இறைவனைப் பற்றிய மன உறுதிதான் மார்க்கம்!

in 2021 ஆகஸ்ட்

இறைவனைப் பற்றிய மன உறுதிதான் மார்க்கம்!

 1. கமால், திருச்சி

தன்னைத் தவிர வேறு எவருக்கும் இல்லை என்கிறான். ஆனால் இறைவனுக்குரிய நிலைப்பாடு பற்றி மனிதன் தன் அளவில் சிந்திக்கிறான். இறைவன் இவ்வுலகம் மட்டுமல்லாது ஏனைய உலகங்களையும் படைத்து இவ்வுலகில் அனைத்து ஜீவராசிகளையும் உண்டாக்கி பரிபாலித்து வருகிறான் என்பதை ஏற்றுக் கொண்டாலும் அவனுக்கு சில இணை-துணைகளைத் தன் கற்பனை மூலம் உண்டாக்கி அவற்றின் சரித்திரங்களை காவியங்களாக்கி அதன் மூலம் வாழ்வில் வெற்றி பெற முயல்கிறான். இன்னும் சற்று கொஞ்சம் மேலே போய் பகுத்தறிவு அளித்திருக்கும் இறைவனை அந்த பகுத்தறிவாலேயே(?) இறைவன் என்று ஒருவன் இருக்க முடியாது என்கிறான். இறைவனை நம்புகிறவன் பைத்தியக்காரன் என்றும் தடுமாறுகிறான். ஆக, தான் எவ்வாறு படைக்கப்பட்டோம் என்பதை சிந்திப்பதை அறவே மறந்து நம்மைப் படைத்த இறைவனின் படைப்பைப் பற்றி ஆராய முற்பட்டு அதன் விளைவாக நாத்திகம் பேசுகிறான்.
இவை யாவற்றுக்கும் விடை தரும் நோக்கோடு, தன்னால் ஆறறிவுடன் படைக்கப்பட்ட மனிதன் தன்பால் நெருங்க அவன் கடைபிடிக்க வேண்டிய நெறி முறைகளை அழகிய, அற்புத வேதமான குர்ஆன் மூலம் தெளிவாக அல்லாஹ் அருளியுள்ளான். இப்போது இவ்வுலகில் இறைவனை நாம் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இறைவன் என்பவன் இருக்கத்தான் செய்கிறான். இது மனிதன் முதல் எல்லா உயிரினமும் கண்டிப்பாய் ஏற்றுக்கொள்ள வேண்டிய நியதி.

இறைவனை அடைய (குர்ஆன்) சார்ந்த ஒரேயயாரு வழியை மட்டுமே நேர்வழியாக ஆக்கியுள்ளான். அது நபி வழி ஆகும். அந்த இறைவனையும், நபியையும் மானசீகமாக, முழுமனதாக ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்கள் ஆகிறார்கள். ஏக இறை நம்பிக்கையில் உறுதியற்றவர்களிடையே இறைவனால் சபிக்கப்பட்ட சாத்தான் புகுந்து இறைவனை வணங்கும் அடிப்படை விஷயத்திலேயே ஆட்டம் காண வைத்து விடுகிறான். அவனுடன் நெருக்கம் ஏற்பட்டவர்கள் செய்யும் செயல்களை கண்ணுற்று அவர்களிடம் நேர்வழி பற்றி சொன்னால் மனம் இருந்தால் தான் மார்க்கம் என்று சலித்துக் கொள்வார்கள்.

அனாச்சாரங்கள் :

 1. ஐந்து கடமைகளும் ஒன்றான ஐவேளைத் தொழுகையை முறையாய் பேண வேண்டிய முஸ்லிம்கள், தன்னை முஸ்லிம் என்று ஜும்ஆ தினத்தில் மட்டுமே காட்டிக் கொள்கிறார்கள். அன்று கூட தொழ வராத எத்தனையோ ம(ாக்)கான்களும் உண்டு.
 2. வரதட்சனை வாங்காமல், மஹர் கொடுத்து மட்டும் திருமணம் செய்யச் சொன்னால் மாற்றாரை விடவும் அதிக மாகவே வாங்கி, ஏக தடபுடலாக திருமணம் செய்வதில் கெட்டிக்காரர்கள் நம்மவர்கள்.
 3. வட்டி வாங்குவதைப் பற்றிய இறைவ னின் கடுமையான எச்சரிக்கைகளுக்குப் பின்னர் வட்டியைத் தொழிலாகப் பண்ணுகிற பேர்வழி என்று மாற்றாரை விடவும் அதிகமாகவே வட்டிக்காக திண்பதில் கெட்டிக்காரர்கள் நம்மவர்கள்.
 4. ஆண்களுக்குத் தடுக்கப்பட்ட தங்கத்தை அணியக்கூடாது என்று சொன்னால், மிடுக்காக போட்டுக் கொள்பவர் களில் கெட்டிக்காரர்கள் நம்மவர்கள்.
 5. படைத்தவனுக்கும், படைப்பினமான மனிதனுக்கும் இடைவெளி ஏற்படுத்தி முட்டுக்கட்டைப் போட்டு மாற்று மதப் புரோகிதர்கள் போல் மார்க்கக் கல்வியை அறிந்தவன், அறியாதவன், படித்தவன், படிக்காதவன் என்று பேதமையை உருவாக்கி அதன் மூலம் வயிறு வளர்ப்பதிலும் கெட்டிக்காரர்கள் நம்மவர்கள்.
 6. தீன் பணி என்ற பெயரில் தீனிப் பணியும், இறைப்பணி என்ற பெயரில் இரைப்பைப் பணியுமாக தர்கா, தரீக்கா, பால், கிதாபு, மவ்லூது, பாத்திஹா என்று மக்களைக் குழப்பி வருவதிலும் கெட்டிக்காரர்கள் நம்மவர்கள்.
 7. தர்கா, தரீக்கா, தட்டு, தாயத்து என்று ஏமாந்து செலவு செய்து அப்போதைய பிரச்சினைகள் ஏதாவது வகையில் எப்படியாவது தீர்ந்தால் போதும் என்று நிம்மதி தேடிக் குழம்பி வாழ்வதிலுமாக ஏமாறும் கெட்டிக்காரர்களின் பட்டியல் தொடர்கிறது.

நம்மவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் என்ன என்று அணுகிப் பார்த்தால் மார்க்கத்தைப் பற்றிய முறையான ஞானம் இல்லாமையே ஆகும். ஆம்! இஸ்லாமே ஒரு மார்க்கமாக-வழியாக இருக்கும்போது, அதனை அடைய மத்ஹபு என்றழைக்கப்படும் வேறு வழித்தடங்களை அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதனைத் தேடுவதால் வெருட்சியை அடைகிறார்கள். ஓரிறைச் சொந்தம், ஓர் மறைச் சொந்தம், ஓர் நபி சொந்தம் என்று ஆக்கிக் கொள்ளவேண்டிய நாம் இஸ்லாத்தின் தூண்கள் 4 மத்ஹபுகள் என்று பொய்யாகக் கூறி அதன் தலைவர்கள் கண்ணியமிக்க 4 இமாம்கள் என்று கண்ணியப்படுத்த வேண்டிய அவர்களை இழிவுபடுத்துகிறோம். கிறிஸ்தவர்கள் ஈஸா(அலை) அவர்களின் பெயரால் ஷிர்க், பித்அத்துகளை மார்க்கமாக்கி செயல்படுவது போல் நாமும் மரியாதைக்குரிய அந்த 4 இமாம்களின் பெயரால் ஷிர்க், பித்அத்களை அரங்கேற்றுகிறோம். ஒரே நபிவழியை பலவாறாகப் பிரித்து விடுகிறோம். அதன் விளைவுகள் சிலவற்றைக் காண்போம்.

 1. தொழும் முறை ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒன்றே. ஆனால் ஆண்கள் தொப்புளின் மேல், தொப்புளின் கீழ் கை கட்ட வேண்டும் என்றும், பெண்கள் மார்பின் மீது கை கட்ட வேண்டும் என்றும் சொல்லியுள்ளதாகக் கூறி நபி வழியில் வேறுபட்டு நிற்கிறோம்.
 2. தொழுகைப் பற்றிய நூலை வாங்கிச் செல்ல கடைக்குச் சென்றால் தொழுகை ஹனஃபி, தொழுகை ஷாஃபிஈ என்று விற்கப்படுகிறது. ஆக நபிவழித் தொழுகைக்கு இடம் அளிக்கவில்லை.
 3. நான்கு இமாம்களின் பெயரால் உள்ள தொழுகை முறையும் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் தொப்பி அணிந்து தொழுவது, அத்தஹியாத்தில் இஷாரா செய்வது, ஆண் பெண் இருபாலரும் மார்பின் மீது கை கட்டுவது கூட்டு துஆ போன்ற பிரச்சினைகளில் ஆளாளுக்கு ஒவ்வொரு மத்ஹபினரும் முரண்படுகிறார்கள்.
 4. ரமழானில் கொடுக்கப்படும் ஃபித்ரா பற்றி குறிப்பிடும் போது ஒரு மத்ஹபினரின் அளவுகோல் 2.4 கிலோ என்றும், மற்றொரு மத்ஹபு 3.2 கிலோ என்றும் உள்ளது. (இப்போது 16 கிலோ என்று ஹனபி இமாம் கனவில் கூறியுள்ளார் போலும்)
 5. உளூ முறைகளிலும், தர்கா, தரீக்கா, பைஅத் முறைகளை அனுமதிப்பதிலும் முரண்பாடுகள் தொடர்கின்றன.

இந்த முரண்பாடுகளைக் களைய நபி வழியை நாட வேண்டியுள்ளது. நாட வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் உரிமையும் கடமையும் ஆகும்.

இறைவன் மனிதர்களுக்கு நபியை அனுப்பியது ஏன்?

 1. மனித உடல் அமைப்பிற்கும், உள்ளத்தின் அமைப்பிற்கும் முற்றிலும் மாற்ற மான வானவர்களையோ அல்லது உயிர் பிராணிகளில் ஏதோ ஒன்றையோ மனித இனத்துக்கு நபியாக அனுப்பியிருந்தால் அது மனித இனத்திற்கும், தூதுத்துவம் வாய்ந்த அந்த உயிரினத்திற்கும், இடைவெளி எல்லா விஷயத்திலும் ஏற்படும்.
 2. இறைவனை வணங்கும் முறையிலிருந்து, உணவு, உடை, இருப்பிடம், இல்லறம், நல்லறம், அனுபவ ரீதியாக நாம் அடைந்து படிப்பினை பெற வேண்டிய அத்தனை சமாச்சாரங்களும் வேறுபடும்.
 3. இவை மட்டுமல்லாது ஆட்சி, அதிகாரம், குணநலன்கள் ஒன்றை ஒன்று ஒத்திருக்காது. எனவே தான் மனிதனுக்கு நபியாக மனிதனையே அல்லாஹ் தேர்ந்தெடுத்தான் என்பது விளங்கப் பெறலாம்.
 4. அந்த நபி மூலமே அவர்களுடைய வாழ்க்கை முறையைப் பார்த்து மனிதன் வாழவும் வழி வகை செய்து இறைவன் தனக்கு இணை வைப்பது எவ்வளவு பெரிய பாவம் என்று அந்த நபி மூலமே தெரியப்படுத்துகிறான்.

ஆனாலும் அந்த நபியையே இஸ்லாத்தின் அவதார புருஷராக மதித்து அவருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். பிறந்த நாளிலேயே தான் அவர் இறந்ததாக பல ஹதீத்கள் மூலம் காணமுடிகிறது. இதைப் பார்த்தால் அவர் பிறந்ததற்கு விழா எடுக்கிறார்களா? அவரை பிரிந்ததற்கு விழா எடுக்கிறார்களா? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இது அவருடைய சொல், செயல், அங்கீகாரத்திற்கு முற்றிலும் மாறுபட்டு முஸ்லிம்கள் செய்யும் எத்தனையோ வேடிக்கையான சம்பவங்களின் வாடிக்கையான நிகழ்ச்சி தான் என்றாலும், சரி அவரோடு விட்டார்களா என்றால் அதுதான் இல்லை.

இஸ்லாத்தின் உள்ளூர் ஆண்டவர்கள் :

 1. ஏகத்துவத்தை நிலைநாட்ட வந்து தீன் பணியை தன் பணியாக பாவித்து இஸ்லாத்தை பரப்பிய எத்தனையோ நல்லடியார்களில் ஒருவரான இறைநேசர் முஹயித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, அவரை மொய்தீன் ஆண்டவர் என்றே கூறிக் கொள்கிறார்கள்.
 2. அவர் பெயரால் கப்சாக்களின் தொகுப்பு, மவ்லூது போன்ற துதிப்பாடல்கள் மூலம் இணை வைக்கும் படலம் தொடர்கிறது.
 3. அவரின் மீது அன்பு கொண்டு, அவரிடம் நேர்ச்சை செய்து, நேர்ச்சை நிறை வேறும் பட்சத்தில் வாசலில் ஒரு கொடி மரம், (ஜண்டா, நிஷான், சன்னதி என்று பல வகைப் பெயர்களும் உண்டு) அதற்கு வருடா வருடம் ரபியுல் ஆகீர் மாதத்திற்கு மஹபூப் சுபஹபானி மாதம் என்று (நபியுல் அவ்வல் முஹம்மது நபி (ஸல்) மாதமாகவும்) பெயரிட்டு அம் மாதங்களில் பாத்திஹா, கந்தூரி, வீர விளையாட்டுகள், ஆர்கெஸ்ட்ரா என்று அவர் வந்து தியானம் செய்ததாக நம்பப்படும் நெல்லை மாவட்டம் பொட்டல் புதூரில் இறந்த யானைக்கு ஜனாசா தொழுகை நடத்திய மற்றும் திருச்சி மாவட்டம் புலிவலம் மற்றும் மதுரை என்ற இடம் மட்டுமல்லாது ஆங்காங்கே பல இடங்களில் கொடிமர வசூல் என ஏகமாய் ஜமாய்த்து விடுகிறார்கள். இவரோடு விட்டார்களா என்றால் அதுவும் இல்லை.
 4. நாகூர் சாஹுல் ஹமீது, ஏர்வாடி இப்ராஹீம் எல்லாம் இஸ்லாமிய கடவுள்கள் என்று அங்கீகாரம் அளித்து விட்டது போல் நாகூர் ஆண்டவர் துணை என்றும், ஏர்வாடி ஆண்டவர் துணை என்றும், மாவட்டத்துக்கு மாவட்டம், ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு திடீர் திடீர் என்று தோன்றிய திடீர் போலி அவ்லியாக்கள் பெயரையோ, ஊரையோ, சேர்த்து துணை என்று வாகனங்களில் கொட்டை எழுத்துக்களில் எழுதிக் கொள்கிறார்கள்.
 5. சில ஊர்களில் இறைவனை மட்டுமே புகழ வேண்டிய பள்ளிவாசல்களின் பெயரே என்ன தெரியுமா? மொய்தீன் ஆண்டவர் பள்ளிவாசல், ஆண்டவர் என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்று பள்ளிவாசலுக்கு பெயர் வைத்தவர்களிடம் தான் கேட்கவேண்டும்.

இதை எல்லாம் தவறு என்று சொல்பவர்களை பள்ளிவாசலுக்கு தொழ வரும் போது சில விதிமுறைகள் என்றபடி ஒரு அறிவிப்பு பலகை தொங்கவிடப்பட்டிருக்கும். அதிலே விரலாட்டுபவர்கள், தொப்பி இல்லாமல் தொழுபவர்கள், 4 மத்ஹபுகளுக்கு கட்டுப்படாதவர்கள் இங்கு தொழ அனுமதியில்லை என்று மிரட்டல் தொனியிருக்கும். மீறினால் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டு இருந்து போலிஸ், கேஸ் என மாட்டிவிட முயற்சிக்கும் பள்ளிவாசல் தலைவர்கள் அவரது ஜால்ரா பட்டாளங்கள், இவர்கள் தொழுகையாளிகளா? குறிப்பாக ஃபஜ்ர் தொழுகை ஜமாஅத்தோடு தொழுபவரா? தாடி வைத்திருப்பவரா? பள்ளிவாசலுக்கு அடிப்படை தேவையை அமைத்துத் தந்தவரா? என்று பார்த்தால் பூஜ்ஜியமே விடையாக கிடைக்கும். முறையான மார்க்க அறிவு கொண்டவர்களுக்கு பதிலாக பகட்டுக்காகவும், பெருமைக்காகவும் பள்ளிவாசல் தலைவர் பதவியை பிரதம மந்திரி, முதல் மந்திரி பதவி போல் மதித்து முத்தவல்லியாக துடிப்பவர்களிடம் அதுபோன்ற அரசியல் வேஷத்தைத் தவிர மார்க்கத்தை எதிர்பார்ப்பது நமது தவறுதான். காரணம் பள்ளிவாசல் தேர்தல் என்று அறிவிப்புச் செய்து விட்டு அரசியல் கட்சிகளின் ஜனநாயக(த்) தேர்தலையே தவிடு பொடியாக்கி போலீஸ் மற்றும் கள்ள ஓட்டு கலாச்சாரத்தை இறையில்லங்களில் முடுக்கிவிடும் நவீன ஜமாஅத்(?) தலைவர்களல்லவா இவர்கள்.

மேற்சொன்ன விஷயங்கள் மட்டுமல்ல, மேலும் எவ்வளவோ விஷயங்கள் எழுதிக் கொண்டே போகலாம். அந்தளவுக்கு அனாச்சாரங்கள் சர்வசாதாரணமாக இஸ்லாத்தின் பெயரால், சுன்னத் என்ற போர்வையில் அரங்கேறுகின்றன. நாம் என்னதான் சொன்னாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்குபோல் தொடர்கிறது.

அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் என்று சொல்லும் நமக்கு “வஹ்ஹாபிகள்’ என்று பட்டம் வேறு சூட்டியுள்ளார்கள். “வஹ்ஹாப்’ என்றால் இறைவனது 99 திருநாமங்களில் ஒன்று “வஹ்ஹாபி’ என்றால் இறைவனைச் சார்ந்தவன் என்பதை பல முறை சொல்லி வருகின்றோம். இன்ஷா அல்லாஹ் இனியும் சொல்வோம். ஏனெனில் ஒரு முஸ்லிம் “வஹ்ஹாபி’ இல்லை என்றால் அவன் முஸ்லிமே இல்லை ஷைத்தானி (ஷைத்தானைச் சார்ந்தவன்) என்பதை அனைத்து முஸ்லிம்களும் உணர வேண்டும்.

இதனை வாசிப்பவர்கள் தாங்கள் மட்டும் திருந்துவதோடு மட்டுமல்லாது தங்களைச் சார்ந்த குடும்பத்தார், நண்பர்கள் யாவரிடமும் தூய இஸ்லாமிய நெறியைப் பரப்புங்கள். அழகிய நபி வழியைக் கூறுங்கள். அவர்கள் மேலும் தீங்கிழைக்க முற்பட்டால் இஸ்லாமிய மார்க்கத்திற்கு அப்பாற்பட்ட அவர்களின் செயலால் அவர்கள் பாழ்பட்டவர்கள் ஆகிறார்கள். ஆனால் அவர்கள் பாழ்படுத்த நினைக்கும் இஸ்லாம் சுத்தமாகவே இருக்கும். ஏனென்றால் இஸ்லாத்தை நமக்குத் தந்தவன் இறைவன் ஆவான்.

எனவே ஏக இறைவனுக்கு மட்டும் சிரம் பணிந்து அவனுடைய திருப்பொருத்தத்தை நாடி, தேடி, நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும்படியான அவனது கட்டளைகளை மட்டும் ஏற்று கலப்படமற்ற தூய இஸ்லாத்தில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ள ஒவ்வொரு முஸ்லிமும் முன்வர வேண்டும். முன் வர முயற்சித்தால் தான் இறைவனின் அருளை அடைய முடியும். இதற்குப் பின்னால் இறைவனுக்கு மாறு செய்தால் நாம் ஏதோ சில சூழல்களில் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டே தான் இருப்போம். அது வீட்டுப் பிரச்சனையாகவோ, நாட்டுப் பிரச்சனையாகவோ இருக்கலாம். இன்ஷா அல்லாஹ், இனி மத்ஹபு மற்றும் இயக்க உணர்வுக்கு ஆட்படாமல், ஈமானின் உணர்வுக்கு ஆட்பட்டு, இறைவனுடைய கோப சாபத்திற்கு ஆளாகாமல் இம்மையில் நேர்வழி நடந்து அதன் பலனாக மறுமையில் வெற்றி பெறுவோம். வல்ல அல்லாஹ் நம் யாவருக்கும் நேர்வழி தந்து பாதுகாக்கப் போதுமானவன்.

விசுவாசிகளே நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து சொல்லிலும், செயலிலும் உண்மையாளர்களுடன் இருங்கள். அல்குர்ஆன் 9:119

Previous post:

Next post: