நாத்திகர்களுக்கு ஒரு சவால்!

in 2021 ஜுலை

நாத்திகர்களுக்கு ஒரு சவால்!

M.P. ரபீக் அஹ்மத்

திரு குர்ஆனுக்கு நிகராக, திருகுர் ஆனைப் போன்ற ஒரு நூலை இதுவரை இந்த உலகம் உருவாக்கவில்லை.

அது இலக்கியமா, காவியமா, வரலாறா, வெறும் போதனைகளா என்றால் இல்லை.

அது வெறும் பிரார்த்தனைகளின் கோர்வையா, ஜபமா, மந்திரமா என்றால் இல்லை.

அது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறா என்றால் அதுவும் இல்லை.

அது கடந்த காலத்தின் காலக் கண்ணாடியா என்றால் இல்லை.

அது வருங்காலத்தைப் பற்றிச் சொல்லும் பஞ்சாங்கமா என்றால் இல்லை.

அது என்ன விஞ்ஞானமா, பூகோளமா, கணக்கியலா, மருத்துவ நூலா, தத்துவ நூலா, சித்தாந்த நூலா, அரசியல் நூலா, சட்டதிட்ட சாசனமா என்றால் இல்லை.

இல்லை என்றால் இவை எல்லாம் அதில் இல்லை என்று அர்த்தம் இல்லை.

இவை எல்லாம் திருகுர்ஆனில் நிச்சயம் இருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் மற்ற எந்த நூலிலும் இல்லாத அளவிற்கு இவைகள் எல்லாம் அறைகுறையாக இல்லாமல் நிறைவாகவும் உள்ளன.

ஒரே நூலில் இத்தனை சிறப்பம்சங்கள் வேறு எந்த நூலிலும் காண முடியாது என்பது உண்மைதான் என்றாலும் இதனால் தான் இது ஒரு அதிசய நூலா என்றால் அதுவும் இல்லை.

பிறகு திருகுர்ஆன் என்றால் என்ன?

அது மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட மனித சக்தியை மீறியதொரு அதிசய நூல்.

அது கடந்த கால நிகழ்ச்சிகளை சொன்னாலும், நிகழ்கால நிகழ்வுகளை சொன்னாலும், வருங்காலத்தைப் பற்றி பேசினாலும் நூற்றுக்கு நூறு சரியாக பேசுகின்றது.

அது முக்காலத்தையும் அறிந்த ஒரு முழு நூலாக இருக்கின்றது.

அது சொல்லும் கடந்த கால நிகழ்ச்சிகள் வரலாற்றாசிரியர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை திகைக்க வைக்கின்றன. மனித இனத்தின் சரியான வரலாறு திருகுர்ஆன் நுட்பமாக தருவது போல் வேறு எந்த நூலும் தரவில்லை என்று ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

திருகுர்ஆன் குறிப்பிடும் மனிதனின் தொடக்கத்தின் THEORYயை ஒப்புக்கொண்டால்தான் சரியான சரித்திரம் சரிவில்லாமல், சருகி போகாமல் எழுத முடிகின்றது என்று நவீன கால ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்திருக்கின்றார்கள்.

டார்வின் சொல்வது கற்பனை, குர்ஆன் சொல்வது நிஜம்.

டார்வின் THEORYயை நிரூபிக்க முடியவில்லை.

குர்ஆனின் செய்தி நிதர்சனமாக இருக்கின்றது என்பது அவர்கள் செய்த ஆய்வுகள் உலகத்திற்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

உலகத்தின் சரியான வரலாற்றை எழுத திருகுர்ஆனை வழிகாட்டியாக (GUIDE) ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கும் நிர்ப்பந்தத்திற்கும் ஆளாகியிருக்கின்றனர்.

கர்ப்பப்பையில் குழந்தை வளர்ச்சியை நுணுக்கமாகவும், நுட்பமாகவும் தெளிவுபட எடுத்தியம்பும் குர்ஆன், அது சொல்லும் மனிதனின் பிறப்பு வரலாறும் உண்மையாக இருக்கும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

திருகுர்ஆன் கூறும் வரலாற்று துணுக்குகளை, அது கோடிட்டு காட்டும் குறிப்புகளை கல்வெட்டுகளும் புதைகுழி ஆராய்ச்சிகளும் உண்மைப்படுத்துகின்றன. நபி (ஸல்) அவர்களுடைய காலம் SATELLITE இல்லாத காலம் என்பதை நினைவில் வைப்பீர்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் உலகின் பல பகுதிகளில் மிதந்து கரைகண்ட நோவாவின் கப்பலை, அது சரியான இடத்தில் மிகச் சரியாக அடையாளம் காட்டுகின்றது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நீலக் கடலில் மூழ்கிப் போன ஃபிர்அவ்னின் (PHARAOH) சடலத்தை கடந்த காலத்து மக்களுக்கு மட்டுமல்லாமல் நிகழ்கால மக்களுக்கும் அது MATERIAL PROOF தந்து கொண்டிருக்கின்றது. அது வருங்காலத்திலும் மக்கள் முன் காட்சி பொருளாகவும் சாட்சி பொருளாகவும் இருக்கும் என்று உறுதியாகக் கூறுகின்றது.

ிலர் பிதற்றிக் கொண்டிருப்பது போல் “திருகுர்ஆன்” நபி(ஸல்) என்கின்ற “ஒரு மனிதரால் எழுதப்பட்ட நூல் என்றால்….”

எப்படி ஒரு மனிதரால் கடந்த காலத்தைப் பற்றியும், நிகழ்காலத்தைப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் அறிவுப்பூர்வமாக அறிவியல் ரீதியாக ஆதாரப்பூர்வமாக எழுத முடியும்?

எப்படி ஒரு மனிதரால் தனக்கு முன்னால் கடந்துபோன பல சமுதாயங்களைப் பற்றி அவர்கள் வாழ்ந்து மடிந்து அழிந்த சரியான இடங்களைக் காட்ட முடியும்? அதுவும் “அந்த மனிதர் படிப்பறி வில்லாதவர்.” அவருடைய 63 ஆண்டு வாழ்வில் ஒரு முறையாகிலும் இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளில் அவர் ஈடுபட்டதாக வரலாறில்லை.

ஒரு புதைக்குழி ஆராய்ச்சிக்காக பல அறிஞர்கள் தேவைப்படுகின்றார்கள். அவர்களுக்கு பல சாதனங்கள், பல கருவிகள், பல ஆயுதங்கள், பல அறிவியல் கூடங்கள், பல நூலகங்கள், பல ஆராய்ச்சி நிலையங்கள் தேவைப்படுகின்றன.

இத்தனை வசதிகளும் வாய்ப்புகளும் கிடைத்தாலும் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதற்கு, பல ஆண்டுகள் பிடிக்கின்றன. பல ஆண்டுகளில் அவர்கள் இரவும், பகலும் உழைத்து பல கட்டங்களில் படிப்படியாக அவர்கள் சிறுக சிறுக ஒரு முடிவுக்கு வருகின்றனர். அவர்கள் எடுக்கும் முடிவுகளைப் பற்றி பல கருத்தரங்கங்கள் நடத்தி பல கருத்துப் பரிமாற்றங்கள் செய்த பிறகு தள்ளவேண்டியதை தள்ளி கொள்ள வேண்டியதை கொண்டு மக்கள் முன் தங்கள் ஆராய்ச்சிகளின் பலனை வைக்கின்றனர்.

ஆனால் கல்வியின் வாசனையை அறியாத ஒரு மனிதர் ஒரே நேரத்தில், இத்தனை வசதிகளும், வாய்ப்புகளும் அறவே இல்லாத அஞ்ஞான காலத்தில் இன்றைய உலகம் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு அநேக சரித்திரங்களை, வரலாற்று குறிப்புகளை எப்படி சரியாக சொல்ல முடியும்?

வரலாற்றைப் பற்றி மட்டுமல்ல, அறிவியல், கணிதவியல், கணிணியியல், அரசியல், பொருளியல், வானியல், புவியல், தாவரவியல் பற்றி அதுவும் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த நவீன காலத்திற்கும் பொருந்தும்படி எப்படிச் சொல்ல முடியும்?

இதை ஒரு மனிதர்தான் எழுதினார் என்றால், நிச்சயமாக அப்படி சொல்பவன் ஒரு பகுத்தறிவாதியாக இருக்க முடியாது. கண்டிப்பாக அவன் ஒரு கடைந்தெடுத்த மூட நம்பிக்கையாளனாக, படுமுட்டாளாகத் தான் இருக்க முடியும்.

அப்படியானால் திருகுர்ஆன் நபி(ஸல்) என்ற மனிதரால் எழுதப்பட்ட நூல் அல்ல என்பதுதான் மறுக்க முடியாத உண்மை என்பதை பகுத்தறிவும் ஒப்புக்கொள்கிறது.

விஞ்ஞான ரீதியான, அறிவியல் ரீதியான அத்துணை ஆராய்ச்சிகளும் ஒப்புக் கொள்கின்றன.

நபி(ஸல்) மட்டுமல்ல, வேறு எந்த மனிதராலும் இப்படி ஒரு நூலை நிச்சயமாக உருவாக்க முடியாது என்பதை இன்றைய அத்தனை அறிவியல் விற்பன்னர்களும் உண்மையான அறிவு ஜீவிகளும் ஒப்புக் கொள்கின்றனர்.

எதையும் ஆராய்ந்த பிறகுதான், ஆராய்ச்சி செய்த பிறகுதான் ஒப்புக் கொள்வோம் என்பது பகுத்தறிவாளர்களின் வாதமாகும்.

திருகுர்ஆன் என்பது எந்த மனிதராலும் எழுதப்பட்ட நூலல்ல, அதுவும் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனிதர்களால் இப்படிப்பட்ட நூலை எழுத முடியாது.

ஆனால் திருகுர்ஆன் நம்முடைய கரங்களில் இருக்கின்றது.

1400 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இதன் மூல நூல்களின் பிரதிகளும் பல்வேறு நாடுகளில், அதுவும் முஸ்லிம் அல்லாத நாடுகளில் முஸ்லிம் அல்லாதவர்களால் பாதுகாககப்பட்டு வருகின்றன.

அந்த மூலப் பிரதிகளுக்கும் இப்பொழு துள்ள திருகுர்ஆனுக்கும் ஒரு நூல் இழை கூட வித்தியாசமில்லை என்ற உண்மையையும் அதே ஆராய்ச்சிகள் தான் நிரூபிக்கின்றன.

அப்படி என்றால் திருகுர்ஆன் என்கின்ற அதிசய நூல் ஒன்று நிச்சயம் இருக்கின்றது.

அதை நிச்சமாக எந்த மனிதரும் உருவாக்கவில்லை. அதை உருவாக்கியவர் நிச்சயமாக ஒரு மனிதரில்லை.

பிறகு இந்த அதிசய நூலின் ஆசிரியர் யார்?

இதற்கு பகுத்தறிவாளர்கள் பதில் சொல்லத் தயாரில்லை.

ஏன் தெரியுமா?

கடவுளை நம்பியவன் முட்டாள் அல்ல.

கடவுளை நம்பாதவன் தான் முட்டாள் என்பதை அந்த முட்டாள்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும்.

கடவுளைக் காட்டச் சொல்லும் அறிவிலிகளே!

கடவுள் உண்டு என்பதற்கு திருகுர்ஆனே சாட்சி.

இறைவனை தவிர வேறு யாராலும் இது போன்ற நூலை உருவாக்க முடியாது என்ற உண்மையே அதற்கு சாட்சி.

இல்லை என்றால் திருகுர்ஆன் இறை நெறிநூல் இல்லை என்பதை நீங்கள் விஞ்ஞான ரீதியாக, அறிவியல் ரீதியாக, ஆதாரப்பூர்வமாக நிரூபித்துக் காட்ட வேண்டும்.

இது பகிரங்க சவால்! தயார்தானா?

ஒன்றை மட்டும் நீங்கள் மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

புவியியல் பற்றி திருகுர்ஆன் கூறும் கூற்றுகள் முழுக்க முழுக்க உண்மை என்பதை உங்கள் புதைக்குழி ஆராய்ச்சிகள் நிரூபித்துவிட்டன. இதில் இன்னொரு முக்கியமான அம்சம் என்னவென்றால் திருகுர்ஆன் என்றைக்கோ அறிவித்த அந்த அறிவியல் உண்மைகள் இப்பொழுதுதான் உங்கள் அறிவுக்கு எட்டியுள்ளன.

இதை வைத்து உலகம் வேகமாக ஒரு முடிவுக்கு வந்துக் கொண்டிருக்கிறது.

மனிதன் மாண்டு புதைக்குழிக்குப் போன பின் அவன் சந்திக்கவிருக்கும் நிலைகளைப் பற்றி திருகுர்ஆனின் அறிவிப்புகள் நிச்சயமாக நம்பத்தகுந்த உண்மைகள்தான்.

ஏனென்றால் இம்மையைப் பற்றி இவ்வளவு உண்மையாகப் பேசும் திருகுர்ஆன்.

எங்களால் புரிந்து கொள்ள முடியாத மறுமையைப் பற்றி அது பேசும் விஷயங்கள் நிச்சயமாக உண்மையாகத்தான் இருக்கும் என்று திடமான நம்பிக்கையின் பக்கம் உலகம் மிக விரைவில் வந்தே தீரும். இதில் எந்த சந்தேகமுமில்லை.

Previous post:

Next post: