நாட்டு நடப்பு

in 1990 செப்டம்பர்

நாட்டு நடப்பு

40 நாள் பாத்திஹா பக்தி:

திருச்சியில் பெயரும் புகழுடன் வாழ்ந்த ஒரு குடும்பத்தில் மத்திய அரசு துரையில் பெரும் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவரின் அன்பு மனைவி மரணித்தார்கள். இவர் ஐந்து பெண்மணிகளுக்கு தாயாகும். ஆண் மக்களில்லை. அல்லாஹ்வின் அருளால் அவர்களுக்கு அமைந்த ஐந்து மருமக்களும் ஆண் குழந்தையில்லா குறையை நிவர்த்தி செய்தனர். இவரது முந்திய கால வாழ்க்கை இஸ்லாமிய கொள்கை கோட்டிபாட்டிற்கு எப்படியிருந்தது என்பது நமக்கு தேவையற்றது. மரணிக்கும் தருவாயில் அத்தாய் கூறி சென்ற வஸியத்தும், நடந்ததும் நாம் நினைவுக் கூறத் தக்கது.

அத்தாயிக்கு ஐந்து மருமக்கள் கிட்டியபின் அவரது வாழ்வில் சுன்னத், பித்அத் எவை என உணர ஆரம்பித்தார்கள். இவரது பரந்த உறவினர்களின் வீடுகளில் நடக்கும் அநாட்சாரங்களை முடிந்தவரைத் தடுத்தார்கள். இல்லையெனில் வெறுத்தொதுக்கினார்கள். ஒரு தடவை அவரது உறவினர் வீட்டில் மெளத்தில் நடந்த அநாட்சாரங்களைக் கண்டு, வெகுண்டெழுந்தார்கள். தனது மருமக்களில் ஒருவரிடம் இவ்வனாட்சாரங்களைக் கண்டித்து நோட்டீஸ் போடுங்கள். என்றார்கள். அதற்கான எல்லா செலவுகளையும் நான் ஏற்கிறேன் என்றும் கூறினார்கள்.

அத்தாய் இறப்பதற்கு முன் 4வது மகளின் வீட்டிலிருந்தார்கள். இரவு கடிய நெஞ்சுவலியினால் அவதியுற்றார்கள். தனது கடைசி நேரம் வந்துவிட்டது என்று உணர்ந்தார்களோ என்னவோ? எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; எல்லோரும் செய்வதுப் போல 7,10,40 பாத்திஹாக்கள் ஓத வேண்டாம்; ஐந்து மருமக்களும் மாமாவுடன் சேர்ந்து எதீம் கானாவிற்கு சாப்பாடு சமைத்துக் கொடுங்கள். அது போதுமானது என வஸியத் செய்தார்கள். அவர் நெஞ்சுவலியால் பட்ட அவஸ்தையை காண சகிக்காத கணவரும், 3வது, 4வது மருமக்களும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மறுநாள் கடிய மாரடைப்பால் இவ்வுலக வாழ்வை நீத்தார்கள் இன்னா லில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அத்தாயின் வஸியத்படி எதீம்கானாவிற்கு உணவு சமைத்து போட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவரின் மச்சான்களைக் கலந்துக் கொள்ளும்படி அழைப்புக் கொடுக்கப் பட்டது. வருந்ததக்க விசயம்; முதல் மகள், மருமகளைத் தவிர மற்ற நால்வரும் அதற்கான செலவில் பங்கேற்றனர். மூத்த மகளும் மருமகனும் சேராதது விமர்சனத்துக்குரியதல்ல. அது அவர்களது சொந்த விருப்பம் எனக் கொள்ளலாம். ஆனால் அவர் செய்ததோ பித்அத்தான ஒரு செயல்.

மாமியாரின் வஸியத்தை செயல்படுத்த நான் தயாரில்லை. ஆனால் அவரது ஆத்மா சாந்தியடைய 40நாள் பாத்திஹா நடத்த வேண்டுமெனக் கூறினர். மற்ற சகலைகள் அதனை சரிகாணாததால், தனது சின்ன மாமாக்கள் தனது அண்ணார் நடத்திய, அவரது மனைவியின் வஸியத் விருந்தில் கலந்துக் கொள்ளவில்லை. அதில் ஒருவர் எதீம் கானா விருந்தில் கலந்துக் கொள்ள அழைப்புக் கொடுத்த போது “நான் எதீம் அல்ல” என எதிர்வாதம் செய்தார். ஓர் அழகிய சுன்னத்தான விருந்தில் கலந்துக் கொள்ள மறுத்த அவர் மறுநாள் 40 நாள் பாத்திஹா என்ற பித்அத்தான விருந்தில் கலந்துக் கொண்டார்.

இவ்விருந்தை தனது வீட்டில் நடத்தியவரைப் பற்றி ஒரு சொல் இவரிடம்  ஸஹாபாக்கள், அவ்லியாக்கள் என்ற இரு பிரிவில் எவர் அல்லாஹ்வின் பாதையில் உயர்ந்தவர் என்ற கேள்வியைக் கேட்டால் “அவ்லியாக்கள் தான்” என்று உரத்து சொல்லும் நெஞ்சலுத்தம் கொண்டவர். இதேக் குடும்பத்தில் மற்றொரு 40 நாள் பாத்திஹா. பெண் எடுத்த சம்பந்தியின் 40 நாள் பாத்திஹா 22.9.1990ல் நடைபெறும், வந்து கலந்து சிறப்பிக்கும்படி அச்சடித்த காடிதம் வருகிறது. எதிர் பாராத விதமாக இரத்த உறவில் ஒருவரின் மெளத்தும் அதே நாளில் நிகழ்கிறது. மெளத்து செய்தி போன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

அதற்கு கொடுக்கப்பட்ட பதில்: நாங்கள் 40நாள் பாத்திஹாவில் கலந்துக் கொள்ள வேண்டியுள்ளதால் ஜனாஸாவில் கலந்துக் கொள்ள முடியாது.

நபி(ஸல்) அவர்கள், ஜனாஸாவில் கலந்துக் கொள்வதை சிறப்பித்து கூறியுள்ளது இவர்களுக்குத் தெரியாதா? அது ஒரு அழகிய சுன்னத் என்பது இவர்கள் அறியாததா? 7,10,40 நாள் பாத்திஹாக்கள் மாற்று மதத்தினர்களிடமுள்ள 7,16 நாள் திவசங்களின் மறு உருவங்கள் என்பது இவர்களுக்கு தெரியாதா? எவனொருவன் மாற்றாரைப் பின்பற்றுகிறானோ அவன் என்னைச் சார்ந்தவனல்ல என நபி(ஸல்) கூறியுள்ளது இவர்கள் அறியாததா? போன்ற கேள்விகளை அவர்களின் முன் வைப்போமாக! 40 நாள் பாத்திஹா பக்தி பித்அத் பக்தி. ஜனாஸாவில் கலந்துக் கொள்வதே நபிவழி சுன்னத் என்பதை ஏற்று நடக்க  நாம் துஆ செய்வோமாக!

****************************************

    வீரத் துறவியிடம் ஒரு கேள்வி:

15-9-1990 துக்ளக் இதழில் திருவல்லிக்கேணி  கலவரம் பற்றி இரு தரப்பு வாதங்கள் வெளியாகியுள்ளன. இதில் முஸ்லிம் தரப்பு வாதங்கள் என ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் முஸ்லிம் தரப்பில் எம். அப்துல் லத்தீப் எம்.எல்.ஏ கூறியுள்ளார். இந்துக்களின் தரப்பில் ஹிந்து முன்னணி அமைப்பாளர் இராம. கோபாலன் கூறியுள்ளார். இங்கு, அப்துல் லத்தீப் அவர்களின் கூற்று நாமறிந்ததே! இராம. கோபாலனின் கூற்றைக் கண்டோம். நமது அறிவில் பொரி தட்டியது.

எனவே அவரது கூற்றின் அடிப்படையில் ஒரு கேள்வியை வைக்கின்றோம். இது அவரைப் போன்ற ஹிந்து மதத் தலைவர்கள் அனைவருக்கும் பொருந்தும். மசூதிகளின் முன் மேளத்தாளங்கள் அடிக்கக் கூடாது என்று குர்ஆனிலோ, ஹதீஸிலோ தடையேதும் இல்லை. முஸ்லிம் நாடான ஆப்கானிஸ்தானில் மேளத் தாளத்திற்கு தடையில்லை என்று டாக்டர் அம்பேத்கார் குறிப்பிட்டுள்ளார். (ஆதாரம்: பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை என்ற நூல் – வால்யூம் 8, பக்கம் 269). இப்படி இராம. கோபாலன் குறிப்பிட்டுள்ளார். டாக்டர் அம்பேத்காரின் ஆதாரத்தை ஆப்கானிஸ்தான் நாட்டுடன் இணைத்து எழுதியுள்ளார்.

இது மட்டுமின்றி மசூதிகளுக்கு எதிரில் மேளதாளம் ஏன் வாசிக்கக் கூடாது என்பதற்கு திருச்சி பேராசிரியர் கே.எம்  காதர் முகையதீன் 22.6.86 மறுமலர்ச்சியில் குறிப்பிட்டிருந்ததையும் மேற்கொள் காட்டியுள்ளார். சாதாரணமாக பள்ளியின் முன் மேளதாளம் வாசிக்கக் கூடாது என்பதற்கு இவ்வளவு ஆதாரங்களை எடுத்து வைக்கும் இராம. கோபாலன் அயோத்தியில் உள்ள பாபரி மஸ்ஜித் இடத்தில் தான் அவரது இராம கடவுள் பிறந்தார் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரமாவது தர முடியுமா?

