நபி வழியில் நம் தொழுகை

in 1990 டிசம்பர்

நபி வழியில் நம் தொழுகை

தொடர்: 46

 அபூ அப்திர்ரஹ்மான்

என்னை எவ்வாறுத் தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

ஜும்ஆ  பிரசங்கம்  சுருக்கமாகவும்,  தெளிவாகவும்  இலக்கிய  நயத்தோடும்  இருத்தல்.

*ஒரு முறை அம்மார்(ரழி) அவர்கள் எங்களுக்கு சுருக்கமாகவும், தெளிவாகவும் இலக்கிய நயத்துடன் ஜும்ஆ பிரசங்கம் செய்தார்கள். அவர்கள் மிம்பரில் இருந்து இறங்கியவுடன் நாங்கள் அவர்களை நோக்கி, தாங்கள் சிறந்த வகையில் சுருக்கமாக பேசி விட்டீர்கள். சற்று விரிவாக பேசி இருந்தால் மிக நன்றாயிருந்திருக்கும் என்று கூறினோம். அதற்கு அவர்கள் தொழுகையை நீட்டுவதற்கும், பிரசங்கத்தை சுருக்கிக் கொள்ளவும் மனிதனின் அறிவாற்றலுக்கோர் எடுத்துக்காட்டாகும். ஆகவேத் தொழுகையை (மக்களுக்குச் சிரமமில்லாதவாறு) நீட்டி பிரசங்கத்தை சுருக்கிக் கொள்ஞங்கள் நிச்சயமாக பிரசங்கத்தில் பிறரைக் கவரும் தன்மையுள்ளது, என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.       (அபூவாயில்(ரழி), முஸ்லிம்)

தவறாக  பிரசங்கம்  செய்பவர்  உணர்த்தப்பட  வேண்டும்.

* ஒருமுறை ஒருவர் நபி(ஸல்) அவர்களின் சமூகத்தில் பிரசங்கம் செய்தார். (அவர் தமது பிரசங்கத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு நடப்போர் நிச்சயமாக நேர்வழியடைந்து விட்டார். அவ்விருவருக்கும் மாறு செய்வோர் வழிதவறி விட்டார்” என்று கூறினார்.

உடனே நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி, நீர் பிரசங்கிகளில் மிக கெட்டவராவீர். (அவ்விருவருக்கும் மாறு செய்வோர் வழி தவறி விட்டார்” என்று அல்லாஹ்வுடன் என்னையும் இணைத்துக் கூறாமல்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்வோர் (வழி தவறிவிட்டார்) என்று கூறுவீராக என்றார்கள்.
(அதிய்யுபின் ஹாத்திம்(ரழி) முஸ்லிம்)

மேற்காணும் இவ்வறிவிப்பு பின்வரும் குர்ஆன் வசனத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அல்லாஹ்வும், அவனுடையத் தூதரும் ஒரு காரியத்தை பற்றிக் கட்டளையிட்டுவிட்டால்  அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்ராயம் கொள்வதற்கு மூமினாகிய எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ, அவர் பகிரங்கமான வழிக்கேட்டிலேயே இருக்கிறார்.    (33:36)

இவ்வசனத்தில் “அவ்விருவருக்கும் மாறு செய்வோர்” என்று கூறுவதற்கு ஏதுவான கட்டத்தில், அல்லாஹ் அவ்வாறு கூறாமல் ‘ எவர் அல்லாஹ்வுக்கம், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றனரோ’ என்று தனித்தனியாக அல்லாஹ்வையும், அவன் தூதரையும் பிரித்துக் கூறியிருப்பதைக் காணலாம்.   

எனவே பிரசங்கம் செய்த அந்த நபித்தோழர் ‘அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும்’ என்று முறையாகக் கூறவேண்டியக் கட்டத்தில் அவ்வாறு கூறாமல் அவ்விருவருக்கும் மாறு செய்வோர் என்று அனைவரையும் படைத்து பரிபாலனம் செய்யும், தனித்தன்மை வாய்நத ரட்சகனோடு அவனாலேயேப் படைக்கப்பட்டு, சுயசக்தியின்றி அவனுடைய தயவில் அவனுக்கே முழுக்க, முழுக்க அடிமையாகவும், தூதராகவும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஒருவராகிய நபி(ஸல்) அவர்களையும் இணைத்து, அவ்விருவருக்கும் மாறு செய்வோர்’ என்று கூறுவதால் அது ஷிர்க்காக- அல்லாஹ்வுக்கு இணை வைப்பதாக இல்லாவிடினும் இவ்வாசகத்தில் மறைமுகமாக ஷிர்க்குடைய வாடை தொனிப்பதால் நபி(ஸல்) அவர்கள் அந்த ஸஹாபியை இவ்வாறு கூறுவதிலிருந்து தடை செய்துள்ளார்கள்.

ஆகவே பிரசங்கம் என்ற வகையில் யார் எதைக் கூறினாலும், அனைத்திற்கும் “ஆமாம்” போடுகிறவர்களாக, கண்மூடித்தனமாக நாம் இருந்துவிடக் கூடாது. கூறுபவை குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் உடன்பாடானவைதானா? அல்லது முரண்பாடானவையா? என்பனவற்றை சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்க்க கடமைப்பட்டவராக இருக்கிறோம்.

குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் அவை முரண்பாடானவையாயிருப்பின், அதைத் தட்டிக் கேட்டு, தவறுகளை சுட்டிக்காட்டி சம்பந்தப்பட்டவரை சீர்திருத்தம் செய்ய வேண்டிய பொருப்பும் நம்மையே சார்ந்துள்ளது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என்பதாக மேற்காணும் ஹதீஸ் உணர்த்துகிறது.

பிரசங்கத்தின் போது  நரகத்தைப்  பற்றி  அச்சமூட்டி  எச்சரிக்கை  செய்தல்!

நபி(ஸல்) அவர்கள் பிரசங்கத்தின் போது “நான் உங்களுக்கு நரகத்தைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன், உங்களுக்கு நரகத்தைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்” என்று கூறுவதாக நான் கேட்டிருக்கிறேன்.   (நுஃமானுபின் பஷீர்(ரழி) அஹ்மத்)

* நபி(ஸல்) அவர்களின் மிம்பரில் உள்ளவர்களாக, “வநாதவ்யாமாலிக்” எனும் வசனத்தை ஓதுவதை நான் கேட்டுள்ளேன் என்று ‘ஸஃப்னுவானுபின் யஃலா(ரழி) என்பவர் தமது தந்தை தமக்கு அறிவித்ததாக அறிவித்துள்ளார்கள்.    (ஸஃப்வாறு பின் யஃலா(ரழி), முஸ்லிம்)

மேற்காணும் வசனத்தின் பொருள் (இந்நிலையில் அவர்கள் நரகத்தின் அதிபரை நோக்கி) மாலிக்கே! உமதிதிறைவன்  எங்களைத் தீர்த்துக்கட்டி விடட்டும் (மரணத்தின் முலமாயினும் எங்களுக்கு விடுதலைக் கிடைக்கட்டும்) என்று சப்தமிடுவார்கள். அதற்கு அவர் (முடியாது) நிச்சயமாக நீங்கள் (இதே நிலையில் வேதனையை அனுபவித்துக் கொண்டேமரிக்காது) நலைத்திருக்க வேண்டியது தான் என்று கூறுவர். (43:77)

மேற்காணும் வகையில் நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்தார்கள் என்பதாகத் தான் ஹதீஸ்களில் காணப்படுகிறதே தவிர, தக்வாவைக் கொண்டு வஸியத்துச் செய்யும் வகையில் “ஊஸீக்கும் இபாதல்லாஹி வ இய்யாய பிதக்வல்லாஹ்’ – அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுக்கும் பயபக்தியோடு நடந்து கொள்ளும்படி வஸியத்து – உபதேசம் செய்து கொள்கிறேன்’ என்பதாகக் காணப்படவில்லை.

நபி(ஸல்) அவர்கள் தமது ஜும்ஆ பிரசங்கத்தின் போதெல்லாம் தக்வாவை – பயபக்தியைப் பற்றி உபதேசித்துக் கொண்டிருந்தார்கள். என்பதாக சிலர் கூறும் ஹதீஸுக்கு அறிவிப்பாளர் யார்? அதைப் பதிவு செய்தவர் யார்? என்ற கேள்விகளுக்கு  விடையில்லாமல் தலையும் வாலுமத் இன்றி சில மத்ஹபு வாசிகளின் நூல்களில் இடம் பெற்றுள்ளது.

இத்தகைய போலியான ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டு, ஜும்ஆவுடைய பிரசங்கத்தில் தக்வாவைக் கொண்டு வஸியத்து செய்வதும் அதன் பர்ளுகளில் ஒன்று என்பதாகச் சட்டம் வகுத்திருப்பதானது பேராச்சரியமாய் இருக்கிறது.

ஜும் ஆ பிரசங்கம் செய்பவர் வரும்போது குறிப்பாக மிம்பருக்கு அருகில் உள்ளவர்களுக்கும், மிம்பரில் ஏறியவுடன் மக்களை நோக்கி, பொதுவாக அனைவருக்கும் ஸலாம் கூற வேண்டும் என்பதற்கான அறிவிப்பின் நிலை:

நபி(ஸல்) அவர்கள் மிம்பருக்க அருகில் வரும்போது அதற்கு அருகில் அமர்ந்திருப்போருக்கு ஸலாம் கூறுவார்கள். பின்னர் மிம்பரில் ஏறியவுடன் மக்களை நோக்கி, ஸலம் கூறி அமர்வார்கள்.    (இப்னு உமர்(ரழி), இப்னு அதீ)

இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘ஈஸப்னு அப்தில்லாஹில் அன்ஸாரீ எனும் நம்பகமற்றவர் இடம் பெற்றுள்ளார். இவர் பற்றி ‘இப்னு அதீ அவர்களும் இப்னு ஹிப்பான் அவர்களும் மிகவும் பலஹீனமானவர்கள் என்று விமர்சித்துள்ளார்கள் ஆகவே இவ்வறிவிப்பு பலகீனமானதாகும்.

*நபி(ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறினால் ஸலாம் சொல்கிறவர்களாயிருந்தார்கள். (ஜாபிர்(ரழி) இப்னுமாஜ்ஜா)

இதன் அறிவிப்பாளர்த் தொடரில் ‘இப்னு லுஹைஆ’ வெனும் நம்பகமற்றவர் இடம் பெற்றுள்ளார். ஆகவே மேற்காணும் அறிவிப்புகள் பலகீனமானவையாகும்.

* உங்களில் ஒருவர் ஒரு சபைக்குச் சென்றால் உடனே (அவர்களுக்கு) ஸலாம் கூறுவீராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி) திர்மிதி, அபூதாவூத்)

* உங்களில் ஒருவர் தமது சகோதரரைச் சந்தித்தால் உடன் அவருக்கு ஸலாம் கூறுவீராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அபூஹுரைரா(ரழி), அபூதாவூத்)

மேற்காணும் அறிவிப்புகள் ஒருவர் சபைக்குச் சென்றவுடன் ஸலாம் கூற வேண்டும். என்றும், முஸ்லிமத் சகோதரரைக் கண்டவுடன் ஸலாம் கூற வேண்டும். அது தான் நபிவழி என்றும் தெளிவுப்படுத்துகின்றன. இவற்றின் அடிப்படையில் இவற்றை நமக்குக் கற்ப்பித்துத் தந்த நபி(ஸல்) அவர்கள் பள்ளிக்குள் பிரவேசிக்கும் போதே ஸலாம் கூறித்தான் வந்திருப்பார்களே அன்றி, மேற்காணும் போலி ஹதீஸ் கூறுவது போல், மிம்பருக்கு அருகில் வரும்போது அதன் அருகில் அமர்ந்திருப்போருக்கு மட்டும் ஒரு ஸலாமும் மிம்பரில் ஏரியவுடன் அனைத்து மக்களையும் நோக்கி ஸலாமும் கூறினார்கள் என்பது ஸஹீஹான ஹதீஸ்களின் கருத்துக்கு முரணாயிருக்கிறது என்பதை யாரும் அறியலாம். ஆகவெ மிம்பரில் நின்று ஸலாம் கூறுவது நபிவழி அல்ல என்பதை மேற்காணும் இரு ஹதீஸ்களும் ஊர்ஜிதப்படுத்துகின்றன. இதையே ஹதீஸ் கலா வல்லுநர்களில் பிரதான இடம் வகிக்கும் இமாம் மாலிக் அவர்களும் சரி காணுகிறார்கள்.

தடியோ, அல்லது வில்லையோ ஊன்றிக் கொண்டு ஜும் ஆ பிரசங்கம்  நிகழ்த்துதல்.

நான் எழுவரில் ஏழாவது நபராக, அல்லது ஒன்பது பேரில் ஒன்பது நபராக வந்து, அனைவரும் நபி(ஸல்) அவர்களிடம் சேர்ந்தோம். அப்போது நாங்கள் அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதரே நாங்கள் உங்களை வந்து சந்தித்தோம். ஆகவே நீங்கள் எங்களுக்கு அல்லாஹ்விடத்தில் நல்ல நிலைக்காக துஆ செய்யுங்கள் என்றுக் கேட்டுக் கொண்டோம். உடனே அவர்கள் எங்களுக்கு சிறிதளவு பேரித்தம் பழம் தருவதற்கு உத்தரவிட்டார்கள். அப்போது கால நிலை மிக மோசமாக இருந்தது. பின்னர் நாங்கள் அங்கேயே பல தினங்கள் தங்கியிருந்தோம்.

அப்போது நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் ஒரு ஜும்ஆவில் ஆஜராகியிருந்தோம். அது சமயம் அவர்கள் ஒரு தாடியையோ, அல்லது ஒரு வில்லையோ ஊன்றியவர்களாக நின்றுக் கொண்டு அல்லாஹ்வை மிகச் சிறந்த அழகிய எளிய நடையில் புகழ்ந்து விட்டு, ஜனங்களே! நீங்கள் உங்களுக்கு ஏவப்பட்டவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக எடுத்து அமல் செய்துவிட முடியாது. அவ்வாறு அமல் செய்யவும் இயலாது. ஆகவெ நீங்கள் (இயன்றளவு) செய்ய வேண்டியவற்றை முறைப்படி செய்துக் கொண்டு மகிழ்ச்சியாயிருங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் உபதேசம் செய்தார்கள்.    (அல்ஹக்க முப்னுல் ஹஜ்ன்(ரழி) அபூதாவூத், அஹ்மத்)

மேற்காணும் அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ பிரசங்கம் நிகழ்த்தியப் போது ஒரு தடியையோ, வில்லையோ ஊன்றிக் கொண்ருந்ததாகவேத் தெரிகிறது. மாறாக சிலர் கூறுவதுப் போல், ஏன் சில பெரிய ஊர்களில் நடைமுறையில் இருப்பதுப் போல் வாளையோ, வேறு எந்தப் பொருளையோ நபி(ஸல்) அவர்கள் தமது கையில் பிடித்துக் கொண்டு ஜும்ஆ பிரசங்கம் நிகழ்த்தியதாக ஹதீஸ்களில’ ஒரு ஆதாரமுமில்லை.

அவர்கள் தடியையோ அல்லது வில்லையோ ஊன்றிக் கொண்டு ஜும்ஆ பிரசங்கம் நிகழ்த்தியதும் மிம்பர் அமைக்கப்படுவதற்கும் முன்பு தான் என்பதை மேற்காணும் அல்ஹக்கமுப்னுல்ஹஜ்ன்(ரழி) அவர்களின் அறிவிப்பில் இடம் பெற்றுள்ள ‘வஷ்ஷானு இத்தக்கா தூன்’ அப்பொது கால நிலை மிக மோசமாக இருந்தது. எனும் வாசகம் உணர்த்துகிறது. இதை அவர்கள் ஏன் சொன்னார்கள் என்றால் உடனே அவர்கள் எங்களுக்கு சிறதளவு பேரீத்தம் பழம் தருவதற்கு உத்தரவிட்டார்கள். என்று கூறியது அந்த நபித்தோழர் அதற்கான காரணத்தை விளங்கும் போதுதான், அப்போது காலநிலை மிக மோசமாக இருந்தது என்று கூறியுள்ளார்கள்.

மிம்பர் கட்டப்பட்டது ஹிஜ்ரி 8ன் இறுதியில் என்பதாக ஹாபிழ் இப்னு ஹஜர்(ரழி) அவர்கள் ஃபத்ஹுல்பரீ எனும் நூலில் பாகம் 2 பக்கம் 399 ல் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே அந்த நபித்தோழர் கூறுவதுப் போல் அப்போது காலநிலை மிக மோசமாக இருக்கவில்லை. ஹிஜ்ரி 8ல் எல்லாம் நபி(ஸல்) அவர்களும் சஹாபாக்களும் பொருளாதார நிலையில் மிகவும் நல்லநிலையில் இருந்துள்ளார்கள். ஆகவே அந்த நபித்தோழர் மிம்பர் அமைக்கப்படுவதற்கு முன் தரையில் நின்றுக் கொண்டு நபி(ஸல்) அவர்கள் பிரசங்கம் செய்த கால கட்டத்தையே குறிப்பிடுகிறார் என்பதை சாதாரணமாக பார்க்கும்போதே அறிய முடிகிறது.

Previous post:

Next post: