புரோகிதரிசம்!

in 2023 பிப்ரவரி

புரோகிதரிசம்!

அபூ அப்தில்லாஹ்

ஜனவரி 2023 தொடர்ச்சி…

நெறிநூல் வசனங்களை மக்களிடம் ஓதிக்காட்டத்தானே செய்கிறோம்! எங்கே மக்களிடமிருந்து மறைக்கிறோம்? அவற்றை நிராகரிக்கிறோம்? என்று இந்தப் புரோகிதர் கள் மக்களை ஏமாற்றலாம். நெறிநூல் வசனங்களில் உள்ளது உள்ளபடி இவர்கள் மக்களுக்குக் கூறுவதும் இல்லை. அதன்படி அவர்கள் நடப்பதும் இல்லை. மக்களை நடக்கத் தூண்டுவதும் இல்லை. அதற்கு மாறாக நெறிநூல் வசனங்களுக்கு உள்விளக்கம், வெளிவிளக்கம் என்று இருக்கிறது. அலிஃபுக்கு ஆயிரம் அர்த்தம் இருக்கிறது. அரபிமொழி கற்றவர்களுக்கு மட்டுமே அது விளங்கும் என்று மக்களை ஏமாற்றி, அந்த நெறிநூல் வசனங்கள் கூறும் கருத்துக்கு நேர்முரணாக கருத்தைக் கூறி மக்களை வழிகெடுப்பார்கள். உதாரணமாக 7:3 வசனம் யாரையும் பாதுகாவலர்களாகக் கொண்டு அவர்களைப் பின்பற்றக்கூடாது; அல்லாஹ்வால் இறக்கப்பட்டதை நேரடியாக விளங்கிப் பின்பற்ற வேண்டும் என்று கட்டளையிடுகிறது.

அக்கட்டளைக்கு மாறாக இமாம்களை பாதுகாவலர்களாகக் கொண்டு அவர் களைப் பின்பற்றச் (தக்லீது) சொல்வார்கள். 7:55 வசனம் துஆ பணிவாகவும், அந்தரங்கமாகவும் இருக்க வேண்டும்; வரம்பு மீறக் கூடாது என்று கட்டளையிடுகிறது. அதற்கு முரணாக கூட்டாகச் சப்தமிட்டு ஆமீன் கோரஸாகக் கூறி கூட்டு துஆ செய்யவேண்டும் என்று மக்களை வரம்பு மீறச் செய்து வழிகெடுப்பார்கள். 7:205 இறைக் கட்டளை திக்ரு மனதிற்குள்ளும், மிக்க பணிவோடும், அச்சத்தோடும் உரத்த சப்தமின்றி செய்யவேண்டும் என்று கட்டளையிடு கிறது. அதற்கு முரணாக சப்தமிட்டு, காட்டுக் கூச்சல் போட்டு கூட்டாக திக்ரு செய்யச் செய்து மக்களை வழிகெடுப்பார்கள்.

33:36 இறைக்கட்டளை அல்லாஹ்வும், அவனது தூதரும் கட்டளையிட்டு விட்டால் அதில் வேறு கருத்துக் கொள்ள உண்மையான விசுவாசிகளுக்கு சிறிதும் அனுமதி இல்லை. அது பகிரங்கமான வழிகேடு என்று தெளிவாகக் கூறுகிறது. இக்கட்டளைக்கு முரணாக இந்தப் புரோகிதர்கள் வண்டி வண்டியாக வேறு கருத்துக்களைக் கூறி மக்களை வழிகெடுக்கிறார்கள்.

6:159, 30:32 இறைக்கட்டளைகள் முஸ்லிம் சமுதாயத்தில் பிரிவினை இல்லவே இல்லை; பிரிவினையை ஏற்படுத்துகிறவர் கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கி றார்கள் என்று நெற்றிப்பொட்டில் அடித் தால் போல் கூறுகிறது. இப்புரோகிதப் பண் டாரங்களோ இறைவனது இக்கட்டளைக்கு முரணாக முஸ்லிம் சமுதாயத்தை மத்ஹபு, தரீக்கா, இயக்கம், கழகம், குழு என்று பல வாறாகப் பிரித்து இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதோடு, மக்களை பகிரங்கமான வழிகேட்டில் இட்டுச் செல்கிறார்கள்.

இப்படி இந்தப் புரோகிதர்கள் அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கவும், அல்லாஹ் ஹராமாக்கியதை ஹலாலாக் கவும் செய்கிறார்களே அல்லாமல், நெறிநூல் வசனங்கள் கூறும் உண்மைக் கருத்தைக் கூறுவதில்லை. இந்தப் புரோகிதர்கள் மக்களிடம் தங்களை ரப்புகளாக ஆக்கிக் கொள்கின்றனர். இதையே அல்லாஹ் 9:31 வசனத்தில் சுட்டிக்காட்டுகிறான்.

ஹிந்துப் புரோகிதர்கள் தங்களை கட வுளின் அவதாரங்களாகவும், சந்நிதானங்க ளாகவும், கிறிஸ்தவப் புரோகிதர்கள் பாவமன்னிப்பு அளித்து இரட்சிக்கும் இரட்சகர் களாகவும் முஸ்லிம் புரோகிதர்கள் தங்களை ஹழரத், சந்நிதானம் என்றும் மவ்லவி அல் லாஹ்வைச் சார்ந்தவர் அதாவது இறைத் தன்மை உள்ளவர் என்றும் மெளலானா, பாதுகாவலர், இரட்சகர் என்றெல்லாம் தங்களை தாங்களே புகழ்ந்து கொண்டும் அழைத்துக் கொண்டும் மக்களை வழிகேட்டில் இட்டுச் செல்கிறார்கள்.

2:159 வசனத்தில் அல்லாஹ்வே மனிதர்களுக்காக இறைவசனங்களை விளக்கி விட்டதாக உறுதியாகக் கூறுகிறான். அவனது இறுதித் தூதர் அந்த இறை வசனங்களை நடைமுறைப்படுத்திக் காட்டிச் செயல்முறையிலேயே விளக்கிக் காட்டி விட்டார்கள். அதற்குப் பிறகும் இந்தப் புரோகிதப் பண்டாரங்களின் விளக்கங்கள் மக்களுக்குத் தேவையா? ஆக அவர்களின் விளக்கங்கள் உண்மை விளக்கங்கள் அல்ல; மக்களை வழிகேட்டில் இழுத்துச் சென்று அவர்களை நரகில் தள்ளும் ஷைத் தானுக்குத் துணைபோகும் செயலே அல்லாமல் வேறில்லை.

அரபி மொழி கற்றவர்களே மார்க்கத் தைச் சரியாக விளங்கமுடியும் என்று பிதற் றும் புரோகித வர்க்கம் அபூஜஹீலின் வாரிசு களாக இருக்க முடியுமே அல்லாமல் நபி மார்களின் வாரிசுகளாக ஒருபோதும் இருக்க முடியாது. நபி(ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக உறுதியாகக் கூறி மக்களை விழிப்படையச் செய்துள்ளார்கள். அதாவது “உண்மை அறிஞர்கள் நபிமார்களின் வாரிசு களாவர்; நபிமார்கள் தீனாரையோ, திர் ஹத்தையோ விட்டுச் செல்லவில்லை’ என்று திட்டமாகக் கூறி இருக்கிறார்கள். இந்த ஹதீஃதின் பிற்பகுதியை இந்தப் புரோகிதர் கள் மறைத்து விடுவார்கள். காரணம் இந்த ஹதீதுக்கு முரணாக அவர்கள் தொண்டை தொழிலாக்கி தங்களின் தொப்பையை நரக நெருப்பைக் கொண்டு நிரப்புவதால்தான் ஹதீதின் பிற்பகுதியை மறைக்கிறார்கள்.

தொண்டைத் தொழிலாக்கி தொப்பையை நரக நெருப்பால் நிரப்புகிறவர்கள் எப்படி நபிமார்களின் வாரிசாக இருக்க முடியும்? எந்த நபியாவது தமது தூய பணி யைத் தொழிலாக்கி அதன் மூலம் பிழைப்பு நடத்தியதாக ஆதாரம் உண்டா? தொண் டைத் தொழிலாக்கிக் கொண்டவர்கள் புரோகிதத் தலைவர் அபூஜஹீலின் வாரிசாக மட்டுமே இருக்க முடியும். வழிகேட்டின் தலைவன் ஷைத்தானின் வாரிசாக மட் டுமே இருக்க முடியும். அதனால்தான் இந் தப் புரோகிதர்களிடமும் அபூ ஜஹீலுக்கு இருந்த அரபி படித்த தலைக்கணம், ஆண வம் அப்படியே நிறைந்து காணப்படுகிறது.

ஆக புரோகிதர்கள், அபூ ஜஹீலின், ஷைத்தானின் வாரிசுகளே அல்லாமல், நபிமார்களின் வாரிசுகள் அல்லவே அல்லர்.

இந்தப் புரோகிதர்கள் அடையப் போகும் இழிவையும், கேவலத்தையும், நரக வேதனையையும் 2:79,159,161,162,3:77, 5:13, 9:9 குர்ஆன் வசனங்களை ஓதி விளங்கு கிறவர்கள் கண்டிப்பாக அறியமுடியும்.

புரோகிதர்கள் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்பிற்குப் பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் என்பதையும், அதற்குக் காரணம் அவர்கள் உண்மையுடன் இறக்கப்பட்ட வேதத்தில், இவர்கள் தங்கள் சொந்தக் கற்பனையைப் புகுத்தி, கருத்து வேறுபாடு கொண்டு பெரும் பிளவிலேயே நிலைத்திருப்பதாகும் என்பதையும் கூறும் குர்ஆன் வசனங்கள் பாரீர்:

அவர்கள்தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்பிற்குப் பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள்; இவர்களை நரக நெருப்பை சகித்துக் கொள்ளச் செய்தது எது? அல்குர்ஆன் 2:175

இதற்குக் காரணம் நிச்சயமாக அல்லாஹ் இந்த நெறிநூலை உண்மையுடன் அருள் செய்தான்; நிச்சயமாக இன்னும் இறை நெறிநூலிலே கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) பெரும் பிளவிலேயே இருக்கின்றனர். அல்குர்ஆன் 2:176

இந்தப் புரோகிதர்களுக்கு இன்னொரு தலைக்கணமும் உண்டு. அவர்கள் தங்களை அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று பகல் கனவு காண்கின்றனர். அத னால்தான் தங்களை அவதாரம், சந்நிதானம், பாதிரி, ஹழரத், மவ்லவி, மவ்லானா என்று அழைத்துக் கொள்வதுடன், இறைவன் தங்களைக் கடுமையாகத் தண்டிக்க மாட்டான் என்றும் இறுமாந்து இருக்கின்றனர். அவர்களின் இந்த மேலெண்ணம் தவறு என்று கூறும் குர்ஆன் வசனம் பாரீர்:

“ஒருசில நாட்கள் தவிர எங்களை நரக நெருப்புத் தீண்டாது’ என்று அவர்கள் கூறு கிறார்கள்; இறைவனிடமிருந்து அப்படி ஏதேனும் உறுதிமொழி பெற்றிருக்கிறீர்களா? அப்படியாயின் இறைவன் தன் உறுதி மொழிக்கு மாற்றம் செய்யவே மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா? என்று (நபியே!) நீர் கேளும்”. அல்குர்ஆன் 2:80 (பார்க்க: 2:79,80)

\இந்தப் புரோகிதர்களின் கொள்கை கோட்பாடுகள் ஒன்றாக இருந்தாலும் ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளாக இருந்து மக்களை வழிகெடுத்து நரகில் கொண்டு சேர்ப்பதாக இருந்தாலும், அவர்களுக்குள்ளும் போட்டி, பொறாமையும் ஒருவரை ஒருவர் மிகக் கடுமையாகத் தாக்கி விமர்சித்துக் கொள்வதும் சர்வசாதாரணம். இந்தப் புரோகிதர்கள் அற்ப இவ்வுலக ஆதாயத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பதால், இவ்வாறு போட்டிப் பொறாமையு டன் செயல்படுகின்றனர். ஒவ்வொரு மதத்து புரோகிதர்களும் தாங்கள்தான் நேர்வழியில் இருந்து கொண்டு தங்களை நம்பி கண்மூடிப் பின்பற்றும் மக்களை சுவர்க்கத் தில் கொண்டு சேர்ப்பதாக, மோட்சம் அடையச் செய்வதாக மார்தட்டிக் கொள்வார்கள். தங்களையும், தங்களைப் பின்பற்றுகிறவர்களையும் தவிர எஞ்சியுள்ள மக்கள் அனைவரும் வழிகேடர்கள்; நரகம் புகுவார்கள் என்று இவ்வுலகிலேயே தீர்ப்பும் அளிப்பார்கள். இவ்வாறு வழிகேடர்கள் என்று தீர்ப்பு அளிக்கப்படாத எந்த ஒரு புரோகித வர்க்கமும் இவ்வுலகில் இல்லை.

ஆனால் அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் கூறி இருப்பது போல் இறைப் பணியை தொண்டைத் தொழிலாக்கித் தொப்பையை நிரப்பும் புரோகிதர்கள் அனைவரும் வழிகேடர்களே! நரகிற்கு விறகுக் கட்டைகளாக ஆகக் கூடியவர்களே. முஸ்லிம் புரோகிதர்களிலும் ஒவ்வொரு பிரிவினரும் மற்றப் பிரிவினர்களை காஃபிர்கள், இறை நிராகரிப்பாளர்கள் அவர்கள் பின்னால் தொழக்கூடாது என்று “மதத் தீர்ப்பு அளிப்பவர்களாகவே உள்ளனர். “அவன் கிடக்கிறான் குடிகாரன்; எனக்கு இரண்டு மொந்தை ஊற்று’ என்ற குடிகாரனின் பேச்சு போலவே இந்தப் புரோகிதர்களின் இந்தத் தீர்ப்புகள் உள்ளன.

முஸ்லிம் புரோகிதர்கள் சமுதாயத்தை மவ்லவிகள் “அல்லாஹ்வைச் சார்ந்தவர்கள் என்றும், அவாம்கள், பகுத்தறிவற்ற ஆடு, மாடுகளைப் போன்ற சிந்தனைக் குருடர்கள் என்றும் இரு பிரிவினர்களாக பிரித்து வைத்துக் கொண்டு சமுதாயத்தின் 2 சதவீத புரோகிதக் கூட்டம் மார்க்கத்தைச் சொல்லும் வர்க்கம் என்றும், எஞ்சிய 98 சதவீத அவாம்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த புரோகித மவ்லவி வர்க்கம் கூறுவதை அப் படியே வேதவாக்காக எடுத்து நடக்க வேண்டும் என்றும் துர்போதனை செய்கின்றனர். கொயபல்ஸ் தத்துவப்படி குர்ஆனை அவாம்களால் விளங்க முடியாது என்று தொடர்ந்து கூறி அவர்களின் சிந்தனையை மழுங்கடித்து, அல்லாஹ்வின் தெளிவான நேரடியான போதனைகளை எடுத்து நடக்கவிடாமல் ஆக்கியுள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் முரணான இவர்களின் சுய ஊகங்களை எடுத்து நடக்க வைத்துள்ளனர். மக்களிடம் இன உணர்வுகளையும், மத உணர்வுகளையும் (மார்க்க உணர்வு அல்ல) தூண்டிவிட்டு முஸ்லிம்களில் மாற்றுப் பிரிவினர்களுடனும், மாற்று மதத்தினர்களுடனும் சதா சண்டையிட்டு, குழப்பத்தையம், அமைதி இன்மையையும் ஏற்படுத்துவதே இப்புரோகிதர்களின் குறிக்கோள். “ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக் குக் கொண்டாட்டம்’ என்பது போல் இப்புரோகித கூத்தாடிகளும் ஊர் இரண்டு படுவதையே பெரிதும் விரும்புகின்றனர்.

ஹிந்துப் புரோகிதர்கள் எப்படி அப்பாவி தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஹிந்துத்துவ மதவெறியைத் தூண்டி பெரும் கலவரங்களையும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற தீச்செயல்களையும் செய்ய வைக்கின்றனரோ, அதேபோல் முஸ்லிம் மதப்புரோகிதர்களும் அப்பாவி அவாம்களை, மவ்லவி அல்லாதவர்களைத் தூண்டிவிட்டு குர்ஆன், ஹதீஃத் போதனைகளுக்கு முற்றிலும் முரணான பல தீச்செயல்களைச் செய்ய வைக்கின்றனர். தூண்டி விடுவதும் இப்புரோகிதர்களே! விஷயம் முற்றி ஆபத்து வரும்போது அந்த அப்பாவிகளை தங்களை விட்டுக் கழற்றி விடுவதோடு காட்டிக் கொடுத்து விட்டு தப்பிவிடுவதும் இப்புரோகிதர்களே!

1992க்குப் பிறகு அதற்கு முன்னால் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தில் பல வன்முறைச் சம்பவங்கள், குண்டு வெடிப்புகள், கொலைகள், கொள்ளைகள் போன்ற சமூகக் கொடுமைகள் வளர்ந்துவர ஹிந்துப் புரோகிதர்கள் எந்த அளவு காரணகர்த்தாக்களாக இருந்தார்களோ, இருக்கிறார்களோ அந்த அளவு முஸ்லிம் தவ்ஹீத் புரோகிதர்களும் காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள். ஆபத்து வரும்போது இவர்களால் தூண்டிவிடப்பட்டு மத உணர்வுக்கும், இன உணர்வுக்கும் ஆள்பட்டு செயல் பட்டவர்களைக் காட்டிக் கொடுத்துவிட்டு, இவர்கள் தப்பித்துக்கொள்வதும் இந்தப் புரோகிதர்களின் கொள்கை கோட்பாடுகளில் உள்ளதுதான். காட்டிக் கொடுப்பது என்ன? அதைவிட கேவலமான இழிசெயல்களிலும் தங்களின் அற்ப உலக சுகத்திற்காக ஈடுபடவும் இப்புரோகிதர்கள் தயங்கமாட்டார்கள். அப்பாவி மக்கள் இந்தப் புரோகி தர்களின் சுயநலப் போக்கை அறியாமல் அவர்களைக் கண்மூடிப் பின்பற்றுவதுதான் வேதனை மிக்க நிகழ்ச்சியாகும். அறுப்பதற்கு இட்டுச்செல்லும் கசாப்புக் கடைக்காரர் பின்னால் செல்லும் செம்மறி ஆடுகள் போல், மக்கள் கூட்டம் நரகிற்கு இட்டுச் செல்லும் இந்தப் புரோகிதர்கள் பின்னால் கண்மூடிச் செல்கிறார்கள். ஆட்டிற்காகவது ஆறாவது அறிவான பகுத்தறிவு இல்லை.

எனவே ஆறாவது அறிவைப் பெற்றுள்ள மனிதன் ஐயறிவு மிருகத்தைத் தன் பின்னால் அறுபட வரவைக்க முடிகிறது. ஆனால் ஆறறிவு படைத்த மக்கள் கூட்டம், அதே ஆறறிவு படைத்த புரோகிதர்கள், தங்களை நரகிற்கு இட்டுச் செல்லும். பரிதாப நிலையை உணர முடியாமல், அவர்கள் பின்னால் செல்லுவது வேதனையிலும், வேதனை மிக்க நிகழ்ச்சியாகும். அப்படிப்பட்ட மக்களைத்தான் “அவர்கள் ஆடு, மாடுகளைப் போன்றவர்கள்; இல்லை! அதை விட கேடுகெட்டவர்கள்’ என்று அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகிறான்போலும் (பார்க்க 7:179, 25:44) ஆக ஷைத்தானுக்கு வழிபட்டு தங்களையும் தங்களை நம்பி தங்கள் பின்னால் வரும் மக்கள் கூட்டத்தையும் நரகிற்கு இட்டுச்செல்லும் புரோகிதர்களும் அல்லாஹ் குறிப்பிட்டுக் கூறும் மிருகங் களைவிட கேடுகெட்ட நிலையிலேயே இருக்கின்றனர்.

அல்குர்ஆனில் பெரும்பாலும் யூத, கிறிஸ்தவ மதப்புரோகிதர்கள் செய்து வரும் இறைவனது கட்டளைகளுக்கு முரண்பட்ட குற்றச்செயல்கள்தான் விவரிக்கப்பட்டுள்ளன. எனவே முஸ்லிம் மதப் புரோகிதர்கள் அவை எங்களைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவதுண்டு. குற்றச்செயல் எனக் குறிப்பிடப்படும்போது, அதை யார் செய்தாலும் குற்றம்தான். யூத, கிறிஸ்தவர்கள் செய்தால் குற்றம்; அதையே முஸ்லிம்கள் செய்தால் குற்றமில்லை என்ற வாதம் முட்டாள்தனமான வாதமாகும். லூத் (அலை) அவர்களின் சமூகம் ஓரினப் புணர்ச்சி குற்றத்தில் ஈடுபட்டதாக அல்லாஹ் அல்குர்ஆன் 29:29ல் குறிப்பிடுகிறான்.

முஸ்லிம் புரோகிதர்கள் அக்குற்றத்தைச் செய்து கொண்டு அது லூத்(அலை) அவர்களது சமூகம் செய்தால்தான் குற்றம்; நாங்கள் செய்தால் குற்றமில்லை என்று வாதிட்டால் அவர்களை வடிகட்டிய முட்டாள்கள் என்றே கூறமுடியும். எனவே ஒரு குற்றச் செயல் எந்த சமூகம் செய்த குற்றச் செயலாக அல்குர்ஆனில் குறிப்பிட்டிருந்தாலும், அதே குற்றச் செயலை ஆதத்தின் சந்ததிகளில் யாருமே செய்யக்கூடாது. அதிலும் குறிப்பாக அல்குர்ஆனை இறுதி வேதமாக ஒப்புக்கொண்டுள்ள முஸ்லிம்கள் கண்டிப்பாகச் செய்யக்கூடாது. அதிலும் முஸ்லிம் புரோகிதர்கள் மிகக் கண்டிப்பாகச் செய்யக் கூடாது. ஆனால் அதற்கு மாறாக முஸ்லிம் புரோகிதர்கள் செயல்பட்டு, அல்லாஹ்வுக்கு எதிரியாகவும், ஷைத்தானுக்கு துணைவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

அதிலும் மற்ற மதங்களிலுள்ள புரோகிதர்களை விட முஸ்லிம் மதப் புரோகிதர்கள் கேடிலும் மிகக் கேடுகெட்டவர்கள் என்று உறுதியாகக் கூறலாம். காரணம் மற்ற மதங்களிலுள்ள புரோகிதர்களும், அவர்களைக் கண்மூடிப் பின்பற்றுகிறவர்களும் தங்களின் செயல்பாடுகளின் நல்லது கெட்டதை அலசி ஆராய உரைத்துப் பார்க்க உரைகல்லான கலப்படமில்லாத, மனித அபிப்பிராயங்கள் கலவாத தூய்மையான வேதங்கள் அவர்களிடம் இல்லை. ஹிந்து, யூத, கிறிஸ்தவ மதங்களிலுள்ள வேதப் புத்த கங்கள் மனிதக் கரம்பட்டு கரைபடிந்து விட்டன. அவற்றின் தூய நிலையை இழந்துவிட்டன. அவற்றிலுள்ளவைகளில் எவை எல்லாம் இறைவனால் அருளப்பட்ட உண்மையான வேதக் கருத்துக்கள்? எவை எல்லாம் இப்புரோகிதர்களின் முன்னோர்களால் கற்பனையாக புகுத்தப்பட்டவை? என்பதை அறிய முடியாத பரிதாப நிலையில் சகல மதத்தினரும் இருக்கின்றனர். எனவே அவர்களின் வழிகேட்டிற்கு ஓரளவு நியாயமான காரணம் இருக்கிறது.

ஆனால் முஸ்லிம் மதப்புரோகிதர்களுக்கு என்ன கேடு வந்தது? அல்லாஹ்வால் இறுதி நெறிநூலாக அருளப்பட்ட அல்குர்ஆன், ஒரு புள்ளி கூட இந்தப் புரோகிதர்களின் முன்னோர்களாலும், இவர்களாலும் மாற்றப்பட முடியாத அதிஅற்புத நிலையில் இறைவனால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகம் அழியும் வரை பாதுகாக் கப்படும். மேலும் இறைவனது அறிவிப்புகள் தெள்ளத்தெளிவாகவும், நேரடியாகவும் இருக்கின்றன. அது போதாதென்று தமது 23 வருட வாழ்க்கையை அல்குர்னாகவே ஆக்கிக் கொண்ட நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகள் தெளிவாகப் பதிந்து பாதுகாக்கப்பட்டுள்ள நிலையில், ஆதாரபூர்வமான ஹதீத்கள் இருக்கின்றன. முஸ்லிம்கள் தங்களின் ஒவ்வொரு செயல்பாட்டின் உண்மை நிலையை, அல்லாஹ் வால் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையை, இறுதி நெறிநூலான அல்குர்ஆனைக் கொண்டும், மிகச் சரியாக ஆதாரப்பூர்வமான ஹதீத்களைக் கொண்டும் அறிந்து கொள்ள முடியும்.

இந்த நிலையில் அல்குர்ஆனின் நேரடி போதனைக்கும், நபி(ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான நடைமுறைக்கும் முரணான வழிகேட்டில் இட்டுச் செல்லும் தவறான போதனைகளை இந்தப் புரோகி தர்கள் விடாப்பிடியாக ஏன் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்? இதிலிருந்தே அவர்களின் புரோகிதப் புத்தி குன்றிலிட்ட தீபம் போல் ஒளிவிடுகிறதே! அவர்கள் ஏன், மக்களை குர்ஆன் உங்களுக்கு விளங்காது; ஹதீஃத் உங்களுக்கு விளங்காது; அவற்றை விளங்க அரபி மொழி ஞானம் வேண்டும்; குர்ஆன், ஹதீஃத் மொழி பெயர்ப்புகளைப் பார்த்து அவற்றை விளங்க முடியாது என்று கொயபல்ஸ் தத்துவப்படி மீண்டும் மீண்டும் அழுத்தமாகச் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார்கள் தெரியுமா? அந்த இரகசியத்தை விளங்கிக் கொள்ளுங்கள். மக்கள் குர்ஆன், ஹதீஃத் மொழி பெயர்ப்புகளை நேரடியாகப் பார்த்து சிந்திக்க ஆரம்பித்து விட்டால், இந்தப் புரோகிதர்களின் தில்லுமுல்லுகளும், மக்களை நரகிற்கு இட்டுச் செல்லும் ஷைத்தானின் ஏஜண்டாகச் செயல்பட்டு வயிறு வளர்ப்பதும் எளிதாகப் புரிந்துவிடும். மக்கள் இப்புரோகிதர்களைப் புறக்கணித்து விடுவார்கள். சத்தியத்தை நேர்வழியை மிக எளிதாக விளங்கிச் செயல்பட ஆரம்பித்து விடுவார்கள். அதற்கு முட்டுக் கட்டையாகத்தான் இப்புரோகிதர்கள் குர்ஆன், ஹதீத் உங்களுக்கு விளங்காது. அரபி படித்த மவ்லவிகளுக்கே விளங்கும் என்று கீரல் விழுந்த இசைத்தட்டு போல் கோரஸ் பாடுகிறார்கள். மக்களிடமிருந்து சத்தியத்தை மறைப்பது புரோகிதர்களின் கொள்கை கோட்பாடுகளில் மிகமிக முக்கிய ஒன்றாகும்.

எனவே முஸ்லிம், சகோதர சகோதரி கள் இந்த மவ்லவி புரோகிதர்களின் வசீகர வலையிலிருந்து விடுபடாதவரை அவர்களுக்கு ஈடேற்றமோ, விமோசனமோ இல்லவே இல்லை. இவ்வுலகிலும் இழிவும், கேவலமும், நீங்காத துன்பத் துயரப்படலம் தான் மறுமையிலோ அதைவிட இழிவும் கேவலமும் அடைவதோடு மீட்சியே இல்லாத நரகை அடைய நேரிடும். முஸ்லிம்களே விழித்தெழுங்கள். ஈமானுடைய உணர்வு (இன உணர்வோ, மத உணர்வோ அல்ல) பெறுங்கள். மவ்லவி புரோகிதர்களை முற்றிலுமாக ஓரங்கட்டுங்கள். இவ்வுலகிலும், மறுமையிலும் வெற்றி பெறுங்கள். அல்லாஹ் அருள்புரிவானாக.

Previous post:

Next post: