மறுமை சிந்தனை

in 1990 பிப்ரவரி

மறுமை சிந்தனை

முஹம்மது சல்மான், சென்னை.

இஸ்லாம் இவ்வுலக வாழ்க்கையை வெறுத்து ஒதுக்குவதற்கு இடமளிக்காமல் அதற்குரிய முக்கியத்துவத்தை அளித்துள்ளது. உலக வாழ்வில் மக்கள் எல்லாத்துறைகளிலும் வெற்றிபெறவேண்டும்; இறைவன் வழங்கியுள்ள படைப்பினங்களை முழுமையாகப் பயன்படுத்தி சமுதாய வாழ்வில் முன்னேற வேண்டும். உலக வாழ்வை ஒதுக்கிடவோ, அலட்சியப்படுத்தவோ இஸ்லாம் கூறவில்லை! ஆனால் மறுமை வாழ்வே மேலான, நிரந்தரமான தெனக் கருதி அதன் வெற்றிக்கு முக்கியத்துவம் அளித்து இம்மை வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். என குர்ஆனும், ஹதீஸும் மக்களை வலியுறுத்துகின்றன.

இவ்வுலக வாழ்விற்கு தகுந்த முக்கியத்துவம் அளித்துள்ள இஸ்லாம், இம்மை வாழ்வை தற்காலிகமானதே என உறுதியாகச் சொல்லுகிறது. மனிதன், தனக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள எல்லா அருட்கொடைகளையும் பயன்படுத்தி, முற்றிலும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதில் அவனுடைய நிலை என்ன? என்று சோதிப்பதற்காகவே நிலையற்ற இம்மையை நல்கியுள்ளான்.

இறை சோதனை எப்படிப்பட்டது?

1    .வியாபாரத்தில் சிறந்து விளங்கி முன்னேறியிருப்பவர் யார்?

2.    விவசாயத்தில் பாடுபட்டு விளைச்சலில் சாதனை படைத்தவர் யார்?

3.    கட்டிடக் கலையில் சிறந்து விளங்கியவர் யார்?

4.    கலாச்சாரத்தில், நாகரீகத்தில் முன்னேறியுள்ளவர் யார்?
என்பவற்றை நிர்ணயிப்பதில்லை இறைச் சோதனையின் நோக்கம்! மாறாக அவனது சோதனை கீழ்வருபவற்றை கணிப்பதாகவே இருக்கும்.

5.     இறைவனுடைய விருப்பத்தை புறக்கணித்து மனிதனுடைய விருப்பதையே ஏற்று இம்மையை விரயமாக்கும் வகையில் தன்னிச்சையோடு வாழ்கிறானா?

6.     இறைவனுக்கு வழிபட்டு ஷைத்தானின் வலையில் விழாது, இறைக்கட்டளைகளை ஏற்று வாழ்கிறானா? அன்றி ஷைத்தானுக்கு அடி பணிந்தவனாக வாழ்கிறானா?

ஆதம் (அலை) அவர்களுக்கு முதலில் இறைவன் ஏவிய கட்டளை இத்தகைய ஒரு சோதனையே!

சோதனைகளில் வெற்றி பெற்றால் மனிதன் மறுமையில் நிறைந்த நிலையான பலன்களைப் பெறுகின்றான். இல்லையயனில் நிரந்தரமான தண்டனைகளுக்கு ஆளாகின்றான் மறுமை ஓரிரு வார்த்தைகளால் விவரிக்கப்படத் தக்கதல்ல. சில வேளைகளில் மட்டும் மறுமையை நினைவு கூர்ந்தால் போதும் என்பதும் சரியல்ல. மாறாக மனிதில் எந்நேரமும் மறுமையைப் பற்றிய சிந்தனை நிலைத்திட வேண்டும்.

இறை உணர்வை உருவாக்கும் மறுமை பற்றிய சிந்தனையைக்களைய இம்மையின் சுக போகங்கள், இம்மையில் வந்தடையும் இழப்புகள் நம் கண்முன் பிரதானமாகத் தோன்றுவன. இம்மையில் இழப்புகளையும் துன்பங்களையும் அவை சிறிய அளவில் ஏற்பட்டாலும் பெரிய அளவில் ஏற்பட்டாலும் நாம் தெளிவாக உணர்கிறோம்; நிலை குலைந்து விடுகின்றோம்.

இம்மை நஷ்டங்கள் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்போது மறுமை சிந்தனை குறைந்துபோக வாய்ப்புண்டு. மறுமையில் ஏற்படவிருக்கும் துன்பங்கள், வேதனைகள் எதையும் நம்மால் உணர முடியவில்லை. மனைவி மக்கள், உற்றார் உறவினர் யாவருமே இம்மைப் பற்றையே ஊக்குவிக்கின்றனர்.

இவ்வுலக சுகபோகத்தில் அவர்களோடு இணைந்து நாம் மூழ்கிவிடுகின்றோம். அதே உறவினர்கள், குடும்பத்தினர், சமுதாயத்தினர் ஆகியோர் உங்கள் மீது வெறுப்பு கொள்ளலாம்.

நான் மறுமையை நம்புகிறேன்! “” மறுமை வெற்றிக்காக வாழ்கின்றேன்” நான் இம்மையின் வெற்றியை விட மறுமையின் வெற்றியையே விரும்புகிறேன்! என்று ஒரு முஸ்லிம் வாயளவில் சொல்லி விடுவது சுலபம். கொள்கையளவில் ஏற்றுக் கொள்வது சிரமமில்லாதது மறுமையின் வெற்றிக்காக வாழ்வது தான் கடினமானது. மறுமை வாழ்விற்காக இப்போது நம்மை தயார் செய்து கொள்ள தனிப்பட்ட முறையிலும், சமூக ரீதியிலும் தொடர்ந்து முயற்சி செய்தால் இவ்வுலக வாழ்க்கையும் சீராக அமையும் .

மறுமையில் உணர்வை தோற்றுவிப்பவை; சிந்தனை வழி செயல்முறை:

சிந்திக்கும் வகையில் குர்ஆன் நமக்கு முதலாவது உபகரணமாக விளங்குகிறது. குர்ஆனின் பல இடங்களில் மறுமைப் பற்றிய வசனங்கள் உள்ளன. இந்த ஆயத்துக்களை கவனமுடன் வாசிக்கும் போது மறுமையைப் பற்றிய சிந்தனை ஏற்படுகிறது.

மறுமையில் கேள்வி கணக்குகள் பற்றிய வசனங்கள், சுவனத்தை விவரிக்கும் வசனங்கள், நரகத்தை சித்தரிக்கும் வசனங்கள், நாம் அவற்றைக் கண் கூடாகக் காண்பதுபோல் அமைந்திருக்கின்றன. இதுவே இறைவசனத்தின் சிறப்பு. இப்படிப்பட்ட வசனங்களுடன் மனம் ஒன்றிவிடும்போது மறுமை நம் முன் காட்சி அளிக்கிறது.

நபிமொழிகள் குர்ஆன் வசனத்திற்கு விளக்கவுரையாக அமைந்துள்ளன. ஹதீஸிலும் மறுமை பற்றிய செய்திகள் நிறைய உண்டு ஹதீஸை ஊன்றிப் படிப்பதன் மூலமாகவும் மறுமை சிந்தனை நம்மிடம் நிலைந்து விடுகிறது. மறுமையைப் பற்றிய சிந்தனை வலுவடைந்து உலக இன்பத்தின் மீதுள்ள மோகம் மிதமடைகிறது. குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் அடுத்தபடியாக மறுமையின் சிந்தனையைத் தூண்டுவது கபுர் (மண்ணறை) மூன்றாம் சாதனமாகவுள்ளது. கபுரைக் காண்பதால் மறுமையின் நினைவு நிச்சயம் வரும் என்பது நபி(ஸல்) அவர்களின் வாக்கு.

மறுமைச் சிந்தனையை ஊட்டவே நபி(ஸல்) அவர்கள் கபுரை ஜியாரத் செய்ய அனுமதித்துள்ளார்கள். ஆனால் இன்று அதன் நோக்கமே திரிந்து விட்டது. கபுரில் மனிதன் நிலை என்ன என்று ஆலோசித்தால் அவன் அங்கு உலகிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறான் என்பது புரியும்.

உலகில் தாம் பெரும் அதிபர்கள் என்று கருதியவர்கள், மகான் என்று கண்ணியப்படுத்தப்பட்டவர்கள், தனவந்தர் என்று மதிக்கப்பட்டவர்கள், ஆட்சியாளர் என்று கவுரவிக்கப்பட்டவர்கள், இவர்களின் நிலைகளைக் காணும்போது எப்படி மறுமை சிந்தனை வராமல் போகும்? நம்முடைய நிலையும் இது தானே என்று எப்படிச் சிந்திக்காமல் இருக்க முடியும்? இது தான் கபுர் ஜியாரத்தின் நோக்கமாக அமைய வேண்டும் . குர்ஆனும், ஹதீஸும், கபுரும் நமக்கு மறுமை பற்றிய சிந்தனையை உருவாக்கவும், நிலை நிறுத்தவும் உறுதுணை புரிபவைகளாக உள்ளன.

செயல் வழி :

ஒவ்வொரு மனிதனும் இம்மை வாழ்வில் பிறந்தது முதல் மரணிக்கும் வரை குடும்ப வாழ்வு, கொடுக்கல் வாங்கல், கல்வி, சமுதாய உறவு, சொத்து விவகாரம் என பற்பல துறைகளில் காரியங்களில் ஈடுபட வேண்டியுள்ளது. இவை யாவற்றிலும் இம்மையை மாத்திரம் மனிதன் அடிப்படையாகக் கொண்டு செயல்படலாம்; மறுமை வாழ்வின் வெற்றியையே இலக்காகக் கொண்டு செயல்படலாம். நமக்கு இன்றியமையாதது மறுமை சிந்தனை. ஆகையினால் நம்முடைய ஒவ்வொரு செயலும் மறுமையின் அடிப்படையில் எழுந்தது தானா என்று அவ்வப்போது சுய விசாரணை (இஹ்திசாப்) செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

இந்த சுய விசாரணையின் பலனாக மறுமையை அலட்சியம் செய்த வகையில் ஏதேனும் ஒரு செயல் மேற்கொண்டிருந்தாலும் உடனே அதை திருத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு திருத்திச் செயல்படு பவர்களின் முன்செய்த பாவங்களை இறைவன் மன்னிப்பதற்குத் தயராக உள்ளான். மறுமையின் சிந்தனை உங்கள் வாழ்வை எந்த அளவுக்கு மாற்றியுள்ளது என்று அளந்து பாருங்கள். நபிவழிப்படி “சுய விசாரணை’ செய்து கொண்டேயிருங்கள். இன்ஷா அல்லாஹ் நீங்கள் மறுமை வெற்றிக்காகவே வாழ்பவர்களாகிவிடுவீர்கள்.

மறுமை சிந்தனையில் சமூக நிலையின் பங்கும் குறைந்ததல்ல. மறுமையை நினைத்து இறைவனை அஞ்சி வாழும் நண்பர்கள் இறைவனின் திருப்தியைப் பெறத்துடிக்கும் நல்லடியார்கள், இறை தூதரின் வழி நடக்கும் லட்சியவாதிகள் இவர்களுடன் தொடர்பை வலுப்படுத்துவதனால் மறுமை சிந்தனை உறுதி பெறும்.

“மேலும் அவர்களில் எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையில் நன்மையை அருள்வாயாக! மறுமையிலும் நன்மையை அளிப்பாயாக! நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்து அருள்வாயாக! என்று வேண்டுவோரும் உண்டு.”   (2:201)\

முஆவியா (ரழி) அவர்கள் தமக்கு சுருக்கமாக ஓர் உபதேசம் செய்யுமாறு ஆயிஷா(ரழி) அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்கள். அதற்கு அவர்கள் பின் வருமாறு பதில் எழுதினார்கள்;

உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக! “எவர் மக்களின் வெறுப்பை(த் தாம் அடைந்து) கொண்டு அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேட முற்படுகிறாரோ, அவருக்கு மக்களால் ஏற்படும் இடையூறுகளுக்கு அல்லாஹ் போதுமானவனாகி விடுகிறான். எவர் அல்லாஹ்வின் வெறுப்பை(த் தாம் அடைந்து) கொண்டு, மக்களின் பொருத்தத்தைத் தேடுகிறாரோ, அவரை அல்லாஹ் (எப்பாதுகாப்புமின்றி) மக்களிடத்திலேயே ஒப்படைத்து விடுகிறான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். (ஆயிஷா (ரழி, திர்மிதீ)

Previous post:

Next post: