அமல்களின் சிறப்புகள்….

in 2021 மார்ச்

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல்

அமல்களின் சிறப்புகள்….

ஒரு திறனாய்வு!

  1. அப்துல் ஹமீத்

தொடர் : 67

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :

புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்)

தலைப்பு : திக்ரின் சிறப்புகள்

குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.

தமிழாக்கமும், வெளியிட்டோரும் :

பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.

பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரி 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது பதிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.

சென்ற  இதழில் ….!

“அஸ்ருத் தொழுகைக்குப் பிறகும், பஜ்ர் தொழுகைக்குப் பிறகும் சிறிது நேரம் திக்ரு செய்பவர்களுடைய காரியங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று அல்லாஹுதஆலா கூறியதாக நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள் என்று, அமல்களின் சிறப்புகள் (அசி) புத்தக ஆசிரியர் எழுதியிருந்தது கலப்படமில்லாத சுத்தமான பொய் என்பதை “பொறுப்புகள்’ பற்றி குர்ஆனும், ஹதீஃதுகளும் கூறியிருந்ததை ஆதாரங்களாக காண்பித்து சென்ற இதழில் நிரூபித்திருந்தோம்.

இந்த இதழில்…..!

அமல்களின் சிறப்புகள் (அசி) புத்தகம், பக்கம் 404ல் கடைசி பாராவில் எண் 20ல் ஹதீஃது என்று எழுதப்பட்டிருக்கும் செய் தியை இன்ஷா அல்லாஹ் இந்த இதழில் ஆய்வு செய்வோம்.

அசி புத்தகம் தெரிவிக்கும் செய்தி!

ஹஜ்ரத் அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: “உலகம் சபிக்கப்பட்டதாகும். உலகிலுள்ள பொருட்களும் சபிக்கப்பட்டவையாகும் (அல்லாஹ்வின் அருளைவிட்டு தூரமானவையாகும்), எனினும் அல்லாஹ்வுடைய திக்ரும், அதற்கு நெருக்கமாயிருக்கின்ற பொருளும், இல்மைக் கற்றுக்கொண்ட ஆலிமும், இன்னும் இல்மைக் கற்றுக்கொள்ளும் முதஅல்லிமையும் தவிர” என்று ரசூலுல்லாஹி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன். (நூல்: தர்ஃகீப்)

எமது ஆய்வு!

உலகமும், உலகிலுள்ள பொருட்களும் சபிக்கப்பட்டவையாம்! அல்லாஹ்வுடைய திக்ர், அதற்கு நெருக்கமாயிருக்கின்ற பொருள்கள், இல்மைக் கற்றுக்கொண்ட ஆலிமும், இன்னும் இல்மைக் கற்றுக்கொள்ளும் முதஅல்லிமும் சபிக்கப்படாதவர்களாம்.

உலகமும், உலகிலுள்ள பொருட்களும் சபிக்கப்பட்டவையா? என்பது உண்மையா என்பதை ஆராயப் புகுந்தால், இந்த செய்தி தர்ஃகீப் என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக அசி புத்தகம் கூறுகிறது. இந்த புத்தகத்தில் மிகப் பெரும்பாலும் பொய்யான செய்திகள்தான் கொட்டிக் கிடக்கும் என்பது ஊரறிந்த உண்மை. இருப்பினும், ஆய்வு செய்ததில் குர்ஆனிலும், சஹீஹான ஹதீஃதிலும் இவ்வாறு சொல்லப்படவில்லை.

உலகிலுள்ள மக்களும், ஒட்டுமொத்த உலகமும் அப்படியும் இப்படியுமாகத்தான் இருக்கிறது என்ற நடைமுறை உண்மையை ஒவ்வொருவரும் கண்கூடாகப் பார்த்து வருவதால் இதை எவரும் ஒப்புக்கொள்ளவே செய்வர். இப்படி இருக்கும்போது அசி ஆசிரியர், அவரது வழக்கத்தின்படி பொய்யை சாமர்த்தியமாக அவிழ்த்துவிடுகிறார். அதையும் எப்படி அவிழ்த்து விடுகிறார் என்பதை அறிந்தால், ஆச்சரியப்படுவீர்கள். அதற்கு முன்பாக சிறு விளக்கம் தேவைப்படுகிறது. அதனைத் தெரிவிக்கிறோம்.

ஆலிம் என்றால் அறிந்தவர் என்பது அர்த்தமாகும். அதாவது அறிவாளி என்பதாகும். தன்னைத்தானே அறிவாளி என்று ஒரு அறிவாளி கூறிக்கொள்வாரா? நிச்சயமாக கூறிக்கொள்ளமாட்டார். அறிவாளி என்று தம்மை வேறு யார் கூறினாலும், அவர் அதை சிறிதும் விரும்பமாட்டார், அதை வெறுப்பார், எனவே அப்படி அழைக்காதீர்கள் என்று அழைப்பவர்களைத் தடுத்தும் விடுவார். பிறர் புகழ்வதால், நாம் பெருமை கொண்டுவிடுவோம் என்ற அச்சமே இதற்குக் காரணம். பெருமைக்குரிய ஒரே ஒரு தனி ஒருவனான வல்லோன் அல்லாஹ் மட்டுமே என்பது உண்மையாக இருக்கும்போது, பெருமைக் கொண்டால் சுவர்க்கத்தின் வாசனையைக் கூட நுகரமுடியாது என்ற ஹதீஃதை அவர் அறிந்தவராக இருப்பதால், அந்த அறிவாளி கிஞ்சிற்றும் பெருமை கொள்ளமாட்டார். ஆலிம் என்பது ஒருமை, ஆலிம் என்பதன் பன்மை “உலமா’ என்பதாகும். உலமா என்றால் அறிந்தவர்கள் அதாவது அறிவாளிகள் என்பது அர்த்தமாகும். தங்களைத் தாங்களே அறிவாளிகள் என்று அறிவாளிகள் கூறிக்கொள்வார்களா? நிச்சயம் கூறிக் கொள்ளமாட்டார்கள், அதுமட்டும் அல்ல, பிறர் எவரும் தங்களை அறிவாளிகள் அதாவது உலமாக்கள் என்று கூறினால், அப்படிக் கூறுவதை உண்மையான அறிவாளிகள் அதாவது உலமாக்கள் விரும்பவும் மாட்டார்கள், தம்மை புகழ்பவர்களை அப்படிக் கூறக்கூடாது என்று தடுத்தும் விடுவார்கள்.

சுவர்க்கமாவது அதன் வாசனையாவது என்று அவற்றைப் புறந்தள்ளிவிட்டு, மனம்போன போக்கில் தங்களைத் தாங்களே உலமாக்கள் என்று பீற்றித் திரிபவர்களை புகழுக்குரியவனான அல்லாஹ், தான் இறக்கி அருளிய நூலான பரிசுத்த குர்ஆனில் இடித்துரைப்பதைப் பாருங்கள்.

“தங்களைத் தாங்களே பரிசுத்தவான்கள் என்(றுபீற்றித்திரி)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் அப்படி) அல்ல! அல்லாஹ்தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான், எவரும் ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (அல்குர்ஆன்: 4:49)

ஆனால் உலமாக்கள் என்று தங்களை, பிறர் கூறிப் புகழ்வதைத் தடுக்காமல் இருந்து கொண்டிருக்கிறார்களே இது போன்ற ஆட்களைத்தான் அசி புத்தகமும் பெரும்பான்மை முஸ்லிம்களும் உலமாக்கள் என்று கூறிக்கொண்டிருக்கின்றனர்! இது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

மார்க்கத்தில் இல்லாத பொய்புரட்டு சமாச்சாரங்களை தெரிவித்து விட்டு அவைகளை ஹதீஃதுகள் என்று பொய் சொல்வது தான் அசி புத்தகத்தின் உறுதியான கொள்கை! இப்போது அசி ஆசிரியர், அவரது வழக்கத்தின்படி பொய்யை சாதுரியமாக எப்படி அவிழ்த்து விடுகிறார் என்பதை கவனியுங்கள். அல்லாஹ்வுடைய திக்ர், அதற்கு நெருக்கமாயிருக்கின்ற பொருள்கள் சபிக்கப்படாதவைகள் என்று சாமர்த்தியமாக எழுதியிருக்கிறார். இதற்கு எவரும் மாற்றுக் கருத்து கூறி இதைத் தவறு என்று சொல்லமுடியாதல்லவா? இந்த சூழலைப் பயன்படுத்தி அசி ஆசிரியர் அல்லாஹ்வுடைய திக்ர், அதற்கு நெருக்கமாயிருக் கின்ற பொருள்கள் சபிக்கப்படாதவைகள் என்று எழுதி, இதன்மூலம், தாம் உண்மையைக் கூறுபவன் என்ற தோற்றத்தை உருவாக்கி, அதைத் தொடர்ந்து ஆலிம்கள் மற்றும் முதஅல்லிம்களையும் அந்த வாக்கியத்தில் உள் நுழைந்து விடுகிறார். அதாவது ஆலிம்கள், முதஅல்லிம்களும் சபிக்கப்படாதவர்களாம்.

தொழவைக்க, குர்ஆன் கற்பிக்க, மார்க்க அமல்களுக்கு கூலி வாங்கக் கூடாது என்ற இறைபோதனைகளையும் மற்றும் தூதரின் போதனைகளையும் தூர எறிந்து விட்டு, “மார்க்கத்தைத் தொழிலாக’ செய்துகொண்டு இருப்பவர்கள் தான் இந்த ஆலிம்கள், இதற்கு விதிவிலக்காக இருந்து கொண்டிருக்கும் விரல் விட்டு எண்ணக்கூடியவர் களுக்கான நற்கூலி இறைவனிடத்தில் இருக் கிறது என்று அல்லாஹ்வே நன்மாராயம் கூறுகிறான்.

அடுத்து, கூலி வாங்கக்கூடாது என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்து தடுத்து இருப்பதைக் கூறும் ஓரிரு இறைவசனங்களை மாதிரிக்காகக் கீழே காண்பித்துள்ளோம்.

“உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களைப் பின்பற்றுங்கள், இன்னும் இவர்களே நேர்வழிப் பெற்றவர்கள்” (அல்குர்ஆன் 36:21) யாஸீன் சூராவிலுள்ள இந்த இறைக் கட்டளைக்கு சிறிதும் பயப்படாமல், இந்த ஆயத்தையே ஓதி கூலி வாங்கிச் சென்று விடுகிறார்கள். சில பள்ளிகளில் பெரும்பாலும் பஜ்ர் தொழுகைக்குப்பின் இமாம்கள் குர்ஆனை சிறிது நேரம் தஃலீம் செய்வார்கள். தங்களுக்கு எதிராக இந்த ஆயத்துக்கள் வரும்போது அவைகளை தவிர்த்து (ஸ்கிப்ஆன்) விடுவார்கள். இவர்கள் ஆலிம்களாம்! உலமாக்களாம்! கேவலம்!

அடுத்த இறை வசனங்களைப் பாருங் கள்! அவைகளைப் படித்தால், மறுமையின் பயம் நம்மை கவ்விக்கொள்ளும். நாம் கூலி வாங்கிக் கொண்டு இருப்பவர்களாக இருந் தால், கூலி வாங்குவதை விட்டுவிடுவோம்.

அல்குர்ஆன் 68:42: கெண்டைக்காலை விட்டு (திரை) அகற்றப்பட்டு, ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்படும் அந்த நாளில், அவர்கள் அதற்கு (ஸுஜூது செய்ய) இயலாது இருப்பார்கள்.

இந்த ஆயத்திற்கான ஹதீஃதைப் பார்த்தவுடன், மறுமையில் எமது நிலை குறித்து பயம் பற்றிக் கொள்கிறது.

புகாரி எண்: 4919,4920 அறிவிப்பாளர்: அபூஸயீது(ரழி), இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம் இறைவன் திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த நாளில், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வொரு ஆணும், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்வார்கள், முகஸ் துதிக்காகவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் தொழுது ஸஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் ஸஜ்தா செய்ய முற்படுவார்கள். அவர்களின் முதுகு (குனிய முடியாதவாறு) கட்டையைப் போல் மாறிவிடும்.

68:43: அவர்களுடைய பார்வை கீழ் நோக்கியவையாக இருக்கும் நிலையில், இழிவு அவர்களை மூடிக்கொள்ளும், அவர்களோ (உலகில்) திடகாத்திரமாக இருந்த போதும் ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தனர். (ஆனால், அலட்சியமாக இருந்தனர்)

68:44: எனவே, என்னையும், இந்தச் செய்தியைப் பொய்யாக்குவோரையும் விட்டுவிடுவீராக! அவர்களே அறியாத விதத்தில் படிப்படியாகப் பிடிப்போம்.

68:45 : மேலும், நான் அவர்களுக்கு அவகாசம் கொடுப்பேன். நிச்சயமாக என் திட்டமே உறுதியானது.

68:46 : நீர் அவர்களிடம் ஏதேனும் கூலி கேட்டு, அதனால் அவர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டுவிட்டதா?

68:47 : அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் ஏடு) அவர்களிடம் இருந்து, அதில் அவர்கள் எழுதுகின்றார்களா?

68:48 : ஆகவே, (நபியே!) உம் இறைவனின் கட்டளைக்காக நீர் பொறுத்திருப்பீராக!

இதைப் படித்த பிறகும் உங்களில் யாருக்கவது, தொழ வைக்க கூலி வாங்க மனம் வருமா? வரும்! இந்த ஆயத்தைப் புறந்தள்ளி விட்டு கெண்டைக்காலாவது, ஸஜ்தாவாவது, மறுமையாவது என்று கேலியாக எண்ணிக்கொள்ளும் அசி புத்தகம் கூறும் உலமாக்களுக்கு (!) வரும்! அல்லாஹ் அவர்களை நேர்வழியில் செலுத்துவானாக.

மேலும், கூலி சம்பந்தமாக 38:86, 11:51, 12:104, 23:72, 25:57, 26:109, 26:127, 26:145, 26:164, 26:180, 34:47 ஆகிய வசனங்களை ஊன்றி படியுங்கள். இன்னும் இன்னும் நிறைய வசனங்கள் இது விஷயமாக இருக்கின்றன.

ஒட்டுமொத்த உலகையும் சபிக்கப்பட்டது என்று சொல்வதற்கு யாருக்கு உரிமை இருக்கிறது? எல்லாப் புகழும் உலகங்கள் யாவற்றுக்கும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே ஆகும் என்று 6:45 இறைவசனம் தெரிவித்திருப்பதால், ஒட்டுமொத்த உலகையும் படைத்த ஏக இறைவன் ஒருவன் மட்டுமே அப்படிக் கூற உரிமை உள்ளவன். எனவே குர்ஆனும், ஹதீஃதும் இது விஷயமாக என்ன சொல்கிறது என்பதைப் பார்த்தாலே அசி புத்தகத்தின் கோர முகம் வெளிப்படும்.

ஈமானுடன் நற்செயல்கள் செய்வோருக்கு உண்ணுவதற்கு ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் இதுவே முன்னரும் (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறுவார்கள் என்று அல்லாஹ் 2:25 இறைவசனத்தில் ஏக இறைவன் தெரிவிக்கிறான். அந்த கனிகளை நல்லவர்களும் கெட்டவர்களும் உலகில் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். உலகம் சபிக்கப்பட்டிருந்தால் இவைகளெல்லாம் நடந்துகொண்டு இருக்க முடியுமா? சிந்தியுங்கள்.

இன்னும் அதிகமான ஆதாரங்களைத் தருகிறோம். சிந்தித்துப் பாருங்கள். ஏக இறைவன், இந்த உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை என்று 6:32 இறைவசனத்தில் கூறினாலும், உலக வாழ்க்கையில் சிறிது சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று 100:23, 100:70 ஆகிய இறைவசனங்களில் கூறினாலும், உலகையும் அதில் உள்ளவைகளையும் சபிக்கப்பட்டவைகளாக எங்குமே கூறவில்லை. மாறாக, இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை என்று 6:90 இறைவசனத்திலும், கெட்டவர்களை சோதிப்பதற்காகவே உலக வாழ்க்கையின் அலங்காரங்களைக் கொடுத் திருப்பதாக அல்லாஹ் 20:131 வசனத்திலும், உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக இவ்வேதத்தை தன் அடியார் மீது இறக்கியருளியதாக மிக்க பாக்கியமுடைய அல்லாஹ் 25:1 வசனத்திலும், உலக வாழ்க்கை கெட்ட மனிதர்களையும் ஜின்களையும் மயக்கிவிட்டதாக அல்லாஹ் 6:130 இறைவசனத்திலும் தெரி விக்கிறான். இப்போதும் கூட அவர்களை சபித்துவிட்டதாக அல்லாஹ் கூறவில்லை.

உலகிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தேன் என்று அல்லாஹ் 2:25வது இறை வசனத்தில் கூறுகிறான். 2:122 இறைவசனம் இஸ்ராயீலின் மக்களுக்குநன் கொடைகளை அளித்ததாக அல்லாஹ் கூறுகிறான். 2:251வது இறைவசனம், நிச்சயமாக அல்லாஹ் ஒட்டுமொத்த உலகத்தாருக்கும், பெருங்கருணையுடையோனாக இருக்கிறான் என்று கூறுகிறது. பெண்கள், ஆண்கள், பொன், வெள்ளியிலான பெருங்குவியல்கள், குதிரைகள், கால்நடைகள், சாகுபடி நிலங்கள் இவைகள் உலக வாழ்வின் சுகப்பொருள்கள் என்று 3:14 இறை வசனம் கூறுகிறது.

எவரேனும் உலகத்தின் பலனை விரும்பினால் நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம் என்று 3:145 இறைவசனம் கூறுகிறது.

முதல் மனிதரையும், அவரிலிருந்து அவர் மனைவியையும் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான் என்று 4:1 இறைவசனம் கூறுகிறது.

குற்றவாளிகள் நரக நெருப்பின் முன் நிறுத்தப்படும்போது எங்கள் கேடே! நாங்கள் திரும்ப (உலகத்திற்கு) அனுப்பப்பட்டால், இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க மாட்டோம், நாங்கள் முஃமின்களாக இருப்போம் என்று சொல்வார்கள் என்று 6:27, 7:53 ஆகிய இறை வசனங்கள் கூறுகின்றன. மேற்கண்ட எந்த நிலையிலுமே யாரையும் சபித்துவிட்டதாக அல்லாஹ் கூறவேயில்லை. மக்காவில் உள்ள கஃபத்துல்லாஹ் பரக்கத்து மிக்கதாகவும் உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருப்பதாகத்தான் 3:96 இறைவசனம் தெரிவிக்கிறது.

அல்லாஹ் யாரை சபிக்கிறான் என்பதையும் தெரிவித்து விட்டான். அல்லாஹ்வின் மீது பொய் சொல்லும் அசி புத்தகத்தையும் அதன் ஆசிரியரையும் இதுபோன்ற மற்றவர்களையும் சபித்திருப்பதைப் பாருங்கள்.

“அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையை சொல்பவனைவிட பெரும் அக்கிர மக்காரன் யார்? அத்தகையோர் மறுமையில் இறைவன்முன் நிறுத்தப்படுவார்கள்.

“இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்’ என்று சாட்சி சொல் வோர் கூறுவார்கள், இத்தகைய அநியாயக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்”. (அல்குர்ஆன்: 11:18)

இப்படிப்பட்ட கடுமையான எச்சரிக்கைகள் அல்லாஹ்விடமிருந்து வந்திருந்தும், அசி புத்தக ஆசிரியர் அவற்றைப் பொருட்படுத்தாமல், அல்லாஹ்வின் அச்சம் சிறிதுமின்றி பொய்யான செய்திகளை மார்க்க மாக்குகிறார். தப்லீக் ஜமாஅத்திலிருக்கும் சகோதரர்கள் இறைவசனங்களைக் கண்ணுற்று அங்கிருந்து வெளியேறி அல்லாஹ்விடமும் அல்லாஹ்வின் தூதரிடமும் விரைவில் திரும்பி விடுவீர்கள் என்று நம்புகிறோம்.  (இன்ஷா அல்லாஹ் தொடரும்….)

Previous post:

Next post: