நீரால் தூய்மை செய்வது இஸ்லாம் சொன்னது

in 2021 ஜுன்

நீரால் தூய்மை செய்வது இஸ்லாம் சொன்னது.

S.H.  அப்துர் ரஹ்மான்

உடல் தூய்மை பற்றி பார்ப்போம்!

இஸ்லாத்தில் தூய்மையாக இருப்பது அவசியம். உடை தூய்மை, உடல் தூய்மை உள்ளத்தூய்மை போன்றவை பற்றி இஸ்லாம் வலியுறுத்துகிறது.

இன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான். மேலும் (நபியே!) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம்.  (அல்குர்ஆன்: 25:48)

தூய்மையான நீரைக் கொண்டு அடிக்கடி ஒழு செய்து உடலை தூய்மையாக வையுங்கள்:

யஹ்யா பின் உமாரா(ரஹ்) அவர்கள் கூறியதாவது :

நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் அல்அன்சாரி(ரழி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்ததைப் போன்று எங்களுக்கு நீங்கள் அங்கத் தூய்மை செய்து காட்டுங்கள்! என்று கூறப்பட்டது.

அப்போது அப்துல்லாஹ் பின் ஸைத் (ரழி) அவர்கள் ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டுவரச் சொல்லி அதிலிருந்து சிறிதளவு நீரை தம்மிரு (முன்) கைகளில் ஊற்றி அவற்றை மூன்று முறை கழுவினார்கள். பிறகு (பாத்திரத்திற்குள்) தமது கையை நுழைத்து ஒரு கையளவு நீர் அள்ளி, வாய் கொப்பளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) “மூக்குச் சிந்தினார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள்’ பிறகு (பாத்திரத்திற்குள்) தமது கையை நுழைத்து நீர் எடுத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பின்னர் (பாத்திரத்திற்குள்) தமது கையை நுழைத்து நீர் எடுத்து தம் இரு கைகளையும் முழங்கைகள் வரை இரண்டிரண்டு முறை கழுவினார்கள். பிறகு (பாத்திரத்திற்குள்) தமது கையை நுழைத்தெடுத்து (ஈரக் கையால்) தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்யலானார்கள். (அதாவது தம் இரு கைகளையும் முன்னிருந்து பின்னே கொண்டு சென்றார்கள். பின்னிலிருந்து முன்னே கொண்டுவந்தார்கள். பின்னர் இரு கால்களையும் கணுக்கால் வரை கழுவினார்கள். பிறகு இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தூய்மை (உளூ) செய்துவந்தார்கள் என்று கூறினார்கள்.

மேற்கண்ட ஹதீஃத் மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு கணுக்கால் வரை எனும் வாசகம் இடம்பெறவில்லை.

மேற்கண்ட ஹதீஃத் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், (அப்துல்லாஹ் பின் ஸைத்(ரழி) அவர்கள் “மூன்று முறை வாய் கொப்பளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள்’ என்று இடம்பெற்றுள்ளது. ஒரு கையளவு நீரினால் எனும் வாசகம் இடம்பெறவில்லை. மேலும், அந்த அறிவிப்பில் முன்னிருந்து பின்னே கொண்டு சென்றார்கள். பின் னிருந்து முன்னே கொண்டு வந்தார்கள் எனும் வாசகத்திற்குப் பிறகு தம் இரு கைகளையும் முன் தலையில் வைத்து அப்படியே அவற்றைப் பிடரி வரை கொண்டு சென்றார்கள். பிறகு ஆரம்பித்த இடத் திற்கே திரும்பவும் கொண்டுவந்தார்கள். பின்னர் இரு கால்களையும் கழுவினார்கள் என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

மேற்கண்ட ஹதீஃத் வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், மூன்று முறை கையால் நீர் அள்ளி வாய் கொப்பளித்தார்கள். மூக்கிற்கு நீர் செலுத்தினார்கள் என்று காணப்படுகிறது. மேலும், மஸ்ஹு செய்யும்போது ஒரே ஒருமுறை முன்னிருந்து பின்னே பின்னிருந்து முன்னே (ஈரக் கையைக் கொண்டு சென்றார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது).

அறிவிப்பாளர் பஹ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஹதீஃதை எனக்கு உஹைப்(ரஹ்) அவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். உஹைப்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். எனக்கு இந்த ஹதீஃதை அம்ர் பின் யஹ்யா(ரஹ்) அவர்கள் இரண்டு முறை சொல்லிக்கொடுத்தார்கள். முஸ்லிம்: 398, அத்தியாயம்:2, தூய்மை.

ஒளூ செய்யும்போது மூன்று முறை மூக்கை சுத்தம் செய்யுங்கள்,

வெளியில் சென்று வந்தால் ஒளூ செய்து கொள்ளுங்கள்.

இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றும் போதும் இந்த தூய்மை கண்டிப்பாக கடைபிடிக்கப்படுகிறது. ஒருவர் ஐவேளைத் தொழும்போது முகம் கை, கால், தலை, வாய் மற்றும் மூக்கு ஆகியவற்றை தூய்மை செய்கிறார். இவ்வாறு செய்த பின்னரே தொழ வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.

“அங்கத் தூய்மை (உளூ) செய்யாமல் எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது, மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தானதர்மமும் ஏற்கப்படாது’ என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி: 382.

“உங்களில் ஒருவர் உறங்கி எழுந்ததும் (தமது மூக்கிற்குள் நீர் செலுத்தி) மூன்று முறை மூக்கு சிந்தட்டும். ஏனெனில் ஷைத்தான் அவர் உள்மூக்கில் தங்குகின்றான்.” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரழி), நூல்: முஸ்லிம்: 238.

தூங்கி எழுந்தால் ஒளூ செய்து மூக்கு சுத்தம் செய்து, உடலை தூய்மைப்படுத்த வேண்டும்.

ஈமானின் பாதி தூய்மை :

இஸ்லாத்தை ஏற்றவரிடம் இருக்க வேண்டிய இறை நம்பிக்கையின் ஒரு அம்சமாக தூய்மையை இஸ்லாம் சொல்லியிருப்பது இஸ்லாம் தூய்மைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தந்துள்ளது என்பதற்கு சான்றாகும். ஈமானின் பாதி தூய்மை என்று நபிகளார் கூறியுள்ளது, முஸ்லிம்களை தூய்மையின் பிறப்பிடமாக வாழ்வதற்கு வழிகாட்டியுள்ளது.

“தூய்மை இறை நம்பிக்கையில் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்று இறைவனைத் துதிப்பது (நன்மை மற்றும் தீமைகளை நிறுக் கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும்’  நூல்: புகாரி : 381

கொடிய நோய்கள் எற்பட்டால் :

தற்போது உலகத்தை பயமுறுத்திக் கொண்டிருக்கும் கொள்ளை நோய் வைரஸ் தொற்று அதிகமாக வாய், நாசி வழியாக பரவுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் வாய் மற்றும் நாசியை தொடர்ந்து சுத்தமாக வைத்திருந்தால் இந்த பயங்கர நோயிலிருந்து விடுதலை பெறலாம். ஒருவர் ஐவேளைத் தொழுபவராக இருந்து உளூச் செய்யும்போது வாய் மற்றும் நாசியை தூய்மை செய்து வந்தால் இந்த தொற்று நோயிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.

தூய்மையின் பிரதிபலன் மறுமையிலும் தெரியும் :

அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின்) பொது மைய வாடிக்குச் சென்று “அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன் வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹிகூன்’ (அடக்கத்தலங்களிலுள்ள இறை நம்பிக்கையாளர்களே! உங்கள்மீது இறைச் சாந்தி பொழியட்டும். இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தாம் என்று கூறிவிட்டு, “நம் சகோதரர்களை (இவ்வுலகிலேயே) பார்க்க நான் ஆசைப்படுகிறேன்’ என்று சொன்னார்கள்.

மக்கள் “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் சகோதரர்கள் இல்லையா?’ என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் என் தோழர்கள் தாம்.(நான் கூறுவது) இதுவரை (பிறந்து) வந்திராத நம் சகோதரர்கள்’ என்று கூறினார்கள். மக்கள், “உங்கள் சமுதாயத்தாரில் இது வரை (பிறந்து) வராதவர்களை நீங்கள் எவ்வாறு அறிந்து கொள்வீர்கள். அல்லாஹ்வின் தூதரே?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “ஒரு மனிதரிடம் முகமும் கை கால்களும் வெண்மையாக உள்ள குதிரை ஒன்று இருந்தது அது கறுப்புக் குதிரைகளுக் கிடையே இருந்தால் தமது குதிரையை அவர் அறிந்து கொள்ளமாட்டாரா, கூறுங்கள்’ என்று கேட்டார்கள். மக்கள், “ஆம் (அறிந்து கொள்வார்). அல்லாஹ்வின் தூதரே! என்று பதிலளித்தனர். “(அவ்வாறே) அவர்கள் அங்கத் தூய்மையினால் (பிரதான) உறுப்புகள் பிரகாசிக்கும் நிலையில் (மறுமையில்) வருவார்கள்.

நான் அவர்களுக்கு முன்பே (அல்கவ்ஸர் எனும் எனது) தடாகத்திற்குச் சென்று அவர்களுக்கு நீர் புகட்டக் காத்திருப்பேன். அறிந்து கொள் ளுங்கள். வழிதவறி (விளைச்சல் நிலத்திற்குள் நுழைந்து)விட்ட ஒட்டகம் துரத்தப்படுவதைப் போன்று, சிலர் எனது தடாகத்திலிருந்து துரத்தப்படுவார்கள். அவர்களை நான் “வாருங்கள்’ என்று சப்தமிட்டு அழைப்பேன். அப்போது “இவர்கள் உங்களுக்குப் பின்னால், (உங்களது மார்க்கத்தை) மாற்றி விட்டார்கள்’ என்று சொல்லப்படும். அப் போது நான் “(இவர்களை) இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக’ என்று கூறுவேன்.  நூல்: புகாரி:419

மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான தூய்மையைப் பற்றி பல இடங்களில் இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.

ஆகமொத்தம் நீரைப் பயன்படுத்தி மூக்கை சுத்தப்படுத்துவது இஸ்லாம் சொன்னது தான்.

இஸ்லாத்தில் மூக்கு அடிக்கடி அவசியம் சுத்தப்படுத்த வேண்டிய ஒன்று.

இதற்கு மேலும், மூக்கை சுத்தப்படுத்த விரும்பினால் மூக்கு கழுவும் குவளையில் நீரை பயன்படுத்தியோ, அல்லது நீராவி பிடித்தோ மூக்கை சுத்தப்படுத்தலாம்.
சீனா நீராவி பிடிப்பதன் மூலம்தான் கொரானாவை கட்டுப்படுத்தியாக ஒரு செய்தியும் உண்டு. மருத்துவர்கள் பலரும் நீராவி பிடிக்க சொல்கின்றனர்.

தினமும் குளியுங்கள், உடலை தூய்மையாக வையுங்கள். தினமும் நடைபயிற்சி செய்யுங்கள், நல்ல சத்தான உணவுகளை உண்ணுங்கள்.
பயம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைந்து விடும் பயப்படாதீர்கள்.

“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது’ அவன் தான் எங்களுடைய பாதுகாவலன் என்று (நபியே! நீர் கூறும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக. (அல்குர்ஆன்: 9:51)

படைத்தவன் விதித்ததை தவிர எதுவும் நம்மை அணுகாது என்று தைரியமாக இருப்பது மனிதர்களுக்கு நல்லது.

“குஷ்டரோகத்தில் இருந்தும், பித்துப் பிடிப்பதில் இருந்தும், யானைக்கால் நோயிலிருந்தும், தீய நோய்களிலிருந்தும் படைத் தவனே! உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்’ என்று இறைத்தூதர் அடிக்கடி பிரார்த்திப்பார்கள்.   அறிவிப்பாளர் : அனஸ் (ரழி), நூல்: அபூதாவூத் : 1554.

அல்லாஹ் நம் அனைவரையும் கொள்ளை நோய்களில் இருந்தும் கொடிய நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாப்பானாக.

இதற்கு மேல் நபி(ஸல்) காட்டிய வழியில் மேலே உள்ள பிரார்த்தனையை செய்து இறைவனிடம் பாதுகாவல் தேடுவோம்.

Previous post:

Next post: