சமூக ஒற்றுமைக்கு வழியே இல்லையா?

in 2022 மார்ச்

K.M.H.

அபூஅப்தில்லாஹ்

மறுபதிப்பு :

இன்று இந்திய அளவில், ஏன்? சர்வதேச அளவில் முஸ்லிம்களிடையே ஒற்றுமைக் கோம் வலுத்து வருகிறது. எங்கு பார்த்தாலும் முஸ்லிம்கள் ஒன்றுபடவேண்டும், ஒன்றுபட வேண்டும் என்ற கூக்குரலே தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. வார, மாத இதழ்களும் ஒற்றுமை பற்றி தொடர்ந்து எழுத ஆரம்பித்துவிட்டன.

ஆம்! இன்று முஸ்லிம்கள் உலகளாவிய அளவில் பல கூறுகளாகச் சிதறுண்டு கிடப்பதால், எங்கு பார்த்தாலும் முஸ்லிம்களுக்கு இழிவும் கேவலமும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. துன்பங்களும் தொல்லைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் தங்களின் மன நிம்மதியைத் தொலைத்து விட்டார்கள். எங்கும், எந்த நாட்டிலும் முஸ்லிம்கள் சந்தேகக்கண்கொண்டு பார்க்கப்படுகிறார்கள்.

தீவிரவாதத்திற்கும், வன்முறைச் செயல்களுக்கும் முஸ்லிம்களே காரணம் என செய்தி ஊடகங்கள் தொடர்ந்து செய்தி பரப்பிக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் நாடுகள் ஐம்பதுக்கும் மேலிருந்தும் ஜனதொகையிலும், பண பலத்திலும் கணிசமான, வளமான நிலையில் இருந்தாலும் முஸ்லிம் சமூகம் பிற சமூகங்களால் மதிக்கப்படுவதாக இல்லை.

இத்தகைய பிற்போக்கு நிலைக்கும் அடிப்படைக் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால், ஒன்றுபட்டு ஒரே சமுதாயமாக இருக்க வேண்டிய முஸ்லிம் சமூகம் (உம்மத்தன் வாஹிதா) இன்று பல்வேறு பிரிவுகளாக பிரிந்து கிடப்பதேயாகும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கும்.

பிரிவுகளின் தலைவர்களும் இந்த மறுக்க முடியாத உண்மையை உணரத்தான் செய்கிறார்கள். ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள். தங்களின் உரைகளில் எடுத்துச் சொல்லத் தான் செய்கிறார்கள். பிரிவினைகளின் கேட்டையும், நஷ்டங்களையும் விலாவாரியாக அழகாக தங்கள் முன் அமர்ந்திருப்போருக்கு எடுத்து வைக்கிறார்கள். உரையின் இறுதியில் எங்கள் தலைமையில் அதாவது எங்கள் இயக்கத்தின் தலைமையில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள்.

அவர்களின் உள்நோக்கம், ஒவ்வொரு இயக்கத்தின்-அமைப்பின் தலைவரும் முஸ்லிம்கள் தனது தலைமையில் ஒன்றுபட வேண்டும் என்பதாகவே இருக்கிறது. இப்படி ஒவ்வொரு தலைவரும் தனது இயக்கத்தின் கீழ், தலைமை யின் கீழ் ஒன்றுபட வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது நடக்கிற காரியமா?

ஒவ்வொரு தலைவரும் தங்கள் தங்கள் இயக்கத்தைத் தூக்கிப் பிடிப்பதின் உள்நோக்கம் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டே ஆனால் பதவியை விரும்புகிறவர்களுக்கு பதவி கொடுக்கக்கூடாது என்பதே நபி(ஸல்) அவர்களின் கடுமையான கட்டளை.

இந்தத் தலைவர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தாங்களோ, தங்கள் முன் னோர்களோ பெயரிட்டு அமைத்துக் கொண்ட ஓர் அமைப்பின் கீழ் முஸ்லிம்கள் அனைவரை யும் ஒன்றிணைத்து, அதற்குத் தாமே தலைவராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ! இது நடைபெறுவது சாத்தியமா? ஒவ்வொரு அமைப்பின் தலைவருக்கும் இந்தப் பேராசை தலைதூக்கிக் கொண்டிருப்பதால், வேறொரு அமைப்பின் தலைவரின் கீழ் செயல்பட அவரது மனம் ஏற்குமா? ஒருபோதும் ஏற்காது. அதற்கு மாறாக தனது அமைப்பின் தனது தலைமையின் கீழ் மற்ற அமைப்புகள் தலைவர்கள் வர வேண்டும் என்றே பேராசை கொள்வார்கள். இப்படியே ஒவ்வொரு தலைவரும் பேராசை கொள்ளும்போது யுக முடிவு வரை முஸ்லிம்களிடையே ஒன்றுபட்ட நிலை உருவாக வாய்ப்பு ஏற்படப் போவதில்லை.

ஒவ்வொரு அமைப்பினரும் – இயக்கத்தினரும், அதனதன் தலைவர்களும் தங்கள் தங்கள் இயக்கத்தையும், தங்கள் தங்கள் தலைமையையும் விரும்பி, பேராசை கொண்டு தங்கள், தங் கள் இயக்கத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டே மாண்டு போவார்கள். ஆனால் ஒற்றுமை ஒருபோதும் ஏற்படப் போவதில்லை. மாறாக தலைமைக்கும், தனி இயக்கத்திற்கும் பேராசைப்பட்ட அவர்களுக்கு நாளை மறுமையில் நரகமே கூலியாகக் கிடைக்கும். ஏகன் இறைவனது மிகக் கடுமையான தண்டனைக்கு ஆளாவார்கள். அவர்கள் சமுதாயத்தைத் தங்களின் சொந்த ஆதாயங்களுக்காகப் பிளவுபடுத்திய தற்குரிய கூலியை – தண்டனையை நாளை மறுமையில் தவறாது பெற்றுக் கொள்வார்கள்.
(பார்க்க : 3:105, 6:159, 42:14)

இந்தத் தலைவர்கள் நாளை மறுமையில் ஏகன் இறைவனது கடுமையான தண்டனைகளிலிருந்து தப்பவேண்டும் என்றால் இன்று இவ்வுலகில் தலைமைப் பதவிக்கு ஆசைப்படக் கூடாது. அந்தப் பேராசையின் காரணமாக தாங்களே அமைத்துக் கொண்ட அமைப்பை – இயக்கத்தைத் தூக்கிப் பிடிக்கக்கூடாது.

அவர்கள் உண்மையிலேயே அல்லாஹ்வையும், மறுமையையும் உறுதியாக நம்புகிறவர்களாக இருந்தால் 3:105, 6:159, 30:32, 42:14 இறைவாக்குகள் அவர்களின் உள்ளங்களை நடு நடுங்கச் செய்யும். முஸ்லிம் சமுதாயத்திற்கு எத்தனை பெரிய துரோகத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களின் உள்ளங்கள் உணர்த்தும். அவர்கள் உண்மையான விசுவாசிகளாக இருந்தால் மட்டுமே இந்த இறைக் கட்டளைகளைக் கொண்டு பாடம் படிப்பார்கள். நயவஞ்சக உள்ளங் கொண்டவர்களாக இருந்தால் இந்த இறைவாக்குகள் அவர்களிடம் எவ்வித மாறுதலையும் ஏற்படுத்தாது. அவர்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால் 3:103, 4:59, 6:153 இறைக்கட்டளைகளே அவர்களை ஓரணியில் ஒரே தலைமையில் ஒன்றுபடுத்தி விடும்.

மனிதர்களின் தலைமை பதவியின் மீது பேராசை கொண்டு உருவாக்கப்பட்ட மத்ஹபுகள், இயக்கங்கள், அமைப்புகள், கழகங்கள் இவற்றில் எந்த அமைப்பின் கீழும் முஸ்லிம் சமுதாயத்தை ஒன்றுபடுத்துவது சாத்தியமே இல்லை என்பதைப் பார்த்தோம். அப்படியானால் முஸ்லிம் சமுதாயத்தை மீண்டும் ஓரணியில் ஒரே தலைமையில் ஒன்றுபடுத்துவது சாத்தியமே இல்லையா? என்ற சந்தேகம் ஏற்படலாம்.

இது வீண் சந்தேகமாகும். ஷைத்தான் மனித உள்ளங்களின் இந்த வீண் சந்தேகத்தைப் போட்டு, அவர்களைப் பிளவுகளிலும், பிரிவு களிலும் நிலைக்கச் செய்து நரகில் கொண்டு தள்ளவே அவன் சபதம் செய்து செயல்படுகிறான். பிளவுகள், பிரிவுகளாகிய மத்ஹபுகள், இயக்கங்கள், அமைப்புகள் இவற்றின் தலைவர்களும், ஆதரவாளர்களும் ஷைத்தானின் வசீகர வலையில் வசமாகச் சிக்கி இருக்கிறார்கள். ஷைத்தான் இழுக்கும் இழுவைக்கெல்லாம் அவர்கள் ஆடுகிறார்கள் என்பதைச் சமீப கால நிகழ்வுகள் சுயமாக குர்ஆன், ஹதீதை சிந்திப்பவர்களுக்கு உணர்த்தவே செய்கின்றன. இல்லை என்றால் சினிமா நடிகனை வெள்ளி மேடையில் ஏற்றி வேடிக்கை பார்ப்பார்களா? மறு வாரம் – மன்னிப்புக் கேட்டதும் அல்லாஹ்வின் அச்சத்தின் காரணமாக அல்ல; பக்தர்களே கொதித்து எழுந்து மறுப்புத் தெரிவித்ததால் அவர்களைத் திருப்திப்படுத்தி தங்களிடம் தக்க வைத்துக் கொள்ளவே இந்த மன்னிப்பு நாடகம் என்பதையும் சுயமாகச் சிந்திப்பவர்கள் அறிவார்கள்.

ஆனால் ஏகன் இறைவன் மீதும், மறுமையின் மீதும் உறுதியான நம்பிக்கையுடன் இறைவனின் இறுதி நெறிநூலை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக சிந்தனையுடன் அணுகு கிறவர்கள் முஸ்லிம் சமுதாயம் ஓரணியில் ஒரே தலைமையில் ஒன்றுபட்டுச் செயல்பட அழகிய வழிமுறைகளைத் தெள்ளத் தெளிவாக அது காட்டுகிறது என்பதை உணர முடியும். இடைத்தரகர்களின் சுயநல விளக்கங்களைக் கேட்டு அதை வேதவாக்காகக் கொள்கிறவர்களே வழிகெட்டு நரகில் போய் விழுகிறார்கள்.

இந்தியா டுடே, ஜூன் 1, 2005 வாசகர் கடிதம் ஒன்றில், முஸ்லிம் அல்லாத சகோதரர் ஒருவர் அல்குர்ஆனை எவ்வளவு அழகாக நேர்த்தியாக விளங்கியுள்ளார் என்று பாருங்கள். முஸ்லிம்கள் குறிப்பாக தவ்ஹீது வாய் வீச்சாளர்கள் அவரிடம் பாடம் பயில வேண்டும். அவர் கூறுவது வருமாறு :

விடுதலைமார்க்கம் :

குர்ஆனில் வாழ்வின் நெறிகள் செம்மையாகவே விளக்கப்பட்டு உள்ளன. இந்த அறிவியல் உலகத்திலும் கூட அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் மனித குலத்தை விடுவிக்க வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. எந்த சிறந்த வியமும் தனி மனிதர்கள் கையில் சிக்கும்போது வேறான பொருளில் விளக்கம் பெறுவது இயல்பே. தெளிவின்மை இஸ்லாமியரிடத்தில் இருக்கலாம். இஸ்லாத்தில் இல்லை. எனவே இஸ்லாத்தில் திரைகளில்லை.

இறுதி நெறிநூல் அல்குர்ஆனின் சிறப்பையும், மேன்மையையும், நேர்வழி காட்டலையும் ஒரு மாற்றுமத சகோதரர் எவ்வளவு அழகாக விளங்கி இருக்கிறார். அத்தோடு முஸ்லிம்கள் இடைத்தரகர்களான புரோகிதர்களின் பின்னால் செல்வதால் எப்படி தெளிவற்ற நிலையில் இருக்கிறார்கள் என்பதை நெற்றிப் பொட்டில் அடித்தால் போல் சொல்லி இருக்கிறார். ஆனால் முஸ்லிம்கள் உணர்வு பெறுவதாகத் தான் இல்லை.

அல்குர்ஆனை நேரடியாகப் பார்க்கும் போது, அது தெள்ளத் தெளிவாக இருக்கிறது. அதை விட்டு குர்ஆன் நமக்கு விளங்காது என்ற குருட்டு நம்பிக்கையில் முஸ்லிம்கள் இந்தப் புரோகித முல்லாக்களின் சுயநல விளக்கத்தை ஏற்றே வழிகெடுகிறார்கள் என்பதைச் சொல் லாமல் சொல்லி இருக்கிறார் அந்தச் சகோதரர்.

அல்குர்ஆன் வசனங்கள் புரோகித முல்லாக்களாகிய இடைத்தரகர்களான தனி மனிதர்கள் கையில் சிக்குவதாலேயே அதன் உன்னதமான நேரான கருத்துக்கள் சிதைந்து சீரழிந்து வழிகேட்டில் இட்டுச் செல்லும் வேறான பொருளில் விளக்கம் பெறுவது இயல்பு என்று முஸ்லிம்களின் மண்டையில் குட்டி உண்மையை உரத்துச் சொல்லி இருக்கிறார்.

இதைத்தான் ஏகன் இறைவன் அல்குர்ஆன் 7:3 இறைவாக்கில் இறைவனால் இறக்கப்பட்டதை நேரடியாகப் பார்த்து அதன்படி செயல்படுங்கள். மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர் கள் என்று சுயமாக தம்பட்டம் அடிக்கும் மவ்லவி புரோகிதர்கள் அல்குர்ஆன் வசனங்களுக்கு கொடுக்கும் சுயநல விளக்கமே சரியாக இருக்கும் என்று நம்பிச் செயல்பட்டு வழிகெட்டு நரகை அடையாதீர்கள் என்று கடுமையாக எச்சரித்துள்ளான். ஆனால் அல்லாஹ்வின் இந்த 7:3 கடுமையான எச்சரிக்கையும் முஸ்லிம்களின் மண்டையில் ஏறுவதாக இல்லை. புரோகிதர்கள் பின்னால் சென்று கொண்டிருக்கிறார்கள்.

மவ்லவி புரோகிதர்களின் பிடியிலிருந்து முஸ்லிம்கள் விடுபட்டு அல்குர்ஆனை நேரடியாகப் பார்த்து சிந்திக்க ஆரம்பித்து விட்டால் முஸ்லிம்கள் ஓரணியில் ஒன்றுபட்டு விடுவார்கள். தகுதியான தலைவரையும் அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்பவர்களே இந்தப் புரோகித முல்லாக்களான இடைத்தர கர்கள்தான் என்பதையும் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். முஸ்லிம்கள் அல்குர்ஆனை புரோகிதர்களின் சுயநல விளக்கம் இல்லாமல் நேரடியாகப் பார்க்க ஆரம்பித்து விட்டால் 22:78ல் அல்லாஹ் நமக்கு “முஸ்லிம்’ என பெயரிட்டுள்ளான். எனவே நம்மை முஸ்லிம் என்றே அழைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்வார்கள். 41:33 இறைவாக்கைப் படித்து பார்த்து மார்க்கப் பிரசாரம் செய்கிறவர்களும் தங்களை “முஸ்லிம்’ என்றே அழைத்துக் கொள்ள வேண்டும். தங்களுக்கென்று ஒரு பிரத்தியேக தனிப்பெயர் சூட்டிக்கொள்வது தவறு என்பதை புரிந்து கொள்வார்கள். அல்லாஹ் சூட்டிய அழகிய பெயரான “முஸ்லிம்’ என்ற பெயரிலேயே முஸ் லிம்கள் அனைவரும் ஓரணியில் ஒரே தலைமையில் ஒன்றுபட்டு விடுவார்கள்.

33:36 இறைவாக்கைப் படித்துப் பார்த்து அல்லாஹ்வும், அவனது தூதரும் கட்டளையிட்டுவிட்டால், அதற்கு வேறு விளக்கம் கொடுக்கக்கூடாது. அது பகிரங்கமான வழிகேடு என்பதைப் புரிந்து கொள்வார்கள். 7:3 இறைவாக்கைப் படித்து விளங்குகிறவர்கள் எந்த மவ்லவியையும் பாதுகாவலராகக் கொண்டு அவரைப் பின்பற்றக் கூடாது என்பதைப் புரிவார்கள். அதற்கு மாறாக மவ்லவி புரோகிதர்கள் பின்னால் சென்றால், நரகில் வீழ்ந்து வேதனைப்பட்டு புலம்ப நேரிடும் என்பதை 33:66,67,68 இறைவாக்குகளைப் படித்து புரிந்து கொள்வார்கள். 2:133,134,140,141 இறைவாக்குகளை நேரடியாக படித்து விளங்குகிறவர்கள் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு யாருடைய சொந்த விளக்கமும் மார்க்கமாகாது, கலீஃபாக்களின் பெயரால், நபிதோழர்கள் பெயரால், தாபியீன்கள், தபவுத் தாபியீன்கள் பெயரால், இமாம்கள் பெயரால் மார்க்கத்தில் புதிதாக எதையும் புகுத்த முடியாது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்வார்கள்.

5:3, 3:19,85 இறைவாக்குகளை படித்து விளங்குகிறவர்கள் மார்க்கம் நிறைவு பெற்றுவிட்டது, எதையும் அதில் புதிதாக நுழைக்க முடியாது. அது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் விளக்கி இருப்பதைப் புரிந்து கொள்வார்கள். 2:170, 5:104, 7:28, 10:78, 21:53, 31:21, 43:22 இன்னும் இவை போல் எண்ணற்ற இறைவாக்குகளை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள், எந்த நிலையிலும் எப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலும் நாதாக்கள், பெரியார்கள், முன்னோர்கள், மூதாதையர்கள், இமாம்கள் பெயரால் சொல்லப்படும் எதுவும் மார்க்கமாக முடியாது என்பதை உறுதியாக அறிவார்கள். 10:18, 18:102-106, 39:3 இறைவாக்குகளைப் படித்து விளங்குகிறவர் கள் இறைவனுக்கும் அவர்களுக்கும் இடையில் யாரையும் இடைத்தரகர்களாகவோ, பரிந்துரைப்பவர்களாகவோ ஆக்க முடியாது என்பதை விளங்குவார்கள். 3:103,105, 6:153, 159, 30:32, 42:14 இறைவாக்குகளை நேரடியாகப் படித்துச் சிந்தித்து விளங்குகிறவர்கள் மத்ஹபு பேராலோ, தரீக்கா பேராலோ, இயக்கங்கள், அமைப்புகள், கழகங்கள் பேராலோ, முஸ்லிம் சமுதாயத்தைப் பிளவுபடுத்தக் கூடாது; அது பெருங்குற்றம் என்பதை நெற்றிப் பொட்டில் அடித்தால் போல் விளங்குவார்கள்.

இப்படி அல்குர்ஆனில் உள்ளதை உள்ளபடி படித்துச் சிந்தித்து விளங்குகிறவர்கள் வழிதவற வழியே இல்லை. அதற்கு மாறாக இந்தப் புரோகித மவ்லவிகளை நம்பி அவர்களின் சுயநல விளக்கத்தை ஏற்பதால் மட்டுமே வழிதவறிச் செல்கிறார்கள். பல பிரிவுகளில் ஆகிவிடுகிறார்கள். இதை முஸ்லிம் அல்லாத அந்தச் சகோதரர் எவ்வளவு அழகாகச் சொல்கிறார் பாருங்கள். “எந்த சிறந்த வியமும் தனி மனிதர்கள் கையில் சிக்கும்போது வேறான பொருளில் விளக்கம் பெறுவது இயல்பே” என்று கூறுகிறார். அல்குர்ஆன் இந்த மவ்லவி புரோகிதர்களின் கையில் சிக்கும்போது, குர்ஆன் வசனங்களின் அர்த்தம் அநர்த்தமாகி விடுகிறது. மனித வர்க்கத்தை நரகில் தள்ளக் காத்திருக்கும் ஷைத்தான் இந்தப் புரோகிதர்களின் சுயநல விளக்கத்தை அழகாகக் காட்டி வழிதவறச் செய்து நரகில் கொண்டு சேர்க்கிறான்.

படைத்த அல்லாஹ் மனிதர்களுக்காக அல்குர்ஆனில் தூய வாழ்க்கை நெறியை விளக்கிய பின்னர், இந்தப் புரோகித முல்லாக்களின் மேலதிக சுயநல விளக்கம் வழிகேடேயாகும். இதையே 2:159 இறைவாக்கு தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது. அல்குர்ஆனின் ஒரே பொருளைத் தரும் முஹ்க்கமாத் வசனங்களுக்கு வேறு விளக்கம் தரும் புரோகித மவ்லவிகள் சத்தியத்தை மறைக்கவே செய்கிறார்கள். எனவே அவர்கள் அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபத்திற்குரியவர்களே. இதையே 2:159,160,161,162 இறைவாக்குகள் உள்ளங்கை நெல்லிக்கனியாக விளக்குகின்றன.

ஆக அல்குர்ஆனில் முஹ்க்கமாத் வசனங்களுக்கு அல்லாஹ் கூறும் நேரடிக் கருத்தை ஏற்காமல், இந்தப் புரோகித மவ்லவிகள் கூறும் சுயநல மேலதிக விளக்கங்களை ஏற்று நடப்பதால் தான் முஸ்லிம்கள் வழிகெட்டு, பல பிரிவுகளில் சிதறுண்டு கிடக்கின்றனர். இவர்களுக்கு இவ்வுலகிலும் இழிவுதான். நாளை மறுமையிலும் பெரும் இழிவும் கேவலமும்தான். நரக நெருப்பை சுவைப்பதைத் தவிர வேறு வழி அவர்களுக்கில்லை.

புத்திசாலித்தனமாக இந்தப் புரோகித மவ்லவிகளை விட்டு விடுபட்டு, தன்னம்பிக்கையுடன், அல்லாஹ் மீது பூரண நம்பிக்கை வைத்து, அல்குர்ஆன் வசனங்களை நேரடியாகப் பார்த்து படித்து சிந்தித்து அந்த வசனங்களில் உள்ளது உள்ளபடி எடுத்து நடக்க ஆரம்பித்து விட்டால், இந்தப் புரோகிதர்களின் நயவஞ்சகச் செயல்பாட்டை விளங்குவதோடு, அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து ஓரணியில் ஒரே தலைமையில் ஒன்றுபட்டு விடுவார்கள்.

முஸ்லிம் சமுதாய மறுமலர்ச்சி இந்த காலகட்டத்தில் அல்லாஹ்வின் நாட்டத்தில் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். பிரிவுகளின் கேடுகளை விளங்க ஆத்திரமோ, அனுதாபமோ இல்லாமல் நடுநிலையோடு நிதானமாக மீண்டும் மீண்டும் படித்து இதிலுள்ள அல்குர்ஆன் வசனங்களை, ஹதீத்களை பொறுமையாக சுயமாகச் சிந்தித்து அவற்றிலுள்ள ஒரே நேர்வழியைப் பற்றிப் பிடிக்க முஸ்லிம்களை மிக அன்புடன் வேண்டுகிறோம்.

Previous post:

Next post: