இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா?

in 2020 நவம்பர்

இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா?

தொடர் – 3

அபூ அப்தில்லாஹ்

மறு பதிப்பு :

புரோகித மவ்லவிகளின் கல்நெஞ்சம் பாரீர்!

எல்லாம் வல்ல ஏகன் மனிதனைப் படைத்த ஆரம்ப காலத்திலிருந்தே அவனுக்கென்று ஒரு சரியான-நேரான வாழ்க்கை நெறியைக் கொடுத்துள்ளான். அந்த ஒரே வாழ்க்கை நெறியை நடைமுறையில் செயல்படுத்திக்காட்ட காலத்திற்குக் காலம் தனது தூதர்களை அனுப்பி தனது கண்காணிப்பில் (52:48) செயல்பட வைத்து அந்த வாழ்க்கை நெறியை படிப்பறிவே அற்ற பாமரனும் விளங்கும் வகையில் மிகமிக எளிதாக்கியுள்ளான். இறைவனால் தெளிவாக விளக்கப்பட்டு (பார்க்க : 75:19) இறுதித் தூதரால் நடைமுறையிலும் தெளிவாக விளக்கப்பட்டு (பார்க்க 16:44,64) அந்த இறை கொடுத்த வாழ்க்கை நெறியில் அணுவின் முனை அளவும் மாறுதல் செய்யக்கூடாது. அது பகிரங்க வழிகேடு (பார்க்க: 33:36,66, 67,68) நரகில் போய் விழ நேரிடும் என கடுமையாக எச்சரிக்கப்பட்டிருந்தும், மார்க்கத்தை தங்களின் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டுள்ள இடைத்தரகர்களான-புரோகிதர்களான – மவ்லவிகள் தங்கள் மனோ இச்சைக்கு ஏற்றவாறு விளக்கங்கள் கொடுத்து மக்களை வழிகெடுக்கிறார்கள். நரகில் தள்ளுகிறார்கள். அவர்கள் மாபாதகர்கள், அவர்களுக்கு நரகமே கூலி, அவர்களுக்கு மன்னிப்புக் கேட்கும் வாய்ப்பே ஏற்படாது. அல்லாஹ்வினதும், மலக்குகளதும், மனிதர்களதும் சாபத்திற்குரியவர்கள், நிரந்தர நரகத்திற்கு ஆளானவர்கள் (பார்க்க: 2:159,160,161,162) என்ற விபரங்களை எல்லாம் ஆரம்ப தொடரில் பார்த்தோம்.

அந்தப் புரோகிதர்களில் கடைநிலையிலிருக்கும் தர்ஹா சடங்கு மவ்லவிகளின் தகிடுதத்தங்களையும், பித்தலாட்டங்களையும், இறைவனுக்கு அஞ்சாத கல்நெஞ்சததையும், அவர்களின் மடமை-வாதங்களையும் சென்ற தொடரில் பார்த்தோம். அத்துடன் அவர்களின் தில்லுமுல்லுகள் ஓயவில்லை.

குடிகாரனுக்கு தர்ஹா?

உண்மையான நல்லடியார்களுக்கு தர்ஹா கட்டியது போதாமல், பேயன், பைத்தியக்காரன், குடிகாரன், கஞ்சா மஸ்தான், பீங்காட்டப்பா, சட்டி மஸ்தான் போன்றவர்களுக்கும் தர்ஹாக்கள் கட்டியது போதாதென்று, குதிரை, கழுதை, யானை, பூனை, கட்டை, செருப்பு போன்றவற்றைப் புதைத்து தர்ஹாக்கள் கட்டியது போதாதென்று, யாருமே புதைக்கப்படாத இடங்களில் கூட, அவுலியா கனவில் வந்து சொன்னார் என்று மக்களை ஏமாற்றி, கண்ட கண்ட இடங்களில் எல்லாம் தர்ஹாக்கள் கட்டி தங்களின் தொப்பையை முழுக்க முழுக்க ஹராமில் – தவறான வழி யில் நிறைத்துக் கொள்ள வழிகண்டுள்ளார்கள்.

நடைபாதையின் குறுக்கே தர்ஹா?

அப்படிக் கனவில் வந்து கற்பனையாகச் சொல்லி கட்டிய சில தர்ஹாக்கள், மக்களின் போக்குவரத்துக்கு இடையூராக நடைபாதைகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ளதையும் இன்று பார்க்கலாம். இங்கும் தீய வழியில் பொருளீட்டும் அவர்களின் நரித் தந்திரமே மேலோங்கி இருக்கிறது. தர்ஹாக்கள் எங்கும் ஒதுக்குப்புறமாக இருந்தால் மக்கள் அவற்றைத் தேடிச் சென்று உண்டியலில் காசு போடும் நிலைதான் இருக்கும். சிலர் அவசரத்தில் அந்த தர்ஹாக்களுக்குப் போகும் சிந்தனையே இல்லாமலும் தங்களின் அலுவல்களுக்காகச் சென்றும் விடலாம். இவர்களை எப்படி மடக்கிப் பிடிப்பது? போகும் வழியில் குறுக்கே தர்ஹா இருந்தால், தர்ஹா எண்ணமில்லாதவர்களும் அதைப் பார்த்தவுடன் பக்தி ஏற்பட்டு உண்டியலில் காசு போட்டுச் செல்வார்கள். வருவாய் பெருகும். தர்ஹா நம்பிக்கை முழுமையாக இல்லாதவர்களும், போகும் வழியில் குறுக்கே அவுலியா(?) தென்பட்டு விட்டார். அவரைக் கண்டு கொள்ளாமல் சென்றால், தங்களின் காரியம் கை கூடாது என்ற குருட்டு நம்பிக்கையில் உண்டியலில் காணிக்கை செலுத்துவோரையும் பார்க்கலாம். இப்படியும் வருவாய் பெருகும். புரோகிதர்களின் இந்தத் தந்திரத் தால்தான் நடைபாதைக்கு குறுக்கே அவுலியா அடக்கப்பட்டுள்ளதாக கனவில் கண்டதாக மக்கள் காதில் பூ சுற்றுவார்கள்.

சிந்தனை இல்லாத அவுலியா பக்தர்கள்!

அவுலியா பக்தர்களான மூட முஸ்லிம்களுக்கு சுய சிந்தனை சிறிதளவாவது இருந்தால் அல்லவா – சிந்திக்கப் போகிறார்கள். எந்தக் காலத்திலாவது எந்தப் பெரியாரையும் மக்கள் நடமாடும் நடைபாதையில் அடக்கம் செய்திருப்பார்களா? அப்படிப்பட்ட மரமண்டைகளும் முஸ்லிம் சமுதாயத்தில் இருந்திருப்பார்களா? என்று முறையாகச் சிந்தித்திருப்பார்கள். அப்படிச் சிந்தித்தால் மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் தர்ஹா புரோகிதர்களின் கற்பனை கட்டுக்கதையில் தோன்றியவை, இந்தச் சாலையில் மக்கள் நடமாட்டத்திற்கு இடையூராக அமைந்திருக்கும் போலி தர்ஹாக்கள் என்பதைப் புரிய முடியும். அவர்கள்தான் சிந்திப்பதே இல்லையே. பக்தி என்றால் படித்த பட்டதாரிகளான முஸ்லிம்களுக்குப் புத்தி முட்டிப் போகிறதே. குருட்டுத்தனமாக இந்தத் தர்ஹா புரோகிதர்களின் கட்டுக்கதைகளை அப்படியே வேதவாக்காக ஒப்புக்கொண்டு செயல்பட்டு நரகில் வீழ்கின்றனரே. இப்படி போலி தர்ஹாக்கள் ஆயிரக் கணக்கானவற்றை உருவாக்கிய பின்னராவது இந்த தர்ஹா புரோகிதர்கள் மன நிறை கண்டார்களா? அதுதான் இல்லை அவர்களின் தீராத பேராசை இன்னும் அவர்களின் கற்பனை வளத்தை பெருகி ஓடச் செய்கிறது.

நிஷான், கொடி மரம், உண்டியல் :

போலி தர்ஹாக்கள் போதாதென்று, கண்ட கண்ட இடங்களில், சந்து பொந்துகளிலெல்லாம் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) வந்து தங்கி விட்டுப் போனதாகக் கதை யளந்து நிஷான்களை – கொடி மரங்களை நட்டு வைத்து, அவற்றிலே உண்டியல்களையும் வைத்து வயிற்றை ஹராமில் நிரப்புகின்றனர். அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) இந்தியாவுக்கு வந்ததாக வரலாறே இல்லை. ஆனால் இந்த தர்ஹா புரோகித முல்லாக்களின் கனவுகளில் நிறையவே, நிறைய இடங்களில் வந்ததாக எண்ணற்ற நிஷான்கள் -கொடி மரங்களை கற்பனை செய்து நாட்டியுள்ளனர். தவறாமல் உண்டியல்களையும் வைத்துள்ளனர்,

தர்ஹா மவ்லவிகளுக்கு அவுலியா பக்தி உண்டா?

உண்மையிலேயே இந்த தர்ஹா புரோகித மவ்லவிகளுக்கு அந்த அவுலியாக்களின் மீது உண்மையிலேயே பாசம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? அந்த அவுலியாக் களுக்கு இவ்வுலகின் காசு பணம் தேவையே இல்லை. அவர்களுக்கு அவை பயன்படாது. எனவே இந்த தர்ஹாக்களிலும், நிஷான்களிலும், கொடி மரங்களிலும் உள்ள உண்டியல்கள் அனைத்தையும் அகற்றிவிட்டு பக்தி பாசத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செயல்படட்டுமே. செயல்படுவார்களா? நிச்சயமாக இல்லை. உண்டியல் இல்லாத தர்ஹாவா? நிஷானா? கொடி மரமா? பைத்தியமா? என்றே கேட்பார்கள். இப்போது புரிகிறதா? அவர்களின் அவுலியா பக்தி வே­ம். அற்பப் பணத்திற்காகவே, சில்லறைத் துட்டுக்காகவே இந்த அவுலியா பக்தி வேஷம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகவே விளங்கும்.

ஒரு ஜான் வயிற்றை நிரப்ப கொடூரச் செயல்களா?

கேவலம் தங்களின் அற்ப உலக வாழ்க்கைக்காக ஒரு ஜான் வயிற்றை ஹராமில் நிரப்ப, அவுலியா தர்ஹா, குடிகாரன், கஞ்சா மஸ்தான் தர்ஹா, மிருகங்களின் தர்ஹா, கனவுக் கற்பனை தர்ஹா போன்ற தர்ஹாக்கள் போதாதென்று நிஷான்கள், கொடி மரங்கள் இவையும் போதாதென்று கண்ட கண்ட ஃபாத்தியாக்களையும் கற்பனையாக உருவாக்கி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கின்றனர்.

ஃபாத்திஹா படும்பாடு !

பூரியான் ஃபாத்திஹா, ஒடுக்கத்துப் புதன் ஃபாத்திஹா இப்படி நாள் தவறினாலும் ஃபாத்திஹா தவறாத அளவுக்கு எண்ணற்ற ஃபாத்திஹாக்கள். இறந்தவர்களின் பிணத்தை நடுரோட்டில் கிடத்தி மக்களை ஏமாற்றி காசு பிடுங்கும் கயவர்கள் போல், இந்த தர்ஹா மவ்லவிகள் செத்தவர்களுக்காக 3,7,10,40 வருட ஃபாத்திஹாக்கள் என்று மக்களைச் சுரண்டுகின்றனர். ஒரு ஜனாஸாவை குளிப்பாட்டி தொழ வைத்து அடக்கம் செய்து முடிப்பதற்குள் பலபல ஃபாத்திஹாக்கள் அரங்கேறும். அவற்றைப் பார்க்கும் சுய சிந்தனையுள்ள ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளமும் குமுறும். ஆனால் இந்தப் பெயர் தாங்கி முஸ்லிம்களோ இவை அனைத்தையும் மெத்தப் பக்தி சிரத்தையோடு செய்வதுடன், வியர்வை சிந்தி கடுமையாக உழைத்துப் பெற்ற காசு பணத்தை இந்த தர்ஹா மவ்லவிகளுக்கு அள்ளி இறைப்பார்கள்.

புரோகிதர்கள் ஏமாற்றுப் பேர்வழிகளே!

அப்பாவி மக்களை ஏமாற்றி தங்களின் தொப்பைகளை நிரப்புவதற்கென்றே இந்த தர்ஹா மவ்லவிகள் தர்ஹா சடங்குகளையும், கூடு, கொடி, கந்தூரி, மெளலூது, கத்தம், ஃபாத்திஹா, ராத்திபு, திக்ரு, ஸலாத்து நாரியா என பல குர்ஆன், ஹதீஃதுக்கு முரணான சடங்கு சம்பிரதாயங்களை தங்களின் மாயாஜால மந்திர தந்திரங்களால் மக்களை மயக்கி மார்க்கததின் பெயரால் நடத்தி வருகின்றனர். அவற்றிற்கேற்றவாறு குர்ஆன், வசனங்களையும், ஆதாரபூர்வமான ஹதீஃத்களையும் திரித்து வளைத்து மறைக்கின்றனர். பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமான ஹதீஃத்களை மக்களிடையே பரப்பி வருகின்றனர். இவர்களைப் பற்றியே அல்குர்ஆன் 2:159-162 வசனங்களில் அல்லாஹ் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளான். இன்ஷா அல்லாஹ் இந்தப் புரோகிதர்களின் தில்லுமுல்லுகளை இன்னும் பார்ப்போம்.

Previous post:

Next post: