ஜமாஅத்துல் உலமா (சபை)  ஓர் ஆய்வு

in 1990 நவம்பர்

ஜமாஅத்துல் உலமா (சபை)

 ஓர் ஆய்வு

 அபூ பாத்திமா

சென்ற இதழில் இன்றைய ‘மதரஸாக்கள் ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் மார்க்கத்திற்கு சொந்தம் கொண்டாடும் மவ்லவிகளின் உண்மை நிலைகளை விரிவாக பார்த்தோம். இந்த இதழில் அந்த மவ்லவிகளின் சபையாகிய ஜ.உ.ச பற்றி விரிவாக ஆராய்வோம்.

ஜ.உ.ச தோன்றிய காலம் :

தமிழகத்திலுள்ள முகல்லிது மவ்லவிகளின் ஜ.உ.ச சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்டதாகும். அதுவன்றி தவ்ஹீது மவ்லவிகளின் ஜ.உ.ச 1987-ல் அமைக்கப்பட்டதாகும். ஜ.உ.ச என்றால் அதன் மறுப்பெயர் புரோகிதர்களின் சபை என்பதாகும். அவர்கள் மார்க்கத்தைச் சொல்லும் உயர்ந்த அந்தஸ்துடைய கூட்டம். மற்றவர்கள் அவாம்கள் – பாமரர்கள் என்ற நிலையில் வாய் பொத்தி பாது தாழ்த்தி அவர்கள் சொல்வதை அப்படியே சிந்திக்காது மார்க்கமாக ஏற்று செயல்பட வேண்டும். மவ்லவிகள் மதரஸாக்களில் சில வருடங்களைக் கழித்த ஒரேக் காரணத்தால் அவர்கள் ஆலிம்கள். அவர்களுக்கு குர்ஆன், ஹதீஸ் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதே சமயம் அப்படி மதரஸாக்களில் காலம் கணிக்காதவர்கள் குர்ஆன், ஹதீஸை திறம்பட விளங்கும் ஆற்றல் பெற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் அவர்கள் தாம். ஒரு போதும் ஆலிம்களாக முடியாது.

மார்க்கத்தை வைத்து வயிறு வளர்ப்பது மட்டுமல்ல புரோகிதம். நாங்கள் மவ்லவிகள்-ஆலிம்கள், அதனால் உயர்ந்தவர்கள், எனவே மற்றவர்கள் எங்களை உயர்ந்நதவர்களாக மதித்து நாங்கள் சொல்வதை நம்பிச் செயல்பட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதும் புரோகிதம் தான். உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்ற ஏற்றத்தாழ்வு முற்றாக நீங்கி சமத்துவ சமுதாயம் உருவாகும் போதுதான் புரோகிதம் முற்றாக நீங்கி சமத்துவ சமுதாயமம் உருவாகும் போதுதான் புரோகிதம் முற்றாக ஒழிந்து, ஆரோக்கியமான நிலை இந்த சமுதாயத்தில் ஏற்படும். அப்படிப்பட்ட ஆரோக்கியமான ஒரு நிலை உண்டாகாமல் தடுப்பதே ‘ஜமாஅத்துல் உலமா’ சபையின் நோக்கமாக இருக்கிறது.

இப்படி ஒரு பிரிவுக்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா? என்று குர்ஆன், ஹதீஸ் கொண்டு ஆராய்வோம்.

 ஜ.உ.ச. வுக்குரிய ஆதாரங்களா?

‘உங்களிலுள்ள விசுவாசிகளுக்கும், கல்வி ஞானம் உடையவர்களுக்கும் பதவிகளை உயர்த்துவான்’   (58:11)

 ‘நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில், அல்லாஹ்வை அஞ்சுபவர்களே (உலமாக்கள்) கல்விமான்களாகும்”   (35 :28)

 அல்லாஹ்வை அஞ்சுங்கள், அல்லாஹ் உங்களுக்கு கற்றுக் கொடுக்கின்றான்’   (2:282)

 ‘கற்றவர்களும், கல்லாதவர்களும் சமாமாவார்களா?    (39:9)

‘குருடனும், கண்ணுள்ளவனும் சமமாவார்களா?   (13:16)

 ‘ எவரொருக்கு அல்லாஹ் நன்மையை நாடி விட்டானோ அவரை, தீனில் அறிவாளியாக ஆக்கி விடுகிறான்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (புகாரீ)

‘மனிதர்களே! கல்வி என்பது கற்பதுக் கொண்டு தான் உண்டாகும். விளக்கம் என்பது விளங்கித் தேடினாலே கிடைக்கும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.     (தப்ரானீ)

இன்னும் இவை போல் பல குர்ஆன் வசனங்களுக்கும், ஹதீஸ்களுக்கும் கிடைக்கலாம். ஆனால் இந்த வசனங்கள், ஹதீஸ்கள் அனைத்தும் கற்றவர்களுக்கு அந்தஸ்த்துண்டு, சிறப்புகள் உண்டு என்று விளங்குகின்றனவே அல்லாமல், சமுதாயத்தில் ‘ஜமாஅத்துல் உலாமா” என்று ஒரு கற்றவர்கள் பிரிவை உண்டாக்கிக் கொள்ள அனுமதிப்பதாக தெரியவில்லை. சுவர்க்கவாதிகளுக்கு தனி அந்தஸ்து உண்டு, தனிச் சிறப்புகள் உண்டு என்று குர்ஆன் வசனங்கள் இருக்கின்றன.

சுவர்க்கவாதியும், நரகவாதியும் ஒரு போதும் சமமாக மாட்டார்கள் என்ற கருத்துள்ள குர்ஆன் வசனங்களைப் பார்க்கலாம். நம்பிக்கை (ஈமான்) கொண்டு, (சாலிஹான) நல்லமல் செய்கிறவர்கள் சுவர்க்கத்தை அடைவார்கள் என்ற கருத்துப்பட குர்ஆன் வசனங்கள் இருக்கின்றன. இந்தக் கருத்துக்களையுடைய ஹதீஸ்களையும் பார்க்கலாம். ஆனால் இவற்றை ஆதாரமாகக் காட்டி சுவர்க்கத்து ஜமாஅத் என்று ஒரு ஜமாத் அமைத்துக்கொள்ள முடியுமா?

ஒரு போதும் முடியாது. கபுருவணங்கிகள் எப்படிச் சில குர்ஆன் வசனங்களைத் திரித்துக் காட்டி தங்கள் தேவைகளைக் கபுருகளில் போய் கேட்கலாம் என வாதாடுகிறார்களோ? முகல்லிதுகள் எப்படி சில குர்ஆன் வசனங்களை திரித்துக் காட்டி தக்லீது செய்யலாம் என்று சொல்கிறார்களோ? தரீக்காவாதிகள் எப்படிச் சில குர்ஆன் வசனங்களை திரித்துக் காட்டி தாங்கள் செய்து வரும் திக்ரு முறைகளை நியாயப்படுத்தி வருகிறார்களோ?

இதேப் போல் சில குர்ஆன் வசனங்களைத் திரித்துக் காட்டி ‘ஜமாஅத்துல் உலமா’ அமைத்துக் கொள்ள தவறான முறையில் வாதிடுவதாகவே சொல்லமுடியும். மற்றபடி இவர்கள் சொல்வதுப் போல் அந்த வசனங்கள் ஜமாஅத்துல் உலமா அமைத்துக் கொள்ள தவறான முறையில் வாதிடுவதாகவே சொல்லமுடியும். மற்றபடி இவர்கள் சொல்வதுப் போல் அந்த வசனங்கள் ஜமாஅத்துல் உலமா அமைவதற்கு ஆதாரங்களாக இருப்பதால், நபி(ஸல்) அவர்கள், அழகாக அமைத்துக் காட்டி இருப்பார்கள். அப்படி அமைத்துக்காட்டக் கடமைப்பட்டவர்களும் நபி(ஸல்) அவர்களே.

 தாருந் நத்வா!

மேலும் இன்றைய சூழ்நிலையை விட அன்றைய சூழ்நிலையில் ‘தாருந் நத்வா’ என்ற கற்றவர்கள் சபைக்குப் போட்டியாக, குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான ஒரு கற்றவர்கள் சபை மிகமிக  அவசியமாக இருந்தது என்று சொல்லலாம். அப்படி ஒரு கற்றவர்கள் சபை அமைக்கப்பட்டதா? ஏன் ஆதாரங்களைத் தேடினால், நபி(ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன் கி.பி 440ல் – கஃபாவின் வடக்குப் பகுதியில் நபி(ஸல்) அவர்களின் பாட்டனாரின், பாட்டனாரின் தந்தை குசை என்பவராலேயே ஸ்தாபிக்கப்பட்டு, சீரோடும், சிறப்போடும் நடந்து வந்த கற்றவர்களின் சபையான “தாருந்நத்வா” என்ற அமைப்பை, இஸ்லாம் இருந்த இடம் தெரியாமல் ஆக்கியது, ஒழித்துக்காட்டியது என்ற ஆதாரங்களைத் தான் பெற முடிகின்றது.

காரணம் நபி(ஸல்) கொண்டு வந்த சத்திய இஸ்லாத்தை  எதிர்த்ததே. மக்களை எதிர்க்கத் தூண்டியதே இந்த ‘தாருந்நத்வா” என்ற கற்றவர்களின் சபைதான். கற்றவர்களின் சபை என்றாலே, ஜமாஅத்துல் உலமா” என்றாலே அதன் மறு அர்த்தம் புரோகிதர்களின் சபை, மக்களைக் கூறுப் போட்டு வயிறு வளர்க்கும் சபை என்பது தான். இந்தக் கற்றவர்களின் சபையால் இஸ்லாத்திற்கு அன்றும் கேடுதான் உண்டாகியது. இன்றும் உண்டாகிக் கொண்டிருக்கிறது. இனி நாளையும் கேடு தான் உண்டாகும்.

“இஸ்லாம்” ஆரோக்கியமாக, இருக்க வேண்டுமென்றால் கல்லாதவனைப் பிரித்துத் தாழ்த்திக் காட்டும் கற்றவர்களின் சபைகள் இல்லாமல் ஆக்கப்பட வேண்டும். அதனால் தான் நபி(ஸல்) அவர்கள் தன் கொள்ளுப்பாட்டன் குசையால் ஸ்தாபிக்கப்பட்டு ஆறு தலைமுறைகளாக சிறப்போடு இருந்து வந்தது. தனது குடும்பப் பெருமைக்குரிய ‘தாருந் நத்வா’ என்ற கற்றவர்கள் சபையை இருந்த இடம் தெரியாமல் ஆக்கினார்கள். அதன் அங்கத்தினர் இழிவாக்கப்பட்டார்கள்.

நாங்கள் தான் கற்றவர்கள், எங்களுக்கென்று ஒரு தனி அந்தஸ்து இருக்கிறதென்ற வரட்டு கவுரவத்தை மனப்பூர்வமாக விட்டு, மிகக் கேவலமாக மதித்து வந்த எழுதப்படிக்கத் தெரியாத ஹபஷி அடிமை பிலால்(ரழி) அவர்களை “எனது தலைவரே” என்று உளமாற அழைக்கும் பண்பைப் பெற்ற உமர்(ரழி) அவர்களைப் போன்ற ஓரிருவரே இஸ்லாத்தைத் தழுவி ஈடேற்றம் பெறும் பாக்கியம் பெற்றார்கள். எஞ்சியோர் அனைவரும் கற்றோராக இருந்தும் அரபி இலக்கண இலக்கியங்களில் தலைச்சிறந்த  விற்பன்னர்களாக இருந்தும், அரபி மொழியின் கலைகள் அனைத்தும் கற்றிருந்தும். வெற்றிப் பெற்றார்களா? என்றால் இல்லை. அவர்கள் அரபி மொழியில் பண்தர்களாக இருந்தும் வடிகட்டிய மடையர்கள் என்று இஸ்லாமிய உலகம் அவர்களுக்குப் பட்டம் சூட்டியது.

காரணம் அவர்கள் சமுதாயத்தில் தங்களுக்கென்று ஒரு தனி அந்தஸ்தையும், உயர்வையும் எதிர்ப்பார்ப்பது தான். ஆம்! சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வை விரும்புகிறவர்கள், மக்கள் தங்களை உயர்வாக மதிக்க வேண்டும். தாங்கள் சொல்வதை நம்பிச் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இந்த தாருந்நத்வா மனம் படைத்தவர்களாகத்தான் இருக்க முடியும்.

குர்ஆன் வசனங்களையும் நபி(ஸல்) அவர்களின் போதனைகளையும் தெளிவாக விளங்கிக் கொண்டவர்கள் பெரும்பாலும் எழுதப் படிக்கத் தெரியாத சாதாரண அறிவுப் படைத்த மக்களே அல்லாமல், அரபி மொழி பாண்டித்தியமும், இலக்கண இலக்கிய விற்பன்னர்களுமல்ல.

இந்த மறுக்கமுடியாத உண்மையை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நபித்தோழர்களிடையே ஆலிம் – அவாம் என்ற நிலை இருக்கவில்லை!

நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாகவும், மார்க்க அறிவை நிறைவாகப் பெற்றவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள். அவர்கள் தங்களுக்கென்று ஒரு கற்றவர்களின் சபை அழைத்துக் கொண்டு, நபித்தோழர்களில் பிரிவை உண்டாக்கி, ஏற்றத் தாழ்வைக் கற்ப்பிக்கவில்லை. மாறாக, இது மாபெறும் தவறு என்று விளங்கி, எழுதப்படிக்கத் தெரியாதவர்களாயும், மார்க்க அறிவில் குறைந்த அந்தஸ்துடையவர்களாக இருந்தவர்களையும் தங்களுக்குச் சமமாகவே மதித்து நடந்தார்கள் என்பதையே ஆதாரங்கள் மூலம் அறிகிறோம்.

அதற்கு மாற்றமாக நபித்தோழர்களிடையே ஒரு சிறு கூட்டம் சொல்ல, இன்னொரு பெருங்கூட்டம் நம்பிச் செயல்படும் நிலையிலும், ஏற்றத்தாழ்வு இருந்திருந்தால், அதற்குரிய ஆதாரங்களைத் தரட்டும். அதை விட்டு மனித யூகங்களை மார்க்கத்தில் நுழைக்க முற்பட வேண்டாம். ‘அஸ்ஹாபுஸ்ஸுஃப்பா’ கற்றவர்களில் சபை அல்ல. ஒரு கூட்டம் ஓர் இடத்தில் இருந்துக் கொண்டு குர்ஆன், ஹதீஸைக் கற்றுக் கொள்ள, இதை ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம். கற்றவர்களின் சபைக்கு இதை ஆதாரமாக எடுக்க முடியாது.

உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) நன்மையின்பால் அழைத்து, ஏவித் தீயவற்றிலிருந்து விலக்கிக் கொண்டிருக்கவும், இத்தனையோர் தான் வெற்றி பெற்றோர்.      (அல்குர்ஆன் 3: 104)

இந்த குர்ஆன் வசனப்படி ஆலிம், அவாம் என்ற பாகுபாடின்றி ஒரு கூட்டம் மக்களுக்கு மத்தியில் நலனை ஏவித் தீமையைத் தடுக்கும் சேவை செய்ய வேண்டும். ஆயினும் தங்களுக்கென்று ஒரு தனிப்பெயர் சூட்டிக் கொள்ளக்கூடாது. ஆக ஒரு கூட்டம் ஒரு சகை எந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதற்கும் அல்லாஹ்(ஜல்) தெளிவான விளக்கத்தைத் தந்துவிட்டான். கற்றவர்கள் சபை’ அமைக்க இடமிருந்தால் ‘இத்தகையோர் தான் வெற்றி பெற்றோர்’ என்பதற்கு பதிலாக இவர்கள் கற்றவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளலாம் என்று அல்லாஹ் சந்தேகத்திற்கு இடமின்றி கூறி இருப்பான்.

மேலும் ‘என்னைப் பற்றி ஒரு விஷயம் தெரிந்தாலும் அதனைப் பிறருக்குச் சொல்லவும்’ என்ற நபி(ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் சொல்வதும், கேட்பதும் பரஸ்பரம் உள்ளதே அன்றி ஒரு கூட்டம் சொல்லி, இன்னொரு கூட்டம் கேட்பது என்ற நிலை இல்லை என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றது. மார்க்க விஷயத்தில் ஒரே ஒரு விஷயத்தைத் தெரிந்துக் கொண்டவனை யாரும் ஆலிம் என்று ஏற்றுக் கொள்வதில்லை. ஆயினும், அவர் அறிந்திருக்கும் அந்த ஒரு விஷயத்தையும் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்றே நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

ஆலிம்களுக்கு அளவுகோல் சரியா?

அடுத்து ‘ஜமாஅத்துல் உலமா’ அமைக்கத் துணிபவர்களிடம் இருக்கக் கூடிய ஆலிம்களுக்குரிய அளவுகோலும் தவறான அளவு கோலேயாகும். அரபி மதரஸாக்களில் சில ஆண்டுகள் செலவிட்டிருப்பதே இவர்களிடத்தில் ஆலிம்களுக்குரிய அளவுக் கோலாக இருக்கிறது. அரபி மதரஸா சென்றிருந்தால் அவர் ஆலம். இல்லை என்றால் அவர் ஆலிம் இல்லை. வினோதமாக இல்லை. ஆம்! ‘ஸனது’ இருந்தால் அவருக்கு அரபி வாசிக்கத் தெரியாவிட்டாலும் பராவாயில்லை. ஏன்?

குர்ஆன், ஹதீஸ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. அவர் ஆலிம்! அரபி மதரஸாக்களின் ‘ஸனது’ என்ற காகிதப் பட்டமே அவர்களிடத்தில் ஆலிமுக்குரிய அளவுக்கோல். அதனால் தான் அதுப் பறிக்கப்படுகிறது என்று தீர்மானம் பொட்டவுடன் பதறுகிறார்கள்-ஆம்! ஆலிம் என்ற சொல்லிக் கொள்ள அந்தக் காகிதப் பட்டத்தைத் தவிர வேறு எவ்வித தகுதியும் அவர்களிடம் இல்லையே?

இவர்களது அகராதியில் அரபி மதரஸாக்களில் சில ஆண்டுகள் செலவிட்டார்கள் அனைவரும் ஆலிம்கள் – அறிந்தவர்கள். அப்படி மதரஸாக்களில் காலத்தைச் செலவிடாதவர்கள் அவாம்கள். அறியாதவர்கள் – இது அறிவுக்கும் பொருந்துகிறதா? என்று சிந்தித்துப் பாருங்கள் – உண்மை என்ன? ‘ஸனது’ பட்டம் வாங்கியவர்களிலும் ஆலிம்கள் – அவாம்கள் ஏன் ஜாஹிலும் இருக்கிறார்கள். -அதேப் போல் மதரஸாப் பக்கம் போகாதவர்களிலும் ஆலிம்கள், அவாம்கள், ஜாஹில்கள் இருக்கிறார்கள்.

அரபிப் படித்தவர்கள் எல்லாம் ஆலிம் ஆகிவிட முடியாது. அரபிப் படிக்காதவர்கள் எல்லாம் அவாம் ஆகிவிட முடியாது. அரபிப் படித்திருந்தாலும் படிக்காதிருக்காவிட்டாலும் மார்க்கத்தை அதாவது குர்ஆனையும், ஹதீஸையும் சரியாகவும், முறையாகவும் அறிந்தவர்கள் ஆலிம்கள் ஆயினும் யார் யார் ஆலிம், யார் ஆலிம் இல்லை என்பதை அல்லாஹ்வே அறிவான். மனிதன் உறுதியாகப் பிரிந்து அறிய முடியாது.

ஆனால் எங்கு கற்றவர்கள் சபை அமைக்கப்படுகிறதோ? ‘ஜமாஅத்துல் உலமா’ அமைக்கப்படுகிறதோ? அங்கு மார்க்கத்தை விட மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சமயங்களில் அது மொழி வெறியாகவும் மாறுகிறது. ‘அபூ அப்தில்லாஹ்வுக்கு அரபியில் சில வரிகளாவதுப் படிக்கத் தெரியுமா? அரபி கிதாபுகளின் அட்டையையாவது பார்த்திருக்கிறாரா? என்று ஜமாஅத்துல் உலமா முன்னால் மாநில செயலாளர் கேட்டதும், சில பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகளும் தவ்ஹீத் மவ்லவிகளும் இவ்வாறு நையாண்டி செய்ததும் இதனையே நிரூபிக்கின்றன.

1987 ல் மதனிகளும் உலவிகளும் அபூ அப்தில்லாஹ்வுக்கு அரபி தெரியாததால் அந்நஜாத் ஆசிரியர் குழுவில் இடம் பெறவேக் கூடாது என பிடிவாதம் பிடித்தது நமதுக் கூற்றுக்கு தக்க சான்றாகும். இந்த மொழி வெறி தான் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த கற்றவர்களை தாருந்நத்வா’ சபையினரை, எழுதப் படிக்கத் தெரியாத இந்த முஹம்மது சொல்வதை நாம் கேட்பதா? என்று குருட்டு வாதம் செய்ய வைத்து, குர்ஆனையும், ஹதீஸ்களையும் விளங்கி சத்திய இஸ்லாத்தை ஏற்று உண்மை முஸ்லிம்களாக வாழத் தடையாக இருந்தது. இப்போதுள்ள ‘ஜமாஅத்துல் உலமா’ சபையாலும் அதே நிலையே நீடிக்கிறது. தவ்ஹீத் மவ்லவிகளின் ‘ஜமாஅத்துல் உலமா’ நிலையும் அதனையே பிரதிபலிக்கிறது. ஆகவே நியாய உள்ளம் படைத்தவர்கள், உள்ளச்சம் உடையவர்கள் இப்படிப்பட்ட ‘ஜமாஅத்துல் உலமா’ சபைகளுக்கு துணைப் போகவே மாட்டார்கள்.

புதிய ஜ.உ.ச அமைக்கக் கூறும் காரணம் சரியா?

மேலும் தவ்ஹீத் மவ்லவிகள் ‘ஜமாஅத்துல் உலமா’ அமைப்பது பற்றி கூறும் காரணமும் ஏற்க முடியாததாக இருக்கிறது.

மக்கள் நீண்ட நெடுங்காலமாக உலமாக்களை நம்பிச் செயல்படக் கூடியவர்களாக  இருந்திருக்கிறார்கள். அதில் ஊறிப் போய் இருக்கிறார்கள். அதனால் ‘ஜமாஅத்துல் உலமா’ சபையால் ஒரு விஷயம் சொல்லப்பட்டால், மக்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதை ஏற்று செயல்படுகிறார்கள். நம்மிடம் அப்படி ஒரு சபை இல்லாததால், நம்முடைய பேச்சுக்கள் உண்மையாக இருந்தும், குர்ஆன் ஹதீஸாக இருந்தும் தனி நபர்கள் சொல்கிறார்கள் என்ற காரணத்தால் மக்கள் நம்பி எடுத்துச் செயல்பட மறுக்கிறார்கள்.

ஆகவே நாமும் ‘ஜமாஅத்துல் உலமா’ சபை அமைத்து அதன் மூலம் மக்களிடம் எடுத்துச் சொன்னால், அதற்கு நல்ல மதிப்பு இருக்கும். அது மக்கள் நமதுப் பேச்சுக்களைக் கேட்பதற்கும் நம்பி எடுத்து நடப்பதற்கும் காரணமாக அமையும் என்பதே அவர்களின் வாதமாகும் அதாவது முள்ளை முள்ளால் எடுக்க முற்படுகிறோம் என்று சொல்லுகிறார்கள்.

இந்தக் காரணத்தை மேல் எழுந்த வாரியாகப் பார்ப்பவர்கள், சரிக்காணத்தான் செய்வார்கள், ஆழ்ந்து சிந்திப்பவர்கள் மட்டுமே, இதிலுள்ள கெடுதியை உணர முடியும்.

அதாவது மக்கள் முன்னைய ஜமாஅத்துல் உலமாவைத் தக்லீது செய்பவர்களாக இருக்கின்றார்கள் தக்லீதை விடுபவர்களாக மக்கள் இல்லை. ஆகவே மக்களின் மனோ நிலையை அனுசரித்து, அவர்கள் முன்னைய ஜமாஅத்துல் உலமாவைத் தக்லீது செய்ய வைக்கலாம் என்பதே அவர்களின் வாதம். அதாவது மனித யூகம் கொண்டு மார்க்கத்தை மக்களிடம் எளிதாக எடுத்துச் சொல்லலாம் என்று சொல்கிறார்கள்.

பரீட்சையில் பக்கத்திலுள்ள மாணவனைக் காப்பியடிக்கும் மாணவனைப் பார்த்து, ஏனடா காப்பி அடிக்கிறாய் என்றால் ‘சார் அவன் மிகச் சரியாக எழுதிக் கொண்டிருக்கின்றான், தப்பாக இல்லை, அதனால் காப்பி அடிக்கிறேன்’ என்று விளக்கம் சொன்னானாம். தக்லீதை நியாயப்படுத்துகிறவர்களும் இதே வாதத்தையே செய்கிறார்கள்.

ஆனால் ‘உங்கள் ரப்பிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதையே  பின்பற்றுங்கள் அவனையன்றி, மற்றவர்களைப் பாதுகாவலர்களாக்கி அவர்களைப் பின்பற்றாதீர்கள். நல்லுணர்வு பெறுவோர் உங்களில் வெகுசிலரே.    (அல்குர்ஆன் 7:3)

என்ற இந்தக் குர்ஆன் வசனம் தெளிவாக தக்லீதை மறுக்கிறது. தெளிவாக தக்லீதை மறுக்கிறது. குர்ஆன், ஹதீஸ்களில் இருக்கிறதா? என்றுப் பார்த்து, அல்லது  தெளிவாகப் கேட்டு விளங்கிப் பின்பற்ற வேண்டுமே அல்லாது யாரையும் நம்பிப் பாதுகாவலர்களாக்கிப் பின்பற்றுவதை மிக வன்மையாகக் கண்டித்திருந்தும், இந்த குர்ஆன் வசனத்தைத் தூக்கி எறிந்து விட்டு, யாரையும், எந்த ஜமாஅத்துல் உலமாவையும் தக்லீது செய்யும் மக்களின் நிலை என்ன?

இந்த அவல நிலைக்கு, ஆபத்தான நிலைக்கு அவர்களை ஆளாக்கியது யார்? அல்லாஹ்வின் அச்சமுடையவர்கள் இதைச் செய்ய முடியுமா? ஆக தக்லீது தத்துவத்தை முற்றாக ஒழித்துப் புரோகிதத்தை முழுமையாக சமுதாயத்தை விட்டும் நீக்க விரும்புகிறவர்கள், சகோதரத்துவ சமத்துவ சமுதாயத்தைக் காண விரும்புகிறவர்கள், எந்த ஜமாஅத்துல் உலமாவையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தக்லீதை முற்றாக ஒழிக்க விரும்பாதவர்கள், புரோகிதத்தைச் சமுதாயத்தில் நிலைத்திருக்கச் செய்ய வரும்புகிறவர்கள் மட்டுமே, இந்தப் போலிக் காரணங்களை சொல்லி, ‘ஜமாஅத்துல் உலமா” அமைக்கப்படுவதை நியாயப்படுத்த முடியும்.

பின் விளைவையும் சிந்திக்க வேண்டாமா?

அப்படி ‘ஜமாஅத்துல் உலமா’ சபையை நியாயப் படுத்துகிறவர்கள்; இதையும் தங்கள் சிந்தனையில் கொண்டு வந்து பார்க்க கோருகிறோம். உண்மையில் அவர்கள் சொல்வதுப் போல், இன்று அவர்கள் அனைவரும் உள்ள அச்சம் உடையவர்களாக இருக்கலாம். அல்லாஹ்வுக்குப் பயந்து குர்ஆன், ஹதீஸை மட்டுமே சொல்லி வரலாம். ஆகவே அவர்களை நம்பிப் பின்பற்றுகிறவர்கள் அவர்கள் அறியாமலேயே குர்ஆன், ஹதீஸின்படி நடக்கலாம். ஆனால் என்றும் இவர்கள் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை. இவர்களுக்குப் பின்னால் இந்த ‘ஜமாஅத்துல் உலமா” கலைக்கப்பட்டு விடப் போவதில்லை.

காலங்காலமாக நடந்துவரும் ஒரு ‘ஜமாஅத்துல் உலமா” வாகவும் ஆகலாம், பின்னால் வருகிறவர்கள் அல்லாஹ்வின் அச்சமின்றி, முன்னய ‘ஜமாஅத்துல் உலமா” போல் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணானவற்றை மார்க்கமாகச் சொல்லவும் செய்யலாம். அந்த நிலையில் அவர்களை நம்பிப் பின்பற்றும் தக்லீது செய்யும் மக்களின் கதி என்ன? இந்த தவறான நிலை உண்டாகக் காரணமாக இருந்தவர்கள் யார்? முள்ளை முள்ளால் எடுக்கிறோம் என்ற அவர்களின் வாதம் சரியா? முள்ளை எடுத்தவுடன் கையில் இருந்த முள்ளையும் எறிந்து விடுகிறோம்.

அதற்கு முள்ளை எடுத்தப் பின் எவ்வித மதிப்பும் இல்லை. அதைப் போன்று இந்த ஜமா அத்துல் உலமாவை தூக்கி எறிந்து விட முடியுமா? அப்படியானால் மக்களிடம் தக்லீது நிலைத்திருக்க காரணமானவர்கள் யார்? எங்களது ஜ.உ.ச வில் மவ்லவிகளை மட்டுமல்ல, மவ்லவி அல்லாதவர்களையும் அங்கத்தினர்களாக ஆக்கி இருக்கின்றோம்.

எனவே முன்னய ஜ.உ.ச போன்றதல்ல என்றும் நியாயப்படுத்த முடியாது. அப்படி அமைத்துக் கொண்டாலும் சமுதாயத்தைக் கற்றவர்கள் கல்லாதவர்கள் என்று கூறு போடும் குற்றத்திலிருந்து தப்ப முடியாது. அல்லாஹ்வுக்கு பயந்து சிந்தித்தாலே உண்மையை உணர்ந்து விலகிக் கொள்ள முடியும்.

இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பக் காலத்தில் வழித் தவறிச் சென்றோர், தங்களின் தவறான வழியை நேர்வழி என்றுக் காட்ட, பொய்யான ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறினார்கள். வேறு சிலர் இதைப் பார்த்து, இவற்றிற்கு எதிரான ஹதீஸ்களை இவர்களும் இட்டுக்கட்டிக் கூறினார்கள். அவர்களின் நோக்கம் நல்லதாக இருந்தும் செயல் கெட்டதாக ஆனதால் சமுதாயத்திற்கு அது பலன் தரவில்லை.

மாறாக தீமைகளே மிகைக்க அவையும் காரணமாயின? அப்படிப்புனையப்பட்ட ஹதீஸ்களையே தப்லீஃ போன்ற பேரியக்கங்களும் மனம் கூசாது மக்களிடையே பரப்பி வருகின்றனர். அதேப் போல் தீமைகள் இந்தப் புதிய ஜமாஅத்துல் உலமாவும் சமுதாயத்தில், தீமைகள் இன்னும் அதிகரிக்க காரணமாக அமையுமே அல்லாது, தீமைகள் குறைந்து ஆரோக்கியமான சகோதரத்துவ சமத்துவ சமுதாயம் அமைய ஒரு போதும் உதவாது.

ஆக குர்ஆன், ஹதீஸ்கள் அடிப்படையில் ஆதாரமான சொல், யாரும் யாரையும், எந்த ஜமா அத்துல் உலமாவையும் நம்பிப் பின்பற்றும் நிலையை – தக்லீதை முற்றாக ஒழித்து, புரோகிதத்தைச் சுத்தமாக இல்லாமலாக்கி, ஆலிம்களுக்கு ஒரு தனி அந்தஸ்து இருக்கிறதென்ற வரட்டு கவுரவத்தை விட்டுக் கொடுத்து, ஆரோக்கியமான சமத்துவ சமுதாயத்தை உண்டாக்கி, எவ்வித ஏற்றத் தாழ்வும் இல்லாமல் ஒருவொருக்கொருவர் குர்ஆனையும் ஹதீஸையும் சொல்லக் கூடியவர்களாகவும், கேட்கக் கூடியவர்களாகவும், நம்பிப் பின்பற்றாமல் – தக்லீது செய்யாமல் அல்லாஹ்வால் இறக்கப்பட்டதுத் தான், நபி(ஸல்) அவர்களின் நடைமுறையில் உள்ளது தான். என்பதற்குரிய ஆதாரங்களைப் பார்த்து, அல்லது ஒருவருக்கு பலரிடம் கேட்டுப் புரிந்து விளங்கி பின்பற்றும் நிலையை ஒவ்வொரு ஆணிடமும், ஒவ்வொரு பெண்ணிடமும் உண்டாக்கவே நாம் பாடுபட வேண்டும். இதுவே நேரான வழியாக இருக்கும்.

Previous post:

Next post: