இறைவனிடம் மீளுவோம்!
இப்னு சித்தீக், கடையநல்லூர்.
இயற்கைச் சீற்றங்களான புயல், சூறா வளி, நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு போன்றவற்றின் உருவாக்கத்தை மனிதர்களாகிய நாம் முன்கூட்டியே உணர முடிந்தாலும், அதனைத் தடுப்பதற்கு சக்தியற்றவர்களாக நாமும் இன்றைய வளர்ச்சியடைந்த தொழில் நுட்பங்களும் இருந்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய சோதனைகளும், வேதனையான நிகழ்வுகளும் ஏன் பாகுபாடின்றி அனைவரையும் பாதிக்கிறது? இது ஏன் நல்லோரையும், பாமரரையும், அப்பாவிகளையும் விதிவிலக்காய் விடுவதில்லை என்பதைப் பற்றி அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்.
“நீங்கள் வேதனைக்குப் பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம், அக்கிர மம் செய்பவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை…?”
அல்குர்ஆன் 8:25
ஏன் இதுபோன்ற வேதனையான நிகழ்வுகளும், அழிவுகளும் மனித வாழ்வைச் சோதிக்கின்றன? இத்தகைய பேரிடர்கள் இறைவனின் கட்டளைக்கு மாறு செய்வதால் ஏற்படும் இறைக்கோபமே என்பதை திருமறை குர்ஆன் மிகத் தெளிவாக கூறுகிறது.
“நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், அவன் மீது நம்பிக்கை (ஈமான்) கொண்டும் இருந்தால், உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்…?” அல்குர்ஆன் 4:147
நன்றி மறந்து, இறைவனைப் புறக்கணித்து பாவமான காரியங்களில் ஈடுபடுவோர் இத்தகைய சோதனைகளை எதிர்பாருங்கள் என்று 1400 ஆண்டுகட்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்வதை பாருங்கள்.
இறுதித் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
- “பொதுச் சொத்து தன் சொத்தைப் போல் பாலிக்கப்படும்போது,
2. அமானிதம் போரில் கிடைக்கப் பெறும் (கனிமத்) தன் பங்குப் பொருளாக கருதப்படும்போது,
3. ஜகாத் கடன் கொடுப்பதைப் போன்று கடினமாகக் கருதப்படும்போது,
4. தீனுடைய நோக்கமின்றி கல்வி கற்பிக்கப்படும்போது,
5. கணவன் தன் மனைவிக்கு அடிபணிந்து வாழும்போது,
6. பெற்ற தாய் தன் மக்களால் வேதனை செய்யப்படும் போது,
7. தனது நண்பனை(தனக்கு) நெருக்கமாக்கி, பெற்றெடுத்த தந்தையை புறக்கணிக்கும்போது,
8. அல்லாஹ்வின் பள்ளிவாயில்களில் சப்தங்கள் உயர்த்தப்படும்போது,
9. ஒரு கூட்டத்தினருக்கு அவர்களில் உள்ள தீயவன் தலைவனாகும்போது,
10. ஒரு கூட்டத்திலுள்ள இழிவானவன் கண்ணியமானவனாகவும், கண்ணியமானவர் அவர்களில் மிகக் கேவலமானவராகக் கருதப்படும்போது,
11. ஒரு மனிதனுடைய தீமைக்குப் பயந்து அவனுக்கு கண்ணியமளிக்கப்படும்போது,
12. ஆடல் பாடல்களில் தீமைக்குப் பயந்து அவனுக்கு கண்ணியமளிக்கப்படும்போது,
13. மதுபானங்கள் (தாராளமாக) அருந்தப்படும்போது,
14. இந்த உம்மத்தில் பின்னால் வருகிறவர் முன் சென்றவர்களைச் சபிக்கும்போது,
இத்தகைய காரியங்களெல்லாம் ஏற்படுகின்ற காலத்தில் சிவந்த நிறக்காற்றையும், நிலநடுக்கத்தையும், பூமிக்குள் அழுத்தப்படு வதையும், உருவமாற்றம் நிகழ்வதையும், கல்மாரி பொழிவதையும் நூலறுந்த மணிகள் போல் ஒன்றன் பின் ஒன்றாக பல வேதனைகளை எதிர்பாருங்கள்” அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி), நூல்: திர்மிதி
பாவகரமான செயல்களைச் செய்வதாலும், இறைவனுக்கு அடிபணிய மறுப்பதாலும், நன்றி கொன்றதாலும் இத்தகைய பேரிழப்புகளைச் சந்திக்க நேரிடுகிறது என்பதைப் படைத்த அல்லாஹ்வும் அவனது இறுதித் தூதர்(ஸல்) அவர்களும் தெளிவாகக் கூறுகிறார்கள்.
எப்படிப்பட்ட சோதனைகளும், வேதனைகளும் நம்மை வந்தடைந்தாலும் அதற்காக இறையவனைத் தூற்றுவதோ, அவன் மீது கொண்ட (ஈமான்) நம்பிக்கை குறைந்து போவதோ உண்மையான முஸ்லிமின் பண்பல்ல, அதன் மூலம் படிப்பினை பெற்று, பொறுமையை மேற்கொண்டால், அத்தகை யவர்க்கு இறைவன் தரும் பரிசு மகத்தானது.
இதனை திருமறை தெளிவாகக் கூறுகிறது.
“விசுவாசிகளே! பயம், பசி ஏதாவதொன்றைக் கொண்டும், செல்வங்கள், உயிர்கள், விளைச்சல், இழப்பைக் கொண்டும், நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப் போம்! இச்சோதனைகளில் பொறுமையை மேற்கொண்டோர்க்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!” அல்குர்ஆன் 2:155
“விசுவாசிகளே! பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்”. அல்குர்ஆன் 2:153
நம்முடைய பாவங்களை உணர்ந்து, அதிலிருந்து விலகி இறைவனிடம் (தவ்பா) பாவமன்னிப்புத் தேடி அவன்பால் மீளுவதே இத்தகைய சோதனைகள் நம்மைப் பாதிக்காமல் இருக்க நாம் செய்ய வேண்டிய தலையாயக் கடமையாக இருக்கிறது. நம்முடைய (தவ்பா) பாவமன்னிப்பை இறைவன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறான். இது பற்றி இறைமறை
“எனினும் இதன் பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களை சீர்திருத்திக் கொள்வார்களானால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், அளப்பெரும் கிருபையுடையோனுமாய் இருக்கிறான்”. அல்குர்ஆன் 3:89
மேலும் நாம் தவ்பா செய்யும்போது தூய மனதோடு இனி பாவகாரியங்களில் ஈடுபடமாட்டோம் என்ற உறுதியான எண்ணத்துடன் தவ்பா செய்ய வேண்டும்.
“ஈமான் கொண்டோரே! கலப்பற்ற (தூய மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களை சுவனத்திற்கு நுழையச் செய்வான்…” அல்குர்ஆன் 66:8
“…எங்களைப் படைத்துப் பரிபாலனம் செய்பவனே! எங்களுக்கு நாங்களே தீங்கி ழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” அல்குர்ஆன் 7:23
“…எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள் வாயாக! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக!…” அல்குர்ஆன்2:186
“எங்கள் இறைவனே! எங்கள் காரியங்களில் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப் படுத்துவாயாக…!” அல்குர்ஆன் 3:147
“எங்கள் இரட்சகனே! நாங்கள் உன்னைக் கொண்டு ஈமான் (விசுவாசம்) கொண்டோம். எனவே எங்களை மன்னித்து இன்னும் எங்களுக்கு இரக்கம் காட்டுவாயாக! இன்னும் நீ இரக்கம் காட்டுபவர்களில் மிகச் சிறந்தவனாய் இருக்கிறாய்…” அல்குர்ஆன் 23:109
என்று இறைவனிடம் பிரார்த்தித்து மன்றாடுவோம். இதன்மூலம் நம்மீது சாட்டப்படும் வேதனைகள், சோதனைகள், துன்பங்கள் துயரங்களிலிருந்து மீண்டு, நல் வீட்டைப் பெறுவோமாக!