பொறுமையாளர்களின் சிறப்புக்கள்! 

in 2023 ஜுன்

பொறுமையாளர்களின் சிறப்புக்கள்! 

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 

மே  மாத  தொடர்ச்சி….

அபூசினான்(ரஹ்) அவர்கள் கூறியதாவது: இறந்துபோன எனது மகன் சினானை நான் அடக்கம் செய்தேன். அப்போது கப்ரில் இருந்த என்னை அபூதல்ஹா அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் எனது கையைப் பற்றித் தூக்கி வெளியேற்றிவிட்டுநான் உமக்கு ஒரு நற்செய்தி சொல்லட்டுமா?’ என்று கேட்டார்கள் நான் சரி சொல்லுங்கள் என்றேன் அவர் கூறினார். ஓர் அடியாரின் குழந்தை இறந்துவிட்டால் அல்லாஹ் உயிரைப் பறிக்கும் வானவரை அழைத்து மரணத்தின் வானவரே! எனது அடியாரின் குழந்தையைக் கைப்பற்றினீரா? அவரது கண் குளிர்ச்சியை அவரது இதயக் கனியைக் கைப்பற்றினீரா? என்று கேட்பான். அதற்கு அவர் ஆம்! என்பார். அப்போது எனது அடியார் என்ன கூறினார்? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு இறைவா! அவர் பொறுமை கொண்ட வராக உன்னைப் புகழ்ந்தார். அத்துடன்இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜி ஊன்என்று கூறினார் என்பார். அப்போதுஎனது அடியாருக்காகச் சொர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புங்கள் அதற்குப் பொறுமைக் கானபுகழ் இல்லம்எனப் பெயரிடுங்கள் என்று அல்லாஹ் வானவர்களிடம் கூறுவான் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, முஸ்னத் அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம் 1, பக்கம்: 500-505)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: இறை நம்பிக்கை யுள்ள எனது அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றி விடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும் என்று (அபூ ஹுரைரா(ரழி), புகாரி: 6424, ரியாளுஸ் ஸாலிஹீன் : 32)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான், நான் எனது அடி யானை, அவனுடைய பிரியத்திற்குரிய இரண்டு கண்களாகிய பெறுமதியான பொருட்களைப் பறித்துக் கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானேயானால், அவற்றுக்குப் பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன். அவனுடைய பிரியத்திற்குரிய இரண்டு  பொருள்கள் என்பது அவரின் இரண்டு கண்களைக் குறிக்கும் என்பதாக அனஸ் இப்னு மாலிக்(ரழி), அவர்கள் அறிவித்தார்கள்: (புகாரி: 5653, ரியாளுஸ்ஸாலிஹீன்:34)

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரழி) கூறினார்: நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம்பிளேக்எனும் கொள்ளை நோய் குறித்துக் கேட்டேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். அதுதான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்பும் வேதனை யாக இருந்தது. ஆனால், இப்போது அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கருணையாக ஆக்கிவிட்டான். எனவே, இறைவனின் அடியார் ஒருவர் கொள்ளை நோய் பரவும்போது தமக்கு அல்லாஹ் எழுதிய விதிப்படியே அல்லாமல் எந்த நோயும் தம்மைத் தீண்டாது என்ற மன உறுதிபூண்டவராகத் தமது ஊரிலேயே பொறுமையுடன் நிலைகுலையாமல் இருப்பாராயின் அவருக்கு உயிர்த் தியாகிக்குக் கிடைக்கும் அதைப் போன்ற நன்மை மறுமையில்  கிடைக்கும்.  (புகாரி:5734, 3474)

அதாஉ இப்னு அபீரபாஹ்(ரஹ்) கூறினார். இப்னு அப்பாஸ்(ரழி) என்னிடம், சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா? என்று கேட்டார்கள். நான், “ஆம்காட்டுங்கள் என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதான் அவர். இவர் ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் வந்து, நான் வலிப்பு நோயால் அடிக்கடிப் பாதிக்கப் படுகிறேன். அப்போது எனது உடலிலிருந்து ஆடை விலகி உடல் திறந்து கொள்கிறது. எனவே எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த் தியுங்கள் என்றார். நபி(ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். இதற்குப் பதிலாக உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்கு குண மளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன் என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், வலிப்பு வரும் போது ஆடை விலகி) எனது உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளா மல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். அதாஉ இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) கூறினார். அப்போது நான் உம்மு ஸுஃபரைப் பார்த்தேன். அவர்தாம் கஅபாவின் திரை மீது சாய்ந்தபடி அமர்ந்து உள்ள கறுப்பான உயரமான இப்பெண் ஆவார் என்றார்கள். (புகாரி: 5652, முஸ்லிம் : 2576, ரியாளுஸ் ஸாலிஹீன்: 35)

இறைவழியில் ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் ஒவ்வொரு காயமும் ஈட்டியால்குத் தப்படும்போது இருந்தது போல் மறுமை நாளில் அப்படியே இருக்கும். அதிலிருந்து இரத்தம் பீறிட்டு ஓடும். ஆனால் அதன் நிறம் இரத்தத்தினுடைய நிறமாக இருந்தாலும் அதன் வாடை கஸ்தூரி வாடையாகவே இருக்கும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரழி) அறிவித்தார். (புகாரி: 237)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின்  பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. (அபூ ஸயீத்த அல்குத்ரீ(ரழி), அபூ ஹுரைரா(ரழி), ஆயிஷா(ரழி), புகாரி:5640,5641,5642, முஸ்லிம்: 2573, ரியாலுஸ்ஸாலிஹீன் : 37)

யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை அல்லாஹ் சத்திய சோதனைக்கு உள்ளாக்குகின்றான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறி னார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி:5645) அவர் துன்பங்களைப் பொறுமையோடு சகித்துக் கொள்வதன் மூலம் அவருடைய (சிறிய) பாவங்கள் மன்னிக்கப்பட்டுத் தூய்மை அடைவார். அதனால் மறுமையில் தண்டனையின்றி சொர்க்கம் புகுவார். (புகாரி: 5645இன் சிறு குறிப்பு)

ஓர் இறை விசுவாசியான ஆண் மற்றும் பெண்ணிற்கு அவரது உயிர், மற்றும் அவரது குழந்தை, அவரது சொத்து என அனைத்திலும் சோதனை இருந்து கொண்டே தான் இருக்கும். இறுதியாக அவர் சோதனைகள் மூலம் மன்னிப்பு ஏற்பட்டதால் குற்றம் ஏதுமின்றி அல்லாஹ்வை சந்திப்பார் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறி னார்கள். (அபூஹுரைரா(ரழி), திர்மிதி:2399, ரியாளுஸ்ஸாலிஹீன்:49) அத்துடன்,

இறைவனின் மன்னிப்பும், கிருபையும் கிடைக்கும் :

இன்னும் எவர்கள் துன்பங்களுக்கும் சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்ட பின்னர் தமது வீடுகளைத் துறந்து ஹிஜ்ரத் செய்து வெளிக்கிளம்பினார்களோ பின்பு, அறப்போர் புரிந்தார்களோ இன்னும் பொறுமையைக்கையாண்டார்களோ, அவர்களுக்கு உதவி செய்ய நிச்சயமாக உம் முடைய இறைவன் இருக்கின்றான். இவற்றுக்குப் பின்னரும், உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின் றான். (16:110) நபித்து வத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் மக்காவில் ஒடுக்க்கப்பட்டவர் களாகவும் தமது சமூகத்தாரிடையே தாழ்த்தப்பட்டவர்களாகவும் இருந்து வந்தனர். அச்சமூகத்தார் ஏற்படுத்திய சோதனைகளுக்கு ஆட்பட்டு சில இறை மறுப்புச் சொற்களை வேறு வழியின்றி வெளிப்படுத்தி அவர்களுக்கு ஒத்துப்போயினர்.

பின்னர் புலம் பெயர்ந்ததன் மூலம் விடுதலைக்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது அல்லாஹ்வின் அன்பையும், மன்னிப்பையும் கருதித் தமது சொந்த ஊர் களையும், குடும்பங்களையும், செல்வங்களையும், துறந்து அறிமுகமற்ற வேற்றூருக் குச் சென்று இறை நம்பிக்கையாளர்களின் அணியில் இணைந்து கொண்டனர். அவர் களுடன் சேர்ந்து இறை மறுப்பாளர்களை எதிர்த்து அறப்போர் புரிந்தனர். அப்போது ஏற்பட்ட துன்பங்களை, துயரங்களை, சகித்துப் பொறுத்துக் கொண்டார்கள். எனவே தான் மக்கா வாழ்க்கையின் சோதனைகளின்போது இணை வைப்பாளர்கள் சொன்னபடி சில இறை மறுப்புச் சொற்களை மொழிந்த அச்செயலுக்குப் பின்னரும் அவர்களைத் தான் மன்னித்ததாகவும் மறுமை நாளில் அவர்களுக்குக் கருணை புரிவதாகவும் அல்லாஹ் தெரிவிக்கின்றான். (தஃப்சீர் இப்னு கஸீர் பாகம் 5, பக்கம் 127, 128) அவர்களுக்கு,

நிச்சயமாக  அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் :

இன்னும் எவர்கள் துன்பங்களுக்கும், சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டபின் தமது வீடுகளைத் துறந்து ஹிஜ்ரத் செய்து வெளிக்கிளம்பினார்களோ பின்பு, அறப்போர் புரிந்தார்களோ இன்னும் பொறுமையைக் கையாண்டார்களோ, அவர்களுக்கு உதவி செய்ய நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், கிருபையுடைய வனாகவும் இருக்கின்றான்.  16:110)

பொறுமை கொண்டோர் மறுமை நாளில் அல்லாஹ்வை  காண்பார்கள் :

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரழி) அவர்கள் அறிவித்தார்கள். நாங்கள், இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், மேகமூட்டமில்லாது வானம் தெளிவாக இருக்கையில் சூரியனையும் சந்திரனையும் பார்க்க நீங்கள் முண்டியடித்துக் கொண்டு சிரமப்படுவீர்களா? என்று கேட்டார்கள். நாங்கள், இல்லை என்று பதிலளித்தோம். இவ்விரண்டையும் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப் போன்றே அந்த நாளில் உங்களுடைய இறைவனைக் காணவும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள் என்று கூறிவிட்டு(ப் பின்வருமாறு) விளக்கினார்கள்.

(மறுமை நாளில்) அழைப்பாளர் ஒருவர், ஒவ்வொரு சமுதாயத்தாரும் தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களைப் பின் தொடர்ந்து செல்லட்டும் என்று அழைப்பு விடுப்பார். அப்போதுசிலுவைவணங்கிகளின் தங்களது சிலுவையுடனும்சிலைவணங்கிகள் தங்களது சிலைகளுடனும், ஒவ்வொரு பொய்த் தெய்வ வழிபாட்டார்கள் தத்தம் கடவுள்களுடனும் செல்வார்கள். முடிவில் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டு நன்மைகளும் புரிந்து கொண்டிருந்த நல்லவர்கள், அல்லது அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த பாவிகள், மேலும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். பின்னர் நரகம் கொணரப்பட்டுக் கானலைப் போன்று அவர்களுக்குக் காட்டப்படும். அப்போது யூதர்களிடம், நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்கப்படும் அதற்கு அவர்கள், நாங்கள் அல்லாஹ்வின் மகன் உஸைர் அவர்களை வணங்கிக் கொண்டிருந்தோம் என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கு மனைவியோ மக்களோ இருக்கவில்லை என்று சொல்லப்படும் பிறகு அவர்களிடம் இப்போது நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? என்று கேட்கப்படும். அதற்கவர்கள், எங்களுக்கு குடிப்பதற்கு நீர் புகட்டுவாயாக! என்பார்கள். அப்போது அவர்களிடம் கானலைப் போன்று நரகம் காட்டப்பட்டு குடியுங்கள் என்று கூறப்படும். அதைக் குடிக்க முனையும்போது அவர்கள் நரகத்தில்  விழுந்து  விடுவார்கள்.

பின்னர் கிறிஸ்தவர்களிடம், நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்கப்படும் அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் மகன் மஸீஹை (ஈசாவை) நாங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம் என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கு மனைவியோ மக்களோ இருக்கவில்லை என்று கூறப்பட்டபின் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், நீ எங்களுக்கு நீர் புகட்டுவதையே நாங்கள் விரும்புகின்றோம் என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம் கானலைப் போன்று காட்சி தரும் நரகத்தைக் காட்டிகுடியுங்கள்என்று கூறப்படும். அப்போது நரகத்தில் அவர்களும்  விழுந்துவிடுவார்கள்.

Previous post:

Next post: