மனிதர்களே உங்களை படைத்த  ஒரே இறைவனை மட்டும் வணங்க மாட்டீர்களா?

in 2020 டிசம்பர்

மனிதர்களே உங்களை படைத்த  ஒரே இறைவனை மட்டும் வணங்க மாட்டீர்களா?

S.H. அப்துர்ரஹ்மான்

மனிதர்கள் யாரை மட்டும் வணங்க வேண்டும்?

“மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் (ஒரே) இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறையச்சமும், (தூய்மையும்) உடையோராகலாம். (2:21)

இறை நூலில் தெளிவாக படைத்த ஒரே இறைவனை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் நாத்திகர் தவிர மனிதர்கள் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் மனிதர்களிடம் அதில் நேர்மையில்லை.

படைத்தவன் மட்டுமே இறைவன் என்று கூறும் முஸ்லிம் முன்னோர்களை இறைவனாக்கி அவர்களின் சமாதிகளை வழிபடுகிறார்.

படைத்தவன் மட்டுமே இறைவன் என்று கூறும் இந்து பூதங்களையும் கணங்களையும் இறைவனாக்கி அதன் சிலைகளை வழிபடுகிறார்.

படைத்தவன் மட்டுமே இறைவன் என்று கூறும் கிருஸ்துவர் இறைதூதர் ஏசுவையும் அவர் அன்னை மேரியையும் இறை வனாக்கி அதன் சிலைகளை வழிபடுகிறார்.

உண்மையில் மனிதர்களில் பலர் படைத்தவனை மறந்து தாங்கள் விரும்பியதை இறைவனாக ஆக்கியுள்ளனர்.

ஒரு விபரம் தெரிந்த முஸ்லிமிடம் உங்களின் இறைவனான “அல்லாஹ்’ உங்களுக்கு மட்டும் இறைவனா? உலக மக்கள் அனைவருக்கும் இறைவனா? என்று கேட்டால் தெளிவாக சொல்வார் உலகிற்கே அவன் தான் இறைவன் என்று சொல்வார்.

ஒரு விபரம் தெரிந்த இந்துவிடம் உங்களின் இறைவனான “சிவன்’ உங்களுக்கு மட்டும் இறைவனா? உலகமக்கள் அனைவருக்கும் இறைவனா? என்று கேட்டால் தெளிவாக சொல்வார். உலகிற்கே அவன்தான் இறைவன் என்று.

ஒரு விபரம் தெரிந்த கிருஸ்துவரிடம் உங்களின் இறைவனான “கர்த்தர்” உங்களுக்கு மட்டும் இறைவனா? உலக மக்கள் அனைவருக்கும் இறைவனா? என்று கேட்டால் தெளிவாக சொல்வார். உலகிற்கே அவன்தான் இறைவன் என்று சொல்வார்.

இங்கு இறைவனை அழைக்க பயன்படுத்தப்படும் பெயர்கள் மாறுகிறதே தவிர அனைவரும் வெவ்வேறு பெயர்கள் கூறி அழைப்பது மனிதர்களை படைத்த ஒரே இறைவனையே!

ஆனால் படைத்தவன் ஒருவன் என்பதில் இவ்வளவு தெளிவாக இருக்கும் மனிதர்கள் படைத்த இறைவனை மட்டும் வணங்காமல் முன்னோர்களின் சமாதிகளையும், சிலைகளையும் வணங்குவது சரியா? அல்லது படைத்த ஒரே இறைவனை மட்டும் வணங்குவது சரியா?

உங்களது இறைவன் எங்களது இறைவனே என்று கூறுவது சரியா? அல்லது நமது இறைவன் என்று கூறுவது சரியா? அவனை மட்டும் வணங்குவது சரியா? அல்லது அவனுடன் மனிதர்களையும், தூதர்களையும் மற்றும் சிலைகளை வணங்குவது சரியா? மனிதர்களே சிந்தனை செய்யுங்கள்.

மனிதர்களே உங்களை படைத்தவனுக்கு பயந்து கொள்ளுங்கள்:

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான், பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, (படைத்த) ஒரே இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறிவினர்களையும் (ஆதரியுங்கள்) நிச்சயமாக அல்லாஹ் (ஏகன் இறைவன்) உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (4:1)

மனிதர்களே! உங்களை படைத்த இறைவன் உங்களை கண்காணித்து பின்னர் விசாரணையும் செய்வான் அதற்கு நீங்கள் தயாராகி கொள்ளுங்கள்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே (ஏகன் இறைவனுக்கே) உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான், இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான். அப்படியிருந்தும் (அவனை) நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு (மற்றவர்களை) சமமாக்குகின்றனர். (6:1)

மனிதர்களே படைத்த இறைவனுக்கு யாரையும், எதனையும் இணையாக ஆக்கா தீர்கள். உலகத்தையும் உங்களையும் படைத்த ஒரே இறைவனை மனிதர்களுக்கும், சிலைகளுக்கும், சமாதிகளுக்கும் சமமாக ஆக்காதீர்கள். இதனை இறைவன் மன்னிக்கமாட்டான்,

“வானங்களையும், பூமியையும் படைத்த ஏகன் இறைவனையன்றி வேறு எவரையும் என் பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேனா? அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான், அவனுக்கு எவராலும் உணவளிக்கப்படுவதில்லை” என்று (தூதரே!) நீர் கூறுவீராக. இன்னும் (ஏகன் இறைவனை மட்டும்) வழிபடுபவர்களில் முதன்மையானவனாக இருக்கும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் என்று கூறுவீராக. இன்னும் நீர் ஒருக்காலும் (அவனுக்கு) இணைவைப்போரில் ஒருவராகி விடவேண்டாம். (6:14)

மனிதர்களுக்கு படைத்த இறைவனையன்றி வேறு பாதுகாவலர் உண்டா? உணவளிப்பவன் உண்டா? இல்லையே! பிறகு ஏன் அவனை விட்டு மற்றவற்றை வணங்குகிறீர்கள்? அவனுக்கு இணை வைக்காமல் இருக்கமாட்டீர்களா? படைத்தவனை மட்டும் வணங்க மாட்டீர்களா?

நம்மை படைத்தவனின் சிறப்பு :

(தூதரே!) நீர் கூறுவீராக. அல்லாஹ் (ஏகன் இறைவன்) அவன் ஒருவனே.  (112:1)

படைத்தவன் தனித்த ஒருவனாக ஏக இறைவனாகத்தான் இருக்க முடியும். பலவாக இருக்க முடியாது.

அல்லாஹ் (ஏகன் இறைவன் எவரிடத்தும்) தேவையற்றவன். (112:2)

அவன் தேவைகள் அற்றவன் அவனுக்கு யாரும் எதையும் படைக்கவோ, அளிக்கவோ தேவையில்லை. அவனே மனிதர்களின் தேவைகளை அளிப்பவன்
அவன் எவரையும் பெறவுமில்லை. (எவராலும்) பெறப்படவுமில்லை. (112:3)

படைத்தவன் யாருக்கும் பிறந்த ஒருவனாகவும் இருக்க முடியாது. அவனுக்கு பிறந்தவர்களும் யாரும் இருக்க முடியாது. நாம் இறைவனின் பிள்ளைகள் என்பது போலி வாதம். நாம் இறைவனால் படைக்கப்பட்ட அவனது அடியார்கள் அதுதான் உண்மை.

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112:4)

படைத்த இறைவனுக்கு யாராவது நிகர் ஆக முடியுமா? அவனால் படைக்கப்பட்ட அவனது அடியார்களாகிய மனிதர்களும், மனிதர்களில் அவனால் தேர்வு செய்யப்பட்ட இறைதூதர்களும் அவனது அடிமைகளே பிறகு அவனுக்கு இணையாக யார் தான் இருக்க முடியும்.

இத்தனையும் தெரிந்த மனிதன், தான் வணங்கும்போது இறைவனை மட்டும் வணங்காது, சமாதிகளையும், சிலைகளை யும், அவர்களின் தூதர்களையும், உயிருடன் உள்ள மனிதர்களையும் இறைவனுக்கு இணையாக கருதி வணங்கி இறைவனுக்கு இணை வைக்கும் பாவம் செய்கிறான்.

மனிதர்களே! படைத்த இறைவனுக்கு யாரையும் இணையாக்காமல் அவனை மட்டும் வணங்கி அவனது பொருத்தத்தை பெற முயலுங்கள். ஏகன் இறைவன் உங்களை நேர்வழியில் நடத்துவான்.

Previous post:

Next post: