மூடப்பழக்கங்களும் முஸ்லிம் பெண்களும்!

in 2023 ஜனவரி

 மூடப்பழக்கங்களும் முஸ்லிம் பெண்களும்!

ரா´தா பின்த் ஹமீது

இறை மார்க்கமாக இஸ்லாம் பரவிக்கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், மூடப்பழக்க வழக்கங்களும் ஒருபுறம் பரவிக்கொண்டுதான் வருகிறது. என்னதான் குர்ஆன், ஹதீத் புற்று ஈசல் போல் மதரஸாக்கள் வாயிலாகவும், பிரச்சாரங்கள் மூலமாகவும், மீடியாக்கள், பத்திரிக்கைகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படியாக ஏகத்துவவாதிகள் தங்களின் சேவைகளை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் மூட நம்பிக்கை பற்றி சரியான தெளிவு நமது இஸ்லாமிய சமூகத்தில் குறிப்பாக பெண்களிடத்தில் இல்லாத காரணத்தால், தமிழகத்தின் சில பகுதிகளில் காணப்படும் மூடப் பழக்கங்களை இங்கு பட்டியலிட்டு குர்ஆன், ஹதீத் அடிப்படையில் நாம் தெளிவுப்படுத்தியுள்ளோம். இதனடிப்படையில் குறை இருப்பின் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்கிறோம். நிறை இருப்பின் அது இறைவனையே சாரும்.

இறைமார்க்கமான இஸ்லாத்தை முஹம்மது(ஸல்) அவர்கள் மூலமாக எந்த ஒரு குறைபாடுமில்லாமல் பூர்த்தி செய்துவிட்டதாக இறைவன் தன் திருமறையில் கூறிக்காட்டுகிறான்.

“…இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன். மேலும் உங்கள்மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கிவிட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்…”    அல்குர்ஆன் 5:3

மேலும் கீழ்க்கண்டவாறு இறை தூதர் தனது இறுதிப் பேருரையின் போது மக்களிடம் கூறினார்கள்.

உங்களிடம் நான் இரண்டை விட்டுச் செல்கிறேன். அவற்றைப் பற்றிப் பிடிக்கும் காலமெல்லாம் நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்; அது என்னவெனில்

1.இறைவனின் வேத வரிகளான திருகுர்ஆன், 2.அடுத்து என்னுடைய வாழ்வின் நடைமுறை (அல்ஹதீத்) என்று கூறினார்கள்.

இதனடிப்படையில் நாம், தங்கத்தை தங்கம்தான் என உறுதிப்படுத்திக்கொள்ள எவ்வாறு கருப்பு உரைகல்லை தேர்ந்தெடுக்கின்றோமோ, அதேபோல் நம்முடைய செயல்களையும் கருப்பு உரைகல் எனும் குர்ஆன், ஹதீதில் தீட்டி நம்முடைய மார்க்கத்திற்கு உட்பட்ட செயல்தான் என உறுதி செய்து கொள்ளவேண்டும். அந்த வகையில் இந்த மூடப்பழக்கங்கள் எப்படிப்பட்டவை என்பதை ஆராய்வோம்.

மூடநம்பிக்கை என்றால் என்ன?

மூட நம்பிக்கை என்றால் மூடர்கள் + நம்பிக்கை. மூடர்கள் என்று முதலில் நாம் யாரை கருதுவோம்? அறிவில்லாதவர்களையும், முட்டாள்களுமே! அவர்களுடைய நம்பிக்கை. அடுத்து அது எவ்வாறு இருக்கும்? அறிவுக்கு பொருந்தக் கூடியதாக இருக்குமா? நிச்சயமாக இருக்காது. ஆனால் அதைத்தான் நாம் இன்று சிந்திக்காமல் அதன் மேல் நம்பிக்கை வைத்து வருகின்றோம்.

குர்ஆன், ஹதீத்களை தகர்த்தெரியக் கூடியது:

இந்த மூடப்பழக்க வழக்கமானது இன்று நாம் சாதாரண வார்த்தைதானே: இதனால் என்ன ஆகப்போகிறது என்று எண்ணிவிடக்கூடும். ஆனால் இந்த மூட நம்பிக்கையின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கை இறைவனின் தூய நெறிநூலான திருக்குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் பொன்மொழியையும் தகர்த்தெறியக்கூடியதாக அமைகிறது. சாதாரணமாக கீழே (தரையில்) வைக்கக்கூட நாம் அச்சப்படக் கூடிய அந்த குர்ஆனை நாம் தூக்கி எறிவோமா? ஆனால் நாம் சிந்திக்காததின் விளைவாக அப்படிப்பட்ட காரியங்களைத்தான் இன்று நாம் செய்து வருகின்றோம்.

இந்த மூடப்பழக்கமானது ஆண்களைக் காட்டிலும் பெண்களிடமே அதிகம் காணப்படுகிறது. ஏனெனில் பெண்கள் வீட்டிலே முடங்கிக்கொண்டு, தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்ற நிலையில் கிணற்றுத் தவளைகளாக உள்ள பெண்களிடத்திலேயே இவை அதிகம் காணப்படுகிறது. அவை என்னென்ன என்பதை இனி காண்போம்!

மூட நம்பிக்கை!

தமிழகத்தில் சில பகுதிகளில், யாராவது மரணித்துவிட்டால், அவருடைய வீட்டில் குறிப்பாக அவர் மரணித்த இடத்தில் விளக்கு ஏற்றிவைப்பர். காரணம் கேட்டால் மரணித்தவரின் ரூஹ்(ஆவி) அந்த இடத்தையே சுற்றிக்கொண்டு இருக்குமாம். அதுவும் 40 நாள் வரைதான் என்றும் விளக்கம் கூறுவர்.

தெளிவு : ஒரு மனிதர் மரணித்துவிட்டார் என்று சொன்னால் அவருடைய உயிரை நம் மலக்குகள் கைப்பற்றுகின்றனர். இதை இறைவன் தன் திருமறையில் கூறும்போது:

“உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், “மலக்குகள் மவ்த்து’ தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார்; பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்.’   அல்குர்ஆன் 32:11

மேலும் அந்த மனிதனுடைய உயிரை எந்த முறையில் கைப்பற்றப்படும் என்பதை நபி(ஸல்) அவர்கள் கூறும்போது ஒரு மனிதர் மரணித்துவிட்டால் அவரை அடக்கம் செய்துவிட்டதும் கருநிறமும் நீல நிறக் கண்களும் உடைய இரண்டு மலக்குகள் அவரிடம் வருவர். ஒருவர் “முன்கர்’ மற்றொருவர் “நகீர்’ இந்த மனிதர் பற்றி (முஹம்மது(ஸல்) அவர்களைப் பற்றி) நீ என்ன கருதியிருந்தாய்? என்று அவ்விருவரும் கேட்பர். அவர் அல்லாஹ்வின் தூத ராகவும், அவனது அடியாராகவும் இருக்கின்றார். அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் எவருமில்லை; நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என்று அந்த மனிதர் கூறுவார். உலகில் வாழும்போது இவ்வாறே நீ நம்பி இருந்தாய் என்பதை நாங்களும் அறிவோம் என்று அம்மலக்குகள் பதிலளிப்பர்.

பின்னர் அவரது மண்ணறை விசாலமான அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு ஒளிமயமாக்கப்படும். பின்பு அவரை நோக்கி “உறங்குவீராக!’ என்று கூறப்படும். “நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டுத் திரும்பி வருகிறேன்’ என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள் “நெருக்கமானவரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு புதுமணமகன் உறங்குவதை போல் நீர் உறங்குவீராக!’ என்று கூறுவார்கள்.

இறந்த மனிதன் முனாஃபிக்காக (சந்தர்ப்பவாதியாக) இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும்போது, அம்மனிதன் இந்த முஹம்மத் பற்றி மனிதர்கள் பல விதமாக கூறுவதைச் செவிமடுத்தேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பான்.

அதற்கு அவ்வானவர்கள் “நீ இப்படித்தான் உலகிலும் கூறிக்கொண்டிருந்தாய் என்பதை நாம் அறிவோம்’ எனக்கூறுவர். அதன் பின் பூமியை நோக்கி “இவரை நெருக்கு’ எனக் கூறப்படும். அவரது விலா எலும்புகள் நொறுங்கும் அளவிற்கு பூமி அவரை நெருக்க ஆரம்பிக்கும். அவனது இடத்திலிருந்து அவனை இறைவன் எழுப்பும் வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி), நூல்:திர்மிதி.

மேற்கண்ட ஹதீதின் மூலமாக நல்ல மனிதர்களின் உயிராக இருந்தாலும் கெட்ட மனிதரின் உயிராக இருந்தாலும் வெளிவர முடியாது என தெரிகிறது. மேலும் அல்லாஹ்தஆலா தனது திருமறையில் கூறும்போது:

“மனிதர்கள் சிலருக்கு மரணம் சம்பவிக்கும் வேளையில் இறைவா என்னைத் திரும்பவும் அனுப்பிவை! நான் தவற விட்டுவிட்ட வாழ்க்கையில் நல்லறங்களைச் செய் கிறேன் என்கிறான். இது நடக்காது. நிச்சயமாக அவனது கூற்று வெறும் வாய்வார்த்தை தான். அவர்கள் திரும்ப எழுப்பப்படும் வரை அவர்களுக்குப் பின் ஒரு திரை இருக்கும். அல்குர்ஆன் 23:99,100

மேற்கண்ட வசனங்களின் மூலமாக மரணித்தவர் நல்லவராக இருந்தாலும் தீயவராக இருந்தாலும் அவர்களுக்கும் இந்த உலகத்திற்குமிடையில் ஒரு திரையுள்ளது என இறைவன் கூறுகிறான். இதற்கு மேலும் நாம் அப்படிப்பட்ட உயிர்கள் நடமாடுகிறது என்றால் நாம் இறைவனுடைய வார்த்தையை பொய்ப்படுத்தியவர்கள் போன்றவர் ஆவோம். (நவூதுபில்லாஹ்)

அப்படிப்பட்டவர்களை விட்டும் இறைவன் நம்மைக் காப்பானாக. மேலும் அடுத்தப்படியாக இதனோடு தொடர்புடைய மற்றொரு மூடநம்பிக்கை பற்றி பார்ப்போம்.

மூட நம்பிக்கை : 2

பாங்கு சொல்லும்போது வெளியே செல்லக்கூடாது. உச்சி வெயில் நேரத்திலும், மஃரிப் நேரத்திலும் சிறுவர்களை (குழந்தைகளை) வெளியே சென்றால் பேய், பிசாசு பிடிக்கும் என்று பரவலான ஊர்களில் உள்ள மூடநம்பிக்கையாகும்.

தெளிவு : நம்மவர்கள் நம்பிக்கை கொள்ளும் வியத்தில் இந்த பேய், பிசாசு, கெட்ட ஆவி, இரத்த காட்டேரி இப்படியாக பல பெயர்கள் இடத்திற்கு தகுந்தாற்போல் சூட்டி நம்பி வருகின்றனர்.

முதலில் பேய், பிசாசு என்று சொல்லும் இந்த கெட்ட ஆவிகளைப் பற்றி பார்ப்போம். இவர்களின் கூற்றுப்படி ஒருவன் நிறைவேறாத ஆசைகளுடன் மரணித்துவிட்டால், அவனது ஆவி வெளியேறி அவர்களுக்கு பிடித்தமானவர்களை பிடித்துக் கொள்ளும் என்று நம்பி வருகின்றனர்.

இதைப்பற்றி இஸ்லாமிய மார்க்கம் தெள்ளத் தெளிவாக உள்ளது. ஏக இறை வன் ஆத்மாக்களைப் பற்றி தன் திருமறையில் கூறுமபோது.

ஆன்மாக்கள் மரணிக்கும் சமயத்திலும் மரணிக்காத ஆன்மாக்களை (உயிர்களை) அவற்றின் உறங்கும் சமயத்திலும் அல்லாஹ் கைப்பற்றிக் கொள்கிறான். எந்த ஆன்மாக்களுக்கு மரணத்தை விதித்திருக்கிறானோ அவற்றை தன் கைவசத்தில் வைத்துக் கொள்கிறான் (உறங்கும் நிலையில் கைப்பற்றிய) மற்ற ஆன்மாக்களை குறிப்பிட்ட காலம் வரை திரும்ப அனுப்புகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல அத்தாட்சிகள் உள்ளன. அல்குர்ஆன் 39:42

மேற்கண்ட இந்த வசனத்தின் மூலமாக பேய் பிசாசாக கெட்ட ஆவி வரமுடியாது என்பதற்கு இந்த வசனமே போதிய சான்றாகும். இவ்வசனத்தில் ஏக வல்லோன் கூறும்போது உயிர்களை தனது கட்டுப்பாட்டில் உள்ளது என கூறுகின்றான். இப்படி தெள்ளத்தெளிவாக கூறிவிட்ட பின்னர். இறைவனுடைய கட்டுப்பாட்டையும் மீறி அந்த உயிர்கள் வந்து உலகில் உலாவுவது என்பது நாம் இறைவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தகர்த்தெரியக் கூடியதாக அமைகிறது. அல்லது இறைவனுடைய பிடி வலுவற்றது என்பதைப் போல் ஆகிவிடுகிறது. இதன் மூலமாக நாம் இறைவனுடைய சக்தியையே குறை காண்பது போல் ஆகிவிடும்.

இப்படியயல்லாம் நாம் நம்பிக்கை வைப்பதின் மூலமாக இறைவனை நாம் புறக்கணிப்பவர்கள் போல் ஆகின்றது. இந்த மூடத்தனமான விஷயங்களை நாம் விரும்பு வதின் மூலமாகத்தான், இவை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றக்கூடிய காரியமாக அமைகிறது.

மூட நம்பிக்கை 3

வெள்ளிக்கிழமை பெருநாள் வந்து இரண்டு குத்பா நடந்தது என்றால் அந்த ஊரில் யாராவது மரணித்து விடுவார்கள். நாய் ஊளையிட்டால், கண்ணாடி உடைந் தால், பாயை நிற்க வைத்தால், யாராவது அந்த குடும்பத்தில் மரணித்து விடுவார்கள் என்று நம்பி வருவகின்றனர்.

தெளிவு : மரணம் என்பது முதலில் இறைவனின் நாட்டப்படி நடக்கக்கூடியது. இறைவன் நாடினால்தான் அந்த மனிதன் மரணிப்பான். ஒரு மனிதன் தனக்கு மரணத்தைத் தா! என்றம் கேட்கக்கூடாது. இன்னும் அவன் தற்கொலையும் செய்து கொள் ளக்கூடாது. அவ்வாறு அவன் செய்து கொண்டால் அவனுடைய தங்குமிடம் நரகம் தான் என குர்ஆன், ஹதீத் வாயிலாக அறிகிறோம்.

மனிதனுடைய உயிரையும், உடலையும் கொடுத்தது அந்த ஏக இறைவனே! அவனிடமிருந்து பெறப்பட்ட இந்த சரீரம் அமானிதமானது. அப்படியிருக்கும்போது அந்த சரீரத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடாது. இதன்மூலம் நாம் நம்மை வஞ்சித்துக் கொள்ளக்கூட அனுமதியளிக்காத இறைவன், மனிதனுடைய உயிரை வெளியேற்றக்கூடிய இறைவனின் அந்தத் தன்மையை இந்த அறிவில் குறைந்த மூடர்கள் உயிரை வெளியேற்றக்கூடிய சக்தி மற்ற படைப்பினங்களுக்கும் உண்டென நினைக்கின்றனர்.

இந்த செயல்களின் மீது அவர்களின் நம்பிக்கை இதுவரை இருக்குமென்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதே சந்தேகம் கொள்கிறார்களா? அப்படியயனில் நிச்சயமாக அவர்கள் மூடர்களே!

மரணத்தைப் பற்றி இறைவன் தன் திருமறையில் கூறிக்காட்டுகின்றான்.

“மனிதன் எந்த பூமியில் மரணிப்பான் (எப்போது மரணிப்பான்) என்பதை இறைவனே அறியக்கூடியவனாக இருக்கிறான்” அல்குர்ஆன் 31:34

இந்த வசனத்தின் மூலமாக ஒரு மனி தனின் மரணத்தை இறைவனைத் தவிர வேறு எவரும் அறிய முடியாது என தெள்ளத் தெளிவாக தெரிகிறது. மேலும் ஒரு மனிதன் கர்ப்பத்தில் தோன்றுவதற்கு முன்பே அவனுடைய ஆயுட்காலத்தை மட்டும்தான் இறைவன், மலக்குமார்களுக்கு கூறுகிறானே தவிர எந்த பூமியில் எந்த நேரத்தில் என்பதையல்ல. இந்த கர்ப்பத்தில் சாட்டப்பட்ட மலக்கைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறும்போது அல்லாஹ் கர்ப்பப்பையில் ஒரு மலக்கை சாட்டியுள்ளான். அவர் என்னுடைய இறைவா! ஆரம்பமாக உள்ளது என்னுடைய இறைவா! “அலக்’காக உள்ளது என்னுடைய இறைவா! சதைக்கட்டியாக உள்ளது என்று அம்மலக்கு கூறுவார். இறைவன் ஒரு படைப்பை பூர்த்தி செய்ய நாடினால் வானவர் கேட்பார் என்னுடைய இறைவா! இது ஆணா அல்லது பெண்ணா துர்பாக்கியவாதியா? நற்பாக்கியவாதியா? அவனுடைய ரிஸ்கு (உணவு பொருளாதாரம்) எவ்வளவு? அவனுடைய ஆயுட்காலம் எவ்வளவு என்று கேட்பார். இவ்வாறு அவன் தன் தாய் வயிற்றில் இருக்கும்போதே எழுதப்படுகிறது என்றார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரழி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறும்போது ஒரு மனிதனின் மரண நேரத்தை குறிப்பிடாமல் அவருடைய ஆயுட்காலத்தை மட்டுமே வானவர்களிடம் கூறிய இறைவன், அந்த மறைவான விஷயத்தை இறைவனை விடவும், மலக்குகளை விடவும் இந்த மூடர்கள் அறிந்துக் கொண்டார்களோ?

மறைவான வி­யங்கள் அறிந்தவன் இறைவன் ஒருவனே. அதனடிப்படையில் பார்க்கும்போது இந்த மூட நம்பிக்கைகள் அனைத்தும் சிந்திக்காமல் செயல்பட்ட மூடபழக்கவழக்கங்கள். இனியும் இதன் மேல் நம்பிக்கை வைப்பவர்கள், இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர் போன்றவராவர். இதனுடன் தொடர்புடைய அடுத்து ஒரு மூட பழக்கத்தையும் காண்போம்.

மூட நம்பிக்கை 4 :

உலை அரிசி சாப்பிட்டால், மழை பெய்யும்; கல்யாணத்தில், கை அரித்தாலும், வீட்டில் வெட்டுக்கிளி வந்தாலும் பணம் வரும் என்பதும் சில பகுதி மக்களின் மூட நம்பிக்கையில் ஒன்றாகும்.

தெளிவு : மேற்கண்ட இந்த மூடப் பழக்கமும் மறைவான விசயங்களின் அறிவு மனிதனிடம் இருப்பதாக நம்பியுள்ளது.

உலை அரிசி சாப்பிடுவதற்கும், மழை வருவதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? என்று சொன்னால் நிச்சயமாக கிடையாது. அறிவியல் ரீதியாக ஏதாவது தொடர்பு உள்ளதா என்றால் அதுவுமில்லை. அப்படியிருக்கையில் நாம் இவ்வாறு நம்பிக்கை வைப்பது சரியா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

கையரித்தால் டாக்டரிடம் செல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு அதற்கும் ஒரு மூடபழக்கத்தை புகுத்தி விட்டார்கள் இந்த முல்லாக்கள். அதுபோலவே வாயில்லா ஜீவனான வெட்டுக்கிளி அதையும் விட்டு வைப்பதில்லை இவர்கள். அது வந்தால் பணம் எந்த வழியிலாவது வரும் என்று நம்பியுள்ளனர்.

இவை இரண்டுமே மறைவான வியங்களே! ஏனெனில் உலை அரிசி சாப்பிட்டால் மழை வரும் என்றிருந்தால் ரஸூலுல் லாஹ் காலத்தில் வறட்சி ஏற்பட்ட போது தன்னுடைய தோழர்களுக்கு இவ்வாறு ஏவியிருக்கலாமே. ஏன் ஏவவில்லை? அந்த சமயத்தில் தானே மழைத் தொழுகையைக் கற்றுத் தந்தார்கள். அதையும் கற்றுத்தராமல் இருக்கலாமே. பிறகு நபி(ஸல்) அவர்களுக்கு தெரியாத ஒன்று இந்த மூடபழக்கத்தின் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு தெரிந்துவிட்டதோ? இறைவனின் தூதருக்கே தெரியாத விஷயம். இதை நம்புவதின் மூலம் நமக்கு மறைவான வி­யங்கள் புலப்பட்டு விடுமா? நிச்சயமாக கிடையாது. இந்த மழையைப் பற்றி இறைவன் தன் திருமறையில் கூறும்போது.

“அவனே மழையை(எந்த பூமியில் வேண்டுமானாலும்) இறக்குகிறான்”  அல்குர்ஆன் 31:34

அதுபோலவே அடுத்துள்ள மூட நம்பிக்கையும் கை அரிக்கும்போது பணம் வரும் என்றால், மாதச் சம்பளம் வாங்கு வோருக்கு மாதம் ஒரு முறையும் வாரக் கூலி, தினக்கூலி வாங்குவோருக்கு கை அரிக்க வேண்டும். உடலில் மற்ற உறுப்புகள் அரிக்கும்போது சொறிந்து கொள்பவன் கை அரித்தால் மட்டும் காரணம் கற்பிக்கிறான். இவ்வாறு சொல்வது சரியா? என்பதை இதன் மீது நம்பிக்கையுள்ளவர்கள் சிந்திக்கட்டும்! மேலும் இறைவன் கூறும்போது,

ஒரு மனிதன் நாளை என்ன சம்பாதிப்பான் என்பதை (இறைவனே) அறியக் கூடியவனாக இருக்கிறான். அல்குர்ஆன் 31:34

இவ்வாறு இருக்கும்போது நாம் மூடபழக்கத்தின் மீது நம்பிக்கை வைப்பது மூடர்களின் செயலாகும்.

மூட நம்பிக்கை 5 :

ஆமை, வவ்வால் வீட்டிற்குள் வந்தால் தரித்திரம், போதும்போது எங்கு போகிறாய் என்றாலும், போகும்போது தடுக்கினாலும், பூனை நடுவில் வந்தாலும், அமங்கலியை பார்த்தாலும் போகின்ற காரியம் நடக்காது என்றும் பரவலாக உள்ள மூட நம்பிக்கைகளில் ஒன்றாகும்.

தெளிவு : கெட்ட விசயங்களாக இருந்தாலும், நல்ல வி­யங்களாக இருந்தாலும் அவை அனைத்தும் இறைவனின் நாட்டப்படித்தான் விதியாகும். இந்த விதியைப் பற்றி இறைவன் தன் திருமறையில் கூறும் போது,

நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக ஒரு (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம். அல்குர்ஆன் 54:49

இவ்வசனத்தில் அல்லாஹுத ஆலாவின் படைப்பில் எது நடந்தாலும் இறைவனின் நாட்டப்படிதான் எதுவும் நடக்கும்; அவன் நாடினாலன்றி ஓர் அணுவும் அசையாது. அப்படியிருக்கும்போது நன்மையும், தீமையும் இவ்வாறுதான் நடக்கும்; இதனால்தான் நடந்தது என்று கூறுவதும் மூட பழக்கங்களில் ஒன்றாகும்.

ஒரு முஸ்லிம் நம்பிக்கை கொள்ள வேண்டிய விசயங்கள் ஆறு:

 1. அல்லாஹ் மீது நம்பிக்கை
  2. மலக்குகள் மீது நம்பிக்கை
  3. வேதங்கள் மீது நம்பிக்கை
  4. நபிமார்கள் மீது நம்பிக்கை
  5. மறுமைநாள் மீது நம்பிக்கை
  6. நன்மை, தீமை இறைவனின் நாட்டப்படி நடக்கும் என்று நம்பிக்கை வைத்தல்.

இவ்வாறு நன்மை தீமை இறைவனின் நாட்டப்படிதான் நடக்கின்றது. அப்படி நம்பிக்கை கொள்ளவில்லையயனில் அவன் முஸ்லிமே கிடையாது. மேலும் இதனுடன் தொடர்புடைய மற்றொரு மூடநம்பிக்கையைப் பற்றி அடுத்து காண்போம்.

மூட நம்பிக்கை 6

பேசும்போது தும்மினால் அது நடக்கும்; பேசும்போது பல்லி சத்தமிட்டால் நல்ல காரியம் நடக்கும். வலது கண் துடித்தால் நல்லது நடக்கும்.

தெளிவு : மேற்கண்ட மூடநம்பிக்கையும் இறைவனின் மீது வைக்கக்கூடிய நம்பிக்கையை தகர்த்தெரியக்கூடியதாக அமைகிறது. உடம்பில் ஏற்படக்கூடிய விளைவு களுக்கு எல்லாம் நன்மையுண்டு தீமையுண்டு என்று எண்ணுகின்றனர்.

பல்லியைக் கண்டால் நல்ல சகுனம் என்றும் சிலர் எண்ணி வருகின்றனர். ஆனால் பல்லியை பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறும்போது.

“பல்லியை ஒரே அடியில் கொன்றால் இவ்வளவு நன்மை என்ற அறிவிப்பின்படி முஸ்லிம், திர்மிதி, அஹ்மத் இப்னுமாஜா ஆகிய நூற்களில் இடம்பெற்றுள்ளது.

“பல்லி தீங்கிழைக்கக்கூடியது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி), நூல்: புகாரி.

மேலும் இந்த பல்லி உணவில் விழுந்து விட்டால் அதை சாப்பிடக்கூடியவர் களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற தொல்லைகள் எல்லாம் வரக்காரணமாக இருக்கக் கூடிய இந்த பல்லியையா நன்மை எனக் கருதுகிறார்கள்?

எனவே இப்படிப்பட்ட மூட நம்பிக்கை அறிவுக்கு பொருந்தக்கூடியதாக இருக்க வில்லை. ஆதலால் இவற்றை தகர்த்தெறிய வேண்டும்.

மூட நம்பிக்கை 7

பாங்கு சொல்லம்போது கட்டாயமாக தலையில் துணி போட வேண்டும். படுத்திருந்தாலும் கட்டாயமாக எழுந்து உட்கார வேண்டும்.

தெளிவு : இந்த பாங்கைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் என்ன கூறுயிருக்கிறார்கள் என்பதை முதலில் பார்ப்போம்.

பாங்கோசையை நீங்கள் கேட்டால் முஅத்தின் கூறுவது போலவே நீங்களும் திருப்பிச் சொல்லுங்கள்! பின்பு என்மீது ஸலவாத் கூறுங்கள்! என்மீது யார் ஸலவாத் கூறுகிறாரோ அவருக்கு அல்லாஹ் பத்துமடங்கு அருள் புரிகிறான். சுவர்க்கத்தில் வஸீலா எனும் உயர்ந்த பதவி ஒன்று உள்ளது. அந்த பதவியை தன்னுடைய ஒரே அடியாருக்கு மட்டுமே இறைவன் வழங்கவுள்ளான். அந்த ஒரு அடியாராக நான் இருக்க வேண்டுமென விரும்புகிறேன். யார் அந்த வஸீலா எனக்குக் கிடைக்க இறைவனிடம் துஆ செய்கிறாரோ அவருக்காக மறுமையில் நான் பரிந்துரைப்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்ப வர்: அப்துல்லாஹ் இப்னு அமீர் இப்னுல் ஆஸ்(ரழி), நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத்.

மேலும் பாங்கில் “ஹய்ய அலஸ் ஸலாத், ஹய்ய அலல் ஃபலாஹ்’ என்று முஅத்தின் கூறும்போது “லா ஹவ்ல வலாகுவ்வத இல்லாபில்லாஹ்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர்(ரழி), ஆதாரம்: முஸ்லிம்.

அது மட்டுமல்லாமல்; பாங்கு முடிந்த பின்பும் நபி(ஸல்) அவர்கள் சில துஆக்களை கற்றுத்தந்துள்ளார்கள். அவைகளை பின் தொடர்ந்து ஓதவேண்டும்.

மேலும், இந்த துஆ ஓதுவதின் சிறப்பைப் பற்றிக் கூறும்போது அவருக்கு எனது பரிந்துரை அவசியமாகிவிட்டது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்கள்: புகாரி, அஹ்மத்.

மேலும், துஆவானது பாங்கை கேட்டபோது யாரேனும் கூறினால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரழி), நூல்: முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்கள் பாங்கின் போது இதுபோன்ற சில துஆக்களை (பிரார்த் தனைகளை) கற்றுத் தந்துள்ளார்கள். ஆனால் இன்று சில பெண்களைப் பார்க்கும் போது, பாங்கு சொல்லும்போது தலையில் முக்காடு போட்டுக்கொள்வர். அதனால் முக்காடு போடுவது தவறு என்று இங்கு நாம் கூற வில்லை. முக்காடு போடுகின்றார்களே அவர்கள் அனைவரும் தொழச் செல்கிறார்களா என்று சொன்னால் நிச்சயமாக கிடையாது. அந்த நேரத்தில் அமைதியாக முஅத்தின் சொல்லும் பாங்கையாவது கேட்கிறார்களா என்றால் அதுவும் கிடையாது. தலையில் துணியை போட்டுக்கொண்டு பேசிக் கொண்டே இருப்பார்கள். நிறுத்தவே மாட்டார்கள். இப்படித்தான் ரஸூலுல்லாஹ் கற்றுக் கொடுத்தார்களா என்று இதன் மூலமாவது சிந்தித்து பார்க்க வேண்டும். அடுத்து அவர்கள் சொல்வது என்னவெனில் பாங்கு சொல்லும்போது படுத்திருக்கக்கூடாது.

பாங்கின்போது நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றோம். இந்த பிரார்த்தனை(துஆ)யை எவ்வாறு எல்லாம் செய்யலாம் என இறைவன் தன் திருமறையில் கூறும்போது.

நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப்புறங்களில்(சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்… அவர்களுடைய இறைவன் அவர்களின் இப்பிரார்த்த னையை ஏற்றுக்கொண்டான். பார்க்க: அல்குர்ஆன் 3:191 முதல் 195.

மேற்கண்ட இந்த குர்ஆன் வசனத்தின் மூலமாக எந்த நிலையில் இருப்பினும் மறவாமல் மனிதன் துதிப்பதை இறைவன் ஏற்றுக் கொள்ளக்கூடியவன் என்றிருக்கும் போது, இந்த மூடபழக்கத்தை கூறியே இவர்கள் மார்க்கத்தை கடினமாக்கி விட்டனர். இதன் மூலமாக மூடநம்பிக்கை என்பது மூடர்கள் அதாவது அறிவில்லாதவர்களின் நம்பிக்கை எனத் தெளிவாக தெரிகிறது.

நன்மையை கருதி கூறியதை மூடப் பழக்கமாக்குவது :

அன்று வாழ்ந்த சில வயது முதிர்ந்தவர்கள் நல்லதிற்காக சில விசயங்களை கூறும்போது அதை இளம் வயதினர் அன்று முதல் இன்று வரை உதாசீனப்படுத்தக் கூடியவர் களாகத்தான் அதிகம் காண்கிறோம். அவ்வாறு இருக்கும்போது அவர்கள் நல்ல விசயங்கள் சொல்லும்போது அதை கேட்பது நல்லது. ஆனால் அக்காலத்தில் இவ்வாறு அறிவுரை கூறும்போது அதை கேட்பதற்கு ஆளில்லை. அதனால் அவர்கள் (பெரியார்கள்) அதை செய்தால் துரதிஷ்டம். இதை செய்தால் பரகத் இல்லாமல் போய்விடும் என்றும் கூறி இளைய தலைமுறையை பயத்தில் விட்டுச் சென்றுவிட்டனர். அதுவே பின்னால் வரக்கூடிய தலைமுறை யினரும் சொல்லி இஸ்லாத்திற்கே குந்தகம் விளைவிக்கச் செய்துவிட்டனர். எனவே அப்படிப்பட்ட மூட பழக்கவழக்கங்கள் என்னென்ன என்பதை இனி காண்போம்.

மூட நம்பிக்கை 8

நகத்தை மண்ணில் போட்டு மூடவேண்டும். இல்லையயனில் கியாமத் நாளில் அவனுக்கு எதிராக அது சாட்சி சொல்லும் என்றும் நகத்தை கடிக்கக்கூடாது என்றும் சில பகுதிகளில் காணப்படும் மூடப் பழக்கங்களாகும்.

தெளிவு : இந்த மூட நம்பிக்கையில் இன்னும் சிலவற்றை சேர்த்து “இரவில் நகம் வெட்டக்கூடாது’ என்று கூறுவதும் உண்டு.

முதலாவதாக இதை எதற்காகச் சொல்லி இருப்பார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். முன்னோர்கள் சில காரணங் களை கூறியுள்ளனர். அதாவது நகத்தை வெட்டி கீழே போட்டால் சிறு குழந்தைகள் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும். இதனால் பல விளைவுகள் எற்படும். அதன் காரணத்தாலும், இரவில் எதற்காக வெட்டக் கூடாது என்றால் இக்காலத்தில் இருப்பது போன்ற நகவெட்டி (ஹிழிஷ்யி ளீற்மிமிer) அன்று இருந்திருக்காது. எனவே அவர்கள் பிலேடுகளாலும், கத்திரிக்கோல்கள் போன்ற இந்த கருவிகளைக் கொண்டே வெட்டிக்கொள்வர். அதுபோலவே இன்றுள்ள மின்சார விளக்குகளும் அன்று கிடையாது. அவ்வாறு இருக் கும்போது வெளிச்சம் அதிகமில்லாத அந்த நேரத்தில் வெட்டினால் அதோடு சேர்த்து உன் விரலையும் வெட்டிக்கொள்வாய். ஆகையால் அவ்வாறு செய்ய வேண்டாம் எனத் தடுத்திருப்பார்கள்.

இதுவே நாளடைவில் இவ்வாறெல்லாம் மூடநம்பிக்கையால் தோரணம் கட்டப்பட்டுவிட்டது. இந்த நகம் என்பது அழிந்த செல்களால் வளரக்கூடியவை. எனவே அவற்றை வளரவிடாமல் வெட்டிவிடவேண்டும். இதனைப் பற்றியும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இஸ்லாத்தில் மனிதனுடைய இயற்கையான சுன்னத்துகள் பத்து அவை :

 1. பல் துலக்குவது
  2. வாய் கொப்பளிப்பது
  3. மூக்கை சுத்தம் செய்வது
  4. நகத்தை வெட்டுவது
  5. மூட்டுக்களை கழுவுவது
  6. மலம், ஜலம் கழித்துவிட்டு (மர்ம ஸ்தானத்தை) சுத்தம் செய்வது.
  7. மீசையை கத்தரித்தல்
  8. அக்குள் முடியை களைதல்.
  9. மர்ம உறுப்பின் முடியை களைத்தல்
  10. தாடியை வளர்த்தல்

அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி), நூல்:முஸ்லிம்.

நகத்தை வெட்டுவது சுன்னத்தான செயல்களில் ஒன்றாக இருக்கிறது. இன்னும் மேற்காணும் சுன்னத்துகளை எல்லாம் கூறி யிருக்கும் ரஸூலுல்லாஹ்(ஸல்) நகத்தை வெட்டுவது இரவில் கூடாத செயல் என்று கூறியிருப்பார்களே! ஏன் கூறவில்லை? எனவே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நகத்தை வெட்டுவதற்கு தடையில்லை. ஆனால் நகத்தை வெட்டிய பின் காலில் குத்தாதவாறு, குழந்தைகள் நடமாடக் கூடிய இடத்தில் போடாதவண்ணம் இருந்தால், அதுவே சிறந்த செயலாகும்.

மாற்று மதக் கலாச்சாரத்தால் விளைந்த மூட பழக்கவழக்கங்கள் :

மாற்றுமத கலாச்சாரம் இன்று ஏன் நம்முடைய சமுதாயத்தை சேர்ந்த மக்களில் சிலரும் கடைபிடித்து வருகிறார்கள். இதற் குரிய காரணங்கள் பல இருக்கலாம். இருப் பினும் இரண்டு காரணங்கள் முக்கியமானவை. 1. முஸ்லிம்கள் மாற்று மதத்தினர் உள்ள சூழலில் சேர்ந்து வாழும்போது, 2.தற்போது நாம் இஸ்லாமியர்களாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் பல தலைமுறைக்கு முன்னால் வாழ்ந்த இந்தியர்கள் அனைவரும் முஸ்லிமாக இருந்ததில்லை. அவர்கள் முஸ்லிம்களாக, ஆரம்ப மார்க்கம் இஸ்லாத்திற்குத் திரும்பியவர்களே! இன்றுள்ள முஸ்லிம்களிடம் அவர்களின் பழைய கலாச்சாரம் வாழையடி வாழையாக பின் தொடர்கிறது.

அவ்வாறு இருக்கும் நிலையில் இதுதான் இஸ்லாம். இதுதான் இஸ்லாமிய (நேரான) வழி என அறிந்த பிறகு அதிலேயே ஊறியிருப்பது முறையற்றதாகும்.

மாற்றுமத கலாச்சாரத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும்போது: “நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்’. அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

மூட நம்பிக்கை : 9

வீடு குடிபோகும்போது இரத்த பலி கொடுக்க வேண்டும். வீட்டிற்கு முன்னால் திருஷ்டிக்கல் தொங்கவிடுவது. வீடு குடி போகும்போது தவிடு, விளக்கு, தண்ணீர் குடம், குர்ஆன் ஒருவர் பின் ஒருவராக எடுத்துச் செல்வது, வாயில்படி வைத்து அன்று சந்தனம் தெளித்து ஃபாத்திஹா ஓதுவது.

தெளிவு : மேற்காணும் அனைத்தும் மூட பழக்கமாகும்; அறிவுக்கு பொருந்தக்கூடிய தாகவும் அமையவில்லை. அது மட்டுமல்லா மல் மார்க்கத்திற்கு ஒவ்வாத செயலாகவும் உள்ளது. இந்த திருஷ்டிக்கல்லை வீட்டின் முன்னால் தொங்கவிட்டு இதன்மூலம் நமக்கு தீமை வராமல் தடுத்துக்கொள்ளும்; யாருடைய கண்ணேரும் படாது என்று அந்த சாதாரணமான கல்லின் மீது நம்பிக்கை வைக்கின்றனர். அப்படி என்றால் அல்லாஹ்வின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லையா? அல்லது நம்பிக்கை இழந்து விட்டார்களா? இவர்களே இவ்வாறு இருந்தால் அவர்களின் பிரார்த்தனைகளையும், கோரிக்கைகளையும் இறைவன் ஏற்பானா? நிச்சமாக கிடையாது. மேலும் அந்தக் கல்லை கட்டிவிட்டால் அந்த வீட்டிற்கு எந்த ஒரு இழப்பும் வராது என உத்திரவாதம் கொடுக்க முடியுமா? நிச்சயம் முடியாது. அவ்வாறு இருக்கும்போது இந்த கண் திருஷ்டிக்காக்க அல்லாஹ்வின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழக்கும் செயல்களை செய்து வருகின்றனர்.

கண் திருஷ்டிக்காக நபி(ஸல்) அவர்கள் ஒரு பிரார்த்தனையை கற்றுத் தந்துள்ளார்கள். அது பின்வருமாறு :

“அபூது பி கலிமாதில்லாஹித் தாம்மா மின் குல்லி ஷைத்தானின் ஹாம்மா வமின் குல்லி அய்னின் லாம்மா”. ஆதாரம்: முஸ்லிம்

பொருள் : அல்லாஹ்வின் நிறைவான வார்த்தைகள் மூலம் ஒவ்வொரு ஷைத்தானின் தீங்கை விட்டும் வி­ ஜந்துக்களின் தீங்கை விட்டும் கெட்ட கண் (திருஷ்டி) பார்வையை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

இவற்றின் மூலமாக அனுமதிக்கப்பட்ட முறையில் நாம் இறைவனிடம் பிரார்த்தனை (துஆ) செய்யலாம். இதன் மூலமாக இறைவன் மீது நாம் கொண்டுள்ள நம் பிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை தொழும்போது நாம் சொல்கிறோம்.

இறைவா! உன்னையே நாங்கள் வணங் குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகின்றோம் என்றும் பிரார்த்திக்கின்றோமே அது வாயளவில் மட்டும்தானா? மனதளவிலில் லையா? என்பதை சிந்திக்க வேண்டும். இறைவன் தன்னுடைய திருமறையில் கூறும்போது கூட,

“இஸ்லாத்தில் நீங்கள் முழுமையாக நுழைந்து விடுங்கள்”. என்றே கூறிக்காட்டுகின்றான். அவ்வாறு இருக்கும்போது அரைகுறையாக இருப்பதே அதற்கு முக்கியக் காரணம். ஒரு கிணற்றை முழுமையாகத் தான் தாண்டவேண்டும். நான் பாதியைத்தான் தாண்டுவேன் என்றால் வீழ்ச்சி நமக்குத்தான். இறைவன்மீது முழுநம்பிக்கை வைக்கவேண்டும். அதுபோல தாயத்து தகடு போன்றவைகளை சிலர் வீட்டில் வைப்பர். அதன் மூலமாக பரகத் ஏற்படும் என்று. இவையும் மார்க்கத்திற்கு புறம்பான செயல் தான். நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களிடம் கூறும்போது,

மந்திரிக்கச் செல்லாமலும், சகுனம் பார்க்காமலும், மருத்துவத்திற்காக உடம்பில் சூடிட்டுக் கொள்ளாமலும் தங்கள் இறைவன் மீது உறுதியான நம்பிக்கை வைத்த 70 ஆயிரம் பேர் தமது சமூகத்தில் விசாரணையின்றி சுவர்க்கம் செல்வார்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

மேற்கண்ட ஹதீதின் மூலமாக இறைவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் அவன் மீது நம்பிக்கை இழத்தலின் காரணமாகத்தான், இந்த மூட பழக்கங்கள் இஸ்லாமிய மக்களிடையே ஊடுருவியுள்ளன. எனவே இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளைத் தெரிந்து மார்க்கத்திற்கு உட்பட்ட செயல்களைச் செய்து மற்றவர்களையும் செய்யத்தூண்டி ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக!

Previous post:

Next post: