விமர்சனங்கள் ! விளக்கங்கள்!!

in 1990 அக்டோபர்,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனங்கள் ! விளக்கங்கள்!!

3:7 வசன சர்ச்சையில் வரும் “தஃவீல்” என்ற பதத்திற்கு இறுதி நிலை (இறுதி முடிவு) என்றே மொழி பெயர்க்கிறீர்கள்.” இறுதி நிலை என்பதற்கு ஆதாரமாக இப்னு தைமிய்யாவின் கருத்தையும் குர்ஆனின் 4:59, 7:53, 17:35 ஆகிய வசனங்களில் வரும் தஃவீலையும் எடுத்துக் காட்டுகிறீர்கள். ஆனால் சூரந்து யூசுபின் 6:21,36,44,45  ஆகிய வசனங்களில் வரும் “தஃலீல்” என்ற பகத்திற்கு இறுதி முடிவு என்று பொருள் இல்லாமல் (பொதுவாக) விளக்கம் என்றே தர்ஜுமா செய்யப்பட்டுள்ளது. இந்த தஃவீல்களின் விளக்கத்தை ஆதாரமாகக் கொண்டு 3:7 வசனத்தில் இறுதி நிலை அல்லாத பொதுவிளக்கம் என்று பொருள் கொள்ளலாமே? நீங்கள் ஏன் இறுதி முடிவிலேயே நிற்கிறீர்கள்? பரங்கிப்பேட்டை, கு.நிஜாமுத்தீன் கே.எஸ்.ஏ.இ

நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் “தஃவீல்” என்ற அரபி பதத்திற்கு இறுதி முடிவு, விளக்கம் என்ற பொருள்கள் இருப்பதை நாம் மறுக்கவில்லை. ஒவ்வொரு மொழியிலும் சில பதங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் இருப்பதைப் பார்க்கத்தான் செய்கிறோம். அவ்வாறு இருப்பதால் அப்பதம் இடம் பெறும் வாக்கியங்களிலெல்லாம் எல்லாப் பொருள்களையும் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுவது தவறாகும்.

உதாரணமாக “சட்டம்” என்ற தமிழ் பதத்திற்கு பாராளுமன்றத்தில் அல்லது சட்டசபையில் இயற்றப்படும் கட்டளைத் திட்டம் என்ற பொருளும் பெறலாம். தச்சர் செதுக்கும் மரச்சட்டம் என்ற பொருளும் பெறலாம். “சட்டம்” என்ற பதத்திற்கு இரண்டு பொருளும் இருக்க பாராளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டத்திற்கு கட்டளைத் திட்டம் என்று மட்டும் ஏன் பொருள் கொள்கிறீர்கள். பாராளுமன்றத்தில் “மரச்சட்டம்” இயற்றப்பட்டது என்று ஏன் பொருள் கொள்ளக்கூடாது என்று கேட்க முடியாது. இந்தப் பதத்திற்கு இப்படிப் பொருள் இருந்தாலும் இந்த இடத்திற்குப் பொருத்தமான பொருள் அல்ல என்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள். மீறி அப்படிப்பொருள் கொண்டால் அர்த்தம் அனர்த்தமாக ஆகும் என்பதே உண்மையாகும்.

அதேபோல் 3:7 வசனத்திலுள்ள “தஃவீல்” என்ற பதத்திற்கு அந்த இடத்தில் பொருந்தாத “விளக்கம்” என்ற பொருளைக் கொடுத்தால் அர்த்தம் அனர்த்தமாகி விடும். “இறுதி முடிவு” என்ற இடத்தில் விளக்கம் என்று பொருள் கொடுத்துக் கொண்டு மனமுரணாகக் கொடுத்த பொருளை வைத்து, விளங்க முடியாததை அல்லாஹ் ஏன் இறக்கி வைக்க வேண்டும்? என்று கேள்வியையும் எழுப்பிக் கொண்டு குர்ஆனின் “முத்தஷாபிஹாத்” வசனங்களை எல்லாம் “முஹ்க்கம்” வசனங்களாக மாற்றும் நிலையும், 3:7 “முஹ்க்கம்” வசனத்தை “முத்தஷாபிஹாத்” வசனமாக மாற்றும் நிலையும் ஏற்படுகிறது. இறுதி முடிவெடுக்கும் அல்லாஹ்வின் தனித்தன்மையில் அறிவில் தேர்ந்தவர்களையும் இணையாக்கும் பெருங்குற்றத்திற்கு ஆளாக நேரிடுகிறது. அறிவில் தேர்ந்தவர்களில் மிகச் சிறப்புக்குரிய இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களே சில “முத்தஷாபிஹாத்” வசனங்களுக்குக் கொண்ட பொருள் இன்று விஞ்ஞான வளர்ச்சி மூலம் தவறு என்று நிரூபிக்கப்பட்டு வருகிறது.

உதாரணம் – அலக் – இரத்தக்கட்டி – தொங்கிக் கொண்டும் உறிஞ்சும்  ஒன்று. எனவே கால நிலைக்கேற்றவாறு விளங்க முடியும் என்பதாகும். அதன் பொருள் இதுதான் என்று இறுதிப்படுத்திச் சொல்லுவதற்கும் உள்ள வேறுபாட்டை அறிய முடியாமல் திணற நேரிடுகிறது. எனவே 12:6, 21:36, 44,45 ஆகிய வசனங்களில் வரும் “தஃவீல்” பதத்திற்கு கொடுக்கும் “விளக்கம்” என்ற பொருளை 3:7 வசனத்தில் வரும் “தஃவீல்” பதத்திற்குக் கொடுக்கக் கூடாது. இந்த இடத்தில் “இறுதி முடிவு” என்ற பொருளே கொடுக்கப்படவேண்டும். அப்போதுதான் 3:7 வசனத்தில் அர்த்தம் அர்த்தமாக இருக்கும். “விளக்கம்” என்ற பொருள் கொடுத்தால் அர்த்தம் அனர்த்தமாக ஆகிவிடும் என்பதை உணரவும்.

மார்ச் ’90 இதழில் 40ம் பக்கத்தில், எவர் தமது வருவாயும், வாழ்நாளும் அதிகரிக்க விரும்புகிறாரோ அவர் தமது சொந்த பந்துக்களை பற்றிப் பிடிப்பாராக என்ற ஹதீஸை வெளியிட்டிருந்தீர்கள். இது ஸஹீஹான ஹதீஸ்தானா?  குர்ஆனில் 30:37, 34:39 ஆகிய வசனங்களில் நாம் விரும்பியவர்களுக்கு ஆகாரத்தையும், பொருட்களையும் விரிவாக்குவதாக கூறும் இறைவன் 35:11 வசனத்தில் இறைவன் குறிப்பு புத்தகத்தில் குறித்துவிட்ட பிறகு எவனுடைய ஆயுளும் (வாழ்நாளும்) கூட்டவோ, குறைக்கவோபடாது என்று கூறுகிறான். இவ்வசனம் மேற்காணும் ஹதீஸோடு முரண்படுகிறதே! தெளிவுபடுத்தவும்.   பரங்கிப்பேட்டை கு.நிஜாமுத்தீன், கே.எஸ்.ஏ.,

குறிப்பிட்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்தான். அது நீங்கள் குறிப்பிடும் 30:37, 34:39, 35:11 வசனங்களுக்கு முரணாக இல்லை. 35:11 வசனத்தின் பொருள் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் இல்லை. “ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து குறைக்கப்படுவதும் ஏட்டில் இல்லாமலில்லை” என்றே உள்ளது. அதாவது அல்லாஹ்வின் ஞானத்திற்கு அப்பாற்பட்ட விஷயம் அல்ல என்றே உள்ளது. எஜமானனாகிய அல்லாஹ்வை அவனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து திருப்திப்படுத்துவதால் அவன் தாராளமாக அள்ளித் தருவதை யாரால் தடுத்து விடமுடியும்.

அல்குர்ஆன் 114வது வசனத்திற்கு உன்னை ஒருவனென்று உறுதியாக நம்பி உனது வணக்கத்திற்கு உன்னிடமே உதவி தேடுகிறோம் என்பதே சரியான பொருள். இதை இப்னு அப்பாஸ்(ரழி) மூலமாக இக்ரிமா(ரழி) அறிவிப்பதாக வவிராஜில்ஹிதாயா 77ம் பக்கத்திலும் மதாரிக் ஆகிய நூல்களிலும் உள்ளதாக ஒரு புத்தகத்தில் படித்தேன். மேலேயுள்ள பொருளுக்கு மாற்றமாக “உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம் என்று தர்ஜுமா செய்யப்பட்டுள்ளதே! எது சரியான பொருள்? பரங்கிப்பேட்டை கு.நிஜாமுத்தீன், பல்ஜூராசி.

“உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம்” என்பதற்குரிய விளக்கமாக அதனைக் கொள்ள முடியுமே அல்லாமல் மாற்றமாகக் கொள்ள முடியாது. அல்லாஹ்வுக்கு இணை, துணை இல்லை. யாருடைய ஒத்தாசையோ, உதவியோ தேவையற்றவன் அவன் ஒருவனே என்று உறுதியாக நம்பி, அன்பியாக்களையோ, அவ்லியாக்களையோ பொருட்டாகவோ, உதவியாளர்களாகவோ ஆக்காமல் அல்லாஹ்விடமே உதவி தேடுவது. அல்லாஹ்வை மட்டும் எப்படி வணங்க வேண்டுமோ அப்படி வணங்குவதற்கு அவனது உதவி இல்லாமல் முடியாது. எனவே அதற்காக அவனது உதவியைக் கோருவதும் நேரடிப் பொருளுக்கு முரணானதல்ல.

இஸ்லாத்தில் துறவறம் இல்லை என்று நீங்களும் தவ்ஹீதை நிலைநாட்டுவோரும் எழுதி வருகிறீர்கள். ஆனால் அல்லாஹ் துறவறத்தை அனுமதிக்கின்றானே! துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது கடமையாக விதிக்கவில்லை. எனினும் அல்லாஹ்வின் திருபொருத்தத்தை  அடைய விரும்பி அதனை உண்டு பண்ணி கொண்டார்கள். எனினும் அனுசரிக்க வேண்டிய முறைப்படி அவர்கள் அனுசரிக்கவில்லை. (பார்க்க அல்குர்ஆன் 57:27) இவ்வசனத்திலிருந்து அனுசரிக்க வேண்டிய முறைப்படி அனுசரித்தால் துறவறம் கூறும் என்ற சட்டத்தை பெறலாம் அல்லவா? பிறகு ஏன் துறவறம் கூடாது என்று கூறுகிறீர்கள். விளக்கம் கொடுக்க முடியுமா, பரங்கிப்பேட்டை கு.நிஜாமுத்தீன், கே.எஸ்.ளு.

குர்ஆனுக்கு  நாமாக விளக்கம் கொடுக்க முற்படுவது தவறாகும்.குர்ஆன் நபி(ஸல்) அவர்களுக்கே இறக்கப்பட்டது. குர்ஆனை மக்களுக்கு விளக்கும்படி நபி(ஸல்)அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டிருக்கிறான். (பார்க்க 16:44) 57:27ல் நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் “அனுசரிக்க வேண்டிய முறைப்படி அனுசரித்தால் துறவறம் கூடும்” என்ற சட்டத்தைப் பெறலாம் என்றால் நபி(ஸல்) அவர்கள் அதனை நமக்குச் செயல்படுத்திக் காட்டித் தந்திருப்பார்கள். அனுசரிக்க வேண்டிய முறைகளையும் கற்றுத் தந்திருப்பார்கள். “அனுசரிக்க வேண்டிய முறைகளை” அல்லாஹ்வோ, அவனது தூதரோ கற்றுத் தராத நிலையில் நீங்கள் எங்கிருந்து கற்றுக் கொள்ளப்போகிறீர்கள்? எனவே 57:27 வசனத்தில் நேரடியாக குறிப்பிடப்பட்டுள்ளதை மட்டுமே எடுத்து நடக்க வேண்டும்.

இதே போல் தான் 2:170 வசனத்தில் அவர்களுடைய மூதாதைகள் ஒன்றையுமே அறியாதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா (அவர்களைப் பின்பற்றுவார்கள்)? என்ற வசனத்தைக் காட்டி நேர்வழி நடந்த மூதாதைகளைப் பின்பற்றலாம் என இவர்களாக யூகம் செய்து கொண்டு, நேர்வழி நடந்தவர்களாக இவர்கள் நம்பும் சூஃபிகளை கண்மூடிப் பின்பற்ற முனைகின்றனர் முகல்லிதுகள். ஸலபுஸ்ஸாலிஹீன்களின் செயல்கள் அனைத்தையும் கண்மூடிப் பின்பற்ற முனைகின்றனர். தங்களை “ஸலபிகள்” என்று கூறிக் கொள்வோர். இந்த இரண்டு நிலைகளும் தவறேயாகும்.

ஜூலை, ஆகஸ்ட் “90 இதழில் 16ம் பக்கம் இடம்பெற்ற “வழழ்ழாள்ளீன்” என்று ஓதியவுடன் ஆமின் சொல்ல இடம் கொடாமல் – உடனே பிஸ்மி கூட ஓதாமல் அடுத்த சூராவை ஓதிவிடுகிறார்” என்ற வாக்கியம், பிஸ்மியை சப்தமாய் ஓதலாம் என்ற ஐயத்தை உண்டாக்குகிறதே?    முஹிப்புல் இஸ்லாம், துபை.

சூரத்துல் ஃபாத்திஹாவுக்கு முன்பு பிஸ்மி ஓதப்பட்டது என்ற இதைப் போன்ற ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டே ஒரு சாரார் பிஸ்மியை சப்தமிட்டும் ஓதலாம் என்று பொருள் கொள்கின்றனர். பிஸ்மி ஓதப்பட்டது என்று இருப்பதை ஆதாரமாக வைத்து பிஸ்மியை சப்தமிட்டு ஓத சட்டம் எடுக்க முடியாது. பிஸ்மி சப்தமிட்டு ஓதப்பட்டாலும், பிஸ்மி மெதுவாக ஓதப்பட்டாலும் பிஸ்மி ஓதப்பட்டது என்று தாராளமாகச் சொல்லலாம். பிஸ்மி ஓதாமல் விடப்பட்டதில்லை. ஓதப்பட்டது என்பதையே இது தெளிவாகக் கூறுகிறது. பிஸ்மி மெதுவாக ஓதப்படுவதை, அதற்காக மெளனமாக நிற்கும் நிலை, தாடி அசைவு போன்றவை தெளிவுபடுத்துகின்றன. 

நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரையில் சம்பந்தப்பட்ட இமாம் “வழழ்ழாள்ளீன்” என்று சப்தமிட்டு ஓதியதற்குப் பிறகு “ஆமீன்” என்று சப்தமிட்டு முக்ததிகள் சொல்லுவதற்கு அவகாசம் கொடுக்காமலும், தான் மெதுவாக, பிஸ்மி சொல்லாமலும் அடுத்த சூராவை ஆரம்பித்து விடுகிறார் என்றே எழுதப்பட்டுள்ளது. இதனை (உதாரணத்திற்கு) வழழ்ழாள்ளின் சூல் ஹுவல்லாஹு அஹது என்று அந்த இமாம் இடைவெளியே கொடாமல் ஓத ஆரம்பித்தால் பின்னால் தொழுபவர்கள் தெளிவாக அறியமுடியும்.

ஏப்ரல் மாத இதழில் “ஹதீஸ் பெட்டகம்” கட்டுரையில் 14ம் பக்கத்தில் “பெண்களை அத்தொழுகையில் கலந்துக் கொள்ளவும் முஸ்லிம்களின் பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பபட்டோம் என்றுள்ளது. பிரார்த்தனை என்ற இடத்தில் மொழி பெயர்ப்பு தவறு. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் எந்த பெருநாளைக்கும் மக்கள் கூடியுள்ள இடத்தில்  பிரார்த்தனை செய்ததாக காண முடியவில்லை. எனவே அந்த இடத்தில் வரும் “தஃவதல் முஸ்லி மீன் என்ற பதத்திற்கு “மார்க்கப் பிரச்சாரம்” என்ற பொருளே வரவேண்டும். நபி(ஸல்) அவர்கள் பெண்களிடம் மார்க்கப் பிரச்சாரம் செய்ததை (புகாரீ) ஹதீஸ் மூலம் அறிகிறோம். எனவே திருத்தி வெளியிடவும்.
 பரங்கிப் பேட்டை கு.நிஜாமுத்தீன், செளதி அரேபியா.

நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப்போல் “தஃவத்” என்ற அரபிப் பதம் அழைத்தல் என்ற பொருளைத் தருகிறது. இது இறைவனிடம் கேட்கும் துஆவிற்கும் (பிரார்த்தனை) பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரச்சார பணியில் ஈடுபடுவதையும் குறிக்கிறது. விருந்தில் பங்கேற்க அழைப்பதையும் குறிக்கிறது. இதை நாமும் மறுக்கவில்லை. ஆனால் குறிப்பிட்ட ஹதீஸில் முதலில் நாம் குறிப்பிட்டுள்ள பொருளான “முஸ்லிம்களின் பிரார்த்தனைகளில் பங்கேற்கவும்” என்பதே பொருத்தமாகும். ஈத்காவில் நபி(ஸல்) அவர்களின் குத்பாவையே (பிரசங்கம்) அதில் கலந்து கொண்டோர் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் பொதுவாக இந்த உம்மத்துக்காகக் கேட்ட துஆவில் மற்றவர்கள் பங்கேற்றதை மறுப்பவர்கள் மார்க்கப் பிரச்சாரத்தில் பங்கேற்றனர் என்பதை மட்டும் எப்படி சரிகாண்கின்றனர்?

அவர்களது வாதம் சரியாக இருந்தால் இரண்டையும் மறுத்தல் வேண்டும். நபி(ஸல்) அவர்களின் துஆவிற்கு மற்றவர்கள் “ஆமீன்” சொன்னதற்கு ஆதாரமில்லை என்ற ஒரே காரணத்தை வைத்து மற்றவர்கள் துஆவில் பங்கேற்கவில்லை என்று வாதிடுகின்றனர். அதேபோல் நபி(ஸல்) அவர்கள் மட்டுமே குத்பா(பிரசங்கம்) செய்தனர். கலந்து கொண்டவர்கள் யாரும் குத்பா(பிரசங்கம்) செய்யவில்லை. பிரசங்கத்தை மெளனமாகக் கேட்டவர்கள் “மார்க்கப் பிரச்சாரத்தில்” பங்கேற்றனர் என்று ஒப்புக்கொள்கிறவர்கள் நபி(ஸல்) அவர்கள், உம்மத்தினர் அனைவருக்கும் கேட்ட துஆக்களை மெளனமாக செவிமடுத்துக் கொண்டிருந்தவர்கள் பிரார்த்தனையில் பங்கேற்கவில்லை என்று சொல்வது உங்களுக்கு விந்தையாகத் தெரியவில்லையா?

இந்த அவர்களின் தடுமாற்றத்திற்குக் காரணம் கூட்டு துஆவுக்கு “ஆமீனை” அவர்கள் ஷர்த்தாக(விதியாக) ஆக்கியதே. இதற்கு குர்ஆனிலோ, ஹதீஸிலோ ஒரே ஒரு ஆதாரத்தையும் அவர்களால் தர முடியாது. ஆனால் கூட்டு துஆவுக்கு ஆமீன் ஷர்த்தல்ல(விதியல்ல) என்பதற்கு நாம் முன்பு 10:88,89 இரு குர்ஆன் வசனங்களை ஆதாரமாக எடுத்து வைத்திருந்தோம். 10:88 வசனத்தில் மூஸா(அலை) அவர்கள் மட்டும் பொதுவாக பன்மையில் கேட்ட துஆவுக்கு அல்லாஹ் 10:89 வசனத்தில் “உங்கள் இருவரின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டு விட்டது” என்று பதில் அளிக்கிறான். கூட்டு துஆவுக்கு “ஆமீன்” ஷர்த்தல்ல என்பதற்கு இவ்வளவு தெளிவான ஆதாரம் கொடுத்த பின்பும் ஏன் இந்த தடுமாற்றம்?

இது மூஸா(அலை) அவர்களின் கெளமுக்கு எங்களுக்கல்ல என்று முகல்லிதுகளைப்போல் எண்ணுகிறார்களோ என்னபோ? அப்படி நியாயப்படுத்துவதற்கும், கூட்டு துஆவுக்கு “ஆமீன்” ஷர்த்தாகும் என்பதை குர்ஆன் வசனங்களைக் கொண்டோ, அல்லது ஹதீஸைக் கொண்டோ நிலைநாட்ட வேண்டுமேயல்லாது மனித ஊகங்களை எடுத்து வைக்கக்கூடாது. இதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. பர்ழான தொழுகைக்குப் பின் ஓதுவதற்கு நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆக்கள் அனைத்தையும் பாருங்கள். அவை அனைத்தும் ஒருமையிலேயே கற்றுக் தரப்பட்டுள்ளன. மேலும் நபி(ஸல்) அவர்கள் அவற்றை மற்றவர்கள் கேட்கும் வகையில் வழமையாக ஓதிக் கொண்டிருக்கவுமில்லை.

ஆனால் ஜும்ஆ குத்பா(பிரசங்கம்) ஈத் குத்பா(பிரசங்கம்) இவற்றில் கேட்கும் துஆக்களை பன்மையிலும், அமர்ந்திருப்பவர்கள் தெளிவாகக் கேட்கும் வகையில் சப்தமிட்டும் வழமையாக ஓதிக் கொண்டிருந்ததற்குரிய ஆதாரங்களை யாரும் மறுக்க முடியாது.

எனவே பர்ழான தொழுகைக்குப் பின் கூட்டு துஆ இல்லை என்பதை ஆதாரமாக வைத்தோ, அல்லது பொதுவாக பன்மையில்  உம்மத்துக்காகக் கேட்கப்பட்ட துஆக்களுக்கு மற்றவர்கள் “ஆமீன்” சொன்னதற்கு ஆதாரமில்லை என்பதை ஆதாரமாக வைத்தோ, ஜும்ஆ, ஈத் குத்பாக்களில் பொதுவாக உம்மத்தினர் அனைவரின் நலனுக்காகவும் கேட்கப்பட்டவை கூட்டு துஆ இல்லை என வாதம் புரிவது தவறாகும். ஈத் குத்பாவின் சமயத்தில் பெண்கள் முஸ்லிம்களின் பிரார்த்தனைகளில் பங்கேற்கவில்லை. ஆயினும் முஸ்லிம்களின் மார்க்கப் பிரச்சாரத்தில்” பங்கேற்றனர் என்று கூறுவது அதைவிடத் தவறாகும்.

பிரிவுப் பெயர்கள் கூடாது என்பதற்கு ஆதாரமாக குர்ஆனிலிருந்து 2:213, 6:159, 21:92,93, 23:53, 42:14, 45:17 ஆகிய வசனங்களை சமர்ப்பிக்கிறீர்கள். இந்த வசனங்களை ஆழ்ந்து நோக்கிய எனக்கு சில சந்தேகங்கள். 2:213வது வசனத்தில் வேதக்கட்டளை பின் வேறுபாடு கொண்டவர்களைக் கண்டிக்கிறான். நேர்வழி நடக்கும் இயக்கத்தார்கள் முகல்லீது மெளலவிகளைப்போல் வேத வசனங்களில் கருத்து வேறுபாடு கொள்ளவில்லையே. இந்நிலையில் அவர்களை எப்படிக் கண்டிக்க முடியும்? 6:159 வசனத்தில் மார்க்கத்தைப் பலவாறாகக் கூறுபோடுபவர்களைக் கண்டிக்கிறான். IAC, JAQH ஆகியோர் மார்க்கத்தின் பிரிவை உண்டு பண்ணவில்லை என்பதே உண்மை. குர்ஆன் நபிவழியில் ஒருமித்தக் கருத்தைக் கொண்டு தனிப் பெயரில் செயல்படுகிறார்கள் அவ்வளவுதான்,

அதேபோன்று 21:92ல் நீங்கள் ஒரே சமுதாயத்தவர்கள் (உம்மதன் வாஹிதா) என்று கூறுவது உண்மை. இதை வைத்து தனி பெயரில் இறங்கிய நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே ஒரே சமுதாயமான முஸ்லிம்கள் “அன்சாரிகள்”, “குறைஷிகள்”, “முஹாஜிரீன்கள்” போன்று தனித்தனி பெயர்களைச் சூட்டிக் கொண்டு வாழந்துள்ளார்கள். இதையெல்லாம் நபி(ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை என்பதைக் கவனிக்கும்போது, குர்ஆன், ஹதீஸ் வழி நடப்போர் தனிப் பெயரிலும் செயல்படலாம் என்பது புலனாகின்றது. 21:93ல் வசனம் பிரிவைக் கண்டித்தாலும், 94ம் வசனம் (குர்ஆன், ஹதீஸை) விசுவாசங்கொண்டு நடப்போர் வெற்றியாளர்களே என்று சொல்கிறது. அதேபோன்று 23:53, 30:32, 42:4, 45:17, ஆகிய வசனங்கள் கூட எதைக் கண்டிக்கின்றது என்பதை அலசும்போது மார்க்கத்தின் வாழ்க்கை வணக்க வழிபாட்டின் (உதாரணமாக : ஒதுக்கப்படவேண்டிய மத்ஹபுகள்) பிரிவினையை உண்டுபண்ணும் அறிவிலிகளின் செயல்களை வன்மையாகக் கண்டிக்கின்றதேயல்லாமல் குர்ஆன் ஹதீஸைப் பற்றிப் பிடித்து தனிப் பெயரில் (சட்ட திட்டங்களில்லை) செயல்படுவதை கண்டிப்பதைக் காண முடியவில்லை. என் கருத்தில் தவறு இருப்பின் தெளிவு படுத்துங்கள்.     பரங்கிப்பேட்டை, கு. நிஜாமுத்தீன், செளதி அரேபியா.

தடுக்கப்பட்ட பிரிவுப் பெயர்கள் எவை, அடையாளம் தெரிந்து கொள்ளுவதற்காக அனுமதிக்கப்பட்ட பெயர்கள் எவை என்பதைத் தீர்க்கமாக நீங்கள் அறிந்துகொண்டால் குழப்பம் தீர்ந்துவிடும். அனுமதிக்கப்பட்ட அடையாளம் தெரிந்து கொள்ள இடப்படும் பெயர்கள் வழிகேட்டில் செல்லும் 72 பிரிவினரிலிருந்து பிரிந்து, வெற்றி பெறும் ஒரே கூட்டம் என்ற கருத்தில் இடப்பட்டவை அல்ல என்பதற்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள பெயர்களே தக்க சான்றாகும். முஹாஜிர்கள், அன்சாரிகள் என்ற பெயர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் புறப்பட்டவர்களையும், அவர்களுக்கு உதவி செய்தவர்களையும் குறிக்கும். அவர்களில் யாரும் நாங்கள்தான் வெற்றி பெற்ற கூட்டம் என்றோ, முஹாஜிர்கள், அன்சாரிகள் என இயக்கம் அமைத்துக் கொண்டோ அழைப்புப்பணி செய்ததாக வரலாறு இல்லை. அதேபோல் குறைஷ்கள், குறைஷி என்பவரின் மக்களை குறிக்குமே அல்லாமல் வெற்றி பெறும் கூட்டம் என்ற பொருளைத் தராது. குறைஷ் பெயரில் இயக்கம் அமைத்து அழைப்புப்பணி செய்ததாகவும் வரலாறு இல்லை. இப்பெயர்கள் அவர்களாகத் தங்களுக்குச் சூட்டிக்கொண்ட பெயர்களுமல்ல.

ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள JAQH என்ற பிரிவுப் பெயரின் பொருள் என்ன? “குர்ஆன், ஹதீஸின்படி செயல்படும் ஜமாஅத்” என்று சொல்லுவார்கள். முஸ்லிம்கள் குர்ஆன், ஹதீஸ்படி செயல்படக் கடமைப்பட்டவர்கள் தானே, அப்படியானால், முஸ்லிம் என்று அல்லாஹ் இட்ட அழகிய பெயர் இருக்க JAQH என்று ஏன் பெயரிட்டீர்கள்? என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவார்கள்? “முஸ்லிம்” என்ற பெயரில் குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமாகச் செயல்படும் பல பிரிவார் இருக்கிறார்கள். அவர்களிலிருந்து எங்களை வேறுபடுத்திக் காட்டவே எங்களுக்கு JAQH என்ற பெயரைச் சூட்டியுள்ளோம் என்று சொல்லப் போகிறார்கள். இதைத் தவிர வேறு நியாயமான எந்தக் காரணத்தையும் சொல்ல முடியாது. அதாவது, முஸ்லிம் சமுதாயத்திலிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுகிறார்கள். சமுதாயத்தை மற்றவர்களைப் போல் இவர்களும் கூறு போடுகிறார்கள். இப்படிச் சமுதாயத்தைக் கூறு போடும் பெயர்களையே பிரிவுப் பெயர்கள் என அல்லாஹ் கண்டிக்கிறான். இப்படிப்பட்ட பெயர்களையே நீங்கள் குறிப்பிடும் வசனங்கள் அனைத்தும் குறிப்பிட்டுக் கண்டிக்கின்றன.

வழிகெட்ட 72 பிரிவினரையும் நரகத்திற்கு அனுப்பிவிட்டு, வெற்றி பெறும் ஒரே ஒரு கூட்டத்தை மட்டும் சுவர்க்கத்திற்குப் பிரித்து அனுப்பும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. அது மறுமையில் செவ்வனே நடைபெறும். அதற்காக 72 கூட்டத்திலிருந்து வெற்றி பெறும் கூட்டம் தாங்களாக இவ்வுலகிலேயே தங்களைப் பிரித்துக் காட்டி அல்லாஹுவின் தனித் தன்மையில் பங்கேற்கப்போக வேண்டியதில்லை. இவ்வுலகில் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு வழிகேட்டில் இருக்கும் 72 பிரிவினரும், வெற்றிபெறும் ஒரு பிரிவினரும் முஸ்லிம் உம்மத்தைச் சார்ந்தவர்களே. “எனது உம்மத்து 73 பிரிவினர்களாகப் பிரிவார்கள்” என்று நபி(ஸல்) அவர்களே கூறி இருக்கும் நிலையில், அதாவது நபி(ஸல்) அவர்களை வழிகெட்டவர்களைத் தங்களுடன் இணைத்துச் சொல்லியிருக்க இவர்கள் அவர்களை விட்டும் தங்களைப் பிரித்துக்காட்ட முற்படுவது முறைதானா?

முஸ்லிம் உம்மத்திலிருந்து அவர்களை இவ்வுலகிலேயே பிரித்துக் காட்ட இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இன்று நமது இந்திய நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராகக் காணப்படும் பல விஷயங்களில் இவர்கள் எந்த முஸ்லிம்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி JAQH என்று காட்டிக் கொள்கிறார்களோ. அவர்கள் முஸ்லிம்களின் தரப்பில் இருக்கிறார்களா? அல்லது முஸ்லிம்களுக்கு எதிரான தரப்பில் இருக்கிறார்களா? இதையாவது சிந்தித்து உணர வேண்டாமா? முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ள இந்திய நாட்டில் முஸ்லிம்களிடையே பிரிவினையை உண்டாக்காமல், அனைவரையும் ஒன்றாக அணைத்துச் சென்றால் அது எவ்வளவு பெரிய பலமாக இருக்கும் என்பதை இவர்களால் உணர முடியவில்லையா? அல்லது அவர்களைத் தங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டாவிட்டால் நாளை மறுமையில் அல்லாஹ் தவறுதலாக இவர்களுக்குக் கிடைக்கும் சுவர்க்கத்திலிருந்து பாகம் பிரித்து அவர்களுக்குக் கொடுத்து விடுவான் என்று அஞ்சுகிறார்களா?

வழிகேட்டில் செல்லும் அவர்களின் வழிகேட்டைத் தெளிவாகப் புரிந்து, அவை குறித்து எச்சரிப்பதோடு அந்த வழிகேட்டில் இருந்து இவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை நாம் மறுக்கவில்லை. அதல்லாமல் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் அவர்களிலிருந்து JAQH என்று தங்களைப் பிரித்துக் காட்டுவதால் அழிவைத் தரும் பெயர் புகழைத் தவிர வேறு என்ன லாபம் இவ்வுலகிலும், மறுமையிலும் கிடைக்கப் போகிறது. அதானல் முஸ்லிம் உம்மத்தில் மேலும் பிளவுகள் ஏற்பட்டு மாற்று மதத்தார்களிடம் மட்டுமில்லாமல், முஸ்லிம் பிரிவினைவாதிகளிடமும் தலைகுனிவு தான் ஏற்படுகிறது. அதல்லாமல் முஸ்லிம்கள் தங்கள் தங்கள் பிரிவுகளில் வலுவாக நிலைத்திருக்கவும் வழி வகுக்கிறது. முஸ்லிம் உம்மத் ஒன்றுபட்டு உயர வேண்டுமென்றால் பிரிவிப் பெயர்களை ஒழித்து “முஸ்லிம்” என்ற பெயரில் ஒரே தலைமையில் ஒன்றுபடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆக JAQH பிரிவுப் பெயரே அன்றி – அது ஒரு அமைப்போ அல்லது இயக்கமோ அல்ல என்பதே உண்மையாகும்.

அடுத்து நீங்கள் குறிப்பிட்டுள்ள JAQH பற்றிப் பார்ப்போம். நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆயத்துகளில் கண்டிக்கப்படும் ஷிபா, சுன்னத் ஜமாஅத், ஹன்பி, ஷாபி, மாலிக், ஹம்பலி, அஹ்லஹதீஸ் JAQH போன்ற பிரிவுப் பெயர்களைச் சார்ந்தது IAC என்று நாம் ஒருபோதும் சொன்னதில்லை. வழிகேட்டிலிருப்பவர்களிலிருந்து பிரித்துக் காட்டும் நோக்கத்துடன் வைக்கப்பட்ட பெயர்கள் அல்ல IAC, IAM, ISM போன்றவை. ஆயினும் மார்க்கப்பணி செய்வதற்காக இவர்களாகத் தங்களுக்கு இட்டுக் கொண்ட பெயர்களாகும். அழைப்புப் பணி செய்கிறவர்கள் தங்களுக்கென்று ஒரு தனிப்பெயரை இட்டுக்கொள்ள மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதா? என்று பார்த்தால் அனுமதி இல்லை என்ற விடையே கிடைக்கும். “எவர் அல்லாஹ் அளவில் (ஜனங்களை) அடைத்து(த் தாமும்) நற்கருமங்களைச் செய்து நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் உள்ளேன்” என்றும் கூறுகின்றாரோ, அவரை விட அழகான வார்த்தை கூறுபவர் யார்? (41:33)” என்று அல்லாஹ் கூறியிருப்பதிலிருந்தே, மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறவர்கள் தங்களை முஸ்லிம்களிலிருந்து பிரித்துக் காட்டக் கூடாது என்பதை உணர முடிகிறது.

(விசுவாசிகளே!) உங்களில் ஒரு கூட்டத்தார் தோன்றி அவர்கள் (மனிதர்களை) நன்மையின்பால் அழைத்து, நல்லதை ஏவித் தீயச் செயல்களிலிருந்து (அவர்களை) விலக்கிக் கொண்டுலிருக்கவும், இத்தகையோர்தாம் வெற்றி பெற்றோர். (3:104)

இந்த குர்ஆன் வசனமுத் அவர்களை ஜமாத்தாக இயங்க அனுமதி அளிக்கிறதேயன்றி அவர்கள் தனியொரு இயக்கப் பெயரில் செயல்படலாம் என்ற அனுமதி தரவில்லை. முஹாஜிர்கள், அன்சாரிகள், குறைஷிகள், ஹாஷிம்கள் என்ற பெயர்களை ஆதாரம் காட்டி தங்களின் இயக்கப் பெயர்களை நியாயப்படுத்துகிறவர்கள் தவறிழைக்கின்றனர் என்பதே உண்மையாகும்.

காரணம் அவர்கள் எடுத்துக்காட்டும் எந்தப் பெயரிலும் இயக்கம் அமைக்கப்பட்டு மார்க்கப் பிரச்சாரம் செய்து வந்ததற்கு எவ்வித ஆதாரமில்லை. அவர்களில் தலைவர், செயலர், பொருளாளர் என யாரும் பதவி வகித்ததாகவும் வரலாறு இல்லை. அடுத்து நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். இப்படி ஒவ்வொருவரும் தனித்தனி இயக்கப் பெயர்களில் மார்க்கப்பிரச்சாரம் செய்வதற்கு ஒரு முடிவே இல்லை என்றால் இந்த இயக்கத்தினர் அனைவரும் என்று ஒன்று சேரப்போகிறார்கள்? ஒரே தலைமையின்கீழ் எப்போது இந்த உம்மத்தை ஒன்றிணைக்கப் போகிறார்கள். நீங்களும் ஒப்புக்கொள்ளும் ஒரே சமுதாயம்(உம்மத்தன் வாஹிதா) எப்போது ஏற்படப்போகிறது?

உலக அழிவுதான் வரை இது சாத்தியமாகப் போவதில்லை. இயக்கங்களை ஒழித்துவிட்டு இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் என்ற நிலையில் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டு செயல்படுவது கொண்டே இது சாத்தியமாகும். பல இயக்கங்களுக்கு அனுமதி இருக்கும் வரை சமுதாய ஒற்றுமைக்கு வழியே இல்லை. இயக்க அமைப்புகளில் செயல்படுகிறவர்கள் இஸ்லாத்தின் ஒரு சில அங்கங்களைச் செயல்படுத்த முடியுமேயன்றி, நபி(ஸல்) அவர்களது காலத்திலும், சிறப்புக்குரிய நான்கு கலீஃபாக்களின் காலத்திலும் இருந்ததுபோல் இஸ்லாத்தை முழுமையாகச் செயல்படுத்துகிறவர்களாக ஒருபோதும் இருக்க முடியாது. இஸ்லாத்தை முழுமையாக செயல்படுத்துகிறோம் என்று அவர்கள் கூறுவது உண்மையாக இருக்க முடியாது.

முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தலைமை ஒருபோதும் இருக்கமுடியாது. சமுதாய ஒற்றுமையைக் குலைக்கும் இப்படிப்பட்ட இயக்க அமைப்புகளுக்கு குர்ஆன், ஹதீஸில் எப்படி ஆதாரம் இருக்கமுடியும்? சமாதிச் சடங்கு செய்வோர் முகல்லிதுகள் சம்பந்தமே இல்லாத குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டித் தங்களின் தவறான நிலைகளை நியாயப்படுத்துவது போல், இவர்களும் சம்பந்தமே இல்லாத குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆதாரங்களாகத் தருகின்றனர். அவை கொண்டு தங்கள் தவறான போக்கை நியாயப்படுத்துகின்றனர். அவை கொண்டு தங்கள் தவறான போக்கை நியாயப்படுத்துகின்றனர். மார்க்கத்தின் பெயரால் இயக்க அமைப்புகளுக்கு ஆதாரமில்லை என்பது ஒருபுறமிருக்க. அப்படி இயக்க அமைப்புகளில் செயல்படும் இயக்கங்களில் காணப்படும் உட்பூசல்கள், ஒரு இயக்கத்திற்கும் மற்றொரு இயக்கத்திற்கும் இடையில் காணப்படும் போட்டி பொறாமை இவை அனைத்தைக் கண்கூடாகக் கண்ட பின்பாவது படிப்பினை பெற வேண்டாமா?

இந்த உம்மத், முஸ்லிம்கள் என்ற நிலையில் ஒரே தலைமையில் ஒன்றுபடாத வரையில் இந்த சமுதாயத்தில் மறுமலர்ச்சியைப் பார்க்க முடியாது. அந்த ஒற்றுமைக்கு இந்தப் பிரிவுப் பெயர்களும், இயக்கப் பெயர்களும் முழுக்க முழுக்கத் தடையாக இருக்கின்றன என்பதை உங்களைப் போன்றவர்களும், மற்றவர்களும் உணர வேண்டும். இவ்வாறு நாம் எழுதுவது மார்க்கப் பணியில் தீவிரமாக தற்போது ஈடுபட்டுள்ள துடிப்புள்ள பல இளைஞர்களுக்குக் கசப்பாகவே இருக்கும் என்பதையும், அதனால் அவர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் வருகின்றன என்பதையும் நாம் நன்கு அறிவோம். அவர்களைத் திருப்திப்படுத்த சத்தியத்தை வளைத்து அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கு நாம் தயாராக இல்லை. நாம் சத்தியத்தை எழுதி வருவது மக்களின் நல் ஆதரவை எதிர்பார்த்து அல்ல. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மனதில் கொண்டே செயல்பட்டு வருகிறோம். இன்றில்லாவிட்டாலும் நாளை அல்லது நமக்குப் பின்பாவது இந்த எழுத்துக்கள் முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என்று அல்லாஹ் மீது ஆதரவு வைக்கிறோம்.

அந்நஜாத் ஏப்ரல் 90 மாத இதழில் மதமாற்றம் எனும் தலைப்பில் வந்த கட்டுரையில் இணைந்திருந்த சில வரிகள் உண்மை நிலைக்கு மாற்றமாக இருப்பதாக உணர்கிறோம். அதாவது, “ஆதி நபி ஆதம்(அலை) முதல் இறுதி நபி(ஸல்) அவர்கள் வரை உலகில் தோன்றிய அல்லாஹ்வின் தூதர்கள் அனைவரும் ஒரே வாழ்க்கை நெறியைப் போதித்தனர்” என குறிப்பிட்டிருக்கிறீர்கள். நபி ஆதம்(அலை) முதல் தொடர்ந்து வந்த பல நபிமார்களுக்கும், இறுதி நபியான முஹம்மது(ஸல்) அவர்களுக்கும் அந்தந்த நெறியை (ஷரீயத்தை) இறைவன் அளித்துள்ளான். ஒவ்வொரு நபியும் சற்று மாற்றத்துடன் கூடிய வாழ்க்கை நெறியை (ஷரீயத்தை)ப் பெற்றுள்ளனர் என்பதே சரியானதாகும்.

உதாரணமாக நபி ஆதம்(அலை) அவர்களின் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட திருமண உறவு முறையானது, உடன்பிறந்த சகோதரனும், சகோதரியும் மணமுடிக்கும் முறையாக (அனுமதியுடன்) இருந்தது. அன்று அனுமதிக்கப்பட்டதாக இருந்த திருமண உறவுச் சட்டம் இறுதி நபி(ஸல்) அவர்களின் காலத்தில் திருமண உறவு முறை கட்டுப்பட்டதாக அமைந்துள்ளது. இறுதி நபிக்கு இறைவன் அளித்த வாழ்க்கை நெறியில்(ஷரீயத்தில்) திருமண உறவை எவருடன் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதை அல்குர்ஆனில் கீழ்கண்டவாறு தெளிவுப்படுத்துகிறான்.

“உங்கள் தாய்மார்களும், உங்கள் பதவிகளும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தகப்பனின் சகோதரிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின், சகோதரியின் புதல்விகளும், உங்களுக்கு பாலூட்டிய உங்கள் (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவிகளின் தாய்மார்களும், (ஆகிய இவர்களை நீங்கள் திருமணம் செய்து கொள்வது) உங்களுக்கு விளக்கப்பட்டுள்ளது. (4:23)

மேலும் வாழ்வு நெறிகளில் சில மாற்றங்கள் இருந்தாலும் இறைக் கொள்கை முறையில் ஏகத்துவமே (தவ்ஹீத்) நபி ஆதம்(அலை) முதல் முஹம்மது(ஸல்) வரை எவ்வித மாற்றமும் இன்றி ஒரே கொள்கையாக இருந்ததை அல்குர்ஆன் இவ்வாறு தெளிவுபடுத்துகிறது. அதாவது, “(நபியே!) உமக்கு முன்னர் அனுப்பி வைத்த நம்முடைய தூதர்களைப் பற்றி நீர் கேளும். வணங்கப்படுவதற்கு ரஹ்மானையன்றி வேறோர் ஆண்டவனை நாம் ஆக்கினோமா?(43:45)

“(நபியே!) உமக்கு முன் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டது எதுவோ, அதனையன்றி (வேறொன்றும்) உமக்குக் கூறப்படவில்லை”. (41:43)

மேலும் எந்த காலகட்டத்திலும் ஏக இறைக் கொள்கையில் மாற்றத்தையோ, சமரசத்தையோ செய்து கொள்ள இறைவன் அனுமதிக்கவில்லை. ஆகவே ஏக இறைக் கொள்கையில் நபி ஆதம்(அலை) முதல் இறுதி நபி முஹம்மது(ஸல்) வரை ஒரே கொள்கையைப் போதித்தது உண்மையே. ஆனால் ஆதம்(அலை) முதல் முஹம்மது(ஸல்) வரை ஒரே வாழ்க்கை நெறியைப் போதித்தார்கள் என்பது சரியான கூற்றல்ல. பி.ஜாபர் அலி, சென்னை.

இந்த வெறும் பகுத்தறிவு ரீதியிலான சிந்தனை மனிதர்களை குறிப்பாக முஸ்லிம்களையும் பெருமளவு பாதித்து இருக்கிறது. இப்படி பகுத்தறிவு ரீதியிலான முடிவுகளையே தீர்க்கமான முடிவுகளாக எடுத்து நடப்பதால் முஸ்லிம்களிடையே பல கருத்து வேறுபாடுகளையும், பிளவுகளையும் பார்க்க முடிகின்றது. எனவே இது விஷயமாக நாம் மிகத் தெளிவாகவும், விரிவாகவும் விளக்கம் தரக் கடமைப்பட்டிருக்கிறோம். அதற்கு முன் உங்கள் விமர்சனத்திற்குச் சுருக்கமான பதிலைத் தந்துவிட்டு விரிவாக விளக்குகிறோம். நபிமார்கள் அனைவரும் தங்களை முஸ்லிம்கள் என்றே கூறியிருக்கிறார்கள்.

10:72ல் நூஹ்(அலை), 2:131, 132ல் இப்றாஹீம்(அலை), பஒகூப்(அலை), 10:84ல் மூஸா(அலை), அவர்களும், அவர்களின் கெளமும், 5:144ல் பொதுவாக நபிமார்கள் அனைவரும் தங்களை முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு நடப்பவர்கள் என்றே கூறியுள்ளதற்குரிய ஆதாரங்களைப் பார்க்க முடிகிறது. நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் ஒவ்வொரு நபிமார்களுக்கும் கொடுக்கப்பட்ட ஷரீஅத்தில் சில வித்தியாசங்கள் காணப்பட்டாலும் அவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டதையே பார்க்க முடிகின்றது. அதனால் வேறு வேறு இஸ்லாத்தைப் பின்பற்றினார்கள் என்று சொல்ல முடியுமா?

இஸ்லாம் வேறு, ஷதீஅத் வேறு என்று பாகுபடுத்தவும் முடியாது. ஒவ்வொரு நபிக்கும் கொடுக்கப்பட்ட ஷரீஅத்தை அவர்கள் செயல்படுத்திக் கொண்டே தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். எனவே இஸ்லாம்-ஷரீஅத்-வாழ்க்கை நெறி என்ற அடிப்படையிலேயே “ஆதி நபி ஆதம்(அலை) முதல் இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் வரை உலகில் தோன்றிய அல்லாஹ்வின் தூதர்கள் அனைவரும் ஒரே வாழ்க்கை நெறியைப் போதித்தனர் எனக் குறிப்பிட்டிருந்தோம். அதல்லாமல் பகுத்தறிவை மட்டும் ஆதாரமாகக் கொண்டு சிந்தித்தால் நாமும் நீங்கள் குறிப்பிட்டுள்ள கருத்தையே சரிகாண்போம்.

இஸ்லாம் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தச் சொல்லும் மார்க்கமேயன்றி பகுத்தறிவு மார்க்கம் என்று சொல்லுவது முறையல்ல. நம் பகுத்தறிவில் வராத பல விஷயங்களையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. அவற்றை ஏற்றுக் கொள்வதே (ஈமான்) நம்பிக்கையாகும். அதாவது மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள குறைந்த திறனுள்ள பகுத்தறிவுக்கு அடைபடாத விஷயத்தை அல்லாஹ் சொல்கிறான் என்றால் அதனை ஏற்றுக் கொள்வது ஒரு விசுவாசியின் கடமை என்ற அடிப்படையில் இதனை நாம் குறிப்பிட்டுள்ளோம். அதல்லாமல் சிந்திக்காமல், ஆராய்ந்து பாராமல் கண்மூடித்தனமாகச் செயல்படச் சொல்லுவதாக எண்ணவேண்டாம்.

உனுல் அஸ்ம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட ஒருவரான மூஸா(அலை) அவர்களே இது விஷயத்தில் சோதிக்கப்பட்டதையே குர்ஆன் அழகாக எடுத்துரைக்கிறது. அல்லாஹ்வின் புறத்திலிருந்து சிறப்பான ஞானத்தைப் பெற்றிருந்த ஒரு அடியாரின் (ஹழிறு(அலை) செயல்பாடுகளில் குற்றம் காண்கிறார்கள் மூஸா(அலை). இத்தனைக்கும் அந்த அடியாரோடு பிரமாணத்தை தொடங்கும் முன்பாக அப்படி ஏதும் ஆட்சேபனை கிளப்ப மாட்டேன் என்று ஒப்புக்கொண்டு அவருடன் பிரயாணத்தைத் தொடங்குகிறார் மூஸா(அலை) அதனைக் குர்ஆன் இவ்வாறு எடுத்துரைக்கிறது.

“உமக்குக் கற்பிக்கப்பட்ட நன்மையானவற்றை நீர் கற்பிக்கும் நிபந்தனை மீது நான் உம்மைப் பின்பற்றலாமா? என்று மூஸா கேட்டார். அதற்கவர் “என்னுடன் பொறுமையாக இருக்க நிச்சயமாக நீர் சக்தி பெற மாட்டீர்; உம்முடைய ஞானத்தை மீறியதாக இருக்கும் (நான் செய்யும்) விஷயங்களைப் பற்றி நீர் எவ்வாறு சகித்துக் கொண்டிருக்கிறீர் என்று கூறினார். (அதற்கு) மூஸா, “அல்லாஹ் நாடினால் சகித்துருப்பவனாகவே நீர் என்னைக் காண்பீர்! எவ்விஷயத்திலும் நான் உமக்கு மாறு செய்யமாட்டேன்” என்று கூறினார். அதற்கு அவர், “நீர் என்னைப் பின்பற்றுவதாயின் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும், நானாகவே உமக்கு அதனை அறிவிக்கும் வரையில் நீர் என்னிடம் (அவைப் பற்றிக்) கேட்காதீர்” என்று சொன்னார். (18:66-70)

இவ்வளவு தெளிவான சம்பாஷணை, உறுதி மொழிக்குப்பின் அவரைத் தொடர்ந்த மூஸா(அலை) அவர்களால், அவர் தொடர்ந்து செய்த காரியங்களைச் சரிகாண முடியவில்லை. ஜீரணிக்க முடியவில்லை. ஆத்திரப்பட்டுத் தான் கொடுத்த வாக்குறுதியையும் மறந்து ஆட்சேபம் தெரிவித்தார்கள். காரணம் என்ன? அவர்களது அறிவு தெளிவு பெறாத காரியங்களை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆயினும் பின்னால் அவற்றிற்குரிய விளக்கங்களை கிடைத்தபின் அவற்றைச் சரி காண முடிந்தது. இதுதான் மனித நிலை, இதிலிருந்து நாம் பெறும் படிப்பினை. அல்லாஹ்வின் கட்டளை என்று தெளிவாகத் தெரிந்தபின் அது நமது அறிவுக்குப் பொருந்தாவிட்டாலும் அதனை ஏற்று நடப்பதே உண்மை விசுவாசியின் கடமையாகும்.

(இப்றாஹீம்(அலை) அவர்கள் தங்கள் மகன் இஸ்மாயீல்(அலை) அவர்களை அறுக்க முற்பட்டது. இந்த அடிப்படையில்தான்). அதன் உண்மை நிலையை ஆய்ந்தறியும் ஆற்றல் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பகுத்தறிவுக்கு இல்லை என்பதை உணர வேண்டும். பகுத்தறிவு பூரணமாகச் சரிகண்டு ஏற்றுக் கொள்வதாயின், தான், அல்லாஹ்வின் அடிமை என்பதை முழுமையாக ஒப்புக்கொண்டதாக ஆகாது. பகுத்தறிவு சரிகாணாவிட்டாலும், அல்லாஹ்வின் கட்டளைதான் என தெளிவாக அறிந்தவுடன் எவ்வித மறுப்புமின்றி ஏற்றுக் கொள்பவரே பரிபூரண முஸ்லிமாகத் திகழ முடியும்.

“விசுவாசிகளே! நீங்கள் இஸ்லாத்தின் முற்றிலுமாக நுழைந்து விடுங்கள், தவிர ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்க விரோதி” (2:208)

ஷைத்தான் அறிவுப்பூர்வமான சிந்தனைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நெருப்பால் படைக்கப்பட்ட தான், மண்ணால் படைக்கப்பட்ட ஆதத்தைவிட உயர்ந்தவன் என்று முடிவெடுத்து அல்லாஹ்வின் கட்டளைப்படி ஆதமுக்குச் சுஜூது செய்ய மறுத்தான். தன்னை நெருப்பாலும், ஆதம்(அலை) அவர்களை மண்ணாலும் படைத்த இறைவனின் கட்டளைக்கு அடிபணிவதே தனது கடமை என்பதை மறந்துவிட்டான். அதனால் சபிக்கப்பட்டான். அதேபோல் மனிதனும் தனது அறிவார்ந்த சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்து அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்ய ஷைத்தான் தூண்டுகிறான். ஷைத்தானின் தூண்டுதலுக்கு ஆட்பட்டு அறிவார்த்தமான சிந்தனைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தவர்களே மக்களிடையே மதங்களையும், மதங்களிலேயே பிரிவுகளையும் உண்டாக்கினார்கள். “உம்மத்தன் வாஹிதா” என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ள முஸ்லிம்களும் இதிலிருந்து நம்பவில்லை.

எனவே “அந்த ஷைத்தானின் தூண்டுதலுக்கு ஆளாகி அறிவார்ந்த சிந்தனைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து உங்களை நரகில் கொண்டு சேர்க்காதீர்கள். அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே ஏற்று அல்லாஹ்வுக்கு வழிபடும் முஸ்லிமாக ஆகிவிடுங்கள். இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்” என்று இந்த வசனத்தில் கட்டளையிடுகிறான். விசுவாசிகளை அழைத்து இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடும்படி அல்லாஹ் கூறுவது சிந்திக்க வேண்டிய விஷயம். பகுத்தறிவு கொண்டு பெறப்படும் முடிவைவிட அல்லாஹ்வின் கட்டளைக்கு அப்படியே வழிபடுவதே இஸ்லாத்தில் முற்றிலுமாக நுழைந்ததாக ஆகும். அதற்காகப் பகுத்தறிவை பயன்படுத்தாது யாரையும் தக்லீது செய்ய வேண்டும் என்று நாம் சொல்லவில்லை. பகுத்தறிவு கொண்டு பெறப்படும் முடிவை அல்லாஹ்வின் கட்டளையைவிட பெரிதாக எண்ணக்கூடாது.

உதாரணமாக ஆதம்(அலை), அவர்களுக்கு மலக்குகளை சுஜூது செய்யும்படி அல்லாஹ் கட்டளையிட்டான். ஷைத்தானைத் தவிர மலக்குகள் அனைவரும் சுஜூது செய்தனர். அதேபோல் யூசுப்(அலை) அவர்களுக்கு அவர்களது தந்தையும், சகோதரர்களுக்கு சுஜூது செய்வதை அல்லாஹ் தடுத்துள்ளான். அது இணை வைக்கும் பெருங்குற்றமாகும். ஆனால் வழிகேட்டில் செல்லும் ஒரு சாரார் “அல்லாஹ் அல்லதவருக்கு சுஜூது செய்வது இணை வைக்கும் குற்றமாக இருந்தால் அல்லாஹ் எப்படி ஆதத்திற்கு மலக்குகளை சுஜூது செய்யும்படி கட்டளையிட்டிருப்பான்? யூசுப்(அலை) அவர்களுக்கு, அவரது சகோரர்கள் எப்படி சுஜூது செய்திருப்பார்கள்?

எனவே மனிதனுக்கு மனிதன் சுஜூது செய்வது ஷிர்க்கல்ல என்றும் கால்கள், கைகள், நெற்றி இவற்றை தரையில்வைத்து சுஜூது செய்வது மட்டுமே அல்லாஹ்வுக்கு உரியது. குனிந்து, மண்டியிட்டு சிரம்தாழ்த்தி சுஜூது செய்வது மனிதனுக்கு மனிதன் செய்யலாம் என்றும் பகுத்தறிவு வாதம் செய்கின்றனர். நீங்கள் கூறும் வாதப்படி இவற்றையும் ஏற்றுத் தான் ஆகவேண்டும். ஒப்புக் கொள்கிறீர்களா? உண்மை அதுவல்ல. அன்று அல்லாஹ் கட்டளையிட்டான், அனுமதித்தான். அவர்கள் சுஜூது செய்தார்கள். இன்று நமக்குத் தடைவிதித்துள்ளான். எனவே எவ்வகையிலும் சுஜூது செய்வது கூடாது. அல்லாஹ் ஒன்றைக் கட்டளையிட்டபின் அதை மாற்றினால் அதில் ஆட்சேபம் கிளப்ப அடிமைக்கு என்ன உரிமை இருக்கிறது? எஜமானனின் கட்டளை எதுவாக இருந்தாலும் அதனைச் செயல்படுத்துவதே அடிமையின் தலையாய கடமையாகும். அப்போதுதான் அவன் அடிமையாக இருக்கிறான். அவன் பகுத்தறிவு சரிகண்டு செய்யும் காரியத்தில் அடிமைத்தனம் எங்கே இருக்கிறது?

“யார் நம் தூதரைப் பின்பற்றுகிறார்கள். யார் அவரைப் பின்பற்றாமல் குதிங்கால் மீது திருப்பிச் செல்கிறார்கள்? என்பதை அறிவான். வேண்டிய (முன்பு பைத்துல் முகத்திசை கிப்ஸாவாக்கி பின் அதனை கஃபத்துல்லாவாக மாற்றினோம்) (2:143)

இறைவனின் கட்டளை தெளிவான பின் அதைவிட நம் பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்பதற்கு இப்படி பல ஆதாரங்களைத் தரமுடியும். முஸ்லிம்-அல்லாஹ்வுக்கு முற்றிலுமாக வழிபடுபவன். ஒரு காரியத்தைச் “செய்” என்று அல்லாஹ் கட்டளையிட்டான். செய்தார்கள். அதே காரியத்தைச் செய்யாதே எனக் கட்டளையிட்டுள்ளான். நாம செய்யாமல் இருக்கிறோம். இங்கு அல்லாஹ்வின் கட்டளையைத் தான் “வாழ்க்கை நெறி” என்று நாம் குறிப்பிட்டிருந்தோம். அதில் மாறுதல் செய்ய மனித இனத்திற்கு உரிமை இல்லை. தனக்கு உரிமையில்லா விஷயத்தில் தலையிட்டு மனிதன் மதங்களை அமைத்துக் கொண்டான் என்றே விளக்கி இருந்தோம். நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் கொள்கைதான் ஒன்று. ஷரீஅத்தில்-வாழ்க்கை நெறியில் மாற்றங்கள் இருந்தன என்பதை ஒப்புக் கொண்டால் இஸ்லாம் என்றால் கொள்கைதான், ஷரீஅத்தை-வாழ்க்கை நெறியை அது குறிக்காது என்று தான் விளங்க வேண்டிவரும். அது எந்த வகையிலும் பொருத்தமாக இல்லை.

புனைப் பெயரில் எழுதுவது எழுத்துலகின் நாகரீகமாக இருந்தாலும் உண்மைப் பெயரை வெளியிடுவதில் என்ன தயக்கம்? குற்ற உணர்வுகள் நிமிர்ந்து நிற்க தடையாய் இருக்கிறதோ? திருடச் செல்கிறவன் மறைந்து மறைந்து செல்வான். நாங்கள் எப்படி? மெளலவி அப்துல் கரீம் பாகவி, அல்லாபட்டினம்.

பாகவியருக்கு இஸ்லாமிய வரலாறு தெரியாதிருப்பது வருந்தத் தக்கது. குன்யத்துப் பெயரால் அழைக்கப்படுவதும், எழுதப்படுவதும் இஸ்லாமிய சரித்திரத்தின் சர்வ சாதாரண நிகழ்ச்சி.

நபி(ஸல்) அவர்கள் அபுல் காசிம் என்று அழைக்கப்பட்டார்கள்.

மிக அதிகமான ஹதீஸ்களை அறிவித்துள்ள அபூஹுரைரா(ரழி) அவர்களின் இயற்பெயர் அப்துர் ரஹ்மான், குன்யத்துப் பெயராலேயே பிரபல்யமாகி இருக்கிறார்கள். இப்னு அப்பாஸ் குன்யத்துப் பெயர்தான்.

மரியாதைக்குரிய இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் இயற்பெயர் நுஃமான் பின் தாபித், அவர்கள் பிரபல்யமானதே குன்யத்துப் பெயரால்தான், இமாம் மாலிக்(ரஹ்), இமாம் ஷாபி(ரஹ்), இமாம் புகாரீ(ரஹ்) மூவரும் அபூ அப்தில்லாஹ் என குன்யத்துப் பெயரால் அழைக்கப்பட்டுள்ளனர்.

இப்படி எழுதிக் கொண்டே போகலாம். இவர்கள் எல்லாம் “குற்ற உணர்வுகள் நிமிர்ந்து நிற்கத் தடையாக இருந்த காரணத்தாலா குன்யத்துப் பெயரால் அறிமுகமாகி இருக்கிறார்கள்? திருடச் செல்கிறவன் மறைந்து மறைந்து செல்வதுபோல் நபித்தோழர்களும், மரியாதைக்குரிய இமாம்களும் செயல்பட்டதாக இந்த மவ்லவி சாஹிப் சொல்லுகிறாரா? நபி(ஸல்) அவர்களையும் நபித் தோழர்களையும், இமாம்களையும் அவமதிப்பது மவ்லவி வர்க்கமா, அல்லது நாங்களா? என்பதை மக்கள் புரிந்து கொண்டுதான் வருகிறார்கள்.

அம்மாப்பட்டிணத்திலிருந்து மெளலவி ஹாபிழ் அப்துல் கரீம் பாகவீ மேலும் ஒரு நீண்ட கடிதம் எழுதி உள்ளார். அவரது கடிதத்திலிருந்து ஹதீஸ்களை ஹதீஸ் கலா வல்லுநர்கள் எப்படித் தரம் பிரித்தார்கள்? என்ற விபரமோ, ஹதீஸ்களை இன்று முளைத்துள்ள நாங்கள் புதிதாக மவ்ழூல், லயீஃப் என்று கூறவில்லை. 1000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பெரியார்கள் ராவிகளைப் பற்றித் தீர விசாரித்து ஆராய்ந்து எழுதி வைத்துள்ள குறிப்புகளையும், அவற்றின் அடிப்படையில் ஹதீஸ்கள் தரம் பிரிக்கப்பட்டு அன்றே பதிவு செய்து பாதுகாக்கப்பட்டுள்ளன என்ற விபரமோ அறியாதவராக இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பாவம் ஹதீஸ் கலையை, முறையாக மதரஸாக்களில் கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தால் அல்லவா அவருக்கு அவை தெரியப் போகிறது. பர்னபாஸ் பைபிளிலிருந்து காப்பி அடித்த விஷயங்களை எல்லாம் “ஹதீஸ்” என்ற பெயரால் பதிவு செய்யப்பட்டுள்ள பிக்ஹு நூல்களைத்தான் அவர் அறிவார். அவர் கிளப்பியுள்ள பல ஐயங்களுக்கு அந்நஜாத்தில் ஏற்கனவே தெளிவான விளக்கங்கள் வந்துள்ளன. சிந்திப்பவர்களை மட்டுமே விளங்க வைக்க முடியும். சிந்திக்கும் ஆற்றலைக் கடன் கொடுத்துவிட்டு உஸ்தாதுகள் மீது குருட்டுக் குருபக்தி வைத்துள்ள மவ்லவிகளை சிந்திக்க வைப்பதில் நாம் தோல்வியடைந்தே வருகிறோம் என்பதை ஒப்புக் கொள்கிறோம்.

அவரது கடிதத்தில் மற்றவர்களும் விளங்க வேண்டிய ஒரு ஐயத்தைக் கிளப்பியுள்ளதால் அதனை இடம்பெறச் செய்கிறோம். “ஸஹாபாக்கள் தவறு செய்திருப்பதால் பின்பற்ற தகுதியற்றவர்கள் என்று கூறும் நீர் பெருமானார் வாழ்விலும் சிற்சில தவறுகள் ஏற்பட்டிருக்கிறதே! அதற்காக நீர் பெருமானாரைப் பின்பற்ற தகுதியில்லை எனத் துணிந்து கூறுவீரா? ஆதாரத்திற்காக சில தவறுகளை எழுதியும் உள்ளார் மவ்லவி ஸாஹிப்.

இது காலம் வரை அந்த நாதாக்கள் எல்லாம் தவறு செய்திருக்க முடியுமா? என்று வாயைப் பிளக்கும் மெளலவி இனத்தைச் சேர்ந்த ஒருவர் நபி(ஸல்) அவர்களும் தவறு செய்யும் மனித இனத்தைச் சேர்ந்தவர்களே என ஒப்புக் கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது. மார்க்கம் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம். விதிக்கவும், விலக்கவும்  உள்ள அதிகாரம் அவனுக்கு மட்டுமே சொந்தமானது என்ற பேருண்மைகள் இந்த மெளலவிக்குத் தெரிந்திருந்தால் இப்படியொரு ஐயத்தைக் கிளப்பி இருக்கமாட்டார். அல்லாஹ் நபி(ஸல்) அவர்களைத் தனது இறுதித் தூதராகத் தேர்ந்தெடுத்து மக்களுக்கு சத்தியத்தைப் போதிக்க ஷைத்தான், அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தான்.

“நீர் தனது கண்காணிப்பில் இருக்கிறீர்” (52:48)

இந்த நிலையில் நபி(ஸல்) அவர்களிடமிருந்தோ, அவர்களிடனிருந்த நபித்தோழர்களிடமிருந்தோ தவறுகள் நிகழுமானால் உடனடியாக “வஹி”யின் மூலம் அத்தவறைத் திருத்தி அவர்களை நேர்வழியிலாக்கினான். நபித்துவ காலத்தில் அத்தவறைத் திருத்தி அவர்களை நேர்வழியிலாக்கினான். நபித்துவ காலத்தில் அல்லாஹ் இந்தப் பொறுப்பை ஏற்றிருந்தான் என்பதற்குப் பல குர்ஆன் வசனங்கள் சான்றுகளாக இருக்கின்றன. எனவே அந்தக் காலத்தில் நபி(ஸல்) அவர்களிடமிருந்தும், நபித்தோழர்களிடமிருந்தும், வெளிப்பட்ட செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் பரிசீலனைக்கு உட்பட்டு அவனது அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டான. தவறுகள் உடனடியாகத் திருத்தப்பட்டன.

எனவே நபி(ஸல்) அவர்களின் நுபுத்துவ காலத்திலுள்ள சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் அல்லாஹ்வால் மார்க்கமாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டன. இதனை மறுக்க மாட்டார் இந்த மெளலவி சாஹிப் என்று நம்புகிறோம். ஆனால் நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு, நுபுத்துவதின் வஹி முற்றுப் பெற்றப் பின் நபித்தோழர்கள் வாழ்ந்த காலத்தின் நிலை என்ன? நபி(ஸல்) அவர்களின் நபித்துவ காலத்திலேயே மனித இயல்பின்படி தவறு செய்யும் நிலை இருந்தது என ஒப்புக் கொண்ட மெளலவி, நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு நபித்தோழர்கள் தவறே செய்யாத தெய்வத்தன்மை அடைந்து விட்டார்கள் என்று எண்ணுகின்றாரா? இல்லையே? அப்படியானால் நபித்துவ காலத்தில் “வஹி” மூலம் திருத்தப்பட்ட தவறுகள் போல் நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் நபித்தோழர்களிடம் ஏற்பட்ட தவறுகளின் நிலை என்ன? அவற்றையும் மார்க்கமாக எடுத்து நடக்க வேண்டும் என்று சொல்ல வருகிறாரா?

இந்த மெளலவி. நாம் சொல்லி வருவதை மெளலவிகள் புரியத் தயாராக இல்லாவிட்டாலும், மற்றவர்கள் புரிந்து கொண்டு வருகிறார்கள். அதாவது மார்க்கத்தின் பூரண உரிமையாளன் அல்லாஹ்(ஜல்) மட்டுமே. நபி(ஸல்) அவர்களின் நுபுவத்தின் காலத்தில் இடம் பெற்ற தவறுகள் “வஹி” மூலம் திருத்தப்பட்டு விட்டதால், அக்காலக்கட்டத்தில் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், நபித்தோழர்களின் சொல், செயல்களுக்கு நபி(ஸல்) அவர்களின் அங்கீகாரம் இவை அனைத்தையும் மார்க்கமாக எடுத்து நடக்கலாம். நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு நபித்தோழர்களிடம் அவர்களும் மனிதர்கள் என்ற நிலையில் இடம் பெற்ற தவறுகள் அல்லாஹுவால் திருத்தப்படவில்லை. காரணம் நபி(ஸல்) அவர்களின் மறைவோடு நபித்துவ வஹி முற்றுப் பெற்றுவிட்டது.

எனவே நபி(ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அத்தவறுகளை உரசிப் பார்க்கும்போது அவை இரண்டிற்குமோ, அல்லது இரண்டில் ஒன்றுககோ முரணாகத் தெரியும்போது அவை மார்க்கம் அல்ல என்ற முடிவுக்கு உறுதியாக வந்து அவற்றை விட்டுவிட வேண்டும். மனித இயல்பின் காரணமாக செய்யப்பட்ட அத்தவறுகளை அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் மன்னிக்கப்போதுமானவன். ஆனால் அவை குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக இருக்கிறது என்று தெரிந்த நிலையில், நபித்தோழர்கள் தவறு செய்திருக்க முடியுமா? என்ற குருட்டு நம்பிக்கையில் அத்தவறுகளை நாமும் செயல்படுத்தினால் இரண்டு குற்றங்களுக்கு ஆளாகிறோம்.

ஒன்று அல்லாஹ்வினதும், அவனது தூதரினதும் கட்டளைக்கு மாறாக குர்ஆன், ஹதீஸுக்கு முரணாகச் செயல்பட்டது.

இரண்டாவது நபித்தோழர்களைத் தவறே செய்யாத தெய்வ நிலைக்கு உயர்த்தியது. இந்த இரண்டு நிலைகளும் நமக்குப் பெரும் நஷ்டத்தை உண்டாக்கும். எனவே அப்படிப்பட்ட தவறுகளை தவிர்த்து நடப்பதே குர்ஆன், ஹதீஸ் வழியாகும்.

நஜாத் இதழில் வெளியாகும் தங்களின் கருத்துக்களையும் வாதங்களையும் கருத்தூன்றி படித்து வருகின்றேன். பெரும்பாலான விஷயங்கள் எனக்கு உடன்பாடானவையே! ஆனால் ஒரு விஷயம்தான் நெருடுகிறது. அதுதான்-கூட்டு முயற்சி அல்லது இயக்கரீதியான முயற்சிகள் பற்றி தாங்கள் வெளியிட்டு வரும் கருத்துகள், இயக்க ரீதியான கூட்டு முயற்சியை பெரிதும் வலியுறுத்தும் மார்க்கம் அல்லவா இஸ்லாம்? இஸ்லாத்தின் எந்த ஒரு கட்டளையை எடுத்துப் பார்த்தாலும் கூட்டு முயற்சிக்குத்தானே முக்கியத்துவமும் முதன்மையும் தரப்பட்டுள்ளது? கூட்டாக, ஓர் இயக்கமாக(ஜமாஅத்தாக) செயல்படுவதை ஏன் தவறு என்கிறீர்கள்? அது “இயக்க வழிபாட்டிற்கு இட்டுச் செல்லும்” என்ற தங்களின் வாதம் எந்த அளவுக்குச் சரி?

திருக்குர்ஆன் கூறுகிறது:

“இன்னும் தங்கள் இறைவனின் கட்டளைகளை ஏற்று தொழுகையை நிலைநாட்டுபவர்கள் மேலும் நம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர். மேலும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து செலவு செய்வார்கள்? (42:38)

ஒரு கூட்டமைப்பு – ஒரு ஜமாஅத் அவசியம் என்பதை இந்த வசனம் எடுத்துரைக்கவில்லையா? “கலந்தாலோசித்தல்” என்பதே ஒரு கூட்டமைப்பு இருந்தால்தானே முடியும்? தொழுகைக்கும் கூட்டமைப்பு தேவை; விவகாரங்களை கலந்தாலோசிக்கவும் கூட்டமைப்பு தேவை: இறைவழியில் பொருளை செலவு செய்யவும் கூட்டமைப்பு தேவை என்பதை இந்த வசனம் எடுத்துரைக்கவில்லையா?

மற்றோர் இடத்தில் திருக்குர்ஆன் கூறுகிறது!

“நன்மையின் பக்கம் அழைக்கக்கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே அவசியம் இருந்திட வேண்டும். அவர்கள் நல்லவை புரியும்படி ஏவ வேண்டும். தீயவற்றிலிருந்து தடுத்த வண்ணம் இருக்க வேண்டும். எவர்கள் இப்பணியை புரிகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்”. (3:104)

நன்மையை ஏவி-தீமையைத் தடுக்கும் பணியை தனிப்பட்ட முறையிலும் கூட செய்யலாம். ஆயினும் கூட்டு முறையில் (ஒர் அமைப்பாக) செய்திட வேண்டும் என்றே திருக்குர்ஆன் வலியுறுத்துகின்றது. “உங்களிடையே ஒரு குழுவினர்” (வல் தருன் மின்கும் உம்மத்துன்) எனும் சொற்பிரயோகம் சிந்திக்கத்தக்கது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“இறைவன் எனக்கு ஐந்து விஷயங்களைப் பற்றி கட்டளையிட்டிருக்கிறேன். அதைக் குறித்து நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.

1. கூட்டமைப்பு (ஜமாஅத்)

2. செவியேற்றம்

3. கீழ்படிதல்,

4. நாடு துறந்து செல்லுதல் (ஹிஜ்ரத்)

5. இறை வழியில் முயலுதல்-போராடுதல் (ஜிஹாத்) ஆகியவை(யே அந்த ஐந்து விஷயங்கள்).

எவர் ஒருவர் ஜமாஅத்திலிருந்து ஓர் அங்குலம் விலகினாலும்-அவர் மீண்டும் ஜமாஅத்தின் பக்கம் வந்தால் ஒழிய – இஸ்லாமிய உறவைத் தம் கழுத்திலிருந்து எடுத்து வீசி எறிந்தவராவார். எவர் அறியாமையின் பக்கம்-அதாவது பிரிவினை-பிளவுகளின் பக்கம்-அழைப்பு விடுக்கிறாரோ அவர் நரகவாசியாவார்”.

இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், திருநபி(ஸல்) அவர்களிடம் வினவினார்கள்:

“இறைத்தூதர் அவர்களே! அவன் தொழுதாலும் நோன்பு நோற்றாலுமா?”

அதற்கு நபி(ஸல்) அவர்கள் மறுமொழி பகர்ந்தார்கள்.

“ஆம்! அவன் தொழுதாலும் நோன்பு நோற்றாலும், தன்னை முஸ்லிம் என்று தாஃவாச் செய்தாலும் சரியே!” (ஆதார நூல்:அஹ்மத், ஹாகிம்)

இந்த நபிமொழியிலிருந்து நமக்கு சில விஷயங்கள் தெளிவாகின்றன.

1. மார்க்க விவகாரங்களில் சரியான ஒழுங்கு முறை என்னவெனில் அனைத்துக்கும் முதலாக ஒரு ஜமாஅத்-கூட்டமைப்பு இருக்க வேண்டும்.

2. ஜமாஅத்-கூட்டமைப்பில் இருந்து பிரிந்திருத்தல் இஸ்லாத்திலிருந்தே பிரிந்து விடுவதாகும். அதாவது, கட்டுப்பாடின்றி-ஒரு கூட்டமைப்புக்கு உட்படாமல் வாழ்வது அறியாமைக் கால (ஜாஹிலிய்யத்) வழக்கமாகும். அக்கால அரபிகள் யாரும் யார் பேச்சையும் கேட்பதில்லை.

3. இஸ்லாத்தின் கட்டளைகள்-சட்டங்கள் ஆகியவற்றின் நோக்கங்களை கூட்டு முயற்சியால் தான் அடைய முடியும். அதனால்தான் கட்டமைப்பிலிருந்து விலகுபவனை “இஸ்லாத்திலிருந்தே விலகுபவன்” (அவன் தொழுதாலும் நோன்பு நோற்றாலும் தன்னை முஸ்லிம் என்று அழைத்துக் கொண்டாலும் சரி என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்பொழுது சொல்லுங்கள்.முஸ்லிம்கள் ஒரு கூட்டமைப்பாக – இயக்க ரீதியாத செயல்படுவது தவறா? இந்தப் பிரச்சனையை இன்னொரு கோணத்திலும் பார்ப்போம்:

இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் எதிரிகள் அனைவரும் ஒரே அணியில் ஒன்றுபட்டு – அமைப்பு ரீதியாகச் செயல்படுகின்றார்கள். இஸ்லாத்தைக் களங்கப்படுத்த எந்த ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் அவர்கள் நழுவ விடுவதே இல்லை. இன்று மட்டுமல்ல, ஒவ்வொரு காலத்திலும் வாழும் இறை மறுப்பாளர்களின் நிலை இதுதான். “அவர்களின் செயல்பாட்டை இறைவனும் தன் திருமறையில் சுட்டிக்காட்டுகின்றான்.

“உங்களுடைய (இறை நம்பிக்கையாளர்களுடைய) பலவீனங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் எந்த ஒரு வாய்ப்பையும் அவர்கள் நழுவ விடுவதில்லை”. (3:118)

இறை நிராகரிப்பாளர்கள் இந்த அளவுக்கு விழிப்புடனும் கட்டுக்கோப்புடனும் செயல்படும்போது மூமின்கள் மட்டும் அமைப்பு ரீதியாக ஒன்றுபடாமல், பிரிந்து நின்று பரிதவிக்க வேண்டுமா? “கூடாது” என்கிறான் இறைவன்.

இதோ திருமறை கூறுகிறது.

“இறை நம்பிக்கையாளர்களே! பொறுமையைக் கைக் கொள்வீர்களாக! அசத்தியவாதிகளுக்கு எதிரில் உறுதியாக நிலைதது நிற்பீர்களாக! எப்பொழுதும ஒருங்கிணைந்து முணைப்புடன் இருப்பீர்களாக! மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சியே வாழ்வீர்களாக! நீங்கள் வெற்றியாளர்களாய்த் திகழக் கூடும்ட!” (3:200)

எந்தச் சமயத்திலும் முஸ்லிம்கள் கட்டுக்கோப்புடன் – அமைப்பு ரீதியாக (ஜமாஅத்தாக) செயல்பட வேண்டும் என்றுதானே, இந்த இறைவசனங்களும் நபிமொழியும் வலியுறுத்துகின்றன! ஆனால் நீங்களோ அமைப்பு ரீதியாக முஸ்லிம்கள் ஒன்றுபடுவதை எதிர்க்கிறீர்கள். சரிதானா! சிராஜுத்தீன், சென்னை-2.

உங்களைப் போல் துடிப்புள்ள பல இளைஞர்கள் பல பிரிவுப் பெயர்களிலும், பல இயக்கப் பெயர்களிலும் முஸ்லிம்கள செயல்பட்டு வருவதை நாம் கண்டித்து வருவதைத் தவறாகப் புரிந்து கொண்டு கூட்டு முயற்சியையே நாம் எதிர்ப்பதாகவும், ஒவ்வொருவரும் தனித்தனியாகச் செயல்படுவதையே நாம் ஊக்குவித்து வருவதாகவும் எண்ணுகின்றனர்.

அந்தச் சகோதரர்கள் தெளிவாக அறிந்து கொள்வார்களாக! முஸ்லிம்கள் அனைவரும் ஒரே அமீரின் கீழ் ஒட்டு மொத்தமாக ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்ட.

“அல்லாஹ்வின் கயிற்றை (வேதத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து விடாதீர்கள்” (3:103)

என்ற அல்லாஹ்வின் கட்டளைப்படி ஒன்றுபட வேண்டும். பல பிரிவுகப் பெயர்களிலும், பல இயக்கப் பெயர்களிலும் செயல்படுவது அல்லாஹ்வின் இக்கட்டளையை ஏற்று நடக்கத் தடையாக இருக்கிறது என்றே கண்டித்து வருகிறோம். ஒவ்வொரு பிரிவினரும், ஒவ்வொரு இயக்கத்தினரும் ஒவ்வொரு தலைமையின்கீழ் செயல்படும்போது அவர்கள் எங்கே ஒன்றுபடப் போகிறார்கள்? நீங்கள் குறிப்பிட்டுள்ள குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் அனைத்தும் “உம்மத்தன் வாஹிதா” என்ற ஒரே சமூகத்தினராக முஸ்லிம்கள் இருக்கவும், ஒரே அமைப்பில் செயல்படவும் வலியுறுத்துகின்றனவே அல்லாமல் பல பிரிவினர்களாகவும், பல இயக்கத்தினர்களாகவும் செயல்பட அனுமதி தரவில்லை.

முஸ்லிம்களை, இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் அன்றே ஒன்றிணைத்துச் செயல்படுத்திக் காட்டி விட்டார்கள். இன்று பிரிந்து கிடக்கும் முஸ்லிம்களை ஒன்றிணைக்க இனியொரு நபியோ, இஸ்லாம் அல்லாத ஒரு இயக்கமோ அவசியமோ இல்லை. இஸ்லாமே ஒரு பேரியக்கம்தான். இஸ்லாத்தை நிலை நிறுத்த குட்டி இயக்கங்கள் தேவையே இல்லை. நபி(ஸல்) அவர்களுக்குப் பின் மனித இனத்தில் வந்தவர்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ள தனி அதிகாரத்தில் எவ்வித உரிமையும் இல்லாமல் தலையிட்டு முஸ்லிம்களிடையே தோற்றுவித்துள்ள பிரிவுகளையும், இயக்கங்களையுமே நாம் சாடி வருகிறோம்.

அதல்லாமல் நபி(ஸல்) அவர்கள் உருவாக்கிய பேரியக்கமான இஸ்லாத்தையோ, முஸ்லிம்கள், முஸ்லிம்கள் என்ற நிலையில் மட்டும் ஆங்காங்கே ஒரு துணை அமீரின் கீழ் ஒன்றுபட்டுச் செயல்படுவதையோ, கூட்டு முயற்சிகளையோ ஒருபோதும் நாம் மறுத்ததில்லை, கண்டித்ததில்லை. மாறாக அப்படிப்பட்ட ஒரு நிலை மீண்டும் உருவாக வேண்டும் என்ற அளவு கடந்த ஆவலால் உந்தப்பட்டு செயல்பட்டு வருகிறோம். முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும். ஒரே தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே பிரிவுப் பெயர்களையும், இயக்கப் பெயர்களையும் ஆதரிப்பவர்களை நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்களின் உண்மை நோக்கத்தை அல்லாஹ்வே அறிவான்.

Previous post:

Next post: