ஹதீஸ் பெட்டகம்

in 1990 செப்டம்பர்

ஹதீஸ் பெட்டகம்

தொடர் : 6       

A. முஹம்மது அலி

சத்திக்குட்ப்பட்டதையே செயல்படுங்கள்:

திருமறை குர்ஆன் கூறுகிறது;

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவிற்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்ட்டத்தைக் கொடுப்பதில்லை. (2:286,65:7)

எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் எதுவும் செய்ய நிர்ப்பந்திக்கப்படமாட்டாது. (2:233)

அல்லாஹ் கூறுகிறான்:

நாம் எந்த ஆத்மாவுக்கும் அதன் சக்திக்கு அப்பார்ப்பட்ட(தாங்க முடியாத சுமையை) கஷ்ட்டத்தைக் கொடுப்பதில்லை.  (6:152, 7:42, 23:62)

அல்லாஹ் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றான்:

எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பார்பட்ட(எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக (2:286)

அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான அமல்(செயல்) எது?

என நபி(ஸல்) அவர்களிடம் விணவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் உளமாற, செம்மையாக, தொடர்ந்து செய்யப்படும் அமல்(செயல்) ஆகும். அது மிகக் குறைவாயினும் சரியே! மேலும் நபி(ஸல்) தெளிவாக்கினார்கள்: நீங்கள் உங்கள் சக்திக்குட்ப்பட்டதையே செய்யுங்கள்.

மற்றொரு அறிவிப்பின்படி:

நபி(ஸல்) : நீங்கள் தொடர் நோன்புவைக்கும் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள்! ஜாக்கிரதையாக இருங்கள்!!

நபித் தோழர்கள்: அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் தொடர் நோன்பு வைப்பவர்களாக நாங்கள் காண்கிறோமே! (நாங்கள் அவ்விதம் செய்யக் கூடாதா?)

நபி(ஸல்) : எனது இறைவன் எது உறக்கத்தில் என்னை உண்ண வைக்கின்றான்; குடிக்கச் செய்கிறான்; நீங்கள் உங்கள் சக்திக்குட்பட்டதையே செய்யுங்கள்.

இந்த நபிமொழிகள் இடம் பெறும் ஹதீஸ் நூல்களையும், பாடங்களையும் பார்ப்போம்.

ஆதார நூல்கள்                                  பாடங்கள்

1. புகாரீ                               செளம் :  நோன்பு

                                                                              லிபாஸ்:  உடை

                            ரிகாக் : உள்ளத்தை இளக வைக்கும் செயல்கள்

                                                                              ஹுதூத்: வரைமுறைகள்,

                                                                              தமன்னா: பேராவல்,

                                                                              முஹாரிபீன் : போராளிகள்,

                                                                              இஃதிசாம் : பற்றிப் பிடித்தல்

                                                                              தஹஜ்ஜத் : இரவுத் தொழுகை

2. முஸ்லிம் :                                                 ஈமான் : நம்பிக்கை

                                                                              சியாம் : நோன்பு

                                                                               முஸாபிரீன் : பிரயாணிகள்

3. நஸயீ                               கிப்லா : திசை,

4. அபுதாவூது                          ததெளஃ : உபரி வணக்கம்

5. திர்மிதீ                               செளம் : நோன்பு

6. முஅத்தா மாலிக்                    ஸலாத் : இரவுத் தொழுகை

7. தாரமி                                செளம் : நோன்பு

8. ஸஹீபா ஹம்மாம்                 ஹதீஸ் எண் : 69

9. இப்னு மாஜா                        ஜுஹ்து : பற்றின்மை

10. முஜ்னத் அஹ்மத்                  முஸ்னத் அபீஹுரைரா பாகம் 2ல் பக்கங்கள் : 231, 257,316,350,412,418,496                                                                                    

                                                                                  முஸ்னத் ஆயிஷா-பாகம் 6ல் பக்கங்கள்: 40,61,176, 181, 241,  267

வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அதை நீங்கள் மறைத்தாலும் அல்லாஹ் அதைப் பற்றி உங்களை கணக்குக் கேட்பான்: தான் நாடியவரை வேதனையும் செய்வான்- அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.   (அல்குர்ஆன் 2:284)

என்ற இறைவசனத்தை அல்லாஹ். நபி(ஸல்) அவர்களுக்கு இறக்கியதை கேள்விப்பட்டபோது, நபித்தோழர்கள் திடுக்குற்றனர். கவலை அடைந்தனர். நபி(ஸல்) அவர்களிடம் வந்து முழந்தாளிட்டவர்களாக, யாரசூல்லாஹ்! எங்களால் முடிந்த தொழுகை, நோன்பு, ஜிஹாத், ஸதகா ஆகியவை எங்கள் மீது சுமத்தப்பட்டிருக்க, எங்களது சக்திக்கு அப்பாற்ப்பட்ட எங்களது உள்ள ஓட்டங்களைப் பற்றியும் அல்லாஹ் கேள்வி கேட்பான் என  (மேற்படி குர்ஆன் வசனம்) இறக்கப்பட்டுள்ளதே! எனக் கேட்டார்கள்.

இதற்கு விடையாக நபி(ஸல்) அவர்கள் “உங்களுக்கு முந்திய இரு வேதக்கார  (யூத, கிறித்தவ)ர்கள் இறைவசனங்களைக் கேட்டோம்; மாறு செய்தோம் என்று கூறியது போல நீங்களும் கூற நாடுகிறீர்களா? -மாறாக -இறை வசனத்தைக் கேட்டோம், கட்டுப்பட்டோம்; எங்கள் இறைவா! நாங்கள் உன்னிடத்திலேயே பாவமன்னிப்புக் கோருகிறோம்; உன்பாலே மீள்பவர்களாக இருக்கிறோம் என்றார்கள்.

இதனைத் தொடர்ந்து அல்லாஹ் “இறைத்தூதர், தன் ரப்பிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்புகிறார்…. என்ற 2:285 வசனத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான். இதன்படி நபித்தோழர்கள் செயல்படத் தொடங்கியதும் அவர்களது கவலையைப் போக்கும் விதமாக 2:284 வசனத்தை மாற்றி அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்ட்டத்தைக் கொடுப்பதில்லை…. எனத் தொடங்கும் 2:286 வசனத்தை இறக்கி வைத்தான். அதே இறைவசனத்தில் “எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்ப்பட்ட  (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக” என கற்றும் கொடுத்தான்.

இந்த விளக்கத்தை அபூஹுரைரா(ரழி) அறிவிப்பதாக இமாம் முஸ்லிம் தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள். முஸ்னது அஹ்மதிலும் இது இடம் பெற்றுள்ளது.

ஸயீத் இப்னு மர்ஜானா என்ற தாபிஈ, இப்னுஉமர்(ரழி) அவர்களுடன் அமர்ந்திருப்பார்கள். அவர் மேலேக் குறிப்பிட்ட 2:284 வசனத்தை ஓதியதும், ” நிச்சயமாக நாம் இவ்வசனம் மூலம் அழிக்கப்பட்டு விடுவோம்.” எனக் கூறிதேம்பி, தேம்பி அழக்கூடியவர்களாக இருந்தார்கள். இந்நிகழ்ச்சியை ஸயீத் இப்னு மர்ஜானா இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் எடுத்துரைத்தப் போது, இதே நிலையில் தான் 2:284 வசனம் முதலாவதாக இறக்கப்பட்டபோது நபித்தோழர்கள் இருந்தார்கள். அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்று யாரசூலல்லாஹ்! நாங்கள் இதுவரை பேச்சிலும், செயலிலும் தான் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என நினைத்திருந்தோம். இவ்வசனம் மனஊசலாட்டங்களைப் பற்றிக் கூறுகிறது எங்களது மனம் எங்கள் கைகளில் இல்லையே! என முறையிட்டனர். உடனே அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவிற்கும் அது தாங்கிக் கொள்ள முடியா அளவு கஷ்ட்டத்தைக் கொடுப்பதில்லை என்ற 2:286 வசனத்தை இறக்கி வைத்தான். இதனை இப்னு ஜரீர்(ரஹ்) அறிவிக்கிறார்கள்.

இதே நிகழ்ச்சி இப்னு உமர்(ரழி) அவர்களின் மகனார் ஸாலிம் கூறியதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கு ஒரு விசயம் குறிப்பிடத்தக்கது, 2:284 வசனம் இறங்கியதும் நபித் தோழர்கள் கவலைப்பட்டனர். அதனை நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். உடனே 2:286 வசனம் இறங்கியது. அதன் மூலம் 2:284 வசனம் மாற்றப்பட்டதாக அபூஹுரைரா(ரழி) கூறும் கூற்றில் வேறுபட்ட அபிப்ராயங்கள் குர்ஆன் விரிவுரையாளர்களிடம் நிலவுகிறது.

லஹ்ஹாக்(ரஹ்), முஜாஹித்(ரஹ்) போன்றவர்கள் இந்த இறை வசனங்கள் (நேசிக், மன்சூக்) மாற்றப் படவில்லை என்கிறார்கள். இதுவே சரியான முடிவாகும். 2:284 வசனத்தில் “உள்ளங்களில் உள்ளவற்றை அறியும் ஆற்றல் அல்லாஹுவுக்கு இருப்பதை தெரிவிக்கிறது” இது எப்படி மாற்றப்படும். இது அல்லாஹ்வின் தனிப்பெரும் சக்தியாகும். குணமாகும் ஆனால் அப்படி உள்ளங்களில்  உள்ளவற்றை அறியும் சக்தி பெற்ற அல்லாஹ், நபி(ஸல்) அவர்களின் உம்மத்துக்கு மட்டும் 2:286 வசனம் மூலம் குறிப்பாக தனி சலுகை அளித்துள்ளான் எனக் கொள்ள வேண்டும். இதனைக் கீழ்காணும் அபூஹுரைரா(ரழி) அவர்களின் ஹதீஸே நிரூபிக்கிறது.

நபி(ஸல்) கூறினார்கள்:

நிச்சயமாக அல்லாஹ் எனக்காக, எனது சமுதாயத்தினரின் மன ஊசலாட்டங்களை அவர்கள் அதைப் பேசாது, செய்யாதிருக்கும் வரை அதுப்பற்றி எதும் கணிக்காது பெருந்தன்மையுடன் இருந்து விடுகிறான்.

என் அடியான் ஒரு தீயதை  நாடினால் அதை பதிவு செய்யாதீர்கள்; அதை அவன் செய்தால் மட்டும் ஒரு தீமை எழுதுங்கள். ஆனால் ஒரு நல்லதை நாடினால் ஒரு நன்மை எழுதுங்கள்; செயல்படுத்தினால் 10 நன்மைகள் எழுதுங்கள்; அவன் நினைத்த தீமையை (என் மீது உள்ள அச்சத்தால் அவன் செய்யவில்லையெனில்) அதற்காக ஒரு நன்மை எழுதுங்கள்: என அல்லாஹ் தனது வானவர்களிடம் கூறுகிறான் எனவும் நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத் தினார்கள்.  அறிவிப்பு : இப்னுஅப்பாஸ்(ரழி), அபூஹுரைரா(ரழி) ஆதாரம் : புகாரீ, முஸ்லிம், முஸ்னது அஹ்மது.

அல்லாஹ்வின் பேரருளால் நாம் ஆய்ந்தறிந்த வரையில் இந்நபிமொழிகள் பத்து ஆதாரப் பூர்வமான ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளன. ஏறத்தாழ 100க்கும் மேற்ப்பட்ட அறிவிப்பாளர் வரிசைகளில் ஆயிஷா(ரழி) உம்மு சலமா(ரழி), அபூஹுரைரா(ரழி) போன்ற நபித்தோழர்களும் பற்பல தாபிஈன்களும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

முஹம்மது(ஸல்) அவர்களின் உம்மத்து (சமூகத்தவர்)களான நாம் மிக மிக பலஹீனமானவர்கள். நாம் செய்யும் வணக்க வழிபாடுகளும் சுமையாக அமையக்கூடாது. அவை நம்மை வருத்தக்கூடாது. மாறாக இலகுவானதாக இருக்கவேண்டும். உளமகிழ்ச்சியுடன் செம்மையாக தொடர்ந்து செய்யப்பட வேண்டும். அதுவே அல்லாஹ்வுக்கு மிக மிக பிடித்தமான அமல்(செயல்) என்பதை தெளிவுப்படுத்துகிறது.

இதேக் கருத்தினை உறுதி செய்யும் இன்னும் ஒருசில நபி மொழிகளையும் காண்போம்.

ஒரே தடவை நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் நுழைந்த போது இரு தூண்களுக்கிடையில் ஒரு கயிறக் கட்டப்பட்டிருந்ததைக் கண்டார்கள். உடனே

நபி(ஸல்) : இது என்ன கயிறு?

நபித்தோழர்கள் : இதனை (தாங்கள் மனைவி) ஜைனப்(ரழி) அவர்கள் கட்டிவைத்துள்ளார்கள். அவர்கள் தொழும்போது அசதி ஏற்ப்பட்டால் (சாய்ந்து) ஓய்வெடுப்பதற்காகக் காட்டியுள்ளார்கள்.

நபி(ஸல்) : அக்கயிற்றை அறுத்தெறியுங்கள். உங்களால் முடிந்தவரை தொழுங்கள். அசதி ஏற்ப்பட்டால் (சென்று உறங்கி) ஓய்வெடுங்கள். அறிவிப்பாளர்: அனஸ்பின் மாலிக்(ரழி) ஆதாரம் : புகாரீ, முஸ்லிம், முஸ்னத் அஹ்மது.

(நபி(ஸல்) அவர்களின் துணைவியார்) அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் ஒரு பெண்மணியுடன் அமர்ந்திருக்கையில் நபி(ஸல்) வீட்டினுள் நுழைந்தார்கள். வேறு பெண்மணி தன் வீட்டில், தனது மனைவியருடனிருப்பதைக் கண்டு:

நபி(ஸல்) : யார் இவர்கள்?

ஆயிஷா(ரழி) : நான் அளவுக்கதிகமான உபரியான தொழுகைகளில் ஈடுபடும் பெண்மணியைப் பற்றிக் கூறினேனே அப்பெண்மணி இவர்கள் தாம்.

நபி(ஸல்) : (அப்பெண்மணியை நோக்கி): நான் சொல்வதை செவிமடுங்கள். உங்கள் சக்திற்க்குட்பட்ட வணக்கத்தை செய்யவே நீங்கள் (அல்லாஹுவாலும், அவனது தூதராலும்) ஆணையிடப்பட்டுள்ளீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்களே உங்களை வருத்திக் கொள்ளாதவரை அல்லாஹ் உங்களை வருத்திக் கொள்ள ஆணையிடவில்லை. எனவே நீங்களே உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான அமல்(செயல்) இலகுவாகவும், தொடர்ந்தும் செய்யப்படும் செயலே ஆகும்.

அறிவிப்பு: ஆயிஷா(ரழி) ஆதாரம் : புகாரீ, முஸ்லிம், மு. அஹ்மது.

இலகுவாகவும், தொடர்ந்தும் மார்க்க வணக்கங்களில் ஈடுபட அறிவுரை நல்கிய நபி(ஸல்) அவர்கள் அளவுக்கதிகமாக தன்னை வருத்தி மார்க்க வணக்கங்களில் ஈடுபடுபவர்களைக் கண்டிக்கவும் தயங்கவில்லை.

“மார்க்க வணக்க வழிபாடுகளில்  அளவுக்கதிகமாக அபரிதமாக செய்பவன் (ஹலக்கல் முத்த நத்திவூன்) நாசமாவான்” என மூன்று தடவைகள் கூறியதாக இப்னு மஸ்ஊது(ரழி) அறிவித்துள்ள ஸஹீஹ் முஸ்லிமீன் கூற்று கவனிக்கத்தக்கது.

சக்திக்குட்பட்டவை என்பதன் பொருள் என்ன?

அல்லாஹ்வின் அருள் வசனங்களும், நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் நமது சக்திக்குட்பட்டதையே செயல்படுத்த ஆணையிடுகின்றன. நமது சக்திக்குட்ப்பட்டது என எப்படி கணக்கிட முடியும்? அதனையும் நபி(ஸல்) அவர்களின் அருள்மொழிகள் நமக்கு விளக்குவதைக் காண்போம்; பட்டியலிட்டு தருவதைப் பார்ப்போம்.

அபூ ஜுஹைபா வஹ்பு இப்னு அப்துல்லாஹ்(ரழி) அறிவிக்கிறார்கள்:

ரசூல்(ஸல்) அவர்கள் மதீனா வந்ததும் ஒருவருக்கொருவர் சகோதரர்களாக இருக்க வேண்டுமென அதிகமாக வலியுறுத்தினார்கள். அதனடிப்படையில் சல்மான்(ரழி) அவர்களையும், அபூ தர்தா(ரழி) அவர்களையும் சகோதரர்களாக்கினார்கள். ஒரு நாள் சல்மான்(ரழி) அவர்கள், அபூதர்தா(ரழி) அவர்களின் வீட்டுக்கு விஜயம் செய்தார். தனது சகோதரர் அபூதர்தா(ரழி) அவர்களின் அருமை மனைவி உம்மு தர்தா கந்தலடைந்த உடைகளை அணிந்திருப்பதைக் கண்டார்கள். இந்த ஏழ்மை நிலை பற்றி வினவியபோது உம்மு தர்தா(ரழி) அவர்கள்; உங்களது சகோதரர் அபூதர்தா இவ்வுலக ஆசையின்றி (எப்பொழுதும் இறை வணக்க வழிபாடுகளில் இருக்கிறார் என்றார்கள்.

சிறிது நேரத்தில் அபூதர்தா(ரழி) வரவே உணவு பரிமாறப்பட்டது. சல்மான்(ரழி) அவர்களை சாப்பிடும்படியும், தான் நோன்பு வைத்திருப்பதாகவும் அபூதர்தா(ரழி) கூறினார்கள். ஆனால் சல்மான்(ரழி) அவர்கள் அபூதர்தா சாப்பிடாதவரை தான் சாப்பிடப்போவதில்லை என வற்ப்புறுத்தினார்கள்; அவர்களும் சாப்பிட்டார்கள்.

இரவு நேரம் வந்தது, அபூதர்தா(ரழி) உபரியான தொழுகைக்கு எழுந்தார்கள். இதனைக் கண்ட சல்மான்(ரழி) தற்போது தூங்கும்படியும், பின் எழுந்து உபரி(நபிலான)யான தொழுகைகளைத் தொழலாம் எனவும் கூறவே தூங்கினார்கள். இரவின் கடைசி நேரத்தில் இருவரும் எழுந்து தொழுதார்கள். பின் சல்மான்(ரழி) அவர்கள் கீழ்வருமாறு அபூதர்தா(ரழி) அவர்களுக்கு அறிவுரைக் கூறினார்கள்.

நிச்சயமாக உனது ரட்சகனுக்கு செய்ய வேண்டியக் கடமைகள் உனக்கு உண்டு;

அதே நேரம் :

உனக்காக சொந்தக் கடமைகளையும் செவ்வனே ெசய்தல் வேண்டும்:

உனது குடும்பத்தாருக்கான கடமைகளையும் செவ்வனே செய்தல் வேண்டும்;

அவரவருக்கான கடமைகளைச் செவ்வனே செய்தல் வேண்:டும். இவ்விசயத்தில் (இவ்விருவருக்கும் வேறுபட்ட கருத்துக்கள் நிலவவே) உண்மையை அறிந்துக் கொள்ள இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அனைத்தையும் செவிமடுத்த ரசூல்(ஸல்) அவர்கள்; சல்மான்(ரழி) உண்மையே சொன்னார். (அவ்விதம் நடப்பதே சீரிய இஸ்லாமிய வழி) என்றார்கள். இந்நிகழ்ச்சியை புகாரீ, முஸ்னத், அஹ்மதிலும் காணலாம்.

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ்(ரழி) என்ற வாலிபநபித்தோழர் தனது ஆயுள் முழுவதும் பகலில் நோன்பு வைக்கப் போவதாகவும், இரவில் உபரியான(நபில்) வணக்கங்களில் ஈடுபடப்போவதாகவும் சூளுரைக்கின்றார், சபதமெடுக்கிறார். இவ்விஷயம் நபி(ஸல்) அவர்களுக்க தெரிய வருகிறது. நபி(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ்(ரழி) அவர்களை அழைத்து தான் கேள்விப்பட்டதுப் போல சபதமேற்றிருக்கிறாயா? என வினவினார்கள். நபித்தோழரும் ஆமாம் என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் இவ்விதம் சபதமேற்க்காதே! உன்னால் தொடர்ந்து செயலாற்ற முடியாது என அறிவுரை வழங்கினார்கள். மேலும் கூறினார்கள். நபி(ஸல்): மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்பாயாக! அது 30 நாட்களின் நோன்புக்கு சமம் ஏனெனில் எனது சமுதாயத்தினரின் ஒரு செயலுக்கு 10 மடங்கு நன்மை கிடைக்கும். அப்போது

நபித்தோழர்கள் : யரசூலல்லாஹ்! (இது குறைவாக உள்ளது) என்னால் இதற்கு அதிகமாக நோன்பு வைக்கும் சக்தி உள்ளது.

நபி(ஸல்) : அப்படியானால் ஒரு நாள் நோன்பு வைத்து இருநாட்கள் நோன்பு வைக்காமல் இருப்பாயாக! (அதாவது மாதத்தில் 10 நாட்கள் நோன்பு நோற்பாயாக!)

நபித்தோழர் : யாரசூல்லாஹ்! (இதுவும் குறைவாக உள்ளது) என்னால் இதற்கு அதிகமாக நோன்பு வைக்கும் சக்கதியுள்ளதே!

நபி(ஸல்) : அப்படியானால் ஒரு நாள் நோன்புவைத்து, மறுநாள் விட்டு விடுவாயாக! (மாதத்தில் 15 நாட்கள்). இதுவே நடுத்தரமான இறை வணக்கமாகும். தாவூத்(அலை) அவர்களும் இவ்விதமே நோன்பு நோற்றார்கள். இதுவே சிறப்பான நோன்பாகும்.

நபித்தோழர் : யாரசூல்லாஹ்! (இதுவும் குறைவாக உள்ளது) என்னால் இதற்கு அதிகமாக நோன்பு வைக்கும் சக்கதியுள்ளதே!

நபி(ஸல்) : இதைவிடச் சிறந்த வணக்கமில்லை.

இந்நிகழ்ச்சியை விபரிக்கும் அப்துல்லாஹ் பின் அம்ர் ஆஸ்(ரழி) அவர்கள் தனது வயது வந்த முதிர்ந்த காலத்தில் நபி(ஸல்) அவர்களின் அறிவுரையை ஏற்றிருக்கலாமே! மாதத்தில் மூன்று நாட்கள் மட்டும் நோன்பு வைத்திருக்கலாமென வருத்தப்பட்டுக் கூறுகிறார்கள். இது புகாரீ, முஸ்லிம், முஸ்னத், அஹ்மத் போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளது.

மற்றொரு அறிவிப்பில்

உனது உடலுக்குரிய கடமையை செய்.

உனது துணைவிக்குரிய கடமையை செய்.

உனது பெற்றோர்க்குரிய கடமையை செய்.

உனது உற்றார், உறவினர்களுக்குரிய கடமையை செய்.

இத்துடன் உன்னால் முடிந்த அளவு உபரியான வணக்கங்களில் ஈடுபடுவீராக! என அறிவுரை வழங்கியதாக உள்ளது.

இந்நபி மொழிகள் மூலம் ஒருவரின் சக்திக்குட்பட்டவை என்பதன் பொருள் தெள்ளத் தெளிவாக விளங்கும். முதலில் தனக்குரிய கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அடுத்து மனைவி, மக்களின் கடமைகளை செவ்வனே செய்ய வேண்டும். அடுத்து பெற்றோர், உற்றார் உறவினர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் செய்தல் அவசியம். இவ்விதமாக இவ்வுலக உறவுகளுக்குரிய அனைத்து கடமைகளையும் செவ்வனே செய்து விட்டு பின் உபரியான வணக்கங்களில் ஈடுபடவேண்டும். இதற்குரிய சக்தி பெற்றவனே தனது சக்திக்குட்பட்டதைச் செய்வதாகக் கொள்ளப்படும்.

இதனை கீழ்வரும் நபிமொழித் தெளிவாக்குவதையும், பட்டியலிட்டுக் காட்டுவதையும் பாரீர்!!

நபி(ஸல்) கூறினார்கள்:

முதலில் உனக்கு செலவு செய்,

அதன்பின் ஏதேனும் மிஞ்சினால்,

உனது குடும்பத்தாருக்கு உதவி செய்,

அதன்பின் ஏதேனும் மிஞ்சினால்,

உனது நெருங்கிய நன்பருக்கு உதவி செய்,

அதன்பின் ஏதேனும் மிஞ்சினால்

இவ்வாறே வரிசைப்படுத்திக் கொள்.

அறிவிப்பு: ஜாபிர்(ரழி)

ஆதாரம் : முஸ்லிம். நஸயீ, அபூதாவூத், அஹ்மது

எனவே நாம் பலஹீனமான நாம், எப்படி அல்லாஹுவிடம் நமது பலஹீனத்தைக் கூறிப் பிரார்த்திக்க வேண்டும் என்பதை அல்லாஹ் நமக்கு அழகாக கற்று தருவதைக்காண்க:

(முஃமின்களே! நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்:)

“எங்கள் இறைவா!

நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது

தவறு செய்திருப்பினும்

எங்களை குற்றம் பிடிக்காதிருப்பாயாக!

“எங்கள் இறைவா!

எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையைப்

போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக!

“எங்கள் இறைவா!

எங்கள் சக்திக்கப்பாற்ப்பட்ட (எங்களால் தாங்க முடியாத)

சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக!

எங்கள் பாவங்களை நீக்கிப் பொருத்தருள்வாயாக!

எங்களை மன்னித்தருள்வாயாக!

எங்கள் மீது கருணை புரிவாயாக!

நீயே எங்கள் பாதுகாவலன்:

இறை நிராகரிப்போரின் மீது (நாங்கள் வெற்றியடைய)

எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!  (அல்குர்ஆன் 2:286)

இப்பொழுது சொல்லுங்கள்.

ஹனபி மத்ஹபின் இமாமான அபூஹனீபா(ரஹ்) ஹஜ் செய்துவிட்டு ஜியாரத்திற்காக மதீனா வந்தார்களாம். நபி(ஸல்) வாழ்ந்த புனிதமான மதீனாவில் அசுத்தம் செய்யக்கூடாது என அங்கிருந்த பத்து நாட்களும் மலம், ஜலம் கழிக்கவில்லையாம். இது பிக்ஹு நூல் கூற்றாகும்.

மதீனாவிலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த மாலிக்(ரஹ்) மஸ்ஜிதுன்னபவியில் இருந்து ஏழு நாட்கள் மலம், ஜலம் கழிக்கவில்லையாம். இது ஹனபி ரசிகர்களால் தங்களது நூல்களில் எழுதப்பட்டுள்ள விசயமாகும். தனது இமாமை விட மாலிக்(ரஹ்) உயர்ந்து விடக் கூடாது என்பதற்காக தனது இமாமுக்கு பத்து நாட்கள் எனவும், இவருக்கு ஏழு நாட்கள் எனவும் எழுதி வைத்துள்ளனர்.

ஷாபிஈ(ரஹ்) அவர்கள் மார்க்க சட்டம் ஒன்றுக்கு தீர்ப்பளிக்க ஒவ்வொரு நாளும் பகலில் மூன்று தடவை, இரவில் மூன்று தடவை என குர்ஆனை (8 நிமிடத்திற்கு 1 ஜூஸ் வீதம்) ஓதினார்கள். பின் சட்டத்தீர்ப்பளித்தார்கள்.

மற்றும் பல நாதாக்கள் 30,40 வருடங்கள் இஷாவுக்கு செய்த ஒளுவுடன் பஜ்ர் தொழுதார்கள்.

இதுப் போன்ற கூற்றுக்களை இது வரை நாம் எடுத்து வைத்த, அவரவர் சக்திக்குட்பட்டதையே செயல்படுத்த ஆணையிட்டுள்ள இறைவசனங்கள், நபி மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும், இக்கூற்றுகள் உண்மையா? பொய்யா? தாங்கள் கண்மூடிப் பின்பற்றும்(தக்லீது) இமாம்கள், தலைவர்கள் மீது இவர்களால் அவிழ்த்து விடப்பட்ட சரடுகளா? சரித்திரச் சான்றுகளா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு விசயத்தைப் பற்றித் தெளிவு கொடுத்த பின் அதில் மாற்றுக் கருத்துக் கொள்ள எந்த முஃமினுக்கும் உரிமையில்லை என்பதை யோசித்துப் பாருங்கள்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு விஷயத்தைப் பற்றித் தெளிவு கொடுத்த பின் அதில் மாற்றுக் கருத்துக் கொள்ள எந்த முஃமினுக்கும் உரிமையில்லை என்ற இறை ஆணையுடன் யோசித்து முடிவெடுங்கள்.

**************************

நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். இன்னும் நீங்கள் உண்மை பேசக் கூடியவர்களாக ஆகிவிடுங்கள். (அல்குர்ஆன் 9:119)

Previous post:

Next post: