முஸ்லிம் அறிஞர்களின் ஃபத்வா!

in 2022 அக்டோபர்

முஸ்லிம் அறிஞர்களின் ஃபத்வா!

அபூ அப்தில்லாஹ்

முஸ்லிம்கள் அமெரிக்க நாட்டு பொருட்களை வாங்கக்கூடாது என்று மார்க்க அறிஞர்கள் சிலர் தீர்ப்பு வழங்கியுள்ளனர். அவர்களின் அறிவிப்பு முஸ்லிம்களுக்கு நிறைந்த பலன் அளித்திருப்பதாக முஸ்லிம் பத்திரிக்கைகள் ஆகா, ஓகோ என செய்திகள் வெளியிடுகின்றன.

முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் சாபக்கேடு தங்களது விவகாரங்களில் அல்லாஹ்வுடைய கட்டளை என்ன? நபி(ஸல்) அவர்களின் நடைமுறை என்ன? என்று முஸ்லிம்கள் பார்ப்பதில்லை. தாங்கள் அறிஞர்களாக மதிப்பவர்கள் என்ன தீர்ப்பு வழங்குகிறார்களோ, அதுதான் வேதவாக்கு என்று செயல்பட்டு வருவதேயாகும். இது ஒன்றும் புதிதல்ல. ஆதத்தின் சந்ததிகளிடம் காலம் காலமாக ஷைத்தானின் திருவிளையாடலால் காணப்படும் ஒரு வழி கேடே இது. இதோ அல்குர்ஆன் கூறுகிறது கேளுங்கள்!

“அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும், மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களோ ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக் கூடாதென்றே கட்டளை இடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை. அவன் அவர்கள் இணை வைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்’. அல்குர்ஆன் 9:31

இந்த வசனம் இறங்கியவுடன், அப்போது நான் கிருஸ்தவராக இருந்து இஸ்லாத்தை தழுவியிருந்த நபிதோழர் அத்திய் யுப்னு ஹாத்திம்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களைப் பார்த்து “யாரஸூலல்லாஹ்! நாங்கள் ஈஸா(அலை) அவர்களை அல்லாஹ்வுடைய குமாரன் என்று சொல்லி வணங்கியது உண்மைதான். ஆனால் எங்களின் பாதி ரிகளையும், சந்நியாசிகளையும் நாங்கள் வணங்கவில்லையே? அல்லாஹ் அவர்களையும் நாங்கள் வணங்கியதாகக் குற்றப்படுத்துகிறானே’ என்று கேட்டார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் “உங்கள் பாதிரிகளும், சந்நியாசிகளும் ஒன்றை ஹலால் என்றால் அப்படியே ஹலால் என்றும், ஒன்றை ஹராம் என்றால் அப்படியே ஹராம் என்றும் எடுத்துக் கொண்டீர்கள். மற்றபடி உங்களது வேதத்தில் அது குறித்து என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று நீங்கள் பார்ப்பதே இல்லை; இதைத்தான் அல்லாஹ் நீங்கள் அவர்களை வணங்கிக் கொண்டிருப்பதாகக் குற்றப்படுத்தியுள்ளான் என்று விளக்கம் அளித்தார்கள்’. அறிவிப்பவர்:அத்திய்யுப்னு ஹாத்திம்(ரழி), நூல்: திர்மதி.

இதே புற்றுநோய் இன்று முஸ்லிம் சமு தாயத்தையும் அப்படியே பீடித்துள்ளது. இதையும் நபி(ஸல்) அவர்கள் தெளிவாக முன்னறிவிப்புச் செய்துவிட்டே சென்றுள் ளார்கள். அந்த ஹதீத் வருமாறு :

“நிச்சயமாக என் சமூகத்தினர் மீது இஸ் ராயீலின் சந்ததியினர் மீது வந்த காலத்தைப் போன்ற ஒரு காலம் வரும்; ஒரு செருப்பு, மறு செருப்புப் போன்று இருப்பது போல (அதேபோன்ற காலம் வரும்) அவர்களில் எவனேனும் தன் தாயிடம் வெளிப்படையாகப் போகம் செய்திருந்தால், என் சமூகத்திலும் சிலர் அவ்விதமே செய்தல் கூடும்…’ அறிவிப்பவர்: இப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரழி), நூல் : திர்மிதி.

ஆக கிறிஸ்தவர்கள் செய்து கொண்டிருக்கும் அதே தவறை இன்று முஸ்லிம்களும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது இவர்களின் மார்க்க அறிஞர்கள் ஒன்றை ஹலால் என்றால் உடனே இவர்கள் அதை ஹலாலாக எடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் ஒன்றை ஹராம் என்றால் உடனே இவர்களும் ஹராம் என்றே எடுத்துக் கொள்கிறார்கள். மற்றபடி அல்குர்ஆனில் அது குறித்து அல்லாஹ் என்ன கட்டளையிட்டிருக்கிறான் என்பது பற்றி முஸ்லிம்கள் சிறிதும் கவலைப்படுவதில்லை.

அது மட்டுமல்ல; இன்று இந்த முஸ்லிம் சமுதாயம் எப்படிப்பட்டவர்களை மார்க்க அறிஞர்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? ஏதாவது ஒரு நகரில் அல்லது கிராமத்தில் ஒரு அரபி மதரஸா இருந்து அதில் ஏழு ஆண்டுகள் ஒருவர் உண்டு, உறங்கி கழித்துவிட்டால் போதும். அவர் மவ்லவி-மார்க்க அறிஞர். இந்த மதரஸாக் களிலும் குர்ஆன், ஹதீத்கள் போதிக்கப்படுவதில்லை. 300 அல்லது 400 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த இதுபோன்ற அறிஞர்கள் தங்களின் யூகத்தைக் கொண்டும் அனுமா னங்களைக் கொண்டும் எழுதி வைத்தவையே வேதம். புத்தகங்கள், பிக்ஹு நூல் கள், அவற்றையே அந்த மதரஸாக்களில் பாடப் புத்தகங்களாக வைத்து கற்றுக் கொடுக்கிறார்கள். 300 ஆண்டுகளுக்கு முன்னர் பூமி தட்டை, சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்று உண்மைக்குப் புறம்பாக எழுதி வைக்கப்பட்ட “தஷ்ரீக்குல் அஃப் லாக்’ என்ற நூலையே இன்றும் பாடத்திட்டத்தில் வைத்து போதிக்கிறார்கள் என்றால் அவர்களின் அறிவை எடை போட்டுக் கொள்ளுங்கள். அவர்களுக்கு எங்கே குர்ஆன், ஹதீத் ஞானம் இருக்கப்போகிறது? அந்த மவ்லவிகளே! சமயங்களில் தங்களின் நிலை பற்றி இப்படிக் கிண்டல் செய்து கொள்வார் கள்.

அதாவது “ஒரு மாட்டைக் கொண்டு போய் அப்படிப்பட்ட மதரஸா ஒன்றில் ஏழு ஆண்டுகள் கட்டிப்போட்டு தீனி போட்டுவிட்டால், அந்த மாடும் மவ்லவி ஆகிவிடும்’ என்று அவர்களே கேலி பேசிக் கொள்வார்கள். இதிலிருந்தே மவ்லவிகள் தங்களின் தரம் பற்றி நன்கு விளங்கியே வைத்திருக்கிறார்கள் என்பது புரிகிறது. அப்படிப்பட்ட மவ்லவிகளில் சிலருக்கு சிறிது பேச்சுத் திறமையும், வாதத் திறமையும் இருந்துவிட்டால் அந்த மவ்லவிகளுக்கு இவர் தலைவர்-பேரறிஞர். அவர்களில் சிலருக்குப் பெருங்கூட்டத்தை ஈர்க்கும் நாவன்மையும், எதிரிகளை வாதத்தில் வெல்லும் வாதத்திறமையும், சமயோசிதமும் அத்துடன் பாமர மக்களை கவரும் வண்ணம் எழுதும் திறமையும் இருந்துவிட்டால் அவர் அல்லாமா! ஆக பொதுமக்களிடம் அதிக மாகப் பிரபல்யமாகி, அறிமுகமாகி அதிகமான மக்களை ஆதரவாளர்களாகப் பெற்றிருப்பவர் அல்லாமா-கிப்லா-தாஜுல் அவ்லியா(?) இத்தியாதி, இத்தியாதி இதுதான் முஸ்லிம் சமுதாயத்தின் நிலை.

இதற்காக மக்களிடம் பிரபல்யமாக இந்த மவ்லவிகளும் அரசியல்வாதிகளைப் போல் சில தந்திரங்கள் செய்வதுண்டு. அரசியல்வாதிகள் சிலரை கூலிக்கு அமர்த்தி அவர்களின் இவ்வுலகத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுத்து, அதன் மூலம் அவர்களின் அபிமானத்தையும், ஆதரவையும் பெறுவது. அரசியல்வாதி வந்து இறங்கும்போது கூட்டமாக ஆரவாரமுடன் ஆள் உயர மாலையிட்டு வரவேற்று அமர்க்களப்படுத்துவது, கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களே தலைவரை புகழோ புகழ் என்று புகழ்வது. இந்த மாலையும் இந்த ஏற்பாடும் அந்த அரசியல் வாதியே பணம் கொடுத்து ஏற்பாடு செய்வது. இப்படித்தான் அரசியல்வாதிகள் மக்களிடையே செல்வாக்குப் பெறுகிறார்கள்.

இந்த அளவு மாலை, மரியாதை கட்அவுட் என்று இந்த மார்க்க அறிஞர்கள் துணியா விட்டாலும் இதுபோன்ற சிலரைத் தந்திரங் களைச் செய்தே தொண்டர்களிடமும், மக்களிடமும் பேரும், புகழும் பெறுகிறார்கள். இவர்களின் தொண்டர்களே இவர்களை ஆகா, ஓகோ என்று புகழ வைத்து அதன் மூலம் மக்களிடையே பேரையும், புகழையும் எதிர்பார்ப்பார்கள். மக்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்த அறிஞர்களிடம் மார்க்க அறிவு என்ன இருக்கும்? உலகில் பேரையும், புகழையும் எதிர்பார்த்துச் செயல்படும் மார்க்க அறிஞன் நாளை விசாரணையின் ஆரம்பத்திலேயே தலைகுப்புற இழுத்து நரகில் எறியப்படுவான் என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை உள்ளத்தில் இருத்திக் கொண்டவன் மக்களிடையே செல்வாக்குப் பெற மார்க்கத்தை வளைக்க அல்லது திரிக்க முற்படுவானா? 9:31 அல்லாஹ் கிறிஸ்துவ மார்க்க அறிஞர்களைப் பற்றிச் சொல்லியிருப்பதை எப்படி முஸ்லிம் மார்க்க அறிஞர்களும் அடிபிசகாமல் அப்படியே செய்து வருகிறார்களோ அது போலவே 9:34ல் அல்லாஹ் கிறிஸ்தவ மார்க்க அறிஞர்களிடம் எப்படிப்பட்ட துர்க்குணங்கள் அதாவது மக்களின் சொத் துக்களை தவறான முறையில் சாப்பிடுவது; அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களைத் தடுப்பது போன்ற துர்க்குணங்கள் இருந்தனவோ இருக்கின்றனவோ அதே துர்க் குணங்கள் அப்படியே எவ்வித மாற்றமும் இல்லாமல் முஸ்லிம் மார்க்க அறிஞர்களிட மும் காணப்படுகின்றன.

சத்தியத்தை வளைப்பதிலும், திரிப்பதிலும், மறைப்பதி லும் கிறிஸ்தவ மார்க்க அறிஞர்களை மிகைத்து விட்டார்கள் முஸ்லிம் மார்க்க அறிஞர்கள். அல்குர்ஆனில் கிறிஸ்தவ மார்க்க அறிஞர்களிடம் எப்படிப்பட்ட துர்க்குணங்கள், மக்களை வஞ்சிக்கும் குணங்கள், அல்லாஹ்வை மறந்த செயல்கள் காணப்படுவதாக தனது இறுதி வேதத்தில் அல்லாஹ் அறிவித்திருக்கிறானோ அவை அத்தனையும் எவ்விதக் குறைவுமில்லாமல் இன்னும் அதிகமாகவே முஸ்லிம் மார்க்க அறிஞர்களிடம் நிறைந்து காணப்படுகின் றன. காரணம்! அன்றும் இன்றும் கிறிஸ்தவ மார்க்க அறிஞர்கள் எப்படி ஈஸா(அலை) அவர்கள் போதித்த தூய ஏகத்துவ மார்க்கத் தைத் திரித்து திரியேகத்துவ மதமாக்கி அதை மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகிறார்களோ, அதேபோல் இன்று முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் இறுதி நபி(ஸல்) அவர்கள் போதித்த தூய ஏகத்துவ மார்க்கத்தை ஏகத்துவ (அத்துவைத) மதமாக்கி அதையே முஸ்லிம்களுக்கு போதித்து வருகிறார்கள். தக்லீதை விட்டுவிடுபட்டு விட்டோம். தரீக்கா-தர்கா மாயைகளை விட்டும் தெளபா செய்துவிட் டோம்; நாங்கள் குர் ஆன், ஹதீத்படி நடக் கிறோம் என்று கூறும் மார்க்க அறிஞர்களும் தங்கள் சொந்த யூகங் களையும், அனு மானங்களையும் மார்க்க மாக்கத் துணிகிறார்களே அல்லாமல் குர் ஆன், ஹதீதில் நேரடியாகக் கூறப்பட்டிருப் பவற்றை மார்க்கமாக மக்களிடம் எடுத்துச் சொல்லத் தயாரில்லை.

இந்த மார்க்க அறிஞர்களும் மக்களுக் கிடையே தங்களுக்குக் கிடைக்கும் செல் வாக்கையும், பேர் புகழையும் எதிர்பார்த் துச் செயல்படுகிறார்களே அல்லாமல், அதற் காக குர்ஆன், ஹதீதை மக்களின் மன நிலைக்கு ஏற்றவாறு திரிக்கிறார்களே, வளைக்கிறார்களே அல்லாமல், உள்ளதை உள்ளபடி எடுத்துரைக்கத் தயாராக இல்லை. உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொன்னால் மக்களின் ஆதரவு இல்லாமல் போய்விடும் என்று அஞ்சுகிறார்கள். அல்லாஹ்வுக்காக தங்களின் வாழ்க்கையை ஆக்கிக் கொள்வதற்குப் பதிலாக அடியார்களுக்காகத் தங்களின் வாழ்க்கையை ஆக்கிக் கொண்டிருக்கி றார்கள். இதுதான் இன்றைய முஸ்லிம் மார்க்க அறிஞர்களின் நிலை. எனவே முஸ்லிம்களின் பெரும்பான்மையினரின் மனோநிலை அறிந்து (இயற்கையிலேயே அவர்கள் ஷைத்தானால் தூண்டப்பட்டு இன உணர்வுக்கு ஆளாகியே இருப்பார்கள்) அவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தீர்ப்பளிக்கிறார்களே அல்லாமல் தாங்கள் அளிக்கும் தீர்ப்புக்கு குர்ஆன், ஹதீத் ஆதாரம் என்ன என்று பார்ப்பதில்லை. அவர்களின் தீர்ப்பு பொதுமக்களின் இச்சைக்கு இசைந்து காணப்படுவதால் அவர்களும் அதையே பெரிய ஆதாரமாகக் கொண்டு செயல்படுகிறார்கள். தீர்ப்பளித்தவர்களை பேரறிஞர் களாக-அல்லாமாக்களாக கொண்டாடுகி றார்கள்; அவ்வளவுதான்.

இப்போது அமெரிக்கப் பொருட்களை முஸ்லிம்கள் வாங்கக்கூடாது என்ற இந்த தீர்ப்பை குர்ஆன், ஹதீதில் உரசிப் பார்ப்போம். இந்த தீர்ப்புக்கு ஆதரவாக ஒரு குர்ஆன் ஆயத்தும் இல்லை; ஒரு ஹதீதும் இல்லை; இருக்கவும் முடியாது. காரணம் உலகிலுள்ள எல்லா நாடுகளும் அல்லாஹ் வுக்குரியனவே; எல்லா மக்களும் அல்லாஹ் வின் அடியார்களே; எல்லா மொழிகளும் அல்லாஹ்வுக்குரியனவே. இந்த நிலையில் ஒரு நாட்டை எதிர்த்து, ஒரு மொழியை எதிர்த்து, ஓர் இனத்தை எதிர்த்து துவேசத்தை வளர்க்கும் ஒரு தீர்ப்பை அல்லாஹ் எப்படி ஏற்பான்? அல்லது இந்த யூதர்களும், கிறிஸ் தவர்களும் இன்றுதான் புதிதாக முஸ்லிம்களுக்கு எதிராகக் கிளம்பி இருக்கிறார்களா? எதிராகச் சதி செய்கிறார்களா? இல்லையே? முழுமை பெற்ற இஸ்லாத்தை என்று நபி (ஸல்) அவர்கள் போதிக்க ஆரம்பித்தார்களோ அன்றிலிருந்தே அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகச் சதி செய்யவும், முஸ்லிம்களை வேரோடு வேரடி மண்ணோடு ஒழித்துக் கட்டவும் பெரும் முயற்சிகள் செய்து கொண்டுதானே இருக்கிறார்கள். இன்று யூத கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்று இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை அளிப்பது சரி என்றால் அன்றே வஹி வந்துகொண்டிருக்கும்போதே அல்லாஹ் நபி(ஸல்) அவர்களைக் கொண்டு அப்படிப்பட்ட தீர்ப்பை அளிக்கச் செய்தி ருப்பானே? அப்படி ஒரேயயாரு ஆதாரத் தைக் குர்ஆனிலிருந்தோ, ஹதீதிலிருந்தோ காட்டமுடியுமா? ஒருபோதும் முடியாது.

ஆனால் அப்படிப்பட்ட மோசமான நிலையிலும் யூத கிறிஸ்தவர்கள் பரம வைரிகளாக இருந்த நிலையிலும், நபி(ஸல்) அவர் கள் அவர்களோடு மனித நேயத்தோடு பழ கினார்கள். வியாபார கொடுக்கல் வாங்கல் வைத்திருந்தார்கள் என்பதற்கு இதோ ஆதாரம்:

அஃமஷ்(ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்ராஹீம் நகயீ(ரஹ்) அவர்களிடம் “ஸலம்’ முறையில் (பிறகு பணம் தருவதாகக் கூறி) பொருளை வாங்கும்போது அடமானம் வைப்பது குறித்துப் பேசினோம்; அதற்கு அவர்கள் சொன்னார்கள். ஆயிஷா(ரழி) அவர்களிடமிருந்து எனக்கு அஸ்வத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒரு யூதனிடம் குறிப்பிட்ட தவணை(யில் பணம் தருவ தாகக்) கூறி உணவுதானியத்தை வாங்கினார்கள். அவனிடம் (அதற்காக) இரும்புக் கவசம் ஒன்றை அடமானம் வைத்தார்கள். புகாரி : 3:2386

அன்று யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்பட்டதை விடவா இன்று அதிக மாகச் செயல்படுகிறார்கள்? அன்று நபி (ஸல்) அவர்களுக்கு இல்லாத பேரறிவா! இன்று இந்த மார்க்க அறிஞர்களுக்கு வந்துவிட்டது. அன்றாவது முஸ்லிம்கள் அனை வரும் ஓரணியில், ஒரே தலைமையில் இருந்தார்கள். அந்த நிலையில் கூட இப்படிப் பட்ட ஈனப்புத்தி முஸ்லிம்களுக்கு வரவில்லை. இன்று முஸ்லிம்கள் எத்தனைப் பிரிவுகளாகப் பிரிந்து சிதறுண்டு கிடக்கின்றனர். அரபி மொழி பேசும் அரபு நாடுகளிலா வது ஒற்றுமை காணப்படுகிறதா? அதற்காகக் குரல் கொடுக்க இந்த அறிஞர்கள் தயாரா? சுண்டைக்காய் நாடு இஸ்ரேலைச் சுற்றி இருக்கும் முஸ்லிம் அரபு நாடுகள் ஓர ணியில் ஒரே தலைமையில் ஒன்றுபட்டு விட்டால் போதுமே! அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து வாயால் ஊதினால் போதுமே! இஸ்ரேல் நாடு இருந்த இடம் தெரியாமல் போய்விடுமே அதை விட்டுவிட்டு அமெரிக்கா பொருள்களை முஸ்லிம்கள் வாங்குவதைத் தடுத்து பெரும் சாதனை செய்துள்ளார்களாம். பெருத்த நன்மை விளைந்துள்ளதாம். என்னே மதியீனம்? திருப்பதி போன்ற கோவில்களுக்குப் போகிறவனும் அதனால் நன்மை ஏற்படுகிறது என்றுதான் சொல்கிறான்; தர்க்காக்களுக்கு போகும் முஸ்லிம்களும் அதனால் நன்மை ஏற்படுகிறது என்றுதான் சொல்கிறார்கள்.

அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்யும் அத்தனை பேரும் அதனால் தங்க ளுக்கு நன்மை-இலாபம் ஏற்படுகிறது என்று கூறியே அத்தீய காரியங்களில் மூழ்கி இருக் கின்றனர். இவர்கள் கூறுவது போல் அமெரிக்கப் பொருள் பகிஷ்கரிப்பு, சாலை மறியல், பந்த், போராட்டம், உண்ணும் விரதம், உண்ணா விரதம் போன்ற குர்ஆன், ஹதீதுக்கு முரண்பட்ட செயல்களால் இவர் களுக்கு (முஸ்லிம்களுக்கு) நன்மை ஏற்படுகிறது. இலாபம் கிடைக்கிறது. அதனால் அச்செயல்கள் சரியானவை. அல்லாஹ்வுக்கு ஏற்புடையவை என்றால், கோயில், சர்ச், தர்கா மற்றும் மந்திர, தந்திரவாதிகளின் செயல்பாடுகளும் இவற்றின் மூலம் நன்மை கிடைக்கிறது; எனவே இவையும் சரியா னவை. அல்லாஹ்வுக்கு ஏற்புடையவை என்று சொல்வார்களா? என்னே மதியீனம்.

ஒரு செயலால் இவ்வுலகில் கிடைக்கும் இலாபம், நஷ்டத்தை வைத்து அச்செயல் சரி அல்லது தவறு; அதாவது மார்க்கத்திற்கு உட்பட்டது உட்படாதது என்று முடிவு கட் டுவது தவறாகும். அதைச் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதா? இல்லை தடையிருக்கிறதா? என்று பார்த்து விளங்கிச் செயல்படுகிறவனே உண்மை முஸ்லிம். லாட்டரி விழுந்தால் கோடி ரூபாய் கிடைக்கலாம். அதனால் அதைச் சரிகாண முடியுமா? மார்க்கம் என்ன சொல்லுகிறது என்று பார்த்து தீர்ப்பு அளிப்பதே மார்க்க அறிஞர்களின் கடமையாகும்.

அமெரிக்கப் பொருட்களை வாங்கு வதைத் தடுத்து தீர்ப்பளிக்கும் அறிஞர்கள், இஸ்லாத்தில் பிரிவோ, பிளவோ இல்லை; ஒரே சமுதாயம்-ஒரே உம்மத்-உம்மத்தன் வாஹிதா சமுதாயத்தைப் பிளவுபடுத்து வோர் பெரும் பாவிகள்; நாளை நரகை அடைய நேரிடும். அரபு நாடுகளின் அதிபர்களே நீங்கள் பிரதேச அடிப்படையில் உங்களைத் தனித்தனி குட்டி குட்டி நாடுகளாக பிரித்துக்கொண்டு தனித்தனி தலைமைகளில் செயல்படுவது பெருங்குற்றம்; இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் நீங்கள் செய்யும் பெருத்த துரோகம். நாளை அல்லாஹ் உங்களைச் சும்மாவிடமாட்டான். கடுமையான வேதனை உங்களுக்காகக் காத்திருக்கிறது. எச்சரிக்கை, நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்தது போல் முஸ்லிம்களாகிய நீங்கள் அனைவரும் ஓரணியில் ஒரே தலைமையில் ஒன்றுபடுங்கள். அதுதான் உங்களுக்கு அசலான வெற்றியை இவ்வுலகிலும், மறுமையிலும் ஈட்டித்தரும். அற்பமான இவ்வுலக தலைமைப் பதவிகளுக்கு ஆசைப்பட்டு முஸ்லிம் சமுதாயத்திற்குத் துரோகம் செய்யாதீர்கள். இது மாபெரும் வழிகேடு என்று உரத்துச் சொல்லும் துணிச்சல் இந்த மார்க்க அறிஞர்களுக்கு உண்டா?

ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவின ருக்கு குஃப்ர் ஃபத்வா கொடுப்பது, ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினர் பின்னால் தொழக்கூடாது என்று ஃபத்வா கொடுப் பது, இப்படி ஒரே சமுதாயத்தைப் பிளந்து கூறுபோடுவது இவை அனைத்தும் குர்ஆன், ஹதீத் போதனைக்கு மிகவும் முரண்பட்ட செயல்கள்; இன்றைய முஸ்லிம் சமுதாயம் வீழ்ச்சியின் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடப்பதே இப்படி பிரிந்து பிளவுபட்டு பலகீனப்பட்டு கிடப்பதாலேயாகும். இதுபோன்ற உண்மைகளை உரத்துச் சொல்ல இந்த முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் முன் வருவார்களா? இவர்களின் இப்படிப்பட்ட தவறான ஃபத்வாக்கள் முஸ்லிம் சமுதாயத்தை மேலும் மேலும் அழிவுப் பாதையில் இட்டுச் செல்கின்றனவே அல்லாமல் அவர்களின் மறுமலர்ச்சிக்குரிய ஃபத்வாக்கள் அல்ல என்பதை இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா?

இதோ அவர்களின் ஒரு ஃபத்வாவின் அனுபவ உண்மை. ஆங்கிலேயர்கள் நம் இந்திய நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்ய ஆரம்பித்தபோது, இந்த மார்க்க அறிஞர்கள் முஸ்லிம்கள் ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்வது ஹறாம் என்று ஃபத்வா கொடுத்தார்கள். அதன் விளைவு என்னாச்சு? இந்த அறிஞர்களை நம்பி அவர்கள் பின்னால் கண்மூடிச் சென்ற முஸ்லிம்கள் ஆங்கிலம் கற்பதைக் கைவிட்டனர். அதே சமயம் நம் தாய்த்திருநாட்டிற்கு கைபர் கணவாய் வழியாக வந்து குடியேறிய ஆரிய வர்க்கம் அக்கறையுடன் ஆங்கிலத்தைக் கற்றார்கள், உயர்ந்தார்கள். அவர்கள் ஜனத்தொகையை 3% சதவிகிதமே இருந் தாலும், ஆட்சிப் பதவிகளில் 75%க்கு மேல் கைப்பற்றும் திறமை பெற்றார்கள். இன்றும் அவர்களே இந்திய நாட்டை ஆட்சி செய்கிறார்கள். இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஆங்கிலேயர்கள் தோற்று ஜெர்மனியர்கள் இந்தியாவைக் கைப்பற்றி விடுவார்களோ என்ற ஐயப்பாடு ஏற்பட்டது. உடனே ஆரிய வர்க்கம் ஜெர்மன் மொழியை ஆர்வமுடன் கற்க ஆரம்பித்தார்கள்.

1975க்குப் பின் அரபு நாடுகளில் செல்வம் கொழிக்க ஆரம்பித்தவுடன் அவர்கள் அரபு மொழியை ஆர்வமுடன் கற்றார்கள். அதனால் அரபு நாடுகளில் இன்று ஷேக்குகளுக்கு அடுத்த பதவியில் அவர்களே அமர்ந்திருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து அரபு நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் முஸ்லிம்கள் அவர்களின் கீழே பணிபுரியும் பரிதாப நிலையிலேயே இருந்து வருகிறார்கள். இந்த முஸ்லிம்கள் விசயத்தில் அந்த மேல் அதிகாரி களின் முடிவையே அரபு ஷேக்குகளும் ஏற்கிறார்கள். இந்த நிலையில், இந்த மார்க்க அறிஞர்கள் இந்தியாவில் எங்களது விகிதாச் சாரப்படி அரசு பதவிகள் கொடுக்கப்படுவதில்லை என்று கூறி அப்பாவி முஸ்லிம்களை கொதித்தெழச் செய்து அவர்களைச் சாலை மறியல், தர்ணா, பந்த், கடை அடைப்பு, உண்ணும் விரதம், உண்ணா விரதம் என்ற குர்ஆன், ஹதீதுக்கு முரண்பட்டுச் செயல்பட வைத்து, மேலும் பொரு ளாதார வீழ்ச்சிக்கு வழி வகுக்கிறார்கள்.

அந்த முயற்சிகளில் அற்பமான ஏதாவதொரு சிறு பலன் கிடைத்து விட்டால் அதைப் பெரிதாக விளம்பரப்படுத்தி எங்க ளின் சாதனை பாரீர் என்று சிந்திக்கத் தெரி யாத மக்களை மேலும் மடையர்கள் ஆக்குகிறார்கள். அன்று இந்த மார்க்க அறிஞர்கள் ஆங்கிலம் படிப்பது ஹராம் என்று ஃபத்வா கொடுப்பதற்குப் பதிலாக முஸ்லிம்களை ஆர்வமுடன் ஆங்கிலம் படிக்க உற்சாகப்படுத்தி இருந்தால் முஸ்லிம்களும் படித்து முன்னேறி இருப்பார்களா மாட்டார்களா? அதேபோல் பிராமணர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு ஜெர்மன், அரபி என்றும் ஆர்வமுடன் படிக்க ஆர்வம் ஏற்பட்டிருக்குமா? இல்லையா? ஆங்கிலம் அல்லாஹ் வின் மொழிகளில் ஒன்று. ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் இல்லையா? ஒரு மொழி வி­யத்தில் துவேசம் பாராட்ட எந்த குர்ஆன் வசனத்திலிருந்து அல்லது ஹதீதிலிருந்து இவர்கள் ஆதாரம் எடுத்தார்கள்? காட்டுவார்களா? ஆக அன்று முஸ்லிம்களைப் படிப்பறிவு அற்ற முட்டாள்கள் ஆக்கி அதன் மூலம் இந்த மார்க்க அறிஞர்கள் ஆதாயம் அடைந்தார்கள். கத்தம், ஃபாத்திஹா, தர்கா சடங்கு, மீலாது, மெளலூது என்று மக்களை மயக்கி அறுவடை செய்தார்கள்; செய்து கொண்டிருக்கிறார்கள்.

அன்று “ஆங்கிலம் கற்பது ஹராம்’ என்று குர்ஆன், ஹதீதுக்கு முரண்பட்ட அறிவற்ற ஒரு ஃபத்வாவை வெளியிட்டது போல் இன்றும் அறிவற்ற நிலையில்தான் குர்ஆன், ஹதீதுக்கு முரண்பட்ட அமெரிக்கப் பொருள்களை வாங்கக் கூடாது என்று தீர்ப் பளித்துள்ளனர். இதன் விளைவு என்ன ஆகும் தெரியுமா? முஸ்லிம்கள் படிப்பில் குறையுள்ளவர்களாக இருந்தாலும் ஏதோ வியாபார வகையில் சமாளித்து வருகிறார்கள். இனி அதற்கும் ஆபத்து ஏற்பட்டுவிடும். காரணம் இன்று இந்திய மக்கள் உபயோகிக் கும் பொருட்களில் பெப்ஸி, கோகோ கோலா, கம்ப்யூட்டர் போன்றவை மட்டும் அமெரிக்கப் பொருட்கள் அல்ல; பெரும்பா லான பொருட்களின் உற்பத்தியில் அவர்கள் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். ஹிந்துஸ் தான் லீவர் கம்பெனி; இந்திய நாட்டு கம்பெனி அல்ல. அது ஒரு பன்னாட் டுக் கம்பெனி. இப்படி பல நிறுவனங்களில் அவர்கள் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். முஸ்லிம்கள் அந்த பொருட்களை விற்று வியாபாரம் செய்வதாக இருந்தால், முஸ்லிம்களின் பொருளாதார நிலை இன் னும் கீழே தான் போகும். ஆக முஸ்லிம்கள் மேலும் வறுமையில் சிக்க இந்த மார்க்க அறிஞர்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

அமெரிக்கப் பொருட்களை வாங்கக் கூடாது என்ற மார்க்க அறிஞர்களின் தீர்ப்பை பெரிதுபடுத்தி தங்களின் பத்திரிக் கைகளில் எழுதுகிறார்களே அவர்களால் அதை முதலில் கடைபிடிக்க முடியுமா? அவர்களின் பத்திரிக்கைகள் எப்படி வெளிவருகின்றன. அமெரிக்கத் தயாரிப்பான கம்ப்யூட்டர், வன், மென்பொருள் இவற்றை உபயோகப்படுத்தாமல் இவர்களின் பத்திரிக்கைகளை அச்சடித்து வெளி யிடட்டுமே பார்க்கலாம். இந்த அறிவு கெட்ட தீர்ப்பை பிரமாதப்படுத்தி எழுதிய முஸ்லிம் வாலிபர்களின் இன உணர்வைத் தூண்டும் ஒரு வார இதழுக்கு, ஒரு வாசகர் கேட்ட கேள்வியில், அந்த இதழ் அச்சிட பயன்படும் மைக்ரோ சாஃப்ட், அடோபி மற்றும் தகவல் கொடுக்க பெற உதவும் இண்டர்நெட் மென்பொருள்களான அமெரிக்க தயாரிப்புகளும் அதில் அடங்கு மல்லவா? என்று கேட்டிருக்கிறார்.

அமெரிக்கப் பொருள்களை வாங்கக் கூடாது என்று எப்படியயல்லாமோ அத்தீர்ப்பை நியாயப்படுத்தி எழுதிய அந்த இதழ், தன் சம்பந்தப்பட்ட இந்தக் கேள்விக்கு மட்டும் மழுப்பலான பதிலைத் தந்துள்ளது. இதிலிருந்து என்ன தெரிகிறது? ஊருக்கு உபதேசம், உனக்கு இல்லையடி கண்ணம்மா என்ற கதைதான். புரோகிதர்களின் புத்தி! இப்படித்தான் இருக்கும். இவர்களைத்தான் மார்க்க அறிஞர்களாக முஸ்லிம்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட மார்க்க அறிஞர்கள் சமுதாயத்திற்கு எங்கே நேர்வழி காட்டப் போகிறார்கள்? ஷைத்தானின் துணையுடன் நரகத்திற்குத்தான் வழிகாட்டுவார்கள்.

இவர்களின் வண்டவாளங்களை 1984லிலிருந்தே நாம் அம்பலப்படுத்தி வருகிறோம். 1984, அக்டோபர் 30, செவ்வாய்க்கிழமை தூய சின்னப்பர் இறையியல் கல்லூரியில், பல்சமய உரையாடல் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “மதங்களால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்கள்” என்ற தலைப்பில் இந்த புரோகித மார்க்க அறிஞர்களால் ஏற்படும் பிளவுகளையும், பிரிவுகளையும், சமுதாய சீரழிவு களையும் தெளிவாக எடுத்துவைத்தோம். கிறிஸ்தவ சமுதாயம்தான் அவ்வாறு சீரழிகின்றது என்றால், முஸ்லிம் சமுதாயமும் அதற்கு விதிவிலக்காக இல்லை; கிறிஸ்தவ புரோகிதர் களைவிட முஸ்லிம் புரோகிதர்கள் அதிக சீரழிவை முஸ்லிம்களுக்கு உண்டுபண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

முதலில் முஸ்லிம்களுக்கு இந்த மார்க்க அறிஞர்கள் சொல்வதை எல்லாம் வேத வாக்காக எடுக்கக்கூடாது. குர்ஆன், ஹதீத் ஆதாரம் பார்த்தே எடுக்க வேண்டும் என்ற மறுமலர்ச்சி எண்ணம் வேண்டும். எந்த விசயமாக இருந்தாலும், குர்ஆன், ஹதீத் ஆதாரம் பார்க்காமல் இந்தப் போலி மார்க்க அறிஞர்களைக் கண்மூடிப் பின்பற்றும் காலமெல்லாம் சமுதாயம் அழிவுப் பாதையிலேயே சென்று கொண்டிருக்கும். முஸ்லிம் சமுதாயம் தன்னுடைய இந்தப் போக்கை மாற்றிக் கொள்ளாதவரை அல் லாஹ் இந்த சமுதாயத்தின் வீழ்ச்சி நிலையிலிருந்து உயர்த்தப் போவதில்லை.

முஸ்லிம்கள் முதலில் அறிஞர்களின் அளவுகோலைத் தெரிந்து கொள்ளவேண்டும். முஸ்லிம்களிடையே அறிஞர்களாக பிரபல்யமாகி இருப்பவர்கள் குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் நேர்முரணான ஒன்றைச் சொன்னாலும் உடனடியாகக் கண்ணை மூடிக்கொண்டு அதை மார்க்கமாக ஏற்ப தும், அதற்கு மாறாக மார்க்க அறிஞர்களாக மக்களால் மதிக்கப்படாதவர்கள் அதாவது நாம் மேலே குறிப்பிட்டுள்ள அரபி மதரஸாக்களில் தங்களின் சில ஆண்டுகளை வீணாகக் கழிக்காதவர்கள் நேரடியாக குர்ஆன், ஹதீதைக் காட்டியே ஒன்றைச் சொன்னாலும் அதை உதாசீனம் செய்வதும் குற்றமாகும். அது கண்மூடி நிலை தக்லீத் என்பதை உணர வேண்டும்.

அவர்கள் அறிஞர்களாக இல்லாவிட்டாலும் அவர்கள் காட்டும் குர்ஆன், ஹதீதைப் பார்த்து உண்மையை விளங்கிச் செயல்பட முன்வர வேண்டும். அவர்கள் அறிஞர்கள் இல்லை என்று கூறி அவர்களின் அக்கூற்றை கண்மூடி நிராகரிப்பது அவர்களை நிராகரித்த தாக ஆகாது. குர்ஆன், ஹதீதை நிராகரித்த பெரும் குற்றத்திற்கு ஆளாகிறோம் என்பதை விளங்க வேண்டும். குர்ஆன், ஹதீதை மக்கள் முன் எடுத்து வைப்பவர்கள் மட்டுமே உண்மையான மார்க்க அறிஞர் கள். குர்ஆன், ஹதீதைப் புறக்கணித்து தங்களின் யூகங்களையும், அனுமானங்களையும் மக்களின் மனோஇச்சைக்கு ஏற்றவாறு மார்க்கமாக ஃபத்வா கொடுப்பவர்கள் ஷைத்தானின் தோழர்களாகவும், அபூ ஜஹீலின் வாரிசுகளாகவும் மட்டுமே இருக்க முடியும் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்.

குர்ஆன், ஹதீதுக்கு முரண்பட்ட இந்த ஃபத்வாவில் அவர்களின் யூகங்களையும், அனுமானங்களையும் பாருங்களேன்.

“அமெரிக்காவில் உள்ள யூத நிறுவனங் களை (கோகோ கோலா போன்றவை) மட் டும் புறக்கணிக்கலாமே! யூதர்களுக்கு நிதியுதவி அளிக்காத அமெரிக்கத் தயாரிப்பு களை ஏன் புறக்கணிக்க வேண்டும்? என்பது தான் அந்தச் சந்தேகம்.

அமெரிக்காவின் எல்லாத் தயாரிப்புகளையும் புறக்கணித்தால் அமெரிக்க மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். உலக முஸ்லிம்கள் புறக்கணிப்பதால் பல நிறுவனங்கள் மூடப்படும், அல்லது ஆள் குறைப்பு செய்யப்படும் நிறுவன உரிமையாளர்கள் மட்டுமின்றி அந்த நாட்டு மக்களும் பாதிக்கப்படுவார்கள்.

இஸ்ரேலை ஆதரிப்பதற்காக நாம் ஏன் கஷ்டப்பட வேண்டும்? நாம் ஏன் நஷ்டப்பட வேண்டும் என்ற உணர்வு அமெரிக்கா வில் மேலோங்கும். அமெரிக்கா உலகில் யாருக்கும் பயப்படாமல் இருக்கலாம். ஆனால் அமெரிக்க மக்களுக்கு நிச்சயம் பயப்படும்.

இஸ்ரேலுக்கு எதிரான கருத்துக்களும் அமெரிக்காவில் அதிகரிக்கும்போது அமெரிக்காவும் அடங்கியாக வேண்டும். தனி நிறுவனங்களின் பாதிப்பு நாட்டுக்கே பிரச்சினையாகும்.

முஸ்லிம்கள் தாமும் முழுமையாகவே புறக்கணிப்பதுடன் மற்றவர்களையும் புறக் கணிக்கச் செய்தால் மிக விரைவில் அமெரிக் காவில் மாற்றத்தைக் காணலாம்.

அமெரிக்கத் தயாரிப்பு தவிர வேறு மாற்றுப் பொருள் இல்லை என்ற நிலையிலும் ஏற்கனவே வாங்கிவிட்ட அமெரிக்கப் பொருட்களைத் தூக்கி எறிந்து நஷ்டப்படக் கூடாது என்ற நிலையிலும் தவிர, மற்ற சந்தர்ப்பங்களில் அமெரிக்காவின் அனைத்துத் தயாரிப்புகளையும் புறக்கணித் தால் நிச்சயம் அமெரிக்கா பணியும் இஸ்ரேலை அடக்கி வைக்கும்.

ஆனால் இந்தப் புறக்கணிப்பு மேலோட் டமாக இருக்கக்கூடாது. மிகத் தீவிரமாக இதை ஒவ்வொருவருக்கும் புரியவைக்க வேண்டும். இதையே பகுதி நேரப் பணியாகக் கொண்டு செயல்பட வேண்டும். நேரடி சந்திப்புகள், பிரசுரங்கள் மூலம் விளக்கிக் கொண்டே இருந்தால் தான் இந்தப் புறக்கணிப்பு பயன்தரும். ஏதோ ஓரிருவர் புறக்கணித்தால் அதனால் எந்த பயனும் ஏற்படாது.

இந்த அறிஞர்களின் யூகங்களும், அனு மானங்களும் எப்படி இருக்கிறது பார்த்தீர் ளா? வியாபார பாதிப்பு ஏற்பட்டவுடன் அமெரிக்க மக்கள் அமெரிக்க அரசை எதிர்க்க ஆரம்பித்து விடுவார்களாம். அமெரிக்க அரசுதானே பணியுமாம். என்னே அபாரமான கற்பனை? முஸ்லிமான இவர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளைப்படி தங்களின் இன உணர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லையாம். அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாக தங்களின் இன உணர்விற்கு முக்கி யத்துவம் கொடுப்பார்களாம். அமெரிக்க மக்கள் மட்டும் தங்களின் இன உணர்வுக்கோ, பிரதேச உணர்வுக்கோ ஆட்படாமல் அமெரிக்க அரசை எதிர்ப்பார்களாம். இது 21ம் நூற்றாண்டின் ஜோக்காகத்தான் இருக்கமுடியும். இவர்களுக்கு இருக்கும் இன உணர்வு, பிரதேச உணர்வு அமெரிக்க மக்களுக்கு இருக்காதா? பொருளாதார நஷ்டம் ஏற்பட்டாலும், பட்டினி கிடக்க நேர்ந்தாலும் அவர்களும் இவர்களைப் போல் தங்களின் இன, பிரதேச உணர்வுகளை விட்டுக்கொடுக்கப் போவதில்லை. தங்களின் அரசுக்கு இன்னும் உற்சாகம் கொடுத்து முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்படும்படித் தூண்டுவார்கள். இது தான் நடக்கப் போகிறது. இதோ அதற்கும் ஆதாரம்.

ஈராக் நாட்டின் அதிபர் சதாம் ஹுசைனைப் பணிய வைப்பதற்கு அமெரிக்காவும் இதேபோல் ஈராக்கிற்கு பொருளாதார தடைகளை விதித்தது. ஈராக் மக்கள் பொரு ளாதார நெருக்கடியில் சிக்கி வறுமையில் வாடுகிறார்கள். தடை காரணமாக அத்தியா வசிய மருந்துகள் கூட கிடைக்காமல் எண்ணற்ற ஈராக் குழந்தைகள் மரணத்தைத் தழு வுகின்றன. அமெரிக்க அரசு நினைத்தது போல் பொருளாதார தடையை விதிப்பது கொண்டு சதாம் ஹுஸைனை ஈராக் மக்கள் வெறுத்து அவரை ஆட்சியிலிருந்து அகற்றி விட்டார்களா? இல்லையே.

அதற்கு மாறாக அவரை ஒரு மாபெரும் வீரராக, ஈராக் மக்களின் விடிவெள்ளியாகவல்லவா அந்த மக்கள் மதித்துக் கொண்டிருக்கின்றனர். அல்லாஹ்வின் கட்டளையை மறந்து இந்த மார்க்க அறிஞர்களின் தீர்ப்புப்படி நடக்க முற்படும் முஸ்லிம்கள் மேலும், மேலும் அமெரிக்க அரசின், அமெரிக்க மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்க முடியுமே அல்லாமல், இவர்கள் நினைப்பது போல் அமெரிக்க மக்களின் ஆதாரவைப் பெறப் போவ தில்லை. இதுதான் நடக்கப்போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.

இன உணர்வைத் தூண்டி பிரதேச துவேசத்தை உண்டாக்கும் இந்தச் சீரிய பணிக்கு(?) நேரத்தை ஒதுக்கி பகுதி நேரப் பணியாகக் கொண்டு நேரடிச் சந்திப்புகள், பிரசுரங்கள் மூலம் விளக்கிக் கொண்டே இருக்க வேண்டுமாம். ஷைத்தான் எந்த அளவு இவர்களை ஆட்கொண்டிருக்கிறான் பார்த்தீர்களா? அல்லாஹ் முஸ்லிம்கள் மீது விதித்துள்ள பிரசார பணியை கூலி வாங்காமல் அல்லாஹ்வுக்காகச் செய்ய இந்த அறிஞர்கள் தயாரில்லை. அதற்கு மக்களிடம் அல்லது வெளிநாட்டு அமைப்புகளிடம் கூலியை எதிர்பார்க்கிறார்கள். அதே சமயம் இந்த துவேச பணிக்கு கூலியை எதிர்பாராமல் நேரத்தை ஒதுக்கித் தொடர்ந்து செய்ய வேண்டுமாம். “முஸ்லிம்களின் கடைகளில் பொருட்கள் வாங்காதீர்கள்’ என்று ஹிந்து மதவெறியர்கள் ஹிந்து சகோ தரர்களை தூண்டி விடுவதற்கும், அமெரிக்கப் பொருட்களை வாங்காதீர்கள் என்று இந்த முஸ்லிம் மதவெறியர்கள் முஸ்லிம் களைத் தூண்டி விடுவதற்கும் வேறுபாடு இருக்கிறதா? சிந்தியுங்கள். இரண்டும் ஒரே சிந்தனைப் போக்குடையதுதான்.

ஆனால் இந்த அறிஞர்களிடம் அதற்கும் வெவ்வேறு அளவுகோல் இருக்கிறது. முஸ்லிம்கள் கடையில் பொருட்கள் வாங்க வேண்டாம் என்று ஹிந்து மதவெறியர்கள் தடுப்பது தான் குற்றமாம்; அமெரிக்கப் பொருட்களை வாங்க வேண்டாம் என்று இவர்கள் முஸ்லிம்களைத் தடுப்பது குற்றமற்ற வீரச் செயலாம். என்னே மதியீனம் ? காஃபிர்கள் சமாதிகளிடம் சிலைகளிடம் முறையிடுவதுதான் இணை வைக்கும் குற்றம். முஸ்லிம்கள் சமாதிகளில் முறையிடுவது குற்றமற்ற வழிபாட்டிற்குரிய செயல் என்று தர்கா ஆதரவு அறிஞர்கள் கூறுவதற்கும் இவர்களின் இக்கூற்றுக்கும் வித்தியாசம் தெரிகிறதா? ஆக கூலிக்கு மாரடிக்கும் புரோகிதர்கள் மனித நேயத்திற்கு முரணாக சமுதாயத் தைப் பிளவுபடுத்துவதிலேயே குறியாக இருப்பார்கள்.

Previous post:

Next post: