படைப்பினங்களை ஆராய்ந்து படைத்தவனை அறியும் கல்வி!

in 2021 மே

இதுதான் இஸ்லாம் காட்டும் கல்வி

படைப்பினங்களை ஆராய்ந்து படைத்தவனை அறியும் கல்வி!

S. ஹலரத் அலீ

மறுபதிப்பு :

சமீபத்தில், சவூதி நாளிதழ் “அரப் நியூஸ்’ (Arab News) படித்தபொழுது, ஒரு அமெரிக்கரின் கடிதம் கண்ணில் பட்டது. கோர்டன் ரீட் (Gordon Reade) என்பவர் எழுதுகிறார், “ஒரு காலத்தில் ஐரோப்பிய நாடுகள் இருண்ட காலத்தில் இருந்தபொழுது, அரேபிய முஸ்லிம்கள் கல்வி, கலை, அறிவியல், கணிதம் மற்றும் இராணுவத் துறைகளில் உச்சநிலையில் இருந்ததாகவும், குறிப்பாக, இன்று எனது அமெரிக்கா உலக வல்லரசாக விளங்குவது போல் அன்று அரேபிய முஸ்லிம் நாடு வல்லரசாக இருந்ததாக எனது சரித்திரப் புத்தகத்தில் படித்தேன். ஆனால் இன்று அரபு முஸ்லிம்கள் நிலை தலைகீழாக உள்ளதே! இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்று எனக்கு விடை தெரியவில்லை. நீங்கள் சொல்லுங்கள்” இதுதான் அந்த அமெரிக்கரின் கடிதம்.

இந்த உண்மையை பிரபல ஆய்வாளர் ஜார்ஜ் சர்டன் 1927ம் ஆண்டு வெளியிட்ட தனது “An Introduction to the History of Science” என்ற நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார். அல்குர்ஆன் இறங்கிய முழு காலகட்டம் சுமார் 23 வருடங்கள் கி.பி.610-632 மட்டுமே. ஆனால் அடுத்த 100 வருடங்களுக்குள் (கி.பி.750ல்) பிரமிக்கத்தக்க அளவில் முஸ்லிம்கள் அறிவியல் வளர்ச்சியில் உச்சகட்டத்தை எட்டினர்.

அன்றைய அஞ்ஞான அரபு நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்தத் தற்குறி சமுதாயத்தைத் தட்டி எழுப்ப அவர்களிலிருந்தே எழுதப் படிக்கத் தெரியாத “உம்மி நபி’, நபி(ஸல்) அவர்கள், தமது 23 வருட உழைப்பில் மக்களை மாபெரும் மேதைகளாக, அறிஞர் பெருமக்களாக மாற்றிக் காட்டினார்கள். எந்தளவுக்கு என்று சொன்னால்,

அறிவியல் வளர்ச்சியில் பின் தங்கியிருந்த அன்றைய ஐரோப்பாவை இருண்ட காலம் (Dark Ages) என்றே வர்ணிக்கப்பட்டது. முஸ்லிம்கள் துருக்கி, சைப்ரஸ், ஸ்பெயின், சிசிலி, பிரான்சின் சில பகுதிகளை வெற்றி கொண்ட பின் முஸ்லிம்களின் ஆய்வு நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு ஐரோப்பிய பல்கலை கழகங்களின் பாடமாக போதிக்கப்பட்டது. அல்குர்ஆனை மையமாக வைத்து ஆராய்ந்து எழுதிய ஆய்வு நூல்களை அஸ்திவாரமாக வைத்து தொடர்ந்து ஆய்வு செய்து மிகப் பெரும் தொழிற்புரட்சியை ஏற்படுத்தினர். இன்று பெரும் தொழில் வளநாடுகளாக, வல்லரசாக வலம் வரும் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளின் வளர்ச்சியில், முஸ்லிம்கள் பங்கு அஸ்திவாரம் போன்று மண்ணுக்குள் மறைந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.

உலக மக்களுக்கு கல்விக் கண் திறந்த சமுதாயம் இன்று, விழியிருந்தும் குருடராய் தட்டழிந்துத் தடுமாறித் திரிகிறது. ஐரோப்பிய சமூகம் உயர்வதற்குப் பயன்பட்ட முஸ்லிம்களின் அறிவுச் செல்வம், இன்று முடக்கப்பட்டு மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கிறது. இதற்குக் காரணம் என்ன? இந்த அதல பாதாள வீழ்ச்சிக்கான சூழ்ச்சியை செய்தது யார்?

உம்மி நபிக்கு இறக்கப்பட்ட முதல் வசனமே, “ஓதுவீராக!” இந்த ஓதுதலின், படித்தலின் மேன்மையை, அறிவு பெறுவதன் அவசியத்தை நபி(ஸல்) அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினார்கள், எந்தளவு தெரியுமா?

“பத்ர்” யுத்தத்தில் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட நிராகரிப்பாளர்கள் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால், தான் கற்றதை மதீனத்து மக்களுக்குக் கற்றுக் கொடுத்த பின் விடுதலை அடையலாம் என்று எதிரிகளிடமே எடுத்துரைத்தார்கள். இப்னு ஹம்பலின், முஸ்னத் 1:247, இப்னு ஸாத்: தபகாத்:11:14

“எவரொருவர் அறிவைத் தேடி ஒரு பாதையில் செல்கிறாரோ அப்பாதையை சுவனத்திற்குச் செல்லும் பாதையாக அல் லாஹ் மாற்றிவிடுவான்” என்று நபி(ஸல்) அவர்கள் அறிவைத் தேடுவதில் ஆர்வ மூட்டினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), அபூ கைதமாவின் “அல் இல்ம்’ ஹதீத் எண். 25

எழுதப் படிக்கத் தெரிந்தவர், தெரியாதவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் தமது அண்டை வீட்டார்கள் கற்றுக்கொள்ள ஒருவருக்கொருவர் உதவி செய்யவேண்டும் என்றும் நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அல்ஹைதமியின் மஜ்மா அஸ் ­வாயித் 1:164

மக்கள் அனைவருக்கும் இலவசக் கல்வியை கட்டாயமாக்கினார்கள். ஒரு முறை தமது மாணவரிடம் உபாதா இப்னு ஸாமித்(ரழி) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிய ஒரு வில்லை அன்பளிப்பாகப் பெற்றார்கள். இது தெரிந்த நபி(ஸல்) அவர்கள் நாளை மறுமையில் இந்த வில் உனது கழுத்தில் நரக நெருப்பாக அணிவிக்கப்படுவது உனக்கு விருப்பமாக இருந்தால் இந்த அன்பளிப்பை ஏற்றுக்கொள்? என்று கண்டித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு ஹம்பலின், முஸ்னத் அஹ்மத் 4:315.

கல்வியின் சிறப்பை நபி(ஸல்) அவர்கள் எல்லா நேரமும் எடுத்துரைத்தார்கள். “உங்களில் சிறந்தவர் குர்ஆனை கற்பவரும், கற்றுக் கொடுப்பவரும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்கள்: புகாரி 1:74, அபூதாவூத்

குர்ஆன் அதிகம் ஓதியவருக்கு எல்லா வகையிலும் கூடுதல் கண்ணியம் கொடுக்கப்பட்டது. தொழுகையில் இமாமாக இருக்கும் தகுதியும், போர்க்களத்தில் ­ஹீதானவர்களில் கூட அதிகம் குர்ஆன் மனனம் செய்தவருக்கு அடக்கம் செய்வதில் கூட முன்னுரிமை வழங்கப்பட்டது.

“ஓதுவீராக!” என்று ஒரு வார்த்தையை மட்டும் சொல்லி அல்லாஹ் முஸ்லிம்களை விட்டுவிடவில்லை. கல்வியின் சிறப்பை அறிவின் மேன்மை அல்குர்ஆனில் எங்கும் முழுமையாக மீண்டும் மீண்டும் தொடர்ந்து வலியுறுத்துகிறான்.

அறிவுடையோர் நல்லுணர்ச்சி பெறு வதற்காக இது அல்லாஹ்வின் ஓர் அறிக்கையாக. அல்குர்ஆன் 14:52

அறிவுடையவர்கள் மட்டுமே அல்லாஹ்வை, படைத்தவனை அறியமுடியும். அறிவில்லாதவர்கள் கால்நடைகளை விட கேடுகெட்டவர்கள். அறிவுள்ளவன் மட்டுமே சிந்தித்து தன்னை படைத்த ஒரே இறைவனை வணங்க முடியும். எனவே தான் அல்லாஹ் கூறுகிறான். “நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுபவர்களே (அறிவானவர்கள்) கல்விமான்கள்”. அல்குர்ஆன் 35:28

கல்வியறிவுடையவர்களுக்கு, “அல்லாஹ், அவனுடைய வானவர்கள் வானம் பூமி ஆகியவற்றிலுள்ள படைப்பினங்கள், ஏன் வலைக்குள்ளிருக்கும் எறும்பு, கடலுக்குள் இருக்கும் மீன், இவை அனைத்தும், மனிதர்களுக்கு நேர்வழியை கற்றுத் தருபவனுக்காக இறைஞ்சுகின்றன”. நூல்: திர்மிதி

கல்வியின் சிறப்பை நபிதோழர்கள் மனதில் ஆழமாக பதிவு செய்தார்கள். படித்தவர்களும், படிக்காதவர்களும் சமமாக முடியாது. குருடனும், பார்வையுடையவனும் சமமாக முடியாது. எனவே கல்வியை காணாமல் போன செல்வம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எங்கிருந்தாலும் அதைத் தேடிக் கண்டுபிடியுங்கள் என்று கட்டளையிட்டனர்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கல்வி என்பதை வெறும் வணக்க வழிபாடு என்றளவில் அதை யாரும் முடக்கவில்லை. கல்வி பெறுவது அனைத்து ஆண், பெண் மீதும் கட்டாயக் கடமை என்று அறிவித்தார்கள். இப்பிரபஞ்சத்தைப் பற்றி முழு அறிவும் இஸ்லாத்தின் அறிவே, படைப்பினங்களை ஆராய்ந்து படைத்தவனை நினைவுபடுத்துவதே கல்வி என்பதை நன்கு விளங்கியிருந்தார்கள்.

நபி(ஸல்) அவர்களுக்குப் பின் அபூபக்கர் (ரழி) அவர்கள் அல்குர்ஆனைக் கற்றுக் கொடுக்க நாடெங்கும் அறிஞர்களை அனுப்பி வைத்தனர். அல்குர்ஆனை ஒன்று சேர்க்க முழு முயற்சி எடுத்தார்கள். உமர் (ரழி) அவர்கள் ஆட்சியில் மதீனத்து சிறுவர்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்தனர்.

மதீனாவில் இருந்த வயது முதிர்ந்தவர்கள் கூட குறைந்தது ஐந்து வசனங்களையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என உமர் (ரழி) அவர்கள் அறிவுறுத்தினார்கள். இப்னு கதீரின், ஃபழா இல் 4:495

நகரத்தில் உள்ளவர்கள் மாத்திரம் கல்வியறிவு பெற்றால் போதாது. கிராமப்புற நாடோடி அரபிகளும் அவசியம் கற்க வேண்டும் என்பதற்காக “யஸூத் பின் அப்துல்லாஹ் பின் குறைத்” என்பவரை கிராமப்புறங்களுக்கு அனுப்பி கற்பிக்க ஏற்பாடு செய்தார்கள். மக்களுக்கு அறிவு புகட்டும் கல்வி தடையின்றி நடைபெறுவதை கண்காணிப்பதற்கு அபூசுப்யான் (ரழி) அவர்களை ஆய்வாளராக (Inspector) நியமனம் செய்தார்கள். இப்னு ஹஜ்ரின், அல் இலாபா, 1:83,332

உஸ்மான்(ரழி) அவர்கள் ஆட்சியின் போது இஸ்லாம் அஜர்பைஜான், ஆர்மீனியா வரை விரிந்து பரந்திருந்த மக்களுக்கு அல்குர்ஆன் தேவையைக் கருதி ஒட்டு மொத்த கிதாபை கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். அப்படி கொடுக்கப்பட்ட அல்குர்ஆன் பிரதிகளுக்கும் அதிகம் தேவை ஏற்பட்டது. எனவே அன்றிருந்த அடிமைகள் அல்குர்ஆனை எழுதி பிரதி எடுத்து தேவையுடையவர்களுக்கு விற்பனை செய்தனர். இப்படி முதன் முதலில் பிரதி எடுத்து கொடுத்தவர் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களின் அடிமையாவார்.

மற்ற பிற மதங்கள் கல்வி என்பது உயர்ந்த குலத்திற்கு மட்டும் உரியது. தாழ்த்தப்பட்டவர்கள் நெறிநூல் படிப்பது பாவம். அப்படி மீறிப் படித்தவர்கள் வாயில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்று கூறி இறைமறை (இதை மறை) என்று அவர்கள் நெறிநூல்களை சாமானிய மக்களிடம் மறைத்தனர். இதனால்தான் தமிழ்நாட்டில் இரண்டு முறை முதலமைச்சராக இருந்த ராஜாஜி தாழ்த்தப்பட்ட சூத்திரர்கள் படிக்கக்கூடாது என்பதற்காகவே 1937ல் கிராமங்களில் 2000 தொடக்கப் பள்ளிகளை மூடினார். அப்போது தமிழ்நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தோர் எண்ணிக்கை சுமார் 7 சதவிகிதத்திற்கும் குறைவே. 1952ல் 6000 ஆரம்ப பள்ளிகளை மூடி, எஞ்சிய பள்ளிகளில் அரை நேரம் படிப்பு, அரை நேரம் அவரவர் குலத்தொழில் எனும் “குலக்கல்வித் திட்டத்தை’ கொண்டுவந்தார். ஆனால் பார்ப்பனர்கள் தொழிலே படிப்பு என்பதால் அவர்கள் முழு நேரமும் படித்தனர். ஆதாரம்: கி.வீரமணி, “கீதையின் மறுபக்கம்’ பக்.219,220

ஆனால் அல்லாஹ்வின் நெறிநூல் ஆண்டான் முதல் அடிமை வரை அனைவருக்கும் சமம். அறிவுள்ளவர்கள் அள்ளிப் பருக வேண்டிய அமுதம். இன்னும் குறிப்பாக பிற்கால இஸ்லாமிய அறிஞர்களில் பெரும்பாலோர் அடிமையாய் இருந்து விடுதலை பெற்றவர்களே!

உமர் இப்னு அப்துல் அஜீஸ்(ரஹ்) அவர்கள் ஆட்சியில் ஓர் நிகழ்ச்சி: எகிப்து மக்கள் மத்தியில் ஏற்படும் பிரச்சினைகளை சட்டபூர்வமாக விசாரித்து தீர்ப்பளிப்பதற்கு நீதிபதிகள் தேவைப்பட்டனர். உமர் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் யஸூத் இப்னு அபூஹபீப், அப்துல்லாஹ் பின் அபூ ஜாஃபர் என்ற இரண்டு அடிமையாய் இருந்து விடுதலை பெற்றவர்களையும் ஜாஃபர் பின் ரஸாயா என்ற அரபியையும் நியமித்தனர்.

இதனால் மன வருத்தமடைந்த கலீபாவின் உறவினர்கள் “நீதிபதி நியமனத்திற்கு அடிமைகள்தானா கிடைத்தார்கள், ஏன் எங்களை தேர்வு செய்யக்கூடாது? என்று வினவினர். அதற்கு உமர் பின் அப்துல் அஜீஸ் இவ்விஷயத்தில் என்னைக் குறை சொல்லி என்ன பயன்? நீங்கள் அப்படியே இருக்கிறீர்கள். ஆனால் அடிமைகள் கல்வியின் மூலம் தங்களை உயர்த்திக் கொண்டார்கள்” என்று பதிலளித்தார்கள். அல்மக்ரீஸயின் குதாத் 4:143

அன்றிருந்த முஸ்லிம்கள், அல்குர்ஆன் வசனங்களையும் ஸுன்னாவையும் வணக்க வழிபாட்டில் மட்டும் முடக்கி விடாமல் தம் முழு வாழ்வியல் தேவைகளுக்கும் தேடுதல்களுக்கும் பயன்படுத்தினார்கள். அதன் விளைவாக ஏராளமான ஆய்வு நூல்கள் எல்லாத் துறைகளிலும் வெளிவந்தன. பல புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு அளித்தார்கள். ஒரே ஒரு உதாரணம்:

இன்றைய நாகரீக உலகை வழிநடத்திச் செல்பவைகள் கம்ப்யூட்டர்களே என்று சொன்னால் யாரும் மறுக்கமாட்டார்கள். பஸ், ரயில், விமானம், தொலைபேசி நிர்வாகம் போன்ற எல்லாத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. கம்ப்யூட்டர் செயலிழந்தால் உலகம் ஸ்தம்பித்து விடும் அளவிற்கு மிக முக்கியமான சாதனமாக விளங்குகிறது. கம்ப்யூட்டருக்கான, கணக்கீட்டிற்கான அடிப்படையை கண்டுபிடித்தவர்கள் முஸ்லிம்கள். ஆம்! ஸிபர் என்னும் சைபரை “0” கண்டுபிடித்து உலகிற்கு அளித்தவர்கள் முஸ்லிம். ஏழாம் நூற்றாண்டு வரை 1 முதல் 9 மட்டுமே, பத்து இல்லை, பத்திற்கு மேல் ரோமன் வடிவில் X, XI, XII என்று எழுத்து இருந்தது. 0 சைபர் கண்டுபிடித்த பின்பே வியக்கத்தகு மாற்றங்கள் ஏற்பட்டன. நவீன கம்ப்யூட்டரின் அடிப்படையே இரண்டு இலக்க எண்ணான 0,1 (Binary Numbers) தான். சைபர் இல்லையேல் கம்ப்யூட்டரே இல்லை.

அன்றைய ஐரோப்பிய நாடுகள் இருண்டு போய் இருந்ததற்கான காரணத்தை ஆராயும்பொழுது ஓர் உண்மை தெரியும். அன்றைய ஆட்சியாளர்கள் அனைவரும் கிருஸ்தவ திருச்சபைக்கு கட்டுப்பட்டு அதன் காலடியில் வீழ்ந்து கிடந்தனர். மன்னரை விட மதகுரு போப்பிற்கு அதிக அதிகாரம் ஒட்டுமொத்த ஐரோப்பிய உலகமும் மத புரோகித பாதிரிகளின் கைப்பிடியில் சிக்கித் தவித்தன. அவர்கள் கரங்களால் எழுதப் பெற்ற வேத நூல்கள், மூட நம்பிக்கையையும், அறிவிற்கு பொருந்தாத வைகளையும் மதமாக்கி காட்டின. எவரேனும் இதை எதிர்த்தால் தெய்வ குற்றம் சாட்டி மரண தண்டனையை பரிசாக அளித்தனர்.

“உலகம் உருண்டை என்று சொன்ன கலீலியோ”வின் கதி நாமறிந்ததே! ஏனெனில் பைபிள் உலகம் தட்டை என்று சொல்கிறதே. பைபிளுக்கு மாறுபடலாமா? இது தான் புரோகிதர்களின் வாதம். அதுவே வேதம்!

முஸ்லிம்கள் ஐரோப்பாவை வென்றெடுத்த பிறகே, அறிவியலுக்கு விடுதலை கிடைத்தது. திருச்சபைகள் அதிகாரம் இழந்தன. மக்கள் மனங்கள் சிந்திக்கத் தொடங்கின. புதுமைகள் படைத்தனர், புதிய வல்லரசுகளாக மாறினர்.

துர்ப்பாக்கியமாக, எந்த இஸ்லாம் ஐரோப்பியர்களை புரோகிதர்களிடமிருந்து விடுதலை செய்ததோ, அதே இஸ்லாத்தின் பேரைச் சொல்லி முல்லா புரோகிதர்கள் முஸ்லிம்களை மூடத்தனத்தில் இன்று பிணைத்து விட்டனர். கிருஸ்தவ புரோகிதர்களின் வஞ்சக வலையை முஸ்லிம் புரோகிதர்களும் கையில் எடுத்து முஸ்லிம்களை அறிவீனர்களாக்கினர்.

குர்ஆன், ஸுன்னா என்பது மார்க்க கல்வி, இதற்கு பள்ளிவாசலுக்கு உள்ளே மட்டுமே வேலை. கல்விச் சாலைகள், பல்கலைக் கழகங்கள், ஆய்வுக்கூடங்களுக்கு இவைகளைக் கொண்டு செல்லக்கூடாது என்று தடுத்துவிட்டனர். இஸ்லாம் கூறும் பொதுவான கல்வியை இரண்டாகப் பிரித்து, மார்க்கக் கல்வி, உலகக் கல்வி என்று பிளவுபடுத்தி விட்டார்கள். “உனக்கு மார்க்கக் கல்வி வேண்டுமா? ஏதாவது மதரஸா விற்குப் போய் ஏழு வருடம் உட்கார்ந்து எழுந்திடு! நீ ஆலிம்-மெளலவி என்று மூட மெளலவிகளை உருவாக்கிவிட்டனர். இந்த மூடர்களுக்கு அல்குர்ஆனை வாசிக்க மட்டுமே தெரியும். அதன் அறிவியல் பொருள் விளங்காது.

இவர்களைப் பொறுத்தவரை அல்குர்ஆன்-நெறிநூல் ஒரு மந்திர வார்த்தை, இதை ஓதி மக்களைச் சுரண்டலாம், ஐந்து கடமைகளை மட்டும் சடங்காகக் காலங் காலமாக மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஐந்து அசலான கடமைகளைச் சொன்ன அதே அல்லாஹ் தான், ஆயிரக் கணக்கான வசனங்களில், வானத்தைப் பார், பூமியைப் பார், சிந்தித்துப்பார், சூரிய, சந்திர, கிரக மண்டலத்தைப் பார், வானம் எப்படி படைக்கப்பட்டிருக்கிறது? அது எப்படி உயர்த்தப்பட்டிருக்கிறது? நீங்கள் குடிக்கும் நீரை கவனித்தீர்களா? மேகத்தை எப்படி நாம் ஓட்டி மழை பொழிவிக்கிறோம் என்பதை கவனித்தீர்களா? இது போன்ற ஏராளமான வசனங்கள் மூலம் நம்மை சிந்திக்க, ஆய்வு செய்ய கட்டளையிடுகின்றானே! இறைவனின் கட்டளைக்கு இந்த மூட ஆலிம்கள் செய்தது என்ன? ஹத்தம், பாத்திஹா, மெளலூது ஓதி வாங்கித் தின்று வயிறு வளர்த்ததுதான்.

“பூமியையும், வானத்தையும் நாமே விரித்தோம்” என்று அல்லாஹ் கூறுகிறானே! அல்லாஹ் எப்படி பூமியை விரித்தான் வானத்தை விரித்தான். இது ஏதாவது முல்லாக்களுக்குத் தெரியுமா?

அன்றைய சஹாபா பெருமக்களுக்கும் இதே வசனம் தான் இறங்கியது. அன்று அவர்களுக்கு அல்லாஹ் அளித்திருந்த அறிவைக் கொண்டு அவர்கள் ஆய்ந்து தெளிந்தனர். இன்றைய 20ம் நூற்றாண்டில் அறிவு யுகத்தில், மனித சிந்தனையை வசதி வாய்ப்பை விரிவாகக் கொடுத்த அல்லாஹ்விடம் இவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? நெறிநூலைப் படித்துச் சிந்தித்து ஆய்வு செய்தாயா? என் வல்லமையைப் பிற மக்களுக்கு ஆதாரப்பூர்வமாக எடுத்துச் சொன்னாயா? பல பொருள் தரும் “முத்தஷாபிஹாத்’ வசனங்களை ஆராய்ந்தாயா? என்ற நாளைய கேள்விக்கு இவர்கள் பதில் என்ன? மூடப் புரோகிதர்களிடம் என்ன பதில் எதிர்பார்க்க முடியும்.

உலகக் கல்வி மட்டும் போதும் என்ற முஸ்லிம்கள், அல்லாஹ்வின் வல்லமையை யும் அவனது ஆற்றலைப் பற்றியும் ஒன்றும் அறியாமல், எல்லாம் இயற்கை என்று கூறு கின்றனர். இரண்டு தனித்தனிக் கல்வி பெறும் இரு சாராராலும் சமுதாயத்திற்கு எந்த பயனுமில்லை. அதனால்தான் இன்று வரை முஸ்லிம்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. தங்களைத் தற்காத்துக் கொள்வதற்குக் கூட எதிரிகளிடமே ஆயுதங்களை எதிர்பார்த்திருக்கிறார்கள். இறுதியில் ஏமாந்தும் விடுகிறார்கள்.

இஸ்லாமியக் கல்வியை இரண்டாக்கிய புரோகிதர்கள், அதிலாவது நேர்மையாக இருக்கிறார்களா? நிச்சயம் இல்லை. இவர்கள் சொல்லும் மார்க்கக் கல்வியான ஐந்து கடமைகளைக் கூட அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தந்த முறைப்படி மக்களிடம் சொல்வதில்லை. இமாம்கள் பெயரால் ஏராளமான மூடச் சடங்குகளைத் திணித்து மார்க்கத்தை கலப்படம் செய்துவிட்டனர். அப்பாவி முஸ்லிம்களின் பொருளை தின்பதற்கு கழுகு போன்று பறக்கின்றனர். ஹஜ்ரத், ஆலிம், மெளலவி எனும் கூலி ஆலிம்களை உற்பத்தி செய்யும் மதரஸாக்கள் ஒழியாத வரை முஸ்லிம்களுக்கு விடிவும் இல்லை, விடுதலையும் இல்லை.

புரோகிதக் கூட்டம் முற்றாகப் புறக்கணிக்கப்படாதவரை முஸ்லிம்களிடமும் இஸ்லாமிய மறுமலர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. புரோகிதர்கள் தானாக மாறுவார்கள் என்று யாரும் எண்ணி ஏமாற வேண்டாம். காலம் காலமாக உழைக்காமல் வளர்ந்த உடம்பு இனி வளையாது. ஐந்து வேளை பள்ளி இமாமாக தொழுகையில் குனிந்து எழுவதே இவர்களின் அதிகபட்ச உழைப்பு. இப்படிக் கஷ்டப்பட்டு(?) உழைக்கும் தொழிலை விட்டு அவர்கள் ஒருக்காலும் வெளியேற மாட்டார்கள். ஏனென்றால்,

தவ்ஹீது பேசும் புரோகிதர்களே அமானித மோசடியில் அள்ளித் தின்னும் பொழுது, தட்டு, தாயத்தில் காலம் தள்ளும் மெளலவிகளை என்ன சொல்ல? இதிலும் தக்லீதை விட தவ்ஹீது முல்லாக்கள் மிக ஆபத்தானவர்கள். முன்னவர்கள் அறியாமையில் தவறு செய்கின்றனர். தவ்ஹீது பேசுபவர்கள் சத்தியம் தெரிந்தே மக்களை சுரண்டுகின்றனர். எனவே தான் இவர்கள் திருந்தமாட்டார்கள். வெட்கத்தை விட்டு விரும்பியவாறு மோசடி செய்து தம் புரோகித இனத்தை வளர்த்து வருகின்றனர்.

ஐரோப்பிய கிறிஸ்தவர்கள், மதகுருமார்களின் பிடியிலிருந்து வெளியேறிய பின்பே, மிகப்பெரிய அறிவியல் மறுமலர்ச்சி ஏற்பட்டது. தொழில் புரட்சி ஏற்பட்டது. இறுதியில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவத்திற்கு சம்பந்தம் இல்லாமல் போய்விட்டனர்.

ஆனால் நாம் இன்று இஸ்லாத்தில் இருந்துகொண்டு புரோகிதர்களின் தவறான வழிகாட்டுதல்படி அறிவை இழந்தோம். அதனால் வறுமையில் உழலுகிறோம். உண்மையான சத்தியத்திலாவது இருக்கிறோமா? என்றால் அதுவும் இல்லை. முஸ்லிம் பெயர் போட்ட லேபிள் ஒட்டிக் கொண்டு மற்ற மதங்களை அப்படியே பின்பற்றுகிறோம்.

இனி இதிலிருந்து விடுபட ஒரே வழி, சுயமாக சிந்தித்து, அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதருடைய வழிகாட்டுதல்படி வாழ்வை மாற்றினாலே தவிர வெற்றி யில்லை, புரோகிதர்களை நம்பினால் நரகமே! தூய இஸ்லாத்தை மதமாக்க மூட முல்லா புரோகிதர்களிடம் கையளித்து விட்டு, அவர்கள் கைகாட்டுதல்படி வாழும் வரை இந்த சமுதாயம் சீர்திருந்தாது. நபி (ஸல்) அவர்கள் காட்டிச் சென்ற உன்னத நிலையை மீண்டும் அடைய முடியாது. நாம் நம்மை மாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ் வும் தன் நிலையை மாற்றமாட்டான்.

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாம் உலக மக்கள் அனைவரையும் வெற்றி கொள்ளும் இது அல்லாஹ்வின் வாக்கு. இன்றைய முஸ்லிம்கள் இந்த மாற்றத்திற்கு தங்கள் பங்கை அளிக்க மறுத்தால், அல்லாஹ்வுக்கு ஒன்றுமில்லை. அவன் உங்களை தூர எறிந்துவிட்டு வேறொரு மக்களைக் கொண்டு வருவான். அவர்கள் உங்களைப் போல் புரோகிதத்திற்கு துணை போகமாட்டார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தை, அவனது புகழை மேலோங்கச் செய்வார்கள். இவர்களே வெற்றியாளர்கள், அல்லாஹ்வின் பொருத்தத்திற்கு சொந்தக்காரர்கள், சுவனத்திற்கு செல்வார்கள்.

அன்புச் சகோதரர்களே! சகோதரிகளே! சிந்தித்து செயல்படுங்கள். புரோகித மாயையிலிருந்து வெளியேறுங்கள். உங்களால் முடியவில்லையா? உங்கள் வாரிசுகளையாவது சத்திய பாதையில் வளரச் செய்யுங்கள். வாரிசுகளின் துஆவின் மூலம் இன்ஷா அல்லாஹ் நீங்களும் மீட்சி பெறலாம்.

Previous post:

Next post: