ஹதீஸில் இடைச்செருகலானவையும்! பலகீனமானவையும்!!

in 1990 நவம்பர்

ஹதீஸில் இடைச்செருகலானவையும்! பலகீனமானவையும்!!

(48) ‘நீங்கள் உலமாக்களை (சன்மார்க்க அறிஞர்களைப்) பின்பற்றி நடவுங்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் தாம் இவ்வுலகத்தின் தீபங்களாகவும் மறுமையின் விளக்காகவும் இருக்கின்றனர்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (X)

இதை அனஸ்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளதாக “தைலமி” அவர்கள் தமது “முஸ்னதுல் பிர்தவ்ஸ்” எனும் நூலில் இடம் பெற செய்துள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் தொடரில் காஸிமு பின் இப்றாஹிம்’ என்பவர் இடம் பெற்றுள்ளார், “இவர் சரியான பொய்யர்’ என்பதாக தாருகுத்னீ அவர்கள் விமர்சித்துள்ளார்கள். ஆகவே இந்த அறிவிப்பு இட்டுக்கட்டப்பட்டதாகும்.

மனிதன் தவறு செய்யும் தன்மை வாய்ந்தவனாயிருப்பதால் நபி(ஸல்) அவர்கள் இவ்வுலகில் தம்மைத் தவிர வேறு யாரையும் பின்பற்றி நடக்கும்படி கட்டளையிடவில்லை. நபி(ஸல்) அவர்களை நாம் பின்பற்றி நடக்கிறோம் என்றால் அவர்கள் அல்லாஹ்வின் கண்காணிப்பில் இருந்துக் கொண்டிருப்பதால் அவர்கள் தவறு செய்யும் போது உடனுக்குடன் அல்லாஹ் அதனை அவர்களுக்குச் சுட்டிக் காட்டி உணர்த்திக் கொண்டிருந்தான்.

அல்லாஹ்வின் கண்காணிப்பிலிருந்து கொண்டு தவறுகளைச் சுட்டிக் காட்டி உணர்த்தப்படுவோர் நபி மார்களைத் தவிர  வேறு எவருமில்லை. ஆகவே ஒருவர் பெரிய ஆலிமாகவோ, ஷைகாகவோ இருக்கிறார் என்பதால் அவரைப் பிறர் பின்பற்றி நடக்க வேண்டும் என்று குர்ஆனோ, ஹதீஸோ நமக்குக் கட்டளையிடவில்லை.

(49) ஒருவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்தால் அனைத்து பொருள்களும் அவருக்கு அஞ்சி நடக்கும்படி அல்லாஹ் செய்து விடுகிறான். எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கவில்லையோ  அல்லாஹ் அவரை ஒவ்வொரு பொருளைக் கண்டு பயப்படும்படி செய்து விடுகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதை வாதிலத்து பின் அஸ்கஃ(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் தாம் கேட்டதாக” ஆமிருப்னுல் முபாரக்” வாயிலாக “கழாயீ” அறிவித்துள்ளார், இதன் அறிவிப்பாளர் தொடரில் சுலைமான்பின் அம்ரு” என்பவரைத் தவிர மற்ற அறிவிப்பாளர் அனைவரும் ஹதீஸ் கலாவல்லுநர்களிடத்தில் அறிமுகமில்லாதவர்களாயிருப்பதால் இவ்வறிவிப்பு நிராகரிக்கப்பட்டதாயிருக்கிறது.

(50) நீங்கள் விரும்பிய காரியங்களுக்காக குர்ஆனிலிருந்து நீங்கள் விரும்பிய ஆயத்துக்களை எடுத்து பயனடைந்துக் கொள்ளுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இது ஒரு அடிப்படையே இல்லாததொரு அறிவிப்பாகும், இதை அறிவித்தவர் யார்? இதன் அறிவிப்பாளர் தொடர் என்ன என்பது ஹதீஸ் கிரந்தங்களில் காணப்படவில்லை. ஆகவே இது ஆதாரமற்றதாகும்.

(51) நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆவுடைய இரவில் மஃரிபுத் தொழுகையில் ‘குல்யா அய்யுஹன் காஃபிரூன், குல்ஹுவல்லாஹு அஹத்” ஆகிய சூராக்களை ஓதி வந்தார்கள். இவ்வாறே ஜும்ஆவுடைய இரவில் இஷாத் தொழுகையில் ‘சூரத்துல் ஜும்ஆ’ சூரத்துல் முனாஃபிக்கூன்’ ஆகியவற்றை ஓதிவந்தார்கள்.

இதை ‘இப்னு ஹிப்பான்’ அவர்கள் முழுமையாகவும், பைஹக்கீ அவர்கள் இதன் முற்பகுதியை மட்டும் ‘ஸயீது பின் ஸிமாக்கு பின் ஹர்பு’ வாயிலாக அறிவித்துள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்று தமது தந்தை தமக்கு அறிவித்ததாக கூறும் ‘ஸயீதுபின் ஸிமாக்கு பின்ஹர்பு’ வாயிலாக அறிவித்துள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்று தமது தந்தை தமக்கு அறிவித்ததாக கூறும் “ஸயீதுபின்ஸிமாக்” என்பவர் ஹதீஸ் கலாவல்லுநர்களிடத்தில் பேச்சு எடுபடாதவராக இருக்கிறார். ஆகவே இவ்வறிவிப்பும் பலஹீனமானதாகவிருக்கும்.

ஆனால் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு “குல்யா அய்யுஹல் காஃபிரூன், குல்ஹுவல்லாஹு அஹத்” ஆகிய சூராக்களை மஃரிபுக்குப் பிறகு உள்ள 2 ரகாஅத் சுன்னத்துத் தொழுகையில் தான் பொதுவாக ஓதி வந்தார்கள் என்பதாக இப்னு உமர்(ரழி) அவர்களின் வாயிலாக அபூதாவூதில் பதிவாகியுள்ளது. இந்த ஹதீஸ் ஸஹீஹானதாகும். இவ்வாறே நபி(ஸல்) சுப்ஹுக்குப்முன் உள்ள இரு ரகாஅத்துக்களில் ‘குல்யா அய்யுஹல் காஃபிரூன், குல்ஹுவல்லாஹு அஹத்’ ஆகிய சூராக்களை ஓதினார்கள் என்பதாக அபூஹுரைரா(ரழி) அவர்களின் வாயிலாக இப்னு மாஜ்ஜாவில் பதிவாகியுள்ள ஹதீஸும் ஸஹீஹானதாகும்.

மேற்காணும் பலகீனமான அறிவிப்பில் காணப்படுவதுப் போல் நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆவுடைய இரவு இஷாத் தொழுகையில் ‘சூரத்துல் ஜும்ஆ’ சூரத்துல் முனாஃபிக்கூன்’ ஆகியவற்றை ஓதினார்கள் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை. ஆனால் ஜும்ஆவுடைய இரண்டு ரகாஅத்துக்களிலும் முதல் ரகாஅத்தில் சூரத்துல் ஜும்ஆவும், 2வது ரகாஅத்தில் சூரத்துல் முனாஃபிக்கினும் ஓதியதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் வாயிலாக முஸ்லிமில் பதிவாகியுள்ளது. அது ஸஹீஹானதாகும்.

(52) உங்களுடைய மைய்யத்துக்களை ஸாலிஹான – நல்ல கூட்டத்தாருக்கு மத்தியில் அடக்கம் செய்யுங்கள். உயிராக உள்ளவர் தீய அயலக்கத்தாரால் துன்பம் அடைவது போல், மரணமானவரும் தமது தீய அயலகத்தாரால்  நோவினை அடைகிறார்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்,

இதை அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறியதாக அறிவித்திருப்பதை ‘சுலைமான் பின் ஈஸா” என்பவரின் மூலம் அபூநயீம் அவர்கள் தமது ‘ஹில் யா’ வெனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றள்ள சுலைமான்பின் ஈஸா என்பவர் கடுமையான பொய்யர் என்பதாக ஹதீஸ் கலா வல்லுநர்கள் விமர்சித்துள்ளார்கள். ஆகவே இவ்வறிவிப்பு இடைச்செருகலானதாகும்.

(53) (உங்களில்) மூவர் இருந்தால் அல்லாஹ்வின் வேதத்தை அதிகமாக ஓதியிருப்பவர் இமாமாக இருந்துக் கொள்வாராக! (அல்லாஹ்வின் வேதத்தை) ஓதியிருப்பதில் அனைவரும் சமமாக இருப்பின் வயதால் கூடியவர் இமாமத் செய்வாராக! வயதால் அனைவரும் சமமாக இருப்பின் அழகான முகத்தை உடையவர் இமாமத் செய்வாராக!  என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இவ்வறிவிப்பு அடிப்படையில்லாத நிராகரிக்கப்பட்டதோர் அறிவிப்பாகும். இதை இமாம் பைஹகீ அவர்கள் “அப்துல் அஜீஸ்பின் மு ஆவியா என்பவர் வாயிலாக தமது நூலில் பதிவு செய்து இதன் அறிவிப்பாளர் தொடரில் “அப்துல் அஜீஸ்பின் மு ஆவியா’ என்ற நம்பகமற்றவர்  இடம் பெற்றுள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

 “முகம் அழகாயுள்ளவர்” என்ற வாசகத்தை இவர்தான் மேலுள்ள வாசகத்தோடு இணைத்திருப்பாரோ என்ற ஐயப்பாட்டிற்று உரியவராக இவர் இருக்கிறார் என்று இப்னு ஹிப்பான் அவர்கள் கூறுகிறார்கள். ஆகவே இவ்வறிவிப்பு நிராகரிக்கப்பட்டதாகும்.

இதுவரையில் ஸஹீஹான ஹதீஸ் பின்வருமாறு: ஒரு கூட்டத்தாருக்கு அவர்களில் அல்லாஹ்வின் வேதத்தை அதிகமாக ஓதியிருப்பவர் இகாமத் செய்வாராக! அல்லாஹ்வின் வேதத்தை ஓதியதில் அவர்கள் சமாமானவர்களாயிருப்பின் நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தை – நடைமுறையை அதிகமாக அறிந்தவர் (இகாமத் செய்வாராக!) நபி(ஸல்) அவர்களின் நடைமுறையை அறியும் வகையில் அவர்கள் சமமானவர்களாயிருப்பின் இஸ்லாத்திற்க்காக ஹிஜ்ரத் – நாடுத்துறத்தலில் முந்தியவர் (இகாமத் செய்வாராக!) ஹிஸ்ரத்திலும் அவர்கள் சமாமானவர்களாயிருப்பின் வயதால் பெரியவர் (இகாமத் செய்வாராக!) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூ மஸ்ஊத்(ரழி), முஸ்லிம்)

(54) ‘நிச்சயமாக நீங்கள் ஒரு காலக்கட்டத்தில் இருந்துக் கொண்டிருக்கிறீர்கள், உங்களுக்கு கட்டளையிடப்பட்டவற்றில் 10ல் ஒருபாகத்தை உங்களில் ஒருவர் விட்டு நடந்தால் அவர் நாசமாகி விடுவார் பின்னர் ஒரு காலம் வரும் அக்காலத்தவரில் ஒருவர் அவருக்கு கட்டளையிடப்பட்டவற்றில் 10ல்  ஒருப் பாகத்தை எடுத்து அமல் செய்தாலும் வெற்றியடைந்து விடுவார்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதை அபூஹுரைரா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார்கள் என்று “நயமுபின்ஹம்மாத்’ என்பவர் வாயிலாக திர்மிதீ, அபூநயீம், இப்னுஅஸாக்கீ முதலியோர் பதிவு செய்துள்ளார்கள்.

இதை ‘நயீமு பின் ஹம்மத்’ என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்று அபூநயீம் கூறுகிறார்கள். “நயீமுபின்ஹம்மாத்” என்பவர் தனித்துக் கூறும் பல ஹதீஸ்களில் இதுவும் ஒன்று என்று இப்னு அதீ கூறியிருப்பதாக இமாம் தஹாபீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். “நயீமுபின்ஹம்மாத்” என்பவர் தனித்துக் கூறும் அறிவிப்புகள் அனைத்தும் மறுக்கப்பட்டவையாகும் என்று நஸயீ கூறியுள்ளார்கள். ஆகவே இவ்வறிவிப்பு பலகீனமானதாகும்.

(55) நீங்கள் திருமணம் செய்துக் கொள்ளுங்கள். ஆனால் தலாக் விவாகரத்து செய்து விடாதீர்கள் ஏனெனில் விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் ‘அர்ஷு நடுங்கும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இதை அபுநயீம், தைலமீ ஆகியோர் ‘அம்ருபின் ஜமீஃ, என்பவர் வாயிலாக அலி(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடத்திலிருந்து கேட்டுள்ளார்கள் என்று கூறுகிறார்கள்.

இதை அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள “அம்ருபின் ஜமீஃ’ என்பவர் பற்றி இவர் மிக மோஷமான பொய்யர் என்று இப்னு முயீன் அவர்களும், ஸஹீஹான ஹதீஸ்களுக்கு நேர்மாற்றமான கருத்தை சுயமாக எடுத்துக் கூறும் முரண்பாடான தன்மை வாய்ந்தவர் என்று ‘கதீபு’ அவர்களும் விமர்சித்திருப்பதோடு, இவருடைய இவ்வறிவிப்பை இப்னு ஜவ்ஜி அவர்கள் தமது இடைச்செருகல் தொகுப்பில் எடுத்து எழுதியுள்ளார்கள்.

‘தலாக்’ சொல்வதை அல்லாஹ் ஆகுமாக்கி வைத்திருக்கும் போது அது கூடாது என்று கூறுவதிலிருந்தே இவ்வறிவிப்பு முறைகேடானது இட்டுக்கட்டப்பட்டது என்பது ஊர்ஜிதமாகிறது.

(56) ஒருவர் ஒளூ செய்துவிட்டு தமது பிடறிக்கு மஸ்ஹு செய்வாரானால் மறுமை நாளில் அவர் கழுத்தில் விலங்கிடப் படமாட்டாது’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இதை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர்(ரழி) வாயிலாக அபூநயீம் அவர்கள் அறிவித்துள்ளார்கள், இதன் அறிவிப்பாளர் தொடரில் “அம்ருபின் முஹம்மதிப்னு ஹஸன்” என்பவர் இடம் பெற்றுள்ளார்.

இவர் பற்றி இவர் பேச்சு எடுபடாதவர், சந்தேகத்திற்குரியவர், பலகீனமானவர் என்று தாருகுத்னீ விமர்சித்துள்ளார்கள், ஆகவே இவ்வறிவிப்பு இட்டுக்கட்டப்பட்டதாகும் என்று ஹதீஸ் கலாவல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளார்கள், ஹதீஸில் இவ்வளவுக் கோளாறுகள் இருந்தும் ஹனபிமத் ஹபுபிக்ஹு கிதாபுகளில் ஒளூ செய்யும் போது பிடறிக்கு மஸ்ஹு செய்வது முல்தஹபு – விரும்பத்தக்க செயல் என்பதாக எழுதி வைத்திருப்பது விந்தையாகவே இருக்கிறது.

Previous post:

Next post: