பெண்கள் காதுகளில் துளையிட அனுமதியுண்டா?

in 2021 மே

பெண்கள் காதுகளில் துளையிட அனுமதியுண்டா?

அகமது இப்ராஹீம், புளியங்குடி

பெண்கள் தங்களை தங்கம், வைரம், வெள்ளி போன்றவைகளை கொண்டு ஆபரணங்கள் செய்து தங்களை அலங்கரித்துக் கொள்ளும் பழக்கம் உலகம் முழுவதும் காலகாலமாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. தங்கம், வெள்ளி என்றாலே அது பெண்களுக்கான ஆபரணங்கள் என்றே கருதப்பட்டு வருகிறது. இத்தகைய ஆபரணங்கள் அணிய காதுகளில் துளையிட்டுக் கொள்வது ஆதிகாலத்திலிருந்து வரும் நடைமுறையாகும்.

இஸ்லாமிய மார்க்கத்திலும் காது குத்தி, அதில் காது வளையங்கள், கம்மல் போன்ற ஆபரணங்கள் அணிவதற்கு எந்தத் தடையுமில்லை. இதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் அங்கீகாரம் உண்டு என்பதற்கான ஆதாரம் இதோ:

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது:

நான் உறுதி கூறுகிறேன். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (பெருநாள் அன்று) உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுதார்கள். (தொழுகைக்குப்) பிறகு உரையாற்றினார்கள். அப்போது பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாகப் பெண்கள் பகுதிக்குச் சென்று, அவர்களுக்கு (இஸ்லாமிய சட்டவிதிகளையும், மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை கூறினார்கள், தர்மம் செய்யும்படி அவர்களிடம் வலியுறுத்தினார்கள். (அவற்றைப் பெறுவதற்காக) பிலால்(ரழி) அவர்கள் தமது ஆடையை விரித்துப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். பெண்கள் தங்களுடைய மோதிரங்களையும், காதணிகளையும் பிறவற்றையும் (கழற்றிப்) போடலானார்கள். இந்த ஹதீஃத் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. முஸ்லிம்: 1605, அத்தியாயம்:8, பெருநாள் தொழுகை.

மேற்கண்ட நபிமொழியில் நபித் தோழியர் தர்மம் செய்வதற்காக தங்கள் காதணிகளை கழற்றிக் கொடுத்தார்கள் என்ற விபரம் நமக்கு கிடைக்கின்றது.

இப்போது பிரச்சினை என்னவென்றால் 1986களில் தவ்ஹீத் புரோகிதர் பீ.ஜை என்ற வழிகேடர் அல்குர்ஆன் 4:119 வசனத்தை தவறாக விளங்கி விளக்கியதன் காரணமாக அவரது மண்டையிலிருந்து உருவானதுதான் பெண் பிள்ளைகள் காது குத்தக் கூடாதென்ற மடத்தனமான தீர்ப்பாகும். அதையே அன்னாரது சீடர்களான TNTJ மூட முல்லாக்களும் பிடித்துத் தொங்குகின்றனர்.

“இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன், அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன், (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான். எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெருநஷ்டத்தை அடைந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 4:119)

மேற்கண்ட அல்குர்ஆன் வசனத்தை நேரடியாகப் படித்துப் பாருங்கள்.

அக்கால குறை´ப் பெண்கள் தங்களுடைய கண் புருவ முடிகளை சிரைப்பது, தங்களின் இயற்கையான பல் வரிசைகளுக்கிடையில் அரம் (இரம்பம்) கொண்டு தேய்த்து இடைவெளி உண்டாக்குவது போன்று இயற்கை தோற்றத்தை மாற்றி அதுதான் அழகு என்று செய்து கொண்டிருந்தனர். அத்துடன் கால்நடைகளின் காதுகளை அறுப்பது போன்றவைகளை கண்டித்தே இந்த வசனம் இறக்கப்பட்டது.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரழி) அறிவித்தார்:

பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தின் முடியை அகற்றிக் கொள்ளும் பெண்கள், அழகிற்காகப் பல் வரிசையை அரத்தால் தேய்த்துப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) அல்லாஹ்வின் (இயல்பான) படைப்பை மாற்றிக் கொள்ளும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக்கூடாது? இச்செயல் அல்லாஹ்வின் நெறிநூலிலும் சபிக்கப்பட்டுள்ளது. புகாரி: 5948, அத்தியாயம் : 77, ஆடை அணிகலன்கள்.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் தங்கள் அழகை வெளிக்காட்ட வேண்டி புருவ முடியை அகற்றுவது பல் வரிசை இடைவெளி விடுவது போன்ற வெளிரங்க மானவற்றை தடை செய்யும் இந்த வசனம் காதில் துளையிட்டு அந்தத் துளையை மறைத்து அணியக்கூடிய கம்மலை எப்படி தடை செய்யும் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் தான்தோன்றித்தனமாக ஃபத்வா (தீர்ப்பு) கொடுக்கும் இந்த மூட முல்லாக்களின் அறிவை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.
அதேபோன்று ஆண் பிள்ளைகளுக்கு கத்னா செய்வதும் இயற்கைக்கு மாற்றம் தான் என இந்த மூட முல்லாக்கள் கூறுவார்களா?

இப்பேற்பட்ட மூட முல்லாக்களை கண்மூடிப் பின்பற்றும் அப்பாவி இளைஞர்கள் குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு காது குத்துவதில் பிரச்சினைகள் ஏற்பட்டு கணவன் மனைவி விவாகரத்து வரை செல்லும் அவலம் இன்று வரை தொடர்கின்றது.

எனவே பெண் குழந்தைகளுக்கு நகைகள் அணிவதற்காக காது குத்துவதற்கு நபி(ஸல்) அவர்களின் அங்கீகாரம் உள்ளது என்பதற்கு நபித்தோழியரின் காதணிகள் தர்மம் (புகாரி: 1605) சம்பவமே போதுமான ஆதாரமாக உள்ளது. அடுத்து பெண்கள் காது குத்துவதை தடை செய்யும் ஆதாரம் அல்குர்ஆனிலும் ஆதாரப்பூர்வமான நபிமொழியிலும் கிடையவே கிடையாது.

எனவே எனது அன்பான இஸ்லாமிய சகோதரர்களே! தங்கள் குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு காதணிகளை அணிவதற்கு தாராளமாக காது குத்தலாம். இதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் கிடையாது.

Previous post:

Next post: