பொதுத் தேர்தலும் முஸ்லிம்களும்…

in 2021 மார்ச்

பொதுத் தேர்தலும் முஸ்லிம்களும்…

இப்னு ஹத்தாது

பொதுவாக ஐந்து வருடங்களுக்கொரு முறை இந்திய மக்கள் சந்திக்கும் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. ஏமாற்றிப் பிழைப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள் – அரசியல் புரோகிதர்கள் மக்களை ஏமாற்றுவது எப்படி? அவர்களின் வாக்குச் சீட்டுக்களை கவர்வது எப்படி? என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல் புரோகிதர்களில் இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் என்று சொல்லுவதற்கு யாரும் இல்லை எல்லோரும் இன்றைய சாக்கடை அரசியலில் ஊறிய மட்டைகள்தான்.

ஆட்சியைப் பிடிக்கும் அதிகார மோகத்தில், கொள்கையில் முழுக்க முழுக்க மாறு பட்டவர்களுடன் கூட்டணி அமைக்கவும், அதற்காக கோடி கோடியாக கொள்ளையடித்த பணத்திலிருந்து பேரம் பேசி கொடுக்கவும் தயங்காதவர்கள் இன்றைய அரசியல்வாதிகள். ஆட்சியில் இருக்கும்போது 10 ஆயிரம் கோடி கொள்ளை அடித்தால் அதில் பாதி 5 ஆயிரம் கோடியை வாக்களார்களுக்கும், மற்றவர்களுக்கும் லஞ்சமாகக் கொடுத்து மீண்டும் ஆட்சி கட்டிலேறி 20 ஆயிரம் கோடி கொள்ளை அடிக்க திட்டம் வகுப்பவர்கள் இன்றைய அரசியல்வாதிகள்.

இன்றைய அரசியல்வாதிகளைக் கொண்டு இந்திய நாட்டிற்கு விமோசனம் பிறக்கும் என்று எதிர்பார்ப்பது, காளை மாடு கன்று போடும் என்று எதிர்பார்த்த கதைதான். ஒரு சமூகப் புரட்சி ஏற்பட்டாலே அல்லாமல் நம் நாட்டிற்கு விடிவு காலம் இல்லை. இந்த நிலையில் இன்றைய அரசியல், தேர்தல் இவைகளில் கவனம் செலுத்துவது வீண் வேலை என்பதில் ஐய மில்லை. இந்த அரசியல்வாதிகள் நமக்கு நல்லது செய்வார்கள் என்று நம்பி அவர்களைத் தேர்ந்தெடுப்பது முழு அறியாமையாகும். இன்றைய அரசியலை விட்டு ஒதுங்கி, தேர்தலை புறக்கணிப்பதே சாலச் சிறந்தது என்றே பல சிந்தனையாளர்கள் நினைப்பார்கள். அது முஸ்லிம்களுக்கு மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தாவிட்டால் அதுவே மிகவும் நல்லது என்று நாமும் சொல்லுவோம்.

ஆனால் அப்படிப்பட்ட பாதிப்புகள் இல்லாத நிலையில் இந்திய நாட்டு முஸ்லிம் கள் இல்லை. இந்திய முஸ்லிம்கள் பொதுத் தேர்தலைப் புறக்கணிக்கும் நிலை ஏற்பட் டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவது மட்டுமின்றி பிறந்த நாட்டின் மீது அவர்களுக் கிருக்கும் பற்றும், அக்கறையும் கேள்விக் குறியாக்கப்படும். இருக்கிற தொல்லைகள் போதாதென்று மேலும் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுவார்கள். கேவலம் தேர்தலின் போது முஸ்லிம்களின் வாக்குரிமையை மட்டுமே காரணமாகக் கொண்டு கொஞ்சத் திற்குக் கொஞ்சமாவது முஸ்லிம்களை மதித்து நடக்கும் அரசும், அரசியல் கட்சி களும் அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் உதாசீனம் செய்யும் நிலை ஏற்படலாம்.

ஜனநாயக அரசியல் முறை, குறிப்பாக இன்று இந்திய நாட்டில் பணம் படைத்த கொள்ளையர்களும், தாதாக்களும் இந்திய அரசியலை ஆட்டிப் படைக்கும் அரசியல் முறை இஸ்லாத்திற்கு முழுக்க முழுக்க முரணானதாகும். ஆயினும் நிர்பந்த நிலை யில் பொதுத்தேர்தலில் பங்கு கொள்ளும் கட்டாயத்தில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். வட்டி தெள்ளத் தெளிவாக ஹறாம், முஸ்லிம்கள் கண்டிப்பாக வட்டி சம்பந்தப்பட்ட காரியங்களில் ஈடுபடக் கூடாது. ஆயினும் இந்திய நாட்டில் நிர்பந்த நிலையில் வட்டி சம்பந்தப்பட்ட வங்கிகளில் முஸ்லிம்கள் எப்படி தொடர்பு கொள்ளும் கட்டாயம் இருக்கிறதோ, அது போன்றதொரு கட்டாயம் இந்திய பொதுத் தேர்தலிலும் இருக்கிறது.

யாரும் தகுதியில்லை, யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று நாம் நினைத்துக் கொண்டால், நமது வாக்குச் சீட்டை பயன்படுத்தி கடும் அயோக்கியர் களுக்கு கள்ள ஓட்டுப் போடப்படும். மாபெரும் கேடுகெட்ட கள்ள ஓட்டு கலாச்சாரத்தை ஊக்கப்படுத்துவார்கள். எனவே அதிகாலையிலேயே சென்று நமது ஓட்டுகளை நாமே போட்டு கள்ள ஓட்டு கலாச்சாரத்திற்கு இடம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மற்றபடி, நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் நிலையில் வாக்களிப்பதைத் தவிர்ப்பது தவறாகும். அதற்காக வாக்காளர் பட்டியலிலிருந்து நமது வாக்கு ரிமையை நீக்கிக் கொள்ளுவதும் பெருந் தவறாகும். காரணம், இந்த நாட்டின் பிரஜை என்பதை இழப்பதற்கு அதுவே காரணமாகிவிடும். பம்பாயில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத முஸ்லிம்களில் குடியுரிமை சந்தேகிக்கப்பட்டு அவர்கள் பலவிதமாகக் கொடுமைப்படுத்தபடுவதும், பம்பாயை விட்டு விரட்டப்படுவதும் நாடறிந்த உண்மை. அப்படிப்பட்ட நிலைக்கு முஸ்லிம்கள் ஆளாகக் கூடாது. எனவே ஏதாவதொரு வகையில் தங்களின் வாக்குரிமையை உபயோகித்து விடவேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறோம்.

இந்திய முஸ்லிம்கள் அனைவரும் தங்களுக்கிடையேயுள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து இந்த தேர்தல் சமயத்திலாவது ஒன்றுபட்டு ஒரே தலைமையில் செயல்பட்டு முஸ்லிம் ஆண், பெண் அனைவரின் ஒட்டுமொத்த வாக்குகளும் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கே கிடைக்கும் நிலையை தோற்றுவித்தால் முஸ்லிம்கள் ஆதரிக்கும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும் என்பதில் சந்தேகமுண்டா? அப்படி முஸ்லிம்களின் ஒன்றுபட்ட நிலை மட்டும் ஏற்பட்டுவிட்டால், எந்த அரசியல் கட்சியும் முஸ்லிம்களை இழிவாக நினைக்க முடியுமா? புறக்கணிக்க முடியுமா? முஸ்லிம்களின் உரிமை களைப் பறிக்க முடியுமா? சொத்துக்கள் சூரையாடப்படுமா? முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்படுவார்களா? இன்று முஸ்லிம்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற துன்பங்களுக்கு ஒரு முடிவு காலம் ஏற்படுமா? இல்லையா? இந்திய நாட்டில் இன்று முஸ்லிம்கள் அனுபவித்து வரும் கொடுந்துன்பங்களுக்கு அடிப்படை காரணம் அவர்கள் பல பிரிவுகளாகவும், அமைப்புகளாகவும் பிரிந்திருப்பதேயாகும்.

சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழும் இந்த நாட்டில் அவர்கள் இப்படி துண்டு துண்டாகப் பிரிந்து கிடப்பது பெரும் சாபக்கேடாகும். தங்களுக்கிடை யேயுள்ள கருத்து வேறுபாடுகளை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு கலிமா சொன்னவர்கள் அனைவரும் முஸ்லிம்கள். அவர்களுக்கு ஒரே இறைவன், ஒரே வேதம், ஒரே இறுதி நபி, ஒரே வாழ்க்கை நெறி, ஒரே தலைவர் என்று உறுதியான எண்ணத்துடன் ஒன்றுபடவேண்டும். கேவலம் உலகத்தில் கிடைக்கும் அற்ப லாபங்களுக்காக முஸ்லிம் சமுதாயத்தை பலி கிடாவாக்கும் மனோ நிலை எந்த தலை வனுக்கும் இருக்கக் கூடாது. அப்படி உலக ஆதாயத்திற்காக அலைந்து திரியும் தலைவர்களைப் புறக்கணிக்க வேண்டும். மக்களின் மனோ நிலைக்கு ஏற்றவாறு தாளம் போடும் தலைவர்களும் உண்மையான தலைவர்கள் அல்ல. அவர்கள் அற்ப உலக ஆதாயத்திறகாக மக்களைக் கவர அவர்களுக்கேற்றவாறு தாளம் போடுகிறார்கள்.

முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்காக சொந்த விருப்பு வெறுப்புகளைத் தியாகம் செய்ய வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைக ளுக்கு அடிபணிவதை தங்களின் தலையாய பணியாகக் கொள்ளவேண்டும். நபி(ஸல்) அவர்களின் அடிச்சுவற்றைப் பின்பற்றி தங் களின் வாழ்க்கையின் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும். ஷைத்தான் இதற்கு மாற்றமாக மனிதர்களின் மனோ இச்சைக்கு ஆட்பட்டு அற்ப உலக ஆதாயங்களைப் பெரிதாக எண்ணச் செய்வான். அவனது வலையில் விழக்கூடாது.

அவன் நமது பகிரங்க விரோதி என்று அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் மிகத் தெளிவாக எச்சரித்திருப்பதை முஸ்லிமான ஒவ்வொரு ஆணும், பெண்ணும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்படி முஸ்லிம்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து அனைவரும் ஓரணியில் ஒரே தலைமையில் ஒன்றுபட்டாலன்றி இந்திய நாட்டில் நாம் இழந்து கொண்டிருக்கும் சுதந்திரத்தையும், உரிமைகளையும் மீண்டும் அடைவது நடவாத காரியமாகும்.

முஸ்லிம்கள் ஒன்றுபடுவதே இன்று காலத்தின் கட்டாயமாகும். மற்றப்படி அரசியல் கட்சிகளுக்கும் அரசியல்வாதி களுக்கும் விரோதமாக கோஷங்கள் போடுவதோ, இன்றைய நடைமுறையில் நவீனமாகிவிட்ட பந்த், சாலைமறியல், உண்ணா விரதம், இன்னும் இவை போன்ற செயல் களால் சம்பந்தப்பட்டவர்கள் உலக ஆதாயம் அடையலாமே தவிர, முஸ்லிம்களுக்கு எள்ளின் முனையளவும் ஆதாயம் கிடைக்கப் போவதில்லை. இவை அனைத்தும் இஸ்லாம் தெளிவாக மறுக்கும் தவறான அணுகுமுறைகளாகும்.

முஸ்லிம்களே பொறுப்புணர்ந்து ஓரணியில் ஒன்றுபட்டு ஒரே தலைமையில் இயங்க முன்வாருங்கள்!    (இன்ஷா அல்லாஹ் தொடரும்….)

Previous post:

Next post: