வேலைவாய்ப்பு!

in 2020 நவம்பர்

தலையங்கம்!

வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு என்ற தலைப்பைப் படித்தவுடன் வேலை வாய்ப்பு செய்திகள் வெளியாகி இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றும். இது அதுவல்ல! தமிழகத்தில் வேலைவாய்ப்பு என்ற பெயரில் மத்திய மற்றும் தமிழக அரசும் தமிழர்களுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் இழைக்கும் அநீதி ஒன்று நீதிமன்றத்தின் கதவைத் தட்டி இருக்கிறது.

ஊட்டியிலுள்ள ஆயுத தொழிற்சாலை ஒன்று 2015ஆம் ஆண்டு கெமிக்கல் புராஸசிங் பிரிவில் 140 காலி பணியிடங்களுக்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கான எழுத்துத் தேர்வில் தமிழகத்திலுள்ள ஒட்டப்பிடாரம் எனும் ஊரிலிருந்து சரவணன் என்பவர் 40 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால் அவரை விடக் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்த வெளி மாநிலங்களைச் சார்ந்த 6 நபர்களுக்கு அப்பாயிண்மென்ட் ஆர்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த 6 நபர்களுக்கான அப்பாயிண்மென்ட் ஆர்டர்களை ரத்து செய்யும் படியும், தமக்கு வேலை கொடுக்கும்படியும் சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் சரவணன் மனுதாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, சரவணனுக்கு வேலை கொடுக்கும்படி உத்தரவிட்டார். ஆனால் ஆயுதத் தொழிற்சாலை சார்பில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டு, நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய கோரியுள்ளனர்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் பி.புகழேந்தி ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியில் தேர்ச்சி பெற முடியாத நிலையில், தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, பணி நியமனம் பெறுவது எப்படி?’ என்ற வினாவை தமிழக அரசிடம் கேட்டுள்ளனர். மேலும், “பணித் தேர்வுகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும்” என்று தீர்ப்பளித்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுப்பையா அவர்கள், “ஆயுத தொழிற் சாலைப் பணியில் 140 பணிகளில் 50 சதவீதம் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்” என்று சொன்னபோது, நீதிபதி என்.கிருபாகரன் குறுக்கிட்டு, “தமிழ்நாட்டுக்கு என்ன பிச்சை போடுகிறீர்களா?” என்று காரசாரமாக வினா எழுப்பினார்.

சமீப காலமாக தமிழக அரசு துறைகளின் வேலை வாய்ப்புக்களில், வேறு மாநிலத்தினரின் உள்நுழைவு அதிகரித்து வருவதோடு, அதற்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதும் இப்படிப்பட்ட வினாக்கள் எழ காரணமாக அமைந்து இருக் கலாம் என கருத இடமளிக்கிறது.

சிந்தியுங்கள்! வடமாநில இளைஞர்களால் அவர்களது தாய்மொழி இந்தியில் அரசு தேர்வெழுதி தேர்ச்சி பெற முடியவில்லை. ஆனால் எப்படி தமிழில் அதிக மார்க்குகள் பெற்று தேர்ச்சியாகிறார்கள் என்பது விந்தையான வேதனை!

தமிழ் நாட்டு வேலைகளில் தமிழர்களுக்கு அல்லது தமிழ்நாட்டிலுள்ள மக்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும், தமிழ் தேசிய பேரியக்கம் போன்ற பல இயக்கங்களும் கோரிக்கை வைத்துள்ளன. இத்தருணத்தில் இப்படியான கேள்வியை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் எழுப்பி இருப்பது அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் நாட்டில் கணிசமான அளவில் இருக்கின்றனர். வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்தாடும் இந்நேரத்தில் கிடைக்க இருக்கும் வேலை வாய்ப்பும் கிடைக்காமல் போனால், வேலை தேடும் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கை பாழானதாகக் கருதி, அதன் தொடராக அரசு மீதும், அரசு சார்ந்துள்ள அரசியல் கட்சிகளின் மீதும் அதிருப்தியுடன் இருப்பர். இதன் விளைவு எதிர் வரும் தேர்தலில் அரசு சார்ந்துள்ள அரசியல் கட்சிகளின் ஓட்டுவங்கிகள் வலுவிழக்க வாய்ப்புண்டு. இளைஞர்களின் வேலை வாய்ப்பு உரிமை பாதுகாக்கப்பட கர்நாடகம் போன்ற சில மாநிலங்களில் சட்டம் இருக்கிறது. மண்ணின் மைந்தர்களுக்கு வேலை கிடைக்கும் உரிமையைப் பெறும் அதுபோன்ற சட்டம் தமிழ் நாட்டுக்கும் வரவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தமிழக மக்களுக்கு கிடைக்கவிருக்கும் வேலையைப் பறித்து, வேறு மாநில மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசின் செயலை, தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிராமல், அதை தடுத்து நிறுத்தவும், தமிழகத்து வேலை வாய்ப்புகள் தமிழ் நாட்டு மக்களுக்குக் கிடைக்கவும் மக்கள் விரும்புகின்றனர். அதிமுக அரசு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Previous post:

Next post: