முஸ்லிம்களின் உயரிய பாரம்பரியம்!

in 2021 ஆகஸ்ட்

முஸ்லிம்களின் உயரிய பாரம்பரியம்!

– இன்ஜினியர்

இஸ்லாத்தில் முன்னோர்களின் பாரம் பரியத்திற்கென்று எந்தவித மதிப்பும், மரியாதையும் கிடையாது. இப்பாரம்பரியத்தை வைத்துக்கொண்டு இறைவனிடத்தில் உயர்ந்த இடத்தைக் கோரவும் முடியாது; பெறவும் முடியாது. முன்னோர்களின் உயர்ந்த பாரம்பரியத்தில் வந்தவர்கள், இறைவனிடத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற்றிட இயலும் என்றிருந்தால்,

  1. இப்ராஹிம்(அலை) அவர்களின் தந்தை
  2. நூஹ்(அலை) அவர்களின் மகன்
  3. லூத்(அலை) அவர்களின் மனைவி
  4. நபி(ஸல்) அவர்களை வளர்த்த பெரிய தந்தையான அபூதாலிப்

ஆகியோர்களுக்கெல்லாம் சுவர்க்க அந்தஸ்து கிடைக்கும் என்று வல்ல அல்லாஹ் குறிப்பிட்டிருப்பான். ஆனால் அவ்வாறு கூறவில்லை.

எனவே, ஒருவர் “என் முன்னோர்கள், சொந்த பந்தங்கள் உயர்ந்த பாரம்பரியத்தில் உள்ளவர்கள். ஆகவே எனக்கு மரியாதையும், சுவர்க்க நன்மாராயமும் கிடைக்கும்” என்று கூற வழியில்லை. இன்னும் நான் மவ்லவி-மெத்தப் படித்தவன் விவாதத்தினால் எதையும் வெல்வேன் என்று சொல்லிக் கொள்வோருக்கும் நன்மாராயம் கிடைக் கும் என்று சொல்ல முடியாது.

மாறாக, ஒருவரின் நன்னடத்தைகளே அவரை உயர்த்தவல்லவை என்பதுதான் இஸ்லாம் வகுத்ததாகும்.

இறையச்சம், நன்னடத்தை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை, அல்லாஹ்வின் கட்டளைப்படி, முன் சென்ற நபிமார்கள், அந்தந்த உம்மத்துக்கு வழிகாட்டிச் சென்றுள்ளனர்.

அப்படிப்பட்ட நன்னடத்தைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்ததால்தான், அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தபோதே, வல்ல அல்லாஹ்வால், “உயர்ந்த அந்தஸ்துக்கு’ நன்மாராயம் அளிக்கப்பட்டனர். எனவே அத்தகைய நன்மாராயம் அளிக்கப்பட்டோரின் உயர்ந்த நடத்தைகளை முன்மாதிரியாகக் கொண்டு, வாழ்ந்தால் மட்டுமே, வெற்றி காண இயலும் என்பதுதான், இஸ்லாத்தின் “உயர்ந்த பாரம்பரியமாக” இருக்கமுடியுமே தவிர, உயரிய குலத்தாலோ, உயரிய தொழிலாலோ, அல்லது நாவன்மையாலோ இஸ்லாத்தில் ஈடேற்றம் இல்லவே இல்லை.

“நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்”.  அல்குர்ஆன் 3:103

இந்த குர்ஆன் வசனம் அனைத்து முஸ் லிம்களுக்கும் நன்கு தெரிந்த வசனம்தான். இவ்வசனமே, முஸ்லிம் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தப் போதுமானது.

(ஆனால் வல்லோனின் கட்டளையை சிறிதும் மதிக்காமல், உலகத்திலேயே தான் ஒருவனுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற பாணியில், ஆணவத்தின் உச்சியில் இருந்து கொண்டு, இந்த நவீன காலத்திலேயே, ஏகப்பட்ட பிரிவினைகளை உண்டுபண்ணி விட்டு, இறுமாப்புடன் திரிகிறார் தீவிர விவாத வாதி).

மேலும்,

  1. ஒற்றுமையே உயர்வு
  2. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
  3. நம்மினில் ஒற்றுமை நீங்கினில் அனை வருக்கும் தாழ்வு, போன்ற சித்தாந் தங்களை பள்ளிப் பருவத்திலேயே தெரிந்து கொண்டோம்.

ஆனால் நாம் இவைகளையயல்லாம் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. சுமார் 20 வருடங்களுக்கு முன் “குர்ஆன்- ஹதீஃத்” வீரர்கள் என்று கூறிக்கொண்டு புறப்பட்டவர்கள் கூட, இதற்கு விதி விலக்கல்ல.

“தவ்ஹீது’ கூட்டமென்றால், தங்களைத் தனிமைப்படுத்திக் காட்டியே தீரவேண்டும் என்று தனிப்பெயர் வைத்துக் கொண்டு பிரிந்து விட்டனர். இவர்களிடம் ஒற்றுமை என்பது மருந்துக்குக் கூட இல்லாமல் போய் விட்டது.

நாளொரு சுய கருத்தும், பொழுதொரு விளக்கமும் அளித்து, முன்னுக்குப் பின் முரணாக செயல்படுகின்றவரின் வாதத்திறமையின் காரணமாக, இவர் பின்னே அவ்வப்போது பல பிரிவுகள் உண்டாகின. இவர்கள், தக்லீதுவாதிகளை விட கேவலமாக அன்னாரின் பின்னால் திரிகின்றனர்; வெட்கக்கேடு!

எனவே குர்ஆன், ஹதீஃத்காரர்கள், அகில உலக தவ்ஹீது ஜமாஅத்வாதிகளாவது, வல்ல அல்லாஹ்வின் குர்ஆன் வசனத்திற்கு மதிப்பளிப்பார்கள் என்று ஆறுதல் அடையலாம் என்றால், அன்னார்கள்தான் பிரித்தாள்வதில் திறமையானவர்களாகத் திகழ்கின்றனர்.

மிகக் குறைந்தவர்களையே கொண்டி ருக்கும் இந்தத் தவ்ஹீதுவாதிகள் அனைவருக்கும் இணைந்து செயல்படும் விவேகமில்லை; திறந்த மனதில்லை; தாராள மனப்பான்மை இல்லை.

எனவே தக்லீதுவாதிகளும், தவ்ஹீதுவாதிகளும் முதலில் கூறப்பட்ட அல்குர்ஆனின் ஒற்றுமை பற்றிய வசனத்தை மனதளவில் புரிந்து, செயலளவில் காட்டவில்லை.

இவர்கள் எல்லோரும் குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் ஒருங்கிணைந்து ஒன்றுபட்ட சமுதாயமாகத் திகழும் பண்பை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?

அனைத்து புரோகித மவ்லவிகளின் பிரித்தாளும்  சுயநலப் போக்கே காரணம்.

தவ்ஹீதுவாதிகள் நாளுக்கொரு கருத் தும், பொழுதொரு விளக்கமும் என்று எப்பொழுதும் அரைவேக்காட்டுத் தனமாகவே செயல்பட்டனர்; ஒன்றாக ஒரே அமைப்பாக செயல்பட்ட அமைப்பின் செயல் வீரர்கள் ஒவ்வொருவரும், தான் தான் அமீர் என்று கூறிக்கொண்டு வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து செயல்பட்டனர்.

மேலும் சுய லாபம் ஒன்றையே குறிக் கோளாகக் கொண்டு ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம்களையும் ஒரே அணியில் திரட்ட திறன் இல்லாத சிறு சிறு இஸ்லாமிய அரசியல் பிரிவு கட்சித் தலைவர்கள், அனைத்து முஸ்லிம்களையும் சரியான திசையில் செலுத்தத் தவறினர்.

உலகளவில் இன்று முஸ்லிம்கள் என் றாலே, தீவிரவாதிகள் தான் என்று பெயர் வாங்கிக் கொண்டு, முஸ்லிம்கள் இன்று அல்லோகலப்படுவதற்குக் காரணம் என்ன? சிந்திக்க வேண்டாமா? அல்லாஹ் வலியுறுத்திய அந்த அல்குர்ஆன் என்ற ஒற்றுமைக் கயிற்றை பிடித்து ஒருமித்து செயல்படாத இத்தகையோர் தான் காரணம். செய்யும் அனைத்துச் செயல்களும் அல்லாஹ்வின் உவப்பிற்காகவே செய்தால், தவறு ஏற்பட வாய்ப்புள்ளதா?

“அல்லாஹ்வின் உவப்பையே நோக்கமாகக் கொண்டு, நீர் செய்கின்ற எந்தக் காரியமானாலும் சரி, அதற்காக உமக்கு நன்மை கொடுக்கப்படும்; நீர் உம் மனைவியின் வாயில் இடுகின்ற உணவுக் கவளத்திற்கும் கூட உமக்கு நன்மை உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார். (ஹதீத் சுருக்கம்) நூல்கள்: புகாரி 2:1295, முஸ்லிம் 3:3991, முஅத்தா 1452.

அல்லாஹ்வும் அவர்களைப் பற்றித் திருப்தியடைந்தான் (ரழி அல்லாஹு அன்ஹும்) என்று ஸஹாபாக்களைப் பற்றி புகழ்ந்து கூறுகிறோம். ஏன் அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்? சிந்திப்போமாக!

  1. மாற்றானுடன் கண்ட மனைவியை உடனே வாளால் வெட்டிவிடவில்லை உமைமீர்(ரழி) என்ற நபித்தோழர். மாறாக அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, இச்சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று மார்க்கத் தீர்ப்பு கேட்கும் பண்பை மேற்கொண்டார். அப்போது “சத்தியம் செய்தல்” (லிஆன்) பற்றிய அல்குர்ஆன் (24:6-9) வசனமே இறங்கிற்று. (ஹதீதின் சுருக்கம்) நூல்கள்: முஅத்தா 1155, புகாரீ 6:5308, 5309, முஸ்லிம் 3553.
  2. தான் விபச்சாரம் புரிந்து விட்டதாகத் தானே வலியச் சென்று, நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டு, மார்க்கத் தீர்ப்பு கேட்டு, “கல்லெறிந்து கொல்லப்படுதல்” என்ற தண்டனையை ஏற்று, மாண்டு போனார், மாயிசு பின் மாலிக் (ரழி) என்ற நபிதோழர் (ஹதீதின் சுருக்கம்) நூல்கள்: முஅத்தா 1519, புகாரீ 7:6814, முஸ்லிம் 3:4211
  3. உமர்(ரழி) அவர்கள் கலீஃபாவாக ஆட்சி செய்து கொண்டிருந்த சமயத்தில், அவர்களது ஆடையில் மூன்று கிழிந்த ஒட்டுகள் காணப்பட்டன. நூல்: முஅத்தா 1643
  4. உமர்(ரழி) அவர்கள் ஆட்சியில், தன் கீழ் பணி புரிந்து கொண்டிருந்த ஒரு கவர்னர், தன் (உமர் அவர்களின்) மகன்களுக்குச் சலுகை செய்ததை விரும்பவில்லை.  நூல் : முஅத்தா 1380
  5. மது அருந்தி விட்ட தன் மகனை 80 கசையடகள் அடிக்க உமர்(ரழி) அவர்கள் உத்தரவிட்டார்கள். நூல்கள்: முஅத்தா 1557, புகாரீ: 5598, பாடம் 10
  6. அபூபக்கர்(ரழி) அவர்கள் இறக்கும் தறுவாயில் தன் மகள் ஆயிஷா(ரழி) அவர்களிடம் தனக்குப் பழைய துணியையே “கபன்” துணியாக அணிவிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். ஏனெனில் புதுத்துணி உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் என்று கூறினார்கள். (ஹதீதின் சுருக்கம்) நூல்கள்: புகாரி 2:1387, முஅத்தா 518

இவைகள் எல்லாம் முஸ்லிம்களின் உயர்ந்த நன்னடத்தைகளுக்கு எடுத்துக்காட்டுகள். இந்த நடத்தைகளைத்தான் நேற்றைய, இன்றைய, நாளைய முஸ்லிம்கள் தங்கள் பாரம்பரியங்களாக மேற்கொள்ள வேண்டுமேயயாழிய நான் கலீஃபா வம்ச வழித்தோன்றல், நான் பெரிய பள்ளியின் முத்தவல்லி என்றெல்லாம் வெட்டிப் பாரம்பரியங்கள் நன்மாராயங்கட்கு உரியவை அன்று.

மேலும், கடும் நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தன்னைக் காணவந்த, நபி (ஸல்) அவர்களிடம் ஸஅது பின் அபீவக்காஸ் (ரழி) அவர்கள், தான் நோயிலிருந்து நிவாரணம் அடையவேண்டும் என்று துஆ செய்யக் கேட்டுக் கொள்ளவில்லை; மாறாகத் தன் சொத்தில் மூன்றில் இரு பங்குகளைத் தானம் செய்து விடவா? என்று கேட்டார்கள். (ஹதீதின் சுருக்கம்) நூல்கள்: புகாரீ 2:1295, முஸ்லிம் 3:3991, முஅத்தா 1452

இதுதான் உண்மை முஸ்லிம்களிடைய நன்னடத்தைகளின் வழியில் அமைந்த உயரிய பாரம்பரியம். இவைகள் முஸ்லிம் கள் எவ்விதம் வாழ்ந்து நற்பெயர் ஈட்ட வேண்டும் என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

இவ்வுள்ளச்சமுடையவர்களின் செயல்களைக் கண்டே அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். மேலும் “அண்டை வீட்டுக்காரருக்குத் தீங்கிழைப்பவன் ஈமான் உடையவன் அல்ல” (புகாரீ 6:6016) என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளபடி, அண்டை வீட்டுக்காரர்கள் அவர்கள் எச்சமூகத்தைச் சார்ந்தவராயினும் அவர்களுக்குத் தீங்கிழைக்க இஸ்லாத்தில் அனுமதியில்லை என்பதை உணரலாம்.

“தண்ணீர் தாகத்தால் வாடிய ஒரு நாயின் தாகத்தைத் தீர்த்ததற்கு எல்லாம் வல்ல அல்லாஹ், அம்மனிதனின் பாவங்களை மன்னித்து அருள் புரிந்துள்ளான்” (புகாரீ 3: 2363, முஸ்லிம் 4:5577, முஅத்தா 1666) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நாய் துன்பப்படுவதையே விரும்பாத வல்ல அல்லாஹ் மனிதர்களை அநியாயமாகத் துன்புறுத்துவதை விரும்புவானா?

“யுத்தத்தில் சிறுவர்களையும், பெண்களையும் கொல்ல வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். நூல்கள் : புகாரீ 3:3315, முஸ்லிம் 4:4219,20, முஅத்தா 957)

“யுத்தத்தில் வயோதிகர்களையும் கொல்ல வேண்டாம்” என்று அபூபக்கர் (ரழி) அவர்கள் கட்டளையிட்டார்கள். நூல்: முஅத்தா 958

போர்க்களத்திலேயே சிறுவர்கள், பெண்கள், வயதானவர்கள் ஆகியோர் களைக் கொல்வதற்குத் தடையிருக்க “பழி வாங்குகிறோம்” என்று கூறிக்கொண்டு ஒன்றும் அறியாத அப்பாவி மக்களைக் கொல்லலாமா? தீவிரவாதம் பயனளித்ததா? பயனளிக்குமா? “நன்மைக்கு நன்மையைத் தவிர, வேறு கூலி உண்டா?” (அல்குர்ஆன் 55:80) என்ற அல்லாஹ்வின் வாக்கைச் சிந்தித்துப் பார்க்காமல் விளையாட்டாகவே விட்டு விட்டோமோ? அதற்குரிய பலனை கண் கூடாகக் கண்டு விட்டோமல்லவா?

மேலும் ஒரு தெருவில் நடக்கும் சிறு சம்பவத்தைக்கூட ஊதி பெரிதாக்கி எழுதி, ஏதோ முஸ்லிம்களுக்கு எங்குமே எப் போதுமே பெரிய கொடூரம் இழைப்பதாக எழுதி வருவது எதற்காக? தங்களின் விளம் பரத்திற்காக, ஆங்காங்கே குழப்பங்களை ஏற்படுத்தி குளிர்காயத்தான்.

அல்லாஹ்வின் கட்டளைகளை மறந்து விட்டு சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஆடுவது புத்திசாலித்தனமாகுமா?

முஸ்லிம் ஆட்சி நடைபெறும் நாடுகளி லேயே அந்த அரசாங்கம் தான் குற்றங்களை விசாரித்துத் தண்டனை வழங்குகிறது. இஸ்லாமிய ஆட்சி உள்ள நாடுகளில் கூட குற்றத்தைப் பார்த்த உடனேயே ஒருவர் தானே சென்று தண்டனை வழங்க அனுமதியில்லை. குற்றம் உரிய அத்தாட்சியுடன் நிரூபணமான பின்புதான் தண்டணை வழங்கப்படுகிறது. இதையயல்லாம் நினைத்துப் பார்க்காமல், வல்ல அல்லாஹ்வின் உத்தரவுகளை மீறி தன் இஷ்டத்திற்கு மனம்போன போக்கில் செயல்பட்டதால் தான், முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதி கள் தான் என்று பெயர் பெற்றுள்ளோம்.

இந்த அவப்பெயரை மாற்ற, நற்பண்புகளுடன் வாழ்ந்து, வல்ல அல்லாஹ்வின் கீழ்க்கண்ட வாக்கில் நம்பிக்கை வைத்து, இழந்த நன்னடத்தைகளுடன் கூடிய உயரிய பாரம்பரியத்தை மீட்போமா?

“நிச்சயமாக (குர்ஆனாகிய) இது, உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் வரையில், நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல பாகங்களிலும், அவர்களுக்குள்ளாகவும், அதி சீக்கிரத்தில் நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்”. அல்குர்ஆன் 41:53

தான்தோன்றித்தனமாகத் திகழ்ந்து, அநியாயங்களையே செய்து வந்த எத்தனை சமூகங்களை அல்லாஹ் தன் வல்லமையால் அழித்து, இவ்வுண்மையை நிலைநாட்டியிருக்கிறான் என்பதைச் சிந்திக்க மாட்டோமா?”அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், மேலும் அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாகப் பிரவேசிப்பதைப் காணும்போதும்” அல்குர்ஆன் 110:1-4

இறைவனைத் துதிக்கவும், பாவமன் னிப்புக் கோரவும் வலியுறுத்தும் அல்குர்ஆன் வசனம், மற்றும் ஹதீஃதுகளின் வழியில் வாழவேண்டிய முஸ்லிம்கள் எப்படி தீவிரவாதிகளாகத் திகழ முடியும்? எப்படி அநியாயமாகப் பிறரைத் துன்புறுத்த முடியும்?

“என்னுடைய உம்மத்துக்கள் துன்பப்படும் போது, நான் பட்ட சோதனைகளையும், வேதனைகளையும் நினைத்துப் பார்த்தால், அவர்களின் கஷ்டங்கள் இலகுவாகத் தென்படும்” (முஅத்தா 553) என்ற ஹதீதின் அடிப்படையில் வாழவேண்டிய முஸ்லிம்கள் உலகில் தீவிரவாதிகள் என்ற பெயர் பெற்றது நியாயம்தானா?

எனவே நன்னடத்தைகள் மூலம் நற்பெயர் ஈட்டுவதோடு மட்டுமின்றி, அல்லாஹ்வின் நன்மாராயத்திற்கும் உரிய வர்களாக இஸ்லாமியர்கள் மாறவேண்டாமா? குர்ஆன் என்ற கயிற்றைப் பற்றி நடக்க எல்லா முஸ்லிம்களும் சூளுரைப் போமாக! இதுவல்லவா முஸ்லிம்களின் உயரிய பாரம்பரியம்!! அல்லாஹ் நன்கறிந்தவன்.

Previous post:

Next post: