முஸ்லிம்களுக்கு இன்றைய  தேவை! ஒற்றை அமீரும் அவரின் கீழ் உள்ள பைத்துல்மாலுமே!

in பொதுவானவை

முஸ்லிம்களுக்கு இன்றைய  தேவை!

ஒற்றை அமீரும் அவரின் கீழ் உள்ள பைத்துல்மாலுமே!

S.H. அப்துர் ரஹ்மான்

அன்புள்ள சகோதர சகோதரிகளே!

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். படைத்த அந்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.
இஸ்லாம் என்பது நபி(ஸல்) அவர்கள் மூலம் இறைவன் நமக்கு அளித்த வாழ்வியல் நெறி வழிகாட்டுதல் ஆகும். அதில் நபி (ஸல்) நடைமுறைப்படுத்தி காட்டிய ஒவ் வொன்றும் இஸ்லாத்தில் முக்கியமானது ஆகும். நபி(ஸல்) காட்டி தந்த ஒன்றை விட்டு விடுவதும் தவறு. நபி(ஸல்) காட்டி தராத ஒன்றை செய்வதும் தவறு, நாளை மறுமையில் இதற்காக அவசியம் தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும்.

“பைத்துல்மால்”  என்றால் என்ன?

செல்வந்தர்களிடம் இருந்து ஜகாத்தை வசூலித்து ஏழைகளுக்கு விநியோகம் செய்யும் பொது நிதி நிறுவனமே “பைத்துல்மால்” ஆகும். சமுதாய நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு நிதி நிறுவனம் என்றும் கூறலாம். ஒற்றை அமீர் தலைமையில் இதற்கென்று பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இயங்கி வந்த ஒரு அமைப்பு. இந்த சொல்லின் நேரடி பொருள் “பைத்” என்றால் வீடு “மால்” என்றால் செல்வம், செல்வத்தின் இருப்பிடம் என்பது ஆகும்.

செல்வம்  செல்வந்தர்களுக்குள்  சுற்றிக் கொண்டிருக்காமல்  இருப்பதற்காக  இறைவனால்  ஏற்படுத்தப்பட்ட  ஒன்று தான்  ஜகாத்தும், பைத்துல்மாலும்.

அவ்வூராரிடமிருந்தவற்றில் ஒரே இறைவன் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப்பட்டுள்ளது) மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்;  இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், ஒரே இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள், நிச்சயமாக ஒரே இறைவன் வேதனை செய்வதில்  மிகக்  கடினமானவன்.  (இறைநூல் 59:7)

அமீர் என்பவர் யார்?

இஸ்லாத்தில்  அதிகாரம்  வகிக்கும்  ஒற்றை  நபர்தான் அமீர் என்பவர்.  தமிழில் அதிகாரம் வகிப்பவர் என்று கூறலாம்.

அமீர் இந்த சொல்லின் நேரடி பொருள் என்ன என்று பார்ப்போம். “அம்ரு” என்று சொல்லில் இருந்து பிறந்ததே அமீர் எனும் சொல்; “அம்ர்” என்றால் உத்தரவு போடுதல், கட்டளையிடுதல் என்பது பொருளாகும்; அமீர் என்றால் கட்டளையிடுபவர், உத்தரவு இடுபவர் என்பது இதன் நேரடி பொருள் ஆகும்.

நம்பிக்கை கொண்டவர்களே! ஒரே இறைவனுக்கு கீழ்ப்படியுங்கள். இன்னும், (ஒரே இறைவனின்) தூதருக்கும், உங்களில் (நேரிய) அதிகாரம் உடையவர்களுக்கும் கட்டுப்படுங்கள். ஏதாவது ஒரு விஷயத்தில் நீங்கள் பிணங்கிக் கொண்டால் (மெய்யாகவே) ஒரே இறைவனையும், இறுதி நாளையும் நீங்கள் நம்புபவர்களாக இருப்பின் அதை ஒரே இறைவனிடமும் (அவன்) தூதரிடமும் திரும்பி விடுங்கள். இதுதான் (உங்களுக்கு) மிகச் சிறந்ததாகும். அழகான செயலாகவும் இருக்கும். (இறை நூல்: 4:59)

இறைவன் இறைநூலில் கூறும் வழிகாட்டல்படி இறைத்தூதர் வாழ்ந்து சென்று உள்ளார். இறைத்தூதர் உயிரோடு இருந்த வரை மக்கள் அவரின் தலைமையில் இருந்தனர். அவருக்கு பின் அபூபக்கர்(ரழி) அவரின் தலைமையின் கீழ் முஸ்லிம்கள் வாழ்ந்தனர். அவருக்குப் பின் உமர்(ரழி) அவர்கள் தலைமையின் கீழ் வாழ்ந்தனர். தலைமை இல்லாமல் வாழும் முறையினை இஸ்லாத்தில் இறைவனும், நபி(ஸல்) அவர்களும், அவரை பின்பற்றிய சஹாபாக்களும் நமக்கு காட்டி செல்லவில்லை.

பயணத்திற்கு  அமீர்  தேவை :

மூவர் பயணத்தில் புறப்பட்டால் அவர்கள் தம்மில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீது அல் குத்ரீ(ரழி), நூல்: அபூதாவூத் 2241

ஒரு பயணத்தில் மூவர் இருந்தால் அவர்களில் ஒருவரை அமீராக்கிக் கொள் ளட்டும் என்று நபி(ஸல்) கூறியதாக அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் கூறினார்கள். இதை அபூ ஸலமா நாஃபிவு இடம் கூறிய போது நீங்கள் எங்கள் அமீராக இருங்கள் என்று நாஃபிவு கூறினார். நூல்: அபூதாவூத்

ஒரு சாதாரண பிரயாணத்திற்குக் கூட தலைமை வகிப்பவரைக் கொண்டு பிரயாணம் செய்யச் சொல்லும் இஸ்லாத்தில் இன்று தலைமை இல்லாமல் வாழும் முஸ்லிம்கள் நிலை மிகவும் கவலைக்கிடமானது.

இன்று உலகில் முஸ்லிம்கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தாலும் மற்றவர்களால் துன்பத்திற்கும், இன்னலுக்கும் ஆளாவது இதனால் தான். இன்று இயக்கவாதிகள் இந்த ஹதீத்களை பிரயாணத்தின் போது ஜமாத் தொழுகைக்காக இமாமாக நியமிக்கப்பட்டதை தவறாக அமீர் என்று பதிவாகி விட்டது என்று கூறி திசை திருப்புவதை பார்க்கின்றோம். பிரயாணத்தில் ஜமாத் தொழுகை அவசியம் இல்லை என்று சாதாரண முஸ்லிம்களுக்கே தெரியும்.

பிரிவு உண்டாக்கும் இயக்கவாதிகள் :

அமீர் என்பவர் மக்களை ஜமாத்தாக கொண்டு வழிநடத்தி செல்பவர்தான். அவ ருக்கு ஆட்சி அதிகாரம் தேவை இல்லை. நபி (ஸல்) ஆட்சி அதிகாரம் இல்லாமல் மக்காவில் இருக்கவில்லையா? ஆட்சி இருந்தால் தான் அமீர் பதவி என்று கூறி ஏமாற்றி இயக்கங்களை வளர்த்து அதன் மூலம் தன்னை வளர்த்துக் கொள்ளும் தலைவர்கள் பலர் முஸ்லிம்களில் உள்ளனர். பலரும் தாங்கள் தலைவர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் பல இயக்கங்களை உண்டாக்குகின்றனர். இஸ்லாத்தை கூறு கூறாக பிரிக்கின்றனர். ஆனால் இறைவன் குர்ஆனில் பிரிந்து விடாதீர்கள் என்று பலமாக எச்சரிக்கை செய்கின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் ஒரே இறைவனை, அவனை அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்ட முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள். (இறைநூல் 3:102)

இன்னும், நீங்கள் எல்லோரும் ஒரே இறைவனின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள் ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; ஒரே இறைவன் உங்களுக்குக் கொடுத்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள்; உங்கள் இதயங்களுக்கிடையே அன்பை ஏற்படுத்தினான். அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள். இன்னும், நீங்கள் (நரக)நெருப்புக் குழியின் விளிம்பின் மீது இருந்தீர்கள், அதிலிருந்தும் அவன் உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு, ஒரே இறைவன் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்குத் தெளிவாக்குகின்றான். (இறைநூல் 3:103)

அச்சம் இல்லையா?

இறைவன் அன்பினால் பிணைத்த பின் பிரிந்து தனித்தனியாக செல்வது சரியா? ஒரே இறைவன் உங்களை காப்பாற்றிய பின்பு நரக குழியில் விழுவது சரியா?

(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும் யார்(கருத்து) வேறுபாடு கொண்டு பிரிந்துவிட்டார்களோ, அவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள். அத்தகை யோருக்குக் கடுமையான வேதனையுண்டு. (இறைநூல் 3:105)

பிரிந்து செல்லும் ஒவ்வொரு கூட்டத் தாருக்கும் கடுமையான வேதனை உண்டு என்று இறைவன் கூறிய பின்பு பிரிவுகளை உண்டாக்கும் முஸ்லிம் தலைவர்கள் இறை அச்சம் உடையவர்களாக இருக்க முடியுமா? அத்தகைய தலைவர்களைக் கண்மூடிப் பின்பற்றும் முஸ்லிம்கள் இறையச்சம் உடையவர்களாக இருக்க முடியுமா?

நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து பல பிரிவினர்களாகிவிட்டனரோ, அவர்களின் எந்தக் காரியத்திலும் (நபியே!)உமக்கு சம்பந்தமில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் ஒரே இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி (முடிவில்) அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.  (இறைநூல்: 6:159)

முஸ்லிம்களுக்கு இதைவிட கடுமையான எச்சரிக்கை இருக்க முடியுமா? தூதரிடம் அவர்களுடன் உமக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறுவது உங்களை அச்சப்படுத்தவில்லையா? மறுமை பற்றிய அச்சம் இல்லையா?

தம் பிரிவை கொண்டு மகிழ்ச்சி அடைபவர்கள் :

முஸ்லிம்கள் இன்று பல பிரிவு இயக்கங்களை இஸ்லாத்தில் ஏற்படுத்தியுள்ளனர். அதற்கு இஸ்லாத்தில் எந்த ஆதாரமும் இல்லை, இயக்கங்களாக, பிரிவினையாக பிரிந்து செல்ல இஸ்லாத்தில் அனுமதியும் இல்லை. இறைத்தூதர் வழிகாட்டுதலும் இல்லை.

ஆனால், அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் (மார்க்கக்) காரியத்தில் சிதறுண்டு தமக்கிடையே பல பிரிவுகளாகப் பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர். (இறைநூல் 23:53)

எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி, பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ, (அவர்களில் ஆகிவிட வேண்டாம்; அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கட்டத்தாரும் தங்களிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.  (இறைநூல் 30:32)

இறைவன் கூறுவதை போல் இன்று ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடம் இருப்பதை கொண்டு இன்று மகிழ்ச்சியுடன் தான் இருக்கிறார்கள். தாங்கள் மட்டும் தான் நேர்வழி இருப்பதாகவும் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.

நேர்வழியில் இருப்பவர் யார்?

(நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்த மானவர்கள் என்று கூறிக்கொள்பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவது போல்) அல்ல! ஒரே இறைவன்; தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இது வி­யத்தில்) எவரும் ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (இறைநூல் 4:49)

(நன்மை செய்வோர் யாரெனில்) எவர்கள் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும் மானக்கேடான வற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள். நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன். அவன் உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கியபோதும், நீங்கள் உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும் உங்களை நன்கு அறிந்தவன். எனவே உங்களை நீங்களே பரிசுத்தவான் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள். யார் இறையச்ச முடையவர் என்பதை அவன் நன்கறிவான்.  (இறைநூல் 53:32)

மேற்கண்ட வசனங்களில் இறைவன் யார் நேர்வழியில் உள்ளவர் என்று அவனே அறிவான் என்று கூறிய பிறகு ஏன் இவர்களுக்கு இந்த எண்ணம், தாங்கள் மட்டும் தான் சரியான வழியில் இருப்பதாக எண்ணம்! யார் நேர்வழியில் இருப்பார்? யார் வழிகேட்டில் இருப்பார்? என்பதை இறைவனே அறிவான். நிச்சயமாக நாம் அறிய மாட்டோம். இந்த நிலையில் வீண் பெருமை ஏன்?

உள்ளத்தை பிளந்து பார்க்க வேண்டாம் :

கலிமாவை ஏற்று தன்னை முஸ்லிம் என்று பிரகடனப்படுத்திய ஒருவரின் உள்ளத்தை பிளந்து நாம் பார்க்க வேண்டியது இல்லை. அவர்கள் கூறிய சாட்சியை ஏற்பது தான் சரியானது.

இஸ்லாம் தெளிவாக ஒற்றை அமீர் முறையை வழிகாட்டியிருக்க அதன்படி நபி(ஸல்) அவர்களும் அதன்பின் சஹாபாக்களும் நடந்து காட்டி இருக்க இஸ்லாத்தில் இல்லாத தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகள், இது மட்டும் அல்லாமல் துணை பொறுப்புகள் தரப்பட்டுள்ள ஜனநாயக அரசியல் கட்சி போல் இஸ்லாத்தை ஆக்கிவிட்டனர். மக்களுக்கு பதவிகள் தந்து அவர்களிடம் வேலை வாங்கும் அரசியல் கட்சிகள் போல் முஸ்லிம்கள் ஆகிவிட்டனர். இதற்கு இஸ்லாத்தில் இடம் இல்லை. இன்று முஸ்லிம் இயக்கங்களில் இந்த முறை தான் பயன்படுத்தப்படுகிறது. அதில் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் ஆகியோர்களின் பொருளாதார வாழ்வை வளப்படுத்துகிறது. தொண்டனின் வாழ்வு வீணாகிறது. இஸ்லாம் இத்தகைய அமைப்பை விட்டு செல்லவில்லை. ஆனால் பல முஸ்லிம் தலைவர்கள் இதனையே பின்பற்றுகின்றனர்.

ஒற்றை அமீர் முறை :

இறைவனும், இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அவர் வழி வந்த சஹாபாக்கள் நடைமுறைபடுத்திய ஒற்றை அமீர் முறை புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஒருசில இயக்கங்கள் அதை நடைமுறைபடுத்தினாலும் அவர்களுக்குள் மட்டும் அமீர் தேர்வு செய்து கொள்கின்றனர். மற்ற அனைத்து முஸ்லிம்களையும் சேர்ப்பதும் இல்லை, அவர்கள் குறித்து கவலைப்படுவதும் இல்லை.

இதற்கு தீர்வு உண்டா? என்ற கேள்விக்கு பதில் முஸ்லிம்கள் நினைத்தால் உண்டு. அது இறைத்தூதர் காட்டியபடி கலிமா சொன்ன அனைவரும் இணைந்து பயணிப்பது தான் தீர்வு. இறைத்தூதருடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக நடித்த முனாபிக்குகளுடன் இணைந்துதான் பயணித்தனர். இங்கு வந்தபோது தொழுகையும், மறைவில் சிலை வணக்கமும் செய்து வந்த முனாஃபிக்குகளை இறைத்தூதர் தனியாக பிரித்து காட்டவில்லை. இறைத்தூதருக்கு பல இன்னல்களை அவர்கள் விளைவித்து வந்தபோதும் அவர்களையும் முஸ்லிம்களாகவே நடத்தினார்கள். நபி(ஸல்) காட்டிய வழி இதுதான்.

யார் நேர்வழியில் என்று தீர்ப்பு வழங்குவது அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ள ஒன்று என்றும், உள்ளங்களை அறிந்தவன் அவன் தான் என்பதையும் தெளிவாக அறிந்து இருந்தார்கள். அதனையே நாமும் பின்பற்றுவது தான் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு வழியாகும்.

நாளை மறுமையில் இறைவன் பிரித்து வைப்பான் :

அன்றியும்; குற்றவாளிகளே! இன்று “நீங்கள் (நல்லோரிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்’ (என்று ) குற்றவாளிகளிடம் கூறப்படும்.  (இறைநூல் 36:59)

இறைவன் “நல்லவர்கள் யார்?’ என்று தீர்ப்பு கூறி பிரிந்து நிற்க சொல்லும் வரை, யாரையும் பிரித்து வைக்கும் அதிகாரம் மனிதர்களுக்கு இல்லை. ஒருவன் தன்னை கலிமா சொல்லி முஸ்லிம் ஆக அறிவித்த பின்பு அவன் உள்ளத்தை பிளந்து பார்க்க வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை.

இன்றைய முஸ்லிம்களுக்கு தீர்வு :

உங்கள் மஹல்லாவில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று இணைந்து உங்களுக்குள் ஆலோசனை செய்து உங்கள் பகுதியில் உள்ள இறையச்சம் உள்ள நல்ல மனிதரை உங்கள் மஹல்லா அமீராக தேர்வு செய்யுங்கள். அவரின் தலைமையின் கீழ் ஒரு பைத்துல்மால் ஏற்படுத்தி உங்கள் மஹல்லா செல்வந்தர்களிடம் ஜகாத்களை வசூல் செய்து உங்கள் பகுதி ஏழை முஸ்லிம் சகோதரர்களுக்கு தொழில் வைத்து தந்து பொருளாதாரத்தில் மேம்படுத்துங்கள். உங்கள் பகுதி ஏழை சகோதரிகளுக்கு திருமணம் முடித்து வைத்து வாழ வையுங்கள். உங்கள் பகுதியில் வாழும் கடனில் மூழ்கி தவிக்கும் ஏழைகளின் கடன் அடைக்க உதவுங்கள். இவையனைத்தும் ஒரு மனிதரை வாழவைத்தவர், மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போன்ற நன்மையைத் தரும். இதன்மூலம் உங்கள் மஹல்லாவில் வறுமையில் வாழும் இளைஞன், திருமணம் ஆகாத முதிர் கன்னிகள், கடனால் தற்கொலை செய்துகொள்ளும் ஏழைகள் இருக்க மாட்டார்கள். முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் பலம் பெறுவார்கள், ஒற்றுமையான நிலை அடைவார்கள். இதன் மூலம் நீங்கள் இறைவனிடம் நன்மைகள் அடையலாம்.

இந்த பொருளாதார நடைமுறைகளை பின்பற்றும் மார்வாடிகள் தங்களில் ஏழை இளைஞர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்து தொழில் வைத்து தருகின்றனர். இதனால் அவர்கள் எல்லா இடங்களிலும் வலு பெற்று வருகின்றனர். அவர்களின் வளர்ச்சியை பார்த்து மற்ற சமுதாய மக்கள் அச்சம் கொள்ளும் அளவு அவர்கள் வளர்ச்சி உள்ளது. மார்வாடி இளைஞர்களும் சரியான பருவ வயதில் திருமணம் செய்வது சாத்தியம் ஆகிறது.

ஆனால் இந்த பொருளாதர கொள்கைப்படி வாழவேண்டிய இஸ்லாமிய ஏழை இளைஞர்கள் வாழ்வு கவலைக்கிடமாக உள்ளது. இதற்கு காரணம் முஸ்லிம் செல்வந்தர்களிடம் இறையச்சம் இல்லாமையும், முஸ்லிம்களிடம் ஒற்றை ‘அமீர்’ தலைமையும், “பைத்துல்மாலும்’ இல்லாமல் போனதே ஆகும். இதனை சரி செய்தால் முஸ்லிம் வாழ்வு இம்மையிலும், மறுமை யிலும் நலம் பெரும். முஸ்லிம்கள் அவரவர் மஹல்லாவில் நடைமுறைப்படுத்த முன் வாருங்கள். இன்ஷா அல்லாஹ்.

இதேபோல் ஒவ்வொரு மஹல்லாவிலும் அமீர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டால், மஹல்லா அமீர்கள் கூடி ஆலோசனை செய்து மாவட்ட அமீரை தேர்வு செய்யலாம். அதேபோல் மாவட்ட அமீர்கள் ஒன்று கூடி ஆலோசனை செய்து மாநில அமீரை தேர்வு செய்யலாம். மாநில அமீர்கள் ஒன்று கூடி ஆலோசனை செய்து இந்திய அமீரை தேர்வு செய்யலாம். இந்த நடைமுறை சரியாக இறையச்சத்துடன் செய்தால் ஒற்றை தலைமை இந்திய அளவில் உருவாகும் யார் தலைமையில் வருவார் என்பதே இப்போது தெரியாது. தலைமை பதவியை விரும்புபவர்களுக்கு அல்லாமல் இறைவன் நாடியவருக்கு தலைமை அமீர் பதவி கிடைக்கும். அவர் தலைமையில் குர்ஆன், ஹதீத்படி கட்டுப்பட்டு வாழ்வது முஸ்லிம்களுக்கு நன்மை பயக்கும். இறைவனின் பொருத்தத்தையும் பெற்று தரும். குர்ஆன், ஹதீதுக்கு மாற்ற மான வி­யங்களில் அமீருக்கு கட்டுப்பட வேண்டிய தேவை இல்லை.

இத்தகைய ஒற்றை அமீர் தலைமை இன்று இந்தியாவில் அவசியம் தேவை. இது முஸ்லிம்களை நிம்மதியாக வாழ செய்யும், பொருளாதாரத்திலும் தன்னிறைவு அடைய செய்யவும் அவசியம் தேவையான ஒன்று.

முஸ்லிம்கள் இன்று அறியாமையில் வட்டியில் விழுவதில் இருந்தும் இது அவர்களை காப்பாற்றும். இறைத்தூதர் நடைமுறைபடுத்திய “பைத்துல்மால்” அமைப்பும் ஒற்றை அமீர் தலைமையையும் முஸ்லிம்கள் கைவிட்டுவிட்டு தனித்தனி பிரிவாக பிரிந்து சென்றது. நிராகரிப்பாளர்கள் முஸ்லிம்கள் மீது பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தாக்குதல் நடத்த வாய்ப்பாக ஆகிவிட்டது. மனிதர் கள் மூளையில் உதித்த இயக்கங்கள் கொண்டு இதை தடுக்க முடியாது. புதிய புதிய இயக் கங்கள் தோன்றுவது இஸ்லாத்தை பலஹீனமாக்குமே தவிர பலப்படுத்தாது. பிரிந்து சென்ற மாடுகள் சிங்கத்தால் வேட்டையாடப்படுவதை சிறுவயதிலேயே படித்தும் முஸ்லிம்கள் உணர்வு பெறவில்லை.

முஸ்லிம்கள் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் கயிறான இறைநூலை பற்றி பிடித்தால் இவ்வுலகிலும், மறு உலகிலும் இறைவன் நாடினால் வெற்றி நிச்சயம். இதை படிக்கும் முஸ்லிம்கள் தங்கள் மஹல்லாவில் நபி(ஸல்) காட்டித் தந்த அடிப்படையில் ஒற்றை அமீர் தலைமையும், பைத்துல்மாலையும் ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். இதை செய்ய முடியாதவர் கள் வீணில் சமுதாய ஒற்றுமை குறித்து பேசி நேரத்தை வீணாக்காமல், அவரவர் பிழைப்பை பார்க்க செல்வதுதான் நல்லது. செய்ய முடிந்தவர் கள் உங்கள் மஹல்லா முஸ்லிம்களின் ஈருலக வெற்றிக்காக பாடுபடுங்கள். இறைவன் நாடினால் வெற்றி நிச்சயம். இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக! நம்மை ஒற்றுமையாக, ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்து சகோதரர்களாக வாழ செய்வானாக!

எவன் தன் முகத்தை முற்றிலும் அந்த ஒரே இறைவனின் பக்கமே திருப்பி நன்மை செய்து கொண்டிருக்கிறானோ. அவன் நிச்சயமாக உறுதியான கயிற்றைப் பலமாக பற்றிப் பிடித்துக் கொண்டான். இன்னும் காரியங்களின் முடிவெல்லாம் அந்த ஒரே இறைவனிடமே உள்ளது. (இறைநூல் 31:22)

Previous post:

Next post: