ஊருக்கு உபதேசமா?

in 1990 டிசம்பர்

ஊருக்கு உபதேசமா?

    K.M.H. அபூ அப்தில்லாஹ்

ஜமாஅத்துல் உலமா நவம்பர் ’90 இதழில் “நாமடைந்த பெரு நஷ்டம்! பலகோடி மக்கள் இழிநிலையிலிருக்க காரணம் யார்?” என்ற தலைப்பில் சமுதாய மக்களின் சிந்தனைக்கென்று ஒரு ஆக்கம் திருச்சி ரசூல் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.

அக்கட்டுரை நமக்கு எந்த அளவு கடந்த வியப்பையே ஊட்டியது. இறால் மீன் தலைப்பில் மலத்தைச் சுமந்துக் கொண்டு மற்ற மீன்களை வயிற்றில் மலம் சுமப்பதற்காக நையாண்டி செய்வதற்கு ஒப்பான செயல் இது.

சென்ற செப்டம்பர் 29ம் தேதி 15 ஆயிரம் தாழ்த்தப்பட்ட ஹரி ஜன மக்கள் புத்த மதத்தைத் தழுவிய செய்தியையும், சிறந்த சிந்தனையாளராக மக்களால் மதிக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கார் 1956 அக்டோபர் 14ம் தேதி 10 இலட்சம் ஹரிஜன மக்களுடன் புத்த மதத்தைத் தழுவியதையும் குறிப்பிட்டு முஸ்லிம்களை சிந்திக்க வேண்டியிருந்தார். அக்கட்டுரையை எழுதிய திருச்சி ரசூலுக்கும், அதனை இடம் பெற செய்த ஜமாஅத்துல் உலமா ஆசிரியர் மவ்லவி எம்.இ.எம். அபுல் ஹஸன் ஷாதலி சாஹிப் அவர்களுக்கும் அச்சிந்தனை அவசியமில்லையா? என்பதே நமது கேள்வி. மத்திய மாஜி மந்திரி புத்த மதத்தைத் தழுவி தனது பெயரை புத்த பிரியா மோரியா என்று மாற்றி அமைத்துக் கொண்டார். அவர் மேற்படி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசியதாக கீழ்வரும் செய்திகளைத் தந்துள்ளார் திருச்சி ரசூல்.

 “இந்நாட்டில், உயர்ஜாதி ஹிந்துக்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஹரி ஜனங்களாகிய நாங்கள், சுமார் 22 கோடி பேர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ராமஜன்மபூமி – பாபரி மஸ்ஜித். மண்டல கமிஷனின் இட ஒதுக்கீடு ஆகிய பிரச்சனைகளின் காரணமாக, இன்று இங்கு 15 ஆயிரம் பேர்தான் கூட முடிந்தது; இல்லாவிடில், இன்று தேதியில் இரண்டரை இலட்சம் ஹரிஜன் மக்கள் புத்த புதத்தில் இணையத் திட்டமிடப்பட்டிருந்தது. இன்று ஒவ்வொரு பெளர்னமி தினத்தன்றும் இவ்வாறு ஒரு பெரும் தொகையினர் புத்த மதத்தில் தொடர்ந்து இணைந்துக் கொண்டே இருப்போம். இவ்வாறே நாட்டிலுள்ள 22 கோடி ஹரிஜன மக்களும் சிறுகச் சிறுக இவ்வாறே இணைத்துக் கொண்டே வருவோம். இதே ஆக்ரா நகரில் இதே மீனா பஜார் மைதானத்தில் தான் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும். நமது சமுதாயத்தின் தலைமைக் காரியாலயம் ஆக்ராவிலிருந்து வருவதால், நமது மதமாற்றச் செயல்பாடும் இந்நகரிலிருந்து தான் ஆரம்பமாகும்.

 அவர் மேலும் குறிப்பிட்டதாவது:

“நாம் 33 வருட காலத்தை வீணாக்கி பின்னடைந்து விட்டோம்; 1956, அக்டோபர் 14ம் தேதி நமது ஒப்பற்றத் தலைவர், பாபா சாஹிப் அம்பேத்கார், நாக்பூரில் ஒரே சமயத்தில் 10 இலட்சம் ஹரிஜன மக்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். அதே முயற்சியில் நாமும் இணைந்திருந்தோமேயானால் இந்த உயர் ஜாதி ஹிந்துக்களின் கொடுமையிலிருந்து என்றோ விடுபட்டிருப்போம்; நாம் தொடர்ந்து பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு, இந்த மதமாற்றப் பணியைச் செய்து முடிப்போம்”

புத்தமதம் அகிம்சையை போதிக்கும் ஓர் உன்னத மதம்; நாம் இந்நாட்டில் எழும் எந்த பிரச்சனையிலும் கலந்துக் கொள்ள மாட்டோம். நாம் யாரையும் அடிக்கவும் மாட்டோம்; யாரிடமும் அடி வாங்கவும் மாட்டோம்!’

புத்த பிரியா மோரியாவின் பேச்சைக் கொண்டோ, அவர் தனது இனத்தாருடன் புத்த மதத்தில் இணைந்ததைக் கொண்டோ நாம் ஏன் கவலையோ, சந்தோஷமோப் பட வேண்டும்? நமக்கு இதனைக் கொண்டு இலாபமோ, நஷ்டமோ ஒன்றுமில்லையே? என்று நமது முஸ்லிம் சகோதரர்கள் வினா எழுப்பலாம்! உண்மை தான்! அடுத்து

மோரியாவின் தொடர் பேச்சை கொண்டு தான் நாம் எவ்வளவுப் பெரிய நஷ்ட்டத்திற்கு உள்ளாகி விட்டோம் என்பதை எண்ணி மனம் பதைப்பதைக்க வேண்டியிருக்கிறது.

மோரியாவின் தொடர் பேச்சை உங்கள் நெஞ்சங்களை அழுத்திப் பிடித்துக் கொண்டு கேளுங்கள். அவர் கூறுகிறார்;

‘இஸ்லாம் மார்க்கம் ஓர் உன்னத மார்க்கம்; உலகிலேயே அதற்கு ஈடு, இணையாக எந்த மதத்தையும் கூற முடியாது. அழகான அமைப்பு; அருமையான விதிமுறைகள்; ஒப்புயர்வற்ற தலைவர், அதிசயிக்கத்தக்க வேதநூல்; கற்பனையற்ற வரலாறுக் கொண்டது. இஸலாம் சம்பந்தப்பட்ட பல நூற்களைப் படித்து ஆராய்ந்ததில், இஸ்லாம் ஒன்று தான் உலகத்தில் சமத்துவத்தையும். சகோதரத்துவத்தையும் நடைமுறையில் கொண்டு வந்து, இனவெறி, நிறவெறி, ஜாதி வெறி முதலிய எல்லா வெறிகளையும் ஒழித்துக்காட்டி அதில் வெற்றிக் கண்ட மார்க்கம்!

“இவற்றையெல்லாம் நான் ஆராய்ந்த பின், எங்கள் தாழ்த்தப்பட்ட 22 கோடி மக்களையும் இஸ்லாத்தில் இணைக்கவே முடிவு செய்திருந்தேன் ஆனால் என்னுடைய இதர தோழர்கள் இந்த முடிவை ஏற்க மறுத்து விட்டனர். அவர்கள் கூறிய காரணம்:’ இன்று இஸ்லாம் ஏட்டோடுத் தேங்கி விட்டது. பெரும்பாலான முஸ்லிம்களில் செயல்பாடில்லை’ என்று.

“இன்று பெரும்பாலான முஸ்லிம்களிடையே சகோதரப் பந்தம் அறுப்பட்டு நிற்கிறது; சுயநலம் தலைவிரித்தாடுகிறது; சரியான தலைமையில்லாக் காரணத்தால், இந்நாட்டில் எழும் அவர்கள் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சனையும் விரைவில் தீர்க்கப்படுவதில்லை. முஸ்லிம் துவேசம் இந்நாட்டில் மிகவும் அதிகரித்து விட்டதால், முஸ்லிம்களாக நாம் மதம் மாறினால், பலத்த எதிர்ப்பு ஏற்படலாம். ஆக இத்தகைய பல காரணங்களால் புத்த மதத்தைத் தழுவி, ஜாதிக் கொடுமையிலிருந்து விலகி, அமைதியாக வாழ முடிவு செய்து விட்டோம்!”.

இச்செய்திகளை எடுத்து எழுதி விட்டு ‘முஸ்லிம் சகோதரர்களே! என்ன சிந்திக்கின்றீர்களா?” என்ற கேள்வியை எழுப்பி இருக்கும் திருச்சி ரசூலாரிடமும், மவ்லவி எம்.இ.எம். அபுல் ஹஸன் ஷாதலி அவர்களிடமும் நாம் விடுக்கும் கேள்வி, “நீங்கள் முதலில் இது விஷயமாக சிந்தித்தீர்களா? என்பது தான்.

அறிஞரான டாக்டர் அம்பேத்காரையும், இன்றுள்ள ஹரிஜன அறிஞர்களையும் இஸ்லாத்தைத் தழுவுவதை விட்டும் தடுத்து நிறுத்தியது, ஹிந்துக்களிடையேக் காணப்படும் வர்ணா  சிரமம் போல் முஸ்லிம்களிடையேக் காணப்படும் மத்ஹபு மற்றும் தரீக்கா பிரிவுகளுமேயாகும். சுமார் 1000 வருடங்களில் ஊறிப்போன மத்ஹபு வேறுபாடுகள், இன்னும் பல ஆயிரம் வருடங்களுக்குப் பின்னால் ஜாதிப் பிரிவுகளாக பரிணாம வளர்ச்சிப் பெற்று விடும் என தாழ்த்தப்பட்ட மக்கள் அஞ்சுவதற்கும் தகுந்த முகாந்திரமும் சாத்தியக் கூறும் இல்லாமலில்லை, என திருச்சி ரசூலாரும், மவ்லவி அபூல் ஹஸன் ஷாதலியும் சிந்திக்க வேண்டாமா?

முஸ்லிம் சமுதாயத்தை மத்ஹபுகளாலும் தரீக்காக்களாலும் கூறுப் போட்டுப் பிளவுப்படுத்திக் கொண்டு  நாங்கள் தான் உண்மை முஸ்லிம்கள் – அஹ்லு சுன்னத்வல் ஜமாஅத் என்று ஆர்ப்பரிப்பவர்களைத்தான்  இன்று இஸ்லாம் ஏட்டோடு தேங்கி விட்டது. பெரும்பாலான முஸ்லிம்களில் தானே முகல்லிதுகளாகிய திருச்சி ரசூலும், மவ்லவி அபுல் ஹஸன் ஷாதலியும் ஐக்கியம் ஆகி உள்ளனர். பின் யாரை சிந்திக்க வேண்டுகிறார்கள்?

“இஸ்லாம் ஏட்டோடு  தேங்கி விட்டது’ என்று மாஜி மந்திரி கூறியுள்ளதின் பொருள் என்ன? மார்க்கத்தின் அடிப்படைகளான குர்ஆனையும், ஹதீஸையும் செயல்படுத்துவதை விட்டும், அவற்றிற்கு முரணாக முல்லாக்களால் (கண்ணியத்திற்குரிய இமாம்களல்ல) கற்பனையாக கட்டி விடப்பட்டுள்ள  பிக்ஹு நூல்களைத் தானே இவர்கள் வேத நூல்களாக ஏற்று செயல்படுகிறார்கள் மவ்லவி ஜகரிய்யா, சாஹிப் பலகீனமானது, இட்டுக்கட்டப்பட்டதுமான ஹதீஸ்களைக் கொண்டு நிரப்பி எழுதிய அமல்களின் சிறப்பு’ என்ற கற்பனைக் கதை வழியும் நூலையே “தப்லீகின்’ மூலம் வேதநூலாக மக்களுக்கு எடுத்தோதி வருகின்றார்கள்.

ஆக, குர்ஆன் போதனைகளையும் உண்மை ஹதீஸ்களையும் புறக்கணித்துவிட்டு அவைகளின் பெயரால் மனிதக் கற்பனைகளான கட்டுக் கதைகளை மார்க்கமாக செயல்படுத்திக் கொண்டு “மோரியாவின்  தொடர் பேச்சை உங்கள் நெஞ்சங்களை அழுத்திப் பிடித்துக் கொண்டுக் கேளுங்கள் என்று மற்றவர்களைப் பார்த்து சொல்ல இவர்கள் வெட்கப்பட வேண்டாமா? குர்ஆனும் ஹதீஸும் தூயவடிவில் நம்மிடையே இன்றும் இருக்கும் நிலையில் முன்னோர்களின் மீதுள்ள மூட பக்தியால் அவர்களின் மார்க்கத்திற்கு முரணான செயல்களைப் பின்பற்றும்படியா குர்ஆனும் ஹதீஸும் போதிக்கின்றன? கைப்புண்ணுக்கு கண்ணாடித் தேடும் இவர்களே “நாமடைந்த நஷ்டம்” எனப் புலம்புவதின் அர்த்தமென்ன?

ஜ. உலமா ஆசிரியர் தனது டிசம்பர் தலையங்கத்தில் எழுதியுள்ளது மேலும் வேடிக்கையாக இருக்கிறது. ஒருக்கால் வயது முயற்சியால் அவ்வாறு எழுதுகிறாரோ என்னவோ? இமாம்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ள போலிச்சட்டங்களை மத்ஹபுகளின் பெயரால் அவர்கள் செயல்படுத்திக் கண்டு, அதே சமயம் குர்ஆனின் 7:3 வசனப்படி மத்ஹபுகளை விட்டு விலகி குர்ஆன், ஹதீஸை மட்டம் செயல்படுத்துகிறவர்களை “லா” மத்ஹபிகள் என்றும் குழப்பவாதிகள் என்றும் எழுதி மக்களை திசை திருப்ப முயன்றுள்ளார்.

குர்ஆனையும், ஹதீஸையும் துச்சமாக மதித்து மனிதர்களால் யூகம் செய்யப்பட்டுள்ள பிக்ஹு சட்டங்களைச் செயல்படுத்தும் அவர் குர்ஆன், ஹதீஸை மட்டுமே செயல்படுத்துகிறவர்களைப் பார்த்து, குர்ஆனையும், நபி(ஸல்) அவர்கள் போதனை, நடைமுறைகளையும் துச்சமாக மதித்து அதற்கு ஆதாரமில்லை. இந்த ஹதீஸுக்கு ராவிகள் சரியில்லை என்று கூறி மார்க்க அறிவையே ஒழித்துவிட அழித்து விட துணிந்து சிலர் நடமாடுகின்றனர் என்று குற்றஞ்சுமத்தி இருப்பது திருடன் நல்லவர்களை திருடன் என்று குற்றஞ்சுமத்துவது போல் இருக்கிறது.

சுமார் 1000 வருடங்களுக்கு முன்பே ஹதீஸ் கலாவல்லுநர்கள் ஒவ்வொரு ஹதீஸையும் தீர ஆராய்ந்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள், பலவீனமான ஹதீஸ்கள், இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் என தெளிவாக தரம் பிரித்து எழுதி வைத்திருப்பதையும், சுமார் ஐந்து லட்சம் ராவிகளின் தராதரங்களையும் தெளிவாக ஆராய்ந்து எழுதி வைத்திருப்பதையும் அவற்றையே நாங்கள் எடுத்து எழுதி மக்களை உண்மைகளை உணரச் செய்கிறோம் என்பதையும் இந்த தள்ளாத வயதிலும் ஜ.உலமா மவ்லவி ஆசிரியர் அறியாதிருப்பது நாம் மவ்லவிகள் பற்றியும், அரபி மதரஸாக்கள் பற்றியும் எழுதியுள்ளதற்கு ஆதாரமாகவே அமைந்துள்ளது.

அந்த ஹதீஸுக்கு ஆதாரமில்லை, இந்த ஹதீஸுக்கு ராவிகள் சரியில்லை என்று இன்று நாங்கள் புதிதாகச் சொல்லுவதுப் போல் குற்றப்படுத்தி எழுதியிருப்பது ஒன்று அவரது அறியாமையாக இருக்க வேண்டும். அல்லது துணிந்து எம்மீது அவதூறு கூறுவதாக இருக்க வேண்டும். அவர்களே ஒப்புக் கொள்ளும் ஹதீஸ் நூல்கள், மற்றும் ராவிகள் பற்றிய நூல்களிலேயே அவர் மேடைகளிலும் மற்றும் நிகழ்ச்சிகளிலும் எடுத்துக் கூறி வரும் ஹதீஸ்களில் பெரும்பாலானவை, இட்டுக்கட்டப்பட்டவை என 1000 வருடங்களுக்கு முன்பாகவே பதிவு செய்யப்பட்டுத் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதை நம்மால் நிரூபிக்க முடியும்.

மேலும் புதுப்புது ஜமாஅத்துக்களையும், அவற்றிற்காகத் தனி தனிப் பள்ளிகளையும், அமைத்து வருவதை நாங்கள் மிக வன்மையாகக் கண்டித்து வருகிறோம் என்பதையும், சமுதாயத்தை ஓரணியில் ஒன்றுப்படுத்தவே முயற்ச்சித்து வருகிறோம் என்பதையும் அந்நஜாத்தைப் படிக்கும் சாதாரண வாசகர்களும் நன்கு அறிவார்கள். அவர் தனது டிசம்பர் இதழ் முன் அட்டையில் எடுத்து எழுதியுள்ள 42:13 குர்ஆன் வசனத்தை மதித்து முஸ்லிம்கள் சிதறுண்டு விடாமல் ஓரணியில் செயல்படத்தவே முயற்சி செய்து வருகிறோம். மவ்மலவி அபுல் ஹாஸன் ஷாதலி, திருச்சி ரசூலார் போன்றவர்களே மத்ஹபுகளின் பெயரால் முஸ்லிம்களை நான்கு பிரிவுகளாகக் கூறுப் போட்டு வழிக் கெடுப்பதன் மூலம்  42:13 வசனத்தையும் மற்றும் பல குர்ஆன் வசனங்களையும் துச்சமாக மதித்துச் செயல்பட்டு வருகின்றனர் என்பதை இங்கு சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

மவ்லவி அபுல் ஹஸன் ஷாதலியும், திருச்சி ரசூலாரும் எனது நீண்டக் கால நெருங்கிய நன்பர்கள் என்ற உரிமையில், அவர்களின் நலனையும் ஈடேற்றத்தையும் நாடி, அவர்களுக்கு கவனமூட்டுகின்றோம்.

1400 வருடங்களுக்கு முன்னரே நிறைவுப்பெற்ற இஸ்லாம் செயல்படுத்திக்காட்டப்பட்டு விட்டது. அதற்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் சுயநல முல்லாக்களால் பலவந்தமாக முஸ்லிம்களிடையே திணிக்கப்பட்ட மத்ஹபுகளும், தரீக்காக்களும் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணானவை; முஸ்லிம்களைக் கூறுப் போட்டு பிளவுப்படுத்தி சின்னாபின்னாப்படுத்துபவை; இஸ்லாத்தை ஏட்டுடன் முடங்க செய்துவிட்டு தங்களின் கற்பனைகளை மார்க்கமாக கற்ப்பித்து ஆதாயம் அடையும் முல்லாக்களின் சூழ்ச்சி, மறைக்க முடியாத இந்த யதார்த்த நிலையை உண்மையிலேயே உணர முடியாமல் திருச்சி ரசூலாரும், மவ்லவி அபுல் ஹாஸன் ஷாதலியும், மத்ஹபுகளையும் தரீகாக்களையும் ஆதரிப்பவர்களாக இருந்தால் அவர்களுக்காக அனுதாபப்படுகிறோம். அவர்களுக்காக நாம் அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம்.

ஆணால் உண்மையை உணர்ந்தும், வாழ்நாளெல்லாம், மக்களிடையே அவற்றையே சரியானவை, நேரானவை என போதித்து விட்டு கடைசிக் காலத்தில் அவை தவறானவை என்று எடுத்துரைக்க அவர்களின் போலித் தன்மானமும் மக்களிடமிருந்து அவர்கள் பெறும் இழக்க நேரிடுமே என்ற அர்த்தமற்ற பயமும் உண்மைகளை மக்கள் முன் எடுத்துரைக்க இவர்களைத் தடுக்குமேயானால் அவர்கள் அறிய கூறுவது;

இவ்வுலகம் அழிந்துப் போகக் கூடியது, மறுமையே நித்தியமானது, அற்பமான இவ்வுலக ஆதாயங்களுக்காகவும், போலி கவுரவத்திற்காகவும், மறுமையை நஷ்ட்டப்படுத்திக் கொள்பவன் உண்மை அறிஞன் அல்ல. எனவே திருச்சி ரசூலாரும், மவ்லவி அபுல் ஹாஸன் ஷாதலியும், அவர்களின் தவறான போக்கை உணர்ந்து திருந்தி செயல்பட வேண்டும். அதற்கு அவர்கள் தயாராக இல்லை என்றால், குறைந்த பட்சம் நாளை மறுமையில் அல்லாஹ்வின் தர்பாரில் நாம் இந்த அழைப்பை அவர்கள் நமது நீண்ட கால நண்பர்கள் என்ற அடிப்படையில் கடமையுணர்வோடு அவர்கள் முன் வைத்ததற்கு சாட்சி சொல்ல வேண்டி வரும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்கே நேர்வழிக் காட்டுகின்றான்.

***********

இது (குர்ஆன்) மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டதாகவும், உறுதியான நம்பிக்கையையுடைய சமூகத்தாருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.    (45:20)

Previous post:

Next post: