முஸ்லிம் பெண்களுக்கு கல்வி அவசியமே!

in 2022 ஏப்ரல்

முஸ்லிம் பெண்களுக்கு கல்வி அவசியமே!

அபூ ஹனிபா,  புளியங்குடி

ஹிஜாப் அணிய தடை :

கடந்த சில மாதங்களுக்கு முன்னால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பள்ளியில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியக் கூடாது என்று தடை செய்தார்கள். ஹிஜாப் அணிவது எங்கள் ஜனநாயக உரிமை என்று கூறி, அது தொடர்பாக நீதிமன்றத்தை நாடினார்கள் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னால் அதற்கான தீர்ப்பை கர்நாடகா உயர்நீதி மன்றம் வழங்கியது. அதாவது முஸ்லிம் பெண்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மையானவர்கள் ஹிஜாப் அணிவது இல்லை. எனவே இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது கட்டாய கடமையாக இருந்தி ருந்தால் அனைவரும் அணிந்திருப்பார்கள். ஆனால் முஸ்லிம் பெண்களில் விரும்பியவர்கள் அணிகிறார்கள். விரும்பாதவர்கள் அணியாமல் இருக்கிறார்கள். எனவே இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது கட்டாயக் கடமை இல்லை. அதனால் முஸ்லிம் பெண்கள் பள்ளி மற்றும் சில கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வருவதை தடை செய்து தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள்

பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள்.

இந்த விவகாரம் முஸ்லிம் பெண்களின் படிப்பு சம்பந்தமாக இருப்பதால் இதற்கு உடனடியாக, உறுதியான தீர்வை குர்ஆன், ஹதீத் அடிப்படையில் முஸ்லிம்களாகிய நாம் எடுக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அதுவல்லாமல் விவாதங்கள், போராட்டங்கள் என்று நாட்களை கடத்தி முஸ்லிம் பெண்களின் படிப்பினை கெடுக்கும் விதமாக நடந்து கொள்வது அறிவுடைமையாகாது.

அப்படி நடந்தால் முஸ்லிம் பெண்களின் படிப்பு மட்டும் பாதிக்காது. இஸ்லாத்தின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக சில ஊடகங்கள் இஸ்லாத்தில் இல்லாத பொய்களை பரப்பி விவாதம் என்ற பெயரில் முஸ்லிம் பெண்களையே ஹிஜாப்புக்கு எதிராக திருப்பவும் வாய்ப்பும் இருக்கிறது.

காரணம் அந்த அளவிற்கு தான் இன்றைய முஸ்லிம் பெண்களிடம் மார்க்க பற்றும், புரிதலும் இருக்கிறது. இதில் முஸ்லிம் ஆண்கள் குறைந்தவர்கள் இல்லை. ஜனநாயகம் என்று சொல்லிவிட்டால் இஸ்லாத்தில் உள்ள சட்டங்களை புறக்கணித்து விட்டு ஜனநாயகத்தை தூக்கிப் பிடிக்கும் அவல நிலைக்கு சென்று விடுகிறார்கள்.

குறிப்பாக இன்றைக்கு இந்த முஸ்லிம் சமுதாயம் இயக்கங்களாக பல பிரிவுகளாக பிரிந்து கிடக்க காரணம் ஜனநாயகம் என்ற ஒற்றை சொல்லே. உண்மையில் இன்று இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் இருந்திருந்தால் இயக்க தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பல தலைவர் இருந்திருக்க முடியாது. எனவேதான் அவர்கள் தங்கள் உலக ஆதாயங்களுக்காக ஜனநாயகத்தை தூக்கிப்பிடிக்கிறார்கள். முஸ்லிம் ஆண்களும், பெண்களும் ஜனநாயகத்தை தூக்கிப் பிடிக்க இயக்க வெறி பிடித்த தலைவர்களும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

இன்றைக்கு பெரும்பான்மை முஸ்லிம்கள் எதை விரும்புகிறார்கள். இஸ்லாத்தையா? ஜனநாயகத்தையா? ஜனநாயகத்தையே! பெரும்பான்மை இஸ்லாமிய ஆண் களும், பெண்களும் ஜனநாயகத்தையே விரும்புகிறார்கள். அதனால் தான் இஸ்லாமிய சட்டதிட்டங்களை புறக்கணித்து விட்டு ஜனநாயக உரிமை என்று பல பிரிவு களாக பிரிந்து கிடந்து போராடி வருகிறார்கள். அப்படி போராடக்கூடிய போராட்டத்தினால் கர்நாடகாவில் நடந்து கொண்டு இருக்கும் சூழ்ச்சிக்கு தீர்வு கிடைக்குமா? எந்த மதமாக இருந்தாலும் அனைத்து மக்களுக்கும் நீதி வழங்கக்கூடிய இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்து கொண்டு அதன் சட்டதிட்டங்களை பின்பற்றாமல் ஜனநாயக வழியில் பல பிரிவுகளாக ஆளாளுக்கு ஒரு இயக்கத்தை ஆரம்பித்து பல பிரிவுகளாக பிரிந்து கிடந்து சிறுபான்மையினராக நின்றுகொண்டு சமுதாய பிரச்சனைக்கு போராடினால் இந்த சமுதாயத்திற்கு நீதி கிடைக்குமா? ஒருகாலமும் கிடைக்காது. காரணம் ஜனநாயக நீதிமன்றங்களின் தீர்ப்புகளை கடந்த காலங்களில் பார்த்தவர்கள் தான் இந்த முஸ்லிம் சமுதாயம். அப்படி இருந்தும் திருந்தாத சமுதாயமாக இருக்கிறது இந்த முஸ்லிம் சமுதாயம். என்ன செய்வது? வேதனையிலும் வேதனை.

ஜனநாயக நீதிமன்றங்கள் :

இஸ்லாத்தை பின்பற்றக்கூடிய முஸ்லிம்களே! ஏக இறைவன் அல்லாஹ் கொடுத்த இஸ்லாமிய சட்டதிட்டங்களை பின்பற்றாத போது மனிதன் உருவாக்கிய சட்ட திட்டங்களை பின்பற்றி தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் சரியாக நேர்மையாக, தீர்ப்பு வழங்குவார்கள் என்று நம்பிக்கை வைப்பது எப்படி சரியாகும். ஜனநாயகம் என்பது பெரும்பான்மையை கொண்டது. இங்கு பெரும்பான்மை மக்கள் எடுக்கும் முடிவே சட்டமாக அங்கீகரிக்கப்படும்.

நீதிபதிகளில் ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மையானவர்கள் ஆட்சியாளருக்கு கட்டுப்பட்டே தீர்ப்பு வழங்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஜனநாயக நாட்டில் ஜனநாயக உரிமையை நீதிமன்றங்களின் மூலமாக பெறுவது அரிதிலும் அரிது. அதற்காக நீதிமன்றங்களை நாடவேண் டாம் என்று சொல்லவில்லை. இஸ்லாம் காட்டித் தரக்கூடிய நிலையில் ஒன்றுபட்ட ஒரே சமுதாயமாக ஒரு தலைவருக்கு கட்டுப்பட்டு நின்று நமது பெரும்பான்மையை இந்தியா முழுவதும் காட்ட வேண்டும். அப்போதுதான் முஸ்லிம் சமுதாயத்திற்கான நீதி கிடைக்கும். அதை செய்யாதவரை நீதி என்பது பாலைவனத்தில் காணப்படும் கானல் நீரைப் போன்றது. நீதி கிடைத்து விடும் என்று நம்பி சென்றால் கிடைப்பது ஏமாற்றமே.

ஹிஜாப் சட்டம் :

ஹிஜாப் என்றால் என்ன என்று முஸ்லிம்களாகிய நாம் சரியாக விளங்கி இருந்தால் மட்டுமே அதனால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட எளிதாக இருக்கும். இல்லை என்றால் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இன்றைக்கு முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் என்ற பெயரில் முகத்தையும் சேர்த்து மறைத்துக் கொண்டு தங்கள் இரண்டு கண்கள் மட்டும் தெரியக்கூடிய நிலையில் பொது வெளியில் நடமாடுவதை நாம் காண்கிறோம். இப்படி முகத்தை மூடிய நிலையில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவதால் அது போன்ற ஆடைகளை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதும், குற்றச்செயல்கள் செய்வதுமாக இருக்கிறார்கள்.

மேலும் பிற மத பெண்கள், ஆண்கள் ஏன் இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் கூட துணிச்சலான தவறான செயல்களில் ஈடுபடுவதற்கும் இந்த ஆடைகளை பயன்படுத்துகிறார்கள். மேலும் இதுபோன்ற ஆடைகளை அணிவதால் யார் செல்கிறார் என்ற அடையாளப் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. எனவே பல பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கக் கூடிய இந்த முகத்திரையுடன் கூடிய ஹிஜாப் அணிவதால் அதனையும் ஒரு காரணம் காட்டி ஹிஜாப் தடை செய்யப்படுகிறது. உண்மையில் முகத்தை மூடுவதுடன் கூடிய ஹிஜாப் அணிய இஸ்லாம் வழியுறுத்துகிறதா? இல்லையா? முகத்திரை கட்டாயம் அணிய வேண்டுமா? பெண்கள் விருப்பப்படி ஆடை அணிந்து கொள்வது பெண்களின் உரிமையா? இல்லையா? என்பதை பார்ப்போம்.

யார்? என்று அறியப்பட வேண்டும் :

இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் ஒவ்வொரு மூஃமினான பெண்களுக்கும் அல்லாஹ் ஹிஜாபை பேண சொல்கிறான். காரணம் அவர்கள் யார் என்று அறியப்பட்டு, நோவினை செய்யப்படாமல் இருப்பதற்காக. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக. அவர்கள் அறியப்பட்டு நோவினை செய்யப்படா மலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க அன்புடையவன். (அல்குர்ஆன் 33:59)

அல்குர்ஆன் 33:59 வசனத்தின் மூலமாக ஒரு பெண் யார் என்று அறியப்பட்டு அவர் நோவினை செய்யப்படாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் ஹிஜாப் அணிய சொல்கிறான்.

ஹிஜாப் எப்படி அணிய வேண்டும்?

மேலும் அந்த ஹிஜாப் எப்படி அணிய வேண்டும், எந்த பாகங்களை மறைக்க வேண்டும், எந்த பாகங்களை மறைக்கக் கூடாது, யாரிடம் எல்லாம் தனது ஆடை அலங்காரத்தை காட்ட வேண்டும், யாரிடம் எல்லாம் காட்டக்கூடாது என்பதையும் கூறுகிறான்.

இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக; அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ளவேண்டும். தங்கள் அழ கலங்காரத்தை அதினின்று தெரியக் கூடியதைத் தவிர வெளிக்காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். மேலும், தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு) வயதானவர்கள், பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழ கலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம். மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ் வின் பக்கம் திரும்புங்கள். (குர்ஆன்24:31)

அல்குர்ஆன் 24:31 வசனத்தின் மூலம் ஒரு முஃமினான பெண் தனது ஆடை அலங்காரத்தை யாரிடம் காட்ட வேண்டும், யாரிடம் காட்டக் கூடாது என்பதை யும் அல்லாஹ் தெளிவுபடுத்தி விட்டான்.

அந்நிய ஆண்கள் முன் ஹிஜாப் பேணுதல்:

மேலும் அந்நிய ஆண்கள் மத்தியில் ஒரு மூஃமினான பெண் எவ்வாறு ஹிஜாப் பேண வேண்டும் என்பதை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எவ்வாறு கட்டளையிட்டார்கள் என்பதை ஹதீத்களில் இருந்து விளங்கிக் கொள்ளலாம்.

இஹ்ராம் அணிந்த நிலையில் ஒரு பெண் முகத்திரையும் அணியக்கூடாது. கையுறையும் அணியக்கூடாது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். புகாரி 1838, ஹதீத். இந்த ஹதீதின் மூலம் அந்நிய ஆண்கள் மத்தியில் ஒரு மூஃமினான பெண் எவ்வாறு ஹிஜாப் அணிய வேண்டும்? அணிந்தார்கள் என்பதை மிக தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது. இன்றைக்கும் ஹஜ்ஜுடைய காலங்களில் கஅபாவை வலம் வரக்கூடிய மூஃமினான பெண்களை பார்க்கவே செய்கிறோம். இப்படிப்பட்ட ஆடை கட்டுப்பாட்டைத்தான் பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் பெண்களுக்கு வழிகாட்டுகிறார்கள்.

அப்படி இருக்க சில அறிவு ஜீவிகள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மார்க்கம் கற்றுக்கொடுக்கும் விதமாக (நவுதுபில்லாஹ்) பெண்கள் தங்கள் முகத்தை மூடிக்கொண்டு தான் பொது இடங்களுக்கு வரவேண்டும். அந்நிய ஆண்களுக்கு தங்கள் முகத்தை காட்டக்கூடாது என்று சொல்லி புதிய வழிகேட்டை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த வழிகேட்டின் காரணமாக சமூக பிரச்சனைகள் ஏற்பட்டு மூஃமினான பெண்கள் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் காட்டித்தந்த வழிமுறையில் தங்கள் முகத்தை திறந்து இருக்கும் நிலையில் கூட தங்கள் ஆடை அலங்காரங்களை மறைத்து ஹிஜாப் அணிய முடியாதபடி முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் மார்க்க அறிஞர்கள் என்ற அறிவுஜீவிகளே!

ஹிஜாப் அணிய தடை ஏன்?

ஹிஜாப் அணிய தடைக்கு முகத்திரை தான் காரணமா என்றால், அதுவும் ஒரு முக்கிய காரணமாகத்தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு இஸ்லாத்தை அழிக்க, இஸ்லாத்தை கலங்கப்படுத்த ஒருசில காரணங்கள் போதாதா? போதும் அதை ஊதி, ஊதி பெரியதாக்கி விடுவார்கள். இன்றைக்கு முகத்திரை அணிவதையும், முகத்திரை சம்பந்தமாக கடந்த காலங்களில் நடந்த பிரச்சனைகளையும் அது தொடர்பாக நீதிமன்ற வழக்குகளையும் ஆதாரமாக காட்டித்தான் முகத்திரை அணிவது தடை செய்யப்பட்டு இருக்கிறது. அது மட்டும் அல்ல. ஹிஜாப் அணிவது மார்க்க கட்டாய கடமை அல்ல. ஏன் என்றால் முஸ்லிம் பெண்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மை பெண்கள் ஹிஜாப் அணிவது இல்லை. அதனால் உங்கள் மார்க்கத்தில் ஹிஜாப் கட்டாய கடமை இல்லை. அப்படி இருந்திருந்தால் அனைவரும் அணிந்திருப்பார்கள் என்று பெரும்பான்மையை ஆதாரமாக காட்டி இஸ்லாமிய அடிப்படை சட்டத்தை புறம் தள்ளிவிட்டார்கள். இதற்கு காரணம் யார் நீதிமன்றமா? இஸ்லாமிய பெரும்பான்மை மக்களா? பெரும்பான்மை மக்கள் அணிந்திருந்தாலும் அவர்கள் தடை செய்திருப்பார்கள் காரணம். பெரும்பான்மை ஆதிக்கம், ஆட்சி அதிகாரம் அவர்களிடம் இருக்கிறது. என்றாலும் முஸ்லிம்களிடத்திலும் தவறு இருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்னால் வரை முஸ்லிம் பெண்களுக்கு ஹிஜாப் பற்றியான போதிய விழிப்புணர்வு கிடையாது. தவ்ஹீத் புரட்சி ஏற்பட்ட பின்னர் தான் ஹிஜாப் பற்றியான விழிப்புணர்வு முஸ்லிம்களிடம் ஏற்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

பெண்களுக்கான விழிப்புணர்வு :

இன்றைக்கு இருக்கக்கூடிய பெரும் பான்மையான முஸ்லிம் ஆண்கள், பெண்கள் திறமையான இயக்க பேச்சாளர்களிடம் இருந்தே மார்க்கத்தை கற்கிறார்கள். யாரும் குர்ஆன், ஹதீத்களை நேரடியாக சுயமாக படித்து விளங்குவது இல்லை. இன்னும் நம்மோடு இருந்த சாதாரண முஸ்லிமும் சூப்பர் முஸ்லிமாக மாறி குர்ஆன், ஹதீத்களை நேரடியாக படித்தால் விளங்காது அதற்கு என்று அறிஞர்கள் இருக்கிறார்கள் அவர்களின் விளக்கத்தையும் எடுத்துக் கொண்டால் தான் குர்ஆன் விளங்கும் என்ற நிலைக்கு மாறிவிட்டார்கள். இப்படிப்பட்டவர்களின் விளக்கத்தை எதிர்பார்த்து தான் இந்த இளைய முஸ்லிம் சமுதாயம் மார்க்க விளக்கங்களுக்காக காத்திருக்கிறது.

மேலும் இன்றைக்கு பெண்களுக்கும் போதிய மார்க்க புரிதல்கள் இல்லை. இயக்க பேச்சாளர்களின் பேச்சை நம்பியே மார்க்க சட்டங்களை எடுக்கிறார்கள். போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று இயக்கவெறி பேச்சாளர்களின் பேச்சை மார்க்கமாக ஏற்று தங்களின் உரிமைக்காக மார்க்கம் காட்டித்தராத ஜனநாயக வழியில் போராட்டங்களில் இறங்குகிறார்கள். கண்ணியமாக நடத்தப்பட வேண்டிய, வீட்டில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டிய பெண்களை தெருவில நிற்க வைத்து போராடவிட்டு, கையாளாகாத கபோதிகளாக மாற்றிவிட்டார்கள் இன்றைய இயக்கவாதிகள்.

இயக்கவாதிகள் பெண்களின் உரிமையை மீட்டெடுக்க போராட்டம் நடத்த வில்லை. தங்களின் இயக்கத்தை வளர்க்கவே போராட்டம் நடத்துகிறார்கள். பிரிவினை இயக்கவாதிகளின் சூழ்ச்சிகளை முஸ்லிம் பெண்கள் அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயம். ஏன் என்றால் இன்றைக்கு ஒருசில பெண்களுக்கான உரிமைக்கான பிரச்சனை நடக்கவில்லை. ஒரு சமு தாயத்தின் உரிமைக்கான பிரச்சனை நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையிலும் இந்த பிரிவினை இயக்கவாதிகள் பிரிந்து தான் இருக்கிறார்கள். இப்படி பிரிந்து கிடக்கும் இயக்கவாதிகளை நம்பி முஸ்லிம் பெண்கள் போராட்டம் என்று கிளம்பி போராடினால் வெற்றி கிடைக்குமா? நிச்சயம் கிடைக்காது. காரணம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! ஒற்றுமை இல்லை எனில் அனைவருக்கும் தாழ்வு என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த இயக்க வெறியர்களின் பிரிவினை வியாதியினால் எல்லா முஸ்லிம்களுக்கும் தாழ்வு ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறது. அதனால் முஸ்லிம் பெண்கள் இயக்கவாதிகள் பற்றி எச்சரிக்கையாக இருப்பது காலத்தின் கட்டாயம்.

ஹிஜாபா?   கல்வியா?

பெண்களின் கல்வியானது ஒரு குடும்பத்தின் கல்வி, ஒரு சமுதாயத்தின் கல்வி, கடந்த காலங்களில் முஸ்லிம் பெண்களின் கல்வி என்பது கானல் நீராகவே இருந்து வந்தது. மார்க்க கல்வியும் கிடைக்காது, உலக கல்வியும் கிடைக்காது, பெண்களுக்கு கல்வி அறிவு இல்லாததின் விளைவாகத்தான் பல மூட நம்பிக்கைகள் இந்த முஸ்லிம் சமுதாயத்தில் கால் ஊன்றி இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் இருந்து தான் முஸ்லிம் பெண்கள் கல்வி அறிவைப் பெற்று வருகிறார்கள். அப்படிப்பட்ட கல்வி அறிவை தடுக்கும் விதமாகத்தான் இஸ்லாத்தின் விரோதிகள் முயற்சித்து வருகிறார்கள்.

முஸ்லிம் பெண்கள் கல்வி அறிவுபெற்று விட்டால் அந்த சமுதாயமே கல்வி அறிவு பெற்றுவிடும் என்ற ஒரே நோக்கத்திற்காக அவர்களின் கல்வி அறிவை பறிக்கும் விதமாக இதுவரை இல்லாத பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள். முஸ்லிம்களாகிய நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.

முஸ்லிம் பெண்களின் கல்வியை பறிக்க எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று எதிரிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விரித்த வலையில் முஸ்லிம்களாகிய நாம் விழுந்து விடக்கூடாது. அவர்களின் இந்த சதி வலையில் விழுந்து ஹிஜாப் தான் முக்கியம் எனது பெண் பிள்ளைகள் ஒழுக்கமானவர்கள் அவர்கள் ஹிஜாப் அணிந்து தான் பள்ளிக்கு வருவார்கள் இல்லை என்றால் அவர்களுக்கு படிப்பே தேவை இல்லை என்று அவர்களின் படிப்பை யாரும் நிறுத்தி விடாதீர்கள். உங்களால் முடிந்தால் ஹிஜாப் அணிய அனுமதிக்கும் பள்ளிகளில் சேர்த்து விடுங்கள். அதற்கு வாய்ப்பு இல்லை என்றால் நிர்பந்தத்தின் அடிப்படையில் அதே பள்ளிகளில் உங்கள் பெண் பிள்ளைகளை படிக்க அனுமதியுங்கள். மார்க்க கல்வியை மேலும் அதிகப்படுத்துங்கள். உங்கள் நிர்ப்பந்தத்தை சொல்லி வளருங்கள். ஏன் என்றால் அல்லாஹ் சொல்கிறான் எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி நாம் சிரமப்படுத்த மாட்டோம் என்று. அல்குர்ஆன் 6:152, 7:42, 23:62

மேலும் நிர்பந்திக்கப்பட்டால் ஹராமான உணவு கூட முஸ்லிம்களுக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. அல்லாஹ் மன்னிக்க போதுமானவன். அல்குர்ஆன் 2:173, 5:3, 6″145. இந்த வசனங்களின் அடிப்படையில் உங்கள் பெண் பிள்ளைகளை ஹிஜாப் இன்றி பள்ளி அறைகளில் இருந்து படிக்க அனுமதியுங்கள். அதை தவிர மற்ற இடங்களில் கட்டாயம் முகத்திரை இன்றி ஹிஜாப் அணிய வலியுறுத்துங்கள்.

உங்கள் மனைவிமார்களையும், தாய் மார்களையும், சகோதரிகளையும் மற்ற பெண்களையும் கட்டாயம் முகத்திரை இன்றி ஹிஜாப் அணிந்து பொது இடங்களுக்கு செல்ல வலியுறுத்துங்கள். அவ்வாறு செய்தால் மட்டுமே ஹிஜாப் என்பது முஸ்லிம் பெண்களின் மீது கட்டாய கடமை என்பதை மற்ற மதத்தவர்களும் விளங்கிக் கொள்வார்கள். முஸ்லிம் (பெண்)கள் கண்ணியமானவர்கள் என்பதையும் பார்ப்பவர்கள் அறிந்து கொள்வார்கள். அதை செய்ய ஒவ்வொரு முஸ்லிமும் முயற்சி செய்ய வேண்டும். இதை விட்டுவிட்டு போராடி எங்கள் உரிமையை வெல்லுவோம் என்று யாராவது கூக்குரல் கொடுத்தால் அவர்களை அழைத்து இந்த சமுதாயத்தை முதலில் ஒன்றுபடுத்து! பின்னர் உன் உரிமையை பெற போராடு! என்று அவர்களை புறக்கணிப்பது சிறந்தது.

சமுதாய சிந்தனையாளர்களே!

காலம் காலமாக இஸ்லாத்தின் மீது அதன் எதிரிகள் போர் தொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். முந்தய காலத்தில் முஸ்லிம், காஃபிர் என்று நேரடியாக போர் தொடுத்தார்கள். இன்றோ கோழைத் தனமாக ஜனநாயகம் என்ற பெயரில் முதுகில் குத்துகிறார்கள். முஸ்லிம்களாகிய நாம் விழித்துக் கொள்ளும் காலகட்டம் நெருங்கி விட்டது. ஜனநாயகம் என்ற பெயரில் முஸ்லிம்களை பிரித்தாளும் சூழ்ச்சி எதிரிகளால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. விழித்துக் கொள்ளுங்கள். இயக்கங்களாக தனித்தனி பள்ளிவாசல்களை கட்டுவதை விட ஒரே சமுதாயமாக பள்ளிக்கூடங்களை கட்டுங்கள். முஸ்லிம்களின் ஒட்டுமொத்த ஜகாத் மற்றும் ஸதக்கா ஒன்றிணைக்கப்பட்டால் இந்திய அரசு செய்ய வேண்டிய பணிகளை இந்த சமுதாயம் செய்ய முடியும். அதற்கு முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும். சமுதாயம் செய்ய முடியும். அதற்கு இந்த சமுதாயம் ஒன்றிணைந்தால் ஒரு புதிய சகாப்தம் படைக்க முடியும். அதற்கு தடைக்கற்களாக இருப்பது பிரிவுகளே. அந்த பிரிவுகளை களைந்து நமது இம்மை, மறுமை வெற்றிக்கு பாடுபடுவோம். இன்ஷா அல்லாஹ்! அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக.

Previous post:

Next post: