விமர்சனம்! விளக்கம்!!

in 2022 அக்டோபர்

விமர்சனம்! விளக்கம்!!

எம். சையத் முபாரக்

விமர்சனம் : அன்புள்ள அந்நஜாத் ஆசிரியர் அவர்களுக்கு முஹம்மது இக்பாலின் அஸ்ஸலாமு அலைக்கும். இம்மாத (செப்டம்பர்) அந்நஜாத் இதழ் கண்டேன். அதில் தலையங்கம் “வழிகேடாய் மாறும் இயக்கங்களும், போலி சமுதாயத் தலைவர்களும்” என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்தது. “திருவை நியூஸ்’ என்ற பெயரில் ஒரு இதழில் எழுதப்பட்டிருந்த செய்தியை வெளியிட்டிருந்தீர்கள். அந்த கட்டுரை உண்மையிலேயே இன்றைய இயக்கங்களின் அதன் தலைவர்களாய் இருப்பவர்களின் நிலையை படம் பிடித்துக் காட்டியிருந்தது. மகிழ்ச்சி! ஆனால் அக்கட்டுரையின் சில வரிகள் இயக்கங்களை தூக்கிப் பிடிப்பது போல் உள்ளது. கட்டுரை இயக்கங்களை எதிர்க்கிறதா? அல்லது ஆதரிக்கிறதா? என்றே தெரியவில்லை.

அக்கட்டுரை சொல்கிறது (பக்கம் 2, அந்நஜாத்)

நிச்சயமாக இஸ்லாமிய சமூகத்தில் ஒற்றுமையோடு செயல்படும் ஒரு கூட்டமைப்பு மற்றும் இஸ்லாத்தை சரிவர செயல்படுத்தக்கூடிய இயக்கங்கள் அவசியம்தான். அப்படித்தான் ஆரம்பத்தில் பல இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் காலப்போக்கில் அதே இயக்கம் தங்களுடைய சுயநலத்திற்காக பிரிந்து மார்க்கத்தை கூறுபோடும் அளவிற்கு வந்துவிட்டால் அப்படிப்பட்ட இயக்கம் நிச்சயம் ஹராம் ஆகும்.

மேலே கண்ட வாசகங்களை திருவை நியூஸ் எப்படி எழுதினார்கள் என்றே தெரியவில்லை. இஸ்லாத்தைப் பிரிக்கும் இயக்கங்களே ஹராம். மற்ற இயக்கங்கள் ஹராம் இல்லை என்று எப்படி கூறுகிறார்கள்? இயக்கம் என்று வந்துவிட்டாலே அவை சமுதாயத்தை கூறுபோடும், பிரிக்கும், பகையை வளர்க்கும், நட்பை முறிக்கும், காலங்காலமாக நடைபெறும் இந்நிகழ்வை மனம் கூசாமல் எழுத எப்படித் துணிந்தீர்கள்? அதுவும் இச்செய்தி காலம் காலமாக இயக்க எதிர்ப்பிலே கடந்த 36 ஆண்டுகளாக தீவிரம் காட்டிய அந்நஜாத் இதழில் இடம் பெற்றது மிகவும் வருத்தத்திற்குரியது.

மேலும் அக்கட்டுரை கூறுகிறது (பக்கம் 4)

“மக்களாகிய நாம் முட்டாளாக இருப்பது வரை சமுதாயத்தின் பெயரை வைத்து இயக்கம் என்ற பெயரில் ஏமாற் றும் தலைவர்களுக்கு வாழ்வுதான். முஸ்லிம் சமுதாயத்தை ஒன்றிணைக்கத் தான் இயக்கங்கள் தேவை, மாறாக பிரிப்பதற்கு அல்ல”

மிகமிக மோசமான வார்த்தைகள். முஸ்லிம்களை இணைப்பதற்கு அல்லாஹ்வும் அவன் தூதரும் அழகிய வழி முறைகளை காட்டி விட்டார்கள். அந்த வழிமுறையே ஓர் உண்மை முஸ்லிமுக்குப் போதுமானது. போலி முல்லாக்களைப் புறக்கணித்து குர்ஆன் நபிவழியைப் பின்பற்ற மக்கள் ஆரம்பித்தாலே போதும். இயக்கங்கள் ஒழிந்துவிடும். மேலும் இதுபோன்ற தலையங்கள் காலம் காலமாக இயக்க எதிர்ப்பிலே வாழ்ந்து வரும் அந்நஜாத் வாசக சகோதரர்களை குழப்பத்திலும், தடுமாற் றத்திலும் விட்டுவிடும். ஆகையால் இது போன்ற செய்திகளை வெளியிடாமல் இருப்பதே சிறப்பு.

மேலும் காண்க: இறைநெறிநூல்: 21:92, 23:52, 21:93, 23:53, 6:153, 3:103,105, 30:32.

விளக்கம் : அன்பு சகோதரரே! உங்கள் சுட்டிக்காட்டலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! இஸ்லாத்தில் இயக்கத் திற்கு இடமே இல்லை, இஸ்லாமே சிறந்த செயல்முறை இயக்கம். அதில் பிரிவுகளுக்கு வேலையில்லை, தாங்கள் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

“திருவை நியூஸ்’ என்ற பெயரில் வெளியான செய்தி இயக்கங்களின் பின் விளைவு என்னவென்று விவரித்திருந்தது. அந்நஜாத் 30 வருடத்திற்கு முன்பு இயக்கம் பற்றி சொன்னதை இவர்கள் இப்போது தான் உணர்ந்து இருக்கிறார் கள். இதில் நல்ல இயக்கங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக எண்ணுவதால் அவர்களின் எழுத்துநடை அவ்வாறு அமைந்து உள்ளது. எல்லா இயக்கமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று விரைவில் அறிந்து கொள்வார்கள்.

வேறு பத்திரிக்கையில் வெளியான கட்டுரை என்பதை குறிப்பிட்டு இருக்கலாம், அதில் உள்ள தவறுகளை பின் குறிப்பில் சுட்டிக்காட்டி இருக்கலாம்.
இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் தவறு நேராமல் சரி செய்வோம்.

Previous post:

Next post: