2021ன் ஹஜ் பயணம்…?

in 2021 ஆகஸ்ட்

தலையங்கம்!

2021ன் ஹஜ் பயணம்…?

கொரோனாவை கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சகம், வெளியுறவுத்துறை, விமானப் போக்குவரத்து அமைச்சகம், ஹஜ் கமிட்டி, சவூதியில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றுடன் மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் விரிவான ஆலோசனை செய்து, 2021ம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பங்கள் பெற்றதாகவும், சவூதி அரசு விதித்த நடைமுறையின்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள தாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.முக்தர் அப்பாஸ் நக்வி அறிவித்திருந்தார்.

ஹஜ் பயணிகள், பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்யப்படுவார்கள் என்றும், ஒவ்வொரு பயணியும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தின் பி.சி.ஆர். சோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஏர் இந்தியா மற்றும் இதர முகமைகளிடமிருந்து (AGENCIES) பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் விமானங்கள் புறப்படுவதற்கான இடங்கள் 21லிருந்து 10ஆக குறைக்கப்பட்டதாகவும், தமிழகத்தை சேர்ந்த பயணிகள் பெங்களூரு விலிருந்து செல்லும் விமானங்களில் பயணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், தற்சமயம் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாகக் காரணம் காட்டி வெளிநாடுகளைச் சேர்ந்த ஹஜ் பயணிகளுக்கு சவூதி அரேபிய அரசு தடை விதித்து விட்டது. தற்போது சவூதி அரேபியாவில் இருப்பவர்களில் தடுப்பு ஊசி செலுத்திக் கொண்ட 60,000 (அறுபது ஆயிரம்) பேர் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும் எனவும் வெளி நாட்டினருக்கு அனுமதி இல்லை என்றும் சவூதி அரசு அறிவித்ததைத் தொடர்ந்து ஹஜ் பயணம் ரத்து செய்யப்பட்டதாக நம் நாட்டின் ஹஜ் கமிட்டி அறிவித்து விட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் பெறப்பட்ட விண்ணப்பங் களும், ஹஜ் பயணம் செல்வதும் ரத்து செய்யப்பட்டதாக இந்திய ஹஜ் கமிட்டி 13.07.2021 செவ்வாய்க்கிழமை அறிவித்ததாக “தினமணி” செய்தி தெரிவிக்கிறது.

*********************

தியாகம் எங்கே?

நபி இப்றாஹீம்(அலை) அல்லாஹ்வின் பொருத்தம் வேண்டி தள்ளாத முதுமைப் பருவத்தில் ஆசையுடன் பெற்றெடுத்த அருமை மகனையே குர்பானி கொடுக்கத் தயாரானார்கள். சோதனையில் வெற்றி பெற்றார்கள். அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றார்கள். மகனுக்குப் பதிலாக ஒரு ஆட்டை குர்பானி கொடுக்க அல்லாஹ் கட்டளையிட்டான். அவர்களின் தியாக வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு முஸ்லிம்கள் துல்ஹஜ் மாதம் 10ம் நாள் ஈத் (பெருநாள்) தொழுகைக்குப் பிறகு குர்பானி கொடுத்து வருகிறார்கள். அப்படி குர்பானி கொடுக்கும் நம்மிடம் உண்மையிலேயே நபி இப்றாஹீம்(அலை) அவர்களிடம் காணப்பட்ட அந்த தியாக உள்ளம் இருக்கிறதா? சந்தேகம்தான். ஏதோ சடங்காக குர்பானியை நிறைவேற்றி வருகிறோம்.

நபி(ஸல்) அவர்கள் தமது 23 வருட முயற்சி யில் ஓர் உன்னத சமுதாயத்தை உருவாக்கிச் சென்றார்கள். அந்த நபித் தோழர்கள் யுத்த களத்தில் தாங்கள் வெட்டப்பட்டு உயிரை இழக்கும் தருவாயில் இருக்கும் போது கூட, தன் உயிர் போனாலும் பரவாயில்லை. தன் பக்கத்தில் கிடக்கும் சகோதரர் நீர் அருந்தி தாகம் தீரட்டும் என்ற உன்னத நோக்கில் தனக்கு தனது உறவினர் மூலம் கிடைத்த நீரை அங்கு கொண்டு செல்லச் சொல்கிறார். அந்த அளவு நபித்தோழர்கள் தியாகத்தில் ஊறித் திளைத்தார்கள். அதனால்தான் அவர்கள் பஞ்சை பராரிகளாக இருந்தும், மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு ஆச்சரியப்படத்தக்க வெற்றி வாழ்க்கை வாழ்ந்தார்கள். சத்தியத்தை எதிர்த்தோரை எல்லாம் மண் கவ்வச் செய்தார்கள். ஆம்! அவர்கள் பெற்றிருந்த தியாக உள்ளமும் சகோதர வாஞ்சையும் அவர்களை வெற்றியின் முகட்டுக்கே கொண்டு சென்றன.

ஆனால் இன்று நமது நிலை என்ன?

நபி(ஸல்) அவர்களின், அவர்களது தோழர்களின் அருமை பெருமைகளை மேடைகள் தோறும் வாய் கிழிய முழங்கும் நம்மிடம் அவர்களிடம் காணப்பட்ட அந்த உயர் பண்புகள் இருக்கின்றனவா?

தியாக உள்ளம் இருக்கிறதா? சகோதர வாஞ்சை இருக்கிறதா?

நாம் தியாகம் செய்து நமக்குக் கிடைப்பதை நமது சகோதரனுக்குக் கொடுப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நமது சகோதரனுக்கு அல்லாஹ்வின் அருளால் கிடைப்பதைப் பார்த்து சந்தோசப்படுவது ஒரு பக்கம் இருக் கட்டும். அதைப் பார்த்து பொறாமைப்படா மலாவது இருக்கிறோமா? இல்லையே? எந்த அளவு பொறாமைப்படுகிறோம்? நமது சகோத ரனுக்குக் கிடைப்பதை கிடைக்காமல் ஆக்க எத்தனை முயற்சிகள் உண்டோ அத்தனையையும் கொஞ்சமும் கூச்சமில்லாமல், வெட்க மில்லாமல் செய்யக்கூடிய அளவுக்கு தரம் தாழ்ந்து செல்கிறோம். அதில் வெறி கொண்டு அலைகிறோம், இந்த நிலையில் நாம் தியாகம் செய்வது எங்கே?

இது எந்த அளவு இழிவான குணம் என்பதை நிதானமாக நாம் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

நமது உடம்பில் இரத்தம் எங்கெல்லாம் ஓடுகிறதோ அங்கெல்லாம் ஷைத்தான் ஓடு கிறான். அவன் “நமது பகிரங்க விரோதி” அவனை நாம் அறிந்துள்ள அளவுக்கு, பேசும் அளவுக்கு, எழுதும் அளவுக்கு, மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் அளவுக்கு நாம் அவனை விட்டு ஒதுங்குவதாக இல்லையே? அவனது தூண்டுதலினால் தானே மற்றவர்களைப் பார்த்து, அவர்களின் நல்வாழ்வைப் பார்த்து, அவர்களுக்குக் கிடைக்கும் அருட்கொடைகளைப் பார்த்து பொறாமைப்படுகிறோம். இந்த நிலை நீடிக்கும் வரை நமக்குள் ஒற்றுமை ஏற்படுமா? சகோதர வாஞ்சை ஏற்படுமா? வெறும் வாயால் ஒற்றுமை சகோதர வாஞ்சை என்று முழக்கமிட்டுவிட்டால் மட்டும் அவை ஏற்பட்டுவிடுமா?

ஷைத்தானின் இந்த மாய வலையிலிருந்து விலகி, நமது சகோதரர்களின் நல்வாழ்வைக் கண்டு பொறாமைப்படுவதை விட்டுத் தவ்பா செய்து, மற்றவர்களின் நலன்களுக்காக நாம் தியாகம் செய்யும் அந்த நபி காலத்து உயர் பண்பாடு நம்மிடம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் நாம் கொடுக்கின்ற குர்பானியில் பொருள் இருக்க முடியும்.

Previous post:

Next post: