நபித்தோழியர்களின் தியாகங்கள்!

in 2022 மார்ச்

நபித்தோழியர்களின்தியாகங்கள்!

உம்முமுஃப்லிஹ்

உலகில் வாழும் எந்த மனிதராக இருந்தாலும், அவரது வாழ்வில் தவ்ஹீத் மற்றும் சுன்னாஹ் ஆகிய இரண்டும் ஒன்றிணைந்து பயன்பாட்டிற்கு வந்தால்தான் அவர் இஸ்லாத்தினை தனது வாழ்வியலாக ஏற்று அதனடிப்படையில் வாழ்கிறார் என்று பொருள்.

இஸ்லாமிய அடிப்படையான தவ்ஹீத், அதாவது ஏகத்துவம் அதன் அஸ்திவாரமாகவே இருக்கிறது. ஏக இறைவனான அல்லாஹ்வை மட்டும் வணக்கத்திற்குரியவனாக தன் முழு மனதாலும் ஏற்று, அவனது கட்டளைகளுக்கும், அவனது இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களது வழிகாட்டல்களுக்கும் கட்டுப்படும் எந்தவொரு மனிதனும் சத்திய இஸ்லாத்தைப் பின்பற்றும் ஒரு முஸ்லிமாகவே கருதப்படுவார். அப்படிப்பட்ட உயரிய அடிப்படையில் தன் வாழ்வைக் கட்டமைத்து, இறை மார்க்கத்திற்காக உடல், உயிர், பொருள் என அனைத்தையும் அர்ப்பணித்த நபித் தோழியர் சிலரை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

நுழையும்முன் :

ஸஹாபியப்பெண்கள்என்றால்யார்?

நபி(ஸல்) அவர்களது காலத்தில், இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்று வாழ்ந்த பெண்களில் நபியவர்களின் மனைவியர் அல்லாத பெண்மணிகள் ஆவர். இவர்கள்தான் நபித்தோழியர்.

நபி(ஸல்) அவர்களின் மனைவியர், இறை நம்பிக்கையாளர்களின் அன்னையர் ஆவர். இருப்பினும் நபி(ஸல்) அவர்கள் ஏகத்துவ அழைப்புப் பணியைத் துவங்கியபோது, ஈமான் கொண்ட பெண்களில் முதல் இடத்தைப் பிடித்து நபி(ஸல்) அவர்களுக்கு ஆலோசனை கூறி, தனது செல்வங்களையயல்லாம் இறைவனது மார்க்கத்திற்காகவும் அவனது தூதருக்காகவும் அர்ப்பணித்து நபி(ஸல்) அவர்களுக்கு பலமாக இருந்தவர் அன்னை கதீஜா(ரழி) அவர்களே ஆவார். ஏகத்துவத்திற்காக முழுமையாக அர்ப்பணித்து வாழ்ந்த இவருக்காக அல்லாஹ்வும் அவனது தூதரும் பொருந்திக் கொண்ட செய்திகளை பல நபி மொழிகளிலிருந்து நாம் அறிவோம்.

அன்னை ஆயிஷா(ரழி) அவர்களும் சிறு வயதிலேயே உஹது போர்க்களத்தில் இறை நம்பிக்கையாளர்களுக்கு உதவியதிலிருந்து, இன்றைய கால இறை நம்பிக்கையாளர்களுக்கு அதிகமான நபிமொழிகளை அறிவித்த ஒரே பெண்ணாகவும் ஏகத்துவம் ஓங்குவதற்காக பங்களித்து இருக்கிறார்.

கட்டுரையில் விரிவஞ்சி முஃமின்களின் அன்னையர் பற்றி இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.

படைத்தவனான ஏகன் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும். அதில் உறுதிப்பாடோடு இருக்க வேண்டும் என அல்லாஹ் தன் திருமறையில் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறான். அல்குர்ஆன் 30:30

நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள். அவனையே அஞ்சிக் கொள்ளுங்கள் எனவும் அல்லாஹ் அவர்களது ஈமானை வலுப்படுத்துகிறான்.

பெண்கள் என்றாலே மென்மையானவர்கள் என்பதைத் தாண்டி பலவீனர்கள், பயந்தவர்கள் என்று எண்ணி ஆணாதிக்கத்தால் அடி மைகளாகவும், போகப் பொருளாகவும் மட் டுமே பயன்படுத்தப்பட்டவர்களான நபி காலத்துப் பெண்கள், உயர்ந்த இறை நம்பிக்கையுடன் உன்னத வாழ்க்கை வாழ்ந்து ஈமானிய பலத்தில் ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்திச் சென்ற சில சம்பவங்கள் இதோ…

துன்புறுத்தல்களும், கொடுமைகளும்நபிகாலத்துமுதல்பெண்ஷஹீத் :

இஸ்லாத்தின் ஆரம்ப காலகட்டத்தில், மக்களில் எவரேனும் ஏகத்துவ கலிமாவை ஏற்றுக்கொண்டால் போதும். உடனே அவர்களை பகிரங்கப்படுத்தி துன்புறுத்தி சித்ரவதை செய்து அவர்களை இறைமார்க்கத்தை விட்டு வெளியேறச் சொல்லி வற்புறுத்தும் கூட்டம் இருந்து வந்தது. காரணம் என்னவென்றால், நபி(ஸல்) அவர்களின் பகிரங்க அழைப்பதை தொடர்ந்து பல மாதங்கள் எதிரிகள் மேற்கொண்ட தடுப்பு முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவின. அதனால் இறை மறுப்பாளர்களின் அடிமைகளில் எவரேனும் இஸ்லாத்தைத் தழுவினால் அவர்களைத் துன்புறுத்தி இறை மார்க்கத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் அல்லது கொலை செய்ய வேண்டும் என முடிவெடுத்தனர்.

அப்படிப்பட்ட சூழலில் மூஜாபி கிளை யைச் சேர்ந்த அபூ ஹுதைஃபா இப்னு முகீரா என்பவனுடைய அடிமைகளில் மூவர் இஸ்லாத்தைத் தழுவினர். அவர்கள் யாஸிர் (ரழி)அவரது மகன் அம்மார்(ரழி) மற்றும் அவரது மனைவியான சுமைய்யா(ரழி) ஆகியோர் அம்மூவரையும் அபூஜஹ்ல் தலைமையில் ஒரு கூட்டம் அப்தஹ் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்று உச்சி வெயில் நேரத்தில் சுடுமணலில் கிடத்தி கடுமையாகச் சித்ரவதை செய்தனர். இதனைக் கண்ட நபி(ஸல்) யாஸிரின் குடும்பத்தாரே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு சொர்க்கம் வாக்களிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்கள்.

யாஸிர்(ரழி) அவர்கள் வேதனை தாங்க முடியாமல் இறந்துவிட்டார்கள். வயது முதிர்ந்த சுமைய்யா(ரழி) அவர்கள் இறை நிராகரிப்பாளர்களால் முற்றிலும் மனிதத் தன்மை யற்ற சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆம்! சுமைய்யா பின்த் கய்யாத்(ரழி) அவர் களை அபூஜஹ்ல் அவர்களின் பெண்ணுறுப்பில் ஈட்டியால் குத்திக் கொலை செய்தான். இன்னல் களைச் சுமந்து பொறுமையை மேற்கொண்டு இஸ்லாத்திற்காக நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இன்னுயிரைத் துறந்த முதல் பெண்மணி இவர். நபியவர்களால் நற்செய்தி கூறப்பட்ட முதல் பெண்மணியும் இவராவார்.

அடிமைகளிடம்வீரம்காட்டியகோழைகள்:

அஸ்வத் இப்னு இப்து யகூஸ் என்பவன் நபி(ஸல்) அவர்களின் கடும் விரோதியாகவும், அவர்களைப் பரிகசிப்பவனாகவும் இருந்தான். அவனது அடிமையாய் இருந்த உம்மு உபைஸ் என்பவரைக் கொடூரமாக வேதனை செய்தான்.

அம்ர் இப்னு அதீ என்பவனின் அடிமைப் பெண்ணும் இஸ்லாத்தை ஏற்றார். அவரை அப்போது இஸ்லாத்தை ஏற்காதிருந்த உமர்(ரழி), தான் களைப்படையும் வரை சாட்டையால் அடித்துவிட்டு நீ மரணிக்கும் வரை உன்னை நான் விடமாட்டேன் என்று கூறுவார்.

மேலும் நஹ்திய்யா(ரழி) என்பவரும் இவரது மகளும் இஸ்லாத்தை ஏற்றதற்காக கொடுமை செய்யப்பட்ட அடிமைகளில் உள்ளவர்கள். இவ்விருவரையும் அபூபக்ர்(ரழி) விலைக்கு வாங்கி உரிமையிட்டார்கள்.

ரோம் நாட்டு அடிமையான ஜின்னீரா (ரழி) என்ற பெண்மணி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். இதனால் பலவித கொடுமை களுக்கு ஆளானார். அப்போது அவர் கண்ணில் ஏற்பட்ட காயத்தினால் பார்வையை இழந்தார். இணைவைப்பாளர்களோ இவரது கண்ணைலாத், உஸ்ஸா பறித்துவிட்டதாகக் கூறினர். அதற்கு ஜின்னீரா(ரழி) நிச்சயமாக இல்லை… அல்லாஹ்வின் மீது ஆணையாக இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்பட்டது. அவன் நாடினால் எனக்கு நிவாரணமளிப்பான் என்று கூறி ஏகத்துவத்தில் நிலைத்து நின்றார்கள். மறுநாள் அவரின் பார்வையை அல்லாஹ் மீட்டிக் கொடுத்தான். அதைக் கண்ட குறைஷியர்கள் இது முஹம்மதின் சூனியத்தில் ஒன்று என்று கூறினர். (இப்னு ஹிஷாம்)

இஸ்லாம் மக்காவிலே பிரபலமாகி மதீனா வரை நீண்ட பின்னர் முஸ்லிம்கள் ஹிஜ்ரத் செய்தனர். ஏகத்துவத்தைப் பின்பற்று வதிலே சூழல் மாறுகிறது. சடைவடைந்தார் களா நபித்தோழியர்? இல்லை ஈமான் குறைந்து போனதா? அதுவும் இல்லை.

முந்தியவர்கள்முதலாமவர்கள் :

அல்லாஹ் தன் திருமறையிலே முந்தியவர்கள் முதலாமவர்கள் (அல்குர்ஆன் 9:100) என்று இஸ்லாத்திற்காக ஈமான் உறுதியோடு நாட்டைத் துறந்து ஹிஜ்ரத் செய்தார்களே அவர்களைக் கூறுகிறான்.

அவர்களிலே உம்மு சுலைம்(ரழி) அவர்கள் மக்காவில் வாழும்போதே இறை மார்க்கத்தை ஏற்றார். இது அவரது கணவருக்குப் பிடிக்கவில்லை. இருந்தும் உறுதியோடு தன் மகனையும் இஸ்லாத்தில் இணைத்தார். இதனால் இவரது கணவர் கோபித்துக்கொண்டு வேறு நாட்டிற்கு சென்று விட்டார். ஆனாலும் ஏகத்துவ வழியில் தனது மகனை வளர்க்க எண்ணி நபியவர்களின் பொறுப்பிலே விட்டுவிடுகிறார். அந்தச் சிறுவனும் நபி(ஸல்) அவர்களுடனே பயணிக்கிறார். யாரவர் தெரியுமா? அனஸ்(ரழி) அவர்கள்தான்.

பிறகு உம்மு சுலைம்(ரழி) அவர்களைப் பெண் கேட்டு ஒரு யூதர் வருகிறார். ஆனால் இவரோ, ஏகத்துவத்திலிருக்கும் எனக்கு நீர் தகுதியானவரில்லை. ஆனால் வணங்கத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. என்ற ஏகத்துவ அடிப்படையை ஏற்றால் அதையே மஹராக ஏற்று மணந்து கொள்கிறேன் என்று உறுதியோடு நிற்கிறார். நிபந்தனையை ஏற்று உம்மு சுலைமை மணமுடிக்கிறார் அந்த மனிதர். யார் தெரியுமா அவர்? அபூதல்ஹா(ரழி) அவர்கள்தான்.

இந்தத்தம்பதியைப்பற்றியஇன்னொருசெய்திதெரியுமா?

ஒருமுறை நபி(ஸல்) அவர்களுக்கு ஸதகா பற்றிய இறைவசனம் இறங்குகிறது. மறுமையின் வீட்டிற்காக, தனக்கு மிகவும் பிடித்த தனது குடும்பம் வசிக்கிற “பைருஹா’ எனும் தோட்டத்தை தூதரிடத்தில் அன்பளிப்பாக ஒப்படைத்து விட்டு தன் மனைவியிடம் வருகிறார் அபூதல்ஹா(ரழி), உம்மு சுலைம்(ரழி) அவர்களோ பெரிதும் மகிழ்ச்சியடைந்து தன் கணவரைப் பாராட்டுகிறார்.

ஏகனான அல்லாஹ்வின் மார்க்கத்தில் தான் மட்டுமல்ல தனது மகன், கணவர் என தன் குடும்பத்தையே உறுதியோடு நிற்கச் செய்த பெண்மணி உம்மு சுலைம்(ரழி), நாம் இதில் படிப்பினை பெறவேண்டிய செய்திகள் இருக்கிறது.

வீரப்பெண்ணே….

உஹத் போர்க்களம், நபி(ஸல்) அவர்க ளின் பல் உடைக்கப்பட்ட இடம். இப்னு கமீஆ என்பவன் நபி(ஸல்) அவர்களின் பல்லை உடைக்கிறான். மக்களெல்லாம் அங்கும் இங்கு மாக ஓடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண் இறைத்தூதருக்குக் கேடயமானாள். பாதுகாப்பளித்தாள். தனது மகன் காயம் பட்ட போது அவரை மீண்டும் போர் செய்ய ஆர்வமூட்டினாள். அதுமட்டுமல்ல, போரில் ஓடிக் கொண்டிருந்த ஒரு நபரிடம் கவச ஆடையைப் பெற்று தான் அணிந்துகொண்டு, இப்னு கமீஆ நோக்கி வாள் வீசினாள். ஆனால் இப்னு கமீஆ சுதாரித்து விலகி, இவரது தோளை வெட்டிவிட்டான். உறுப்பு குன்றினாலும் வீரம் குறையாத பெண், போரில் உதவி மட்டுமல்ல, போரே செய்த அந்த வீரப் பெண் யார் தெரியுமா? உம்மு உமாரா(ரழி) அவர்கள்தான்.

33:35
அல்லாஹ் அரபி மொழியில் எதுகை மோனையுடன் செய்திகளை இறக்கிய அத்தி யாயங்களைப் பார்த்திருப்போம். ஆனால் ஒரே வசனத்தில் இருபாலரையும் குறிப்பிட்டு சந்தங்களோடு கொடுத்த வசனம் தெரியுமா? இன்னல் முஃமினீன வல் முஃமினாத்தி… என ஆரம்பிக்கும் 33வது அத்தியாயத்தில் 35வது வசனம்.

இவ்வசனம் இறங்கக் காரணமான நபித் தோழியோ, நபி(ஸல்) அவர்களிடம், “தூதரே, ஆண்களைக் குறித்து மட்டுமே இறை வசனம் இறங்குகிறதே! எங்களைக் குறிப்பிட்டு இறங்க வில்லையே எனத் துணிந்து கேட்கிறார். மேலும் ஒரு சம்பவத்தின் மூலமாகவும் இவ்வசனம் இறங்கியது என அறிவிக்கப்படுகிறது.

இறைச்செய்திக்காகஏங்கியபெண்மணி:

நபி(ஸல்) அவர்களின் தந்தையிடம் அடிமையான உம்மு அய்மன்(ரழி) அவர்கள் இறைத்தூதரின் பிறப்பிலிருந்தே அவரோடு வாழ்ந்து, அவரை வளர்த்தவர். நபி(ஸல்) அவர் கள் வளர்ந்து பெரியவரானதும் அவரை விடுதலை செய்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தான் வாழும் காலத்தில் உம்மு அய்மன்(ரழி) அவர்களின் வீட்டைக் கடக்கும்போது அவரை சந்தித்து போவார்கள். ஏகத்துவ வாழ்க்கை வாழ்ந்த இவர், நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு பெரிதும் கவலைக்குள்ளாகிறார். ஒருமுறை அபூபக்ர்(ரழி) மற்றும் உமர்(ரழி) இருவரும் அவரை சந்திக்கச் சென்றபோது, உம்மு அய்மன்(ரழி) அவர்கள் அழுதுகொண்டிருந்தார்கள். அவ்விருவரும் “ஏன் அழுகிறீர்கள்? நம்மிடம் இருப்பதை விட அல்லாஹ்விடம் இருப்பது சிறந்ததாயிற்றே!’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் “அதை நான் அறியாமல் இல்லை, மாறாக நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு வானிலிருந்து இறைச் செய்தி வருவது நின்றுவிட்டதே!’ என்று கூறி அழுது, இரு நபித்தோழர்களையும் அழ வைத்து விட்டார்கள். (முஸ்லிம் : 4849)

வஹீக்காக வருத்தப்பட்ட நபித் தோழியர் எங்கே? நரக வேதனை பற்றிய அநேக வசனங்களை படிக்கும்போதும் நினைவூட்டப்படும்போதும் உள்ளம் உணர மறுக்கும் நாம் எங்கே?

கடல்போர் :

நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹராம்(ரழி) வீட்டிற்குச் சென்று சிறிது உறங்கி விடுகிறார்கள். விழித்து எழும்போது சிரித்தார்கள். உம்மு ஹராம்(ரழி) நபியவர்களிடத்தில் ஏன் சிரிக்கிறீர்கள்? எனக் கேட்டார். நபியவர்கள், “என் சமுதாயத்தில் சிலர் இறைவழியில் (போரிடுவதற்கு) கடலில் பயணம் செய்வார்கள் என்றார். இதைக் கேட்ட உம்மு ஹராம்(ரழி) அதில் நானும் ஒருத்தியாக இருப்பதற்கு பிராத்தியுங்கள் எனக் கேட்டார். அவ்வாறே அல்லாஹ்வின் தூதரும் செய்தார்கள். மீண்டும் அதேபோல் உறங்கினார்கள். விழித்த பிறகு மீண்டும் சிரித்தார்கள். அதைப் பார்த்த உம்மு ஹராம்(ரழி) அல்லாஹ்வின் தூதரே, முன்பு போலவே மீண்டும் ஏன் சிரிக்கிறீர்கள்? எனக் கேட்டார். நபியவர்களும் முன்பு போலவே பதிலளித்தார்கள். இதைக் கேட்ட உம்மு ஹராமோ, நானும் ஒருத்தியாக அதில் இருப்பதற்கு பிராத்தியுங்கள் என்று கேட்க, நபியவர்கள், நீங்கள் முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள்’ என்றார். அதேபோல் அந்தப் பெண்மணியும் கடல் போரில் பங்கேற்று வரும் வழியில் வாகனத்திலிருந்து கீழே விழுந்து இறந்து விட்டார்கள். (முஸ்லிம் 2877)

நபித்தோழியர்களும் ஏகத்துவ வழியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துள்ளனர். போர் என்றாலே ஏகத்துவம் ஓங்க வேண்டும். மக்களை நேரான வழியில் கொண்டு வந்த ஏகனுக்காக தன் உயிரை அர்ப்பணிப்பதாகும். அவ்வழியில் தியாகம் செய்தப் பெண்மணி இவர்.

இரண்டுஹிஜ்ரத் :

அல்லாஹ்விற்காகவும் அவனது மார்க்கத் திற்காகவும் இடம், பொருள், நாடு என அனைத்தையும் துறந்து ஹிஜ்ரத் செய்தவர்களில் இரு மடங்கு கூலி பெற்றவர் அஸ்மா பின்த் உமைஸ்(ரழி) என்ற ஸஹாபிய பெண்மணி ஆவார். முதல்முறை கடல் வழியாக அபிசீனியா, பின்னர் இரண்டாவதாக மதீனா நோக்கி.

நாடு கடந்து செல்லுதல் என்றால், இக்காலத்தில் விமானம் மூலமாக பறப்பது அல்ல. பல மாதங்கள் தனது வாழ்விடம் துறந்து அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக உறுதியாக நின்று இன்னல்களைப் பொறுத்துக்கொண்டு கடப்பதாகும்.

ஒருமுறை உமர்(ரழி) அவர்கள் அஸ்மா (ரழி) அவர்களிடம் தங்களுக்கு முன்பே நாங்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்து விட்டோம். ஆகவே, நாங்களே அல்லாஹ்வின் தூதருக்கு உரியவர்கள் என்றார். இதனால் கோபப்பட்டு “உமரே, அல்லாஹ்வின் மீது ஆணையாக இல்லை. நீங்கள் நபியவர்களின் அருகிலேயே இருந்தீர்கள். உங்களில் பசித்தவருக்கு அவர்கள் உணவளித்து அறியாதவருக்கு அறிவூட்டினார்கள். நாங்களோ உறவிலும் மார்க்கத்திலும் வெகு தொலைவிலிருக்கும் அபிசீனிய நாட்டிலிருந்தோம். பின்பு இது குறித்து நபியவர்களிடத்தில் முறையிட்டபோது, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “உங்களுக்கு இரண்டு ஹிஜ்ரத் செய்த சிறப்பு உண்டு’ என்றார்கள். (முஸ்லிம் 4915)

மேலும் அவர் ஹிஜ்ரத்தின்போது கர்ப்பினியாக இருந்தார் எனவும், அப்பயணத்தின் போதே பிரிசவித்ததாகவும் நபிமொழி பகர்கிறது. (முஸ்லிம் 2334)

இருகச்சுடையாள் :

ஒருமுறை அஸ்மா பின்த் அபீபக்ர்(ரழி) அவர்கள் நீண்ட நாட்கள் பிரிந்திருந்த தனது இணைவைக்கும் தாயைப் பார்த்து அவருடன் அன்பு பாராட்ட எண்ணினார். ஆனாலும் அல்லாஹ் குர்ஆனில் இணைவைப்பவர்களை நோக்கி அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம் பும் சமூகத்தினர் இருக்கமாட்டார்கள் எனக் கூறிய வசனம் நினைவுக்கு வர உடனே அஸ்மா (ரழி) நபியவர்களிடம் சென்று முறையிட்டார்கள். அப்போது நபியவர்கள் குர்ஆனின் 60:8 வசனத்தை ஓதி, அவர்களிடம் அன்பு பாராட்டுவது விலக்கப்பட்டதல்ல. மார்க்க வியத்தில் உங்களுடன் போரிடாமலிருக்கும் வரை என்று கூறியவுடன் ஏற்றுக்கொள்கிறார். தன்னைப் பெற்ற தாயாக இருந்தாலும் இறைமார்க்கம் தான் பெரிது என அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவும் செய்கிறார்.

அஸ்மா(ரழி) அவர்களது மகன் ஹஜ்ஜாஜ் பின் யூஸூஃப் மன்னனால் அநியாயமாக கொல்லப்படுகிறார். பின்பு ஹஜ்ஜாஜ். அஸ்மா (ரழி) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் விரோதி உமது மகனை என்ன செய்தேன் பார்த்தாயா? என்று கேட்டான். உடனே அஸ்மா (ரழி) “நீ என் மகன் அப்துல்லாஹ்வின் இம்மையை சீரழித்துவிட்டாய். அவரோ உன் மறுமையை சீரழித்து விட்டார் என நான் கருதுகிறேன்’ என்றார். (முஸ்லிம் 4975ன் சுருக்கம்)

“இரு கச்சுடையாள்” என்ற புனைப் பெயரும் இவருக்கு உள்ளது. காரணம் அவரது தந்தை அபூபக்ர்(ரழி) மற்றும் நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் மேற்கொண்டபோது அவர்களுக்காக உணவை தன்னிடமுள்ள கச்சுத்துணியால் கட்டி எடுத்துச் சென்றதால். (முஸ்லிம் 4975ன் சுருக்கம்)

இறுதியாக :

இன்னும் இங்கே குறிப்பிடப்படாத நபித்தோழியர் வரலாறுகள் நிறைய இருக்கின்றன. அவர்களது தியாகத்திற்கு ஈடாகவோ, ஈமானிய உறுதிக்காகவோ எந்தவொரு சமகால மனிதனையும் ஒப்பிடமுடியாது. அல்லாஹ்வின் வல்லமை பற்றியும் அவனது தண்டனைகள் பற்றியும் எவ்வளவோ நாம் அறிந்திருந்தும் அதில் துளியளவு ஈமானை உணர்ந்தபாடில்லை நமது உள்ளம். அதனால்தான் என்னவோ நபி (ஸல்) அவர்களால் சிறந்தவர்கள் என சான்றளிக்கப்பட்டார்கள். ஏக இறைவனான அல்லாஹ்வோ அவர்களைக் குறித்து.

அல்லாஹ்வும் அவர்களைக் குறித்து அவர்களைப் பொருந்திக் கொள்வதாய் வாக்களித்துள்ளான்.   (அல்குர்ஆன் 89:8)

Previous post:

Next post: