திருமண அவலங்கள்… (பகுதி-1)

in 2021 ஏப்ரல்

திருமண அவலங்கள்… (பகுதி-1)

  1. முகமது ஹனீப்,  திருச்சி

இந்த மனித இனம் வாழ்வதற்கு காற்று, தண்ணீர் எப்படி அவசியமோ அதைப்போன்று இந்த மனித இனம் பூமி முழுவதும் பல்கிப் பெருகி தன் இனத்தை அழியாமல் பெருக்கி வாரிசு வாரிசாக வாழ்ந்து வருவதற்கு திருமணம் என்ற ஆண் – பெண் ஒப்பந்தம் அவசியமாகிறது.

மனித இனம் வாழ அவசியமான காற்றும், நீரும், பூமியை தவிர மற்ற கிரகங்களில் தேவையான அளவு இல்லை. பூமி மட்டும் தான் இந்த மனித இனம் வாழ ஏற்ற இடமாகும். இதைத்தான் அல்லாஹ் அல்குர்ஆனில் “மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம். அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித் தந்தோம். எனினும் நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்திகிறீர்கள். (7:10) என்று இறைவன் சுட்டிக்காட்டுகின்றான். ஆகவே பூமியை தவிர வேறு எந்த கிரகங்களிலும் மனிதன் வசிக்க முடியாது என்பதை இறைவன் தெளிவாக அறிவிக்கிறான். இதை விடுத்து நான் செவ்வாய்க்குப் போகிறேன். நிலவுக்கு போகிறேன் என்று மனிதன் மார்தட்டுவதெல்லாம் அவன் தற்பெருமையை பறைசாற்றவேயன்றி வேறில்லை என்றே கூறலாம். அது போகட்டும் இப்போது நம் விஷயத்துக்கு வருவோம்.

மேலே சொன்னபடி நம் ஜீவியத்தின் அடிப்படைத் தேவையான காற்று நமக்கு இலவசமாகவே கிடைக்கிறது. மூக்கு வழியாக உறுஞ்சினால் போதுமானது. எந்த கஷ்டமும் படத் தேவையில்லை. அதற்கு காசு கொடுக்க வேண்டியதும் இல்லை. எளிதானதாக இருக்கின்றது. இதைப்போல் நீரும் நமக்கு இலவசமாகவே கிடைக்கிறது. எங்கு சென்றாலும் “அம்மா தாகிக்கிறது” என்று சொன்னால் உடனே சொம்பு நிறைய தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள். அதற்காக யாரும் காசு கேட்பதில்லை.

மேற்கண்ட அடிப்படைப் பொருட்கள் மனிதனுக்கு எளிதாக கிடைப்பதைப் போலவே இந்த மனித இனம் பல்கிப் பெருக அவசியமான ஆண்-பெண் திருமண ஒப்பந்தமும் மிக எளிதாக கிடைக்க வேண்டும் என்பதே இறைவன் நமக்களித்த நியதி.

ஆனால் இந்த மனிதன் என்ன செய்கிறான் என்று பார்த்தீர்களா? அதனைப் பெருவதற்கு எத்தனை படாடோபங்கள், ஆடம்பரங்கள், வீண் செலவுகள், கால விரயங்கள் எல்லாம் செய்கிறான். சில அரசமைப்பு தலைவர்கள் இல்லத் திருமணங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. தாங்கள் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு ஊர் உலகத்தைக் கூட்டி கோடிக்கணக்கான பணத்தை கொட்டி தனது பணத்திமிர் மற்றும் பெருமையை நிலைநாட்டுவார்கள். இதைப் பார்த்த சாமான்யர்களும் தாங்களும் தங்கள் கெளரவப் பிரச்சனையாக இதை எடுத்துக் கொண்டு “புலியைப் பார்த்து புனை சூடு போட்டுக் கொண்டதாம்” என்ற பழமொழிக்கேற்ப காசில்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது தமது பெருமையை நிலைநாட்டுவார்கள்.

இறை நிராகரிப்பாளர்கள் தான் இவ்வாறு செய்கிறார்களா? என்றால் அதுதான் இல்லை. அல்லாஹ்வை இறைவனாகவும், முகம்மது(ஸல்)வை தூதராகவும் ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களும் இந்த நடைமுறைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது தான் உண்மை. நபிவழி நடக்கிறோம் என்று சொல்பவர்களும், இதில் சிக்குண்டுதான் கிடக்கிறார்கள். ஏனெனில் பெரும்பான்மை என்ற சமூக ஆற்று வெள்ளத்தில் அவர்கள் அடித்துச் செல்லப்படுகிறார்கள். அதனால் வட்டிக்கு வாங்கியாவது திருமணத்தை படாடோபமாக செய்து வருகிறார்கள். ஆனால் இறைவன் வட்டியை விருத்தியில்லாமல் அழித்து விடுவதாக கூறுகிறான். வட்டி வாங்குவோர் மீதும் வட்டி கொடுப்போர் மீதும் அதற்காக எழுதுபவர், சாட்சி கூறுபவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாவதாக என்ற நபிமொழியையும் மீறி இவர்கள் திருமண பந்தத்தை வட்டியைக் கொண்டு துவங்கும் அவல நிலை ஏற்படுகிறது?

ஆனால் இஸ்லாம் கூறும் திருமண பந்தம் என்பது மிகவும் எளிதானது, எளிமையானது. அவரவர் வசதிக்கேற்ப வலிமா விருந்து கொடுத்துக் கொள்ள ஏற்றது. விருந்து கொடுக்க வசதி இல்லையென்றால் எளிமையான முறையில் 4 பேருக்கு விருந்து கொடுத்தும் நிக்காஹ் முடிக்கலாம் என்பதைத் தன்னகத்தே கொண்டது.

இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் முஸ்லிம்டகளில் உண்ண உணவு, உடுக்க உடை இருக்க இருப்பிடம் போன்ற அடிப்படை வசதியற்ற மக்கள் கூட தனது பிள்ளைகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த நினைப்பதுதான். அதற்கான செலவினங்களுக்காக இவர்கள் மஹல்லா ஜமாஅத்தை நாடுவார்கள். ஜமாஅத் நிர்வாகஸ்தர்களிடம் போய் உதவி தேடுவார்கள். அதற்கவர்கள் இவ்வளவு தொகைக்கு நாங்கள் எங்கே போவோம். நிர்வாகத்தை ஓட்டுவதே பெரும்பாடாக இருக்கிறது. எனவே நாங்கள் உங்களுக்கு ஒரு ஒப்புதல் கடிதம் கொடுக்கிறோம். அதைக் கொண்டு வசூல் செய்து உங்கள் குமர்களை கரையேற்றுங்கள் என்று ஒரு கடிதத்தை வழங்குவார்கள். ஜமாஅத் லெட்டர் பேடில் சீலுடன் உள்ள இக்கடிதத்தை இவர்கள் லேமினேஷன் போட்டுக்கொண்டு மஹல்லாப் பள்ளிகள் ஒன்றுவிடாமலும் இன்னும் ஊர் ஊராக சென்று எனது குமர் காரியத்துக்கு உதவி செய்யுங்கள் அல்லாஹ் உங்களுக்கு கூலி கொடுப்பான் என்று அறிவிப்பு செய்து பிச்சை எடுத்து ஒரு தொகையை வசூல் செய்வார்கள். இதுபோன்ற கேவலமான அவலங்கள் வேறெந்த மதங்களிலும் இனங்களிலும் கிடையாது என்பதை நாம் உணர வேண்டும்.

“பிச்கையெடுக்குமாம் பெருமாளு அதைப் பிடுங்குமாம் அனுமாரு” என்று ஒரு பழமொழி நம் தமிழகத்திலேயே உள்ளது. அதற்கிணங்க இவர்கள் எடுத்த இந்த பிச்சையை முழுவதும் அனுபவிப்பவர்கள் மாப்பிள்ளையும், மாப்பிள்ளை வீட்டாரும், அவர்களைச் சார்ந்தவர்களும்தான். மிகச் சிறந்த மார்க்கத்தை உடைய முஸ்லிம் சமுதாயத்தில் இதைவிட கேவலம் வேறென்ன இருக்க முடியும். பெண் வீட்டார் வசதி இல்லாதவர்கள் எனட்று தெரிந்தும் இவர்கள் அவர்களைப் படுத்தும் பாடு என்னவென்றால் நாங்கள் 200 பேர் வருவோம். 300 பேர் வருவோம் அனைவருக்கும் சாப்பாடு போடவேண்டும். குறைந்தது இத்தனை பவுன் தங்க நகை போடவேண்டும். வரதட்சணையாக இவ்வளவு பணம் தரவேண்டும். இன்னும் அதற்கான சீர் வரிசைகள் எல்லாம் செய்யவேண்டும் என்று முன்பே பேசி முடித்தபடி எல்லாம் சரிவர செய்யவேண்டும். அதற்காக மண்டபம் பிடித்து ஏக தடபுடலாக ஜமாஅத்தார் புடை சூழ மஹல்லா ஹஜ்ரத் நிக்காஹ் ஓத திருமணம் நடந்தேருவதை நாம் கண்கூடாக காணலாம்.    (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: