கொள்கையும், பிரிவு பெயர்களுமே… முஸ்லிம்கள் பிரிவதற்கு காரணம்!

in 2023 ஜனவரி

கொள்கையும், பிரிவு பெயர்களுமே… முஸ்லிம்கள் பிரிவதற்கு காரணம்!

அபூ ஹனிபா

குர்ஆன், ஹதீத் மட்டுமே இஸ்லாம்!

இன்றைக்கு முஸ்லிம்கள் பல பிரிவுகளாக பிரிந்து செயல்படுவதற்கு காரணம் ஆளாளுக்கு ஒரு கொள்கையை உருவாக்கிக் கொண்டு அதற்கு ஒரு பெயரையும் வைத்துக் கொண்டு செயல்படுவதுதான். குர்ஆன், ஹதீத்களில் தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை கொள்கையாக உருவாக்கிக் கொண்டு செயல்படுகிறார்கள். இப்படி செயல்பட இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறதா? நிச்சயமாக இல்லை.

நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை, அவர்களுடைய வியமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன் 6:159)

சிலவற்றை ஏற்று சிலவற்றை புறக்கணிப்பது:

யூத கிறிஸ்தவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதத்தில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சில வசனங்களை எடுத்துக் கொண்டு மற்றவற்றை புறக்கணித்து வந்தார்கள். அதனால் தான் அல்லாஹ் அவர்களை சபித்தான்.

நீங்கள் நெறிநூலில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள். (அல்குர்ஆன்2:85)

குர்ஆனும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிகாட்டலும் தான் இஸ்லாம் என்றிருக்கும்போது அந்த குர்ஆன், ஹதீத்களை மட்டும் பின்பற்றாமல் குர்ஆனில் சில வசனங்களையும், ஹதீத்களில் சிலவற்றையும் எடுத்துக்கொண்டு இது தான் எங்கள் கொள்கை. இதுதான் இஸ்லாம் என்று சொல்லிக்கொண்டு முஸ்லிம்கள் தனித் தனியாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்படி செயல்பட்டதனால் தான் ஆரம்பத்தில் ´யா-சன்னி போன்ற பிரிவுகள் உருவாகியது. பிற்காலத்தில் நான்கு இமாம்களை மட்டும் பின்பற்றினால்தான் சொர்க்கம் செல்ல முடியும் என்ற கொள்கையை உருவாக்கினார்கள். இப்போது இணைவைக்கும் இமாம்கள் பின்னால் தொழக்கூடாது என்ற கொள்கையை உருவாக்கி இருக்கிறார்கள். நாளைக்கு என்ன கொள்கையை உருவாக்கப் போகிறார்களோ? அல்லாஹ்வே மிக அறிந்தவனாக இருக்கிறான்.

யூத, கிறிஸ்தவர்கள் வழிமுறை :

யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் சாணுக்கு சாண் முழத்திற்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள். அது உண்மையாகவே நடந்துகொண்டு இருக்கிறது. முஸ்லிம்களில் பெரும்பான் மையானவர்கள் தங்களுக்கு தேவையான குர்ஆன் வசனங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை விட்டுவிடுகிறார்கள்.

போர் சம்பந்தமான வசனங்களை எடுத்துக்கொண்டு ஜிஹாத் செய்யவேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்று சொன்ன வசனங்களை எடுத்து வைத்தால் அதனை ஏற்க மறுக்கிறார்கள். இணை வைக்கும் இமாம்கள் பின்னால் தொழக்கூடாது என்று சொல்கிறார்கள். இமாம்கள் பின்னால் தொழலாம் என்று ஆதாரம் வைத்தால் ஏற்க மறுக்கிறார்கள். இப்படி தங்களுக்கு தேவையான வசனங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அதற்கு ஒரு கொள்கையை உருவாக்கி கொண்டு அதற்கு ஒரு பெயரையும் வைத்துக்கொண்டு அப்பாவி முஸ்லிம்களை வழிகெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி வழிகெடுப்பவர்களை பின்பற்றும் முஸ்லிம்கள் என்றைக்கு சிந்திப்பார்கள்?

Previous post:

Next post: