இறைவன் தந்த தங்கம் கையில் இருக்கும்போது வட்டியில் விழுவது நிர்பந்தம் ஆகுமா?

in 2021 செப்டம்பர்

இறைவன் தந்த தங்கம் கையில் இருக்கும்போது

வட்டியில் விழுவது நிர்பந்தம் ஆகுமா?

S.H. அப்துர் ரஹ்மான்

அன்பு சகோதரர்களே உங்கள் மீதும் உங் கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதான மும் உண்டாகட்டும். படைத்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.
பாவங்கள் என்றால் என்ன?

பாவங்கள் என்றால் என்ன என்பதை தெரியாமல் நம்மில் பலர் அதைச் செய்து குற்றவாளியாக ஆகிவிடுகின்றனர். எனவே பாவம் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.

பெரும் பாவம் என்றால் என்ன?

பெரும் பாவம் என்பது அல்லாஹ்வினா லும் நபி(ஸல்) அவர்களால் விலக்கப்பட்டவற்றை குறிக்கும். இவற்றை செய்வதால் இறைவனின் கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளாக வேண்டியிருக்கும்.

பெரும் பாவங்கள் தவிர்த்தல் :

பெரும் பாவங்களை தவிர்த்தால் ஏனைய சிறுபாவங்களும் மன்னிப்பதாக இறைவன் கூறுகின்றான்.

“உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டால், உங்களுடைய சிறு பாவங்களை நாம் பகிரங்கமாக உங்களை(மன்னித்து) கண்ணி யத்தின் வாயிலில் புகுத்துவோம்.  இறைநூல் 4:31

“அவர்கள் பெரும் பாவங்களையும் மானக்கேடானவைகளையும் விட்டு விலகி இருப்பார்கள்…”  இறைநூல் 42:37

“அவர்கள் சிறு தவறுகளை தவிர ஏனைய பெரும் பாவங்களில் இருந்து விலகி இருப்பார்கள்…” இறைநூல் : 53:32

“ஐந்து நேரத் தொழுகைகளும், ஒவ்வொரு ஜும்ஆவும், ஒவ்வொரு ரமழானும், ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு இடைப்பட்ட காலங்களில் செய்யக்கூடிய சிறு தவறுகளுக்கு பரிகாரமாகும். (ஆனால் இடைப்பட்ட காலங்களில் பெரும் பாவங்களில் ஈடுபடாத வரை! என நபி(ஸல்) கூறினார்கள்.  (ஆதாரம்: முஸ்லிம், திர்மிதி, அஹ்மத்)

இதன்மூலம் பெரும் பாவங்களை செய் யாதவனுக்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்படும் என்பதை நபி(ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

எது பெரும்பாவம் :

மனிதனிடம் காணப்படும் பாவச் செயல்களில் ஏழு பாவங்களை இஸ்லாம் வன்மை யாகக் கண்டிக்கிறது. அவற்றில் ஒன்றைச் செய்தாலும் அது அவனை அழித்துவிடும்.  “ஏழு பெரும் பாவங்கள்” ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தம் நல்லறத் தோழர்களிடம் “அழிவைத் தரும் ஏழு பாவங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு” எச்சரித்தார்கள். அவை யாவை? என நபித்தோழர்கள் கேட்டபோது பின்வருமாறு விளக்கமளித்தார்கள்.

  1. இறைவனுக்கு இணை வைத்தல்
  2. சூனியம் செய்தல்
  3. இறைவன் தடுத்த ஓர் உயிரை அநியாயமாக கொலை செய்தல்
  4. அநாதைகளின் சொத்துக்களை விழுங்குவது.
  5. வட்டிப் பொருளை உண்ணுதல்.
  6. போரில் புறமுதுகிட்டு ஓடுவது.
  7. விசுவாசியான கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது.  (அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரழி), புகாரி 2766)

மேலே உள்ள குர்ஆன், ஹதீத்கள் மூலம் வட்டி என்பது பெரும் பாவத்தில் வரும் என்று தெரிந்து கொண்டோம்

மனிதன் வட்டி எனும் பெரும் பாவத்தை தவிர்த்து விட்டு வாழ முயற்சி செய்ய வேண்டும். இன்றைய காலத்தில் பணத் தேவை என்றால் உடனே மனிதர்கள் தங்களி டம் இருக்கும் தங்க நகைகளை அடமான மாக வைத்து வட்டிக்கு கடன் வாங்குகின்ற னர். இதன்மூலம் வட்டி எனும் பெரும் பாவத் தில் ஈடுபடுகின்றனர்.

சமுதாய நிலைக்கு யார் காரணம் :

இதற்கு முழுமுதல் காரணம் முஸ்லிம்கள் ஒரே தலைமையில் இல்லாமல் இருப்பதும், செல்வந்தர்கள் தங்களின் ஜகாத்களை சரியாக கொடுக்காததும், நபி(ஸல்) காட்டி தந்து விட்டு சென்ற பைத்துல்மால் முறை இல்லா மல் போனதும்தான்.

முஸ்லிம் சகோதரர்களே! தன்னிடம் விற்பதற்கு எதுவும் இல்லாதவர்கள் நிர்பந்தம் என்று கூறி வட்டியில் விழுகின்றனர். அது அவர்களுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ளது. அது குறித்து நாம் பேச வேண்டாம். ஆனால் இறைவன் தங்கம் தந்து அதை வைத்து உள்ள முஸ்லிம்கள் பண சிரமம் ஏற்படும்போது அடமானம் என்ற பெயரில் வட்டி என்ற பெரும் பாவத்தில் விழுவது சரியா?

வழி இருந்தும் நிர்பந்தம் என்பது சரியா?

தங்க நகையை விற்று சிரமத்தை நீக்க உங்களுக்கு வழி இருந்தும், அல்லாஹ் உங்களி டம் தங்கம் தந்து இருந்தும் பெரும் பாவமான வட்டியில் விழலாமா? விற்க தங்கம் இருக்கும் போது விற்காமல் அடகு என்ற பெயரில் பெரும் பாவமான வட்டியில் விழுவது நியா யமா? இதனை இறைவன் நிர்பந்தம் என்று ஏற்றுக் கொள்வானா?

ஹராம் என்பது வேறு வழியில்லாத நிர்பந்த நிலையில்தான் ஹலால் ஆக முடியும். பெரும் ஹராமான வட்டியை வேறு வழிகள் இருக்கும்போது எப்படி குற்றம் இல்லாத ஒன்றுபோல் செய்கிறீர்கள்.

விற்க தங்க நகைகளை அல்லாஹ் தந்து இருக்கும்போது, அதை விற்று விட்டு சிரமத்தை போக்கி கொள்ளாமல் அல்லாஹ் விடம் இருந்தும் அவன் தூதரிடம் இருந்தும் போர் அறிவிக்கப்பட்டது என்று குர்ஆன் கூறும் வட்டியில் விழலாமா?

வட்டி பற்றி இறை எச்சரிக்கை :

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வை நீங்கள் பயந்துகொள்ளுங்கள்; மேலும், நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் வட்டியில் மீதியுள்ளதை (வாங்கா மல்) விட்டுவிடுங்கள். (இறைநூல் 2:278)

இவ்வாறு நீங்கள் செய்யவில்லையயன் றால் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரி டமும் போரிடுவதாக பிரகடனம் செய்து விடுங்கள். நீங்கள் (தவ்பா செய்து இப் பாவத்திலிருந்தும்) மீண்டுவிட்டால் உங்கள் பொருள்களின் மூலதனம் உங்களுக்குண்டு. (கடன் பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள். நீங்களும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள். (இறைநூல் 2:279)

வட்டி பற்றி மக்கள் மனநிலை :

நாளுக்கு நாள் தங்கம் விலையேறி கொண்டிருக்கிறது இந்த நிலையில் கையில் இருக்கும் தங்கத்தை விற்றுவிட்டால் வாங்க முடியாது என்று கூறி, சிலர் அடகு வைத்து பின்னர் பணம் வரும்போது திருப்பி கொள் கிறோம் என்று கூறுகின்றனர். ஆனால் அசலும் அதற்கான வட்டியும் சேர்ந்ததால் தங்கம் விலைகூடுவதை விட அதிகம் கட்ட வேண்டிதான் உள்ளது. அதிலும் இவர்க ளுக்கு நட்டமே. இவ்வுலகில் நட்டம், மறுமை யிலும் வட்டியில் ஈடுபட்டதால் நட்டமே.

மாதாமாதம் வட்டி கட்டுகிறீர்களே என்று கேட்டால், “வட்டி கட்டத்தான் செய்கி றோம். வட்டி வாங்கவில்லையே!’ என்று கூறுகின்றனர். வட்டி கட்டுவது குற்றம் இல் லாதது போலவும் வட்டி வாங்குவது மட்டும் தான் குற்றம் போல் பேசுகின்றனர். ஆனால் மார்க்கம் சொல்லும் வட்டியின் தன்மையை அறிந்து கொள்ள முடியாத மக்களாக உள்ளனர்.

இஸ்லாம் கூறும் வட்டியின் தன்மை :

ஜாபிர்(ரழி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்ப வரையும், அதற்கு கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், “”இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீத் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (முஸ்லிம்:3258, அத்தியாயம்: 22, தோப்புக்குத்தகை)

வட்டி உண்பவனையும், உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சமநிலையில் இஸ்லாம் நிறுத்தி உள்ளபோது வட்டி கொடுப்பது மட்டும் நிர்பந்தம் என்ற காரணத்தைக் காட்டி வட்டி கட்டுவதை ஹலாலாக மாற்ற சிலர் நினைக்கின்றனர். அல்லாஹ் பெரும் பாவமாக கூறிய வட்டியை ஏழைகளை காட்டி தங்கம் வைத்திருப்ப வர்களுக்கும் ஹலால் ஆக்க துடிக்கின்றனர்.

தூதர் கொடுத்ததும், தடுத்ததும் :

மேலும், (நம்) தூதர் உங்களுக்கு “எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும் எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்’ மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன். (இறைநூல் 59:7)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நான் எதை(ச் செய்ய வேண்டாமென) உங்களுக்குத் தடை செய்துள்ளேனோ அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். நான் எதைச் செய்யுமாறு உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளேனோ அதை உங்களால் இயன்ற வரை செய்யுங்கள்” (முஸ்லிம்: 4702) அபூ ஜுஹைஃபா(ரழி) அறிவித்தார் :

வட்டி வாங்குவதும், கொடுப்பதும் சமமே :

“வட்டி உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்” (புகாரி: 5347,5945, 5962. மேலும் பார்க்க: முஸ்லிம்: 3257, 3258)

அவ்ன் இப்னு அபீ ஜுஹைஃபா(ரஹ்) அவர்கள் கூறினார் :

“வட்டி உண்பதையும், வட்டி கொடுப் பதையும் தடை செய்தார்கள்’. (புகாரி: 2086)

வட்டியை பற்றி இஸ்லாம் தெளிவாக எந்த செயலும் பாவத்தில் சமமானது, சாபத் தில் சமமானது என்று தெளிவுபடுத்தி விட்டது. அதற்கு மேலும் “கொடுப்பது கூடும்” என்று கூறுபவர்கள் தங்கள் நிலையை பரிசீலித்துக் கொள்ளுங்கள்.

வட்டியில் ஈடுபடாமல் இருக்க  தீர்வு :

சிலர் தன்னிடம் இருக்கும் தங்கத்தை அவசர தேவைக்கு விற்றுவிட்டால் மீண்டும் அடுத்த தேவைக்கு என்ன செய்வது என்று கேட்கிறார்கள். வட்டிக்கு அடமானம் வைத் தாலும் அடுத்த தேவைக்கு தங்கம் இருக்காது, வட்டியும் அசலையும் திரும்ப செலுத்தி முறையாக நேரத்திற்குள் மீட்டினாலே தவிர. அதேபோல் மீண்டும் நகை சீட்டின் மூலம் பணம் கட்டி விற்ற அதே எடையளவுள்ள நகையை மீண்டும் வாங்கினால் திரும்ப நகை யும் கிடைத்துவிடும். வட்டியில் இருந்தும் தப்பி விடலாம். ஒருசில நகை கடைகளில் போனஸ் என்ற பெயரில் கூடுதல் தொகை தந் தால் அது வட்டியாகிவிடுமே என்று கேட்கின் றனர். உங்கள் பகுதிகளில் கொடுக்கின்ற பணத்திற்கு அதிகமாக நகை தரும் நிலை இருந்தால் பணத்தை வீட்டிலேயே சேமித்து பின்னர் பணம் செலுத்தி தங்கம் நேரடியாக வாங்கிக் கொள்ளலாம்.

இதில் எந்த முறையிலும் வட்டியில் ஈடுபடாமல் இருப்பதே சிறப்பானது, இறைவனுக்கு பிடித்தமானது. வீட்டில் உண்டியலில் பணத்தை சேமித்து விற்ற தங்கத்தை மீண்டும் வாங்குவதில் எந்த பிரச்சனையும் வராது. வட்டி பயமும் வராது. நகையை அட மானம் வைத்து வட்டி என்று நன்றாக தெரிந்து அஞ்சாமல் வட்டி கட்டி வருபவர் கள் நகை சீட்டின் மூலம் விற்ற நகையை திரும்ப வாங்க சொன்னால் நகை சீட்டு கட்டு வதில் வட்டி எதுவும் வந்துவிடுமோ என்று அஞ்சுவதாக கூறுவது நம்புவதாக இல்லை. ஏதோ காரணம் கூறி வட்டிக்கு நகையை வைப்பதை தான் சரிகாண முயல்கின்றனர். வீட்டில் பணம் சேர்த்து நகை வாங்கி கொள்ள வேண்டியதுதான் என்று கூறினால், அதற்கும் பணம் கையில் இருந்தால் செலவாகிவிடும் என்று காரணம் கூறி நகை வட்டி கடன் பக்கம் தான் சரிகாண்பார்கள். மனிதனுக்கு தீமையின் பக்கம் திரும்புவது தான் எளிதாக தெரியும். எப்போதும் தீமை செய்வது எளிதாகத்தான் இருக்கும்.

நகைச் சீட்டு மூலம் நகை வாங்கலாமா?

நகைக் கடைகளில் மாதம் மாதம் தவணை முறையில் சேமிப்பை செலுத்தி தவணைகள் முடிந்த பின் சேமிப்புத் தொகைக்கு நிகராக தங்க ஆபரணங்களைப் பெற்றுக்கொள்வதில் பணம் பெறும்போது எவ்வித முன் முடிவுமின்றி பணம் பெற்றவர் தொகையை விட தாமாக விரும்பி அதிக மாகக் கொடுத்தால் அது வட்டியில் சேராது. ஏனெனில், பணம் கொடுத்தவர் இந்த அதிகப்படியான தொகையை எதிர்பார்த்து பணம் வழங்கவில்லை.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரழி) அறிவித்தார்:

நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். முற்பகல் நேரத்தில் சென்றேன்’ என்று ஜாபிர் (ரழி) கூறினார் என நினைக்கிறேன் என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான மிஸ்அர் (ரஹ்) கூறினார். நபி(ஸல்) அவர்கள், “இரண்டு ரக் அத்துகள் தொழுவீராக!’ என்று கூறினார்கள். என்னிடம் வாங்கிய ஒரு கடனை அவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. (நான் தொழுது முடித்த பின்) எனக்குத் தரவேண் டிய கடனைத் திருப்பிச் செலுத்தியதுடன் எனக்கு அதிகமாகவும் கொடுத்தார்கள்.  புகாரி: 2394, அத்தியாயம்: 43 கடன்

சிறுசேமிப்பு தவணை முறைத் திட்டம் சரியா:

ரொக்கப் பணத்தைக் கையிலெடுத்துக் கொண்டு நகை வாங்க நகைக் கடைக்குச் சென்றால் எல்லா நகைகளுக்கும் கூடுதல் குறைவாக செய்கூலி, சேதாரம் செலுத்தியாக வேண்டும்.

சிறு சேமிப்புத் திட்டத்தில் 10 மாதங்கள் 15 மாதங்கள் என தவணை முறையில் பணம் செலுத்தி தவணை மாதங்கள் முடிந்ததும் சேமிப்புத் தொகைக்கு விலையாக தங்க ஆப ரணங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த சிறு சேமிப்புத் திட்டத்தில் சேரும் போது, நீங்கள் செலுத்திய பணத்திற்கு விலையாக செய்கூலி, சேதாரமின்றி அன்றையா ஆபரணத் தங்கம் (916) கிராம் என்ன விலையோ அதே விலைக்கு தங்க நகைகள் பெற்றுக் கொள்ளலாம். இங்கு செய்கூலி, சேதாரம் தொகை தள்ளுபடி செய்யப்படுகின்றது.

தவணை முறை சிறுசேமிப்புத் திட்டத்தில் நாம் விரும்பும் நகைகளை விலைக்கு வாங்க முடியாது. நகைக்கடை நிர்ணயம் செய்திருக்கும் நகைகளை மட்டுமே விலைக்கு வாங்கலாம். ஆபரணங்கள் மாடலுக்கு மாடல் செய்கூலி, சேதாரமும் அதிகரிக்கும். அவ்வாறான நகைகள், கல் பதித்த நகைகள் வாங்க விரும்பினால் அதற்கு அதிகப்படி யான தொகை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்.

இதை எல்லாம் சேர்த்து அதோடு போனஸ் தருவதாகவும் நிபந்தனையிட்டு, ஆரம்பத்திலேயே சிறு சேமிப்புத் திட்டத்தில் சேரும்போது ஒரு கிராம் தங்கம் இன்ன விலை என்று நிர்ணயிக்கப்படுகிறது. இதை மிக நுணுக்கமாக ஆய்வு செய்தாலும் வட்டி ஏற்படவில்லை. பணத்துக்குப் பொருளாக தங்கம் விற்கப்படுகிறது

முஸ்லிமிற்கு எது பாதுகாப்பானது:

இதற்கு மேலும் தங்க நகை சீட்டில் வட்டி வரும் என்று முடிவு செய்பவர்கள் இதனையும் தவிர்த்துக் கொண்டு பணம் சேர்த்து நகை வாங்கி கொள்ளுங்கள். தீமை என்று தெரிந்தே அல்லாஹ் விற்க தங்கம் தந்த நிலையில் பெரும் பாவம் வட்டியில் விழுந்து விடாதீர்கள். தங்கத்தை விற்று தேவைகளை பூர்த்தி செய்து விட்டு, மீண்டும் தங்கத்தை உங்களுக்கு சரியாக தெரியும் முறையில் வாங் கிக் கொள்ளுங்கள். இதுவே முஸ்லிமிற்கு பாதுகாப்பானது.

முஸ்லிம்கள் செய்ய வேண்டியது :

முஸ்லிம்கள் வட்டியின் தீமையினை அல்குர்ஆன், நபிவழி போதனைகளை மக்க ளுக்கு எடுத்து சொல்லி அதிலிருந்து விடுபட விழிப்புணர்வு குழு தத்தமது மஹல்லாக்களில் ஏற்படுத்த வேண்டும்.

தத்தமது மஹல்லாக்களில் (மறுமையின் விளைச்சலை நாடும்) வசதி படைத்தோரை அடையாளம் கண்டு அவர்களின் முதலீடுகளை திரட்டி வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். தேவை உடையோருக்கு வியாபார அடிப்படையில் பொருட்களை தவணை முறையில் வழங்குதல் வேண்டும்.

மேற்கண்ட வகைக்கு ஈடாக ஏதேனும் அடமான பொருளோ அல்லது தகுந்த சாட்சிகளோ ஏற்படுத்திட வேண்டும்.

முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.

அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்; “நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள், தீமையை விட்டும் விலக்குகிறார்கள்.” மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர்; இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்றுமுள்ளவர்கள். இறைநூல் 3:114

என் அருமை மகனே! நீ தொழுகையை நிலைநாட்டுவாயாக; “நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்கு வாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும். இறைநூல் 31:17

இறைவன் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான்.

Previous post:

Next post: