ஆதாரம் அவர்களே தருகிறார்கள்!

in 1990 டிசம்பர்

ஆதாரம் அவர்களே தருகிறார்கள்!

இப்னு ஹத்தாது

மதரஸாக்களின் கல்வி முறை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமைக்கப்பட வில்லை. ஆலிம்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் மவ்லவிகளுக்கு உண்மையான மார்க்க ஞானம் இல்லை; அவர்கள் தங்களை மார்க்கத்தின் ஏகபோக உரிமையாளர்கள் என்று சொல்லிக் கொள்ள தகுதியும் உரிமையும் இல்லை; அவர்கள் சில வருடங்கள் மதரஸாக்களில் தங்கியிருக்கும் காலக்கட்டத்தில் அவர்களுக்கு மூளை சலவை செய்யப்பட்டு குருட்டு பக்தர்களாகி, முன்னோர்களின் குர்ஆன், ஹதீஸுக்கு முரணான போக்குகளை எல்லாம் மார்க்கமெனக் கண்மூடி நம்பிச் செயல்படுகின்றனர்; அவைகளையே மக்களுக்கும் போதிக்கின்றனர். ஆக இந்த முல்லாக்களால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் அழிவு தான் ஏற்படுகிறது என்ற உண்மையை தக்க ஆதாரங்களுடன் அந்நஜாத் மக்களுக்கு எடுத்துரைக்கிறது.

முல்லாக்களால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் அழிவுதான் ஏற்படுகிறது என்ற உண்மையை தக்க ஆதாரங்களுடன் அந்நஜாத் மக்களுக்கு எடுத்துரைக்கின்றது. முல்லாக்களால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்படும் இழிவைச் சுட்டிக்காட்டுவதே அல்லாமல் முல்லாக்களை இழிவுப்படுத்த வேண்டுமென்பது அந்நஜாத்தின் நோக்கம் அல்ல. மக்கள் இந்த முல்லாக்களை நம்பிச் செயல்பட்டு நரகப்படுகுழியில் விழுவதை விட்டும் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்கள் உண்மை முஸ்லிம்களாகி அழகிய முன்மாதிரி வாழ்க்கையை மேற்க்கொண்டு மாற்றுமத மக்களையும் நாஸ்திகர்களையும் சத்திய இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்க வேண்டும்  என்பதே அந்நஜாத்தின் குறிக்கோள் ஆகும்.

அந்நஜாத்தின் இந்த இலட்சியப் பணியைப் புரிந்துக் கொள்ளாத முல்லாக்களிடமிருந்தும், முல்லாதாசர்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பும், கண்டனங்களும் மிரட்டல்களும் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன. மதரஸாக்களைப் பற்றி எமதுக் கருத்துக்களை உண்மைப்படுத்தும் விதமாகவே அரபி மதரஸாக்களிலிருந்தும் அந்த முல்லாக்களிடமிருந்தும் எமக்கு வந்து சேரும் ஆதாரங்கள் அமைகின்றன. அத்தகைய ஆதாரங்களில் ஒன்றை மக்கள் முன் வைக்கின்றோம்.

ஆண்கள் தலைமுடியை வெட்டிக்டிக்கொள்வதுப் போல பெண்களும் வெட்டிக்கொள்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா? என்ற கேள்விக்கு அந்நஜாத் மே 1988 இதழில் முஸ்லிமில் அபூஸலமாபின் அப்துர்ரஹமான்(ரழி) அவர்களால் அறிவிக்கப்படும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டி பெண்கள் தலை முடியைக் காது வரை வைத்து வெட்டிக் கொள்வது ஆகும் என்பதை எழுதியிருந்தோம். ஒரு அரபி இமாம் அதன் உருது மொழிப்பெயர்ப்புடன் கூடிய போட்டோ காப்பியை தேவ்பந்து உலூம் அரபி மதரஸாவுக்கு அனுப்பி மார்க்கத் தீர்ப்பு வழங்குமாறு வேண்டியுள்ளார்கள்.

அங்குள்ளவர்கள் பொருப்புள்ளவர்களாயின் உண்மையில் ஆர்வமுள்ளவர்களாயின் என்ன செய்திருக்க வேண்டும்? நாம் குறிப்பிட்டுள்ள ஹதீஸ் முஸ்லிமில் காணப்படுகிறதா, இல்லையா? என தீர அலசி ஆராய்ந்துப் பார்க்கவேண்டும். அதை விடுத்து அவர்கள் விடுத்துள்ள மார்க்கத் தீர்ப்பு உண்மையிலிருந்து வெகுவாக முரண்பட்டும் கலப்படமற்ற பொய்யாகவும் நம்மீது பழி சுமத்துவதாகவும் அமைந்துள்ளது.

“கேள்வியில் இடம் பெற்றுள்ள தலையை சிரைப்பது பற்றிய ஹதீஸ் முஸ்லிமில் ஈமானுடையப் பாடத்தில் பக்கம் 70ல் சில மாற்றங்களுடன் இடம் பெற்றுள்ளது. நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் தங்களுடைய தலைமுடியை காது வரை கத்தரித்துக் கொண்டார்கள் என்ற உண்மையை அறிவித்து, தலைமுடியைக் கத்தரிப்பதை ஆகுமானதாக உணர்த்தும் முதலில் குறிப்பிட்டுள்ள ஹதீஸ், எவ்வளவோத் தேடிப் பார்த்தும் முஸ்லிமிலோ அல்லது மற்ற, எந்த கிரந்தத்திலோ கிடைக்கவில்லை. இதிலிருந்தே இது ஹதீஸ் இல்லை எனத் தெரிகிறது. ஒருகால், அப்படி ஒரு ஹதீஸ் உண்டென்று ஏற்றுக் கொண்டாலும் புகாரியில் இடம் பெற்றிருக்கும் ‘ஆண்களைப் போல் பாவணை செய்யும் பெண்கள் மீது சாபம் உண்டாகுக” (புகாரீ. பாகம் 2, பக்கம் 872) என்ற ஹதீஸினுடைய கருத்திற்கு எதிராக அமைந்துள்ளது.

அடுத்து ஆகுமாக்கக் கூடியதும் தடுக்கக் கூடியதும், ஆகியவை ஒன்றுக் கொன்று மோதிக் கொள்ளும் போது தடுக்கக் கூடியதற்கு முன்னுரிமைக் கொடுக்கப்பட வேண்டும். எனவே தான் புகஹாக்கள் ஒரு பெண் தன்னுடைய தலைமுடியை அவளது கணவனின் அனுமதியோடு கத்தரித்துக் கொண்டாலும் பாவம் செய்தவளாக ஆகி விடுவாள்’ என எழுதியுள்ளார்கள். (துர்ருல் முக்தார், பீரத்தில் முக்தார் பாகம்6, பக்கம் 404) எனவே மார்க்கத்தைப் பின்பற்றும் பெண் அனாவசியமாக இவ்வாறு தலைமுடியை வெட்டிக் கொள்வது ஹராமாகும்.

மேலும் தலைமுடியை சிரைப்பதைத் தடுக்கும் ஹதீஸை தலைமுடியை வெட்டிக் கொள்ளலாம்  என்பதற்கு ஆதாரமாகக் கொள்ள முடியாது. அதோடல்லாது நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களில் யாரும் தலைமுடியை கத்தரித்துக் கொண்டார்கள் என்பதற்கு ஆதாரமே இல்லை. இது அவர்களின் மீதுக் கூறப்படும் அப்பட்டமானதோர் இட்டுக்கட்டாகும்.

முஸ்லிமிலோ அல்லது மற்ற எந்த நூலிலோ கிடைக்கவில்லை’ என்ற தேவ்பந்த் மவ்லவிகளின் மார்க்கத் தீர்ப்பில் மறைத்துக் கூறியுள்ள ஹதீஸ் உண்மையில் இமாம் நவவி அவர்களின் முஸ்லிம் விரிவுரை 4ம் பாகம் 4ம் பக்கம் (அச்சு பதிப்பு  1981)  இடம் பெற்றுள்ளது.

ஒரு நூலில் குறிப்பிட்டுள்ள ஒரு ஹதீஸை தேடி எடுக்கும் ஆற்றல் கூட இல்லாதவர்கள் தான் தங்களை  மவ்லவி என்றும் மார்க்க அறிஞர்கள் என்றும் மாத்திரமில்லாமல் தீர்ப்பு(ஃபத்வா) வழங்கும் அதிகாரமும் படைத்தவர்களாக மார்தட்டிக் கொள்கிறார்கள். ஏட்டில் எழுதப்பட்டுள்ளதை இன்னொருவர் இருப்பதாக குறிப்பிட்ட பின்னரும் தேடிப்பார்த்து காண முடியாதவர்களா, சுயமாக சிந்தித்து மார்க்கத்தை விளங்கப் போகிறார்கள்?

சுமார் 1000 வருடங்களுக்கு முன் ஹதீஸ்களைத் தேடிக் கண்டுப் பிடிப்பது, அப்படிக் கிடைத்த அவற்றின் தரத்தை அறிந்துக் கொள்வது, அறிவிப்பாளர்களின் நல்ல கெட்டத் தன்மைகளை ஆய்ந்து தெரிந்துக் கொள்வது, இவை அனைத்தும் பெரும் சிரமமுள்ளதும் உழைப்பின் மூலம் சாதிக்க வல்லதுமான செயல்களாக இருந்தன. அக்காலக் கட்டத்தின் உண்மையான மார்க்க அறிஞர்கள் பெரும் சிரமம் மேற்கொண்டு பல நூறு மைல்கள் அலைந்து திரிந்து பசியால் வாடி பட்டினி கிடந்து இரவுப் பகலாக பாடுபட்டு வடிகட்டி எடுத்த ஹதீதுகள் அனைத்தும் தெளிவாக ஏட்டில் பதியப்பட்டு நமக்காகப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் மார்க்கத்திற்காக செய்த செவைகள் உண்மையில் பாராட்டத்தக்கவை. அல்லாஹ்(ஜல்) அவர்களின் பிழைகளைப் பொறுத்து உயர்ந்தப் பதவிகளைக் கொடுக்க துஆ செய்ய நாம் கடமைப்பட்டிருக்கின்றோம்.

அனால் இன்றோ ஹதீஸ்கள் அனைத்தும் முறையாக ஆராயப்பட்டு அவற்றின் அறிவிப்பாளர் வரிசை, அவர்களின் தராதரங்கள், ஹதீஸ்களின் படித்தரங்கள் இவை அனைத்தையும் எவ்வித சந்தேகத்திற்குமிடமில்லாமல் தெளிவுப்படுத்தப்பட்டு பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரபி அல்லாத மொழிகளிலும் ஓரளவு கிடைக்கின்றன.

ஹதீஸுகள் அனைத்தையும் மொழிப் பெயர்க்க பெரும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. ஒரு ஹதீஸின் ஒரு வாசகம் தெரிந்தால் போதும். “அல் முஃஜமுல் முபஹ்ரீஸ்- ஹதீஸ்களின் அட்டவனையைப் பார்த்துக் குறிப்பிட்ட ஹதீஸை எளிதாக அறிவிப்பாளர் வரிசையுடன் எடுத்து விட முடியும்.

 இப்படி அனைத்தும் எளிதாக்கப்பட்டுள்ள இக்காலக் கட்டத்தில், இந்தியாவிலேயே முதல் மதரஸாவென்றும், பேரறிஞர்கள் நிறைந்த  மதரஸாவென்றும், தேவ்பந்தில் ஓதிப் பட்டம் பெற்ற மவ்லவிகள் இல்லாத பகுதிகளே இந்தியாவில் இல்லை என்றும் பலவாறாக பெருமைப்பட பேசப்படும் மதரஸாவின் முஃப்தி – மார்க்கத் தீர்ப்பு வழங்குபவர் – மற்றும் இந்தத் தீர்ப்பைப் படித்துப் பார்த்து தீர்ப்பு சரியானது என உறுதிப்படுத்தி கையெழூத்திட்டுள்ள தேவ்பந்தின்  தலை சிறந்த இரு பேராசிரியர்கள், இவர்களுக்கு முஸ்லிமிலுள்ள ஒரு ஹதீஸைப் பார்த்து எடுக்கும் திறன் இல்லை என்றால் மற்ற சாதாரண மவ்லவிகளின் நிலைப் பற்றி நாம் சொல்லவும் வேண்டுமா? இந்த மவ்லவிகளின் தரம் பற்றி நாம் இவ்விதம் விமர்சிப்பதற்கு தகுந்த முகாந்திரம் உள்ளதா அல்லவா என்று சகோதரர்கள் சிந்தித்து விளங்கக் கடமைப் பட்டிருக்கிறார்கள்.

இப்படியாகவே மார்க்க விஷயமாக மூல ஆதாரங்களை தீர ஆய்ந்தறியாமல், இந்த முல்லாக்கள் வழங்கும் பல தீர்ப்புகள் (ஃபத்வா) உண்மைக்குப் புறம்பாக அமைந்து விடுகின்றன. உண்மையை எடுத்துரைக்க நாம் கடமைப்பட்டுள்ளதால்  தான் அவர்களின் தீர்ப்பு (ஃபத்வா)களையும், கூற்றுகளையும் விமர்சிக்கின்றோம்.

மேற்கூறியவாறு முஸ்லிமில் பதிவாகியுள்ள ஒரு ஹதீஸை தேடி எடுக்கும் எளிதான சிறிய பணியை நிறைவேற்றவே ஆற்றலில்லாத இந்த மவ்லவிகள், குறிப்பிட்ட ஹதீஸ் முஸ்லிமில் காணப்படவில்லை என்றும் வேற எந்த நூலிலும் இல்லை என்றும் நெஞ்சழுத்தத்துடன் பொய்த் தீர்ப்பு வழங்க துணிந்துள்ளனர்; இப்படிப்பட்டவர்கள் உழைப்பும் சிரமமும் தேவைப்படும் காரியங்களில் எதைச் சாதித்து விடப் போகிறார்கள்; மவ்லவிகள்  உண்மைக்குப் புறம்பாக தீர்ப்பு (ஃபத்வா) வழங்கத் துணிபவர்கள் என்பதை மக்கள் இதனால் உணர முடியும். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுப் போல் இத்தகைய மவ்லவிகளின் கைவரிசைகள் இப்படித் தான் இருக்கும் என்பதற்கு அவர்களின் இந்தத் தீர்ப்பே போதிய சான்றாகும்.

மேலும் “ஆண்களைப் போல் பாவணை செய்யும் பெண்கள் மீது சாபம் உண்டாகும்” (புகாரீ) என்ற ஹதீஸுக்கு முரணாக மேற்படி ஹதீஸ் இருக்கிறதென்பதும் இத்தகைய மவ்லவிகளின் யூகமே அல்லாது உண்மையல்ல, இந்த மவ்லவிகளைப் போல் யூகம் செய்வதாக இருந்தால் பெண்களின் பல செயல்பாடுகள் ஆண்களின் செயல்பாடுகளுக்கு ஒத்திருப்பதாகக் கூறி அவை அனைத்தையும் ஹராம் என்றுத் தீர்ப்பளிக்கும் நிலை ஏற்படும். பெண்கள் தங்கள் தலைமயிரை மழிக்கக் கூடாது’ (மொட்டை அடித்தல்) என்ற கருத்தில் நேரடியாக ஹதீஸ் இருப்பதுப் போல், பெண்கள் தங்கள் தலைமயிரை கத்தரிக்கக் கூடாது’ என்று நேரடியான ஹதீஸ் இருந்தால் மட்டுமே மேற்படி ஹதீஸ் முரண்படுகிறது என்று பொருள் கொள்ள முடியும். தேவ்பந்த மதராவின் மார்க்கத் தீர்ப்பு குர்ஆன், ஹதீஸுக்கு முரணான ஒரு தீர்ப்பேயாகும் என்பதே தீர்வாகும்.

குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் காணப்படும் உண்மைகளை உள்ளது உள்ளபடி மக்கள் முன் எடுத்து வைக்கும் எம்மீது எந்த அளவு இந்த முல்லாக்கள் துணிந்து தங்களின் மனசாட்சிக்கு விரோதமாகப் பழி சுமத்துகிறார்கள்; அவதூறு  கூறுகிறார்கள் என்பதற்கு இதை விட வேறு ஆதாரமும் வேண்டுமா, இந்த முல்லாக்களின் சுய ரூபத்தைத் தோலுரித்துக் காட்ட அந்நஜாத் துணிவதில் தவறுண்டோ என்பதைப் பொதுமக்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டுகிறோம்.

Previous post:

Next post: