ஹதீஃத் பெட்டகம்…

in 2021 ஜுன்

ஹதீஃத் பெட்டகம்…

Dr. A.  முஹம்மது அலி,

அல்லாஹ்  தெளிவுபடுத்துகிறான்:

நபியே! மாதவிடாய் பற்றி அவர்கள் உம்மிடம் வினவுகிறார்கள், நீர் கூறும்: “அது ஓர் (இயற்கையான) உபாதையாகும். ஆகவே, மாதவிடாயின்போது பெண்களை விட்டும் விலகியிருங்கள், அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள், அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படிக் கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள், பாவங்களை விட்டு மீள்பவர்களை நிச்சய மாக அல்லாஹ் நேசிக்கிறான், இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கிறான். (அல்குர்ஆன்: 2:222)

மாதவிடாய் ஒரு இயற்கையான உபாதை, தீட்டு அல்ல.

ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ரசூல்(ஸல்) அவர்கள், என்னிடம் “பள்ளியிலிருந்து (தொழும்) பாயை எடுத்துவரக் கூறினார்கள். நான் மாதவிடாய் காரியாக இருக்கிறேன் என்றேன். உனது மாதவிடாய் உனது கையிலிருந்து வரவில்லை (எனவே அசுத்தமானவளல்ல, எடுத்து வா) என்றார்கள்.

அபூஹுரைரா(ரழி) அவர்கள் தெரிவிக்கிறார்கள் :

ரசூல்(ஸல்) அவர்கள் பள்ளியிலிருக்கும்போது (தனது மனைவியிடம்) ஆயிஷாவே! எனது ஆடையை எடுத்து வா! என ஆணையிட்டார்கள். உடனே ஆயிஷா (ரழி) அவர்கள், நான் மாதவிடாய்காரியாக இருக்கிறேன் என பதிலளித்தார்கள். (இதனைச் செவியுற்ற) ரசூல்(ஸல்) அவர்கள், உனது மாதவிடாய் உனது கைகளில்லையே (எடுத்துவா) என்றார்கள். ஆயிஷா(ரழி) அவர்கள் அவ்வாடையை எடுத்து வந்தார்கள்.

இந்நபிமொழியை இதே சொற்களிலோ அல்லது இதன் மையக் கருத்து மாறாது வேறு சொற்களிலோ, மேலதிகமான விளக்கங்களுடனோ அல்லது சுருக்க மாகவோ கீழ்காணும் நபித்தோழர்கள் அறிவிக்கிறார்கள். இந்நபிமொழி அறிவிக்கும் நிகழ்ச்சியில் அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாலும், மாதவிடாய் பெண்கள் பற்றிய விஷயமாகையாலும் இந்நபிமொழியை அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிப்பதாக எல்லா ஹதீஃத் நூல்களிலும் பதிவாகி யுள்ளது.

 1. ஆயிஷா பின் அபீபக்ர்(ரழி)    – மரணம் 57/58 ஹி.
 2. அபூஹுரைரா(ரழி)            – மரணம் 58 ஹி.
 3. அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) – மரணம் 73 ஹி.

நூல்களையும், பாடங்களையும். (வால்யூம்) தொகுப்பு, ஹதீஃத் எண்களையும், அறிவிப்பாளர்களையும் கீழ்காணும் பட்டியலில் காணலாம். ஸஹீஹுல் புகாரீ, முஸ்லிம், சுனன் அபீதாவூத் போன்ற நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் பாருங்கள். அரபி நூல்களில் காண விரும்புவோர்கள் அதனதன் பாடங்களில் பார்வையிடுங்கள். அறிவிப்பாளர்களின் பெயருக்கு பதிலாக மேலே குறிப்பிட்டுள்ள வரிசை எண்களைக் குறிப்பிட்டுள்ளோம்.

ஆதார நூல்கள் பாடங்கள் அறிவிப்பாளர்கள்

 1. ஸஹீஹ் முஸ்லிம் ஹைழ்3:1/587,588,589 2
 2. சுனன்அபீதாவூத் நதஹாரா:106:1/26 1
 3. சுனன் நஸயீ ஒளூ: 1/197 1
 4. சுனன் நஸயீ ஹைழ்:1/52,53 1 தஹாரா :1/168
 5. களன் நஸயீ தஹாரா:1/134 1
 6. இப்னுமாஜ்ஜா தஹாரா:1/632 1
 7. இப்னுஹிப்பான் 2:1352 முதல் 1356 1
 8. பைஹகி 1:184 முதல் 189 1, 2
 9. முஸ்னத் அபீஅவானா 1/313பக்கம் 1, 2
 10. தயாலிஸி 1:1420, 1510 1
 11. முஸ்னத் அஹ்மத் :முஸ்னத் அபீஹுரைரா பாகம் 2ல் பக்கம் 428 2 முஸ்னத் இப்னு உமர்  பாகம் 2ல் பக்கம் 86 3 முஸ்னத் ஆயிஷா,
  பாகம் 6ல் பக்கங்கள் 45, 101, 110, 114, 173, 179, 214, 229, 245, 106 1

அர்த்தம் : ஹைழ் = மாதவிடாய் : தஹாரா = சுத்தம்:

அல்லாஹ்வின் பேரருளால் நாம் ஆய்ந்தறிந்த வரையில் இந்நபிமொழிகள் (ணூணூ) பதினொரு ஆதாரப்பூர்வமான ஹதீஃத் நூல்களில் ஏறத்தாழ (40) நாற்பதுக்கும் மேற்பட்ட அறிவிப்பாளர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளன. அதில் நாம் மேலே குறிப்பிட்ட ஆயிஷா, அபூஹுரைரா, இப்னு உமர்(ரழி) அன்கும்) போன்ற நபித் தோழர்களும், நம்பிக்கைக்குரிய பல தாபிஈன்களும் இடம்பெற்றுள்ளனர். இப்னு உமர்(ரழி), அவர்கள் அறிவிப்பதாக முஸ்னத் அஹ்மதில் மட்டும் பதிவாகியுள்ளது. ஆயிஷா (ரழி) அவர்கள் தனது வாழ்வில் நிகழ்ந்த செய்தியாக இதனைக் கூறுகிறார்கள். மதீனாவில் மஸ்திதுன்னபவியை ஒட்டிய வீட்டில் ரசூல்(ஸல்) அவர்கள் தனது அன்பு மனைவி ஆயிஷா(ரழி) அவர்களை தங்க வைத்திருந்தார்கள். அதே மஸ்ஜிதுன் னபவியின் திண்ணைத் தோழராக (அஸ்ஹாபுஸ் ஸுஃபாவாக) இருந்த அபூஹுரைரா(ரழி) அவர்கள் ரசூல்(ஸல்) அவர்களுக்கும், அவரது அன்பு மனைவிக்குமிடையில் நிகழ்ந்ததை நேரில் கண்டு தெரிவிக் கிறார்கள்.

இன்றும் நமது முஸ்லிம் சகோதரிகளிடமுள்ள மாதவிடாய் பற்றிய மூட பழக்க வழக்கங்களுக்கு இந்நபிமொழி அழகிய விளக்கம் அளிப்பதைக் காணலாம். மாற்று மதங்களிலிருந்து இஸ்லாத்தில் நுழைந்து முஸ்லிம் ஆனவர்களான நாம் அம்மாற்று மதங்களிலுள்ள மெளட்டீக பழக்கங்களை விடாதவர்களாகவே இருக்கிறோம். எல்லா பெண்களுக்கும் இயற்கையாக ஏற்படும் மாதவிடாயை ஒரு தீட்டாகவும், அப்போது அப்பெண்கள் நல்லது கெட்டதில் கலந்து கொள்ளக்கூடாது, மக்களுடன் ஏன்? உற்றார், உறவினர்கள், கட்டிய கணவனைக் கூட பிரிந்து தனித்து ஒதுக்கி வைக்கப்பட வேண்டுமென்றும் நினைத்து வாழ்கிறோம். நல்ல கல்வியறிவு வளர்ந்துள்ள இந்நவீன காலத்தில் இப்பழக்கங்கள் சிறிது குறைந்திருந்தாலும், முஸ்லிம் பெண்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், இன்றும் முஸ்லிம் சகோதரிகளில் பலர் தாங்கள் தொழுகையின் விரிப்பு (முஸல்லாஹ்), திருகுர்ஆன், ஹதீஃத், இஸ்லாமிய குறிப்பாக அரபி நூல்களை தொடக் கூடாது. அது பாவம் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதைக் காண்கிறோம்.

இந்து மத சகோதரர்களிடம் இப்பழக்கத்தைச் சர்வசாதாரணமாக காணலாம். இந்து மதத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரிடம் மாதவிடாய் பெண் சமையலறைக்குள் வரக்கூடாது, சமைக்கக் கூடாது என்ற கொடிய சட்டங்களிருப்பதையும் அக்காலங்களில் ஆண்களே சமைப்பதையும் காணலாம். இதேபோன்ற சட்டம் யூதர்களிடமும் இருந்தது. இன்றும் இருக்கிறது. ரசூல்(ஸல்) அவர்களது காலத்தில் யூதர்கள் மாதவிடாய் பெண்களை வீட்டை விட்டு ஒதுக்கி வைத்தனர். அவர்களிடம் பேசு வதையோ, உறவாடுவதையோ ஏன் ஒன்றாக அமர்ந்து புசிப்பதையோ, அப்பெண்களுடன் தொடர்புடைய பொருட்களைத் தொடுவதைக் கூட பாவமாக கருதினர். இதற்குக் காரணம் யூதர்களின் வேத நூலான பழைய ஏற்பாட்டில் மாதவிடாய் பெண்களை கொடிய தீட்டுக் காரியாகவும் பாவத்திற்குரியவளாகவும் சித்தரித்துள்ளதை இன்றும் காணலாம். பழைய ஏற்பாட்டில் மூன்றாவது ஆகமம்-லேவியராகமம் -15 அதிகாரத்தில் 19 முதல் 30 வரை எண்ணிட்டுள்ள வசனங்களைப் பாருங்கள்.

 1. சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழு நாள் தன் விலக்கத்தில் இருக்கக் கடவள், அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
 2. அவள் விலக்கலாயிருக்கையில், எதின் மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ, எதின் மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.
 3. அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
 4. அவன் உட்கார்ந்த மனையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தேய்த்து, தண்ணீரில் மூழ்கி, சாயங்காலம் மட்டும் தீட்டுப் பட்டிருப்பானாக.
 5. அவள் படுக்கையின் மேலாகிலும், அவள் உட்கார்ந்த மனையின் மேலாகிலும் இருந்த எதையாகிலும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
 6. ஒருவன் அவளோட படுத்துக் கொண்டதும், அவள் தீட்டு அவன் மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழு நாள் தீட்டாயிருப்பானாக, அவள் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும்.
 7. ஒரு ஸ்திரீ விலகியிருக்க வேண்டிய காலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேக நாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக் கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்தது போல் அவள் தீட்டாயிருப்பாளாக.

26, 27 வசனங்களிலும் மேலே கூறியவைகளே!

 1. அவள் தன் உதிர ஊறல் நின்று சுத்தமானபோது, அவள் ஏழு நாள் எண்ணிக் கொள்வாளாக. அதன் பின்பு சுத்தமாயிருப்பாள். (இன்னும் முடியவில்லை).
 2. எட்டாம் நாளிலே இரண்டு காட்டுப் புறாக்களையாவது, இரண்டு புறாக் குஞ்சு களையாவது ஆசரிப்புக் கூடார வாசலில் ஆசாரியனிடம் கொண்டு வரக்கடவள்.
 3. ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவ நிவாரண பலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகன பலியுமாக்கி, அவளுக்காக கர்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவ நிவர்த்தி செய்யக் கடவன்.
 4. இஸ்ரவேல் புத்திரர் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுக்களால் சாகாதபடிக்கு, இப்படி நீங்கள் அவர்கள் தீட்டுக்களுக்கு அவர்களை விலக்கி வைக்கக் கடவீர்கள். (The Holy Bible Tamil O.V. The Bible Society of India. 20 Mahatma Gandhi Road, Bangalore, Tam. ov. – 62-(PL)/1985-86/4OM)

அன்றைய யூதர்கள் மற்ற வேத சட்டங்களை செம்மையாக நிறைவேற்றினரோ இல்லையோ, பெண்களை நடத்தி ஆளும் ஆண் ஆதிக்க வெறியில் இச்சட்டங்களை பெண்கள் மீது மிகவும் கண்டிப்பானதாக மேற்கொண்டனர். குறிப்பாக மதீனாவிலிருந்த யூதர்களிடம் இச்சட்டம் கடுமையான தாக பின்பற்றப்பட்டது. இதனைக் கண்ணுற்ற அன்றைய அரேபியர்கள் மாதவிடாய் என்ற தீட்டு பனூ இஸ்ரவேலர்களின் பெண்களிலிருந்துதான் ஆரம்பித் திருக்க வேண்டும். அதற்கு முன் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கும் நிலையில் இருந்தனர். இதனை புகாரி(ரஹ்) தனது ஸஹீஹில், “ஹைழ்’ தொகுப்பில் ஆரம்பத்தில் தெரிவிப்பதைப் பாரீர்.

“மாதவிடாய் என்பது ஆதமுடைய பெண் மக்கள் மீது அல்லாஹ் விதித்த ஒன்றாகும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மாதவிடாய் என்பது இஸ்ரவேல் சமூகத்தினரிடமிருந்து தான் முதன் முதலாக ஆரம்பமானது எனச் சிலர் கூறுகின்றனர். ஆனால் எல்லாம் பெண்களுக்கும் ஏற்பட்ட ஒன்றுதான் மாதவிடாய் என நபி (ஸல்) அவர்களுடைய போதனைகள் பொதுவாகவே கூறுகின்றன. (ரஹ்மத் அறக்கட்டளை பதிப்பு, முதல் தொகுப்பு, பக்கம் 247)

யூதர்களின் இவ்வழக்கத்தைக் கண்ணுற்ற நபித்தோழர்கள் ரசூல்(ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாம் மாதவிடாயைப் பற்றி என்ன சொல்கிறது என வினவினார்கள். இதற்கான பதிலை அல்லாஹ் வஹீ(இறைச் செய்தி) மூலம் ரசூல்(ஸல்) அவர்களுக்கு அறிவித்து விடையளிக்கக் கூறுகிறான்.

நபியே! மாதவிடாய் பற்றி அவர்கள் உம்மிடம் வினவுகிறார்கள். நீர் கூறும், அது ஓர் (இயற்கையான) உபாதையாகும். ஆகவே, மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள், அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள், அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படிக் கட்டளையிட்டிருக்கிறானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள். (அல்குர்ஆன்:2:222)

இவ்வசனத்தில் இடம் பெறும் விலகியிருங்கள், அணுகாதீர்கள், என்ற சொற்றொடர்கள் யூதர்களைப் போல பெண்களை ஒதுக்கி வைக்க ஆணையிடுகிறதோ என்ற சந்தேகத்தை போக்குவதற்காக ரசூல்(ஸல்) அவர்கள் “மாதவிடாய் பெண்களிடம் உடலுறவைத் தவிர” மற்றபடி சகஜமாக பழக அனுமதியளிப்பதாக விளக்கினார்கள். யூதர்களின் கடிய சட்டத்திற்கு முன் இச்சட்டம் மிகவும் இலகுவானதாக, சலுகைமிக்க தாக இருப்பதைக் கண்டு அன்றைய யூதர்கள் ரசூல்(ஸல்) அவர்கள் மீது வெறுப்புக் கொண்டனர். வழக்கமாக இவர் (ரசூல் (ஸல்) அவர்கள்)நமக்கு மாறாக சட்டம் சொல்லி வருகிறார் எனக் கூவித் திரிந்தனர். மதீனாவில் யூதர்களின் தாக்கத்துடன் வாழ்ந்து வந்த ஒருசில நபித்தோழர்கள் இதனை ரசூல்(ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்து யூதர்களைப் போல மாதவிடாய் பெண்களை முழுமையாக ஒதுக்கி வைக்க கூறினார்கள். இதனை முஸ்லிமில் இடம்பெற்றுள்ள 1:592 நபிமொழி விளக்குவதைக் காணீர்:

Previous post:

Next post: