இஸ்லாமிய அழைப்புப் பணி செய்பவர்கள் தங்களை எப்படி அழைத்துக்கொள்ள வேண்டும்?

in 2021 அக்டோபர்

இஸ்லாமிய அழைப்புப் பணி செய்பவர்கள்

தங்களை எப்படி அழைத்துக்கொள்ள வேண்டும்?

இப்னு சித்தீக்,  கடையநல்லூர்

இஸ்லாமிய அழைப்புப் பணி செய்பவர்கள் தங்களை எப்படி அழைக்க வேண்டும் என்பது பற்றி சர்ச்சை மிக வேகமாக நம்மிடையே பரவியுள்ளது வருந்தத்தக்கதே! இவ்விதம் நம்மிடையே ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படும்போது நாம் என்ன செய்யவேண்டும், என்பதை அல்லாஹ்வே தனது திருமறையில் கூறுவதைப் பாருங்கள்.

விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டு நடங்கள் (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்களில் நேர்மையாக அதிகாரம் வகிப்பவர்களுக்கும் வழிப்பட்டு நடங்கள்; (விசுவாசிகளே!) உங்களுக்குள் யாதொரு வி­யத்தில் பிணக்கு ஏற்பட்டால், அதனை அல்லாஹ்விடமும், (அவனுடைய) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். மெய்யாகவே நீங்கள், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங் கொண்டவர்களாயிருந்தால் (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் திருப்தியாகவே ஒப்புக்கொள்ளுங்கள்) இதுதான் நன்மையாகவும் மிக அழகான முடிவாகவும் இருக்கும். (அல்குர்ஆன் 4:59)

அல்லாஹ் நாம் யார்? நமக்கான பெயர் என்ன? நாம் எங்ஙனம் அழைத்துக் கொள்ள வேண்டும்? என்பதை குர்ஆன் வசனங்கள் 22:78, 3:85, 41:33 போன்ற இன்னும் பல வசனங்களில் குறிப்பிடுகிறான்.

“எவர் அல்லாஹ் அளவில் (மக்களை) அழைத்து(த் தாமும்) நற்கருமங்களைச் செய்து, நிச்சயமாக’ நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் உள்ளேன்’ என்றும் கூறுகின்றாரோ, அவரை விட அழகான வார்த்தை கூறுபவர் யார்?’  (அல்குர்ஆன் 41:33)

மேற்கண்ட குர்ஆன் வசனத்தின் மூலம், “முஸ்லிம்’ என்று கூறுவதே இஸ்லாமிய அழைப்புப்பணி செய்பவர்களுக்கு அழகிய வழிமுறையாகும் என்பது தெளிவாகும்.

நபி(ஸல்) அவர்கள், நபியாக அறிவிக் கப்பட்டு நான்கு வருடங்களுக்குப் பின், நபி (ஸல்) அவர்களின் அறிவுரைப்படி முதல் “ஹிஜ்ரத்’ அபிசீனியாவிற்கு சென்றது. அதன் தலைவராக ஜஃபர் இப்னு அபீதாலிப்(ரழி) இருந்தார்கள். இவர்களை திருப்பி அழைத்துவர மக்கத்து குறைஷிகளும், இருவரை அனுப்பி இருந்தனர். அவ்விருவரும் அபிசீனியா அரசர் “நஜ்ஜாஸி’ அவர்களை சந்தித்து முஸ்லிம்களின் மீது புகார் கூறினர். ஆனால், நஜ்ஜாஸி அரசரோ முஸ்லிம்களின் தலைவர் ஜஃபர் இப்னு அபீதாலிப்(ரழி) அவர்களை நேரில் விசாரிக்கையில் உங்கள் மார்க்கம் என்ன? என்று வினவியபோது, “இஸ்லாம்’ எங்களது மார்க்கம் என்று தெளிவுபடுத்தினர். அதனடிப்படையில், நஜ்ஜாஸி அரசர் கேட்ட அனைத்து வினாக்களுக்கும் பதிலும் அளித்தார். இந்நிகழ்ச்சி களை நாம் பிதாயா வன்நிகாயா என்னும் நூலில் பாகம் 3ல் பக்கம் 72ல் காணலாம்.

ஆனால், நமது சகோதரப் பத்திரிகைகளில் “யூதர்களாயினும் கிறிஸ்தவர்களாயி னும், ஸாபியீன்களாயினும் எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உண்மை யாகவே விசுவாசித்து நற்கருமங்களை செய்தார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய கூலி அல்லாஹ்விடம் உண்டு. அவர்களுக்கு எவ்வித பயமும் துக்கமுமில்லை’ (அல்குர் ஆன் 2:62) என்ற இறைவசனப்படி, பல பெயர்களில் அழைப்புப் பணி செய்ய அல்லாஹ் அங்கீகரித்துள்ளதாக கூறுகின்றனர். நாமும் பல பெயர்கள் வைப்பதற்கு அனுமதி உண்டு. கொள்கை மட்டும் குர்ஆன், ஹதீதாக இருந்தால் போதும் என வாதிடுகின்றனர். கொள்கை குர்ஆன், ஹதீத் மட்டும் தான் என்றால், தங்களை அழைத்துக் கொள்ளும் விஷயத்திலும் குர்ஆன், ஹதீத் மட்டுமே பின்பற்றப்பட வேண்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளமுடியாது.

மேற்கண்ட குர்ஆன் வசனத்தை சிறிது ஆராய்வோமானால், அது முந்தைய சமுதாயத்திற்குப் பொருந்தும். அது அவர்களையே குறிக்கும். வெள்ளைவெளேர் என்ற நிலையில் விட்டுச் சென்ற பரிபூரண இஸ்லாத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு இது பொருத்தமாகவும், ஆதாரமாகவும் கொள்ளமுடியாது. இது எங்களது சொந்த கருத்தோ, யூகமோ, அபிப்பிராயமோ இல்லை என்பதை பின்வரும் சான்றுகள் மூலம் உறுதி செய்யலாம்.

குர்ஆனில் “குடி’ சம்பந்தமாக முதலா வது இறங்கிய வசனத்தில் அல்லாஹ் நீங்கள் தொழுகையில் நிற்கும்போது குடிக்காதீர்கள் என்கிறான். ஆனால், பின்பு இறங்கிய வசனம் மூலம் “குடியை முழுமையாக ஹராமாக்குகிறான்’. இதுபோன்றே ஜீவனாம்சம், வேதக்காரப் பெண்களின் மணம் போன்ற பல வசனங்களில் இறைவன் முதலில் ஒன்றைச் சொல்லி பிறகு மாற்றுவதை குர்ஆனில் நாம் காணமுடிகிறது.

எந்த ஒரு முஸ்லிமும், தொழுகை அல்லாத நிலையில் குடிக்கலாம் என்ற இறை வசனத்தை ஆதாரமாகக் கூறமுடியாது. ஏனெனில் பின்னால் வந்த வசனம், முன்னால் வந்த சட்டத்தை ரத்து செய்கிறது. அது போலவே நம்மை அழைத்துக் கொள்ளும் விஷயத்தில் அல்லாஹ் நபி(ஸல்) அவர் களுக்கு அனுப்பிய கடைசி இறைவசனத்தில் பின்வருமாறு கூறுகிறான்.

“நான் உங்களுக்காக இஸ்லாம் மார்க்கத்தை தேர்ந்தெடுத்து கொண்டேன்” (அல்குர்ஆன் 5:3) இதன்மூலம் இறைவன் அங்கீகரித்தது இஸ்லாம் தான் என்பதில் சந்தேகமே இல்லை.

மேலே சுட்டிக்காட்டிய வசனம் இறுதியானது தான் என்பதை அறிந்த பிறகும், நாம் நம்மை அழைக்கும் விஷயத்தில் வேறு அபிப்பிராயம் கொள்ள முடியாது. அவ்வாறு அபிப்பிராயம் கொள்பவர்களை அல்லாஹ் கீழ்வருமாறு எச்சரிக்கிறான்.

“அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் யாதொரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அவ்விஷயத்தில் (அதற்கு மாறாக வேறு) அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.” (அல்குர்ஆன் 33:36)

இதன் பிறகும் தங்கள் சொந்த அபிப்பிராயம், யூகம் எடுப்பவர்கள் யார்? குர்ஆன், ஹதீத் அடிப்படையில் அபிப்பிராயம் சொல்பவர்கள் யார்? என்பதை இஸ்லாமிய மக்களே சிந்தித்து முடிவு செய்யுங்கள். அனைவருக்கும் நேர்வழி காட்ட அல்லாஹ் போதுமானவன்!

Previous post:

Next post: