இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா?

in 2020 டிசம்பர்

இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா?

தொடர் – 4

அபூ அப்தில்லாஹ்

மறு பதிப்பு :

புரோகித மவ்லவிகளின் தில்லுமுல்லு  பாரீர்!

புரோகித மவ்லவிகளில் ஆகக் கடைநிலையிலுள்ள புரோகிதர்கள், செத்தவர்களின் பெயரால் என்ன என்ன நாடகங்கள் நடத்துகிறார்கள், எத்தனை ஏமாற்றுப் பித்தலாட்டங்களைச் செய்கிறார்கள். மக்களிடமிருந்து காசு பிடுங்க எத்தனை வேஷங்கள் போடுகிறார்கள், எத்தனைக் கற்பனை கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு மக்களை மடையர்களாக்கி ஏமாற்றி வயிறு வளர்க்கிறார்கள். கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் எத்தனை பொய் தர்காக்களை, நிஷான்களை, கொடி மரங்களை கற்பனையாக உண்டாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தோம். அவர்களின் உள்ளங்களில் கடுகளவு விசுவாசம் (ஈமான்) இருந்தாலும் இந்த அளவு துணிச்சலுடன் மக்களை ஏமாற்றத் துணியமாட்டார்கள் போன்ற விபரங்களை அடுக்கடுக்காகப் பார்த்து வருகிறோம்.

அவர்கள் தங்களின் சுயநலத்திற்காக, அற்ப உலக ஆதாயங்களுக்காக ஒரு ஜான் வயிற்றை நரக நெருப்பால் நிரப்புவதற்காக இறைவனின் இறுதி வேதமான அல்குர்ஆன் வசனங்களை எப்படி எல்லாம் திரித்து, வளைத்து, மறைத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்பதை இந்த இதழில் பார்ப்போம்.

நேரடியாக தெள்ளத் தெளிவாக இரவும் பகலைப் போல் வெள்ளைவெளேர் என்ற நிலையிலுள்ள அல்குர்ஆன் வசனங்களை திரித்து, வளைத்து, மறைத்து மக்களை ஏமாற்றுவதில் அசகாயசூரர்கள் இந்த மவ்லவி புரோகிதர்கள், மக்களை நரகில் கொண்டு நிரப்பும் சபதத்தில் ஷைத்தானும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதால், மக்களும் எளிதில் ஏமாற்றப்படுகிறார்கள். மக்களை மயக்கி ஏமாற்ற இந்த மவ்லவிகள் அடிக்கடி ஓதிக்காட்டும் வசனம் “அலா இன்ன அவுலியா அல்லாஹி லா கவுஃபுன் அலைஹிம் வலாஹும் யஹ்சனூன்” என்ற 10:62ல் வசனமாகும். இதை அரபியில் மட் டும் அடிக்கடி அவர்களின் ரெடிமெட் “பித்அத்’ (வழிகேட்டு) துஆக்களில் (பிரார்த்தனை) ஓதுவார்கள். “அல்லதீன ஆமனூ வகானூ யத்தகூஊன்” யார் அவுலியா அல்லாஹ் என்று கூறும் 10:63 வசனத்தை அடுத்து ஓதாமல் விட்டு விடுவார்கள். அப்பாவி மக்களும் “அவுலியா அல்லாஹ்” என்று சொன்ன மாத்திரத்தில் மயங்கி கபுரு – சமாதி சடங்குகளில் தீவிரமாக ஈடுபட்டு, இந்தப் புரோகிதர்களுக்கு தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சேகரித்த காசைக் கொட்டிக் கொடுப்பதுடன் நரகில் தங்கள் இருப்பிடத்தை ஆக்கிக் கொள்ள அஸ்திவாரம் இடுவார்கள். ஆனால் இந்த 10:62 மற்றும் 10:63 குர்ஆன் வசனங்கள் என்ன கூறுகின்றன என்று பார்ப்போம்.

“நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள், அவர்கள் விசுவாசம் கொண்டு பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்”. அல்குர்ஆன்: 10:”62,63

இந்த வசனங்களை உற்றுக் கவனியுங்கள். இறந்து சமாதிகளில் அடக்கம் செய்யப்பட்ட அடியார்களைப் பற்றி இந்த வசனங்கள் கூறவில்லை. முறையாக விசுவாசம் கொண்டு, இறைவனின் கட்டளைகளை அப்படியே நிறைவேற்றியவர்களாக இறந்து விட்டவர்களும் இதில் அடங்குவார்கள் என்றாலும், இந்த வசனங்கள் உயிருடன் இருப்பவர்கள் முறையாக விசுவாசம் கொண்டு, இறைவனின் ஏவல், விலக்கல்களில் தங்களின் சொந்த மனித யூகங்களைப் புகுத்தாமல் அப்படியே நிறைவேற்றுபவர்களாக வாழ்பவர்களையே குறிக்கின்றன. இதை “அவர்கள் விசுவாசம் கொண்டு பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்” என்ற பகுதி உள்ளங்கை நெல்லிக்கனியாக உணர்த்தி நிற்கிறது. அப்படிப்பட்ட இந்த 10:62,63 வசனங்களை இறந்து கபுரில் (சமாதி) அடக்கம் செய்யப்பட்டுள்ள அடியார்களைக் குறித்துச் சொல்லப்பட்ட வசனங்களாக திரித்து, வளைத்து, மறைத்து மக்களை ஏமாற்றி வஞ்சிப்பார்கள் இந்த கடைநிலை புரோகித மவ்லவிகள்.

இந்த 10:62,63 வசனங்கள் குறிப்பாக உயிரோடிருக்கும் நல்லடியார்கள் பற்றி குறிப்பிடுகின்றன என்பது மட்டுமில்லாமல் இன்னொரு பேருண்மையையும் அவை உணர்த்துகின்றன. அதாவது சோதனைக்காகப் படைக்கப்பட்ட ஜின், மனித வர்க்கங்களில் சொர்க்கத்திற்குரியவர்கள், நரகத்திற்குரியவர்கள் என்ற இரண்டு கூட்டத்தார்கள் மட்டுமே உண்டு, மூன்றாவது ஒரு கூட்டம் இல்லவே இல்லை. இறைவனது கட்டளைகளை, ஏவல் விலக்கல்களை அப்படியே எவ்வித சுய விளக்கமோ, விருப்பு வெறுப்போ கொள்ளாமல் நிறைவேற்றி வைப்பவர்கள். இவர்கள் சுவர்க்கத்திற்கு உரியவர்கள், அல்லாஹ்வின் நேசர்கள், அவுலியா அல்லாஹ் என்று அழைக்கப்படுவார்கள், இதற்கு மாறாக இறைவனது கட்டளைகளுக்கு ஏவல், விலக்கல்களுக்கு தங்களின் மனோ இச்சைப்படி, ஷைத்தானின் தூண்டுதலின்படி சுயவிளக்கங்கள் கொடுத்து இறைக்கட்டளைகளை நிராகரிப்பவர்கள், இவர்கள் நரகத்திற்குரியவர்கள், அல்லாஹ்வின் பகைவர்கள், ஷைத்தானின் நேசர்கள், அவுலியாஷ் ஷைத்தான் என்று அழைக்கப்பட வேண்டியவர்கள்.

ஆக அவுலியா அல்லாஹ் அல்லது அவுலியாவுஷ் ஷைத்தான் ஆகிய இரண்டு கூட்டங்களைத் தவிர்த்து மூன்றாவது ஒரு கூட்டம் மனிதரில் இல்லவே இல்லை. இந்த நிலையில் இறந்து அடக்கஞ் செய்யப்பட்டவர்களின் சமாதிகளில் போய் நின்று கொண்டு அவர்களை அவுலியா அல்லாஹ்க்கள் என்று கூறி சடங்கு சம்பிரதாயங்கள் செய்பவர்கள் யாராக இருக்க முடியும்? சிந்தியுங்கள்.

அவர்கள் தாங்கள் அவுலியா அல்லாஹ் இல்லை என்று அவர்களே நம்புகிறார்கள். அவர்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் கட்டளைகள்படி, ஏவல் விலக்கல்களின்படி நடப்பவர்களாக இருந்தால் இந்த 10:62,63 வசனங்களின்படி தாங்கள் அல்லாஹ்வின் நேசர்கள்தான் – அவுலியா அல்லாஹ்தான் என்று நம்பிக்கை அவர்களுக்கு இருக்கும். ஆனால் அவர்கள் இறைவனது கட்டளைகளுக்கு மாறு செய்கிறவர்களாக, தொழாதவர்களாக, நோன்பு நோற்காதவர்களாக, ஜகாத் கொடுக்காதவர்களாக, ஹராம், ஹலால் பேணி நடக்காதவர்களாக, இந்தப் புரோகிதர்களை நம்பி ஷைத்தானின் அடிச்சுவட்டை பின்பற்றி நடப்பவர்களாக இருப்பதால், அல்லாஹ்வின் நல்லடியார்களாக – நேசர்களாக, அவுலி அல்லாஹ்வாக இருக்கிறோம் என்ற நம்பிக்கை அவர் களுக்கே இல்லை, எனவே இறந்து சமாதிகளில் அடக்கம் செய்யப்பட்டவர்களை அவுலியா அல்லாஹ்வாக நம்பி அங்கு போய் இறைவனது கட்டளைகளுக்கு முரணான சடங்கு சம்பிரதாயங்களை செய்வ தன் மூலம் இறைவனுக்கு இணை வைத்து அவுலியாஷ் ஷைத்தானாகி அவனுடன் இவர்களும் நரகில் போய் விழுகிறார்கள்.

இவர்கள் தாங்கள் அவுலியா அல்லாஹ்வாக இல்லை என்ற அவநம்பிக்கையில்தான் வேறு அவுலியா அல்லாஹ்வை நாடி தர்ஹாக்களுக்கு-சமாதிகளுக்குச் செல்கின்றனர். அப்படியானால் அவர்கள் தாங்கள் அவுலியா அல்லாஹ் இல்லை என நினைக்கும்போது அடுத்து அவுலியாஷ் ஷைத்தானாகத்தானே இருக்க முடியும். தங்களைத் தாங்களே அவுலியா அல்லாஹ் இல்லை, மாறாக அவுலியாவும் ஷைத்தான் என்று நம்பும் அபாக்கியவான்களை விட கடுமையான அபாக்கியவான்கள் வேறு யாரும் இருக்க முடியுமா? சிந்தியுங்கள். அப்படியானால் இந்தக் கடைநிலை புரோகித மவ்லவிகள் எந்த அளவு, கல் நெஞ்சம் படைத்த கொடுமையாளர்களாக இருக்க முடியும்? இவர்களிடம் ஏமாறும் முஸ்லிம்கள் எந்த அளவு இழிச்சவாயர்களாக இருக்க முடியும்? சிந்தித்து சுய உணர்வு பெறுவார்களா?

அடுத்து இந்த கடைநிலை புரோகித மவ்லவிகள் திரித்து வளைத்து மறைத்து மக்களை ஏமாற்றும் அல்குர்ஆன் வசனம் இரண்டாவது அத்தியாயத்தின் 154வது வசனமாகும். அந்த வசனம் வருமாறு :

“இன்னும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “இறந்து விட்டார்கள்” என்று கூறாதீர்கள் அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள், எனினும் நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்”  (2:154)

இந்த வசனத்தில் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் இறந்து விடவில்லை. அவர்கள் உயிருடன் இருந்தாலும் அது எப்படி என்பதை நீங்கள் அறியமாட் டீர்கள், உங்களுக்குத் தெரியாது என்று இறைவன் சொல்லிவிட்ட பின்னர், இந்தப் புரோகித மவ்லவிகள் அதிகப்பிரசங்கித்தனமாக அவர்கள் கபுரில் -சமாதியில் உயிருடன் இருப்பதாக ரீல் விட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். குர்ஆன் வசனத்தை திரித்து, வளைத்து மறைக்கிறார்கள். 2:159-162 வசனங்களின்படி அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரது சாபத்திற்கும் ஆளாகிறார்கள். இந்த 2:154 வசனத்திற்கு மேலும் தெளிவாக 3:169ல் மேலும் தெளிவுபடுத்துகிறான் அல்லாஹ். அதாவது “அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள். தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் (அவனால்) அவர்கள் உணவளிக் கப்படுகிறார்கள். (அல்குர்ஆன்: 3:169)

இந்த வசனம் அவர்கள் கபுரில் – சமாதியில் உயிருடன் இல்லை, இறைவனிடத்தில் உயிருடன் இருக்கிறார்கள். அவனே அவர்களுக்கு உணவளிக்கிறான் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக விளக்குகிறது.

இதற்கு மேலும் விளக்கமாக “அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டோரின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைகளின் உடலில் புகுத்தப்பட்டு சுவர்க்க லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். சுவர்க்கலோகக் கனிகளைப் புசித்து மகிழ்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கம் கொடுத்து ஆதாரப்பூர்வமான செய்தியாக முஸ்லிமில் பதிவாகியுள்ளது. பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃத்களையும் துணிந்து மக்களிடையே பரப்பி மக்களை ஏமாற்றும் இந்தப் புரோகிதர்களுக்கு இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஃத் கண்ணில் படுவதில்லையா? ஆக நன்கு தெரிந்த நிலையிலேயே இந்த 2:154, 3:169 அல்குர்ஆன் வசனங்களை திரித்து வளைத்து மறைத்து, கொல்லப்பட்ட ஷஹீதுகள் மட்டுமல்ல. இறந்துபோன அவுலியாக்கள் அனைவரும் கபுரில் – சமாதியில் உயிருடன் இருப்பதாக ரீல் விட்டு மக்களை மடையர்களாக்கி வயிறு வளர்க்கிறார்கள்.

அடுத்து 5:35 குர்ஆன் வசனத்தைத் திரித்து வளைத்து மறைத்து, ஓதிக்காட்டி இறந்து போய் சமாதிகளில் புதைக்கப்பட்டவர்களை வஸீலாவாக ஆக்கலாம் என்று கூறி சமாதிச் சடங்குகளை நியாயப்படுத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

அந்த வசனம் வருமாறு :

“விசுவாசிகளே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், அவன் பால் நெருங்குவதற்குரிய பரிந்துரையை (வஸீலாவை) தேடிக் கொள்ளுங்கள்.” அல்குர்ஆன் :5:35

இந்த வசனம் அவரவர்கள் செய்யும் நல்ல அமல்களையே வஸீலா என்று குறிப்பிடுகிறது. இதற்கு ஆதாரமாக குகையில் அடைபட்டு வெளிவர முடியாத நிலையில் மாட்டிக்கொண்ட மூன்று நல்லடியார்கள் தாங்கள் தாங்கள் செய்த நல்ல அமல்களைக் கூறி அவற்றை வஸீலாவாக ஆக்கி இறைவனிடம் முறையிட்டு அக்குகையிலிருந்து விடுபட்ட சம்பவம் புகாரீயில் பதிவாகி இருப்பதைப் பார்க்கிறோம். இந்த சம்பவத்தின் மூலம் அவரவர்கள் அல்லாஹ்வுக்குப் பொருத்தமான நல்ல செயல்களை (அமல்) செய்து அதன் மூலம் அல்லாஹ்வை நெருங்க வேண்டும் என்பதையே உணர்த்துகிறது. ஆனால் அதற்கு மாறாக இந்தக் கடைநிலை புரோகித மவ்லவிகள் இந்த 5:35 வசனத்தை திரித்து வளைத்து மறைத்து செத்துப் போனவர்களை (பரிந்துரை) வஸீலாவாக ஆக்க வேண்டும் என்று கூறி தர்ஹா -சமாதி சடங்குகளை ஜாம் ஜாம் என்று நடத்தி வருகிறார்கள்.

இந்த புரோகித மவ்லவிகள் அப்பாவி மக்களை எந்த அளவு ஏமாற்றி வருகிறார்கள் என்பதை 17:57 வசனம் படம் பிடித்துக் காட்டுகிறது. அது வருமாறு :

“(அல்லாஹ்வையன்றி) இவர்கள் யாரை அழைக்கிறார்களோ அவர்கள், ஏன் அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக் கமானவர்கள் கூட தங்கள் இறைவன்பால் (கொண்டு செல்ல) நற்கருமங்களைச் செய்து கொண்டும் அவனது அருளை எதிர்பார்த்தும் அவனது தண்டனைக்கு அஞ்சியுமே இருக்கின்றனர். நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை அச்சப்படத்தக்கதாகவே உள்ளது”. அல்குர்ஆன்: 17:57

“வஸீலா” என்பது அவரவர்களின் நற் செயல்களைக் கொண்டு இறைவனை நெருங்குவதே அல்லாமல், செத்துப் போனவர்களை அழைத்து அவர்களிடம் உதவி தேடுவது அல்ல என்பதை இந்த 17:57 வசனம் குன்றிலிட்ட தீபம் போல் விளக்குகிறது. அப்படியிருந்தும் இந்த 5:35, 17:57 வசனங்களை அரபியில் ஓதிக் காட்டி சமாதிச் சடங்குகளை அமோகமாக நடத்தி வரும் கடைநிலை தர்ஹா மவ்லவிகளின் உள்ளங்களில் ஈமான் (விசுவாசம்) கடுகளவு தானும் இருக்க முடியுமா? சிந்தியுங்கள். 2:159-162 வசனங்களின்படி இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ் மலக்குகள், மனிதர்கள் அனைவரது கோபத்திற்கும், சாபத்திற்கும் உரியவர்களா? இல்லையா?

இவற்றை எல்லாம் விட பெரிய கொடுமை, நிராகரிப்பவர்கள் மறுமையில் எழுப்பப்படுவோமா என்ற சந்தேகத்தை வெளிப்படுத்துவது பற்றிய 60:13 வசனத்தை திரித்து வளைத்து மறைத்து, கபுரு – சமாதிகளிலுள்ள நல்லடியார்களுக்கு சக்தி உண்டு. அவர்களிடம் கேட்கலாம், முறையிடலாம், பரிந்துரை செய்யச் சொல்லலாம் என்ற உண்மையை(?) சிலர் மறுக்கின்றனர். அவர்களைக் கண்டித்தே இந்த 60:13 வசனம் இறக்கப்பட்டது என்று துணிந்து பொய் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த கடைநிலை தர்ஹா மவ்லவிகள், அந்த வசனம் கூறுவதையும் பார்ப்போம்.

“விசுவாசம் கொண்டவர்களே! இறைவன் எவர்கள் மீது கோபம் கொண்டிருக்கின்றானோ அந்தச் சமூகத்தாருடன் நேசம் கொள்ளாதீர்கள். ஏனெனில் மண்ணறை வாசிகளைப் பற்றி நிராகரிப்பவர்கள் நம்பிக்கை இழந்தது போல், மறுமையைப் பற்றி, நிச்சயமாக இவர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர்”. (அல்குர்ஆன்: 60:13)

இந்த தர்ஹா புரோகித மவ்லவிகள் இந்த 60:13 வசனத்திற்கு தவறான பொருள் கொண்டு சமாதிகளிலுள்ளவர்கள் முறை யிடுபவர்களின் முறையீடுகளைக் கேட்கி றார்கள் என்று கூறுவது அப்பட்டமான பொய் என்பதை 35:22 வசனம் உறுதிப்படுத்துகிறது. அது வருமாறு :

“உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக இறைவன் தான் நாடியவர்களைச் செவியேற்கும்படிச் செய்கிறான். சமாதிகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.” (அல்குர்ஆன்: 35:22)

நிச்சயமாக மரித்தோரை நீர் கேட்கும்படிச் செய்ய முடியாது. (அல்குர்ஆன்:27:80)

இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கே சமாதிகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்ய முடியாது என்று உறுதியாக இறைவன் கூறுகிறான். இந்த நிலையில் சாதாரண மனிதர்களால் சமாதிகளிலுள்ளவர்களை தங்களின் முறையீடுகளைக் கேட்கச் செய்யமுடியுமா? இது எவ்வளவு பெரிய தவறான நம்பிக்கை என்பதை உணராதவர்களா இந்த தர்ஹா புரோகித மவ்லவிகள்?

மக்களை ஏமாற்றி வஞ்சித்து அவர் களை நரகில் தள்ளுவதே தங்களின் தலையாய குறிக்கோள் என்ற வைராக்கியத்துடன், இந்த தர்ஹா புரோகித மவ்லவிகள் செயல்படுவதாகவே தெரிகிறது. இல்லை என்றால் பத்ருடைய யுத்த களத்தில் அபூ ஜஹீல் போன்ற கொடிய காஃபிர்கள் கொல்லப்பட்டு ஒரு கிணற்றில் போடப் பட்டிருந்த சமயம் நபி(ஸல்) அவர்கள் அந்த காஃபிர்களுடன் பேசியதாக சில அறிவிப்புகளில் காணப்படுகின்றன. இந்த அறிவிப்புகளை ஆதாரமாகக் காட்டி, மடிந்து மண்ணறையில் புதைக்கப்பட்டவர்கள் நம்முடைய முறையீடுகளைக் கேட்டு நமக்கு உதவி செய்ய முடியும் என்று வஞ்சகமாகக் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர் இந்த தர்ஹா மவ்லவி புரோகிதர்கள்.

ஆனால் 35:22, 27:80 இரண்டு அல்குர்ஆன் வசனங்களையும், நடுநிலையோடு படித்துப் பார்ப்பவர்கள், இறைத்தூதர்கள் முதல் மனிதர்களில் யாரும் இறந்தவர்களிடம் பேசமுடியாது. அப்படி பேசினாலும் அதை அவர்கள் கேட்கமாட்டார்கள். ஆனால் அல்லாஹ் நாடினால் மட்டுமே அப்பேச்சை இறந்தவர்கள் கேட்கச் செய்யமுடியும் என்றே விளங்குவார்கள். மற்றபடி சமாதிகளிலுள்ள நல்லடியார்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள். அவர்களிடம் முறையிடுபவர்களின் முறையீடுகளைக் கேட்கிறார்கள் என்று பொய்யாகக் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி வஞ்சித்து அவர்களை இறைவனுக்கு இணை வைக்கச் செய்து நரகில் தள்ளுகிறார்கள். ஷைத்தானின் நேரடி மொத்த ஏஜண்டுகளாகவே இந்த தர்ஹா மவ்லவி புரோகிதர்கள் செயல்படுகிறார்கள். இந்த அல்குர்ஆன் வசனங்கள் பற்றிய முழு விபரங்களையும் ர.அ. புகாரீ 4ம் பாகம், பக்கம் 577 முதல் 581 வரை ஹதீஃத் எண்கள் 3976 முதல் 3981 வரை படித்துப் பாருங்கள். உண்மை நிலைகளை நீங்களே விளங்கிக் கொள்வதோடு, இந்த தர்ஹா மவ்லவி புரோகிதர்களின் கயவாளித்தனத்தையும் நீங்கள் விளங்க முடியும்.

அல்குர்ஆன் 60:13 வசனம் உண்மையில் என்ன கூறுகிறது என்றால், இறந்து புதைக் கப்பட்டு மண்ணோடு மண்ணாக ஆன பிறகு, எலும்புகளெல்லாம் உக்கி மண்ணாகிப் போன பின்னர் எப்படி மனிதன் மீண்டும் எழுப்பப்படுவான் என்று நிராகரிப்பவர்கள் வாதிட்டனர். அதாவது மண்ணறை வாசிகள் மீண்டும் எழுப்பப்பட மாட்டார்கள் என்று நம்பினார்கள். மாண்டு மண்ணறையில் புதைக்கப்பட்ட பின்னரும் ஒரு காலத்தில் மீண்டும் எழுப்பப்படுவோம் என்ற நம்பிக்கையை நிராகரிப்பவர்கள் இழந்துவிட்டனர். இதையே இந்த 60:13 வசனம் உணர்த்துகிறது. இந்த மறுக்க முடியாத உண்மையை 79:10,11 வசனங்களும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதிப்படுத்துவதையும், புதை குழிகளிலிருந்து எழுப்பப்படுவதை 22:7 குர்ஆன் வசனம் உறுதிப்படுத்துவதையும் படிப்பறிவற்றப் பாமரனும் விளங்க முடியும்.

ஆனால் இந்த தர்ஹா புரோகித மவ்லவிகள் விளங்கமாட்டார்கள். அப்படி விளங்கிக் கொண்டால் அவர்களின் புரோகிதத் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாது. அவர்களின் வீட்டு அடுப்புகளில் பூனை தூங்க ஆரம்பித்து விடும். அவர்களின் குடும்பத்தாரின் வயிறுகள் பசியால் துடிதுடிக்க ஆரம்பித்து விடும். புரோகிதக் கல்வி எவ்வித உழைப்பும் இல்லாமல் சோம்பேறி வாழ்க்கை வாழவும், மக்களை எத்திப் பிழைக்கவும் வழிகாட்டுவதுதான். அக்கல்வியைக் கற்றவர்கள் சத்தியத்தை உணர்ந்து நேர்வழிக்கு ஒருபோதும் வரப்போவதில்லை. புரோகிதத் தொழில் பற்றி ஓர் அறிஞனின் கூற்றை காது கொடுத்துக் கேளுங்கள்.

திறமை என்பது எள்ளளவும் தேவைப்படாத தொழில் புரோகிதத் தொழில் ஒன்றுதான், புரோகிதன் மூடனாக இருக்கலாம். ஒழுக்கத்தில் சீரழிந்தவனாக இருக்கலாம். பால்வினை நோய் உள்ளவனாக இருக்கலாம். இது புரோகிதர்களின் இலக்கணம், புரோகிதர்களின் தில்லுமுல்லுகள் இன்னும் தொடரும். இன்ஷா அல்லாஹ்.

Previous post:

Next post: