துலாக்கோல்

in 1990 பிப்ரவரி

துலாக்கோல்

கிரிட்டிக்

சென்ற இதழில் அல்ஜன்னத் டிசம்பர்’ 89 இதழின் 53ம் பக்கத்தில் இடம் பெற்ற மறுப்புக் கட்டுரையின் ஆட்சேபனை – 1 விளக்கம் – 1 என்ற பகுதியை அலசினோம். இந்த இதழில் ஆட்சேபனை -2 விளக்கம் -2 ஐ அலசுவோம்.

அதற்கு முன் ஒரு வி­யத்தை தெள்ளத் தெளிவாக அறிவித்து விடுகிறோம். அந்நஜாத் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை தவறை தவறு என்று ஒப்புக்கொள்ள என்றுமே நாம் தயங்கியதில்லை. தவறு உரிய ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்படும்போது அதனை ஏற்று எங்களைத் திருத்திக் கொண்டிருக்கிறோம். நாங்கள் தவறு செய்யும் இயல்புடைய மனிதர்களே. எங்களது ஆணவமோ, பட்டம் பதவிகளோ, சுய கெளரவமோ நாங்கள் உண்மையை ஒப்புக் கொள்ள என்றுமே தடையாக இருந்ததில்லை.

தாரகுத்னீ நம்மிடம் அப்போது இல்லாத காரணத்தால் துஹ்ப(த்)துல் அஹ்வதீ பாகம்- 2 பக்கம் 55-ல் தாரகுத்னீயில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் காணப்பட்ட அஃதரை ஆதாரமாக வைத்து நாங்கள் எழுதியது தவறு தான். அதேபோல் அல்ஜன்னத் செப்ட்’89 பக்கம் 37ல் அவர்கள் குறிப்பிட்டிருந்த அஃதர் நஸயீ, இப்னுகுசைமா, ஹாகிம், இப்னு ஹிப்பான் தாரகுத்னீ, பைஹகீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

அவற்றில் நஸயீ, பைஹகீ தவிர ஏனைய நூல்கள் நம்மிடம் இல்லை என்று சொல்வதில் நாம் வெட்கப்படவில்லை. தாரகுத்னீ மட்டும் குவைத்தில் இருக்கும் சகோதரர்களுக்கு எழுதி தருவித்திருக்கிறோம். தேவையான கிதாபுகள் இல்லாத நிலையில் தான் வெகு சிரமத்திற்கிடையே நமது பணியைச் செய்து வருகிறோம்.

நஸயீயில் அபூஹிலால் என்பவர் அறிவித்ததாக உள்ளது என்பதை அவர்களும் ஒப்புக் கொண்டே இருக்கிறார்கள். தஃதீப் பாகம் 12, பக்கம்269ல் அபூஹிலால் என்ற பெயரில் இருவரே இடம் பெற்றுள்ளனர். ஒருவர் உமர் இப்னு அப்துல் அஜீஸின் (ரஹ்) பணியாள் மற்ற அபூஹிலாலைப் பற்றிய விமர்சனங்களையே இடம்பெறச் செய்தோம். இந்த அபூ ஹிலால் குறிப்பிட்டுள்ள அஃதரில் இடம்பெற்றிருக்கிறாரா என்று பார்க்காமல் விட்டது எங்களது கவனக் குறைவே அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.

முதல் அஃதரை அபூ ஸலமாலே அறிவிப்பதாக அவர்களும் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தனர். நைலுல் அவ்த்தார் பாகம்2, பக்கம்221 துஹ்ப(த்)துல் அஹ்வதி பாகம் 2, பக்கம் 55 நவவி இமாமின் ­ரஹுல் முஹஃத்தப் பாகம்3, பக்கம்354 ஆகிய நூல்களின் இந்த அஃதர் அபூஸலமாவால் அறிவிக்கப்படுவதாகவே குறிப்பிடப் பட்டுள்ளது. மூல நூலைப் பார்க்காமல் வேறு நூல்களில் ஒரு நூலில் இருப்பதாக அறிவிக்கப்படும் அறிவிப்பை மட்டும் நம்பிச் செயல்படக் கூடாது என்ற படிப்பினைப் பெற்றுக் கொண்டோம். அல்ஹம்துலில்லாஹ்

நஸயீ, துஹ்பதுல் அஹ்வதீ ஆகிய இரண்டு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள அறிவிப்புகளைத் தீர ஆராயாமல் நமது கவனக் குறைவால் எடுத்து எழுதி விட்டோமேயல்லாமல் மனசாட்சிக்கு விரோதமாக எழுதும் எண்ணமோ, சுய கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் தவறான எண்ணமோ கடுகளவும் இல்லை என்பது தெள்ளத் தெளிவான வி­யம். ஏனெனில் இந்த இரண்டு அறிவிப்புகளும் மிக மிக ஆதரப்பூர்வமானது என்று நிலைநாட்டப்பாட்டாலும், பிஸ்மி விடப்படாமல் ஓதப்பட்டதற்குரிய ஆதாரம் தெளிவாக இருக்கிறதேயல்லாமல் சப்தமிட்டு பிஸ்மி ஓதியதற்குரிய ஆதாரம் தெளிவாக இல்லை என்பதே உண்மையாகும்.

மாறுபட்ட சிந்தனைக்கு இங்கு இடமுண்டு என்று அவர்களும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். பிஸ்மி சப்தமின்றி ஓதப்பட்டதால். பிஸ்மி ஓதப்படுகிறதா அல்லது ஓதாமல் விடப்படுகிறதா? என்று மக்களிடையே ஏற்பட்ட ஐயம் காரணமாக கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அளிக்கப்பட்ட பதில்களுமே இந்த அறிவிப்புகள் பிஸ்மி சப்தமின்றி ஓதப்பட்டாலும் அந்த சமயத்திலுள்ள மெளனநிலை, தாடி அசைவு இவற்றைக் கொண்டு பிஸ்மி சப்தமின்றி ஓதப்பட்டதைப் பின்னால் தொழுதவர்கள் அறிந்து கொண்டனர். இந்த விளக்கங்கைள அந்நஜாத் அக்’ 89 பக்கம் 45ல் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.

எனவே இவை அனைத்தும் அஃதர்களின் தரத்தை அறிந்து கொள்வதில் ஏற்பட்ட குழப்பமே அல்லாமல் பிஸ்மியை சப்தமிட்டு ஓதுவதற்குரிய தெளிவான ஒரு ஆதாரமும் இல்லை என்ற எமது முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதைச் சகோதர சகோதரிகள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். பிஸ்மியை சப்தமிட்டு ஓதுவதற்குரிய ஆதாரம் தெளிவில்லாத அஃதர்களின் ஸனதுகளில் ஏற்பட்ட சர்ச்சையைப் பெரிதுபடுத்தி பிஸ்மியை சப்தமிட்டு ஓதுவதற்குரிய பெரும் ஆதாரங்காளகச் சித்தரித்துக் காட்ட முற்பட்டிருப்பது வேதனைக்குரியது.

அவர்கள் தங்கள் ஆட்சேபனையில் தாரகுத்னீயிலும் ஏனைய நூல்களிலும் உள்ள வாசகம் அவர்கள் குறிப்பிட்டுள்ளபடி இருப்பதாகவும் அபூ மஸ்லமாவே அறிவித்திருப்பதாகவும் எழுதி தாரகுத்னீ பாகம் 1, பக்கம் 316ஐ மட்டும் தந்துள்ளனர். எல்லா நூல்களையும் பார்க்காமல் எழுதி விட்டதாக நம்மீது குறைபட்டவர்கள் எல்லா நூல்களையும் பார்த்து அவற்றின் பாகம் மற்றும் பக்கங்களையும் கொடுத்திருந்தால் அவற்றின் பாகம் மற்றும் பக்கங்களையும் கொடுத்திருந்தால் அவர்களைப் பாராட்டலாம். எல்லா நூல்களும் நம்மிடம் இல்லாத குறையே தவிர வேறு காரணம் இல்லை.

அடுத்த இதழிலாவது அஹ்மத், இப்னு குசைமாவில் இடம் பெற்றுள்ள வாசகத்தையும், பாகம் பக்கங்களையும் அவர்கள் அறிவிப்பார்களாக, மேலும் அபூ மஸ்லமா என்றுள்ளதை அபூ ஸலமா என்று நாம் தவறாகக் குறிப்பிட்டுள்ளதை ஹிமாலயத் தவறாகத் தொடர்ந்து சுட்டிக் காட்டும் அவர்களே அல்ஜன்னத் செப்’89 பக்கம் 34 ல் அபூ ஸலமா என்று குறிப்பிட்டிருந்தனரே. அந்தத் தவறை ஏற்று தங்களைத் திருத்திக் கொண்டனரா? இல்லையேல் அதற்குரிய காரணம் என்னவோ? அறியத்தருவார்களா? (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

சுவர்க்கத்தின் வாடையைக் கூட அடைய முடியாதோர்!

அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைவதற்காக கற்க வேண்டிய தொரு கல்வியை உலகப்பொருளைச் சம்பாதிப்பதற்காக ஒருவர் கற்க முற்பட்டால் அவர் மறுமை நாளில் சுவர்க்கத்தின் வாடையைக் கூட அடைந்து கொள்ள மாட்டார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), அபூதாவூத், இப்னுமாஜ்ஜா, அஹ்மத்)

Previous post:

Next post: