விரலால் சுட்டிக் காட்டுவதுதான் நபிவழி!
K.M. முஹம்மது இஸ்மாயில் நூரீ
தொழுகை இருப்பில் தவ்ஹீது சகோதரர்கள் பிடிவாதமாக விரலை அசைத்து தொழுகின்றனர். சிலர் வேகமாகவும், சிலர் மெதுவாகவும், சிலர் வட்டமாகவும் அசைக்கின்றனர். 1995லிருந்து விரலை அசைப்பது நபிவழி அல்ல. நீட்டுவதுதான் நபிவழி என்று ஆதாரப்பூர்வமான ஹதீத்களை எடுத்துக்காட்டிய பிறகும் கூட தவ்ஹீது சகோதரர்கள் பிடிவாதமாக விரலை அசைத்து தொழுகின்றனர்.
மே 2014 அந்நஜாத் மாத இதழில் அந்நஜாத் ஆசிரியர் மர்ஹும் அபூ அப்தில்லாஹ் அவர்கள் விரலை அசைப்பது ஷைத்தானின் செயலாகும் எனக் கூறி அதற்கான ஆதாரத்தையும் குறிப்பிட்டுள் ளார். விரலை நீட்டுவது தான் நபிவழியாகும். இதற்கான ஆதாரம் முஸ்லிம், அபூ தாவூது, நஸாயீ, திர்மிதி போன்ற ஹதீத் (தமிழ்) நூல்களில் பதிவாகி உள்ளது.
நபி(ஸல்) அவர்கள் தமது சுண்டு விரல், மோதிர விரல், இவைகளை மடக்கிக் கொண்டு பெரு விரலையும் நடுவிரலையும் வட்டமாக்கிக் கொண்டு சுட்டுவிரலை உயர்த்தி அசைத்துப் பிரார்த்தித்ததை நான் கண்டேன் என்று வாஇல் இப்னு ஹுஜ்ர் (ரழி) அறிவித்த செய்தி நஸயீ 879,1251 ஆகிய இரு ஹதீத்கள் வந்துள்ளது. இந்த இரு ஹதீத்களிலும் ஆஸிம் இப்னு குலைப் இடம் பெறுகிறார். இவர் தனித்து அறிவிக்கும் ஹதீதை ஆதாரப்பூர்வமான ஹதீதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஹதீத் கலையின் அறிஞர் இப்னுல் முதைனி அறிவித்துள்ளார்.
தொழுகையில் நான்கு இடங்களில் கையை உயர்த்தவேண்டும் என்ற ஆதாரப்பூர்வமான ஹதீதுக்கு மாற்றமாக உயர்த்த வேண்டியதில்லை என்ற ஹதீதில் ஆஸிம் இடம் பெறுகிறார். இந்த ஹதீதின் தரம் குறித்து ஹதீத் கலையின் அறிஞர்கள் குறை கூறி உள்ளனர். ஆகவே நபி(ஸல்) அவர்கள் கையை உயர்த்தவில்லை என்ற ஹதீதை நிராகரிக்கின்றனர்.
இன்னும் விரலசைப்பு பற்றிய ஹதீதின் அறிவிப்பாளர்கள் 14 நபர்கள். 13 நபர்கள் நபியவர்கள் விரலால் சுட்டிக் காட்டினார்கள் என்று அறிவித்துள்ளனர். ஸாயிதா என்பவர் மட்டும் அசைத்தார்கள் என்று கூறுகிறார். ஆகவே இதில் சந்தேகம் வருகிறது. நபி(ஸல்) அவர்கள் இதற்கான தீர்வைத் தந்துள்ளார்கள். “உமக்கு சந்தேகம் தருபவற்றை நீர் விட்டுவிடும் சந்தேகமற்ற விசயங்களின்பால் சென்றுவிடும் என்று கூறினார்கள். (திர்மதி 2518)
இன்னும் வாஇல் இப்னு ஹுஜ்ரால்(ரழி) அறிவிக்கும் நஸயீ 1246, 1247 ஆகிய இரு ஹதீத்களில் நபியவர்கள் சுட்டுவிரலால் சைகை (இஷாரா) செய்தார்கள் என்று பதிவாகியுள்ளது.
இப்னு உமர்(ரழி) அவர்களால் அறிவிக்கம் ஹதீத் நபியவர்கள் சுட்டுவிரலை உயர்த்தி பிராத்திப்பார்கள் என பதிவாகி உள்ளது. நஸயீ 1148
அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரழி) நபி யவர்கள் தொழுகை இருப்பில் பிரார்த்திக்கும் போது தமது விரலால் சமிக்கை செய்வார்கள். விரலை அசைக்கமாட்டார்கள். நஸாய் 1248வது ஹதீதிலும் நபி(ஸல்) அவர்கள் தமது சுட்டுவிரலால் சமிக்ஞை (இஷார) செய்வார்கள்.
நுமைர் அல்குஸாயீ(ரழி) நபி(ஸல்) அவர்கள் வலக்கையை வலது தொடையில் வைத்து தமது விரலால் (இஷாரா) சமிக்ஞை செய்ததை நான் கண்டேன் என்று அறிவித்த ஹதீத் நஸயீல் 1254வது ஹதீதாக பதிவாகியுள்ளது.
இப்னு ஜுபைர்(ரழி) அவர்களால் நபி (ஸல்) அவர்கள் தமது விரலால் இஷார சமிக்ஞை செய்தார்கள் என அறிவித்த ஹதீத்கள் முஸ்லிமில் 1014, 1015வது ஹதீதாக பதிவாகியுள்ளது.
ஒரு நபித்தோழர் தமது இரு விரல்களால் சமிக்ஞை செய்ததைக் கண்ட நபியவர்கள் ஒருமைப்படுத்து என்று சொன்னதாக நஸயீல் 1255வது ஹதீதாக இடம் பெற்றுள்ளது. இதை அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவித்தார்கள்.
அபூ ஹுமைத்(ரழி) அபூ உசைத்(ரழி) சஹ்ல் இப்னு சஅத்(ரழி) முஹம்மது இப்னு மஸ்லமா(ரழி) ஆகிய நபித்தோழர்கள் ஒன்று கூடி நபி(ஸல்) தொழுகையைக் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது அபூ ஹுமைத்(ரழி) நான் உங்களை விட நபியவர்களின் தொழுகை நான் அறிந்துள்ளேன் எனக் கூறி நபியவர்கள் தமது சுட்டு விரலால் இஷாரா சமிக்ஞை செய்ததை நான் பார்த்தேன் என்று கூறினார்கள். திர்மிதி: 270
நபித்தோழர்கள் வாஇல் இப்னு ஹுஜ்ர்(ரழி), 2. இப்னு உமர்(ரழி), 3. இப்னு ஜுபைர்(ரழி), 4.நுமைர்(ரழி), 5. அபூ ஹுமைத்(ரழி) ஆகிய நபித் தோழர்கள் நபி(ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத்து இருப்பில் விரலால் இஷாரா சமிக்கை செய்தார்கள் என்று தெளிவாக அறிவித்ததிற்கு மாற்றமாக அசைப்பதை விட்டுவிட்டு நபிவழி அடிப்படையில் விரலை நீட்டுவார்கள் என எதிர்பார்ப்போம். பிடிவாதத்தை விட்டுவிடுங்கள், தவ்ஹீது அறிஞர்களை தக்லீது செய்யாதீர்கள். அல்லாஹ் போதுமானவன்.