பாபரி மஸ்ஜிதுக்கும், இராமர் எங்கு அங்கு பிறந்தார் என்பதற்கும் எவ்வித சரித்திர ஆதாரமுமில்லை, தொல்பொருள் ஆராய்ச்சிகள் ஆதாரமுமில்லை என மெய்ப்பித்துள்ளனர் பலர், இதனை நாமாக சொல்லவில்லை. இதனைச் சொன்னவர்கள் முஸ்லிம் அறிஞர்களுமில்லை. தேசியப் பேராசிரியர்கள் கனித்த குமார் சேட்டர்ஜி, ஏ.எம். மஜ்மூதார், டாக்டர் எஸ், ராதாகிருஷ்னனின் புதல்வர் டாக்டர் சர்வப்பள்ளி கோபால் டாக்டர் R.L. சுக்லா போன்ற சரித்திர பேராசிரியர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

அதாவது திருவல்லிக்கேணி கலவரத்திற்கு விளக்கமளித்த இராம. கோபாலன் போலவே மேலேக் குறிப்பிட்ட பேரரிஞர்கள் பாபரி மஸ்ஜித் இராம ஜன்ம பூமியல்ல என ஆதாரங்களைத் தந்துள்ளனர். இவரைப் போன்றே வால்யூம், பக்கங்களையும், ஆதாரமாகக் கொண்டு இ. அருள்செல்வன் என்பவன் எழுதிய “பாபரி மஸ்ஜித் ராம ஜன்ம பூமியா? ஒரு வரலாற்று பார்வை” என்ற நூலில் தொகுத்துள்ளார். (விலை ரூ.11.00 ஹிந்துஸ்தான் பப்ளிகேஷன், 81 அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை-11) டாக்டர் அம்பேத்காரின் ஆப்கானிஸ்தான் ஆதாரங்களை வால்யூம், பக்கம் என எடுத்துரைக்கும் இராம. கோபாலன் பாபரி மஸ்ஜித் விஷயத்திலுள்ள சரித்திர தொல்பொருள், அகழ் பொருள் ஆராய்ச்சி ஆதாரங்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறார். பொருத்திருந்து பார்ப்போம்.

******************************

அழகிய முன்மாதிரி:

எல்லோரும் திருமணத்திற்காக ஆயிரக்கணக்கில் ஏன் இலட்சக்கணக்கில் செலவு செய்து தங்களது செல்வ செழிப்பை காட்டுவதைக் காண்கிறோம். அதில் பரபரப்பான செலவுகள் பல அடக்கம். ஆனால் 23.9.1990ல் ஒரு திருமணம் அதிராம்பட்டிணத்தில் நடந்தது. M.M. அலியார் என்ற இஸ்லாமியத் தோழர், தான் நடத்திய இத்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு ஆளுக்கு ஒரு குர்ஆன் – தமிழ் மொழிப் பெயர்ப்புடன் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இத்திருமணத்தில் கலந்துக் கொண்ட ஒரு தோழர் மூலம் இவர் சுமார் 1000 திருக்குர்ஆன் பிரதிகள் வந்திருந்தவர்களுக்கு வழங்கியதாக அறிகிறோம். ஒரு நூலின் விலை ரூ.45/-ஆகும். அதாவது ரூ. 45000/- இதற்காக செலவளித்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.

இதன் மூலம் ஆயிரம் நபர்களுக்கு திருக்குர்ஆன் தமிழ் மொழிப் பெயர்ப்புடன் கிடைத்தது. அதனை அவர்கள் தினசரி ஓதி பொருள் விளங்குவார்களானால் அவர்களுக்கு எழுத்துக்கு  ஒன்று முதல் 10 நன்மைகள் கிடைக்கும். இச்செயலைத் தூண்டிய M.M அலியாருக்கும் கிடைக்கும் அல்லவா? இது நபிமொழியல்லவா? இதுப் போல ஒவ்வொரு திருமண வைபவத்திலும் அதிகமாக செலவளிக்க விரும்புவோர் செய்யலாமல்லவா? இதேப் போல் ஹதீஸ் நூல்களும் வழங்கப்படலாம் அல்லவா? இதன் மூலம் குர்ஆனும் ஹதீசும் ஒவ்வொருக்கொருவர் கிடைக்குமல்லவா, அதன்படி நடக்க முயலலாமல்லவா?

இதைத்தான் ஒருவர் ஒரு நற்செயலை ஆரம்பித்து வைக்கிறார். அதேப் போல தொடர்பவர்களும் செய்கிறார்கள். அவர்களுக்கு நன்மை கிடைக்க, அச்செயலை ஆரம்பித்து வைத்திருக்கும் நன்மை கிடைக்கும் என நபி(ஸல்) கூறினார்கள். ன்று நபி மொழி தெரிவிக்கிறது. ஸஹீஹ் முஸ்லிமில் இதனைக் காணலாம்.

இந்நற்செயலை ஆரம்பித்து முன்மாதிரியாக விளங்கும் தோழர் M.M. அலியார் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளையும் வளமான வாழ்வையும் தருவானாக. இதேப் போல் செய்ய முயல மற்றவர்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமின்.

அல்லாஹ்வின் மீது பொய்யை கற்பனை செய்கிறவனை விட அவனது வசனங்களை பொய்யாக்கிறவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்.  (அல்குர்ஆன் 6:91)

Previous post:

Next post: