது மட்டும் தான்” என்று இப்னு உமர்(ரழி) கூறியுள்ளார்கள்” (பைஹகீ)

ஜும்ஆ தினத்தன்று குளிப்பது அவசியமா, அல்லது விசேஷமா?

“ஒருவர் ஜும்ஆ தினத்தில் ஒளூ செய்துக் கொள்வாரானால்  அவ்வாறு அதை அவர் செய்துக் கொள்ளட்டும், அது நல்லதுதான். ஆனால் ஒருவர் குளித்துக் கொள்வாரானல், குளிப்பே மேலானதாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஸமுரத்துபின் ஜுன்துபு(ரழி) திர்மிதீ)

“ஒருவர் ஒளூவை முறைப்படி செய்துக் கொண்டு, ஜும்ஆவுக்கு வந்து, தாம் வாய் மூடியவராக குத்பா-பிரசங்கத்தைச் செவிமடுத்துக் கேட்பாரானால், அவருக்கு ஒரு ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையில் உள்ள பாவங்கள் மன்னிக்கப்படுவதோடு, மேலதிகமாக 3 தினங்களின் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்). இந்த ஹதீஸில் ஜும்ஆவுடைய தினத்தில் குளிக்க வேண்டும் என்பதாக ஒரு வாசகமும் இல்லாது. பொதுவாக “ஒளுவை முறைப்படி செய்துக் கொண்டு, ஜும்ஆவுக்கு வந்து “என்ற வாசகமேக் காணப்படுகிறது. எனவே ஜும்ஆ தினத்தன்று குளிப்பது  விசேஷமே தவிர கடமை அல்ல என்பதை உணருகிறோம்.

ஜும்ஆ தினத்திலும், பெருநாள்களிலும் அணிவதற்காக விசே, ஆடைகளை வைத்துக் கொள்வது சிறப்பாகும்.

நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாட்கள், ஜும்ஆகிய தினங்களில் அணிந்துக் கொள்வதற்காக விசேஷ ஆடைகள் வைத்திருந்தார்கள். (ஜாபிர்(ரழி) பைஹகீ)

நீங்கள் வேலை செய்யும்போது அணிந்துக் கொள்ளும் சாதாரணமான ஆடைகளைத் தவிர, ஜும்ஆவுடைய தினத்தில் அணிந்து கொள்வதற்காக விசேஷ ஆடைகளை நீங்கள் வாங்கி வைத்துக் கொண்டால் என்ன? என்று நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ தினத்தில் மிம்பரின் மீது நின்று கொண்டு கூற நான் கேட்டிருக்கிறேன். (அப்துல்லாஹ் பின் ஸலாம்(ரழி) அபூதாவூத், இப்னு மாஜ்ஜா) ஜும் ஆவன்று எண்ணெய் தடவிக் கொள்வதும் விசேஷமாகும்.

‘ஜும்ஆ தினத்தில் குளிப்பதானது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவசியமாகும்; தம்முடைய ஆடைகளில் சிறந்ததை அணிந்துக் கொள்வது மேலாகும். தம்மிடம் வாசனை திரவியம் இருந்தால் அதில் சிறிதளவு எடுத்து பூசிக் கொள்ளல் வேண்டும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  (அபூஸயீதில் குத்ரீ(ரழி) புகாரீ, முஸ்லிம், அஹ்மத்)

ஒருவர் “ஜும்ஆ” தினத்தன்று தம்மால் இயன்றளவு தம்மைச் சுத்தம் செய்து குளித்துவிட்டு, தம்முடைய எண்ணெயில் சிறிதளவு எடுத்து (தலை, தாடி, முதலியவற்றில்) தடவிக் கொண்டு, இவ்வாறே தமது வீட்டிலுள்ள வாசனை திரவியத்தையும் பூசிக் கொண்டு, பின்னர் பள்ளிக்குச் சென்று அங்கு இருவருக்கும் மத்தியில் தாண்டிச் செல்லாது, முறையாக நடந்துச் சென்று, பின்னர் அல்லாஹ்வினால் அவருக்கென்று நியமிக்கப்பட்ட அளவு (நபிலான தொழுகைகளைத்) தொழுது விட்டு, இமாம் குத்பா-பிரசங்கம் செய்துக் கொண்டிருக்கும் போது, தாம் வாய்மூடிக் கேட்டுக் கொண்டிருப்பாரானால், (அதன் பயனாக) அல்லாஹ் அவருடைய பாவங்களை நிச்சயமாக மன்னித்து விடுவான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.(ஸல்மானுல் பாரிஸி(ரழி)புகாரீ, அஹ்மத்)

ஜும்ஆவுக்கு முற்கூட்டியே பள்ளிக்கு செல்வதன் சிறப்பு:

‘ஜும்ஆவுடைய தினம் வந்து விட்டால் (உலகிலுள்ள) பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளிவாயில்களிலும் மலக்குகள் இருந்துக் கொண்டு ஒருவரின் பின்னர் ஒருவராக முதலில் வருபவரை பதிவு செய்துக் கொண்டிருப்பார்கள். (முதற்க்கட்டமாக) முன் கூட்டியே வந்தவர் ஒரு ஒட்டகத்தை “குர்பானி” கொடுத்தவர் போலாவார். அதன் பின்வருபவர் ஒரு கிடாயை குர்பானி கொடுத்தவர் போலாவார். மேலும் பிறகு வருபவர் ஒரு கோழியை குர்பானிக் கொடுத்தவர்ப் போலாவார். ஆக கடைசியில் வருபவர் ஒரு முட்டையை குர்பானி கொடுத்தவர் போலாவார். என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்்    (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)

ஜும்ஆவுக்கு நடந்து செல்வதன் பயன்.

நான் ஒரு முறை ஜும்ஆவுக்கு நடந்து சென்றுக் கொண்டிருக்கும் போது அபூ அப்ஸு(ரழி) அவர்கள் என்னைப் பார்த்து “எவருடைய இருப் பாகங்களும் அல்லாஹ்வின் பாதையில் (நடந்து சென்றமையால்) புழுதிப் படிந்தவனாகி வடுகின்றனவோ, அல்லாஹ் அவரை நரக நெருப்பை விட்டும், தடை செய்து விடுவான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் என்றார்கள். (அஃபாயத்துபின் ரிஃபாயா(ரழி) புகாரீ)

அபூஹுரைரா(ரழி) அவர்களின் வாயிலாக முஸ்லிமில் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பில் இமாம்(மின்பாரின்) மீது அமர்ந்து விட்டால் ஏடுகள் சுருட்டப்பட்டு விடுகின்றன. (அவற்றை எழுதிக் கொண்டிருந்த மலக்குகள்) அல்லாஹ்வின் திக்ரை-தியானத்தைக் கேட்பதற்காகச் சென்று ஆஜராகி விடுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதாக உள்ளது.

ஜும்ஆவுடைய நாளில் துஆ கப்லாகும் குறிப்பிட்ட நேரம் எது?

“நிச்சயமாக ஜும்ஆ தினத்தன்று, ஒரு நேரம் உள்ளது. அந்நேரத்தில் யாதொரு முஸ்லிமான அடியான் அல்லாஹ்விடம் எந்த நன்மையானதொன்றைக் கேட்டாலும் நிச்சயமாக அல்லாஹ் அவனுக்குக் கொடுத்தேத் தீருவான். அது வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின்னுள்ள நேரமாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி). அபூஸயீதில் குத்ரீ(ரழி) அஹ்மத்)

ஒருமுறை நபித்தோழர்களில் பலர் ஜும்ஆ தினத்தில் துஆ கப்லாகும் நேரம் குறித்து முடிவு செய்வதற்காக கூடி இறுதியாக அந்நேரம் வெள்ளிக்கிழமையின் கடைசி நேரம் தான் என்று ஏகமானதாக முடிவு செய்தநிலையில் எழுந்து சென்றார்கள். (அபூஸலமாபின் அப்திர்ரஹ்மான்(ரழி) ஸுனனு ஸயீத்)

ஜும்ஆவுடைய நேரம்.

நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆத் தொழுகையை விட உச்சியை விட்டும் சூரியன் சாய்ந்து விட்டபோது தொழுதுக் கொண்டிருந்தார்கள். (அனஸ்பின் மாலிக்(ரழி), புகாரீ)

ஜும்ஆவுக்கு மேல் அதிகமான பாங்கு எப்போது ஏற்ப்பட்டது?

நபி(ஸல்) அவர்கள் காலத்திலும், பின்னர் அபூபக்ரு(ரழி) உமர்(ரழி) ஆகியோர் காலத்திலும் ஜும்ஆவின் பாங்கு-அழைப்பு இமாம் மிம்பரின் மீது அமர்ந்தவுடன் கூறப்பட்டுக் கொண்டிருந்தது. உஸ்மான்(ரழி) அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது மக்கள் அதிகரித்து விட்டனர். அப்போது அவர்கள் மதீனாவிலுள்ள “அல்ஜவ்ரா” வெனும் கடைத்தெருவு வாசிகளுக்காக (ஜும்ஆவின் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்வதற்காக வழமையான அழைப்புக்கு முன்) மேலதிகமாக மற்றொரு அழைப்பை நியமித்தார்கள். (ஸாபியுபின் யாஜீத்(ரழி), புகாரீ)

இப்னு உமர்(ரழி) அவர்கள் உஸ்மான்(ரழி) அவர்களின் “ஜும்ஆவின்” மேலதிகமான பாங்கைப் பற்றி  விமர்சிக்கையில் ஜும்ஆவுடைய தினத்தில் கூறப்படும் முதல் பாங்கு “பித்அத்”தானது என்று அவர்கள் கூறியுள்ளார்கள். என்று இப்னு அபீஷைபா அறிவித்துள்ளார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறியதற்கு அவர்கள் உஸ்மான்(ரழி) அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள பாங்கை அட்சேபித்துள்ளார்கள் என்று பொருட்கொள்ளவும் ஏதுவாகிறது. “நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாததொன்று மக்களுக்கு உணர்த்துவதற்காக கூறியுள்ளார்கள் என்றும் பொருட் கொள்ளவும் ஏதுவாகிறது. ”நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்து இது நாள்வரை ஜும்ஆவுக்கு (இமாம் மிம்பரின் மீது அமரும் போதுக் கூறப்படும்) ஒரே பாங்கைத்தவிர, வேறு பாங்கு எதுவும் கூறப்படாத சில பகுதிகள் இன்றும் உலகில் இருந்து வருவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது” என்று இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஜும்ஆத் தொழுகைக்கு முன் இமாம் மிம்பரில் அமரும் வரை நபீலானத் தொழுகைகள் தொழுதுக் கொள்வது விஷேசமாகும். இமாம் மிம்பரில் அமர்ந்த பிறகு, தஹியத்துல் மஸ்ஜிதெனும்  பள்ளியின் காணிக்கைத் தொழுகையைத் தவிர வேறு எத்தொழுகையும் தொழக் கூடாது. ஆனால் ளுஹ்ருடைய தொழுகைக்கு முன், சுன்னத்து இருப்பதுப் போல் ஜும்ஆவுக்கு “முன் சுன்னத்து” என்று எதுவுமில்லை.

இப்னு உமர்(ரழி) அவர்கள் ஜும்ஆத் தொழுகைக்கு முன்னால் (நபீலான) தொழுகையை மிகவும் நீட்டித் தொழுதுக் கொண்டிருந்ததோடு ஜும்ஆவுக்குப் பின்னர் இரண்டு ரகாஅத்துக்களையும் தொழுதுக் கொண்டிருந்தார்கள். மேலும் இவ்வாறு தான் நபி(ஸல்) அவர்கள் (ஜும்ஆவின் போது) தொழுது கொண்டிருந்தார்கள் என்றுக் கூறிக் கொண்டுமிருந்தார்கள். (இப்னு உமர்(ரழி) அபூதாவூத்)

Previous post:

Next post: