வெற்றி யாருக்கு?

in 2021 டிசம்பர்

வெற்றி யாருக்கு?

அபூ அப்தில்லாஹ்

இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களால் நிறைவு செய்யப்பட்டு எவ்வித கலப்படமுமில்லாமல் நிலைநாட்டப்பட்ட தூய இஸ்லாமிய மார்க்கம் குறுகிய காலத்திலேயே கலப்படத்திற்குள்ளாகியது. ஹிஜ்ரி 400 வாக்கில் தக்லீது (மத்ஹபுகள்) தஸவ்வுஃப் (தரீக்காக்கள்) போன்ற தவறான கொள்கைகளால் நிலை குலைந்தது. அவை மேலும் மேலும் முற்றி முஸ்லிம் சமுதாயத்தினர் வீழ்ச்சியில் அதலபாதாளத்தில் வீழ்ந்து புழு பூச்சிகள் போல் துடிக்கும் நிலைக்கு ஆளாயினர்.

இந்த நிலையில் முஸ்லிம் சமுதாயத்தை மீண்டும் அதன் உன்னத நிலைக்கு தூக்கி நிறுத்த எண்ணற்ற முயற்சிகள் காலத்திற்குக் காலம் நடந்து வருகின்றன. ஆயினும் அந்த முயற்சிகளில் பலன்கள் பிரமிக்கத் தக்கவையாக இல்லை. சமுதாய மறு மலர்ச்சியைப் பார்க்க முடியவில்லை. இந்த முயற்சிகள் அனைத்தும் ஏன் வீணாகின்றன என்று ஆராயும் போது ஷைத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து மனிதன் விடுபடுவது என்பது குதிரைக் கொம்பாகத் தான் இருக்கிறது.

இறை மறுப்பான நாஸ்திகத்தைக் கொண்டு கோடிக்கணக்கான மக்களை அழி வில் -நரகில் தள்ளுகிறான் ஷைத்தான். நாஸ்திகத்தை விட்டும் விடுபட்டு இறை வனை ஏற்றுக் கொள்ளும் உயர்நிலைக்கு மனிதன் உயர்ந்து விட்டால் அடுத்துப் பல மதங்களின் பெயரால் ஓரிறைவனுக்கு இணை வைத்து அதாவது இறைவன் மன்னிக்காத “ஷிர்க்’ என்ற கொடூரமான பாவத்தைச் செய்ய வைத்து அதன்மூலம் கோடிக்கணக்கான மக்களை வழி தவறச் செய்து நரகில் தள்ளுகிறான் ஷைத்தான்.

இறைவனுக்கு இணை வைத்து கொடிய நரகில் விழும் மன்னிக்கப்படாத பாவச் செயல்களில் அதாவது தர்கா வழிபாடுகளில் தனி மனித வழிபாடுகளில் இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களை நபியாக ஏற்றுக் கொண்டுள்ள முஸ்லிம்களில் பெரும் பகுதியினரும் ஈடுபட்டு வீணாகின்றனர். கடந்த 1000 வருடங்களாக ஷைத்தான் தனது சாகஸங்களைக் கொண்டு முஸ்லிம் சமுதாயத்தினரை லாவகமாக அழிவின் விளிம்பிற்கே கொண்டு சென்றுள்ளான். இதில் பெரிய வேதனை என்னவென்றால் அல்லாஹ் அல்குர்ஆனில் 18:102-106 இறை வாக்குகளில் எச்சரித்திருப்பது போல், பாவகரமான செயல்களைச் செய்து கொண்டு இவர்கள் நன்மைகளைச் செய்வதாக ஷைத் தான் இவர்களை நம்ப வைத்திருப்பதுதான்.

தர்கா வழிபாடுகளை விட்டு விடுபட்டவர்கள் தனி மனித வழிபாடு மற்றும் மத்ஹபுகளில் சிக்கி ஷைத்தானின் வலையில் வீழ்ந்துள்ளனர். 2:170, 7:3, 33:36,66,67,68 போன்ற இறைவாக்குகளிலுள்ள எச்சரிக்கைகள் இவர்களை உணர்வு பெறச் செய்வதாக இல்லை. யாரும் இந்த வசனங்களை அவர்களுக்கு எடுத்துக் காட்டினாலும், இந்த வசனங்கள் எல்லாம் காஃபிர்களுக்கு இறங்கியவை என்று இவர்கள் மனப்பால் குடித்துக் கொண்டு மேலும் அந்தத் தவறுகளில் மூழ்க ஷைத்தான் சாகசமாக இவர்களை ஏமாற்றி வருகிறான். இவர்களும் வீழ்ச்சியிலிருந்து விடுபடுவதாக இல்லை.

அடுத்து ´ர்க், பித்அத் இவற்றை விட்டு விடுபட்டு ஓரிறை நம்பிக்கையில் உறுதியாக வும், தெளிவாகவும் இருப்பவர்களையும் ஷைத்தான் விட்டு வைப்பதாக இல்லை. தர்கா சடங்குகளில் மத்ஹபுகளில் மூழ்கி இருக்கும்போது ஐங்கால தொழுகைகளை ஒழுங்காக ஜமாஅத்துடன் தொழுது கொண்டிருந்தவர்கள், ரமழானில் முறையாக நோன்பு நோற்றவர்கள் ஓரிறை கொள்கையில் தெளிவு ஏற்பட்டு தர்கா, மத்ஹபு களை விட்டு விடுபட்ட பின்னர், தொழுகை நோன்பில் பொழுதுபோக்கு காட்ட ஆரம்பித்து விடுகின்றனர். இதற்குக் காரணம் என்ன? அவர்கள் இறைவனுக்கு “ஷிர்க்’வைக்கும் நிலையில் தொழுகை, நோன்பு போன்றவற்றில் ஒழுங்காக செயல் பட்டது ஷைத்தானுக்கு வருத்தத்தை தராது. 18:1-5ல் அல்லாஹ் குறிப்பிட்டிருப்பது போல் அவர்களது அமல்களுக்கு மறுமையில் மதிப்பு (வஜன்) இருக்காது. எனவே தொழ, நோன்பு வைக்க விட்டு விடு கிறான் ஷைத்தான். குறுக்கீடு செய்வதில்லை.

ஷைத்தானின் சாகஸத்திலிருந்து “ஷிர்க்’ விஷயத்தில் விடுபட்டது போல் இங்கும் விடுபட்டு தொழுகை, நோன்பு போன்ற செயல்பாடுகளில் ஓரளவு முறையாக செயல்பட ஆரம்பித்து விட்டால் அதன் பின்னரும் ஷைத்தான் விட்டுவிடுவதில்லை. அடுத்து மனோ இச்சைகளைத் தூண்டி விட்டு இயற்கையான உணர்வுகளை வெறியாக்கி குடி, விபச்சாரம், சூது போன்றவற்றில் மூழ்கச் செய்கிறான். யாரும் இது பற்றிக் கேட்டால் “அல்லாஹ் கரீம்’ அவன் மன்னித்துவிடுவான் எனச் சொல்கின்றனர். ஷைத்தான் இவ்வாறு அவர்களை ஏமாற்றுகிறான். அதுவும் உலகில் கொஞ்சம் காசு, பணம் இருந்தால் கேட்கவே வேண்டியதில்லை. இதற்கு இன்று ஷிர்க்கிலிருந்து விடுபட்டுள்ள அரபு ஷேக்குகளில் பெரும்பாலோரை உதாரணமாகக் கொள்ளலாம்.

இவர்களையாவது அல்லாஹ் நாடினால் மன்னிக்கலாம். இன்னும் பலரை ஷைத்தான் இதைவிட மோசமான நிலையில் வீழ்ச்சியடையச் செய்கிறான். முன்னவர்களின் இந்தப் பாவங்களாவது இவர்கள் சம்பந்தப்பட்டது மட்டும்தான். அல்லாஹ் நாடினால் மன்னிக்க இடமுண்டு. ஆனால் ஷைத்தான் பின்னவர்களின் மனோ இச்சைகளை மோசமாகத் தூண்டிவிட்டு அவர்களை வெறி கொள்ளச் செய்து வீம்பு செய்யும் நோக்கத்துடன் மற்றவர்களின் மானம், உடைமைகளுக்கு பங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளச் செய்கிறான். இவர்களின் ஆத்திரத்தின் உச்சக்கட்டமாக இவர்கள் செய்யும் அநியாயச் செயல்களும் நியாயமாக அவர்களுக்கு தோன்றுகிறது. ஷைத்தான் இந்த அளவு அவர்களை வஞ்சித்து வழிதவறச் செய்து நரகில் வீழ்த்துகிறான். இவர்கள் அல்லாஹ்வின் மன்னிப்பையும் எதிர்பார்க்க முடியாது. இவர்களால் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் இவர்களை மன்னிக்காதவரை அல்லாஹ் இவர்களை மன்னிக்கப் போவதில்லை. ஓரிறைக் கொள்கையில் இவர்கள் உறுதியாக இருந்தாலும் அது அவர்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத் தராது என்பதை அவர்கள் உணரத் தவறி விடுகின்றனர்.

இவர்கள் அமல்கள் செய்து நன்மைகளை மலை போல் குவித்துக் கொண்டு சென்றாலும் நாளை மறுமையில் விசாரணை நடைபெறும் போது, மற்றவர்களுக்கு இவர்கள் இழைத்த அநீதங்களின் காரணமாக இவர்களின் நன்மைகளை எல்லாம் அவர்களுக்குக் கொடுக்க நேரிடும். இவ்வாறு நன்மைகள் எல்லாம் கொடுத்துத் தீர்த்து விட்டால் இவர்களால் அநீதம் இழைக்கப்பட்டவர்களின் பாவங்கள் இவர்கள் மீது சுமத்தப்படும். இறுதியில் பெரும் நன்மைகளைச் சுமந்து வந்தவர்கள் அவை அனைத்தையும் இழந்துவிட்டு மற்றவர்களின் பாவங்களை பெரும் சுமையாகச் சுமந்து கொண்டு நரகம் புகும் பரிதாபத்திற்குரிய பாவிகளாக ஆகிவிடுகிறார்கள். இது எத்தனை பெரிய வேதனைக்குரிய விஷயம் என்பதை குர்ஆன், ஹதீதை விளங்கி நடக்க முன் வரும் ஒவ்வொரு ஆணும்,பெண்ணும் உணர்ந்து, பொறாமையின் காரணமாகவோ அல்லது குரோத விரோதம் காரணமாகவோ, அல்லது ஆத்திர மேலீட் டாலோ மற்றவர்களின் மானத்திற்கோ, உடைமைகளுக்கோ நஷ்டம் விளைவிப்பதை விட்டும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

ஆக இப்படி ஷைத்தானின் பலவகை சாதனங்களிலிருந்து விடுபட்டு “ஷிர்க்’ செய்யாமல் ஓரிறைவனை மட்டும் உறுதியாக நம்பி, ஹுகூருல்லாஹ் என்ற அல்லாஹ் சம்பந்தப்பட்ட தொழுகை, நோன்பு போன்ற செயல்களிலும் முறையாக நடந்து, அது மட்டுமில்லாமல் ஹுகூருல் இபாத் அடியார்கள் சம்பந்தப்பட்ட காரியங்களி லும் அடிபிசகாமல் முறையாக நடப்பவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும்.

இப்படிப்பட்டவர்களை கணக்கிட்டால் அல்லாஹ் கூறுவது போல் மிக மிக சொற்பமான எண்ணிக்கையினரே ஷைத்தானின் மாய வலையிலிருந்து விடுபட முடிகிறது. அல்லாஹ் இந்தக் கூட்டத்தில் நம் அனைவரையும் இணைத்தருள நமது முயற்சிகளும், துஆவும் இருக்க வேண்டும்.

எனவேதான் இஸ்லாமிய மறுமலர்ச்சி என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஆனால் சத்தியத்தை விளங்கிய ஒவ்வொருவரும் அந்த சத்தியத்தை நிலைநாட்ட அயராது பாடுபட்டே தீரவேண்டும். இந்த முயற்சி அவர்களின் ஈடேற்றத்திற்கே அல்லாமல் முழு சமுதாய ஈடேற்றத்திற்காக அல்ல. ஆயினும் அல்லாஹ் நாடினால் அதாவது இந்தக் காலக்கட்டத்தில் சமுதாய மறுமலர்ச்சிக்கு அல்லாஹ் நாடிவிட்டால், 1443 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அதே அதிசயம் அதாவது முஸ்லிம் சமுதாய மறுமலர்ச்சி நிறைவேறியே தீரும்.

Previous post:

Next post: